சிறுகதை

இரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை

“என்ன கேட்டா செல்லப்பா தன் பேர தானே கெடுத்துக்கறான்னுதான் சொல்வன்” என்றார் முத்து. “ஜிம்னாஸ்டிக்ஸ் செல்லப்பா நம்ம சாந்தி சர்க்கஸ்ல ஒரு ஹீரோ மாதிரி. எப்பவும் க்ளைமாக்ஸ்ல அவன் சோலாவா பண்ற ரோல்தான் பவர்ஃபுல். போயும் போயும் ஒரு பொண்ணுக்காக இவ்ளோ தூரத்துக்கு அவன் எறங்கணுமான்னுதான் மனசுல ஒரு சங்கடம்.”

“மனசுக்கு புடிச்சவகிட்ட ஒன்ன எனக்கு புடிச்சிருக்குதுன்னு சொல்றது ஒரு தப்பா? பேர் கெடுத்துக்க இதுல என்ன இருக்குது?” என்றார் ராஜாங்கம்.

“இங்க பாரு ராஜாங்கம், நமக்கு சாதகமாவே எல்லாத்தயும் பாக்கக் கூடாது. அந்த லதா பொண்ணு புடிக்கலைனு சொன்னதும் உட்டுடறதுதான நாயம்? அதுக்கப்புறமும் இவன் எதுக்கு பின்னாலயே போறான்? அது தப்புதான? யாரா இருந்தா என்ன?” என்று சங்கடமான குரலில் கேட்டார் செந்தில்

“அவுங்க என்னப்பா இன்னைக்கு நேத்தா பழகறாங்க. எனக்கு தெரிஞ்சி நாம விழுப்புரத்துல கேம்ப் போட்டமே, அப்பவே இவுங்களுக்குள்ள ஒரு இது ஆரம்பிச்சிடுச்சி. உண்டா இல்லயா, அத சொல்லு?” என்றார் மாணிக்கம்.

“உண்மைதான், ரெண்டு பேருக்கும் அப்ப ஒரு நெருக்கம் இருந்திச்சி. நம்ம ஓனர்கூட என்னடா ஜோடிப்புறாக்கள் பறந்துடுமா இருக்குமானு கூட ஜாடமாடயா கேட்டதுண்டு.”

“கேட்டாரில்ல. அப்ப ரெண்டு பேருக்கு நடுவுல ஏதோ இருக்குதுனு மனசுல ஒரு புள்ளி விழுந்ததாலதான கேட்டாரு. அந்த விழுப்புரம் கேம்புக்கு அப்பறமா பண்ருட்டி, நெய்வேலி, நெய்வேலி, வடலூரு, கடலூருனு சுத்திட்டு இப்ப பாண்டிச்சேரிக்கே வந்துட்டம். நாலஞ்சி மாசமாச்சிம் ஆயிருக்காது?”

“ஆமா. இப்ப அதுக்கென்ன?”

“இவ்ளோ காலமா புடிச்சிருந்த ஆள திடீர்னு புடிக்கலைன்னு சொல்லணும்னா ஒரு காரணம் இருக்கணுமில்ல? அத வெளிப்படயா சொல்லிட்டா முடிஞ்சி போச்சி. எதுக்கு மென்னு முழுங்கணும். எதுக்கு பாக்கும்போதுலாம் தள்ளித்தள்ளி போவணும்? அதான் கேள்வி.”

“எதுக்குடா மூடி மூடி பேசறீங்க? பார் வெளயாட்டுக்கு புதுசா வந்திருக்கானே ஒரு புதுப்பையன். சிங்காரம். அந்த பையன் மேல இந்த பொண்ணுக்கு ஒரு கண்ணு. அதனால செல்லப்பாவ கழட்டி உடலாம்னு பாக்குது. அதான் விஷயம்” என்று அதுவரை அமைதியாக இருந்த துரைசாமி சொன்னார்.

“ஒனக்கு புரியுது. ஆனா புரிய வேண்டியவனுக்கு புரியலயே. எதயோ பறிகொடுத்தாப்புல ஆளே சோந்து கெடக்கறான். பாக்கறதுக்கே சங்கடமா இருக்குது. க்ளைமாக்ஸ் ரோல் பண்ற ஆளு ஒரு சுறுசுறுப்பு உற்சாகம் வேகத்தோட இருந்தாதான கச்சிதமா செய்யமுடியும்?” என்று மறுபடியும் முத்து பேசினார்.

“நம்ம செல்லப்பா எங்க? இந்த மணி எங்க? ரெண்டு பேருக்கும் ஏணி வச்சாகூட எட்டாதுடா. அவன்கிட்ட என்னத்த பாத்து மயங்கிச்சோ இந்த பொண்ணு. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்” என்று கசப்புடன் நாக்கை சப்புக்கொட்டினார் மாணிக்கம்.

நான் அவர்கள் மாறிமாறி உரையாடிக்கொள்வதைக் கேட்டபடியே சமையல்காரர் கெட்டிலில் கொடுத்தனுப்பிய சூடான டீயை கோப்பைகளில் ஊற்றி ஒவ்வொருவருக்கும் கொடுத்தேன். ஆண்களும் பெண்களுமாக மொத்தத்தில் ஐம்பத்தாறு ஆட்டக்காரர்கள் பத்து பதினைந்து கூடாரங்களில் தங்கியிருந்தார்கள். முதலாளிக்கு மட்டும் தனிக்கூடாரம். காலை, மாலை இரு வேளைகளிலும் டீயை மட்டும் கூடாரங்களுக்கே கொண்டு சென்று கொடுக்கவேண்டியது என் வேலை. சிற்றுண்டிக்கும் உணவுக்கும் அவர்களே சமையல்கூடத்துக்கு வந்துவிடுவார்கள்.

சாந்தி சர்க்கஸ்க்கு நான் முற்றிலும் புதிய ஆள். அவர்களைப்போல நான் திறமைசாலி இல்லை. எட்டாம் வகுப்பில் தோற்றுவிட்டு ஊரில் பெயிண்டிங் கான்ட்ராக்டர் சதாசிவத்திடம் பத்து ரூபாய் கூலிக்கு வேலை செய்துகொண்டிருந்தேன். அம்மாவும் மூன்று அக்காக்களும் வீட்டில் இருந்தார்கள். அப்பாவின் முகம் எனக்கு நினைவில் இல்லை. எனக்கு மூன்று வயதாகும்போது ஊருக்கு நாடகம் போட வந்த குழுவிலிருந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே போய்விட்டார். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.

செல்லப்பா எங்கள் ஊர்க்காரர். சிதம்பரத்தில் எங்கள் தெருவிலேயே அவர் வீடு இருந்தது. சின்ன வயசிலிருந்தே அவரை சித்தப்பா என்று அழைத்துப் பழக்கம். ஆறேழு மாதங்களுக்கு முன்பாக அவர் ஊருக்கு வந்திருந்தபோது அம்மா அவரைச் சந்தித்தார். “இவன் கூட இருக்கறதுலாம் ஒரே குடிகாரக்கூட்டமா இருக்குது தம்பி. ஒவ்வொரு நாளும் பயத்துலயே செத்து செத்து பொழைக்கறன். இவன உன்கூட அழச்சிகினு போயி பொழைக்க ஒரு வழிய காட்டு தம்பி. ஒனக்கு கோடி புண்ணியம்” என்று சொல்லி அழுதார். அதனால் மனமிரங்கிய சித்தப்பா ஊரிலிருந்து புறப்படும்போது என்னையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அவர் சொன்ன சொல்லை முதலாளி ஏற்றுக்கொண்டதும் சமையல்காரருக்கு உதவி செய்பவனாக சேர்ந்தேன்.

“இதோ நம்ம சுப்ரமணிகிட்ட கேட்டா சொல்லுவான். இவன் சித்தப்பன்காரன்தான அவன்? ஏன்டா மணி. ஒன் சித்தப்பனுக்கு இந்த உலகத்துல வேற பொண்ணே கெடைக்கலயா? வேணாம் வேணாம்னு தள்ளி உடறவ பின்னாலயே ஏன்டா சுத்தறான்?” என்று டீயை உறிஞ்சியபடியே கேட்டார் முத்து.

எனக்கு அதைக் கேட்கவே சங்கடமாக இருந்தது. சாந்தி சர்க்கஸில் சேர்ந்த புதிதில் அவர்கள் இருவரும் சேர்ந்து கொஞ்சிக்கொஞ்சிப் பேசியதை நானே என் கண்களால் பலமுறை பார்த்திருக்கிறேன். அவையெல்லாம் இன்று பழங்கதையாகப் போய்விட்ட செய்திகளைக் காதால் கேட்கும்போது எனக்கே வேதனையாக இருக்கும்போது சித்தப்பாவின் வேதனை கொஞ்சமாகவா இருக்கும்.

“சின்ன பையனுக்கு என்னப்பா தெரியும்? பொண்ணுங்க சூதுவாது பத்தி அவனுக்கு எங்க புரியப்போவுது?” என்று உடனே குறுக்கே புகுந்து தடுத்தார் மாணிக்கம்.

“செல்லப்பாவுக்கு டீ குடுத்துட்டியாடா?”

“இன்னும் இல்லண்ணே”

“குடுக்கும்போது சர்க்கஸ் ஆளுங்க எல்லாருமே உன்ன பத்திதான் பேசறாங்க. அந்த பொண்ண உட்டுத் தலமுழுவுங்கன்னு சொல்லு.”

அவர்கள் அதற்குப் பிறகு பாண்டிச்சேரியில் ரிலீசாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்த நினைத்தாலே இனிக்கும் படத்தைப்பற்றி பேசத் தொடங்கிவிட்டனர். எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என்று ராகம் இழுக்காதவர்களே கூடாரத்தில் இல்லை.

ஒவ்வொரு கூடாரமாகச் சென்று டீ கொடுத்துவிட்டு ஆண்கள் வரிசையில் அடுத்த கூடாரத்துக்குள் சென்றேன். அது பார் விளையாடுபவர்களின் கூடாரம். எல்லோருக்கும் டீ வழங்கி முடிக்கும் நேரத்தில் சிங்காரம் உள்ளே வந்தார். குளித்து முடித்து துவட்டிய தலைமுடிக்குள் விரல்களை நுழைத்து உதறினார். தேக்குமரம் போல இருந்தது அவர் உடல். கோதுமை நிறம். என்னைப் பார்த்ததும் ”குட்மார்னிங் மணி. வா வா” என்று சொல்லிவிட்டு சிரித்தார். நானும் சிரித்துக்கொண்டே “குட்மார்னிங் சார்” என்றேன். கம்பத்தில் தொங்கிய கண்ணாடியில் முகம்பார்த்து தலைவாரியபோது கோப்பையில் டீ நிரப்பிக் கொடுத்தேன். ஆவி பறந்துகொண்டிருக்கும்போதே கோப்பையை உதடுகளுக்கிடையில் வைத்து ஒரு மிடறு உறிஞ்சி நாக்கிலேயே நிறுத்தி துளித்துளியாகச் சுவைத்தார். ”சக்கரய இன்னும் கொஞ்சம் கொறச்சிருக்கணும் மணி. மாஸ்டர்கிட்ட சொல்லு” என்றார். நான் கிளம்பும்போது “இரு இரு மணி” என தடுத்து “என்ன டிபன் இன்னைக்கு?” என்று கேட்டார். ”ரவா தோசை” என்றேன் நான். “தொட்டுக்க தேங்கா சட்னிதான?” என்று சிரித்தார். நான் திரையை விலக்கிக்கொண்டு வெளியே நடக்கும்போது “கூடுதலா ரெண்டு பச்சை மிளகா போட்டு அரைக்கச் சொல்லு மணி” என்று அவர் சொன்ன சொற்கள் காதில் விழுந்தன.

கடைசியாக இருந்த சித்தப்பா கூடாரத்துக்குச் சென்றேன். அவர் ஒரு மூலையில் அமர்ந்து யோகாசனப் பயிற்சியில் மூழ்கியிருந்தார். கூடாரம் அமைதியாக இருந்தது. நான் பார்த்தபோது மூச்சையடக்கி வயிற்றைச் சுருக்கி உள்ளே இழுத்து இரப்பையை மட்டும் மணியின் நாக்குபோல சுழலச் செய்துகொண்டிருந்தார். நான் அசையாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகே அவர் அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு கண்களைத் திறந்தார். உடம்பெங்கும் வழிந்த வேர்வையை துண்டெடுத்து துடைத்தார்.

என்னைப் பார்த்த்தும் “என்ன?” என்று கண்களாலேயே கேட்டார். நான் “டீ” என்றேன்.

“இன்னும் சிரசாசனம் பாக்கியிருக்குது. அங்க வச்சிட்டு போ. நான் அப்பறமா எடுத்துக்கறேன்”

கோப்பையில் டீயை ஊற்றி மேசைமீது மூடிவைத்தபடி “உங்க ஏழுமணிக் குருவி இன்னும் வரலையா சித்தப்பா? நான் லேட்டா, அது லேட்டா?” என்று பேச்சு கொடுத்தேன். வழக்கமாக அந்த நேரத்துக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குருவி வந்து போவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். “நான் தெனமும் யோகாசனம் செய்றனா இல்லயானு என் குரு குருவியா வந்து என்ன பாத்துட்டு போறாரு” என்று சித்தப்பா சொல்வது வழக்கம்.

