– எஸ். சுரேஷ் –
“துணிந்த பின் மனமே’ என்ற தேவதாஸ் பட பாட்டை பாடிக்கொண்டு நான் அல்-ஃபதா ஹோட்டலில் உட்கார்ந்திருந்தேன். தெலுங்கு ஆளான நான் எப்படி தமிழ் பாட்டு பாடுகிறேன் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஹோட்டலுக்குள் நுழைந்த மஜீதுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
“என்ன பாஷ இது”
“அரவம்”
“உனக்கு எப்படி அரவம் தெரியும்”
“போயகுடால நெறைய தமிழ் ஆளுங்க இருக்காங்க. அவங்க வீட்ல வேல செஞ்சதுல கத்துக்கிட்டேன்”
“இது ஏதோ தெலுகு பாட்டு போல இருக்கு”
“ஆமாம். தேவதாஸ் பாட்டு. குடி எடமைதே”
“அட ஆமாம். சரி. என் கட்டில் வேலைய எப்ப முடிக்க போற?”
“ஒரு முன்னூறு ரூபா குடு”
“க்யூன்? ரெண்டு நாள் முன்னாடி பைசா குடுத்தேனே .”
“அது லக்கடி வாங்கறதுக்கே சரியா போச்சு. இப்போ லேத் மஷின் ஆள் கிட்ட போய் கட்டில் காலுக்கு ஷேப் குடுக்கணும். அவனுக்கு பணம் குடுக்கணும்”
மஜீத் முந்நூறு ரூபாய் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தான்.
“கட்டிலுக்கு இவ்வளவு ஆசைப்படற. ரெண்டாவது ஷாதி எதாவது பண்ணிக்கப் போறயா?”
என்னை நோக்கி கை காட்டி உரக்க சிரித்தான், “தாத்தா. உனக்கு வயசானாலும் குறும்பு போல. ஏக் பஸ் ஹை”
“எனக்கும் ஒரு டீ சொல்லு”
“அரே. யஹன் ஏக சாய் தே”
மஜீத் செலவுல இன்னிக்கி டீ. நான் ஹோட்டல் வந்தவுடனே டீ சொல்றதில்ல. கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருப்பேன். யாரவது தெரிஞ்சவங்க வந்தா அவங்க தயவுல டீ குடிப்பேன். காசு மிச்சபடுத்தற வழி இது. என்னோட நரைச்ச முடி, நாலு நாள் சவரம் பண்ணாத முகம், நெத்தியில சுருக்கம், பழைய அழுக்கு கோட், மெலிஞ்ச உடம்பு இதெல்லாம் பாத்து எனக்கு டீ வாங்கிக் கொடுக்கறவங்க நெறைய பேரு இருக்காங்க.
ஆனா முன்பெல்லாம் இதுபோல இருந்ததில்ல. நாராயணா கூட நாங்க கார்பெண்டர் வேல செஞ்சிக்கிட்டு இருந்தப்போ நான் நெறைய பேருக்கு டீ வாங்கி கொடுத்திருக்கேன். அப்போ எங்களுக்கு தினமும் ஜெதாலால் கட்டல் மண்டீல வேல இருக்கும். நாராயணா தான் எங்க தலைவன். அவன் கீழ நாங்க ரெண்டு பேர், நானும் சலிமுல்லாவும், வேல செஞ்சிட்டிருந்தோம். கதவு, கட்டில், பீரோ இப்படி எதாவது ஒரு ஆடர் இருக்கும். சாயங்காலம் கைக்கு பணம் வரும். கள்ளு காம்பௌண்ட் போய் கொஞ்சம் குடம்பா குடிச்சிட்டு வீட்டுக்கு போவோம்.
