பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

காலச்சக்கரம்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

அலையலையாய் ஆயிரம் கனவுகள் அந்தரக்கடலிலே
காலத்தின் படகில்
பயம் எதுவுமின்றி நின்று
வெவ்வேறு வீரிய விசையுடன் வீசப்படுகிறது
நீளும் கையில் நிகழும் தகவுகள் தக்கையைப் போலே.

வாழ்வெனும் பரந்து விரிந்த வலைக்குள் வட்டமடித்து உழன்றபடியே சுழலும் எண்ணற்ற சித்திர மீன்களில்
அன்பின் வலையில் அகப்பட்டு பிடிபடுதல் ஓர் சுகம்
தத்தளித்து விலகி விடுபட்டு தப்பித்தலோ ஒரு சாபம்.

இதோ அங்கே பிடிபடாமல் விடுபட்ட உதவாத ஒரு ஒளிரும் சுடர் நட்சத்திரமீன் உங்களின் விழிகளுக்கும்
மிக எளிதாகப் புலப்படுகிறது தானே
பரிதவிக்கும் பகிரப்படாத ஒரு நேசத்தின் திவலையாக.

மீப்பெருநம்பிக்கையுடன் இருப்பாய் ஒளிர் மனமே
இங்கே யாவும் ஒன்றல்லவே.
கனிவுடன்
காத்திரமாக இருப்பாய் கலை மனமே
தனித்து தெரிதலொன்றும் தவறில்லையே
காட்சிகள் மாறும்
ஆகவே கவலைப்பட ஏதுமில்லை

சொல் வளர்த் தோட்டம்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி 

 

அவர்களிடம் எப்போதும் எந்த முறையீடுகளும் இல்லை.
தினமும் காலை மாலை என
இரு வேளைகளிலும்
அவர்களுடன் என் உரையாடல்கள் நிகழும்.
ஒவ்வொருவருக்குமான நிறங்களின்
மாறுபட்ட தன்மை பற்றிய
சஞ்சலங்கள் இருக்காது.
அவரவரின் பிரத்யேக நிறத்தில்
மலர்ந்து மகிழ்ந்திருப்பர்.
யாரருகில் யாரிருக்க வேண்டுமென்பது
போலான குளறுபடிகள் கிடையாது.
கால நிலை மாற்றத்திற்கு ஏற்றாற் போல
தங்களை தகவமைத்துக் கொள்வார்கள்.
யாரும் யாரை பற்றியும்
எந்த புகார்களும் சொல்லுவதில்லை.
அவர்களின் தினசரியில் நானொரு
பேசும் தாவரமென என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏமாற்றியபடி
அவர்களை செம்மைப்படுத்தி வருகிறேன்.
விதைகள் துளிர்ப்பதை காண்பது,
தொட்டியின் ஈரப்பதம் தக்கவைப்பது,
துளையிட்டு நீர் வழிந்தோடும்
பாதை அமைத்தல்,
மண்ணை சமன் செய்து நீரை தேக்குவது,
முதல் மலர், முதல் கனி என
அவர்களின் தினசரிகள் மிக சாதாரணமாக
எவ்வித அவசர கதியுமின்றி
அதி இயல்பாக இருக்கும்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக
அவர்களில் ஒருவனாக
என்னையும் அங்கீகரிக்கிறார்கள்.
என் தினசரிகளை விசாரிக்கின்றனர்.
நாங்கள் உரையாடும் போது
ஒவ்வொரு தினமும் எப்போதும் என்னிடம் ஆயிரம் முறையீடுகள் இருக்கும்
ஆயினும் எனது பிரதி கேள்விகளில்
அவர்களிடம் ஒருமுறைகூட எந்த முறையீடுகளும் இருந்ததேயில்லை.

 

மழைத்தெரு

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

எங்கள் தெருவின்
ராஜ ரம்மியம் என்பது மழை.
மழை நின்ற பின்பு
சுகந்தமாய் காதல் நடை பயிலும் சாலை.
காற்றின் காதலில்
மெல்ல இதழ் கவிழும் பூக்கள்.
சீரில்லா அலைவரிசையில்
ரீங்காரமிடும் மழைப்பூச்சிகள்.
யாருமற்ற ஈரம் படர்ந்த மொட்டைமாடிகள்.
மாலை மயங்கி பின் தொடரும்
இரவின் வனப்பில்
முழுதுமாக ஒரு யட்சியாய்
மின்னும் மிகை ஒளிப்படத்தினை போலிருக்கும்.