“வரும், வரும், வராம எங்க போவும்? மனுஷங்களுக்குத்தான் பாத்ததயும் பழகனதும் மறக்கற குணம் உண்டு. பறவையினத்துக்கு அந்த குணம் கெடயாது மணி.”

அவர் சொல்லி முடிக்கும் தருணத்தில் கீச்கீச்சென்று சத்தமெழுப்பியபடி விர்ரென்று உள்ளே நுழைந்து சுற்றிச்சுற்றிப் பறந்துவிட்டு நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்து அவரைப் பார்த்தது.

“என்னடா சொல்ற இப்ப?” என்று புன்னகையுடன் கேட்டபடி அந்தக் குருவியின் திசையில் ஒருகணம் பார்த்தார். பிறகு கூடாரத்தின் நடுக்கம்பத்துக்கு அருகில் சென்று அதை ஒட்டியபடி குனிந்து தலையைத் தாழ்த்தி வைத்து கால்களை செங்குத்தாக மேலே உயர்த்தி நிறுத்தினார் சித்தப்பா. நான் வெளியே வந்து பெண்கள் கூடாரங்களுக்குச் சென்றேன்.

பார் விளையாடும் பெண்கள், சைக்கிள் ஓட்டும் பெண்கள், வளையங்களில் ஆடும் பெண்கள் என அனைவருமே தனித்தனிக் குழுவாக கூடாரங்களில் இருந்தார்கள். அனைவருக்கும் டீ கொடுத்துவிட்டு உலகப்பந்தை உருட்டி ஆடும் பெண்களோடு லதா தங்கியிருந்த கூடாரத்துக்குச் சென்றேன்.

“வா வா. உனக்காகத்தான் காத்திட்டிருக்கோம். குளிச்ச உடனே எனக்கு டீ குடிக்கணும் மணி. இல்லைன்னா தலவலியே வந்துடும்” என்றாள் ஒருத்தி. “நான் பாத்துட்டுதான் இருக்கேன். தெனமும் நீ இந்த பக்கமா கடைசியிலதான் எட்டிப் பாக்கற. நாளைக்கு லேடீஸ் பக்கம்தான் மொதல்ல வரணும். சரியா?” என்று அதட்டினாள் மற்றொருத்தி. “வெறும் டீ மட்டும் கொடுத்தா எப்படி மணி? ஏதாச்சிம் ஒரு பிஸ்கட் கொடுக்கலாமில்ல. மொதலாளிகிட்ட சொல்லு” என்றாள் இன்னொருத்தி.

லதா அந்தக் கூட்டத்துக்கு நடுவில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். வட்டமான அவள் முகத்தில் கருகருவென அடர்த்தியாக வளைந்த அவளுடைய புருவங்களும் அழகான கண்களும் யாருக்கும் இல்லாத ஒரு வசீகரத்தை அவளுக்கு வழங்கின. மாந்தளிரின் நிறம். மூக்கின் கீழ்விளிம்புக்கும் உதட்டுக்கும் நடுவில் ஊசியால் தொட்டு பொட்டு வைத்ததுபோல ஒரு மச்சம். முடிச்சிட்ட கூந்தல் பளபளவென முதுகில் தொங்கியது.

கோப்பையை வாங்கி அருந்தி முடித்த லதா திரையை விலக்கி நான் வெளியேறும் சமயத்தில் பின்னாலேயே வந்து “மணி” என்று அழைத்து நிறுத்தினாள். அக்கம்பக்கத்தில் திரும்பிப் பார்த்து நடமாட்டமில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு “ஒங்க சித்தப்பாகிட்ட என் வழியில இனிமே வரவேணாம்ன்னு கொஞ்சம் சொல்லி வை மணி. நானும் பலமுறை ஜாடைமாடையா சொல்லிப் பாத்துட்டன். அவருக்கு புரியவே மாட்டுது. புரியலையா, புரிஞ்சிக்க விருப்பமில்லயான்னு தெரியலை” என்றார். அதைச் சொல்லும்போது அவர் முகம் சுருங்கி இருள் அடர்ந்துவிட்டது.

மற்றவர்கள் சொல்வதையெல்லாம் நான் நேரிடையாக சித்தப்பாவிடம் ஒருபோதும் சொல்லிவிட முடியாது. என் எல்லை எது என்பது எனக்குத் தெரியும். என்னமோ ஒரு ஆற்றாமையால் என்னைப் பார்த்ததும் சொல்கிறார்கள். காதுகொடுத்துக் கேட்டபடி போய்விட வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டேன். சரி என்று தலையசைத்துவிட்டு நகர்ந்தேன்.

சிறிது தொலைவில் மஞ்சள்நிறமும் நீலநிறமும் மாறிமாறி அமைந்த அறுபதடி உயர துணிக்கூடாரம் விரிந்திருந்தது. பாதி மைதானத்தை அது அடைத்துக்கொண்டிருந்தது. பார்வையாளர்கள் வருவதற்கும் வெளியேறுவதற்கும் வெவ்வேறு நுழைவாயில்களை மூங்கில் நட்டு உருவாக்கியிருந்தார்கள். அங்கங்கே நடப்பட்ட சவுக்கைக்கம்பங்களை இணைத்திருக்கும் கயிற்றில் அசையும் வண்ணக்காகிதத் தோரணங்கள். ஒவ்வொரு கம்பத்தையும் ஒட்டி கட்டிவைக்கப்பட்ட குழல்விளக்குகள். அதன் முகப்பில் இரு காவல்காரர்கள் உட்கார்ந்திருந்தனர். ”சீக்கிரம் வாப்பா” என்று அவர்கள் அங்கிருந்தே கையசைத்தார்கள். அவர்களுக்கும் டீ வழங்கிவிட்டு நான் திரும்பினேன். “முத்தம்மாவும் சந்திராவும் உள்ள கூட்டறாங்க. அவுங்களுக்கும் குடு. மறந்துராத” என்றார் ஒரு காவல்காரர்.

நான் கூடாரத்துக்குள் நுழைந்தேன். மேடையில் ஓரமாக இருந்த உலகப்பந்தை உருட்டிவிட்டு பெருக்கிக்கொண்டிருந்தாள் முத்தம்மா. “இதும் மேல நின்னுகிட்டு எப்பிடிடி அவளுங்க சிரிச்சிகினே ஆட்டம் போடறாளுங்க. வழுக்காதா?” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள். “அதுக்குலாம் ஒரு நேக்கு இருக்குது பாத்துக்கோ. அது தெரியலைன்னா கீழ உழுந்து கைய கால ஒடைச்சிக்க வேண்டிதுதான்” என்று பதில் சொன்னாள் சந்திரா. நான் அவர்களிடம் சென்று டீ ஊற்றிக் கொடுத்தேன்.

“ஏன்டா தம்பி, நீ இது மேல ஏறுவியா?” என்று உலகப்பந்தைச் சுட்டிக்காட்டி கேட்டாள் முத்தம்மா.

“அவன் ஏறுவான், ஏறமாட்டான். அதத் தெரிஞ்சி ஒனக்கு என்ன ஆவப்போவுது? வா இந்த பக்கம். அங்க பாரு, எவ்ளோ குப்ப. அத போய் கூட்டு” என்று அவளை அடக்கினாள் சந்திரா.

“நான் வாய தெறந்து பேசனாவே ஒனக்கு எங்கடி நோவுது?” என்றபடி டீ அருந்திமுடித்தாள் முத்தம்மா. அவள் கையை அசைக்கும்போதெல்லாம் அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களின் ஓசை கேட்டது.

“எல்லாருமே பேசிக்கறாங்களே உண்மையாடா தம்பி?” என்று கேட்டாள் அவள்.

“என்ன?” என்றேன்.

“சிங்காரமும் லதாவும் செட்டாயிட்டாங்கன்னு”

“எனக்குத் தெரியாதுக்கா”

“செல்லப்பாவ கழட்டி உட்டுட்டாளாம்”

“அப்பிடியா?”

“என்னடா ஒன்னும் தெரியாதமாதிரி நடிக்கற? நாள்பூரா அவளுங்க கூடாரத்தயே சுத்திசுத்தி வர. ஒனக்கு ஒன்னும் தெரியாதா?”

“எனக்கு உண்மையாவே எதுவும் தெரியாதுக்கா.”

“சரி. இப்ப தெரிஞ்சிக்கோ. நீ போய் செல்லப்பாகிட்ட ஒரு வார்த்த சொல்லணும்”

“என்ன?”

“அந்த லதா போனா என்ன, இந்த முத்தம்மா இருக்கேன்னு போய் சொல்லு. என் கண்ணுக்குள்ள வச்சி காப்பாத்துவேன்னு சொல்லு.”

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்.

அவள் புன்னகைத்துக்கொண்டே “அவன ராஜா மாதிரி உள்ளங்கையில வச்சி தாங்குவேன்னு சொல்லு. ராவும் பகலுமா பாடுபட்டு நான் அவனுக்கு கஞ்சி ஊத்துவேன்னு சொல்லு” என்றாள்.

நான் எந்தப் பதிலும் சொல்லாமல் காலியான கோப்பைகளை எடுத்து வாளிக்குள் வைத்தபோது சந்திராவே முந்திக்கொண்டு “தொடப்பக்கட்டை பட்டுக்குக்குஞ்சத்துக்கு ஆசப்பட்ட கதயா இருக்குதுடி நீ சொல்றது” என்று சொல்லிவிட்டு பெருக்கிக்கொண்டே திரும்பினாள்.

நான் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெளியே வந்து சமையல் கூடத்துக்குச் சென்றேன். மாஸ்டர் என்னைப் பார்த்ததுமே “இப்படி ஆடி அசைஞ்சி வந்தா மிச்சமிருக்கற வேலய எப்படா முடிக்கறது? சீக்கிரம் எல்லாத்தயும் கழுவி கவுத்தி வச்சிட்டு வந்து தேங்கா துருவற வேலய பாரு” என்றார். அவர் கையில் நீண்ட தோசைக்கரண்டி இருந்தது. பெரிய செவ்வகம் போல இருந்த தோசைக்கல்லில் ஒரே நேரத்தில் ஆறு தோசைகள் வெந்துகொண்டிருந்தன. பிச்சாண்டி சின்ன உரலில் பொட்டுக்கடலையை அரைத்துக்கொண்டிருந்தான்.

கெட்டிலில் எஞ்சியிருந்த டீயை ஒரு கோப்பையில் ஊற்றி மெதுவாக அருந்தினேன். பிறகு காலி கோப்பைகளால் நிறைந்துவிட்ட வாளியையும் கெட்டிலையும் தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக கழுவி சுவரோரமாக கவிழ்த்து அடுக்கிவைத்தேன்.

”என்ன மாஸ்டரே, டீ ஏதாச்சிம் மிச்சமிருக்குதா?” என்றபடி சமையல் கட்டுக்கு வெளியே நின்றபடி கேட்டாள் இஸ்திரி பொன்னம்மா. அவள் குரல் கேட்டதுமே மாஸ்டர் முகத்தில் புன்னகை சுடர்விட்டது.

“உள்ள வந்து பேசு பொன்னம்மா. நீ என்ன எப்ப பாத்தாலும் போஸ்ட்மேன் மாதிரி வாசலுக்கு வெளியவே நின்னு பேசற?” என்று அவளுக்குப் பதில் சொன்னபடி என்னைப் பார்த்தார். நான் உடனே “எல்லாமே தீந்துடிச்சி மாஸ்டர். இப்பதான் கழுவி முடிச்சி காயவைச்சிட்டு வரேன்” என்று உதட்டைப் பிதுக்கினேன்.

“ஒரு நிமிஷம் இரு பொன்னம்மா” என்றபடி ஏற்கனவே காய்ச்சி ஓரமாக மூடி வைத்திருந்த பாத்திரத்திலிருந்து ஒரு தம்ளரில் பால் எடுத்துவந்து பக்கத்தில் இருந்த ஸ்டவ்வை ஏற்றி டீ போடத் தொடங்கினார். நான் முறத்தில் அரிவாள்மனையை வைத்து தேங்காயைத் துருவி எடுத்துச் சென்று பிச்சாண்டியிடம் கொடுத்தேன்.

இஸ்திரி போடப்பட்ட ஆடைகளைக் கொண்ட மூட்டையை இடுப்பிலிருந்து இறக்கி கீழே வைத்தாள். எல்லாமே ஆட்டக்காரர்களின் ஆடைகள். மேடையில் அணிவதற்காகவே தைக்கப்பட்டவை. கால்களோடு ஒட்டிக்கொள்ளும் இறுக்கமான பேண்ட்டுகள். அதற்குமேல் அணியக்கூடிய கால்சட்டைகள். சட்டைகள்.

“நீ எதுக்கு பொன்னம்மா இம்மா நீளத்துக்கு பொடவய இடுப்பச் சுத்தி கட்டிகினு அவஸ்தைப்படற? இந்த செட்டுல ஏதாவது ஒரு ட்ரஸ்ஸ எடுத்து போட்டுக்கினா சிக்குனு இருக்குமில்ல?”

