புலி – மொஹிபுல்லா ஜெகம் (ஆப்கானிஸ்தானியச் சிறுகதை)

(ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த எழுத்தாளர் மொஹிபுல்லா ஜெகம் (Mohibullah Zegham) எழுதிய சிறுகதையின் தமிழாக்கம். இதன் ஆங்கில வடிவம், ரஷித் கட்டாக் (Rashid Khattak) எழுத்தில் Fiction Southeast என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்டது)

அன்று சந்தை நாள். ஒரு டஜன் சாக்கு மூட்டைகளில் உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டு குண்டூஸ் நோக்கி ஒரு டிரக்கில் புறப்பட்டேன். சந்தைக்குப் போய் வெகு காலமாகியிருந்தது. பரந்து விரிந்திருந்த ஷோரோ பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த டிரக் புழுதியை மேகங்களாய்ப் பரத்திக் கொண்டு விரைந்தது. மலையுச்சியில் இருக்கிறோம் என்பதை நம்ப முடியாதபடிக்கு பாலைவனம் தட்டையாக இருந்தது. ஒருமணி நேரம் வழியில் வேறெந்த வாகனத்தையும் பார்க்க முடியவில்லை.

மலையிலிருந்து குண்டூஸ் அருகில் இறங்கிக் கொண்டிருக்கும்போது ஆயுதம் தாங்கிய சில ஆட்கள் நிறுத்தச் சொல்லி ஒரு செக்பாயிண்ட்டில் சைகை செய்தார்கள். அவர்கள் வெல்வெட் துணியில் தைத்த நீண்ட ப்ரௌன் கலர் சட்டைகள் அணிந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் தன் நீண்ட தலைமுடியைப் பின்பக்கமாக வாரியிருந்தான், அதன்மேல் ஒரு கைக்குட்டையைக் கட்டிக் கொண்டிருந்தான். அவன் சிறிது நேரம் எங்கள் டிரக்கைச் சுற்றி வந்தான், அப்புறம் ஓரிடத்தில் நின்று வியர்த்து ஒழுகிய தனது நெற்றியை முழுக்கைச் சட்டையின் அழுக்கேறிக் கிடந்த கைப்பகுதியில் துடைத்துக் கொண்டான்.

புழுதி படிந்திருந்த கண்ணிமைகளினூடே எங்களை உற்றுப் பார்த்தபடி, “இந்த சாமான்கள் யாருடையது?” என்று மிரட்டலாகக் கேட்டான்.

“என்னுடையது,” என்று சொன்னேன்.

“வா,” என்று அழைத்தான்.

நான் கீழே இறங்கி அவன் பின்னால் போனேன். பழமையான கோட்டை போலிருந்த ஒரு இடத்துக்குப் போனோம். அதன் முற்றத்தின் வழியே ஓடையொன்று ஓடிக் கொண்டிருந்தது. பெரிய பெரிய பாப்ளர் மரங்களின்கீழ் பட்டுத் தரைவிரிப்புகள் விரித்து கிடந்தன. வெல்வெட் மெத்தைகளில் அமர்ந்திருந்த ஐந்து பேர், கட்டம் போட்ட ஒரு துணியின் மீது தாயம் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

ப்ரௌன் நிற சட்டையணிந்த துப்பாக்கி வீரர்கள் பத்து பதினைந்து பேர் விளையாட்டுக்கு வெளியே தள்ளி உட்கார்ந்திருந்தனர். அவர்களில் ஒருவன் ஹஷீஷ் சிகரெட் ஒன்றின் புகையை சக்திகொண்ட மட்டும் உள்ளிழுத்துக் கொண்டிருந்தான். “இன்னும் இழு, இன்னும் இழு!” என்று அவனது சகாக்கள் அவனை ஊக்குவித்துக் கொண்டிருந்தனர். அவன் மீண்டும் இழுத்தான், ஆறேழு முறை இருமிவிட்டு நன்றி சொல்லும் வகையில் தன் கையை ஆட்டினான்; அதன்பின் அதை மற்றவர்களிடம் கொடுத்துவிட்டான்.

நீண்ட முடி கொண்ட துப்பாக்கிவீரன் இப்போது ஆட்டத்தை கவனித்தபடி தரைவிரிப்பில் மண்டியிட்டிருந்தான்.

விளையாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் வெற்றி பெற்று தரைவிரிப்பில் கிடந்த காசைத் திரட்டிக் கொள்ளும்போது, “உங்க கை ராசியான கைங்க,” என்றான் அவன். ஓடைக்கரையில் அமர்ந்திருந்த பிற துப்பாக்கி வீரர்களும் திரும்பிப் பார்த்து, அவன் சொன்னதைத் திருப்பிச் சொன்னார்கள்.

“பசங்களுக்குக் கொடு,” என்று சொல்லி, வெற்றி பெற்றவன் பத்தாயிரம் ஆப்கானி நோட்டுக்கட்டுகள் இரண்டை நீண்ட முடி கொண்ட துப்பாக்கி வீரனை நோக்கி வீசியெறிந்தான். அதன்பின் அவன் என்னைப் பார்த்ததும், “கலீச்! யார் இது?” என்று கேட்டான்.

