Author: பதாகை

விளையாட்டாய் – கா.சிவா சிறுகதை

சென்ற வேகத்தில் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு என் மகன் குமரனை இழுத்துக்கொண்டு அந்த சிறிய க்ளினிக்குக்குள் சென்றான் சீனி. பின்னால் சென்ற நானும் என் மனைவியும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தொடர்ந்தோம். நான்கைந்து பேர் வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில்  அமர்ந்து வெவ்வேறு திசைகளில் வெறித்துக்கொண்டிருந்தார்கள்.   டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்த மெலிந்த உடலும்  வெளிறிய நிறமும் கொண்ட இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணை அணுகி “டாக்டர் இருக்கிறாராம்மா” எனக்கேட்டு அவளின் இல்லையென்ற தலையாட்டலை தொடங்கும் கணத்திலேயே கேட்டான் “எப்ப வருவார்”.

“இன்னும் ஒரு மணி நேரமாகும்”
“நீங்களே ஊசி எதுவும் போடுவீங்களா, கொஞ்சம் எமர்ஜென்சி”
“மாட்டோம், டாக்டர் சொல்றதத்தான் போடுவோம்.இப்ப என்னாச்சு?”
“இந்தப் பையன் கால்ல பாம்பு கடித்துவிட்டது”
அந்தப் பெண் அதிர்ந்து எழுந்தாள்..”அய்ய்யோ ,எப்போ”
“இப்பத்தாம்மா அரைமணி நேரமாச்சு ”
“அண்ணே, பாம்புக்கடிக்கெல்லாம்  சரியான மருந்தெதுவும் இங்கேயில்லை, உடனே அறந்தாங்கியில இருக்கிற ஜி.ஹெச்சுக்கு போங்க. அங்கதான் டெஸ்டு பண்ணிட்டு ஊசி போடுவாங்க.போங்கண்ணே” என்றாள் பதட்டத்துடன்.
“அங்கேயே போறோம். முறி மருந்து எதாவது இருந்தாக் குடும்மா”
“அது மாதிரி எதுவும் இல்லண்ணா, தாமதிக்காம சீக்கிரம் போங்க” எனப் பதறினாள்.

அவளின் பதற்றத்தையும் தனதுடன் சேர்த்தபடி வேகமாக திரும்பி எங்களையும் இப்போது எங்களை வெறித்துபடி அமர்ந்திருந்தவர்களையும்  கடந்து வெளியே சென்று வண்டியில் என் மகனை ஏற்றிக்கொண்டு கிளம்பினான். நாங்களும் தொடர்ந்தோம். இருசக்கர வண்டிகளும் சில கார்களும் எதிர்ப்பட தூசி கிளம்பி முகத்தில் படரும் சாலையில் , பத்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அறந்தாங்கியை நோக்கி  சென்றோம்.

வானம் பார்த்த வயல்களால் பேணப்பட்ட நாங்கள் , வயல்களை வானம் கைவிட, நாங்களும் வயல்களை ஒத்தி என்ற பெயரில் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்று இருபது வருடங்களாகிவிட்டது. முதலில் பொங்கல், தீபாவளி, செவ்வாய், பள்ளி விடுமுறைக்கு என ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். இப்போது ஒவ்வொன்றாகக் குறைந்து ,  வருடம் ஒருமுறையோ அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ என ஆகிவிட்டது.

ஒரு மாதத்திற்கு முன் அதிகாலை விழிக்கும்போதே மழுவய்யனார் நினைவுக்கு வந்தார். ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இத்தனை ஆண்டுகள் நினைவிலிருந்து மறைந்திருக்க முடியும். ஊரில் இருந்தபோது வாரம் ஒரு தடவை , கண்மாயின் அலை தழுவித் தழுவி மிருதுவான மணற்துகள் மீது கால் தடம் பதிய நடந்து , சுற்றி நிற்கும் ஆறு பனைமரங்களுடனும்  மஞ்சள் மலர் சூடிய ஆவாரஞ் செடிகளுடனும் தனித்திருக்கும் மழுக்கோவிலுக்கு சென்று சாம்பிராணி காட்டி வணங்கி வருவது வழக்கம். கோவிலென எதுவும் இல்லை. கண்மாய்க் கரையின் எல்லையில் நான்கு கருங்கல் தூண்களை ஊன்றி கூம்பாக பிணைக்கப்பட்ட  பனங்கை உத்திரத்தின்மேல் பனையோலை வேய்ந்திருக்கும். எந்த அடைப்பும் இல்லை. காற்று சிறு பிள்ளைகள்போல அந்த குடிலுக்குள் நுழைந்து வெளியேறி விளையாடும். சிலையெதுவும் பதிக்காமல்  அரைமுழ உயரத்தில் முனைகள் மழுங்கிய கல் இருக்கும். அதன்மேல் கொண்டு செல்லும் பூவை போட்டுவிட்டு விழுந்து வணங்கிவிட்டு பசங்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவோம். உருவம் எதுவும் இல்லாததால் அவரவருக்கு  பிடித்த மாதிரி தோற்றத்தை மனதில் கற்பனை செய்து கொண்ட  சாமியானதால்  அனைவருக்குமே நெருக்கமானவராக மழுவய்யனார் இருந்தார்.  தேர்வு எழுதப் போகும்போதோ விளையாட்டில் வெல்லவேண்டுமென எண்ணும்போதோ நண்பர்களுடன்   போட்டி போடும் போதோ மனதிலுள்ள கற்பனையுரு அய்யனாரை வேண்டிக் கொள்வோம். ஆனால்,ஊரைவிட்டு வந்தபின்  இருபது வருடங்களாக அவரைப் பார்க்கவேயில்லை. ஏன், நினைவில் கூட எழவில்லை.

இப்போது மனதில் தோன்றியவுடன் ஊருக்கு செல்லவேண்டுமென்ற எண்ணம் உடனேயே எழுந்தது. எப்போதும் உள்ள, விடுப்பு எடுக்க முடியாது, பள்ளிகள் இருக்கின்றன, ரயில் கூட்டமாக இருக்குமென்ற காரணங்களை உள்ளத்தின் உந்துதலைக் கொண்டு ஒருவழியாகக் கடந்து , நேற்று மாலை கிளம்பி காலையில் ஊருக்கு வந்தோம். நாங்கள் முன்பு இருந்த வீடு சிதிலமடைந்து உடைந்துவிட்டதால்    என் அத்தை பையன் சீனுவின் வீட்டில் தங்கினோம். என் அப்பாவின் பிரியமான தங்கை என்பதால் எனக்கும் அத்தையின் மீது அலாதிப் பிரியம். அவர்களின் பையன் சீனுவின் மீதும்தான். நாம் அன்பாயிருக்கும்போது அவர்களால் அசட்டையாக இருக்கமுடியுமா. ஒரே வயதென்பதால் ஊரிலிருந்தவரை ஒன்றாகவே திரிவோம். ஒருவரை மற்றவர் பிரிவதேயில்லை. கோடை விடுமுறையில் நெஞ்சில் சிலாம்பு பாய்ந்துவிடாமல் பனைமரத்தில் ஏறி,  அதிகமாக கருத்திடாத, ரொம்பவும் வெள்ளையாகவும் இல்லாத நுங்கு குலைகளை வெட்டி , வயிறுமுட்ட குடித்துவிட்டு கண்மாய்க்கு சென்று செரிக்கும் வரை ஆட்டம் போட்டுவிட்டு,  கோவைப்பழம் போல கண்கள் சிவக்க வீட்டிற்குவந்து, திட்டும்,  சில நேரங்களில் அடியும் வாங்குவோம்.      சுற்றியுள்ள ஊர்களில் சித்திரைக் கொடை விழாவிற்கு போடப்படும் வள்ளி  திருமணமோ,  அரிச்சந்திர மயான காண்டமோ  எந்த நாடகமாயிருந்தாலும்  விடியும்வரை பார்த்துவிட்டு  யாராவதொருவர் வீட்டில் இருவரும் படுத்துக்கொள்வோம். அப்படிக் கூடவேயிருந்தவனை பிரியவே மாட்டேனென அடம்பிடித்த என்னை  ஊரிலிருந்து  அழைத்துச் செல்வதற்கு அம்மா மூன்றுநாள் பட்டினி கிடந்தார்.