மாஸ்டர் கண்ணடித்தபடி கொதிக்கும் டீயை ஒரு கோப்பையில் ஊற்றி அவளிடம் கொடுத்தார். அவள் குடித்து முடிக்கும் வரைக்கும் மாஸ்டர் சரசப் பேச்சுகளை நிறுத்தவே இல்லை.

“பத்து நாளா ஒங்க கையால ருசியா டீ, ருசிய இட்லி தோசை, ருசிருசியா சோறு கொழம்புனு எப்படியோ பொழப்பு ஓடிட்டுது. நாளையோட எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துடும் இல்ல? அதுக்கப்புறம் என்னாவும்னு நெனச்சாதான் ஏக்கமா இருக்குது.”

“அவ்ளோ ஏக்கமா இருந்தா எங்க கூடவே வந்துடு பொன்னம்மா. கூட்டத்தோட கூட்டமா இருந்துக்கலாம்”

“புருஷன் புள்ளைங்கன்னு ஒரு குடும்பம் இருக்கும்போது அதெல்லாம் நடக்கற கதயா மாஸ்டர்? அடுத்து எந்த ஊரு?”

“திண்டிவனமோ வந்தவாசியோ. ஏதோ ஒன்னு., மொதலாளி என்ன முடிவு பண்ணியிருக்காரோ, அது. சரியா தெரியல.”

அவள் கோப்பையை வைத்துவிட்டு மூட்டையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள். அவள் மூன்று குழந்தைகளுக்கு தாய் என்று சொன்னால் யாருக்குமே நம்பிக்கை வராது. நல்ல இரும்புச்சிலைபோல இருந்தாள்.

சட்னியை தாளித்தபடியே மாஸ்டர் “மணி, போய் மணி அடிச்சிட்டு வா. டேபிள் நாற்காலிய இழுத்து சரியா போட்டு வை” என்றார். நான் மணியடித்து முடித்த ஐந்தாவது நிமிடம் ஆட்டக்காரர்கள் அனைவரும் கூடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

நான் இலைக்கட்டை எடுத்துக்கொண்டு கூடத்துக்குச் சென்றேன். அகலமான தட்டில் அடுக்கிவைக்கப்பட்ட தோசைகளோடு வந்தார் மாஸ்டர். பிச்சாண்டி ஒவ்வொரு இலையிலும் சீராக சட்னி ஊற்றிக்கொண்டே வந்தான். தோசையின் மணமும் சட்னியின் மணமும் கூடத்தில் நிறைந்தது. அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டு வெளியேறிய பிறகு நாங்கள் சாப்பிட உட்காரும்போது பத்துமணி ஆகிவிட்டிருந்தது.

சிலர் கூடாரத்துக்கு திரும்பிச் சென்று சீட்டாட உட்கார்ந்துவிட்டனர். சிலர் கேரம்போர்ட் ஆடத் தொடங்கினர். சிங்காரமும் அவருடைய நண்பர்களும் ஒரு குழுவாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக புறப்பட்டுச் சென்றனர். “கடற்கரைக்கு போய்ட்டு வரன்” என்று சொன்னார் சித்தப்பா. ”வேணாம் வேணாம். நீ தனியா போவாத. நாங்களும் வரோம்” என்று மாணிக்கமும் முத்துவும் அவரோடு சென்றார்கள். மதிய உணவு தயாரிக்கும் வேலைகளில் நாங்கள் மூழ்கிவிட்டோம்.

சென்றவர்கள் அனைவரும் திரும்பி வரும்போது மணி ஒன்றரை ஆகிவிட்டது. உடனே சாப்பாடு பரிமாறும் வேலை. வெண்டைக்காய் பொரியல், புடலங்காய் கூட்டு, மணத்தக்காளி போட்ட வற்றல்குழம்பு, சாம்பார், ரசம், தயிர்,. வடை, அப்பளம், பாயசம் என ஏராளமான விஷயங்கள். ஒரு நொடி கூட நிற்க நேரமில்லை. பரபரப்பாகவே இருந்தோம்.

எல்லோரும் சாப்பிட்டு புறப்பட்டுச் சென்ற பின்னர் பிறகு நாங்களும் சாப்பிட்டு எழுந்தோம். நான் அரிசிமூட்டை வைத்திருந்த கூடாரத்திலேயே தார்ப்பாய் மீது படுத்து தூங்கிவிட்டேன். எழுந்தபோது மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. வேகமாக எழுந்து முகம் கழுவிக்கொண்டு கேன் எடுத்துச் சென்று பால் வாங்கிவந்தேன்.

மாஸ்டர் டீ போட்டு முடிப்பதற்குள் நான் சென்று குளித்துவிட்டு ஆடைமாற்றிக்கொண்டு திரும்பினேன். நெருப்பைக் கொட்டியதுபோல இருந்த வெப்பத்துக்கு அந்தக் குளியல் இதமாக இருந்தது. கெட்டிலையும் கோப்பைகள் நிறைந்த வாளிகளையும் எடுத்துக்கொண்டு கூடாரங்களுக்குச் சென்றேன். காலையில் லதாவின் கூடாரத்தில் இருந்த பெண் சொன்னது நினைவுக்கு வந்தது. லேடீஸ் கூடார வரிசையிலிருந்து தொடங்கி எல்லாக் கூடாரங்களுக்கும் சென்று டீ வழங்கினேன்,

ஆறரை மணி காட்சிக்கு ஆறு மணிக்கெல்லாம் டிக்கட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் ஒரு நாளில் சர்க்கஸ் முடிவடையப் போவதால் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. ’விநாயகனே வினைதீர்ப்பவனே’ என்று பாட்டு ஒலிக்கத் தொடங்கியது. அது முடிந்ததும் ’ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே’ என்ற பாட்டு தொடங்கியது. அது முடிந்ததும் ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ ஒலித்தது. நான் அதைக் கேட்டபடி காய்களை நறுக்கத் தொடங்கினேன். அரிசி கழுவிக்கொண்டிருந்த பிச்சாண்டி “புது ரெக்கார்ட்லாம் வாங்கிட்டாரு போல, நல்லா புதுசுபுதுசா போடறாரு” என்று மகிழ்ச்சியில் பல்லைக் காட்டிச் சிரித்தான். ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ என்ற பாட்டு ஒலித்தபோது அவனால் தரையில் நிற்கவே முடியவில்லை.

முதல் காட்சி நடைபெறும் சமயத்தில் சமையல் வேலையில் நாங்கள் மூழ்கியிருப்போம். அதனால் ஒவ்வொரு நாளும் அச்சமயத்தில் மேடைக்குப் பக்கத்தில் சென்று நிற்கக்கூட எங்களுக்கு நேரமிருக்காது. துடிப்பும் வேகமும் நிறைந்த இசைக்கோவைகள் ஒலிப்பதை மட்டும் கேட்டபடி வேலையில் ஆழ்ந்திருப்போம்.

இரண்டாவது காட்சி எட்டரை மணிக்கு. அப்போதும் தொடக்கத்தில் இருந்து எங்களால் பார்க்கமுடியாது. ஓய்வு கிடைக்கும்போது ஓடிச் சென்று ஒருசில நிமிடங்கள் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்புவோம். மேடையின் இரு பக்கங்களிலும் திரை மறைவில் இருள் குறைவான வாயில்கள் இருந்தன. ஆட்டக்காரர்கள் மேடைக்குச் செல்லவும் வெளியேறவும் உருவாக்கப்பட்ட வழிகள் அவை. அந்த இடங்களில்தான் மறைவாக நின்று பார்ப்போம்.

நான் நின்றிருந்தபோது என்னைக் கடந்து ஒருத்தி வாசலுக்கு அருகில் சென்றாள். அவள் பூசியிருந்த பவுடரின் வாசனையும் செண்ட் வாசனையும் பத்தடி தொலைவுவரைக்கும் பரவியிருந்தது. அதே நேரத்தில் மற்றொருத்தியும் எதிர்ப்புற வாயிலுக்கருகில் நின்றிருந்தாள். இருவரும் இசைக்காகக் காத்திருந்தனர். தாளம் ஒலிக்கத் தொடங்கியதுமே இருவரும் சீரான நடையில் உடலை வளைத்தும் குலுக்கியும் நடந்து சென்று மேடையில் நின்று கையை உயர்த்திச் சிரித்தார்கள். இருவரும் ஒரே நேரத்தில் கைகளை உயர்த்தினார்கள். இறக்கைகளை அசைப்பதுபோல இருபுறங்களிலும் அசைத்தார்கள். ஒரே புள்ளியில் நின்றபடி இடுப்புக்கு மேற்பட்ட பகுதியை மட்டும் சுழற்றினார்கள். சட்டென கைகளை கீழே ஊன்றி மூச்சடக்கி கால்களை மேலே உயர்த்தினார்கள். அப்போது தலைகீழாகத் திருப்பிவைக்கப்பட்ட பொம்மைபோல அவர்கள் தோற்றம் இருந்தது. கைகளை அங்குலம் அங்குலமாக நகர்த்தி இருவரும் நெருங்கிவந்தார்கள். பிறகு கால்களைமட்டும் சுழற்றினார்கள். அப்போது மூன்றாவதாக லதா மேடைக்குள் வந்தாள். பறவைபோல ஒரே கணத்தில் எம்பி அவர்கள் கால்மீது நின்றாள். கீழே கைகளை ஊன்றியிருப்பவர்கள் மெல்லமெல்ல ஒரு வட்டமடித்துத் திரும்ப, அவர்களுடைய கால்மீது நின்ற லதாவும் அவர்களுக்கு இணையாக கையை உயர்த்தி அசைத்தபடி வட்டமடித்தாள். அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.

ஒரு நீண்ட கயிறு மேடைக்கு நடுவில் தொங்கியது. இசை ஒலிக்கத் தொடங்கியதும் சிங்காரம் ஓடி வந்து அந்தக் கயிற்றைப் பற்றினான். கயிறு மேலே செல்ல ஒரு குறிப்பிட்ட உயரத்தில் தொங்கினான். கயிறு முன்னும் பின்னும் அசைய ஆரம்பித்ததும் அவன் அதைப் பற்றியபடி புன்னகையுடன் ஊஞ்சலாடினான். இன்னும் சற்றே மேலேறி கயிற்றின் கீழ்முனையை வலது காலின் விரல்களுக்கிடையில் பற்றிக்கொண்டு, அடுத்த காலை அவன் அந்தரத்தில் சுழற்றியபடி சுற்றிச்சுற்றி வந்தான். இசை உச்சத்துக்குச் சென்றபோது லதா உள்ளே வந்தாள். கயிற்றில் தொங்கியபடியே அவள் கையைப் பற்றி தன்னை நோக்கி ஒரு தூண்டிலைப்போல இழுத்தான் அவன். அவள் சட்டென எம்பி அவனுடைய பாதத்தின் மீது தன் ஒரு காலைப் பதித்தபடி அவனுக்கு இணையாக நின்றுகொண்டாள். அடுத்த காலை காற்றில் வீசிவீசி சுழன்றாள். அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது. இசை இன்னும் உச்சத்துக்குச் சென்றது. லதா உடனே தன் முதுகில் செருகியிருந்த குடையை எடுத்து விரித்து அதைத் தனக்கு மேலே பிடித்தாள். கயிறு சுழன்று சுழன்று வந்தபோது, கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

அடுத்த நிகழ்ச்சியில் இரண்டு கயிறுகள் தனித்தனியாக இறங்கின. இசை ஒலிக்கத் தொடங்கியதும் சிங்காரமும் லதாவும் மேடைக்கு ஓடி வந்தார்கள். அரங்கத்தினரை நோக்கி குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு அரங்கத்தின் வட்டப்பாதையிலேயே ஓடி ஆளுக்கொரு கயிற்றை எம்பிப் பற்றி ஊஞ்சலாடினார்கள். வலது கையும் வலது காலும் மட்டும் கயிற்றைப் பற்றியிருக்க இடது கையையும் காலையும் அந்தரத்தில் விரித்தபடி ஒரு குடையைப் போல சுழன்றார்கள். ஒரு கட்டத்தில் இருவருடைய கைகளும் கால்களும் பற்றிக்கொள்ள ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைந்தது. இசை உச்சத்துக்குச் சென்று அடங்கியது.

ஆளுயர வட்டவடிவ இரும்புச்சக்கரத்தோடு மேடையில் தோன்றி வணங்கினான் சிங்காரம். வெள்ளை வண்ணத்தில் காணப்பட்ட அச்சக்கரத்தை வட்டப்பாதையில் இசைக்குத் தகுந்தபடி உருட்டினான். சட்டென அரங்கத்தின் மையத்துக்கு வந்து அச்சக்கரத்தில் இரு கால்களையும் வைத்து ஊன்றினான். அதே கணத்தில் மேல் பகுதியில் கைகளால் பற்றிக்கொண்டான். சமநிலையில் அச்சக்கரம் நின்ற விசித்திரத்தைப் பார்த்து ஓவென சத்தமெழுப்பி கைத்தட்டினார்கள் பார்வையாளர்கள். பிறகு அச்சக்கரம் சமநிலையை இழக்காமலேயே மேடையில் உருளத் தொடங்கியது. கீழேயிருந்த தலை மேலே சென்றது. மேலேயிருந்த கால் கீழே வந்தது. பிறகு கால் மேலே சென்றது. தலை கீழே வந்தது. ஒரு ஊசி அளவுக்குக்கூட நகராத சக்கரம் சமநிலையில் சுழன்றபடியே இருந்தது. அரங்கத்தின் கைத்தட்டல் வெகுதொலைவு வரைக்கும் கேட்டது.