பல காரணங்களால கட்டல் மண்டீல வேல கொறைய ஆரம்பித்தது. கைக்கு வர பணமும் கொறஞ்சது. அடுத்தபடியா கட்டல் மண்டீல வேல இல்லாம போச்சு. வெளியில வேல தேட வேண்டியதாச்சு. இது எங்க மூணு பேருக்குமே கஷ்டமா இருந்துது. இவ்வளவு நாள் ராஜா போல எங்க வேகத்துக்கு வேல செஞ்சிட்டிருந்த நாங்க வேற யார் கிட்டயும் போய் கை கட்டி வேல செய்யறது நெனச்சு பாக்க முடியல. நாராயணாவும் சலிமுல்லாவும் குடிக்கறத அதிகப்படுத்தினாங்க. அதுவே ரெண்டு பேரையும் அழிச்சிது. முதல்ல நாராயணா பிறகு சலிமுல்லா போய் சேர்ந்தாங்க. நான் தான் மிஞ்சினேன். இவங்க ரெண்டு பேரும் குடிச்சி அழியறதைப பாத்து நான் குடிக்கறத நிறுத்தினேன். அபார்ட்மெண்ட் கட்றவங்க கூப்ட்டாங்க. எனக்கு அங்க ஒத்துவரல. அதுனால இங்கயே சின்ன சின்ன வேலைய செஞ்சி வாழ்க்கைய ஓட்டறேன். கைல கொஞ்சம் பணம் இருக்கு ஆனா அதிகமா இல்ல. அதுனால தான் டீ பிஸ்கட் யாரவது வாங்கி குடுப்பாங்களான்னு இங்க உட்கார்ந்திருப்பேன்.
இன்னிக்கு உட்கார்ந்திருக்கறது டீக்காக இல்ல. இக்பால்காக காத்திருக்கேன். இக்பால் சலிமுல்லாவோட மகன். சின்னப் பையனா இருக்கும்போதே நான் அவனுக்கு சாச்சா ஆயிட்டேன். சலிமுல்லா போன பிறகு அவன் குடும்பத்துக்கு கொஞ்சம் பண உதவி செஞ்சேன். ஜாஸ்தி இல்ல. ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சேன். அப்புறம் இக்பாலுக்கு வேல வாங்கி கொடுத்தேன். அதுனால அவனுக்கு என் மேல ரொம்ப பாசம். எப்போவாவது வேணும்னா எனக்கு பண உதவி பண்ணுவான். இப்போ பண உதவி தேவையா இருந்தது.
வெளியிலே போலிஸ் ஜீப் ஒண்ணு போச்சு. அதுல இன்ஸ்பெக்டர் தேவேந்திர கௌட் உட்கார்ந்திருந்தான். என்ன பாத்து மொறச்சிட்டு போனான். அவன் என்ன எப்ப பார்த்தாலும் முறைப்பான். ஒரு இருபது வருஷம் முன்னால நடந்த கத அது. கௌட் அப்பா ஒரு மர பீரோ எங்களுக்கு வித்தாரு. நானும் சலிமுல்லாவும் அத நாராயணா வீட்டுக்கு கொண்டு வந்தோம். நான் திறந்து பார்த்தப்போ ஒரு டிரால நெறைய பணம் இருந்துது. அத உடனே கௌட் வீட்டுக்கு கொண்டுபோய் குடுத்தேன். பணத்த பாத்த கௌடோட அப்பாவுக்கு ஒரே கோவம். கௌட போட்டு சாத்தினார். “ஏண்டா மடையா. உன்னதானே பீரோவ காலி பண்ண சொன்னேன். இதிகூட சாதகாத நீக்கு. எப்படிடா உருப்படுவ நீ”ன்னு சொல்லி அடிச்சாரு. நான் கஷ்டப்பட்டு அவர தடுத்தேன். அப்போ கௌட் காலேஜ் படிச்சிட்டிருந்தான். அவன் அடிவாங்கினதுக்கு நான்தான் காரணம்னு நினைச்சானோ என்னவோ என்ன பாத்தா பேச மாட்டான். எப்பவும் முறைப்பான். ஆனா அந்த சம்பவத்துனால எனக்கு நேர்மையானவன்னு பேர் கிடைச்சது. அந்த நேர்மையோட இன்னும் இருக்கேன்.
