பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி
அவர்களிடம் எப்போதும் எந்த முறையீடுகளும் இல்லை.
தினமும் காலை மாலை என
இரு வேளைகளிலும்
அவர்களுடன் என் உரையாடல்கள் நிகழும்.
ஒவ்வொருவருக்குமான நிறங்களின்
மாறுபட்ட தன்மை பற்றிய
சஞ்சலங்கள் இருக்காது.
அவரவரின் பிரத்யேக நிறத்தில்
மலர்ந்து மகிழ்ந்திருப்பர்.
யாரருகில் யாரிருக்க வேண்டுமென்பது
போலான குளறுபடிகள் கிடையாது.
கால நிலை மாற்றத்திற்கு ஏற்றாற் போல
தங்களை தகவமைத்துக் கொள்வார்கள்.
யாரும் யாரை பற்றியும்
எந்த புகார்களும் சொல்லுவதில்லை.
அவர்களின் தினசரியில் நானொரு
பேசும் தாவரமென என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏமாற்றியபடி
அவர்களை செம்மைப்படுத்தி வருகிறேன்.
விதைகள் துளிர்ப்பதை காண்பது,
தொட்டியின் ஈரப்பதம் தக்கவைப்பது,
துளையிட்டு நீர் வழிந்தோடும்
பாதை அமைத்தல்,
மண்ணை சமன் செய்து நீரை தேக்குவது,
முதல் மலர், முதல் கனி என
அவர்களின் தினசரிகள் மிக சாதாரணமாக
எவ்வித அவசர கதியுமின்றி
அதி இயல்பாக இருக்கும்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக
அவர்களில் ஒருவனாக
என்னையும் அங்கீகரிக்கிறார்கள்.
என் தினசரிகளை விசாரிக்கின்றனர்.
நாங்கள் உரையாடும் போது
ஒவ்வொரு தினமும் எப்போதும் என்னிடம் ஆயிரம் முறையீடுகள் இருக்கும்
ஆயினும் எனது பிரதி கேள்விகளில்
அவர்களிடம் ஒருமுறைகூட எந்த முறையீடுகளும் இருந்ததேயில்லை.