சீனுவுக்கு திருமணமாகி சில வருடங்களாகிறது. இன்னும் பிள்ளையேதும் இல்லை. என் பையனைத்தான் மாப்ளே, மாப்ளே எனக் கொஞ்சியபடி இருப்பான். ஊருக்கு வரும்போதெல்லாம் என்னோடு சுற்றிய இடங்களுக்கெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு செல்வான். பிரியமாய் இருப்பவர்களிடம் பிள்ளைகளும் ஒட்டிக்கொள்கிறார்கள் எந்தப் புகாரும் இல்லாமல்.
இன்று மதியம் கதிரறுக்கும் வண்டிக்கு சொல்ல பக்கத்து ஊருக்குச் சென்றதால் அவனால் மழுக்கோவிலுக்கு வரமுடியவில்லை. நான் மனைவி, பையனுடன் , விளைந்த மணிகளை வரப்பில் உரசியபடி மெல்ல அசைந்து கொண்டிருந்த அடர்மஞ்சள் நெற்பயிற்கள் காலணியணியாத பாதங்களில் மெல்லிய தடம் பதிக்க,  வரப்புகள் மீது நடந்தோம். ஆங்காங்கே நண்டுகளின் வளைகள் தென்பட்டன. சில நண்டு ஓடுகள் கிடந்தன. “ஓடுகள் மீது கால் வைத்துவிடாதீர்கள்”  என அவர்களை எச்சரித்தபடி நடந்தேன். கால் வைத்தால் ஓடு நொறுங்கி காலில் ஏறிவிடும். தேள் கொட்டியதுபோலக் கடுக்கும்.

வயலைத் தாண்டியவுடன்தான் கண்மாய்.  கண்மாயின் கழிமுகத்தில்தான் கோவில். மணலில் கால் பட்டபோது மனது சில்லென்றிருந்தது. புல்லின் மேல் புதைவது போல பாதம் புதையப் புதைய நினைவுகளெல்லாம் உள்நோக்கிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தேன். எந்தக் கால்தடமும் கண்ணில் படவில்லை. யாரும் இந்தப் பாதையில் நடப்பதில்லையெனத் தெரிந்தது. சீனுவிடம் கோவிலுக்கு செல்லவேண்டுமென கூறியபோது “நான் போய் ஆறு மாசமாச்சு” என்றே சொன்னான். அவசர வேலையாக இல்லாமலிருந்தால் அவனும் வந்திருப்பான். காய்ந்துபோய் தரையோடு படர்ந்திருந்த புற்களை தாண்டி கோவிலருகே சென்று பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். பதினைந்தடி தொலைவில் ஒரு காலை தூக்கியபடி பையன் நிற்க பதற்றம் உடல் முழுக்க தளும்ப மனைவி என்னை கையால்  அழைத்தாள் . என்னவென்று புரியாமல் , வேகத்தில்,  மணலில் கால்புதைய  நான்கே எட்டில் அவர்களை அடைந்தேன்.
“என்னாச்சுடா”
“பாம்பு கடிச்சிடுச்சுங்க..பய கால்ல”
“உண்மையாவா,ஏய்…முள்ளு ஏதாவது குத்தியிருக்குண்டா”
“இல்லப்பா, பாம்புதான்..அதோ கெடக்குது பாருங்க” எனக் கை காட்டிய பக்கம் கடுங்கோபத்துடன் திரும்பிப் பார்த்தேன்.

வெயிலில் காய்ந்து பழுத்துப் படர்ந்திருந்த நண்டுப் புற்களையொட்டி  ஒரு முழ நீளத்திற்கு வளைவளைவான சாம்பல் நிறப்பாம்பு கிடந்தது.  அதைப் பார்த்தவுடனேயே ஏனோ  சட்டென கோபம் தணிந்தது.   ஒரு கணம் கண் இருட்டுவது போல் இருந்தது. பயம்கூடாது .. கூடாது.. மனதிற்குள் சில தடவை கூறிக்கொண்டு அவன் காலை நோக்கினேன். முட்டியிட்டு மணலில் அமர்ந்து அவன் பாதத்தை என் தொடைமேல் வைத்து லேசாக ரத்தம் கசிந்த கடிமுனையை என் இரு கட்டை விரலாலும் அழுத்தினேன்.இரு சொட்டு ரத்தம் வெளிவந்தது.நிறம் எதுவும் மாறவில்லை.  கால் லேசாக நடுங்குவதை கையில் உணரமுடிந்தது.  சுற்றிலும் பார்த்தேன்.  சிறிய வாழை நாரொன்று கிடந்தது. அதில் படிந்திருந்த மணலை உதறிவிட்டு மணிக்காலில் இறுக்கிக் கட்டினேன்.

“தம்பி ,ஒண்ணுமில்லை, பயப்படாதே. கட்டியாச்சு.மேலே ஏறாது. டவுனுக்குப் போயி ஊசி போட்டுக்கலாம் ” என அவனுக்கு கூறுவதுபோல எனக்கும் கூறிக்கொண்டேன்.
“ஏங்க, வீட்டுக்குப் போகலாங்க” என்ற மனைவியிடம் “இவ்ளோ தூரம் வந்துவிட்டோம், சாமியக் கும்பிட்டுவிட்டு போயிடுவோம்.ஒரு அஞ்சு நிமிசம்” எனக் கெஞ்சும் தொனியில் கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை. “கொஞ்சம் பொறுத்துக்கடா, தம்பி”  என மகனிடம் கூறியபோது , அவன் முகத்தில் தோன்றிய  உணர்வுகள் வலியினால்தான் என்றே நம்பினேன்.  நான் உடனே கிளம்பாததற்கு ” ஒரு காரியத்திற்கென்று செல்லும்போது என்ன தடை வந்தாலும் அதை முடிக்காமல் திரும்பக்கூடாது ”  என என் அம்மா அவ்வப்போது கூறியிருந்தது  மட்டும் காரணமல்ல ,  உருத்தெரியாமல் மாறியிருந்த அணுக்கமானவரின் இணக்கமான  விழிகளென,  மனதாழத்தின் ஓரத்தில் , பயம் தேவையில்லையென துளி  நம்பிக்கையை தக்கவைத்த  அந்தப் பாம்பின் விழிகளும்தான்.

கோயிலையடைந்து,  அவர்கள் இருவரும் தரையிலேயே நிற்க நான் மட்டும்  என் முட்டியளவிற்கு இருந்த திண்டின்மீது ஏறினேன். அந்தக்கல் காற்று மோதி மோதி இன்னும் கொஞ்சம் மழுங்கியிருப்பதாகத் தோன்றியது. கொண்டுவந்த பூவை சாமி மீது லிங்கத்தின் மீது போடுவதுபோலப் போட்டு கம்ப்யூட்டர் சாம்பிராணியை பற்ற வைக்க தீப்பெட்டியை பொருத்தினேன்.மூன்றாவது குச்சியையும் சுழன்றடித்த காற்று அணைத்தது.  இம்மாதிரியான தருணங்களில் தெய்வங்கள்மேல் தோன்றும் புகார்கள் ஏதும் மனதில் தோன்றவில்லை.  திரும்பி மனைவி முகத்தைப் பார்க்க எழுந்த எண்ணத்தை  அடக்கியபடி குனிந்து ஒடுங்கியமர்ந்து இன்னும் நான்கு குச்சிகளுக்குப் பிறகு   கற்பூரத்தை முதலில் கொளுத்தினேன். சாம்பிராணியையும் கொளுத்தி நிற்க வைத்தவுடன் தொட்டு வணங்கி , கீழே வந்து மண்ணில் முழு உடலும் படிய வணங்கினேன். மண்ணையே எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள அவர்களும் அப்படியே செய்தார்கள்.வேகமாக திரும்பி நடக்கையில் அந்த இடத்தைக் கடக்கையில்  ஒருகணம் கூர்ந்து நோக்கினேன். அது அதே இடத்திலேயே கிடந்தது. ஏன் அதை அடிக்க வேண்டுமென்ற வெறி மனதில் எழவில்லை என எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வரும்போதே தொலைபேசியில் சீனுவிடம் பேசினேன். பதற்றம் குரலிலேயே தெறித்தது. பார்க்கப் போனவரைப்  பிறகு பார்த்துக்கொள்ளலாம் என   உடனே வீட்டிற்கு வந்து பக்கத்து வீட்டிலிருந்த ஒரு வண்டியையும் வாங்கி தயாராக வைத்திருந்தான் மருத்துவரைப் பார்க்க டவுனுக்கு போவதற்காக.

