– எஸ். சுரேஷ் –
வளைந்து நெளிந்து செல்லும் பாதை
மங்கை மேக கூந்தலா,
பாம்பைப் போல் உள்ளதா?
உயரே தகிக்கும் சூரியன்
யாருடைய சுட்டும் சுடர் விழி?
அதோ நடந்து செல்லும் மங்கை
கொடியிடையாளா,
இடையே இல்லாதவளா?
அங்கே மேலிருந்து விழும் பறவையின்
சிறகு காற்றில் என்ன எழுதுகிறது?
பறவை பறந்து போன பின் மனம்
அந்தக் கிளை போல் அசைகிறதா?
வருடிச் செல்லும் காற்று பெண்ணின் ஸ்பரிசமா
சாயங்காலம் யாரது வானத்தில் கோலம் இடுவது?
குளத்துக்குள் தவளை ஒன்று குதிக்கிறது
பளுக் என்ற சப்தம் கேட்கிறதா?