அமர் – விஜயகுமார் சிறுகதை

“இது நின்னுக்கிட்டு இருக்குடா; சம்மணம் போட்ட மாரில நான் டிஸைன் கேட்டேன்? “ரங்கசாமி சலித்துக் கொண்டார்.

“சாரி பெரிப்பா, சின்ன ஸ்தபதிதான் எதுக்கும் இந்த டிஸைன குடுத்துப்பார்ன்னு சொன்னார். “விஜயன் தன் பெரியப்பாவைப் பார்க்காமலேயே பதில் சொன்னான்.

“எல்லாரும் உன்ன சொல்றது சரியா தான் இருக்கு; ஏன்டா கலுத வயசாகுதுல, உங்கிட்ட ஒரு வேல சொன்னா உன் குண்டிக்குப் பின்னாலயே ஒருத்தன் சுத்தனுமா? அப்பத்தான் எதயுமே ஒழுங்க செய்யிவியா” கத்தினார். “உக்காந்து மூணு வேலையும் கொட்டிக்க தெரியுதுல்ல?”

கோபத்தை உதட்டில் அடக்கியவாறு விஜயன் பெரியப்பாவை பார்த்தான்.

சிரிது நேரம் அமைதியாக அந்த காகிதத்தைப் பார்த்து விட்டு, “நல்லாத்தான் இருக்கு, ஆனா நம்ம சாமி உக்கந்தமாரிடா, நோம்பி வேற சீக்கிரம் வருது” என்று அந்த டிஸைன் காகிதத்தை அவன் கையில் திணித்தார். “நீ போய் பெரிய ஸ்தபதிய பாத்து சரியா விசயத்தை சொல்லு. சுகாசனதில இருக்கணும் முத்திரை அவசியமில்லை” என்றுசொல்லி உயந்திருந்த குரலை தணித்தார்.

“சரிங்க” மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சட்டென திரும்பி நடக்க அரம்பித்தான் பெரியப்பாவைப் பார்க்காமேலேயே.

“நம்ம சாமி..” என்று ஏதோ சொல்லவந்தவர் விஜயனின் நடை வேகத்தைப் பார்த்து நிறுத்திக் கொண்டார்.

2

திருவிழாவிற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் முடிக்கவேண்டுமாம். புதிதாய் வாங்கிய தோட்டத்தில் உள்ள சாமி மீது பெரியப்பவுக்கு பைத்தியமே பைத்தியம்தான். தோட்டத்தின் வேலி ஓரத்திலிலுள்ள ஒரு மணற்திட்டின் மேல் ஒரு கல்லாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. இப்போது அதை சுற்றி சுவர் எழுப்பியிருந்தார் பெரியப்பா. மேலே சிறிய கோபுரம்கூட வரலாம். எங்கள் மற்றொரு தோட்டத்தில் ஏற்கனவே இரண்டு இடத்தில் சன்னதிகள் இருந்தது. கன்னிமார் சாமிகள் ஏழு வெங்கச்சாங்கல்லாக வேப்பமரத்தடியில் வீற்றிருந்தார்கள். காட்டுமுனியும் அருகிலேயே. நானும் என் கூட்டாளியும் ஒருமுறை ஊர்களிலுள்ள அத்துனை சாமிகளையும் எண்ணினோம், மூன்றுபேருக்கு தலா ஒரு சாமி இருந்தது. பெரும்பாலும் கருப்பு.

அதுயென்ன உக்காந்து கொட்டுகிறது. எல்லோரும் நின்னுக்கிட்டா சாப்பிடுறாங்க? சொல்லப்போனால் இந்த வீட்டில் மிக குறைவாக சாப்பிடுவது ஆத்தாவிற்குப்பின் நான்தான்.

அன்று ஏனோ ஆத்தாவின் நினைவாகவே இருந்தது. மாடியில் படுத்திருந்தேன், பெரியப்பா வந்து படுக்கை விரித்தது தெரிந்தது. நான் அவருக்கு முதுகு காண்பித்து திரும்பிப் படுத்திருந்தேன்.

பெரியப்பா, “டேய்!”

“ம்ம்ம்”

“என்னடா கோவமா?”

நான் பதில் சொல்லவில்லை.

அவர், “”நானும் உனக்கு அப்பன் தான? அப்பன் திட்டகூடாதா? நீதாண்டா எனக்கு கொல்லி போடப்போறவன். ஆத்தாவுக்கு நான் எப்படியோ அப்படிதாண்டா நீ எனக்கு.”

நான், “ஆமா பெரிய அப்பன், எப்பப்பாரு உக்காந்து சாப்பிடறான் உக்காந்து சாப்பிடறான்னு சொன்னா யாருக்குத்தான் கோவம் வராது” என்றேன்.

“நம்ம சாமிகூட சிட்டிங் சாமிதான்டா” என்றார். அவருடைய ஆங்கில புலமையை என்னை கொஞ்சம் தளர்த்தியது. லேசாக சிரித்துக்கொண்டேன். “என்ன இருந்தாலும் அப்பன்ல; ஆத்தாவும் என்ன அப்படிதாண்டா பேசும்; ஆனா நான் ஆத்தாவ எப்படி பாத்துக்கிட்டேன் தெரியுமா?” என் முதுகிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“சும்மா பொய் சொல்லாதீங்க. ஆத்தாவ நீங்க கஞ்சா கிழவி கிறுக்கு கிழவின்னு தான் கூப்பிடுவீங்க.” திரும்பினேன்.

