எங்கள் தெருவின்
ராஜ ரம்மியம் என்பது மழை.
மழை நின்ற பின்பு
சுகந்தமாய் காதல் நடை பயிலும் சாலை.
காற்றின் காதலில்
மெல்ல இதழ் கவிழும் பூக்கள்.
சீரில்லா அலைவரிசையில்
ரீங்காரமிடும் மழைப்பூச்சிகள்.
யாருமற்ற ஈரம் படர்ந்த மொட்டைமாடிகள்.
மாலை மயங்கி பின் தொடரும்
இரவின் வனப்பில்
முழுதுமாக ஒரு யட்சியாய்
மின்னும் மிகை ஒளிப்படத்தினை போலிருக்கும்.
வாழ்த்துக்கள்
இப்போது
உங்களுக்கே தெரியாமல்
நீங்களும் தெருவுக்குள்
நுழைந்து விட்டீர்கள்.
யாரும் கவனிக்காமல் கவனியுங்கள்
மழை நின்ற சாலையில்
எவ்வித சலனமுமில்லாமல்
ஒவ்வொன்றாய்
அனிச்சையாக உதிர்ந்து
சிதறி விழுந்த கிடக்கும்
மஞ்சளரளி மலர்கள்
போட்டிருக்கும் அந்த கலைந்த கோலத்தினை.
காண்பதற்கு
அவ்வளவு
கனிவாய் இருக்கிறதல்லவா.
இப்போது கொஞ்சம்
மெலிதாய் புன்னகைத்து கொள்ளுங்கள்.
அங்கே
எதிர்ச்சாலையின்
தேநீர் கடையின் நாற்காலியில் இருந்து
இவை யாவற்றையும்
என் நிச்சலன நினைவில் இருந்து
எழுதி முடிக்கிறேன இத்துடன்.
இப்போது நான் தரும்
பதில் புன்னகையில்
நீங்களும் நானும்
நிகழ் நிமிடம் வந்துவிட்டோம்.
மழை முத்தங்கள் தந்தாயிற்று
சென்று வாருங்கள்.