கைகளை உயர்த்தி இடுப்பை ஒயிலாக அசைத்தபடி மேடைக்குள் வந்த லதா சட்டென சுழலும் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டாள். அவன் தலை ஊன்றியிருக்கும் இடத்தில் லதா கால்களை ஊன்றியிருந்தாள். அவன் கால்களை வைத்திருக்கும் இடத்தில் லதா தன் தலையைப் பதித்திருந்தாள். அரங்கத்தில் இருப்பவர்களுக்கு இருவருடைய முகங்களும் மாறிமாறித் தோன்ற இசையும் கைத்தட்டலும் உச்சத்தை நோக்கிப் பாய்ந்தன.

ஒவ்வொரு இசைத்தட்டு மாறும்போதும் ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு நிகழ்ச்சியில் இரண்டடி நீளமுள்ள உருண்ட தடியை தரையில் நிற்க வைத்துவிட்டு அதை இரு கைகளாலும் உறுதியுடன் பற்றிக்கொண்டு சிங்காரம் எம்பி நிற்க, அவன் உடலில் தொற்றி ஏறி, அவன் கால்களில் கைகளை ஊன்றி தலைகீழாக லதா நின்றாள். இன்னொரு நிகழ்ச்சியில் இந்தப்பக்கம் ஐந்துபேர் அந்தப்பக்கம் ஐந்து பேர் வரிசையில் நின்றிருக்க, லதா சட்டென எம்பி அவர்கள் தோள்மீது ஏறி நின்று வலம் வந்தாள்.. அடுத்த நிகழ்ச்சியில் அந்தப் பத்து பேரும் ஒரு மூங்கிலை உயர்த்திப் பிடிக்க, அதன் மீது ஏறி நின்று நடைபயின்றாள் அவள்.

சைக்கிளில் வட்டமடித்தல், ஒற்றைச்சக்கரம் ஓட்டுதல், பார் விளையாட்டு, நெருப்பு வளையங்களில் தாவுதல், என எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இறுதி நிகழ்ச்சியாக செல்லப்பா தோன்றி ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காட்டினார். இசை சீராக ஒலிக்கத் தொடங்கி சட்டென மேலெழுந்தது. அவர் உடலையும் கைகால்களையும் தலையையும் நினைத்த திசையில் திருப்பியதைக் கண்டு அரங்கம் எழுப்பிய மகிழ்ச்சிக் கூச்சல் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தது. அவருடைய ஒவ்வொரு அசைவும் நடனத்தின் அசைவையும் வேகத்தையும் கொண்டிருந்தது.

பூமிப்பந்தின் மீது ஏறி நின்றபடி பந்தை காலால் உருட்டியவாறே மேடையின் வட்டப்பாதையில் வலம்வருவது செல்லப்பாவுடைய சிறப்பு நிகழ்ச்சி. ஒருகணம் கூட அவர் கவனம் சிதைந்ததில்லை. முதல் வட்டத்தில் அவர் கைகளை இருபுறமும் விரித்து புன்னகைத்தபடியே வந்தார். அடுத்த வட்டத்தில் அவரைத் தொடர்ந்து இரு பெண்கள் வந்தனர். ஒரு பெண் செல்லப்பாவை நோக்கி ஒரு சின்னப் பந்தை எறிந்தாள். உலக உண்டைப்பந்துமீது நின்றிருந்த செல்லப்பா அதை லாவகமாகப் பிடித்து அதே வேகத்தில் மறு கைக்கு மாற்றி அடுத்தவரை நோக்கி எறிந்தார். மூன்றாவது முறையாக வட்டப்பாதையில் வந்தபோது இரு புறங்களிலிருந்தும் பெண்கள் அவரை நோக்கி ஒரே சமயத்தில் சின்னப் பந்துகளை எறிந்தனர். அவர் அவற்றைச் சிக்கெனப் பிடித்து மறுகைக்கு மாற்றி பெண்களை நோக்கி எறிந்தார். ஒரு பந்துகூட பிசகவில்லை.

செல்லப்பாவின் தீப்பந்த நிகழ்ச்சி தொடங்கும்போதே கைத்தட்டல் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அது மக்களிடையே பரவி செல்வாக்கு பெற்றிருந்தது. செல்லப்பா அவையைப் பார்த்து வணங்கியபடியே மேடைக்கு நடுவில் வந்து நின்றார். பிறகு முத்து, மாணிக்கம், ராஜாங்கம், செந்தில் நால்வரும் வந்து பக்கத்துக்கு இருவராக நின்றனர். ஒரு வரிசையில் ஐந்து பேர். இசை ஒலித்தபடி இருக்க, மேலும் நான்கு பேர் ஓடோடி வந்து ஐந்து பேர்களின் தோள்களில் ஏறி நின்றார்கள். அதற்குப் பிறகு மூன்று பேர் ஓடி வந்து கீழே இருந்தவர்களின் இடையையும் தோளையும் படிக்கட்டெனப் பற்றி ஏறி மேலே சென்றனர். பிறகு இருவர். இறுதியாக லதா.

லதா அனைவருக்கும் மேலே ஏறி நின்று கையசைத்தாள். அப்போது அவளை நோக்கி ஒரு தீப்பந்தம் எறியப்பட்டது. அவள் அதை வெற்றிகரமாகப் பிடித்து கையை உயர்த்தி அசைத்தாள். தீப்பந்தம் உச்சியை நோக்கி தழலாடியது. அடுத்தடுத்த பந்தங்களை பின்னலின் விளிம்பில் நிற்பவர்கள் பற்றி கையை உயர்த்தினார்கள். ஒரு கோணத்தில் அந்த மானுடப்பின்னலே ஒரு பெரிய தீப்பந்தம் போல சுடர்விட்டது. இசை மேலும் மேலும் உயர்ந்து உச்சத்தை நோக்கிச் செல்ல, கீழே நின்றிருக்கும் ஐந்து பேருடைய காலடிகளும் அங்குலம் அங்குலமாக நகர்ந்து வட்டமடித்தது. தீப்பந்தமே சுழல்வது போன்ற கண்மயக்கை அது அளித்தது. பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்றுவிட்டனர். கைத்தட்டல் ஓயவே இல்லை. தீப்பந்தம் ஒரு முழு வட்டமடித்ததும் முதலில் லதா இறங்கினாள். பிறகு ஒவ்வொரு அடுக்கிலும் நின்றிருந்தவர்கள் இறங்கினார்கள். இறுதியாக பதினைந்து பேரும் வரிசையில் நின்று அவையை வணங்கிவிட்டுக் கலைந்தார்கள்.

காட்சியின் கடைசி நிகழ்ச்சி. செல்லப்பா மட்டுமே அரங்கத்தின் மையத்தில் நின்றிருந்தார். சாந்தி சர்க்கஸில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி அது. இந்த ஒரு நிகழ்ச்சி வழியாக மட்டுமே ஒவ்வொரு ஊரிலும் செல்லப்பாவுக்குக் கிடைத்த பரிசுகளுக்கும் பாராட்டுகளுக்கும் அளவே இல்லை.

செல்லப்பா அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து வணங்கியபோது ஒலிபெருக்கியில் குரல் எழுந்தது. ”மகாஜனங்களே, எங்களை வளர்த்து வாழவைக்கிற தெய்வங்களே. இதோ இங்கே நிற்பவர் எங்கள் உடற்பயிற்சிக் கலைஞர் செல்லப்பா. சாந்தி சர்க்கஸின் சொத்து. எங்கள் தங்கம். அஞ்சாத சிங்கம். இரும்புக்கோட்டை. அவர் உடல் தெய்வம் வாழும் கோவில். செஞ்சி தேசிங்கு ராஜாவின் வெற்றிக்கோட்டை. அவர் ஆற்றல் இந்த ஊருக்கே தெரிந்த விஷயம்.” என்று தொடங்கினார்.

“புதுச்சேரி பெருமக்களே, இதோ அவர் உங்கள் முன்னால் நிற்கிறார். அவர் நிற்கும் இடத்திலிருந்து அவருடைய உடலை கையால் ஓங்கிக் குத்தி ஒரே ஒரு அங்குலமாவது அசைத்து நகர்த்திவிடக் கூடிய ஆற்றல் தனக்கு உண்டு என்று நம்புகிறவர்கள் இங்கே மேடைக்கு தாராளமாக வந்துவிடலாம். போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு தக்க பரிசு உண்டு”

பார்வையாளர்கள் அனைவரும் ஒரே குரலில் “இல்லை” ”இல்லை” என்று ஓசையெழுப்பி ஆரவாரம் செய்தனர். ஒருவர் “செல்லப்பா வாழ்க” என்று முழக்கமெழுப்பினார். அவரைத் தொடர்ந்து பலரும் அந்த முழக்கத்துடன் சேர்ந்துகொண்டனர்.

“அன்பான பொதுஜனங்களே. கடந்த பத்து நாட்களாக இந்த ஒதியஞ்சாலை திடலில் சாந்தி சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நாளையே இறுதி நாள். முதல் நிகழ்ச்சியிலிருந்தே இந்தப் போட்டி நடந்து வருகிறது. இது வரை யாரும் செல்லப்பாவை வென்றதில்லை. அவரை வெல்லமுடியும் என நினைப்பவர்கள் மேடைக்கு வரலாம். தயக்கம் வேண்டாம். வருக வருக”

அரங்கத்தின் ஒரு மூலையிலிருந்து ஒருவர் கையை உயர்த்தியபடி எழுந்து நின்றார். உடனே அறிவிப்பாளரின் பார்வை அவர் மீது விழுந்துவிட்டது. ”இதோ எழுந்துவிட்டார் ஒரு வீரர். வருக வீரரே வருக. இந்த மேடை உங்களுக்காகக் காத்திருக்கிறது. தயவு செய்து, நண்பர் மேடைக்கு வருவதற்கு வழி விடுங்கள்”

அக்கணத்திலிருந்தே கைத்தட்டல் தொடங்கிவிட்டது. ஆரவாரத்துக்கு நடுவில் அவர் மேடையில் ஏறி செல்லப்பாவுக்கு அருகில் நின்றார்.

“நண்பரே, உங்கள் பெயர்”

“வைத்தியலிங்கம்”

“நல்லது திரு. வைத்தியலிங்கம் அவர்களே. இந்தப் போட்டியில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கியமான விதிகள் உண்டு. முதல் விதி, நீங்கள் உங்களுடைய ஒரு கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டாவது விதி, குத்து மட்டுமே இந்தப் போட்டியில் அனுமதிக்கப்படும். மூன்றாவது விதி, அவருடைய மார்பில் மட்டுமே நீங்கள் குத்த வேண்டும். நான்காவது விதி, உங்களுக்கு ஐந்து வாய்ப்புகள் உண்டு.”

செல்லப்பாவும் வைத்தியலிங்கமும் சிரித்து கைகுலுக்கிக் கொண்டார்கள். பிறகு குஸ்தி முறையில் செய்வதுபோல ஒருவர் கையை ஒருவர் தொட்டு குனிந்து வணங்கிவிட்டு விலகினார்கள்.

”போட்டி நேரம் முழுதும் இசை ஒலித்தபடி இருக்கும். இசை நிற்கும் சமயம் உங்களுக்கான நேரம் தொடங்குகிறது. அப்போது நீங்கள் அவரைக் குத்தவேண்டும்”

இசை ஒலிக்கத் தொடங்கியது. செல்லப்பா கால்களை மேடையில் அழுத்தமாக ஊன்றிக்கொண்டு நின்றார். வைத்தியலிங்கம் நம்பிக்கை தெரியும் முகத்துடன் கைகளைத் தேய்த்தபடி இருந்தார். பார்வையாளர்களிடையில் திடீரென அமைதி சூழ்ந்தது. நான் செல்லப்பாவின் மீது என் கவனத்தைக் குவித்திருந்தேன்.

சட்டென இசை நின்றது. வைத்தியலிங்கம் முன்னேறி செல்லப்பாவின் மார்பில் குத்தினார். அது அவருடைய உடலில் சின்ன அசைவைக்கூட ஏற்படுத்தவில்லை. அதைப் பார்த்ததுமே மக்களுடைய ஆரவாரம் பெருகத் தொடங்கியது. இரண்டு, மூன்று, நான்கு என எந்த வாய்ப்பிலும் செல்லப்பாவை அசைக்கமுடியவில்லை. ஒரு பாறைபோல அவர் உறுதியாக நின்றிருந்தார்.