பெரியப்பா சிரித்தார், “ஆமா ஆமா, நம்ம பெரிய பண்டாரம் தான சப்ளையர். ஆத்தாவுக்கு நீன்னா உசுரு. நாலு அடிதான் இருந்தாலும் எட்டு குழந்த பெத்தவட, தெய்வ ராசிக்காரி” பெருமூச்சு விட்டார், “அய்யன் இறந்துதலிருந்து தான்டா ஆத்தா அப்படி ஆனது. அப்பெல்லாம் ஆத்தா எப்படி தெரியுமா? சும்மா சுபிக்ஷ ராசி. என்ன கெம்பீரம் என்ன தேஜசு, அத்தன பேரையும் ஒரு சொல்லு ஒரு பார்வையில வேல வாங்குவா. அப்புறம் தான் இப்படி ஆயிட்டா. காவி சேலையும் கஞ்சாவும். கொஞ்சம் கொஞ்சமா கிறுக்கு ஏறி வந்துடுச்சு. பொதுவா அவ உண்டு அவ வேலையுண்டுனு தான் இருப்பா. பொக போட்டாமட்டும்தான் கிறுக்கு கூடிவரும். ஊரு சாவடில படுத்துகிடப்பா, கெட்ட வார்த்த அல்லி வீசுவா, சேலை கலைஞ்சு கண்றாவியா திரியுவா. எப்போ ஊர் சாமி மேல கை வச்சு பேசிக்க ஆரம்பிச்சாளோ அப்பறம்தாண்ட கட்டி வைக்க ஆரம்பிச்சோம். அண்ணில்ல இருந்தே அவ மேல மிருகவாடை வர ஆரம்பிச்சுதுன்னு நினைக்கிறேன்.”

நான் “ம்ம்” கொட்டினேன். பெரியப்பா நினைவுகளில் சென்றார்.

“ஊரிலேயே இப்போ நம்ம வீடு தான் பெரிசு. அதனால தான் நம்ம விட்ட பெரிய வீடுன்னு கூப்பிடுறாங்க. பல தலைமுறைக்கு முன்னாடி ஏதோ ஒரு கிராமதித்திலிருந்து கொலைக்கு பயந்து அஞ்சு குடும்பங்கள் நம்ம நிலத்திற்குவந்து தோட்டம் செஞ்சாங்க; அவர்கள் கொண்டுவந்த ஒரு மொடா கூட நம்ம வீட்டின் தென்புல அறையில இருக்கு. வருஷம் ஒருக்கா பொங்கல் வச்சு அதை கும்பிடுறோம். ஆத்தாவுக்கு மட்டும்தான் அதை தொடும் உரிமை இருக்கு.” பெரியப்பா ஆகாயம் பார்த்து பேசிக்கொண்டிருந்தார்.

“அத்தா ஒரு தடி வச்சுருக்கும், நல்ல பாத்திருந்தீனா தெரிஞ்சிருக்கும் அது ஒரு உலக்கைன்னு. அது தேஞ்சு தேஞ்சு தடி மாறி ஆகிடுச்சு. அந்த உலக்கைக்கு வயசு முந்நூறாவது இருக்கும். அத்தா ஒரு பழைய உசுருடா; பெரிய உசுருடா; பத்து தலைக்கட்டுக்கு ஒருக்காதான் அப்படி உசுரு வந்து பொறக்கும்னு சொல்லுவாங்க.” பெரியப்பா அப்படியே தூங்கிப்போனார்.

நான் நினைவுகளை புரட்டினேன். வீட்டிற்க்கு தெற்குப்புறமாக மாட்டுத் தொழுவம் இருந்தது. தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைத்ததிலிருந்து மாடுகள் தோட்டத்திற்கு குடிபெயர்ந்துவிட்டது. அந்த தொழுவம்தான் அப்போது ஆத்தாவின் வசிப்பிடம். தன் கயிற்று கட்டிலை ஆத்தா அங்கு கொண்டு போட்டதிலிருந்தே பெரியப்பா அவளிற்கு தேவையான வசதிகளை அங்கு செய்ய ஆரம்பித்தார். சிறிய அறை ஒன்று கட்டினார். ஆனால் ஆத்தா வெளியிலேயே படுத்துகொண்டாள். மாட்டுத் தொட்டியை பெரியப்பா வாரம் ஒருமுறை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பியும் வைத்துவிடுவார். நேரம் தவறாமல் அம்மா சாப்பாடு கொண்டுபோய் வைத்துவிட்டு வந்துவிடுவாள். ஆத்தாவும் எப்போதாவது சமைப்பாள். தொழுவத்திற்கு பக்கத்திலேயே விரகடுப்பு மூட்டி. அவள் சமையலை நானும் பெரியப்பாவும் மட்டும்தான் சாப்பிடுவோம்.

என்னை எப்போதும் விசிக்கண்ணு என்றுதான் ஆத்தா அழைக்கும். சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டிற்கு மற்றோரு விசிக்கண்ணு வந்துசேர்ந்தது. எங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல ஊரிலுள்ள எல்லா வீட்டிற்கும் கண்ணன்குட்டி, ராசாதிக்குட்டி அருள்மணிக்குட்டி போன்ற பலதுகள். டொம்பர் மக்கள் எங்கள் ஊர் வளவிற்கு அருகில் குடிசையமைத்து ஒரு சைக்கிளில் நான்குவீதம் எடுத்துவந்து அதுகளை விற்றார்கள். சுத்த கரும் நிறமாக இருக்கவேண்டும். நல்ல குட்டிகளுக்கு பெரும் கிராக்கி.

