புகை வடிவமான
♪
சூடாக தேநீர் அருந்திக் கொண்ட
குவளைகள் இரண்டு பேசத் தொடங்கின
அவை என்ன பேசியிருக்கும் என்பதை
துவங்கும் போது
புகை வடிவமான
சுருள்கள் இரண்டு மேலெழும்பி
இருக்கைக்கு மேல் பாம்பாய் நெளிகின்றன
பின் அழகான மரமொன்றாய்
அசைந்து கிளைகள் பரப்புகின்றன
அங்கு கொசுக்கள் மொய்த்து சுவைக்க
வாய்ப்புகள் இருக்கவில்லை
அங்கு இரண்டு குளங்களை பார்க்க முடிந்தது
குவளையின் பெருந்தோல்கள்
கண்ணாடி வளையங்களால்
பொருத்தப்பட்டிருப்பதால்
எரியும் உடல் கொண்டு
இறந்து போவதில்லை
எனினும் அவைநோயுற்றிருக்கின்றன
இப்போது யாரோ
ஊதிவிட்ட காற்றில் தேநீர் அசைகிறது
இனி எளிய மனிதர்கள்
இருவர் பருகலாம்
..
காற்றின் கதை
♪
இரவின் பிரதியை பிரித்தெடுத்து
விண்மீன்களின் தூரத்துக்கு
அழைத்துச் சென்று விளையாடுகிறது காற்று
நீளும் விளையாட்டில்
பாம்பாய் நெளிந்த இரவுவின் பிரதி
சிறகுகள் முளைத்த
மேகத்தின் சன்னல் திறந்து
வசிக்கத் துவங்குகிறது.
காற்றுக்கு பிரதியின் செயல்
மறு அறிவித்தல் வரும்வரை பிடிக்காததால்
வெளியேறி
காட்டு மரங்களின் கிளைகளில்
வந்தமர்கிறது
இப்போது காட்டு மரம்
பழங்களை பரிசளிக்கின்றது
பழங்களை காற்று உண்பதற்கு தயாராகும்போதெல்லாம்
பழங்கள் எரிகற்களாய் உருவத்தை மாற்றிக்கொள்கின்றன
இனி என்ன செய்வது மற்றுமொரு ஏமாற்றத்துடன்
காற்று முந்தின இரவின் தனிமைக்குள் சிநேகிக்க துவங்குகிறது.