சீனுவின் வண்டியை ஒட்டியபடியே பின் தொடர்ந்தேன். மனைவி, “ஏங்க, பயலோட காலு வீங்கற மாதிரி இருக்குங்க ” என்றதும் கவனித்து பார்த்தபோது சாதாரணமாக நரம்பு தெரியும் பாதத்தில் சற்று பூசினாற்போல மேடிட்டிருப்பது தெரிந்தது. குரலில் பதட்டம் தெரியாதவாறு “அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றேன்.

வண்டியின் பின்னால் அமர்ந்து சீனுவின்   வயிற்றை இரு  கைகளாலும் இறுக்கிக்கொண்டு , மயக்கம் கொண்டதைப்போல அவன்  முதுகில் தலையை  சாய்த்தபடி செல்லும் மகனைப் பார்த்தபோது,  சீனு என் முதுகில் சாய்ந்தபடி இதேபோல் வந்தது நினைவுக்கு வந்தது. சென்னைக்கு சென்று  ஆறு மாதத்திற்குப் பிறகு  ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு , முதல் முறையாக  ஊருக்கு வந்தபோது என்னிடம் அவன் பேசவேயில்லை. முதல்ல   இரண்டு நாட்களுக்கு , என் கண்ணிலேயே படவில்லை. பிறகு பார்த்தபோதும் விலகி விலகியே சென்றான். அவனைப் பார்ப்பதற்காகவே இவ்வளவு தூரம் வந்தவனை தவிர்த்தபோது முதலில் கோபமும் வெறுப்பும்தான் வந்தது. பிறகுதான், அன்பால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்பது புரிந்தது. நானே அவனைப் பார்ப்பதற்காக சென்றேன்.

கிணற்றுக் கொல்லையில் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கே போனேன். தரையோடு இருக்கும் கிணற்றுக்குள்  நாலைந்து பேர்  குதித்து குளித்துக்  கொண்டிருக்க, இருவர்,  கிணற்றின் உட்புறமாக சுற்றி கீழிறங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த  படிக்கல்லில்  அமர்ந்து சிறிய வாளியில் பசும் மஞ்சளாய் தளும்பிய  தண்ணீரை மொண்டு உடம்பில் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.  கிணற்றின் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை , அவன் அறியாத மாதிரி அருகில் சென்று சட்டென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டேன். அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியுமென்பதால்தான் அதை செய்தேன். ஆனால் , அதை அவன் எதிர்பார்க்காததால், குதிப்பதுபோல இல்லாமல் பக்கவாட்டில் உடலில் அடிபடுமாறு விழுந்தான். அதோடு படிக்கல்  ஒன்றின் மீதும் மோதிக்கொண்டான். ரத்தம் லேசாக வெளிவருமளவிற்கு  அவன் அடிபட்டதை பார்த்தபோது திகைத்துவிட்டேன். எதுவும் புரியாமல் அப்படியே நின்றேன். நீருக்குள் இருந்தவர்கள்தான் அவனை தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவர்களின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு உடனே டவுனில் இருக்கும் மருத்துவமனைக்கு போகுமாறு கூறினார்கள். உடல் தளர மயக்கமாக இருந்தவனை என் பின் அமரவைத்து அருகே கிடந்த பனை நாரால் எங்கள் இருவரையும் இணைத்துக்கட்டி வேகமாகப் போகச் சொன்னார்கள். முன்பக்கம் சற்று குனிந்தபடி மேடுபள்ளங்களில் மட்டும் சாய்ந்துவிடாமல் மெதுவாகவும்  மற்ற இடங்களில் வேகமாகவும் சென்று மருத்துவமனையை அடைந்தேன். அங்கிருந்தவர்களின் உதவியோடு உள்ளே கொண்டுபோய் படுக்க வைக்கப்பட்டவனை சோதித்துப்  பார்த்த மருத்துவர் “அதிர்ச்சியாலதான் மயக்கமாயிருக்காரு.  நீருக்குள் இருந்த கல் என்பதால் பெரிய காயம் உண்டாகவில்லை. கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவார்”  என்றார் ஊசி போட்டபடி.

அறந்தாங்கி ஜி.ஹெச்சின் பெரிய நுழைவு வாயிலுனுள் நுழைந்து, அருகில் நின்றுகொண்டிருந்த காவலரிடம் “எமர்ஜென்சி எங்கே ” என விசாரித்துச்  செல்ல நானும் கூடவே சென்று வண்டியை நிறுத்திவிட்டு சோர்வாக சாய்ந்திருந்த குமரனை கைதாங்கியபடி இறங்கவைத்து உள்ளே அழைத்துச் சென்றேன். சத்தம் கேட்டு நிமிர்ந்த செவிலியிடம் “பையனை பாம்பு கடித்துவிட்டது, ஒருமணி நேரமாச்சு, கொஞ்சம் வேகமா பாருங்கம்மா ” என்று கேவலாகச் சொன்னேன். பரிதவித்தபடி என் பின்னால் நின்ற சீனுவையும் மனைவியையும் ஒருமுறை நோக்கிவிட்டு, பையனை அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு வேகமாகச் சென்று அடுத்த அறையில் இருந்த மருத்துவரை அழைத்து வந்தார். மருத்துவர் வந்த வேகத்தை பார்த்தபோது விபரம் சொல்லியிருப்பார் எனத் தெரிந்தது.

“பாம்புதான்னு தெரியுமா”
“ஆமா, டாக்டர்”
“ஏன்னா, சிலர்  பூச்சிகள் கடிச்சதை பாம்புதான் கடிச்சிடுச்சுனு பயந்து வருவாங்க, நீங்க பாம்பை பார்த்தீங்களா, எப்படி இருந்தது ”
”  பாம்புதான், ஒரு முழ நீளத்துல சாம்பல் கலரா இருந்துச்சு, நானே பார்த்தேன் சார்” கேட்டபடியே காலை அழுத்திப் பார்த்தார்.
“சார், மணிக்கட்டை நல்லா இறுக்கமா கட்டிட்டேன், இப்ப கால் வீங்கியிருக்கிறதப் பார்த்தா பயமா இருக்கிறது”
“மொதல்ல அந்த கட்ட அவுறுங்க, இந்த கட்டுனாலதான் வீங்கியிருக்கு”  என்றார் கோபமாக.
“ஊசி ஒன்னு போடறேன், அப்பறம் இரத்தத்தை டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு என்னுன்னு பார்க்கலாம். ஏதாவது இருந்தா இரவெல்லாம் தங்கவேண்டியிருக்கும்.    பதட்டப்படாம அப்படி வெளியில உட்காருங்க ” என்று கூறியபடி செவிலியிடம் சென்று பேசினார். கட்டியிருந்த நாரை  அவிழ்த்து கோடுபோல பதிந்திருந்த தடத்தை தடவியபோது குமரன் முனகினான்.  நான் முகத்தை பார்க்கவில்லை.  செவிலி வந்து  ஊசி போட்டுவிட்டு இன்னொரு சிரஞ்ச் எடுத்துவந்து இரத்தம் எடுத்துச் சென்றார்.

சோர்ந்து அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்த சீனு “சாமி கும்பிடலாம்னு வந்தவங்களுக்கு இப்படி ஏண்டா நடக்குது ” என விம்மினான். நான் அவனை தோளில் சாய்த்துக் கொண்டபோது அன்றைக்கு இவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அமர்ந்திருந்தது நினைவிலாடியது. மின்னல் வெட்டியதுபோல  அந்தப் பாம்பின் முகம் மனதில் தோன்றியது. என் பையனைக் கடித்த பாம்பை அடிக்கத் தோன்றாதது ஏன் என்பது சற்று புரிவது போலிருந்தது. எதிரில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் என் முகம் தெரிந்தபோது எல்லாம் தெளிவானது. அன்றைக்கு சீனுவை கிணற்றில் தள்ளிவிட்டபோது என் முகமும் விளையாட்டாய் வினை செய்த குழந்தையையொத்த  அந்த பாம்பின் முகத்தைபோலத்தான் இருந்திருக்கும்.   “சாமி,  பாம்பின் உருவில் வந்ததென்று ” யாராவது கூறியிருந்தால் நேற்றுவரை  நான்கூட நம்பியிருக்கமாட்டேன் என்றே தோன்றியது. அதனால், வேறெதும் சொல்லாமல்    “ஒன்றும் பிரச்சனை இருக்காது ” என்று தெளிந்த முகத்துடன்,  நம்பிக்கையாய்க் கூறிய என்னை வியப்போடு பார்த்தார்கள் என் மனைவியும் நண்பனும்.