இக்பால் இன்னும் வரல. நேத்து அவன் கிட்ட என் நிலைமையை சொல்லியிருந்தேன். அவன் எதாவது ஏற்பாடு செய்வான் என்று எனக்கு ஒரு நம்பிக்கை. இக்பால் பற்றி பல பேர் பல விதமாக சொல்வாங்க. அவனுக்கு கை நீளம் அதனால்தான் அவனால் எந்த ஒரு வேலையிலும் நிலைக்க முடியலன்னு. ஆனால் என்னை பொறுத்தவரையில் இக்பால் என் மகன் போல். அதனால் அவனை பற்றி என்ன சொன்னாலும் நான் கண்டுகிறதில்ல. அதே போல் அவன் கிட்ட நான் எதுவும் நேரடியாக கேட்பதில்லை. என் நிலைமையை அவன்கிட்ட சொல்வேன். அவனே புரிஞ்சிக்கிட்டு எதாவது உதவி செய்வான். நான் பெத்த பிள்ளைங்க கதையே வேற.
என் பிள்ளைகள் நேரடியாக கேட்டாலே உதவி செய்ய தயங்குவாங்க. உதவி செய்றத விடுங்கள், எங்கிட்ட என்ன உதவி கேக்கலாம்ன்னு குறியாக இருப்பாங்க. என் மூத்தவன் கவர்ன்மென்ட் ஆபிசில் பியூன் வேலை செய்யறான். அவனுக்கு இரண்டு மகன்கள். அவன் வீட்டுக்கு போனா மூத்த மருமகள் பஞ்ச பாட்டு பாட ஆரம்பிப்பா. முதல்ல பாவம் ரொம்ப கஷ்டப்படறாங்கன்னு நினைச்சு என்னால் முடிஞ்ச பண உதவி செஞ்சேன். போகப் போகதான் தெரிஞ்சிது இது என் மருமகளோட டெக்னிக்குன்னு. பஞ்சப்பாட்டு பாடினா நான் எதுவும் உதவி கேக்க முடியாது இல்லையா? என்கிட்டே இருக்கற கொஞ்ச நஞ்சம் சொத்து, இப்போ நான் இருக்கற வீடு, இதுல இவங்களுக்கு அதிகமா கொடுப்பேனோ என்ற நம்பிக்கை வேற.
மூத்த மருமகள் போல என் ரெண்டாவது மகனும் எப்பவும் பஞ்சப் பாட்டு பாடிட்டு இருப்பான். அவன் வீட்டுக்கு வந்தாலே பணம் கேக்கதான் வரான்னு தெரியும். பெரியவன் எப்போதாவது என்ன பாக்கறதுக்குன்னு வருவான். கொஞ்சம் நேரம் பேசிட்டு போவான். சின்னவன் பணத்த கேக்கறத்துக்குதான் வருவான். அவன் பெரிய பிசுனாரி. ஒருத்தனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டான். கெட்ட பழக்கம் எதுவும் இல்ல. ஆனா கைய விட்டு ஒரு நயா பைசா ஜாஸ்தி போனாலும் நாள் பூரா அழுவான். எனக்கு அவனால தொல்ல வரல. அவன் மனைவியால வந்தது.
என் ரெண்டாவது மருமக மகா கோவக்காரி. அதுக்கு மேல சமயம் கிடைக்கறப்போ அவங்க பொறந்த வீட்டு பெருமை பேசிக்கிட்டே இருப்பா. அவ அப்பா கொழந்தைக்கு ஒரு சாக்லேட் வங்கி தந்தா ஏதோ தங்க காப்பு போட்ட மாதிரி பேசுவா. ரெண்டு வாரம் முன்னாடி அவ இது போல பேசினது பெரிய சண்டேல போய் முடிஞ்சி, இப்போ என்ன இந்த இக்கட்டான நிலைமைல விட்டிருக்கு.