எங்கள் மூதாதையர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்ன தெய்வங்களின் வாரிசுகள் எந்த குலத்திடம் சண்டையிட்டார்கள் அவர்கள் பூர்வீக நிலமென்ன குல சடங்குகள் என்ன போன்ற கேள்விகளிற்கு விடை எங்கள் குலதெய்வம் கருப்பண்ணசாமி வழிபாட்டுமுறை தான். குலதெய்வ கோவிலருகே எங்களுக்கென்று இருவது சென்ட் இடம் பெரியப்பா வாங்கி வைத்திருந்தார். பக்கத்து தோட்டத்தயும் ஒன்றுசேர்த்தாற்போல் வாங்க வேண்டும் என்று அவருக்கு ஆசை. கோவில் திருவிழாக்கள் சமயத்தில் அண்டை நிலத்தாரைப் போலவே எங்கள் நிலத்தையும் கோவில் பயன்பாட்டிற்கு கொடுப்பார். பத்து வருடங்களிற்கு ஒரு முறைமட்டும் வரும் திருவிழாவிற்கு பன்றியை பலியிடுவோம். அப்படித்தான் அந்த விசிக்கண்ணு குட்டியாக இருக்கும்போது எங்கள் வீட்டிற்கு வந்தது.

வீட்டிற்கு தெற்க்கே ஆத்தா இருக்கும் தொழுவம் இருந்ததால் வீட்டிற்கு வடபுறம் கோழிச்சாலுக்கு அருகே வேப்பமரத்தில் அந்த பன்றி குட்டியை கட்டிவைத்தார்கள். முதல்நாள் இரவன்று அடித்தொண்டையிலிருந்து உய்ய்ய் உய்ய்ய் என்று சப்தமெழுப்பிக்கொண்டே இருந்தது. யார் அதற்க்கு பக்கத்தில் போனாலும் கயிறில் கட்டுண்ட நிலையிலும் அங்குமிங்கும் ஓட முயற்சிக்கும். ஆரம்பத்தில் பார்க்க பாவமாக இருந்தது. நாட்கள் செல்ல செல்ல பன்றிக்கு பழக்கம் ஆயிற்று. அம்மா தினமும் தென்புறம் இருக்கும் ஆத்தாவிற்கும் வடபுறம் இருக்கும் பன்றிக்குட்டிக்கும் தவராமல் சோறு வைத்தாள். பன்றி ஒழுங்காக சாப்பிட்டிருக்கும்.

நான் அதை அடிக்கடி போய் எட்டிப்பார்ப்பேன், பன்றி என் கண்களுக்கு அழகாக இருந்தது. அருகிலுள்ள மாயவன் கோவிலில் பெருமாளுடைய ஒன்பது அவதாரங்களின் படம் மாட்டியிருக்கும். அதிலுள்ள வராகவதாரம் நீல நிறத்தில் இருந்தது. பூமிப்பந்தை மூக்கில் ஏந்தியவாறு. பூமி உருண்டை என்பது அந்த வராகத்திற்கு அப்போதே தெரிந்திருந்தது. இந்த வராகத்திற்கு என்னென்ன தெரியுமோ. மதிய வெயிலில் அதைப்பார்த்தால் ஒரு சின்ன இருட்டு படுத்திருப்பதுபோல இருக்கும். பின்புறமாக பார்த்தால் மிகச்சிறிய யானைபோலவும்; முன்பக்கமாக பார்த்தால் பெரிய ஏலியயை போலவும் இருக்கும். ஒரு பந்தை அதைநோக்கி உருட்டிவிட்டால் அது செய்யும் சேட்டை சிரிப்பு வரும். என்னதான் அழகாக இருந்தாலும் அதையும் அதன் இடத்தையும் சுத்தமாக வைப்பதென்பது முகம்சுளிக்கும் வேலைதான். எங்கள் வீட்டு பெண்கள் ரொம்பவும் சுளித்தார்கள். பன்றிவாடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மடமடவென்று வளர்ந்துவந்தது; ஊரையே பன்றிகள் ஆக்கிரமித்ததுபோல இருந்தது. ஆடுமாடுகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தது. மாட்டாஸ்பத்திரியில் பன்றிகளின் வரேவே சிறப்பு கவனம் பெற்றது. ஊர் முழுவது பன்றி வாடை கமழ்ந்தது, அதன் அமறல்கள் ஆதிமந்திரம்போல் நீக்கமற நிறைந்திருந்தது.