பச்சைக்குளம், அம்மையப்பன் – கமலதேவி கவிதைகள்

பச்சைக்குளம்

ஓரமாய் ஒதுங்குகிறது
கலைகிறது
மிதந்து திசையில்லாமல் நகர்கிறது
நீர் மேல் பாசி.
அத்தனை அலைகழிப்புகளையும்
சமன் செய்து அசைத்தபடி மிதக்கிறது.
பின்னொரு அதிகாலையில்
குளத்தை தன்னடியில் ஔித்தபடி
அசைவற்று நிற்கிறது
அன்றைய முதல் தொடுதலுக்காக.

 

அம்மையப்பன்

கொல்லிமலையின் முகடுகளில்
அந்தியின்  செவ்வொளி தயங்கி நின்று பரவ
தென்மேற்கில் மென்நீலம் விரிகிறது.
அந்த அணையும் சிலநிமிசங்களில்.
நீண்டமலையின் ஒரு உச்சியில்
வானை வாள்கீறிய தடமாய் மூன்றாம்பிறை.

கோம்பை – வைரவன் லெ.ரா சிறுகதை

மட்டி குலையை கயிறில் மாட்டும் போதே நாடாருக்கு எரிச்சல் கூடியது. மட்டி பரவாயில்லை அடுத்து ஏத்தன் குலை. ஆள் கசண்டி, கஞ்சப்பிசினாரி. கருத்த உழைத்த தேகம்.சிறிதாய் வளமாய் முன் பிறந்திருக்கும் தொப்பையின் மேலே தொப்புள் உள்மறைய கட்டியிருக்கும் சாரம். காலில் லூனார்ஸ், வாங்கி பலயுகம் ஆயிருக்க வேண்டும். தேய்ந்து தேய்ந்து மறுப்பக்கம் நோக்கினால், இப்பக்கம் மங்கலாய் காணலாம். வயதை அறிய விசாரணை தான் வேண்டும். சரியான சீரான பற்கள் வரிசை, நாடார்களுக்கு பொதுவாய் உழைப்பில் அபரிதமான ஈட்டு நம்பிக்கை. இதன் இணைக்காரணியோ இவர்க்கு கோபம் அதிகம், அசல் நாடாரை விட.

வழக்கமாய் இங்குதான் அலைவான், இன்றென்ன ஆளையே காணும். மனதிற்குள் யோசித்தபடியே வெளியே ஓடு இறங்கி மிச்சம் நீண்டிருக்கும் பனையில் கட்டிய கயிறில் மட்டியை மாட்டவும் குழையின் அடியில் மெலிந்த இரு கை தாங்கி கொண்டது.

நாடாரே, கீழ தொங்குது. தூக்கி பிடிச்சு மாட்டும்என்றான் கோம்பை.

நாடாருக்கு கோபம் பொங்கி, ஓங்கி படாரென்று அவன் முதுகில் அடித்தார். “பட்டிக்கு கொழுப்ப பாத்தியா, கட்டழிஞ்சு போவோனே. தூக்கி பிடில புலையாடி மவனேஎன்றார்.

நானும் குழையத்தான் வோய் சொன்னேன், அடிச்சிட்டீரேஎன்றான் கண்கள் கலங்கியபடி.

மொத்தமாய் எல்லா தொங்க விட்டவுடன். நாடார் பத்து ரூபாயை நீட்டினார், அவருக்கும் அவனுக்குமாய் டீ கடையை நோக்கி டூர் டூர் என்று வாயால் ஒலி எழுப்பி, அவன் மட்டுமே அறிந்த முன்னே நிற்கும் குதிரையை எழுப்பி அதன் மேல் ஏறி டீ கடைக்கு சென்றான்.

கோம்பை இதுவா பெயர், சூர்யபிரகாஷ் இதுதானே இட்ட பெயர். சாலியர் தெருவில் வீடு, அப்பா பள்ளிக்கூட வாத்தியார். கைக்குழந்தையில் என்ன குற்றம் கூற முடியும், மூன்று வயதை கடந்தவுடன் தான் சிறிது விளங்க ஆரம்பித்தது. இடது வாயின் ஓரம் வடியும் எச்சில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்த பற்கள், எப்போதும் முன்மடிந்த நாக்கு, அங்கும் இங்கும் அலைக்கழிந்து நிற்காது ஓடும் கால்கள். சிலநேரம் அசையாது எதையோ உற்றுநோக்கும் பாவம்.

அப்பனுக்கோ காரணமா வேண்டும், இது போதாது. மாலை வரை கையில் புத்தகம், பின்னிரவு வரை மதுகுப்பி. அம்மைக்கு வாய் உண்டு, உண்ண மட்டுமே. இவன் பிறந்து என்ன வருத்தமோ, ஆள் மெலிந்து விட்டாள். அப்பனின் அங்கலாய்ப்பு அடுத்த குழந்தையின் அழுகுரல் அவ்வீட்டில் இவனை அடுத்து ஒலிக்கவில்லை.

வினோதம் என்னவென்றால் இத்தெருவில் இரண்டு வீட்டுக்கு ஒருவர் சூர்யபிரகாஷ் போல, யார் வீட்டு இசக்கியின் சாபமோ. எது எப்படியோ புதிதானவரின் கண்களில் நுழையும் இத்தெருவின் காட்சி கொஞ்சம் மனதை சங்கடப்பட வைக்கும்.

குடியின் வெறியோ, மகனின் நிலை கண்ட கையறு நிலையோ, எதுவும் செய்யவியலா இயலாமையோ. எதை தீர்க்க அப்பாவின் கைகளின் உள்காய்ப்புக்கு இவன் வேண்டும். விவரம் அறியும் வயதில் பாதி நாட்களை அவன் சங்கிலியில் கழித்திருந்தான். சங்கிலிக்கு பெரிதொன்றும் தேவையில்லை. பேச்சிலோ செய்கையிலோ காணவியலா காரியம், சட்டென ஆள் எங்கோ மாயமாகும் கண்ணன். பின் சுடுகாட்டிலோ, தோப்பிலோ பிடித்து அடிமாடாய் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும். இதுதான் சங்கிலியின் சேதி. சிறுவயதில் சூரியனை பெரிய மின்விளக்கு என்றே அவன் அறிந்திருந்தான். நிலவு மென்மையாய் ஒளி பரப்பும் பெரிய இரவு விளக்கு அவ்வளவே.

எந்த போதி மரத்தின் அடியில் உட்காந்தோரோ, இல்லை எந்த சித்தார்த்தனை கண்டாரோ அவனை அடிப்பதை கைவிட்டார். மாறாய் என்றும் குடியை விடவில்லை. ஐந்து வயதில் காலில் மாட்டிய சங்கிலி அவன் பத்தொன்பது வயதில் தான் திறந்தது.

சில பெண்கள் சபிக்கப்பட்டவர்கள், கட்டியவனையா இல்லை பெத்தவனையா எவனுக்காக வருத்தப்பட, கண்ணீர் சிந்த. மெலிந்த தேகம் மேலும் சிறுக்கும். நேரத்திற்கு பொங்க, துணி துவைக்க, வீடு பெருக்க பாதி நேரம் அதிலே கழிந்து விடும். இவனின் பீயும் மூத்திரமும் இப்போதெல்லாம் ஒழுங்காய் அவனே வெளியேற்றி விடுகிறான். சிலநேரம் பெத்தவளின் கண் முன்னே அம்மணமாய் ஓடுவான். அம்மைக்கு எத்தனை வயதிலும் மகன் மகன் மட்டுமே.