எப்போவும் போல அவ அவங்க குடும்பத்தோட புகழ் பாட ஆரம்பிச்சா. எனக்கு அன்னிக்கி ஏதோ மூட் சரியில்ல போல. அவ அப்பாவ பத்தி பேச ஆரம்பித்ததும் நான் சொன்னேன்,
“உங்க அப்பா பெரிய தாகுபோத்து”
அவளுக்கு உடனே கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“எங்க அப்பா ஒன்னும் குடிகாரர் இல்லை. எப்பவாவது குடிப்பாரு. நீங்களும்தான் ஒரு காலத்துல குடிச்சிட்டிருந்தீங்க”
என்னை பத்தி சொன்னதை கண்டுக்காமல், “ரெண்டு நாள் முன்னாடிதான் முஷிராபாத்கிட்ட உங்கப்பன் குடிச்சிட்டு விழுந்து கிடந்தான். நானும் நாகேஷும் சேர்ந்து அவன தூக்கி உட்கார வச்சி கொஞ்சம் நிதானத்துக்கு வந்தப்புறம் ஆட்டோல ஏத்தி அனுப்பினோம். அதுக்கு ரெண்டு நாள் முன்னாடி போயகுடா பஸ் ஸ்டாப் கிட்ட வாந்தி எடுத்தான். இவன் குடிகாரன் இல்லையாம். நாகேஷ கேக்கலாமா. அவன் பக்கத்துல தானே இருக்கான்” என்று சொன்னேன்
இது சரியாக போகலேன்னு அவளுக்கு தெரிஞ்சிது. உடனே ரூட மாத்தினா. “எங்க அப்பன் குடிகாரனவே இருந்துட்டு போகட்டும் ஆனா அவர் என் கொழந்தைக மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காரு தெரியுமா. அவருக்கு சுத்தமான மனசு. இங்க வந்தார்னா குழந்தைகளுக்கு எதாவது வாங்கி தராம போக மாட்டாரு”
“என்ன வாங்கி தருவான் அவன். வெறும் பூடுதி”
அவளுக்கு கோபம் தலைக்கேறியது. வீட்டு வாசலுக்கு வெளியே நின்னு பக்கத்து வீட்டு பொம்பளைய பார்த்து கத்த ஆரம்பிச்சா, “கேட்டயா அக்கா என் மாமனார் சொல்றத. எங்க அப்பா வெறும் சாம்பல்தான் தருவாராம் என் கொழந்தைகளுக்கு. இவர் அப்படியே பங்காரம் வாங்கிட்டு வந்து கொடுக்கறாரு ஒவ்வொரு முறையும். சொல்ல வந்துட்டாரு எங்க அப்பாவ பத்தி”
“கத்தினா பொய் நிஜமாகாது. உங்க அப்பன்கிட்ட குடிக்கறத்துக்கு தான் காசு இருக்கும். ஏதோ உங்க அம்மா நாலு வீட்ல வேல செஞ்சு சம்பாதிக்கறா. இல்லேன்னா உங்க குடும்பமே இப்போ நடு ரோட்ல இருந்திருக்கும். குடிக்கறதுக்கே காசில்லாத அவன் பூடுதிதான் குடுப்பான்”
அவ ஆவேசத்தோட அழுகையும் சேர்ந்துடிச்சி. நாலு பேர் கூட ஆரம்பிச்சிட்டாங்க. அவ அழுதுக்கொண்டே, “ஐயோ ஐயோ. கேட்டீங்களா அக்கா. எங்க அப்பாவ பத்தி எவ்வளவு கேவலமா பேசறாரு. இவருக்கு என்ன பேத்தி மேல பாசம் இருக்கா. இவரு என்ன பங்காரமா கொண்டு வந்து குடுக்கறாரா? என் புருஷன் எப்போ பணம் கேட்டு போனாலும் இல்ல இல்லன்னு சொல்லி அனுப்பறாரு. எல்லாம் அந்த மூத்த