“உய்ய்ய் உய்ய்ய் உய்ய்ய் ”

“க்யாவ் க்யாவ் க்யாவ் ”

“உர்ர்ய்”

தீர்க்கமான கீச்சுகள்

சீற்றங்கள்

ஆட்கள் கிடைக்காததால் பெரியப்பாவே பன்றியின் இடத்தை சுத்தம் செய்வார். பன்றியை குளிப்பாட்ட வாகனங்கள் கழுவும் ரப்பர் குழாயை தண்ணீர் திறந்துவிட்டு பன்றிமீது காட்டுவார். “ஒரு கெடையில நிக்குதான்னு பாரு, அங்கயும் இங்கயும் ஓடிக்கிட்டு. டேய் விஜயா! பட்டி நாயும் தெரு நாயும் இத வம்பிழுக்காம பாத்துக்கோணும். நாலு நாய் சேந்துச்சுனா கொதரி எடுத்துடும். ஆனா பாத்துக்க! எந்த பன்னியும் செத்ததில்ல; லாரி பஸ்ஸில அடிபட்டு தூக்கிப்போட்டாலும் குண்டுமணி கணக்கா உருண்டு எழுந்து ஓடிடும். ஜீவன மண்ணில ஊணி பொறந்ததுக. பழைய ஜீவனாகும்.” பெரியப்பா சொல்லி சிரிப்பார்.

பன்றியை குளிப்பாட்டி முடித்தவுடன் அருகிலிருக்கும் காய்ந்த மண்ணை எடுத்து ஆத்தா பன்றி நெற்றியில் பூசுவாள். தன் நெற்றிமீதும் இடுவாள்; பின்பு பெரியப்பாவுக்கு எனக்கும். பன்றியை நோக்கி இருகரம் கூப்பி “கருப்பா…” என்று சொல்லிவிட்டு தன் தொழுவத்தில் போய் படுத்துக்கொள்வாள். ஆத்தாவுக்கு பன்றி வந்ததிலிருந்து கிறுக்கு தெளிவாகிவருவதாக பெரியப்பா சொன்ன நினைவு.

3

எங்கள் தோட்டத்து பட்டிநாய் இளைத்துகொண்டே வந்தது; ஆனால் பன்றியும் ஆத்தாவும் நன்றாக தேறிவந்தார்கள். பெரியப்பா பன்றியின் இடத்தை சுத்தம் செய்ய ரப்பர் பைப்பை எடுத்துக்கொண்டு வரும்போதே ஆத்தா வந்து அருகில் நின்றுகொள்வாள். ஒருமுறை தண்ணி பீச்சி அதன்மேல் அடிக்கும்போது கயிற்றை பிய்த்துக்கொண்டு ஓடிவிட்டது. பெரியப்பாவும் நானும் பின்னால் ஓடினோம்; ஆத்தா எங்களை பார்த்துக்கொண்டு நின்றாள். எங்கு தேடியும் கண்ணில் படவில்லை. குளத்திற்கு அருகில் சுற்றுவதாக தகவல் வந்தது. நாங்கள் டொம்பர் மக்களுக்கு சொல்லி வரவைத்தோம். அவர்கள் வலையுடன் வந்து பிடிக்க முயன்றார்கள். நாங்கள் குளத்தில் சுற்றுவதைப் பார்த்து நான்குபக்கம் அணைந்தாற்போல் வலையிட்டு பிடிக்க முயற்சிசெய்தோம். ஆனால் அது தப்பி கரட்டுக்கு போகும் இட்டாலி வழியாக ஓடிவிட்டது. கரட்டுக்கு ஓடினால் இனி அதை பிடிப்பது கடினம்.

தலையை கீழே போட்டவாறு “என்னடா இப்படி ஆயிடுச்சு” பெரியப்பா நொந்துகொண்டார். நான் கண்களில் வருத்தத்தோடு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தேன்.

“ஏம்பா! அத புடிக்கமுடியுமா?” டொம்பர் தலைவரைப் பார்த்து பெரியப்பா கேட்டார்.

“இனி அது போனது போனது தான் சார்”

“வேற ஏதாவது குட்டி இருக்கு?”

“இப்ப ஒன்னும் இல்ல, சொன்னிங்கன்னா ஒரு வாரத்தில ஏற்பாடு சேரோம்”

“வேற என்ன வழி; சீக்கிரம் கெடச்ச தேவல”

நாங்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தோம்; ஊரே எங்கள் வீட்டைப்பற்றித்தான் பேசியது. நாங்கள் கொண்டுவந்த சோகத்தை வீட்டாரின் மீதும் உரசினோம்; அது தகுந்த அலைவரிசையில் இயங்கியது. வீடே கனத்த அமைதியில் மிதந்தது. அந்த இறுகிய மூச்சடைக்கும் சோகம் வீட்டில் அருவமாக உலாவியது. ஆத்தாமட்டும் தொழுவத்தில் ஏதோ உருட்டிக்கொண்டு இருந்தாள். அவள் வேறு உலகத்தில் இருப்பதுபோல தோன்றியது எனக்கு. நாங்கள் அனைவரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். ஆத்தா உலக்கைத்தடியை ஊன்றிக்கொண்டு கேட்டைத்திறந்து உள்ளே வந்தாள். எல்லோரும் அவளையே பார்த்தோம். வந்தவள் திண்ணையில் இருந்த பேட்டரி லைட்டை எடுத்தோக்கொண்டு வெளியே சென்றாள்.

பெரியப்பா “ஏய் கெழவி” என்று உதடுகளை இறுக கத்தினார்.

நான் வெளியே ஓடிப் பார்த்தேன். ஆத்தா கரட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.

நான் உள்ளே வந்து பார்த்ததை சொன்னேன்.

“போய் தொலையட்டும்” பெரியப்பா வெறுப்பாய் முனகினார்.