வைத்தியலிங்கம் சற்றே பதற்றம் கொள்வதுபோலத் தோன்றியது. அறிவிப்பாளர் மீண்டும் இசையைச் சுழலச் செய்தார். நான் செல்லப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் அவர்மீது வருத்தம் கொண்டேன். சர்க்கஸ் நிகழ்ச்சியிலேயே இல்லாத ஒன்று இது. இதை வடலூரில் சர்க்கஸ் போட்ட சமயத்தில் அவராகவே ஒரு பரபரப்புக்காக சேர்த்துக்கொண்டார். விளம்பரம் கிடைக்கிறது என்பதால் முதலாளியும் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

இசை நின்றதும், வைத்தியலிங்கம் முன்னால் அடியெடுத்து வந்து செல்லப்பாவை குத்தி வீழ்த்த முயற்சி செய்தார். அப்போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

செல்லப்பா தன்னைத் தளர்த்திக்கொண்டு அவையினரைப் பார்த்து கைகளை அசைத்து வணங்கிவிட்டு, வைத்தியலிங்கத்தின் கைகளைப் பற்றி குனிந்து வணங்கிப் பிரிந்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் வெளியேறத் தொடங்கினர். ஆட்டக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்தை நோக்கித் திரும்பி நடந்தனர். நான் வேகமாக சமையல் கூடத்துக்குச் சென்றேன். மாஸ்டர் வெறும் தரையில் துண்டை விரித்து காற்றாடப் படுத்திருந்தார். என்னைப் பார்த்ததுமே “என்னடா செல்லப்பாவுக்கு ஜெயம்தான?” என்று கேட்டார். நான் ஆமாம் என்று உற்சாகத்தோடு தலையசைத்தேன். ”அவன் வில்லாதிவில்லன்டா. அவன ஜெயிக்க உலகத்துல ஆளே இல்ல” என்றார் அவர்.

“சரி போய் மணி அடிச்சிட்டு வா. மேக்கப்ப கலச்சிட்டு இங்கதான் சாப்புட வருவாங்க. மொதல்ல எலயை எடுத்து கழுவு. ஓடு”

நான் வேகமாகச் சென்று இலைக்கட்டுகளை எடுத்துக்கொண்டு தண்ணீர்க்குழாய்க்கு அருகில் சென்றேன். பிச்சாண்டி மேசைகளைத் துடைக்க துணியை எடுத்துக்கொண்டு போனான். நான் இலையைப் பிரித்து மேசையில் வைத்ததும் அவன் தண்ணீர்த்தம்ளரை வைத்துக்கொண்டு சென்றான். மாஸ்டர் சோற்றுக்குண்டானுடன் வரும்போது கலைஞர்கள் ஒவ்வொருவராக உட்கார்ந்து விட்டார்கள். இரவு உணவுக்காக புதிதாக இரண்டு பொரியல்களை வைத்திருந்தார் மாஸ்டர். ஒன்று பீன்ஸ் பொரியல். இன்னொன்று பீட்ரூட் பொரியல். எல்லோரும் விரும்பி வாங்கிச் சாப்பிட்டார்கள். பருப்புரசத்தை கையைக் குழிவாக்கி வாங்கிக் குடித்தார்கள்.

சாப்பிட்டு முடித்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து பல இடங்களில் திட்டுத்திட்டாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் இலைகளையெல்லாம் ஒரு கூடையில் எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே சென்று குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்தேன். அதற்குள் பிச்சாண்டி மேசைகளையும் அறையையும் சுத்தம் செய்து முடித்திருந்தான்.

மாஸ்டர் ஒரு தட்டில் கொஞ்சமாக சோற்றை அள்ளிவைத்துக்கொண்டு ரசம் ஊற்றிக்கொண்டு சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார். நானும் பிச்சாண்டியும் தனித்தனி தட்டுகளில் போட்டுக்கொண்டு சாப்பிட்டோம். பிறகு தட்டுகளைக் கழுவி கவிழ்த்துவைத்துவிட்டு சமையலறைக்கு வெளியே மடிப்புக்கட்டிலை விரித்து உட்கார்ந்தோம். மாஸ்டர் வெற்றிலையை மடித்து சுண்ணாம்பு தடவினார்.

அப்போது வெளியே என்னமோ சத்தம் கேட்டது. அதைக் கேட்டு நான் சட்டென்று எழுந்து கூடாரப்பகுதியை நோக்கி ஓடிவந்தேன். பலரும் பல திசைகளிலிருந்து அதே கணத்தில் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்கள்.

“நல்ல மாட்டுக்கு ஒரு அடி. சூடு சொரண இருக்கற மனுஷனுக்கு ஒரு வார்த்த. ஒரு தரம் சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா நீ? ஆம்பளயா நீ?”

லதாவும் செல்லப்பாவும் நின்றிருப்பதைப் பார்த்து அனைவரும் திகைத்து நின்றுவிட்டார்கள். தொட்டாலே விழுந்துவிடுவது போல திகைத்து நிலைகுலைந்து காணப்பட்டார் செல்லப்பா. கண்களில் கசப்பும் சலிப்பும் அடர்ந்திருக்க லதா மூச்சு வாங்கியபடி நின்றிருந்தாள்.

மாஸ்டர் இருவரையும் ஒருகணம் மாறிமாறிப் பார்த்தார். அவர்களிடம் எந்த விளக்கத்தையும் கேட்க அவர் விரும்பவில்லை. “சரி சரி போங்கப்பா” என்று மாஸ்டர் அனைவரையும் அங்கிருந்து கலைத்து அனுப்ப முயற்சி செய்தார்.

“என்ன பிரச்சினை இங்க?”

“அதெல்லாம் ஒரு பிரச்சினயும் இல்லை. போங்கப்பா, போய் நேரத்தோடு படுங்க” என்று மீண்டும் மீண்டும் சொல்லி அனுப்பினார்.

கூட்டம் அவருடைய சொற்களுக்குக் கட்டுப்பட்டு விலகிச் சென்றது. யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த நிலையில் செல்லப்பா தன் கூடாரத்தை நோக்கிச் சென்றார்.

திரும்பி வந்து கட்டிலில் படுத்தபோது மனபாரமாக இருந்தது. நட்சத்திரங்களையும் நிலாவையும் பார்த்தபடி எதைஎதையோ குழப்பத்துடன் நினைத்திருந்தேன். எப்போது தூங்கினேன் என்றே தெரியாதபடி தூக்கத்தில் அமிழ்ந்துவிட்டேன். விழிப்பு வந்தபோது, வெளிச்சம் பரவியிருந்தது. எழுந்து முகம் கழுவிவிட்டு பால் வாங்கிக்கொண்டு வந்து மாஸ்டரிடம் கொடுத்தேன். காலையிலேயே குளித்து உடைமாற்றிக்கொண்டு நெற்றி நிறைய பூசையோடு காணப்பட்டார் மாஸ்டர்.

நான் டீ நிரம்பிய கெட்டிலை எடுத்துச் சென்று எல்லோருக்கும் டீ விநியோகித்துவிட்டு வந்தேன். வழக்கமாக நிகழ்ச்சி நடைபெறும் கடைசி நாளில் எல்லோருமே ஏதோ பரபரப்பில் இருப்பார்கள். கலகலப்பாகப் பேசிச் சிரிப்பார்கள். புதிய ஊரில் அடுத்த காட்சி தொடங்கும் வரைக்கும் எல்லோருக்கும் விடுப்பு கிட்டும் என்பது ஒரு முக்கிய காரணம். ஊருக்குச் சென்று மனைவி பிள்ளைகளோடு பொழுதுபோக்கலாமே என்று பல திட்டங்களைப் பேசிப்பேசி வளர்த்துக்கொள்வார்கள். ஆனால் அன்று ஒருவருடைய முகத்தில் கூட உற்சாகம் தென்படவில்லை.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பெஞ்சில் சுருண்டு படுத்தேன். காரணமே இல்லாமல் மனசுக்குள் அழுகை பொங்கியவண்ணம் இருந்தது. நான் அந்த இடத்திலேயே இருந்தால் ஒரே சிந்தனையில் மூழ்கி தடுமாறிக்கொண்டுதான் இருப்பேன் என நினைத்து சிறிது நேரம் காலார நடந்துவிட்டு வருவதாக மாஸ்டரிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பிப் போனேன். கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். சீற்றத்தோடு பொங்கி வந்து கரையை அறையும் அலையைப் பார்க்கும்போதெல்லாம் நேற்று இரவு பார்த்த லதாவின் தோற்றம்தான் நினைவுக்கு வந்தது. கடற்கரையிலிருந்து சர்க்கஸ் கூடாரத்துக்கு கால்நடையாகவே திரும்பி வந்தேன்.

இரவு முதல் நிகழ்ச்சி அதிகபட்சக் கூட்டத்தோடு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிவிட்டது. கலைஞர்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். காட்சிகளைக் காண எழும் ஒரு துடிப்பும் வேகமும் அன்று எனக்குள் எழவே இல்லை. செல்லப்பாவின் நிகழ்ச்சியைக் கூட பார்க்க விருப்பமில்லாமல் சமையல் கட்டிலேயே வளையவளைய வந்துகொண்டிருந்தேன். கண்கள் அடிக்கடி தளும்பிக்கொண்டே இருந்தன.

”ஏன்டா இப்பிடி உம்னு இருக்கற? செல்லப்பா ஜிம்னாஸ்டிக்ஸ்னா விடமாட்டியே நீ. இன்னைக்கு என்னாச்சி? இங்கயே உக்காந்திருக்க?” என்று கேட்டார் மாஸ்டர். “ஒன்னுமில்ல மாஸ்டர்” என்று எதையோ சொல்லி சமாளித்தேன்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதில் எனக்கே ஒரு தெளிவில்லை. செல்லப்பாவை நினைத்து உண்மையிலேயே வருந்துகிறேனா என்பதைக் கூட என்னால் சொல்லமுடியவில்லை. எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அவர். அவருடைய வாழ்க்கை அறுந்து துண்டாக நிற்பதை என்னால் பார்க்கமுடியவில்லை.

என் உறுதியெல்லாம் முதல் காட்சி நடைபெறும் வரைக்கும்தான் நீடித்தது. இரண்டாவது காட்சியில் செல்லப்பாவுக்காக தொகுப்பாளர் தெரிவிக்கும் அறிவிப்பையும் ”வருக வருக நாகராஜன்” என்று வரவேற்கும் அறிவிப்பையும் ஸ்பீக்கரில் கேட்கக்கேட்க என் உறுதி குலைந்தது. மாஸ்டரிடம் சொல்லிவிட்டு ஓடிச் சென்று நுழைவாயில் திரையின் மறைவில் நின்றுகொண்டேன்.

செல்லப்பாவுக்கு அருகில் நின்றுகொண்டிருப்பவரிடம் போட்டி விதிகளைப்பற்றி எடுத்துரைத்துக்கொண்டிருந்தார் தொகுப்பாளர். நான் அப்போதுதான் அந்த நாகராஜனைப் பார்த்தேன். செல்லப்பாவைவிட உயரமானவர். வாட்டசாட்டமான உடலுடையவர். அவரைப் பார்த்ததுமே ஓர் அச்சம் என் நெஞ்சில் பிறந்தது.

“நான் ஒன்று சொல்லலாமா?” என்று செல்லப்பாவைப் பார்த்துக் கேட்டார் அந்த நாகராஜன். ”சொல்லுங்கள்” என்றார் செல்லப்பா.

அந்த உரையாடலைக் கேட்டு அதுவரை ஆரவாரம் செய்துகொண்டிருந்த கூட்டம் அமைதியில் உறைந்துவிட்டது.

“உங்கள் உயரம்?”

“ஐந்து அடி. ஒன்பது அங்குலம்”

‘நான் ஆறு அடி. இரண்டு அங்குலம். உங்கள் எடை?”

“75 கிலோ”

“சரி, நான் 110 கிலோ”

“ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்றீங்க?”

“ஒருவேளை நீங்கள் பின்வாங்குவதாக இருந்தால், இத்தருணத்தில் இப்போதே பின்வாங்கிக்கொள்ளலாம். அதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என்பதற்காகச் சொல்கிறேன்” என்று சிரித்தார் அவர். அவர் குரலில் ஆழமான தன்னம்பிக்கை ஒலித்தது.

“அவசியமில்லை நாகராஜன். நாம் தொடங்குவோம்.”

“பிறகு உங்கள் விருப்பம்” என்றபடி முன்னால் வந்து செல்லப்பாவோடு கைகுலுக்கினார். தொடர்ந்து தன் மரபுப்படி செல்லப்பா அவர் கைகளைத் தொட்டு வணங்கினார். அவரும் செல்லப்பாவின் கைகளைத் தொட்டு வணங்கினார்.

இசை ஒலிக்கத் தொடங்கியதும் நான் அமைதியிழக்கத் தொடங்கினேன். அரங்கம் முழுவதுமே அமைதியில் மூழ்கியிருந்தது. திடீரென நேற்று இரவு நான் கேட்ட லதாவின் சொற்கள் நினைவில் வந்து மோதின. என்னை அறியாமல் நான் செல்லப்பாவுக்காக வேண்டிக்கொண்டேன்.

காலை சற்றே அகட்டி பாதங்களை உறுதியாக ஊன்றிக்கொண்டு நின்றார் செல்லப்பா. இசை நின்ற கணத்தில் நாகராஜன் முன்னால் வந்து கையை ஓங்கி செல்லப்பாவின் மார்பில் குத்தினார். இரும்புக்கோட்டையில் அசைவே இல்லை. நாகராஜன் அடைந்த அதிர்ச்சியை அவர் முகத்தில் பார்க்கமுடிந்தது. காலடிகளை மாற்றிமாற்றி வைத்து குழப்பிக்கொண்டார்.