அவிழ்ந்த சங்கிலியின் பதினான்கு வருட இறுக்கம், அதன்பின் இரவில் மட்டுமே வீட்டில் தஞ்சம் அடைவான். இருமி இருமியே நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அம்மைக்கு தினம் இரவு அவன் வீட்டிற்கு வந்தாலே ஆசுவாசம் தான். அப்பனுக்கு குடலிறங்கி குடி குறைந்து, கோவிலும் கோவிலும் என நாட்கள் நீள்கிறது. வாத்தியார் சோலி மாதம் பென்சன் கிடைக்கிறது, வீடும் சொந்தம். வாழ்வதற்கு தகும் இச்சிறிய குடும்பத்திற்கு.

கடைத்தெருவுக்கு பத்தொன்பது வயது முதல் வருகிறான். இப்போது நாற்பதை நெருங்கி இருக்கும். இன்றைக்கும் நிக்கர், மேலே வெளிறிய ஒரு சட்டையை அணிந்திருப்பான். மாதம் ஒருமுறை அப்பா ஒழுங்காய் முடி வெட்டி விடுகிறார், கூடவே சவரமும். இன்றும் வாய் ஒழுகுகிறது, ஒழுங்காய் அவனே துடைக்க பழகி கொண்டான். காலில் செருப்பு அணிவதில்லை. எப்படியோ நகங்களை சீராய் வெட்டி கொள்வான். கால்களின் இடைவெளியை சீராய் வைப்பதில் என்ன கஷ்டமோ, நிற்கும் போது வலது கால் முன்னே வளைந்துபின்னி இடது பின்னே நிற்கும். நடப்பதில் குறையில்லை, என்ன குதிகால் முதலில் நிலம் தொடும்.

கடைத்தெரு வந்த புதிதில், இதோ இதே நாடார் கடையில் வாழை பழம் வேண்டும் என அடம்பிடிக்க, நாடார் தலையில் தட்டி காசு கேட்டுள்ளார். “பழம், பழம் என கூறியதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தான். கோவக்கார நாடார் நாக்கை மடித்து தள்ளி போல எரப்பாளி, பட்டி. தொழில் நேரத்துலஎன கத்த, உடனே பக்கத்தில் இருந்த வெஞ்சன சாமான் கடையில் கை நீட்டி காசு கேட்டுள்ளான், அவர் பயந்த சுபாவம். வேண்டா வெறுப்பாய் முதலாளி காசை கொடுக்க, நாடார் பழத்தை நீட்டியுள்ளார்.

அன்றைய நாள் வெஞ்சன சாமான் கடையில் அமோக வியாபாரம். ஜோசியம், கைராசியில் நம்பிக்கை கொண்ட முதலாளி அடுத்த நாளும் அவன் கையில் காசை கொடுக்க அவன் வாங்கவில்லை. மாறாய் பக்கத்தில் இருந்த சைக்கிள் கடையில் காசு வாங்கி நாடார் கடையில் பழம் வாங்கி உள்ளான். அன்றைக்கு என ஊரில் பலர் சைக்கிள் பஞ்சர் போல, ஓரளவுக்கு லாபமே.

அப்போதில் இருந்தே இவனாய் கை நீட்டி காசு கேட்டால் யாரும் மறுப்பதில்லை, பதிலாய் எல்லாருக்கும் அதில் விருப்பமே. இருப்பினும் இவன் என்றைக்கும் வாங்குவதில்லை, சிலநேரம் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் காசு யாரிடமும் வாங்க மாட்டான்.

ஒரு நாள், நாடார் கடைத்தெரு வியாபாரிகள் கூட்டத்தில் ஆளு கோம்பையன் மாரி இருந்தாலும், கை ராசி காரனாக்கும். உத்தேசிக்கணும் இவன மாரி ஒருத்தன் மாட்ட. கிடக்கட்டும் எங்கனியும். ஆளுக்கு மாசம் கொஞ்ச காசு கொடுப்போம். முதலயா கொடுக்க போறோம்.” என்று சொல்ல. நாடாரின் பேச்சுக்கு மறுபேச்சு இன்றி எல்லாரும் ஒத்துக்கொள்ள கோம்பைக்கும் ஒரு வேலை கிடைத்தாயிச்சு. பேரும் புதிதாய் கோம்பை என சூட்டியாச்சு.

பின்னே அவன் செய்யும் வேலைக்கும் கூலிக்கும் மரமேறி பலா பறித்தவனுக்கு கொட்டை கொடுத்தது போல. லாபம் தானே அவர்களுக்கு, கோம்பைக்கு பத்து காசும் ,ஒரு பாளையம்கோட்டான் பழமும் ஒன்றுதான். கொடுப்பதை வீட்டில் கொடுத்து விடுவான். கிடைப்பதை உண்பான், சுகபோகி எதிலும் நிறைவை கண்டான். இதுதானே எங்கே பலர்க்கும் இல்லாதது.

நாடார் கடையின் ஓடு சாய்விற்கு மேலே விளம்பர பலகை ஒன்றை வைக்க விரும்பினார். பன்னாட்டு குளிர்பான நிறுவனம் இலவசமாய் கொடுத்த பெயர் தகர பெயர் பலகையை. ஆமாம் பெரிதாய் அவர்களின் முன்மொழிவும், கீழே சிறிதாய் நாடாரின் கடை பெயரும் இருந்தது அவ்வளவே. வந்தவர்கள் அரை மணிநேரத்திற்குள் மேலே கட்டி அடுத்த கடைக்கு விரைந்தனர். கடைத்தெருவில் உள்ளோரின் கண்கள் அந்த விளம்பர பலகையை நின்று ஒருநிமிடம் கவனிப்பதில் என்ன பெருமையோ, உள்ளூற மகிழ்ச்சிதான். நாடார் தினம் ஒருமுறை மேலே விளம்பர பலகையை பார்த்துக்கொள்வார். கோம்பைக்கு என்னவோ அந்த பலகையில் வெறுப்பு. வழக்கமாய் கடையின் ஓட்டு சாய்வின் அந்தப்பக்கம் எழும்பி நிற்கும் புளியமரத்தின் பின்நிழலை அதன் வழியே நோக்குவதில் இவனுக்கு விருப்பம். அக்காட்சியை மறைத்து விடுகிறது.

வருடம் முழுவதற்கும் விட்டு விட்டு மழை பொழியும் ஊர். மழையோடு ஊழிக்காற்றும் இணைந்து கொண்டு பேயாட்டம் போட்டது. கடை திறந்தாலும், சாமான் வாங்க ஆள் வருவதில்லை. பாதி கடை பூட்டி இருந்தது. கடைத்தெரு சாலை எங்கும் அங்கங்கே மழை நீர் கட்டி, ஆண்டவன் அதான் நாஞ்சிலை ஆண்டவன் நெஞ்சிலே செருகும் பட்டயமாய் கிடந்தது.

அந்நாட்களிலும் கடைத்தெருவுக்கு கோம்பை சரியாய் வருவதுண்டு. எந்த வருகைப்பேட்டில் ஒப்பிட வேண்டுமோ. நாடார் கடையை பண்டிகை நாள், வெயில், மழை என எப்போதும் பின்னிரவில் பூட்டி காலை விடியும் முன்னே திறந்திடுவார். எள்ளு போல இடம் என்று சொல்லி சொல்லியே மூன்று நான்கு ஏக்கர் வாங்கி விட்டார். காடும் நிலமும் வீடும் இருந்தும் இரண்டில் ஒரு தீபாவளிக்கு தான் சட்டை வேஷ்டி.

அன்றைய நாள் காற்றின் வேகம் மெல்ல அதிகரித்தபடியே இருந்தது. கடைத்தெருவில் பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. நாடார் கடையின் மேலே மாட்டியிருந்த பலகையின் ஒருபக்கம் கயிறு அறுந்து, காற்றின் வேகத்தில் அதன் போக்கிலே இழுத்தபடி ஆடிக்கொண்டிருந்தது.

நாடார் கடையில் இருந்த நீண்ட சவுக்கு கம்பின் துணைகொண்டு அவிழ்ந்த கயிறின் ஒருபக்கத்தில் கம்பை அடைகொடுத்து வைத்தார். சொல்லிவைத்தார் போல கோம்பையும் வந்து சேர்ந்தான்.

லேய், மேலே மெல்ல ஏறி. அந்த கயிறை இறுக்கி கட்டுஎன்று அவனை மேலே ஏற்றி விட்டார். நெடுநாள் மழை ஓட்டின் மேலே பாசி பிடித்து இருந்தது. கவனமாய் கால்களை அதன் மேல் வைக்க, நாடார் அவனை கவனித்தபடி இருந்தார்.