அடுத்தநாள் காலை “என்னங்க என்னங்க..” என்ற அம்மா பதற்றமாய் கத்துவதை கேட்டு எழுந்தேன். அப்பாவும் பெரியப்பாவும் தொழுவம் நோக்கி ஓடியதைப் பார்த்தேன். அவர்களின் பதற்றம் என்னைத் தொற்றவில்லையென்றாலும் குழப்பத்தில் நானும் எழுந்து ஓடிப்போய் பார்த்தேன்.

தொழுவத்தில் கயிற்று கட்டிலில் ஆத்தா விலகிய காவிச்சேலையுமாக புழுதியடைந்த கால்களுமாக வலப்புறம் ஒருக்கலித்து படுத்திருந்தாள். கட்டிலின் இடதுபுறம் அவளது உலக்கைத்தடி கிடந்தது. வலதுபுறம் எங்கள் பன்றி படுத்திருந்தது. இருவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்கள் எங்கிருந்தோ தூரகால தூரதேசத்திலிருந்து வந்தவர்கள் போலிருந்தது.

“ரெண்டும் வந்துருச்சு பாரு..” அப்பா பொதுவாக சொல்லிவிட்டு உள்ளே போனார். அம்மா பின் தொடர்ந்தார். பெரியப்பா மட்டும் ஆத்தாவின் கால்கள் அருகே நின்றிருந்தார். நான் அவரை கவனித்தேன். ஆத்தாவின் செம்புழுதி படர்ந்த கால்களை வருடினார். அவரது தொண்டை மேலும்கீழும் ஏறி இறங்கியது. முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டு உள்ளே சென்றார்.

நான் கயிறு எடுத்துவந்து பன்றி கழுத்தில் கட்ட எத்தனித்தேன். ஆத்தா அரைத்தூக்கத்தில் என் கையை தட்டி விட்டு சொன்னார் “விசிக்கண்ணா கட்டவேண்டாம்”. அன்றிலிருந்துதான் அதை விசிக்கண்ணு என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

அந்த கட்டவிழ்ந்த வராகம் கற்றற்ற மிருகம் ஆத்தாவின் காலடியிலேயே கிடந்தது. அது ஆத்தாவைவிட்டு கணநேரமும் விலகாமலிருந்தது. ஆத்தாவின் பக்கத்தில் யாரையும் அது விடுவதில்லை. அது எருமையின் கருணையும் நாயின் சேட்டையும் அமையப்பெற்றவை போலிருந்தது. குணத்தில் பசுவிற்கும் நாய்க்கும் இடைப்பட்டதுமாக. தொழுவத்தின் ஓரத்தில் இருவரும் ஒரு ஜீவனென இருந்தார்கள். வரட்டியும் வாடையுமாக.

வழக்கங்கள் திரும்பியிருந்தது. ஆனால் அம்மா விசிக்கண்ணுக்கு போடும் உணவு ஆத்தாவுக்கு அவ்வளவாக ஒப்பவில்லை. பழையதும் புளித்ததும். அவளுடைய பங்கும் வராகத்திற்கு போதவில்லை. ஆத்தா தினமும் அவளே சமைக்க ஆரம்பித்தாள். முதலில் வெறும் சோறு, பின்பு பருப்பு குழம்புகள் அடுத்ததாக பொங்கல் கீரைகள். நாட்கள் செல்லச்செல்ல வராகம் தனக்கான விருப்ப மனு ஆத்தாவிடம் ரகசியமாக சொல்லியதோ என்னவோ; ஆத்தா இட்டிலிக்கு மாவாட்டினாள். இருபது வருடம் நின்றுபோன செக்கில். நானும் பெரியப்பாவும் சொல்லிவைத்தாற்போல காலையில் தட்டை தூக்கிக்கொண்டு தொழுவத்திற்கு போவோம். அன்னப்பூரணி மனித மிருக பேதமின்றி கும்பி நிரப்பினாள். செக்கில் ஆட்டிய சட்டினிகள். இய்யப்பாத்திரத்து அவியல்கள், மண்சட்டி வணக்கல்கள், தொவையல் தீயால். இன்னும் பெயர்தெரியாத நூற்றாண்டு வகைகள். சோலாக் கூழில் பழைய சோற்றை கணக்காகக் கலந்து வெந்தயக் கீரையை வரமிளகாயோடு நல்லெண்ணெயில் பக்குவமாய் வணக்கி சரியாக உப்பு சேர்த்து அம்புலி ஒன்று தயாரிப்பாள்; “உக்காந்து சாப்பிடறான் பாரு” என்று யார் என்னை எப்படி திட்டினாலும் பரவாயில்லை. கேப்பைக்கூழ் கம்மன்சாரரும் முருங்கை குழம்பும் அடுத்தபடிகள்.

வராகம் பெரிதாக ஆக ஆத்தா பூரித்தாள். அவள் எப்போது அந்த உலக்கைத்தடியை விட்டாள் என்று எங்களுக்கு தெரியவில்லை. கூன் நிமிந்திருந்தாற்போல் பட்டது.