இசை மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. எந்தக் காலை முன்னால் வைத்து நகர்வது என்கிற தடுமாற்றத்தில் அவர் காலை முன்னோக்கி வைப்பதும் பிறகு எடுப்பதுமாக இருந்தார். அதற்கிடையில் மணியோசை நின்றது. அவரால் போதிய விசையுடன் குத்த முடியவில்லை. செல்லப்பா உடலில் ஒரு சிறு அசைவைக்கூட அந்த அடியால் ஏற்படுத்த முடியவில்லை. பார்வையாளர்கள் தம் பதற்றத்தை மறந்து கைதட்டிப் பாராட்டி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இசை மீண்டும் ஒலித்தது. இப்போது சரியான திட்டமிடலோடு முன்வந்து செல்லப்பாவின் மார்பில் தாக்கினார் நாகராஜன். ஒரு பெரிய சம்மட்டியால் ஒரு பாறையை அடித்துப் பிளப்பதுபோல இருந்தது அந்த அடி. ஆனால் செல்லப்பாவின் நிலையில் ஒரு சிறிய சலனத்தைக்கூட அது ஏற்படுத்தவில்லை.

நான்காவது முயற்சியிலும் நாகராஜனின் வேகம் பலனளிக்கவில்லை. ஐந்தாவது முயற்சியில் கூடுதல் அழுத்தத்தோடு நாகராஜன் குத்திய போதும் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. வழக்கம்போல வெற்றி முழக்கம் அவையில் ஓங்கி ஒலித்தது.

நாகராஜனின் கைகளைப்பற்றி வணங்குவதற்காக செல்லப்பா நெருங்கியபோது, அவர் நிற்கமுடியாமல் தடுமாறுவதைப் பார்த்தேன். கால்மாற்றி நின்று கையை உதறிக்கொண்டே இருந்தார் அவர். “என்ன?” என்று கேட்டார் செல்லப்பா. “மணிகட்டு பிசகிடுச்சா, உடைஞ்சிடுச்சானு தெரியலை. நான் டாக்டர்கிட்ட போறேன். பெஸ்ட் ஆஃப் லக்” என்று சொல்லி வாழ்த்திவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்.

எச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை

“நான்தான் ஆரம்பத்துலயே சொன்னனே…நீங்கதான் கேட்கல….“ என்றான் இவன். தான் நினைத்ததுதான் நடந்திருக்கிறது என்பதில் ஒரு சமாதானம். முன் கூட்டிக் கணிப்பது என்பது என்ன அவ்வளவு சாதாரண விஷயமா? அதற்கு ஒரு தனி அனுபவம் தேவைப்படுகிறதே…!

அவர் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு சொன்னார்.

அன்னைக்கு நீங்க சொன்ன போது அது தப்பாத் தெரிஞ்சது சார்…என்ன இப்டி அபசகுனமாப் பேசுறாரேன்னு தோணிச்சு…..இப்பத்தான் அதோட உண்மை புரியுது….

உண்மையில்ல சார்…மகத்துவம்….அதாவது உண்மையோட மகத்துவம்….எல்லாராலேயும் சொல்லிட முடியுமா என்ன? – கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் அந்தக் கணத்தில் தேவைப்பட்டது.

சரி…பரவால்ல…இனிமேலாவது கவனமா இருங்க….முடிஞ்சா ஒராளை வேலைக்கு வச்சிக்கப் பாருங்க….-படிப்பு வாசனை இல்லாதவனா…அவன்தான் காவல் காக்க லாயக்கு….. – அவர் மறுக்கலாம் என்கிற எண்ணத்தோடேயே இந்த யோசனையைச் சொன்னான். அது அவருக்குக் கட்டுபடியாகாது என்றும் அவனுக்குத் தெரியும்தான்.

நல்ல கதையாப் போச்சு போங்க….வேலைக்கு வேறே ஆள வச்சு இன்னும் நஷ்டப்படுறதுக்கா…? அவனுக்குச் சம்பளம் யாரு கொடுக்கிறது. நமக்கே தாளம்….

சரி…வேண்டாம்…நீங்களே இருந்து கருத்தாப் பாருங்க….வெளி ஆளுகள உட்கார்த்திட்டு பக்கத்துல பாங்குக்குப் போறது, காய்கறி வாங்கப் போறது, கடை கண்ணிக்குப் போறதுன்னு வேண்டாம். டவுனுக்குள்ள இருக்கிற மார்க்கெட்ல புகுந்து காய்களை அள்ளி அப்படி என்ன லாபம் சம்பாதிச்சிடப் போறீங்க.? எதுக்குச் சொல்றேன்னா அந்த நேரம் பார்த்துத்தான் தவறு நடக்கும்… அதனால…

சரிதான்…ஆனா ப்ராக்டிகலா வர்ற போது சில சமயம் அப்டி நடந்து போகுதே…தவிர்க்க முடிலயே…! பக்கத்து டிராவல்ஸ் சுகுமாரத்தான் உட்கார்த்திட்டுப் போறேன்…அவரு நம்ம ஆளுதானே….

உங்க ஆளுதான்….யார் இல்லைன்னு சொன்னது? அவுரு எனக்கென்னன்னு உட்கார்ந்திருப்பாரு….நாலஞ்சு பேர் திடீர்னு புகுந்தா…என்னத்தக் கவனிக்க முடியும்…? அப்படியும் வர்றாங்கல்ல? சேர்ந்து நின்னாலே உள் புறமா என்ன நடக்குதுன்னு தெரியாது…யாராவது ஒராள் பை வச்சிருந்தாலும் போதுமே…எடுத்து செருகிக்கலாமே…! முதல்ல அவன் மட்டும் நழுவுவான்…மத்த ஆளுகதான் இருக்கேன்னு நாம விட்டுடுவோம்…ஆனா சாமான் மொத ஆளோட போயிடும்…என்னா டெக்னிக்ங்குறீங்க….? நம்ப கவனத்த பல வழிலயும் திசை திருப்பி விட்ருவாங்க…இந்த சாமர்த்தியத்த நல்ல வழிக்குப் பயன்படுத்தலாமேன்னு எவன் யோசிக்கிறான்?

அதான் அப்படி எதுவும் போயிருக்குமோன்னு நினைச்சு முழிச்சிக்கிட்டிருக்கேன்…போன வாரம்தான் ஸ்டாக் வந்திச்சு….எடுத்து எண்ணி, ரிஜிஸ்டர்ல வரவு வச்சிட்டுத்தானே ரேக்குல அடுக்கினேன். எனக்குத் தெரியாதா எது போகுது, வருதுன்னு…? கண்ணை மூடிட்டுச் சொல்லுவேன்.. இந்த முதல் ரேக்குலேர்ந்து, அந்தக் கடைசி ரேக்கு வரைக்கும் என்னென்ன புத்தகங்கள், எத்தனையெத்தனை இருக்குன்னு….இவ்வளவு ஏன் பத்திரிகைகள்ல எத்தனை வித்திருக்கு…எத்தனை மீதமிருக்கும்னு இப்ப சொல்லட்டா……..?

அவருக்கான பெருமை என்னவோ சரி. ஆனாலும் அதையும் மீறித்தானே இது நடந்திருக்கிறது.. பொறுப்பாய் இருக்கக் கூடிய ஆள்தான். சில வருஷங்கள் முன் வேறொரு புத்தக அங்காடியில் வேலை பார்க்கும்போதே அவரைத் தெரியும். அதில்தான் பழக்கமானது. அங்கு சில ஆண்டுகள் பெற்ற அனுபவத்தை வைத்துத்தான் இந்தப் புத்தகக் கடையையே துவக்கினார். பக்குவம் அங்கு பெற்றது.

நான் கூட, போயும் போயும் புத்தகக் கடையையா துவக்க வேண்டும்….. வேலைக்குப் போகக் கூடாதா? திரும்பவும் இந்தச் சகதியில்தான் விழ வேண்டுமா? என்றுதான் பரிதாபப்பட்டேன். அதானே பார்த்தேன்…என்னடா அங்க ஆளக் காணமேன்னு…இங்க தனியாக் கடை வச்சாச்சு போல்ருக்கு…? என்றேன் அந்த முதல் நாளன்று. சந்தோஷமாய் அழைத்து உட்கார வைத்து, குளிர்பானத்தை நீட்டினார். முதல் விசிட் என்று வெறுங் கையோடு திரும்பக் கூடாது என சில புத்தகங்களும் வாங்கினேன்.

அழைப்பு விடுத்து நான் வரவில்லை. பஸ்ஸூக்காக அந்த வளாகத்திற்குள் வரப்போக, பேருந்து நிலையத்துக்குள் இவர் கடை திறந்திருப்பது கண்ணில் பட்டது. அட…நம்மாளு….!

இந்த எடத்தை எப்டி ச்சூஸ் பண்ணினீங்க…? யாரு சொன்னா இந்த யோசனையை…? என்றேன்.

பாராட்டுகிறேனா அல்லது மறுக்கிறேனா என்பது தெரியாமல் குழப்பத்தோடு பார்த்தார்.

பயங்கரமான பிஸ்ஸி ஏரியாவாச்சே இது…? என்று மறுபடி வியந்தேன். மனதுக்குள் மெல்லிய கவலை. ரொம்பவும் பரபரப்பும், ஜன நெரிசலும் புத்தகக் கடைகளுக்குப் பொருந்துமா? அமைதியாய் ஒத்தர், ரெண்டு பேர் என்று வந்து போகும் இடமாயிற்றே…? புத்தகங்களுக்கே பிடிக்காதே கூட்டமாய் வந்து மொய்ப்பது…!

அப்ப இடம் கிடைக்கிறது கஷ்டந்தானே….! பிடிச்சனா இல்லையா…? என்றார் பெருமிதத்தோடு. முதல் முறையாக, தனியாக வியாபாரம் துவக்கியிருக்கும் உற்சாகத்தில் இருந்தார். அந்த முதல் நாளில் அவரை சோர்வடையச் செய்யக் கூடாது. கூப்பிட்டு உட்கார வைத்து, உள்ளத்தையும் உடம்பையும் குளிர வைத்து விட்டார். வாழ்த்தத்தான் வேண்டும். வாய் சும்மாயிருந்தால்தானே? பழக்க தோஷம் விடுமா? நாக்கு நுனிவரை வந்ததை அடக்க முடியவில்லை.

பஸ் ஸ்டான்டுக்குள்ளேன்னாலே பிரச்னையாச்சேங்க….? தண்டல் வசூலெல்லாம் இருக்குமே?… தண்ணியடிக்கணும்னா வந்து கையை நீட்டுவானே…! கொடுத்து முடியாதே…?

புஸ்தகக் கடைக்கெல்லாமா வந்து நிக்கிறாங்க…? இது கற்பூர வாசனையாச்சே…!

எந்த வாசனையடிச்சா என்ன? அவனுக்குத் தேவை காசு வாசனை…கிடைச்சவரைக்கும் லாபம்தானே…?

அதெல்லாம் சமாளிச்சிக்கிடலாம் சார்….புத்தகம் வித்தாப் போதும் எனக்கு…அதுதான் இப்போ பெரிய கவலை….!

அப்போ கவலையோடவே கடை திறந்திருக்கீன்னு சொல்லுங்க? – வாய் சும்மா இருக்கிறதா!

சிரித்துக் கொண்டார். நெடுநாளைய வாடிக்கையாளன்…என்னிடம் கோபிக்க முடியுமா? இனிமேல் இவர் கடைக்குதான் வரணும்….அந்தக் கணமே நினைத்துக் கொண்டேன்.

வந்து கொண்டுமிருக்கிறேன். தினமும் எப்படியும் ஒரு விசிட் உண்டு. ஒன்று ஆபீஸ் போகும் போது…அல்லது திரும்பும்போது… மாலையில் ரொம்பவும் கச கசவென்று இருக்கும் அந்தப் பகுதி. பஸ்கள் வந்தமணியமாகத்தான். படு டஞ்ஜன். வெளியேறத் துடிக்கும் பேருந்துகளின் இரைச்சல்…டீக்கடைகளின் ஓயாத பாட்டுச் சத்தம். போதாக் குறைக்கு ஏகப்பட்ட டிராவல்ஸ் வேறு. சொல்லி மாளாது. டூ வீலரை எங்கு நிறுத்துவது என்கிற பிரச்னை பெரிய்ய்ய தலைவலி.. என்ன ஆயிடப் போகுது என்று கிடைக்கும் இடத்தில் போட்டால் வண்டி நம்மளது இல்லை. கண்ணுக்குப் படுவது போல் நிறுத்தணும். இல்லையெனில் கண்டிப்பாக லபக்…

இது என் கடையாக்கும்….என்று உணர்த்துவது போல் சரவணன் கடை முன்னால்தான் கொண்டு நிறுத்துவேன். தள்ளி நின்று போக்குவரத்தை சரி செய்து கொண்டிருக்கும் போலீஸ் கூட தினசரி என்னைப் பார்ப்பதால் ஒன்றும் சொல்வதில்லை. சொல்லிருவானா? எங்கிட்டதானே வந்து நின்னாகணும்!