கயிறை இறுக்க அடைகொடுத்த கம்பை நீக்கி, பலகையை வசமாய் தொடையில் வைத்துக்கொண்டான். நாடாருக்கு பயம் எங்கே கீழே விழுந்து விடுவானோ என்று. “லேய், பிள்ளே பதுக்க செய்யணும். கவனம் என்று கத்தியபடியே நின்றார்.

சட்டென்று வீறு காற்று, கடையின் பின்னிருக்கும் புளியமரத்தின் கொப்பெல்லாம் ஆயிரம்கை விரித்து ஆடியது. மாட்டிய எல்லா கயிறும் அவிழ்ந்து, அவனின் கை நவிழ, தொடையில் இருந்த ஒருமுனையின் கூர் ஆழ பதிந்து, இரத்தம் சொட்ட.கோம்பை வலியால் துடித்தான். நாடார் அவனை மெதுவாய் பிடித்து கீழிறக்கி, கடையில் இருந்த துணியை புண்ணில் சுற்றிகட்டி அவனை இழுத்துக்கொண்டு, பக்கம் இருந்த ஆசுபத்திரி அழைத்து சென்றார். கோம்பையின் கண்ணில் நீர் வழிந்தபடியே இருந்தது. புண்ணில் மருந்து வைத்து, மாத்திரைகளையும் வாங்கி வீட்டிற்கு கொண்டு விட்டார். நாடார் கோம்பையின் வீட்டிற்கு வருவது அதுவே முதல்முறை.

பெரிய வீடு, சுண்ணாம்பு கண்டு பலவருடம் ஆயிருக்க வேண்டும். “ஆள் உண்டாபலமுறை அழைத்து உள்ளே நுழைந்தார், நீண்ட வீடு, வரிசையாய் அறைகள், எல்லாம் தூசும் சிலந்தி வலையும் படிந்து. மெலிந்த கூன்கிழவி சமையல் அறையில் கஞ்சி வடித்துக்கொண்டிருந்தாள். நாடார் அவளை அழைத்தாள், கோம்பை அரைமயக்கத்தில் இருந்தான்.

பிள்ளைக்கு அடிபட்டுட்டு, ஆசுபத்திரி கூட்டிட்டு போனோம். இன்னாருக்கு மருந்துஎன கையில் இருந்த மருந்தை அம்மையிடம் நீட்டினார்.

எதுவும் பதில் கூறாது வாங்கிகொண்டாள். ஏதோ ஒரு அறையிலிருந்து வெளிவந்த அப்பனோ எதுவும் கேட்காது, அவர்களின் மீது பார்வையை சிலநொடிகள் வீசி இருமியபடியே அவர் அறைக்குள் நுழைந்தார்.

அந்த வீட்டில் இருந்து வெளிவந்த நாடார், ஏதோ பெருத்த கனத்தை வாங்கிதான் வந்தார். கோம்பையின் நினைவு அடுத்த நாளும் நாடாருக்கு இருந்தது. வியாபார சூட்டில் நாளை செல்லலாம் என நினைத்து கொண்டார்.

நேரம் விடிந்து, கடையில் தெரிந்தவனை நிறுத்தி, கோம்பையின் வீட்டிற்கு விறுவிறுவென மிதித்து சைக்கிளில் சென்றார். வீடு திறந்து கிடந்தது. அழைத்தும் யாரும் வரவில்லை. மெதுவாய் உள்நுழைந்தார், ஏதோ அறையில் துணி அலசும் சத்தம் கேட்டது. கோம்பையை தூங்க வைத்த அதே அறைக்கு சென்றார்.

கோம்பை படுத்திருந்தான் புலம்பியபடியே, அருகே உண்டும் சிந்தியும் கஞ்சி தட்டம் கிடந்தது. மெதுவாய் கையை பிடித்தான், அனலாய் கொதித்து கொண்டிருந்தது உடல். அம்மையை அழைத்தார் அவள் உடல் நடுங்கியபடி காய்ச்சல் அடிக்காஎன்றாள், நீர் ஒழிகிய கண்களோடு. அவள் ஏதோ புலம்பினாள், நாடாருக்கு விளங்கவில்லை.

எதை நினைத்தாரோ, அவனை இறுக்கி பிடித்து தோளில் தூக்கி வந்த சைக்கிளை விட்டு ஆசுபத்திரிக்கு நடந்தார். வைத்தியம் முடிந்து, அவர்க்கு ஏதோ வீட்டில் விட மனம் எழவில்லை.

கடையின் உள்ளேயே அவர் மதியம் உறங்க சிறிது இடம் உண்டு, அங்கேயே போர்வை விரித்து அவனை கிடத்தி கவனித்து கொண்டார். இரண்டு நாள் இருக்கும், கோம்பை விழிப்பான், உண்பான் பின் உறங்குவான்.

மழை விட்டு சூரியனின் மென்மஞ்சள் ஒளி வீசி கொண்டிருந்தது. விற்று தீர்ந்த ஏத்தன் குலையை நீக்கி புதிதாய் கட்டிய கயிறில் தொங்கவிட குலையை தூக்கவும், மெலிந்த கை குலையின் அடிதாங்கி கொண்டது.

நாடாரே, குலையை தூக்கி கட்டும்என்றான் கோம்பை.

எரப்பாளி, தூக்கி பிடில. இரண்டு மூணு நாளாயிட்டு பிள்ளைய இப்டி பாத்து. தூக்கி பிடிமோஎன்றார்.

புலன் – சரவணன் அபி கவிதை

வலது கையில்லை
வலது காலில்லை
இழுபடும் நடை
மெதுமெதுவே குறைந்து
படுக்கைவசம்
சன்னலருகே பின்னொளியில்
அசைவற்ற சித்திரம்போல்
உணர்வின்றி துவளும் கரத்தைத்
எப்போதும் தாங்கும் இடக்கை
அருகமரும்
என்தலை கோதவே
தன் பிடிதளரும்
எனைப்பிரிந்து
இத்தனை வருடம் கழிந்தும்
உடல் ஒருபுறம் இழுபட
கனிந்த முகமும்
கலங்கிய விழிகளும்
சாலையில் காணுந்தோறும்
அவளையன்றி
வேறாரும் காணேன்
வேறொன்றும் உணரேன்

பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்

பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி, இந்த ஆண்டு நான் வாசித்த முதல் கவிதை தொகுப்பு, பரிந்துரைத்த பாவாவிற்கு மிக்க நன்றி. பெயரே மிக வித்தியாசமாக, சிந்திக்கவும், தேடவும் தூண்டக்கூடியத் தலைப்பு, யாதனம் என்றால் மரக்கலம், தெப்பம், வேதனை, துயரம் என்று பொருள் தருகிறது தமிழ் அகராதி, ஆக அம்புயாதனம் என்றால், அம்புத்துளைக்கும் வேதனையைத் தரக்கூடியவள் காளி என்றோ அம்புகளால் செய்யப்பட்ட தெப்பத்தைக் கொண்டு காமத்தைக் கடந்து, காமத்தால் முக்தித் தரக்கூடியவள் காளி என்றோ பொருள் கொள்ளும் வகையில் வாசகத் தேர்விற்கு ஆசிரியர் சுதந்திரம் தருகிறார். இத்தொகுப்பு எங்ஙனமும் தலைப்புச் சார்ந்தோ, தலைப்பிற்கு பொருள் என்ன என்பது பற்றியோ கவிதையொ, குறிப்போ, பொருளோ இல்லை. இது ஒரு எழுத்தாளனால், கவிஞனால் வாசகனுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய சுதந்திரம் எனலாம்.