மகன் குடும்பத்துக்கு செய்யறாரு. அவோ அழுது அழுதே பணத்த வாங்கிடுவா. எல்லா பணமும் அங்க குடுக்கறாரு. இவங்க குடும்பத்துல வந்து மாட்டிட்டு முழிக்கற என்னைச் சொல்லணும். எல்லாம் என் தலைவிதி” புலம்பல் அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. “எங்க அப்பா முன்னாடி உங்கள மாதிரி ஆளுங்க சம்பலுக்கு சமம். ரெண்டு வாரத்துல என் சின்ன பொண்ணு முதல் பொறந்த நாள் வருது. இவரு என்ன பண்றாரு பார்ப்போம். இவர் பூடதி கொண்டுவறாரா இல்ல எங்க அப்பா பூடதி கொண்டுவறாரா பாக்கலாம்.” என்று சவால் விட்டாள்
“அரே போ வே. அந்த குடிகாரனுக்கு நான் சமமா.” உரக்க சிரித்தேன். “என் பேத்திக்கு நான் பங்காரம் போடுவேன். அவளுக்கு ஒரு தங்க சங்கிலி போடறேன இல்லையா பார்” என்று சவால் விட்டேன்.
தங்கம் என்ற வார்த்தையை கேட்டவுடனே அவளுக்கு குஷி ஆயிடிச்சி. அவ கண்ண பாத்தா சந்தோஷம் அப்பட்டமா தெரிஞ்சிது. ஆனா அவ கோவமா இருக்கற மாதிரி நடிச்சி “நானும் பாக்கறேன் நீங்க என்ன செய்யறீங்கன்னு” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்து எதுவும் ஆகாதது போல் எனக்கு டீ போட்டு குடுத்தாள்.
திருடித் திங்கக்கூடாது, சொன்ன சொல்ல காப்பத்தணும் : இது ரெண்டையும் நான் கொள்கையா கடைப்பிடிக்கிறேன். எவ்வளவு பணக் கஷ்டம் இருந்தாலும் இது ரெண்டையும் நான் விட்டுக்கொடுத்ததில்ல. சொன்னது போல தங்கசஜ் சங்கிலி வாங்க யாதகிரி கிட்ட நான் போட்டுக்கொண்டிருந்த சிட்ட தூக்கினேன். சரி, சொன்ன வார்த்தைய காப்பதிடுவோம்ன்னு நிம்மதியா இருந்தப்போ என் மூத்த மகனும் மருமகளும் வந்தாங்க.
வந்த அஞ்சு நிமிஷம் ஆகல என் மருமக பொலபொலன்னு கண்ணீர் விட ஆரம்பிச்சா. அவங்க பிரச்சன இதுதான்: நான் தங்க சங்கிலி போடறேன்னு சொன்னத இவங்ககிட்ட என் இளைய மருமக வேறு விதமா சொல்லியிருக்கா. கிழவர நாங்க நல்லா பார்த்துக்கறோம். அதனால் சந்தோஷமான அவர் குழந்தைக்கு தங்கச்சங்கிலி போடறதா சொல்லியிருக்காரு. என் கணவர்தான் அடிக்கடி அவர வந்து பாக்கறாரு. நீங்க அவர கண்டுக்கறதே இல்லை. அவ கதைய இப்படி மாத்தி சொல்ல, மூத்த மகனும் மருமளும் என்னோட சண்ட போட ஆரம்பிச்சாங்க. மகன் ஆவேசமா பேசினான், மருமக அழுதா. இவங்களுக்கு என்னால உண்மைய புரியவெக்க முடியல. கடைசில என் மூத்த மகனோட இளைய மகனுக்கும் ஒரு தங்கச் சங்கிலி அதே சபைல போடறதா வாக்கு கொடுத்தேன். அதுக்கு பிறகுதான் அவங்க என் வீட்ட விட்டு கிளம்பினாங்க.