எங்கு செல்லினும் அவர்கள் இருவரும் சேர்ந்தே சென்றார்கள். ஆத்தாவிடம் விளையாடி மகிழும். பின்னங்கால்களால் உந்தி முன்னங்கால்களை கொண்டு ஆத்தாவின் கைகள்மேல் ஏறும். ஆத்தா பலம்பொருந்தாமல் கீழே சாய்ந்து சிரிப்பாள். அவள் உடல்முழுவது கீறல்களும் காயங்களும். அவள் கண்டுகொள்வதாக எனக்கு தெரியவில்லை. கோழி கூப்பிடுகையில் தொழுவத்தில் இருவரும் ஏதோ உருட்டுவார்கள்; உச்சிப்பொழுதில் காலமற்ற கற்குண்டுகள்போல் அமர்ந்திருப்பார்கள்; சாமத்தில் ‘உய்ய்ய் உர்ர்ர், க்யாவ்’ என சம்பாஷித்திருப்பார்கள். இருவருக்குமிடையே புது பாஷை துளங்கிவந்தது. பூதகணங்கள் போலிருப்பார்கள்.

பன்றித் திருவிழாவும் நெருங்கிவந்தது.

4

நாளை திருவிழா; இன்றே என்னைப்போன்ற கடைநிலை குடும்பத்தினர் குலதெய்வக் கோவிலுக்குப்போய் கோவில்நிலங்களில் இடம்பிடித்து பந்தல் அமைக்கவேண்டும். குடும்ப முக்கியஸ்த்தர்கள் நாளை வருவார்கள். அதிமுக்கியஸ்த்தர்கள் எல்லாம் முடிந்தபின்பு வருவார்கள். டெம்போ அதிகாலையே வந்திருந்தது. ஒரு சமையற்காரர், இருண்டு பெண் ஆட்கள், ஒரு எடுபுடிப்பையன். விறகுகள், காஸ் சிலிண்டர், அடுப்பு, பெரியவகைப் பாத்திரங்கள், கரண்டிகள், அரிசி மூட்டை, சின்ன மற்றும் பெரிய வெங்காயப் பை. அரைத்த மசாலாக்கள். உறைகுத்த பால், வாழையிலை கட்டுகள், அரிவாள்மனைகள் கத்திகள், தேங்காய்கள், ஜமுக்காளம் என்று எல்லாம் ஏற்றியாகிவிட்டது. இரண்டுமட்டும் பாக்கி. வராகமும் ஆத்தாவும்.

எனக்கும் பெரியப்பாவிற்கும் ஒருவித பதற்றமிருந்தது. ஆனால் ஆத்தாவும் வராகமும் வழக்கம்போலவே இருந்தார்கள். தப்பி ஓடும் எண்ணமிருக்குமோ?

பெரியப்பா தொழுவத்திற்குப்போய் “நேரமாவுது!!” என்றார்.

கயிற்று கட்டிலில் படுத்திருந்த ஆத்தா எழுந்து முன்செல்ல வராகம் பின்தொடர்ந்தது. அருகில்வந்து நின்றார்கள். நான் ஏற்கனவே தடிமனான நீண்ட பலகையை டெம்போவில் ஏறுவதற்கு தோதாக சாற்றி வைத்திருந்தேன். ஆத்தா டெம்போவை நோக்கி விரல் காண்பித்தாள். வராகம் பலகைமேல் ஏறியது. நானும் பெரியப்பாவும் முட்டுக்கொடுக்க வராகம் டெம்ப்போவில் ஏறி ஓரத்தில்போய் படுத்துக்கொண்டது. ஆத்தாவையும் கைத்தாங்கலாக ஏற்றிவிட்டோம். நானும் பின்புறம் ஏறிக்கொண்டேன். வண்டி கிளம்பியது.

எங்களுக்குள் உள்ள மௌனம் மற்றோரு ஆள் போல இறுக்கமாக அமர்ந்திருந்தது. எந்நேரமும் அந்த மௌனம் எழுந்து என்னிடம் ஏதாவது சொல்லிவிடுமோ என்று பட்டது. கோவிலுக்கு செல்லும் அந்த சிறிய பயணம் நெடுநேரமானது எனக்கு.

5

நடுச்சாமம் இருக்கும் ஒலிபெருக்கியில் கேட்டது.

:”இதுனால என்னனா இன்னும் சற்றுநேரத்தில் மொதோ பண்ணியா நம்ம கோயில் பண்ணி கெழக்கு பக்கமா இருக்க பலி போடறா எடத்துல வெட்டப்படுது; அத தொடர்ந்து எல்லாரும் அவுங்கவுங்க பண்ணிய பலி போடறா எடத்துக்கு கூடிவங்க. கோயிலை சுத்தி அஞ்சு எடத்துல ஏற்பாடு செஞ்சிருக்கோம், அதனால எல்லாரும் ஒரே எடத்துக்கு வர வேண்டாம். எது பிரீயா இருக்கோ அங்க போங்க.”

நான் வராகத்தைப் பார்த்தேன் அது மரத்தில் கட்டிவைக்கப் பட்டிருந்தது. ஆத்தாவை தேடினேன் அவள் பார்வைக்கு அகப்படவில்லை. இன்னும் நேரமிருந்தது. கோவிலை சுற்றி பல பந்தல்கள்; ஒவ்வொரு பந்தலருகிலும் ஒரு டெம்போ; அருகிலேயே அதற்கான சமையல் சாமான்கள். எல்லா இடத்திலும் டியூப் லைட்டுகள். கார்கள் நிறுத்தி வைக்குமிடங்கள்; பலூன் காரன் சாமத்து ஐஸ்பெட்டிக்காரன் தின்பண்டம் விற்பவர்கள் இன்னும் யார்யாரோ.

இம்முரை பலிபீடம் எங்கள் இருவது சென்ட் நிலத்திலும் அறங்காவலர்கள் அமைத்திருந்தார்கள்.