“ஐயா, இவன் சரக்குக்குச் சொந்தக்காரன்”

“என்ன கொண்டு போற?”

“ஏதோ கொஞ்சம் உருளைக்கிழங்கு கொண்டு போறேங்க,” என்றேன்.

“எங்க போற?”

“சந்தைக்குக கொண்டு போறேங்க, விக்கணும்”

“அப்படின்னா நீ வரி கொடுக்கணும்”

“என்ன வரி? இது எல்லாம் நானே என் நிலத்தில் சாகுபடி செஞ்சது”

“கலீச், இவனைப் பாத்தா வெளியாள் மாதிரி தெரியுது. ஒருவேளை இவன் உளவு பாக்க வந்திருப்பானோ?”

“அடக்கடவுளே, நானும் இவனை இதுக்கு முன்னால பாத்ததே இல்லை,” என்று சொன்னான் கலீச், என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே.

இந்தக் கமாண்டரை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று யோசனையாக இருந்தது. அவனது நீண்ட சிகை, அழகிய வெண்ணிற முகம், சிவந்த உதடுகள், நேர்த்தியாக மையிடப்பட்ட கரிய விழிகள், மென்மையான பெண்குரல்- எல்லாம் எனக்குத் தெரிந்தது போலிருந்தது.

இப்போது நினைவு வந்துவிட்டது. இது பெரோஸ். அவனது சன்ன மீசை, தாடையில் முளைத்திருந்த சில முடிகள், நீண்ட கைகள் வைத்த சட்டை,  இடுப்பில் அணிந்திருந்த தோட்டா பெல்ட், இதுவெல்லாம் அவனை முழுமையாக மாற்றிவிட்டன.

ஹாஜி மூரத் பெய்யின் வைப்பாக இருந்தவன்தான் பெரோஸ். நடனமாடிக் களிக்கச் செய்தவன். பெரோஸ்சைப் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர், எங்களை எல்லாம் ஹாஜி மூரத் தன் வீட்டுக்கு அழைப்பார். அங்கே பெரோஸ் கொலுசு அணிந்துகொண்டு, பெண்ணாடையில், கன்னங்களில் பவுடரும், உதடுகளில் லிப்ஸ்டிக்கும், கைகளில் மருதாணியும், கண்களில் மையும் அப்பிக்கொண்டு எங்கள் முன் வந்து ஆடுவான்.

மூரத் பெய்யை சுட்டுக் கொன்றுவிட்டு பெரோஸ் அவரது இரண்டாம் மனைவியுடன் ஓடிப் போய்விட்டான் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வதந்தி இருந்தது. இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்திருக்கிறது. முரத் பெய் ஒரு கோழிச் சண்டையில் ஜெயித்து தன் மகள் வயதிருந்தவளை இரண்டாந்தாரம் ஆக்கிக் கொண்டிருந்தார். அதன்பின் பெரோஸ் போர்ப்படை ஒன்றின் கமாண்டர் ஆகி விட்டான் என்ற வதந்திகளை நானும் கேள்விப்பட்டிருந்தேன், ஆனால் முழுவிவரங்கள் தெரியவில்லை.

“நீ யார், யாருக்காக உளவு பார்க்கிறாய்?” பெரோஸின் குரல் என் எண்ணங்களைக் கலைத்தது.

“நான் கதூஸ்,” என்று சொன்னேன். “மூரத் பெய்யின் நண்பன். உனக்குத் தெரியவில்லையா…”, வாக்கியத்தை முடிப்பதற்குள் என் தோளில் பலமான அடி விழுந்தது. இப்போது நான் திடீரென்று தரையில் விழுந்து கிடந்தேன். அப்புறம் என்னை அடித்தார்கள், உதைத்தார்கள், ரைபிள் கட்டையால் தாக்கினார்கள்.

சில நிமிடங்களுக்குப் பின்னர் நீண்ட சிகை கொண்ட துப்பாக்கிவீரன் என் தலைமுடியைப் பிடித்து இழுத்து தன் முகத்துக்கு அருகே என் முகம் இருக்கும்படி என்னைத் தூக்கி நிறுத்தினான். ஆனால் என்னால் நிற்க முடியவில்லை. தாங்க முடியாத வலி. ஆத்திரத்தோடு என்னைப் பார்த்தான் பெரோஸ். தனது குரல் கரகரப்பாக ஒலிக்கும் வகையில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

“நான் யார் தெரிகிறதா?” என்று கேட்டான்.

“நீ பெரோஸ்,” என்று சொன்னேன்.

பதிலுக்கு தன் பலத்தையெல்லாம் திரட்டி என் வாயில் குத்தினான் அவன். “இல்லை! நான் ஒரு கமாண்டர்!” என்று கத்தினான். “நான் ஒரு புலி!”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.