என்கிட்டே இருக்கற பணத்தை எல்லாம் புரட்டி பார்த்தேன். எப்படி பார்த்தாலும் இன்னும் ஒரு பத்தாயிரம் ரூபா வேண்டியிருக்கு. என் உறவுக்காரங்க நிலைமை சரியில்ல. என் தோஸ்த் எல்லாரும் போய் சேர்ந்தாச்சு. இந்த கிழவனுக்கு கடன் கொடுக்கறவன் எவனும் இல்ல. ஏதோ பத்து இருபதுன்னா தருவாங்க. பத்தாயிரம்னா? வட்டிக்கு ஏற்கனவே கொஞ்சம் பணம் வாங்கியிருந்தேன். இதுக்கு மேல வட்டிக்கு வாங்கினா கட்டுபடியாகாது. இதெல்லாம் இக்பால்கிட்ட நேத்தி சொன்னேன். அவனுக்கு ஒரே கோபம். “இந்த வயசுல உன்ன உட்கார வச்சி சாப்பாடு போடணும். இவங்க என்னடான்னா உன்கிட்டேந்து பணம் பிடுங்க பாக்கறாங்க. என்ன பத்மாஷா இருக்காங்க ரெண்டு பெரும்” என்றான். பிறகு மெதுவாக, “நீ நாளைக்கு இதே டைமுக்கு இங்க வா. நான் எதாவது செய்யறேன்” என்றன்.
நான் அரை மணி முன்னாலேயே வந்துவிட்டேன். எப்பவும் போல கோட் போட்டிருக்கேன். நான் பல வருஷமா இந்த கொட்ட தான் போட்டிருக்கேன். கருப்பு கோட்டுதான் ஆனா ஒரு மாதிரி வெளுத்து போயிருக்கும். இந்த கோட்டோட உள் பாக்கெட்ல தான் அவசரமா உள்ள வந்த இக்பால் எதையோ வச்சான். “வீட்டுக்கு போயி பார். இங்க பார்க்காத”ன்னு சொல்லிட்டு வேகமா வெளியில போயி ஸ்கூட்டர் ஸ்டார்ட் பண்ணி அங்கேர்ந்து பறந்தான். நான் ஹோட்டல விட்டு வீட்டுக்கு கிளம்பினேன். அப்போதான் ஹோட்டல் முதலாளி ஜமால் ஹோட்டல் பக்கம் வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தான்.
நான் வீட்டுக்கு வந்தேன். என் வீடு என்பது ஒரு அறை, சமையலறை இன்னும் பாத்ரூம். நான் உள்பாக்கெட் தொட்டுப் பார்த்தேன். ஏதோ சப்தம் வந்துது. கைய விட்டு பார்த்தா ஒரு கேசெட் இருந்தது. கேசெட் மேல கண்டசாலா பொம்மை. ஆனா தெலுங்கு காசெட் இல்லை. ஏதோ தமிழ் பாட்டு கேசெட் போல இருந்துது. என் பெரிய சொத்தே என் கேசெட் பிளேயர்தான். அதுல கேசெட்ட போட்டேன். எனக்கு ஒரே குழப்பமா இருந்துது. எதுக்கு இக்பால் என் கோட்ல கேசெட்ட வெச்சான். இத வெச்சி நான் என்ன பண்றது. என் கஷ்டத்துக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே. இக்பால் ஏதோ விஷயம் இல்லாம கேசெட் கொடுத்திருக்க மாட்டான்.
சரி கேசெட் கேப்போம்னு பட்டன் அமுக்க போனப்போ யாரோ கதவ தட்டினாங்க.
கதவ திறந்து பார்த்தா ஒரு போலீஸ்காரன். “சார் நின்னு ரம்மண்டு” என்றான். “எங்க?” “போலிஸ் ஸ்டேஷன்” “எதுக்கு” “நீ வா அங்க சொல்வாங்க”. என்னை அவன் ஸ்கூட்டர் பின்னால் உட்கார வைத்து பன்சிலால் போலீஸ் ஸ்டேஷன்னுக்கு கூட்டியாந்தான். கிளம்பற அவசரத்துல கோட் மாட்டிக்க மறந்து போச்சு.