“ப” வடிவிலான தடிமனான கல் பலகையை பலி பீடமாக நட்டு வைத்திருந்தார்கள். கட்டி இழுத்துவரும் பன்றியின் கழுத்தை அதில் வைத்து. கனமான அருவாளால் தலை துண்டாகும்வரை வெட்டுவார்கள். இரத்தம் வழியெங்கும் ஓடும்.

கோவில் பன்றியை வெட்டும்போது பெரிதாக எங்கள் பந்தலிலிருந்து எதுவும் கேட்கவில்லை. அதை தொடர்ந்து சிலர் வெவ்வேறு பலி பீடங்களுக்கு தங்கள் பன்றியை கட்டி இழுத்தும் கால்களை முடக்கி தூக்கியும் சென்றனர். சிலர் தங்கள் பன்றியை டெம்போவின் அருகிலேயே அவரவர்களாக அறுத்துக்கொண்டனர். அந்த நிலப்பரப்பே பன்றியின் ஓலம் நிரம்பி வந்தது. அறுபடும் பன்றிகள் துடிக்கும்; இரண்டொருவர் பன்றியை பிடித்து அமுத்துவார்கள்; அறுப்பவன் கை பாதியில் ஓயும்; பாதி அறுபட்ட பன்றி கண்சிமிட்டி ஓலமிடும், எழுந்து ஓட முயற்சிக்கும். சிலதுகள் ஓடி விழும். சூடான இரத்தம் தெறிக்கும்; கால்களை நனைக்கும். ஓலமும் இரத்தவாடையும் மனித ஆதி இச்சைக்கு வலு சேர்க்கும்.

ஆத்தா இருட்டுக்குள் இருந்து வந்து நின்றாள். பெரியப்பா “போலாம்” என்றார்.

கயிற்றை அவிழ்த்துவிட்டு ஆத்தா பலி பீடம் நோக்கி நடந்தாள். வராகம் ஓடிச்சென்று ஆத்தாவிடம் சேர்ந்துக்கொண்டது. நானும்பெரியப்பாவும் தாமதிக்காமல் பின்தொடர்ந்தோம். ஆத்தா எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் நடந்தாள்; வராகம் பசுபோல துணைசென்றது. எங்களை ஏமாற்றி தக்க சமயத்தில் இருவரும் தப்பிவிடுவார்களோ? அத்தா வரகாத்தின்மீது சவாரியிட்டு குதிரைவேகத்தில் பறந்து விடுவாளோ? நாளை விருந்தினர்கள் வந்துவிடுவார்கள் கடைசி நேரத்தில் மாற்று பன்றிக்கு எங்கு செல்ல? இல்லை இல்லை அவர்கள் பலி பீடத்து திசையில்தான் செல்கிறார்கள்.

பலி பீடம் வந்தாயிற்று. அது எங்கள் இடம். பதற்றம் தொற்றிட்டு; மூச்சு கனத்தது; ஏதோ ஆகி விடுமோ? எல்லாம் சரியாக நடக்க வேண்டும்.

பூசாரி எங்களுக்கு பின் வருபவர்களைப் பார்த்து பொதுவாக சொன்னார் “இது தான் இங்க கடைசி மத்தவங்கெல்லாம் கிழக்கு பக்கம் போங்க… கிழக்கு பக்கம் போங்க… ”

பூசாரி எங்களை வரச்சொல்லி கை அசைத்தார். அத்தா முன்சென்று பலி பீடம் நோக்கி விரல் காண்பித்தாள். வராகம் அருகில் சென்றது. அதிசியத்தைப் பார்த்த இருவர் அதன் பின்னங்கால்களை பிடித்து இழுத்து காதோடு தலையை பிடித்து “ப” போன்ற அந்த கல்லில் வைத்தார்கள். நான் கடைசியாக அதை தொட்டுப்பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முண்டாசு கட்டிய ஆயுதம்தாங்கி ஒருவர் இயங்கினார்; கனவு போல நடந்து முடிந்தது. எங்கள் வராகம் இரு துண்டுகளாக. முண்டம் பதறி அடங்கியது.

ஆத்தா ஏதோ அகால வெளியை பார்த்து கைகூப்பி நின்றிருந்தாள்.

பூசாரி வராக குருதியை எங்களுக்கு ஆக்கினையில் திலகமிட்டார். ஒரு சாக்கில் இரண்டு துண்டுகளையும் சுற்றி குட்டியானை ஆட்டோவில் ஏற்றினோம். பெரியப்பா “நாம முன்னாடி போவோம்” என்றார். ஆட்டோ கிளம்பியது; நான் ஆத்தாவை திரும்பிப் பார்த்தேன். ஆத்தா நின்றுகொண்டிருந்தாள்.

6

சுமார் ஐநூறு பழிகளாவது இருக்கும். எல்லோரும் பழி முடிந்து அவரவர் பந்தலுக்கு போய்விட்டார்கள். அடுத்தநாள் காலையிலிருந்தே சமையல் ஆரம்பமானது. எங்கும் ஜனக்கூட்டம். ஒருமூலையில் பறையிசை மறுமூலையில் கரகாட்டம் ஒருமூலையில் வானவேடிக்கை மறுமூலையில் ஓய்ந்திருந்த நாடகம். பூசைகள் முடிந்து மதியம் பந்தி ஆரம்பமானது. பல ஆயிரம் தனி நிகழ்வுகளாக நடந்த திருவிழா ஒரு ஆடல்போல நடந்தேறியது. எல்லாம் விமர்சையாக நடந்தும் முடிந்தது.