சார்…ஜி.பி.எஃப் அட்வான்ஸ் போட்டிருக்கேன்…கொஞ்சம் சீக்கிரம் தள்ளி விடுங்க….அர்ஜென்டா பணம் வேண்டிர்க்கு…..

நீங்கதான் எப்பவும் கனமாத்தான இருப்பீங்க…! அர்ஜென்ட் எங்கருந்து வந்திச்சு…?

…அப்டியெல்லாம் இல்ல சார்…நீங்களா என்னமாச்சும் நினைச்சிக்கிடுறீங்க…! எப்பயும் காச்சப்பாடுதான் சார்…

வேறே யாராச்சும் கிறுக்கன்ட்டப் போய்ச் சொல்லுங்க… –

ஆள் மசியாது எனில் பயங்கரக் கடுப்பாகி விடுவார்கள். என்னைக்குடா மாட்டுவான்……! என்கிற கடுப்பு.

நானா மாட்டுற ஆளு…அவிங்ஞதான் என்கிட்ட மாட்டியிருக்கானுங்க…அதான் வச்சுத் தீட்டிக்கிட்டிருக்கேன்….ஏதாச்சும் ஒண்ணு தொங்கல்ல இருந்தாத்தான பிடிப்பு? ஆபீசர்களுக்குச் சொல்லிக் குடுக்கிறதே நாமதானே…? வாடீ…வ்வா…என்னைக்காச்சும் வராமயா போவ….என்ற காத்திருப்பு.

நான்தான் மெமோவுக்கு பதில் கொடுத்திட்டேன்ல சார்…அப்புறம் ஃபைல மூடிற வேண்டிதான…? ஏன் சார் இன்னும் பென்டிங் வச்சிட்டு இழுத்திட்டிருக்கீங்க…? மனசுக்கு நி்ம்மதியே இல்ல சார்….

இந்தப் புத்தி காசக் கைநீட்டி வாங்கறப்ப இருந்திருக்கணும்..பச்சையா மாட்டுனா…? .பதில்ல திருப்தி இல்லீங்க…சார்ஜஸ் போடச் சொல்லி உத்தரவு…செவன்டீன் ஏ…..தயாராயிருங்க….

சார்…சார்…அதெல்லாம் வாணாம் சார்…பெறவு இன்க்ரிமென்ட் கட்டு…அது இதுன்னு போகும்….பார்த்து முடிச்சு விடுங்க….இனிமே எந்தத் தப்பும் நடக்காது…..

அப்போ அப்டில்ல நீங்க எழுதிக் கொடுத்திருக்கணும்…இதெல்லாம் எங்கிட்டச் சொல்லி என்ன புண்ணியம்…? எழுத்துல இருந்தா நானாப் பார்த்து என்னமாச்சும் செய்யலாம்…இதையே சீஃப்கிட்டப் போய்ச் சொல்லுவீங்களா? மாட்டீங்க…இங்கதான் வந்து தொங்கு தொங்குன்னு தொங்குவீங்க…! நானா உத்தரவு போடுற ஆளு? எங்கழுத்த அறுக்கிறீங்க…?

நீங்க நினைச்சா மூடிறலாம் சார்….எல்லாம் உங்க கைலதான் இருக்கு…பார்த்து செய்ய்ய்ங்க….-அந்த இழுவை எதற்கு அடி போடுகிறது என்று எனக்குத் தெரியும். ஆன மட்டும் என்னையும் பழக்குவதற்கு சபதம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. அது ஒண்ணு மட்டும் எங்கிட்ட இல்லாததுதான் எனக்கு ப்ளஸ்…!

போங்க…போங்க…பார்ப்போம்…. – தொலைஞ்சு போறானுங்க…என்று இரக்கம் மேலிடத்தான் செய்கிறது. லஞ்சத்த எங்க ஒழிக்கிறது? நாமளே ஒழிஞ்சாத்தான் நிம்மதி…!

அதோ அங்கே நிற்கும் போலீஸ்காரருக்கும் அப்படி ஒன்று என்னிடம் பென்டிங்…அதனால்தான் அங்கிருந்தே என் முகத்தை நோக்கி பார்வையாலேயே கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

இங்க கொண்டாந்து புஸ்தகக் கடையை வச்சிருக்காங்ஞ பாரு…கிறுக்கங்ஞ…என்று கறுவிக் கொண்டேயிருக்கறார் மனதுக்குள்.

சரவணனும் என் தினசரி வருகைக்கு ஒன்றும் சொல்வதில்லை. ஆள் வேண்டியிருந்தது. பாதுகாப்பாய் என்னைப் போல் ஒருவர் அவருக்குக் கிடைப்பது கடினம். போலீஸ் டிபார்ட்மென்ட் ஆளாச்சே…! குறைஞ்சது ஒரு மணி நேரத்துக்கும் மேலே இருப்பேனே…! அந்த அடையாளம் போதாதா? மாலை ஆபீஸ் முடித்து வண்டியை எடுத்தேனானால் நேரே இங்கேதான் வந்து இறங்குவேன். கடைக்குள் நுழைந்து ஒரு விசிட். புதிதாய் எதுவும் வந்திருக்கிறதா என்று ஒரு பார்வை. பிறகு வந்து உட்கார்ந்தால் நான்தான் காவல் தெய்வம்…தோன்றி மறையும் இஷ்ட தெய்வம்…!!!

எதையும் ஓசியில் எடுத்துப் படிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. எல்லாவற்றையும் பணம் கொடுத்துத்தான் வாங்கியிருக்கிறேன். நல்லது கெட்டது என்று அறியாமல், தரமானது, தரமற்றது என்று புரியாமல், கட்டாயம் படிக்க வேண்டியது என்பதை அறுதியிட்டு உணராமல் கண்டமேனிக்கு வாங்கிப் போட்டிருக்கிறேன் வீட்டில். நானே ஒரு கடை போடலாம்தான். அவ்வளவு புத்தகங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் நினைத்த போது நினைத்த புத்தகத்தை எடுத்துப் படிக்கும் ஆர்வம். ஆகையால் யாருக்கும் இரவல் தருவதில்லை. தயவுசெய்து புத்தகம் கேட்காதீர்கள் என்று எழுதியே தொங்க விட்டிருக்கிறேன். அதனாலேயே எனக்கு நண்பர்கள் குறைவு. ஒருத்தனால எந்தப் பிரயோஜனமும் இல்லைன்னா எவன் நெருங்கப் போறான்? படிக்கிற பயபுள்ளைகளும் ஓசி இல்லைன்னா தலை காட்ட மாட்டான்ல….!

எல்லோரும் காசு கொடுத்து வாங்கித்தான் படிக்க வேண்டும் என்பது என் கருத்து.

எல்லாராலேயும் அது முடியுமா சார்…. என்பார் சரவணன்.

நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? அப்போ உங்க கடையை லெண்டிங் லைப்ரரியா மாத்த வேண்டிதான்…? என்று சொல்லியிருக்கிறேன்.

லெண்டிங் லைப்ரரின்னா அதுல பழைய புத்தகங்கள்தான சார் ரொட்டேஷனுக்குக் கிடைக்கும். இந்த மாதிரி லேட்டஸ்ட்டெல்லாமா கொடுக்கிறாங்க….லம்ப்பாக் கொடுத்து வாங்கிப்புட்டு யாராச்சும் சில்லரைக்கு விடுவாங்களா…? இல்ல மாத வாடகை வாங்கித்தான் கட்டுபடி ஆகுமா…?

நீங்க அந்த புதுமையைச் செய்ய வேண்டிதான்…புத்தம் புதுப் புத்தகங்களை வாங்கி வைத்து லெண்டிங் லைப்ரரி நடத்தும் வாசகர்…ன்னு ஒரு நாளைக்கு உங்களையும் இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துவாங்களே?…நீங்க ஒரு நல்ல வாசகரா இருக்கக் கண்டுதானே இந்த மாதிரி நல்ல நல்ல புத்தகங்களா வாங்கி விக்கிறீங்க….சமீபத்துல வந்ததுன்னு சொல்லிட்டு உங்ககிட்டதானே வந்து நிக்கிறாங்க….அதிகமா காலேஜ் பசங்கள உங்க கடைலதான பார்க்க முடியுது….படிப்படியா இழுத்திட்டிருக்கீங்களே எல்லாரையும்…அதுவே பெரிய சாதனைதான்….வேறே எந்தக் கடைலயும் இந்த சிட்டில இவ்வளவு சீக்கிரம் புதுப் புஸ்தகம் கிடைக்கிறதில்ல….அது தெரியுமா உங்களுக்கு? எல்லாக் கடைக்கும் நாயா, பேயா அலைஞ்சதுனால சொல்றேன்…தரமான வாசகர்களின் முகவரி நீங்க..நீங்கதாங்க சூப்பர் ஸ்டார்….

சரவணனுக்குப் பெருமை தாளவில்லை. அப்புறம் ஏன் சார் லெண்டிங் லைப்ரரி அது இதுன்னு சொல்றீங்க…? நல்லதையே பேசுங்க சார்…இப்பக் கடைசியாப் பேசின மாதிரி….பட்டுப் பட்டுன்னு எதிர்பாராம எதையாச்சும் சொல்லிப்புடறீங்க…மத்தவங்க மனசு சங்கடப்படும்னு யோசிக்கவே மாட்டீங்களா…?

என்னாச்சு…திடீர்னு சீரியஸ் ஆயிட்டீங்க…? ஓ.கே…ஓ.கே….ரிலாக்ஸ்…..நல்லா பழகினவர்ங்கிற உரிமைல பேசுறது இதெல்லாம்…கொஞ்சம் கூடக் குறையத்தான் வரும்….தப்பா தோணிச்சின்னா நிறுத்திக்கிடுவோம்…

இதற்கு சரவணன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. உண்மையிலேயே மனசு சங்கடப்பட்டிருக்கிறார் என்றுதான் தெரிந்தது. இப்பத்தான் கடையத் தொறந்திருக்கிறான் மனுஷன்…அவன்ட்டப் போயி லென்டிங் லைப்ரரியா நடத்துன்னா? கடுப்பாக மாட்டானா? – மனசாட்சி உறுத்தி விட்டதுதான்.

சரி…அத விடுங்க…இப்ப விஷயத்துக்கு வருவோம். எதுக்கு வெட்டிப் பேச்சு…? எத்தன புத்தகம் காணாமப் போச்சு…என்னென்ன போச்சு? எவ்வளவு பைசா? அதப் பார்ப்போம்….ஸ்டாக் ரிஜிஸ்டர எடுங்க…ஒரு அலசு அலசிடுவோம்….- சொல்லிவிட்டு என்னைத் தயார் படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்.

எவ்வளவு பைசாங்கிறதப் பிறகுதான் பார்க்கணும்…முதல்ல லிஸ்ட்டை எடுத்திட்டேன்….என்னென்ன புஸ்தகம்னு…ஒவ்வொண்ணுலயும் எத்தனை இருக்குங்கிறதை அலசினாத்தான் எத்தனை போயிருக்குன்னு தெரிய வரும்…..

சேல்சும் ஆகியிருக்குமுல்ல…அது போகத்தானே மீதியப் பார்க்கணும்…? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சொன்னீங்க…மனப்பாடமாச் சொல்வேன்னு….

பில் புக்குப்படி சேல்சு, அப்புறம் இருப்பு, ரெண்டையும் கூட்டி வரவுலர்ந்து கழிக்கணும்….அப்பத்தான் தொலைஞ்சது தெரியும்….! பரவலா பல தலைப்புல போயிருக்கு சார்….புதுசுகள உடனே இறக்கறதும் ஆபத்துதான் போல்ருக்கு…

என்னங்க நீங்க…அத்தனை புத்தகமா போயிருக்கு? அப்டித் திருடுற அளவுக்கு எவன் வந்தான்? நீங்க கடைல இருக்கப்பவேவா இத்தனையும் நடந்திச்சு…இல்ல இல்லாதப்பவா….? நம்பிக்கையா உட்கார்த்தி வச்ச ஆளு.. வித்த .காசை ஆட்டையப் போட்டுட்டானா? புஸ்தகத்தைத் திருடறதுக்குக் கூடவா ஆள் இருக்கான் இந்த நாட்டுல…? எழுத்தத்தான் திருடுறாங்க…எழுதி அச்சடிச்ச புஸ்தகத்தையுமா திருட ஆரம்பிச்சிட்டாங்க?

இது ஒரு நாள்லயோ, ஒரு வாரத்துலயோ நடந்ததில்ல சார்…கடந்த ஒரு மாசத்துக்கும் மேலே அடுத்தடுத்துப் போயிட்டிருக்கு…இப்பத்தான் நானே சுதாரிச்சிருக்கேன்….ராத்திரி கடையை அடைச்சிட்டுப் போனப்புறம் எவனாவது திருடறானோன்ங்கிற அளவுக்கு சந்தேகம் வந்திடுச்சு….! புஸ்தகக் கடையையும் விட்டு வைக்க மாட்டாங்க போல்ருக்கு….திருடிட்டுப் போயி படிச்சாலும் பரவாயில்ல…..ரெண்டு ரூபாய்க்கும் அஞ்சு ரூபாய்க்கும் வித்துப்புட்டு தண்ணியடிச்சிட்டுப் போயிடுவானுங்க சார்…அப்டி ஆளெல்லாம் இருக்கு இந்த ஏரியாவுல……கழுதப் பயலுங்க….