ஸ்டேஷன்ல ஹெட் கான்ஸ்டபிள் வரவேற்றான், “வாய்யா வா. எப்படி இருக்கடா”. பணம் இல்லேன்னா இவங்க மதிக்கவே மாட்டாங்க. “நல்லா இருக்கேன்”. “உட்கார்” நான் ஒரு நாற்காலில உட்கார்ந்தேன். நான் போலிஸ் ஸ்டேஷன் முதல் முறையா வரேன். ரெண்டு பேரு வெறும் பனியனோட லாகப்ல இருந்தாங்க. நாலஞ்சி பேரு போட்டோவும், டெலிபோன் பில்லும் கையுமா ஒரு போலீஸ்காரன் முன்னாடி நின்னுட்டு இருந்தாங்க. ரெண்டு போலீஸ்காரங்க ஏதோ பேசிட்டு இருந்தாங்க.
என் எதிர்ல ஒரு நாற்காலில ஹெட் கான்ஸ்டபில் உட்கார்ந்தாரு. என்ன கூட்டியாந்த போலீஸ்காரன் பக்கத்துல நின்னான். “இக்பாலுக்கு நீ ரொம்ப தோஸ்த் போல?” என்று கேட்டான் ஹெட் கான்ஸ்டபில்
“எனக்கு சின்னப்போலேர்ந்தே அவன தெரியும்”
“அவன் எந்தெந்த வீட்ல திருடியிருக்கான்னு உனக்கு தெரியுமா?”
“எனக்கு தெரிஞ்சு அவன் எதுவும் திருடல”
ஹெட் கான்ஸ்டபில் சத்தமா சிரிச்சான், “டேய். எங்கள என்ன பக்ரான்னு நினைச்சியா? அவன் ஒரு பொறுக்கி ராஸ்கல். இவ்வளவு நாள் பழகின உனக்கு தெரியாதுன்னா நம்பறதுக்கு நாங்க என்ன காதுல பூவா வச்சிட்டிருக்கோம்? அவன் திருடினத நீ எவ்வளவு தின்னையோ?”
எனக்கு கோபம் வந்தது, “திருடி திங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல”
“ஆஹா. ஏமி ரோஷம். உனக்கு ஒண்ணும் தெரியாது, இக்பால் ஒரு பச்ச குழந்த. போலிஸ்காரன் தான் பேவகூப் இல்லையா? எங்கள பாத்தா பேவகூப் மாதிரி இருக்கா?”
எனக்கு ஒண்ணுமே புரியல, “இப்போ என்ன ஆச்சு? எதுக்காக என்ன இங்க கூப்ட்டீங்க?”
ஹெட் கான்ஸ்டபிளுக்கும் கோவம் அதிகமாச்சு. என் பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த போலீஸ்காரன பாத்து, “என்னடா ஆச்சு, என்ன ஆச்சு. சார் கேக்கார் இல்ல. சொல்லு. பெரிய சாருக்கு கோவம் வந்தா நம்பள சஸ்பன்ட் பண்ணிடுவாரு.” பிறகு என்ன பாத்து, “நான் சொல்லிடறேன் சார். நான் சொல்லிடறேன்.”
தொண்டையை கனைத்துக்கொண்டு, “இக்பால் உனக்கு ஹோட்டல்ல என்ன கொடுத்தான்?”
“கேசெட் கொடுத்தான்”
“ஓஹோ. அவன் உனக்கு கேசெட் கொடுக்க ஹோட்டலுக்கு வந்தானா? எதுக்கு உடனே ஓடி போயிட்டான்?”