கொண்டாட்டத்திற்குரிய மகிழ்ச்சியான கவிதைகள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? மகிழ்ச்சியை எழுதுவது அவ்வளவு சிரமமா? என்று புகழ்பெற்ற படிம எழுத்தாளர் ரமேஷ்பிரேதனிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதில்,

மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்றால் என்ன? நுணுகிப் பார்த்தால் ஆணுக்குப் பெண்ணின் உடம்பும், பெண்ணுக்கு ஆணின் உடம்பும்தான் மகிழ்ச்சி. என் அறிவுக்கு எட்டியவரை, காம நிகழ்த்துகலைதான் மானிடத்தின் முக்கியமான கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டத்தைப் பற்றி எழுதினால்தான் எல்லோரும் பதற்றமாகி விடுகிறார்களே அய்யோ இவன் உடம்பைப் பற்றி எழுதுகிறான் என்று ஒதுக்கிவைத்து விடுகிறார்களே? ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றால், மாணவிகள் ஒதுங்கிச் சென்றுவிடுகிறார்களேஇந்தச் சமூகம் காமத்தைக் கொண்டாட்டத்திற்குரிய ஒன்றாகக் கருதவில்லை. அப்படி நினைக்க அச்சப்படும் சமூகம், அதன்மீதான கவனத்தை ஈர்ப்பைத் தவிர்ப்பதற்காகவே சினிமா, கலைநிகழ்ச்சிகள், குடி, கூத்து, அரட்டை என மனிதரின் முன் கொண்டாட்டம் இதுதான் எனப் பாசாங்கு செய்கிறது. இப்படியான சமூகத்தில் மகிழ்ச்சியான படைப்புகள் எப்படி உருவாகும்?” என்று விவரித்தார். இவர் அளித்த பதிலின் உண்மை நிலையை உணர நாம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கவிதை நூல் அம்புயாதனத்துக்காளி. தமிழில் வெளிவந்து இருக்கும் முதல் தாந்த்ரீக பாலியல் கவிதைத்தொகுப்பு அம்புயாதனத்துக்காளி ஆகும்.

நமது இந்திய மரபில் காமத்திற்கு நீங்கா இடம் உள்ளது, இந்திய மரபு மட்டுமல்ல உலகின் தொன்மையான அனைத்து மதங்களின் அடித்தளமும், காமம் மற்றும் காமத்தை வென்றடைதல் என்பதன் கீழ் மேல்கட்டுமானம் கொள்ளும். இன்றளவில் ஆலயங்களில் காணப்படும் தாந்திரிக பாலியல் குறியீடுகள், பாலியல் சிற்பங்கள் அனைத்தும், காமம் என்பது வெறும் உடலின்பம் மட்டுமே, இவ்உடலின்பத்தைக் கடந்து உள்ளின்பத்தை அடைந்த முதல்வன், இறைவன் உள்ளே வீற்றிருப்பவன், இங்கிருந்து கடந்து செல்கையில் இத்தகைய காமகளியாட்டங்களை கடந்து உள்செல்கிறாய், எனும் குறியீட்டு பொருள் கொள்ளவே பாலியல் சார் சிற்பங்கள் வடித்துள்ளனர். அதுவும் நமது மரபில் கோபுரங்கள் விண்ணெழும் தீயின் குறியீடாக உவமப்படுத்தியுள்ளனர். அத்தகைய கோபுரங்களில் காமச்சிற்பங்களை அமைத்ததன் காரணம், காமத்தை எரித்து, தூய உள்ளத்தினனாக உள்ளே செல்லவேண்டும் என்பதற்காகவே, அந்த வகையில், பிரபு கங்காதரன் தன் காம உணர்வெழுத்தை காளி எனும் இந்திய மரபு ஒற்றைத்தளத்தில் ஏற்றி தன் காம உணர்ச்சிகளை எரிக்கிறார். இத்தொகுப்பை முடித்து வெளிவருகையில் ஒருவித வெம்மை நம்மை ஆட்கொள்ளும். அந்த வெம்மை காமத்தின் மீதான காதலின் வெம்மை, காமத்தை முற்றழிப்பதற்கான வெம்மை.

இக்கவிதை தொகுப்பு தமிழில் இதுவரை வெளிவராத ஒற்றைப் பிம்பம் நோக்கி, ஒற்றைச்சாளரத்தின் வழியே தன்னை கண்டடையும் உள்முறை. ”நாம் பற்றுவதெல்லாம், தானும் பிறிதொன்றைப் பற்றி நிற்பதைத்தான். பேருந்தில் கம்பியைப் பற்றுகிறோம், கம்பியோ பேருந்தின் தளத்தைப் பற்றியிருக்கிறது, தளமோ சட்டகத்தைப் பற்றியிருக்கிறது, சட்டகமோ அடிதாங்கியைப் பற்றியிருக்கிறது, அடிதாங்கியோ உருளியைப் பற்றியிருக்கிறது, உருளியோ தரையைப் பற்றியிருக்கிறது, தரையோ பூமியைப் பற்றியிருக்கிறது, பூமியோ பிற கோள்களுடனான இழுவிசையைப் பற்றியிருக்கிறது, இவை எல்லாவற்றையும் அடக்கிய அண்டமோ பற்ற ஏதுமில்லாமல் வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்கிறது. ஏதோ ஒரு பிடி கிட்டாப் புள்ளியைத்தான் எல்லாமே ப்றறிக் கிடக்கின்றன. நாமும் பற்றத் தலைப்பட்டுச் சிக்கெனப் பிடித்தால் பற்றற்ற அந்தப் புள்ளியின் பிடி கிட்டாமலா போகும்?” அந்தப் பற்றும் பற்றற்ற பிடியாக காமத்தைக் காளியுடன் கையாண்டு, பற்றற்றான் பற்றினை பெற வள்ளுவரின் பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு வழி  கையாள்கிறார். கவிஞர். ஆக பற்றுவதே வாழ்வு என்று வாழ்வார்க்கு ஒன்று, ஒன்றையும் பற்றாது நிற்பவனைப் பற்றுக. அவனையே பற்றிப் பற்றிப் பற்றாமல் நிற்கப் பயில்க  என்பார் கரு. ஆறுமுகத்தமிழன். கவிஞரின் இப்பற்றினை ஒவ்வொரு கவிதையிலும் காணலாம்.

இக்கவிதைக்கு கவிஞர் கையாண்டிருக்கும், குறியீடுகள், உவமை அனைத்தும் தமிழுக்கு புதுமை. இதில் எந்தக் கவிதை முக்கியம், எது முக்கியமில்லை என்று பிரித்தரியா நிலையில் அனைத்தையும் பற்றும் விதத்தில் உள்ளது. நறை, ராஜபாட்டை, யோனி, நுசும்பு, கணுக்கால் என சில தொடர் பிரயோகங்கள் பயன்படுத்தினாலும், வெவ்வேறு சொல்லமைப்பில், புதிய பொருளில் அர்த்தப்படுத்தும் விதம் புதுமை.

நமது கவிதை மரபில் கவிஞர்கள் முதல் தலைமுறையில் இருந்து தங்களது அக தேடலை படிமத்தின் துனணக்கொண்டு படைத்துவருகின்றனர். அத்தகையவர்களின் ஆன்மிக உள்அகத்தேடலின் ஆதர்ச நாயகனாக பாரதியார், பிரமிள், நம்மாழ்வார், தேவதேவன் முதலிய கவிஞர்களை குறிப்பிடலாம். அவ்வரிசையில் பிரபுகங்காதரனை பின்பற்றி சமீப காலத்தில் அம்புயாதனத்துக் காளி போன்ற படைப்புகள் வரத்தொடங்கியுள்ளன. அதில் முக்கியமான மற்றொரு படைப்பு ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் காளியின் கூத்தில் ஒளியொரு தாளம் எனும் கவிதைத் தொகுப்பு.

இத்தகைய கவிதைகளின் அடிப்படை அலகாக இருப்பது கற்பனாவாதக் காமம் ஆகும். காளியின் கூத்தில் ஒளியொரு தாளம் கவிதைத் தொகுப்பிற்கான அறிமுகத்தில் கற்பனாவாதக் காமம் பற்றிய நிறை குறைகளை எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளது இத்தகைய கவிதைகளை அணுகுவதற்கு மிகவும் உதவிபுரிபவன,

கற்பனாவாதம் காமம் சார்ந்ததாக மட்டுமே நின்றுவிடுகையில் ஒரு வகையான சலிப்பை விரைவாகவே உருவாக்கிவிடுகிறது. கற்பனாவாதம் என்பது சிறகடித்தெழல். காமத்தில் சிறகடிப்பதற்கு சாண் அளவுக்கு அகலமான வலைக்கூண்டுதான் உள்ளது. எங்கெல்லாம் காமம் சார்ந்த கற்பனாவாதம் கலையாகிறதோ அங்கெல்லாம் அது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதைக் காணலாம்.