வாழ்த்துக்கள்
இப்போது
உங்களுக்கே தெரியாமல்
நீங்களும் தெருவுக்குள்
நுழைந்து விட்டீர்கள்.
யாரும் கவனிக்காமல் கவனியுங்கள்
மழை நின்ற சாலையில்
எவ்வித சலனமுமில்லாமல்
ஒவ்வொன்றாய்
அனிச்சையாக உதிர்ந்து
சிதறி விழுந்த கிடக்கும்
மஞ்சளரளி மலர்கள்
போட்டிருக்கும் அந்த கலைந்த கோலத்தினை.
காண்பதற்கு
அவ்வளவு
கனிவாய் இருக்கிறதல்லவா.
இப்போது கொஞ்சம்
மெலிதாய் புன்னகைத்து கொள்ளுங்கள்.
அங்கே
எதிர்ச்சாலையின்
தேநீர் கடையின் நாற்காலியில் இருந்து
இவை யாவற்றையும்
என் நிச்சலன நினைவில் இருந்து
எழுதி முடிக்கிறேன இத்துடன்.
இப்போது நான் தரும்
பதில் புன்னகையில்
நீங்களும் நானும்
நிகழ் நிமிடம் வந்துவிட்டோம்.
மழை முத்தங்கள் தந்தாயிற்று
சென்று வாருங்கள்.

சின்ட்ரெல்லாவின் தேவகுமாரன் – பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி கவிதை

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

இனி யாரும்
அவனிடம் போய்
எப்போது சொல்வாய் என்று கேட்காதீர்கள்.
ஒரு மெல்லிய மௌனத்தினை கொஞ்சம் கொஞ்சமாய்
மொழிபெயர்க்க தொடங்கியதிலிருந்து
அவனிடம் சொற்கள் இல்லை
இப்போது
அதை எப்படி பிரயோகிப்பது என்பதையும் மறந்துவிட்டான்.
தெரிந்தும் தெரியாமலும்
ஒரு பரிபூரண சுழியத்துக்குள்
உழன்றுகொண்டிருக்கிறான்
உங்களுக்கு இதெல்லாம்
ஒருவிதமான மிரட்சியாய் இருக்கலாம்
எந்தவித பரிச்சயமுமில்லாமல் இருக்கலாம்
ஆகையால் அவனை அப்படியே விட்டுவிடுங்கள்.
அவன் சின்ட்ரெல்லாவின் பிரதிபதிலுக்காக காத்திருக்கும் தேவகுமாரன்.
கொஞ்சமும் சுவாரஸ்யமற்ற
அந்த சபிக்கப்பட்ட காத்திருப்பு நாட்களை
கடத்த இயன்றவரை
இதுவரையிலும் அவளுக்காக காகிதத்தில் மையலிட்டு
காதலை எழுதி நிரப்பிக்கொண்டிருக்கிறான்
சிலவற்றை
பத்திரப்படுத்திக் கொள்கிறான்
சில சமயங்களில்
வெற்றுக் காகிதத்தை
முத்தமிட்டு சிரிக்கிறான்
இப்படியே மெல்ல நகர்கிறது
இவனது நாட்கள்
நீளும் இந்த இரவின்
சப்தமற்ற நிசப்தங்களைப் போல..
ஆம்
அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அவள் முடிவி்லா காலத்தின் தேவதைகளின் தேவதை சின்ட்ரெல்லாவின் பிரதி பதிலுக்காய்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
தேவகுமாரன் என்று
அதனால்
இனி யாரும்
அவனிடம் போய்
எப்போது சொல்வாய் என்று கேட்காதீர்கள்

செப்டெம்பர் மாத மழை வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

snails

திசையற்று பறக்கிறது
தட்டான்கள்
மொட்டைமாடியில்
வெகுநேரமாக நின்றபடியே நான்
*
ஈரத்தரையில்
இமைக்காமலிருக்கும்
தவளையின் விழியில்
சரியாக விழுகிறது மழை
*
மரம் நடும்
குழந்தையின் முகத்தில்
இயற்கையாகவே துளிர்க்கிறது
மகிழ்ச்சி விதை.
*
எண்ணெய் ததும்ப
எரியும் சுடர் விளக்கை
எடுத்த எடுப்பிலேயே
அணைக்கிறது மழை
*
எதிர்வீட்டிலிருந்து வீசுகிறது
அடுக்கு மல்லியின் வாசம்
நாங்கள் தான் இதுவரை
பேசியதேயில்லை.
*
சீசா விளையாடும்
குழந்தைகளுக்கு
ஏற்றமும் இறக்கமும்
சமசந்தோஷமே.
*
விட்டு விட்டு
பெய்கிறது மழை
நகர்ந்து கொண்டேயிருந்தது
நத்தை