“எனக்கு தெரியாது”
“உனக்கு தெரியாதா? சரி நான் சொல்றேன். அவன் உனக்கு கேசெட் கொடுக்கல. வேற ஏதோ கொடுத்தான். கொடுத்துட்டு ஓடிட்டான். ஏன் ஓடினான். ஏன்னா, உனக்கு அவன் கொடுத்து திருட்டு பொருள்”
“இக்பால் கேசெட்தான் கொடுத்தான். நான் பார்த்தேன்.” என்றான் பக்கத்தில் இருந்த ஒருவன். அவனை நான் ஹோட்டலில் பல முறை பார்த்திருக்கிறேன்,
“உன்ன கேட்டேனா நானு. பூச்சா கியா தேற்க்கு? சுப் பைட்” என்று அவனை ஹெட் கான்ஸ்டபில் அதட்டினான். என் பக்கம் திரும்பி, “சொல்லு, இக்பால் உனக்கு என்ன கொடுத்தான்”
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவன் கேட்பது எதுவும் எனக்கு புரியல. என்கிட்ட இருந்ததெல்லாம் ஒரு கேசெட்டுதான். என்ன பதில் சொல்றதுன்னு என்று நான் முழிச்சேன். அப்போதான் இன்ஸ்பெக்டர் தேவேந்திர கௌட் உள்ளே வந்தான். எப்பொழுதும் போல் என்னை பார்த்து முறைத்தான். ஹெட் கான்ஸ்டபில் எழுந்து சல்யுட் அடிச்சான். அவனை பார்த்து, “என்ன விஷயம்?” என்று தேவேந்திர கௌட் கேட்டான்.
“அல்-ஃபதா ஹோட்டல் முதலாளி ஜமால் வீட்ல ஒரு தங்க சங்கிலி காணாம போயிடிச்சாம். நல்ல தடியான சங்கிலி. அத உருக்கினா ரெண்டு சங்கிலி செய்யலாமாம். அத இக்பால்தான் திருடியிருப்பான்னு ஜமாலுக்கு சந்தேகம். இப்போ இக்பால் காணோம். அவன் இவர ஹோட்டல்ல பாத்து இவர் சட்டைல ஏதோ வச்சிட்டு போனான்னு சொன்னாங்க. அதுனாலதான் இவர விசாரிக்க கூட்டியந்தேன்.” என்று ஹெட் கான்ஸ்டபிள் சொன்னான்.
தேவேந்திர கௌட் ஹெட் கான்ஸ்டபிளை கோவமாக பார்த்தான். “திருடினவன விடுங்க. இஜ்ஜத்தோட வாழறவங்கள பிடிச்சி விசாரிங்க. இதுவே உங்க வழக்கமா போச்சு. யார் எந்த மாதிரி ஆளுன்னு தெரியாம நீங்க என்னடா போலீஸ்? இவருக்கு நான் ஜவாப்தாரி. போயி அந்த இக்பால புடிக்கற வேலைய பாருங்க. இல்ல ஜமால் வீட்ல அவன் பொண்டாட்டி மறந்து வேற எங்கயாவது செயினை வெச்சிட்டாளா பாருங்க. முதல்ல பெரியவர இங்கேர்ந்து அனுப்புங்க. திருடனுக்கு தோஸ்தா இருக்கவன் எல்லாம் திருடனாயிடமாட்டான்”.
ஹெட் கான்ஸ்டபிள் முகம் வெளுத்திடிச்சி. “இப்போவே திருப்பி அனுப்பறேன் சார்” என்று சொல்லிவிட்டு, என் பக்கத்தில் நின்றிருந்த போலீஸ்காரனிடம், “அவர வீட்ல கொண்டுபோய் விடு” என்று உத்தரவிட்டான். என் பக்கம் பார்க்காமல் தேவேந்திர கௌட் அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் கேசெட் பிளேயர் ஆன் செஞ்சேன். கண்டசாலா குரல் ஒலிக்க ஆரம்பித்தது. என் கோட்டை கையில் எடுத்து உள் பாக்கெட்டை துழாவினேன்.“துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே” என்று கண்டசால பாடிக்கொண்டிருந்தார்.