ஜனக்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. வீட்டார்கள் எல்லோரும் சாப்பிட்டாயிற்றா என்று பெரியப்பா கேக்கும்போதுதான் நாங்கள் உணர்ந்தோம் ஆத்தாவைக் காணவில்லை. “அரைகிறுக்கு போதை தெளிவான அதுவே வந்துரும்” என்று அப்பா சொல்ல பெரியப்பா முறைத்துப் பார்த்துவிட்டு ஆத்தாவை தேட ஆரம்பித்தார். நானும் சேர்ந்து கொண்டேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இருட்டி வந்ததால் முதலில் வீட்டாரை ஊருக்கு அனுப்பிவைத்தார் பெரியப்பா.

மைக் செட்டில் சொல்லலாம் என்று நாங்கள் இருவரும் சென்றோம்.

பெரியப்பா, “தம்பி ஒன்னு அனஉன்ஸ் பண்ணனும்” மைக் செட் பொடியனிடம் சொன்னார்.

பொடியன், “சொல்லுங்க சார்”

“ஒரு வயசான அம்மாவ காணல. காவி சேல போட்டிருக்கும்”

பொடியன் எழுந்தான். “எல்லாரும் அங்கதான் சார் போயிருக்காங்க”

“என்ன; எங்க? ”

“ஒரு ஆத்தா நின்னுகிட்டிருக்கு”

பேய் அறைந்தது எங்களுக்கு.

எங்கள் அந்த இருவது சென்ட் இடத்திற்கு பெரியப்பா ஓடினார். நானும் பின்னாலேயே ஓடினேன். கூட்டத்தை விளக்கி கொண்டு பார்த்தோம். ஆத்தா நின்றுகொண்டிருந்தாள்.

கூட்டம் ஐம்பது அடிகளாவது விலகிதான் நின்றிருக்கும். அவள் அருகில் யாருமில்லை. எங்களுக்கு அவள் முதுகுதான் தெரிந்தது. அந்த காட்சியை பார்த்த பெரியப்பா சற்று தள்ளாடி முகம் இருகி கண்ணீர் சொரிந்தார். கைகளை மேல்முகமாக ஆகாயத்தை பார்த்து ஏந்தி “அம்மா.. அம்மா..” என்று கதரியவாரு அருகில் சென்றார். நான் செய்வதறியாது அவர் தல்லாடி செல்வதை பார்த்து பயந்து பின்னாலேயே நின்று விட்டேன்.

கால்கள் இடர கண்ணீரோடு கதறிக்கொண்டே ஓடி ஆத்தாவின் முன் சென்று நின்றார். ஒரு கணம் முகம் நோக்கினார். உக்கிரம் தாங்காதவர்பொல் இரண்டு அடி பின்னோக்கி சென்று கண்கள் சுழன்று அலங்கோலமாக முதுகு மண்ணில் பட விழுந்து மூர்ஜையானார். நான் அவரிடம் ஓட எத்தனித்தேன்; அருகிலிருந்த ஒருவர் என் கைகளை இருக பற்றி “வேண்டாம்பா, சாமி உண்ணயும் அடிச்சுடும்” என்று சொன்னபோது ஒருவாறாக எனக்கு விளங்க ஆரம்பித்தது.

அவள் நின்றுகொண்டெதான் இருந்தாள். நிரஞ்சனா நதி சாக்கியன் போல.

7

வான் இளம் மஞ்சலாய்ப் பூத்தது. நாகமொன்று அவளின் பாதம் சுற்றிவந்தது. எலிகளும் கீரிகளும் முயல்களும் இடும்புகளும் தத்தம் வலைகளில் இருந்து வெளியே வந்து ஆடின. காகம் குருவி கொக்கு குருகு காட்டுச்சேவல் மயில் மைனா பாடி மகிழ்ந்தன. இனமறியா புட்கள் வானில் வட்டமடித்தது. சுனை ஒன்று கொப்பளித்தது. மனிதர்கள் கணமற்று இருந்தார்கள்.

ஆக்கினை ஒன்று அசைந்தது.

அடிமுதுகில் சட்டென ஒரு மின்சாரம் அடித்து பின்மண்டயில் முடிந்தது. உலகம் தெளிவானது. இருப்புணர்ச்சி உடல் எல்லையை உடைத்து எல்லா திக்குகளிலும் வெடித்து சிதறியது.

பூரணம் நிகழ்ந்தது.

வீரன் வணங்கினான் மாடன் அண்ணாந்து பார்த்தான் முனி பணிந்தான் கருப்பு தெண்டனிட்டான் தூரகால பத்தினி ஒருத்தி விழி திறந்து மூடினாள். நூறுவருட மொட்டு ஒன்று மலர்ந்தது.

அவளின் உடலில் சிறு அசைவு தென்பட்டது. எங்கள் எல்லோரது கவனமும் நேர் கோடென அவளின்மீது இருந்தது.

கால விழி திறந்தாள், திரும்பினாள்; ஒரு பார்வையில் பார்த்தாள்.

அருகிலிருக்கும் மணற்திட்டின் மேல் கடைசியாக சென்று அமர்ந்தாள்.

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.