காமம் மானுட உறவுக்குக் குறியீடாக ஆகும். இயற்கையுடனான முயங்கலின் அடையாளமாகும். காலம் வெளியென தழுவி விரியும் பேருணர்வாகும். இறையனுபவமாக ஆகும். நாம் கொண்டாடும் மகத்தான அகத்துறைப் பாடல்கள் அனைத்துமே அவ்வகையில் காமம் என்னும் எல்லையை கடந்தவையே. இயற்கை இல்லாத சங்கப்பாடல்கள், பெருமாள் இல்லாத ஆழ்வார்களின் நாயகிபாவப் பாடல்கள் எப்படி கவிதையாகியிருக்கமுடியும்?

நவீனத்துவக் கவிதை காமத்தை மட்டுமே காண்கிறது. ஒவ்வொன்றையும் அது எதுவோ அதிலேயே நிறுத்துகிறது அதன் யதார்த்த நோக்கு. ஆனால் ஒவ்வொன்றிலிருந்தும் உச்சத்தை, முடிவிலியை நோக்கி எழுகிறது கற்பனாவாதக் கவிதை. அனைத்தையும் அங்குசெல்வதற்கான வழியாக ஆகிறது. கற்பனாவாதக் கவிஞனுக்கு வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளும் பறவைக்குக் கிளைநுனி போல எம்பி எழுவதற்கான தளங்கள் மட்டுமே.

நவீனத்துவத்தின் பார்வைக்குள் கற்பனாவாத அழகியலுடன் எழுதப்படும் கவிதைகளில் பல வெறுங்காமத்தையே வெளிப்படுத்துகின்றன. அவை அந்தக் கவிஞன் என்னும் தனிமனிதனின் அக அவசங்களை நோக்கி மட்டுமே நம்மைக் கொண்டுசெல்கின்றன. அவற்றுடன் நாம் நம்மை அடையாளம்கண்டுகொள்கையில் நம்மை பாதிக்கின்றன. நம் உணர்வுகளை அலைக்கழிக்கின்றன.ஆனால் அலைக்கழிக்கும் எந்த உணர்ச்சியிலிருந்தும் நாம் எளிதில் விடுபட்டுவிடுகிறோம். அதைப்போலவே நவீனத்துவக் கவிதை அளிக்கும் அந்த உணர்வூசலை மிக எளிதில் நிறுத்திக்கொள்கிறோம். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இக்கவிதைத் தொகுப்பில் இருந்து ஓரிரு கவிதைகள் இங்கு தரப்படுகின்றன. இவ்விரண்டு கவிதைத் தொகுப்பில் உள்ள ஒற்றுமைகள் இக்கவிதைகள் நமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளன.

உதாணத்திற்கு,

நாள் முழுக்க

நாடி நரம்புகளெங்கும்

ஒரு புதிர்குறித்த புரிதல்வேண்டி

முத்தங்களின் கருத்தரங்கங்கள்

நடந்துகொண்டிருக்க

பகலோரமாய் நிழலில் அமர்ந்து

மணற்கிண்ணத்தில் நிரம்பியிருந்த மதுவை

நிதானமாய் அருந்திக்கொண்டிருந்தது இரவு

அப்போது அவ்வழியாய்

நொண்டியடித்தபடி கண்டும் காணாமலும்

சென்றுகொண்டிருந்தது ஒரு கனவு”

எனும் கவிதை பிரபு கங்காதரனின் நீண்ட முத்தத்திற்கு என வரும் கவிதையுடன் ஒத்துப்போவதைக் காண முடிகிறது.

காளியின் இதழ்கள் களிமண் நிலத்தின் வெடிப்புகளாயிருக்கிறது வயல் நண்டாய் ஊடுருவிப் போகிறேன்எனும் கவிதையில் உதடு வெடிப்புகளை களிமண் நிலத்தின் வெடிப்புகளுக்கு உவமைப்படுத்துகிறார். மற்றொரு கவிதையில் காளியின் உடலை வருணிக்க ஆம்பல், களிமண் வாசனை, வைகாசியில் பழுத்த புளியின் வாசனை என தொடங்கி, காமத்தின் முதன்மை தளமான ஆதிவாசியாகிறேன் உன்னை நுகர்கையில் எனும் முடிவில் காமத்தின் அடியை தொட்டுச்செல்கிறான் கவிஞன்.

அடர்வனம் நாணும். காளியின் கெண்டைக்கால் உரோமம் காண்கையில்.

மரவட்டை போல் ஊருமென் மீசை காளி, வியர்வையாய் வழிந்தோடுகிறேன்,

அளவிற் பெரிய சதுப்பு நிலத்தை பௌர்ணமியிரவில் கடப்பது போலானது காளியுடனான முயக்கம், போன்ற பல புதிய உவமைகளை பயன்படுத்தி, சொற்களுக்கான புது அர்த்தத்தை காமத்தில் தன்னைத் தேடுவது போன்று தேடுகிறார் கவிஞர். அரைஞான் கயிற்றை வெள்ளிநதிக்கு ஒப்பிடும் உவமை என நீண்ட பட்டியல் போடலாம் கவிஞனின் உவமப்புதுமையை வெளிக்கொணர

எடுத்துக்காட்டாக,

ஒரு மலைச்சரிவின்

கருத்த பாறையின் மேல்

படர்ந்திருக்கிறாள் காளி

நீ..ண்……ண்..ண்……

முத்தத்தின் முடிவில்

மலைப்பாம்பாய்

எனை விழுங்குகிறாள்

கதகதப்பான

அவள் கருப்பைத்

தேடியமர்ந்து கொள்கிறேன்

 

என்ற கவிதையில் நீண்ட முத்தத்தின் கால அளவை காட்ட, சுஜாதா பயண்படுத்தும், அவன் மாடியிலிருந்து மெதுவாக

                                                                                                           

                                                                                                                       

ங்

                                                                                                                                   

கி

போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருக்கும் விதம், அந்த முத்தத்தை நாமும் நீண்ட நேரம் அனுபவிக்கும் ரசனையை ஏற்படுத்துகிறது. வாசக விருந்து என்றும் கொள்ளலாம்.

 

நீர் கொண்டு போகும் நத்தைப் போலலெனை முதுகில் சுமத்தியிருக்கிறாள் எனும் வரியில், நீர் போன்று தான் மிகவும் இயல்பானவன் என்று குறிக்கிறார். இக்கவிதைகள், ஆன்மீகத்தின் ஊற்றுக்கண் என்பதற்கு இந்த ஒருக்கவிதைப் போதும்,

 

முன்னும் பின்னும்.

பின்னும் முன்னும்.

யென நாவால் தவழ்ந்துன்

திருமேனியளந்து பிறவாப்

பேறடைவேன் மாகாளி

 

எனும் கவிதையை சுட்டலாம்பக்தி இலக்கியத்தில், இறைவனை துதிக்கும் பாடல்களின் ஒருவகை, கேசாதி பாதம், பாதாதி கேசம் என்பது. அதாவது இறைவனை பாதத்தில் இருந்து தலைவரை பாடுவது பாதாதி கேசம், தலையிலிருந்து பாதம் வரை பாடுவது கேசாதி பாதம் என்பதாகும். அதுபோன்று முன்னும் பின்னும். பின்னும் முன்னும் நாவால் தவழ்ந்து துதிப்பதாக இக்கவிதையைக் கொள்ளலாம் நாம். இதுபோன்று பலக் கவிதைகளை கூறப்போனால் மொத்தக் கவிதையையும் கூறிவிடுவதாக அமைந்துவிடும் என்பதால் இனி கவிதைகளைப் படித்து இன்பம் நுகர இத்தொடு நிறுத்துகிறேன்.

 

காளியெனும் பிம்பம் நம் மரபில், கோவத்தின், தீயசக்தியின், பயத்தின் குறியீடாகத்தான் கொள்வோம். அத்தகைய பிம்பத்தை, அன்பின், காமத்தின், காதலின் குறியீடாக் கொண்ட கவிஞனின் துணிச்சல் எதிலும் அன்பைக் காணும் நோக்கை அறிவுறுத்துகிறது.

 

காமம் வழியும் முக்தியை அடையலாம் என்று நவீனத்துவ வழியில் நிரூபிக்கும் தமிழின் முக்கிய ஆவனம் அம்புயாதனத்துக் காளி.