அதிகாரநந்தி

நாள்

பகல் முடிகிறது
இரவு கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே வருகிறது

பகலில் நகரெங்கும்
அலைந்து திரிந்த பேருந்து
தான் சேகரித்த
​வெப்ப​​த்தை
தன் பயணிகள் மீது கொட்டுகிறது

பள்ளியில் நடந்த கதைகளைச்
சொல்வதற்காக குட்டிக் குழந்தைகள்
தங்கள் அப்பாவின் வருகைக்காக
காத்துக் கொண்டிருக்கின்றன

அலுவலகத்தில் தொடங்கிய கணக்குகள்
கர்த்தாவின் மீது நம்பிக்கையிழந்து
தங்களைத் தீர்க்க சுயமாக
முயன்றுகொண்டிருக்கின்றன

எத்தனை விரட்டினாலும் பின்னாலேயே
வந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர்
கோவில் பிச்சைக்காரியைப் போல
நாள் நம்மை
துரத்திக் கொண்டேயிருக்கிறது.

காத்திருத்தல்

-அதிகாரநந்தி-

பொறுப்புகள் எல்லம் முடிந்தாயிற்று

பேரன் பேத்திகள் பார்த்தாயிற்று
அவளும் போய்ச் சேர்ந்தாயிற்று
போதும் போதும்
மானசீகமாக ஒரு நன்றி
இதுவரை பலம் கொடுத்ததற்கு

பெரியவர் கண் மூடி
இருந்தார்

மறுபிறப்பு பயம் மட்டும்
அடி ஆழத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது

*************

எத்தனையோ
பேருந்து நிறுத்தங்களில்
தெரு முனைகளில்
தேர்வு மையங்களில்
அவனுக்காக நான் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன்

தாமதத்தை அவன் கொள்கையாகவே
வைத்துக் கொண்டிருந்தான்

நாங்கள் மீண்டும் சந்திக்கும்போது
அவன் கேட்கக்கூடும்
“கொங்கப்பன்மவனே! உனக்காக எத்தன
நாள்தான் காத்துக்கிட்டிருக்கிறது”

குரல் – 1

பொழுது நகராத மதியவேளை
சங்குபுஷ்ப விதைகளை கொல்லைப்புற
மழைநீர் குழியில் போடுகிறான்

இரு நாட்களில் விதை செடியானது
அதற்கும் ஏதோவொரு அவசரம்
தரையில் படர்ந்த கொடியை
நூல் கொண்டு மேலே திசைதிருப்பினான்

ஒரு மாதத்தில் புதராக மாறிவிட்டிருந்தது

இரண்டு புல்புல் பறவைகள்
அந்தப் புதரை சுற்றிச்சுற்றி வந்தன
கூடு கட்டும் வேலை தொடங்கிற்று
இவனுடைய மேற்பார்வையில்

ஒருநாள்
இரண்டு பேரும் இல்லாத நேரத்தில்
கூட்டை எட்டிப் பார்த்தான்
மூன்று முட்டைகள்
பல்லி முட்டை கூடப் பெரிசு

சில நாட்களில் கூட்டுக்குள்
மூன்று றெக்கை முளைத்த பல்லிகள்
கண் திறக்கவில்லை கத்தவும் தெரியவில்லை

ரோமங்கள் முளைக்க ஆரம்பித்தன
கொஞ்சம் கத்தவும் ஆரம்பித்தன
அந்தப் பக்கம் சுத்திக் கொண்டிருந்த
பூனையின் காதில் விழுந்தது

மற்றுமொரு குரல் – அனுகிரஹா

ஒரு பிரச்சாரக் கவிதை

யாரேனும் சன்னமான குரலில்
கருணைக் கதாகாலேட்சபம் நடத்தினால்
கேட்பதற்கு இதமாகத்தான் இருக்கிறது

அப்பாவிடம் இரைந்து பேசும் போதும்
மாமனார் சுட்ட அப்பளம் கேட்கும் போதும்
அம்மாவிற்கு விஷயங்களைப் புரியவைக்கும் போதும்
சின்னஞ்சிறு குழந்தை அழும் போதும்
இந்தக் கருணையெல்லாம் எங்கே

ஒரு தேரையை விடவும்
நாம் என்ன முன்னேறிவிட்டோம்
என்று நினைக்கிறீர்கள்?

                                                                – அதிகாரநந்தி

அஞ்சலி

-அதிகாரநந்தி-

Obituary_Athigaranandhi

“வணக்கம் சார்”

”சொல்லுய்யா. என்ன விஷயம்? என்னையெல்லாம் ஞாபகம் வெச்சுருக்க போலிருக்கே”

“என்ன சார் இப்படிச் சொல்றீங்க. போன வாட்டி நீங்க அனுப்பினத பதிப்பிக்க முடியாம போச்சு”

“ம்ம்”

“சார் விஷயம் தெரியுமா? நம்ம ராமசாமிய  ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணியிருக்காங்களாம்”

“என்னவாம்”

“ஹார்ட் அட்டாக் தான் சார். கொஞ்சம் சீரியஸ்னு சொல்லிக்கறாங்க”

“ம்ம்”

“நீங்க அவரப்பத்தி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தீங்கன்னா…. இந்த வாரமே போட்டுறலாம்”

“ம்ம்”

“இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள…”

”மெயில் பண்றேன்யா…”

இரண்டு மணிநேரம் கழித்து.

”சார்…”

“முடிச்சாச்சு இதோ மெயில் பண்றேன். எதையும் எடிட் பண்ணிடாத”

“சார், அதில்லை. அவர் வெறும் செக்கப்புக்கு தான் போனாராம். இப்போ திரும்ப வீட்டுக்கு போயிட்டார்னு சொல்றாங்க.”

”ம்ம்… நான் அனுப்பறேன் ஃப்யூச்சர்ல யூஸ் பண்ணிக்கோ”