பார்த்தீங்களா…கடைசில நான் சொன்னதுலதான் வந்து நிக்கிறீங்க….ஆரம்பத்துலயே அபசகுனமாப் பேசுறனேன்னு அன்னைக்கு நினைச்சீங்க… இப்போ அதுதான் யதார்த்தமாயிருக்கு….ஒரு சிசிடிவி காமிராவ வாங்கி மாட்டிருவமா…?

ஏன் சார்…இருக்கிறதே ஒரு ரூமு…இதுக்கு காமிரா ஒரு கேடா….? நம்ம கண்ணே காமிராதான சார்….? நிமிர்ந்து பார்த்தா ஆச்சு…! நீங்க வேறே….ஏற்கனவே பணத்தை எறக்கிட்டுத் தவிச்சிட்டிருக்கேன்….

சரி வேண்டாம்….நுழையற இடத்துல ஒரு சின்ன டி.வி. வச்சிடுவோம்…கடையோட நாலு கோணத்தையும் ஆங்கிளாக்கிப் பிரிச்சிட்டம்னா….சி்ன்னச் சின்ன மூவ்மென்ட் கூடத் துல்லியமாத் தெரிஞ்சி போயிடும்…..ஏற்பாடு பண்ணுவமா?

சார்….சார்….விடுங்க சார்….பெரிய எடுப்பால்ல எல்லாத்தையும் சொல்லிட்டிருக்கீங்க…எனக்குத் தாங்காது சார்….

ஓ.கே…யோசிப்போம்…….புலம்பி என்ன பண்ண…ஆக வேண்டியதைப் பார்ப்போம்…..எடுங்க…எடுங்க…..

எத எடுக்க சார்? இனிமே என்னத்தப் பார்க்க?…அதான் டயமாயிடுச்சே….கடையை அடைக்கணும் சார்….நான் கிளம்பி வீடு போய்ச் சேர்றதுக்கே ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆயிடும்…நீங்க டுர்ர்ன்னு கால் மணில போயிடுவீங்க…நா பஸ் பிடிச்சி இறங்கி நடந்தில்ல ஆகணும்…நாளைக்குக் கட்டாயம் வெரிஃபை பண்ணிடுவோம் சார்…..

டவுனிலிருந்து இருபது கி.மீ.-ல் சரவணனின் ஊர். ஒரு வேளை போக, வர வசதியாயிருக்கட்டும் என்றுதான் பஸ்-ஸ்டான்டிலேயே கடை பார்த்தாரோ என்னவோ…எட்டினாற்போல போய் பஸ் ஏறிக் கொள்ளலாம். அவர் போக வேண்டிய பஸ் நிலையத்திற்குள் வந்து நிற்பதைப் பார்க்கலாம். அந்த நிமிடம் கடையை அடைத்தால் போதும். கடைசி பஸ் வரை திறந்திருக்கலாம், காத்திருக்கலாம். அந்த நேரம் வரை எவன் வந்து புத்தகங்களை வாங்குகிறான் என்பதுதான் கேள்வி. பெரும்பாலும் புத்தகக் கடைகள் ராத்திரி எட்டு, எட்டரைக்கெல்லாம் அடைத்து விடுவதுதான். இவர் வசதிக்கு வேண்டுமானால் திறந்து வைக்கலாம். அதான் கண்ணுக்கெதிர்க்க பஸ் வந்து நிற்கிறதே…! நினைத்துக் கொண்டே சரி…அப்போ கௌம்புங்க….நானும் புறப்படுறேன்….என்றவாறே எழுந்தேன்.

…கொஞ்சம் உட்காருங்க….ஒண்ணுக்கிருந்திட்டு வந்துடறேன்….என்றவாறே ஓடினார் சரவணன். அது கொஞ்சம் தள்ளிப் போக வேண்டும். பஸ் ஸ்டான்டில் இருக்கும் கழிவறைக்குள் கால் வைக்க முடியாது. நுழைந்து வெளியேறினால் நேரே ஆஸ்பத்திரிதான். இவர் சற்றுத் தூரம் போய் எங்கோ ஒதுங்கிவிட்டு வருவார். சரி…நம்மாலான உதவி…என்று அமர்ந்தேன்.

பில் புக்கின் நடுவே ஒரு தாள். அதுதான் சரவணன் எடுத்த மிஸ்டு புக்ஸ் லிஸ்டோ…?. மனதுள் பரபரப்பு. எடுத்து ஒரு நோட்டம் விட்டேன். அதிகமொன்றுமில்லை. ஒரு பதினைந்து புத்தகத்திற்குள்தான். ஆனாலும் அது அவருக்கு நஷ்டம்தானே! பணம் போட்டவனுக்குத்தானே தெரியும் அருமை…!

பட்டியலை திரும்பவும். வரிசையாய் நோக்கினேன்… கவனமாய்ப் படித்துக் கொண்டே வந்தேன்.. . அவருக்குத் தெரியாமல் நான் எடுத்துச் சென்ற அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் பெயர் அதில் இல்லவே இல்லை…..!!! எப்படி? ஒன்றே ஒன்றுதானே இருந்தது அது. அதனால் மறந்திருப்பாரோ?

தெரிந்தே, போனால் போகட்டும் என்று எனக்காக விட்டிருப்பாரோ.?. ஏனோ இப்படியொரு சந்தேகம் வந்தது…!!! ஒரு வேளை இந்தப் பட்டியலே எனக்காக, என்னுடைய திருட்டை மறைமுகமாய் எனக்கு உணர்த்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட போலியோ…! நோட்டம் பார்க்கிறாரோ? புத்தகங்கள் திருடு போறது ஒண்ணும் எனக்குத் தெரியாமலில்லை…நா ஒண்ணும் அந்தளவுக்கு மடையனில்லை…! சொல்லாமல் சொல்கிறாரோ?

முன்பு வேலை பார்த்த புத்தகக் கடையில் அவர் சம்பாதித்திருந்த முன் அனுபவம் அத்தனை வீண் போகுமா என்ன? இல்லையென்றால் இந்தச் சின்ன வயதில் தனியே கடை வைத்து நடத்தும் தைரியம் வந்திருக்குமா? – இந்த எண்ணங்களூடே குழப்பமாய் வண்டியில் பறந்து கொண்டிருந்தேன் நான். என்னையறியாத ஒரு படபடப்பில் அல்லது பரபரப்பில் வண்டி வேகமெடுத்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

மிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை

மலத்திலிருந்து எழுந்து வந்திவன் சொல்வதை கேட்க உங்கள் காதுகள் கூசலாம். ஆனால் உங்கள் உடம்பிலும் உள்ளுறைந்திருப்பதே அக்கூசும் மலம். “அதுவும் நம் பிரம்மம்” என்று எங்கள் பழைய குலக்குரு கூறுவார் , ஆம் அவரும் ஒரு இலையான். அந்த தெருவின் கடைசியிலிருக்கும் மதுக்கடையில் நான் உணவிற்காக வளமையாக செல்வது , நாங்கள் இன்னும் விளைவிக்க பழவில்லை , உணவு சேகரிக்காத நாடோடி நிலையிலிருக்கிறோம். அதுவே எங்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை.

அது ஊரின் முழுக்குடிகாரகளின் முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை. கால் வைத்தால் தட்டுப்படும் குப்பைகள் மட்டுமேயான அமுதவெளி எச்சில் கடல். நின்று நிதானமாக நான் தின்று இளைப்பாறி வரலாம் ஒருவரும் விரட்டும் நிதானத்தில் அங்கிருப்பதில்லை. காலகள் உளைகின்றன சற்று ஆசுவாசமாக கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு போகலாம். நான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு வெளிப்படையான காரணங்கள் இருக்கின்றன.முதல் காரணம் எளிதான உடம்பு நோவாத உணவு. இரண்டு , வித விதமான் பொழுது போக்குக்கதைகள்.

மனிதர்களிடம் கேட்கும் கதைகள் எங்கள் குழுவில் ரொம்ப பிரசித்தம். முருகி ஒரு முறை “நான் செல்லும் வீட்டின் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் கொல்ல தனிமையில் திட்டமிடுகின்றனர். திரும்பி என்னைப்பார்த்ததும் மொத்த குடும்பமும் கையில் ஆயுதங்களுடன் என்ன அடித்து விரட்டின. பார் என் இடது இறக்கைகளில் இருக்கும் கிளிசலை” என்று இறக்கையை விரித்து காட்டி தொடர்ந்தாள் “ஆனால் அவர்கள் சேர்ந்திருக்கையில் சிரிப்பும் கூத்தும் ஆகா களைகட்டுகிறது” என்றாள். விசித்திரமான புரிந்து கொள்ளமுடியா கதைகள்.

சூரியன் தொலைந்ததும் மனிதர்கள் கூட்டமாக வந்து எங்களைப்போல் குவிகின்றனர். தினமுன் நூற்றுக்குமேற்பட்ட கதைகள் சுழன்று அலைந்து பின் அடங்குகின்றன. நமக்கு மெத்த பிடித்தது மரணங்களின் துயரங்களின் கதைகள் தானே!. சந்தோசத்தின் கதைகள் நல்லதாகவேயுள்ளன, ஆனால் ஏனோ அதில் பிடித்தமில்லை , வெறும் அலங்கரிக்கப்ப்ட்ட குப்பைகள். அந்த மேசைகளின் விளிம்பில் கண்ணிமைக்காமல் மோவாயின் கைவித்து கவனித்திருப்பேன். அடிக்கடி தின்பதற்கும் குடிப்பதற்கும் அவர்களே எனக்கும் படியளப்பார்கள் , தர்மவாதிகள்.

தர்மவாதிகள் வரும் நேரமாகிவிட்டது. கடைக்குள் நுளைந்த எனக்கு துக்கம் மனிதர்களின் மூச்சுக்காற்றென சுழன்றடித்தது . குப்பைகள் துடைத்து எறியப்பட்ட சுத்தமான தரையில் மேசைகள் ஒய்யாரமாய் அமர்ந்து நக்கல் சிரிப்புச்சிரித்தன. கனத்த நெஞ்சுடன் இயல்பாக பறக்க முயன்றேன். சொர்க்கம் துடைத்தெறியப்பட்டு விம்மலுடன் நரகமாகியிருந்தது. ஒன்றும் செய்வதற்கில்லை , காத்திருப்போம் இன்றைய பட்சணத்திற்கு. ஒருவர் பின் ஒருவராய் வந்து அமர்ந்து கொண்டிருந்தனர். எங்களுக்குள் இருக்கும் ஒப்பந்தத்தின் படி எனக்கு ஒதுக்கப்பட்ட மேசையின் அமர்ந்து வாசலைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவர் பின் ஒருவராக வந்து என் மேசையைத்தாண்டி சென்று மற்றதில் அமர்ந்தனர். ஆத்திரத்தில் மற்ற மேசைகளுக்கு பறந்து நண்பர்களிடன் அனுதாபம் தேடினேன். அவர்கள் சாப்பாட்டில் மும்முரமாகி என்னை கவனிக்கத்தவறினர். அவர்களுக்கு சோறு கிடைத்து விட்டது. சோறு கண்டயிடம் சொர்க்கம் இல்லையா!

திரும்பி வந்து என் மேசையில் அமரும் பொழுது அங்கு என் மூன்று தர்மர்கள் நிதானமாக அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர். ஆகா , என்ன அற்புத காட்சி. சந்தோசப்பட நேரமில்லை அதற்குள் அடிக்க வருகிறார்கள். சீ…இவர்களா தர்மபிரபுக்கள். அவர்களுக்கு தெரியமாலே படியளப்பார்கள் , யோசித்து செய்வது தர்மமில்லையல்லவா! இருந்தாலும் என்ன , என்னை பிடிக்க இல்லை அடிக்க முடியுமா , ஹா…ஹா….மறைந்திருந்த என்னை அவர்கள் காண்பது எளிதல்ல. பொறுமை எருமையை விட பெரியது , ஆம் முக்குத்தெரு எருமை எவ்வளொ பெரியது. அதன் காதுகளில் ஒளிந்து விளையாட்டு காட்டினால் ஜோராக இருக்கும். இப்பொழுது பசி காதையடைக்கிறது.

ஆ…எச்சில் துப்பிவிட்டான். இவன் சீக்கிரம் செத்து விடுவான் போல ரத்தம் கலந்திருக்கிறது. இறந்தால் இவன் வாய்க்குள் நுளைந்து மூக்கின் வழி வரலாம். பின் அவனே என் முழு உணவு. செத்தும் கொடுக்கும் மனிதர்கள் ஆகா…புண்ணியம் ! புண்ணியம்!. அவன் குடிக்கும் குப்பி , டம்ளர்களைத்தவிர மற்றவற்றில் திரிந்தலையலாம். அது தலையை கிறக்கும். எனக்கிருக்கும் மினுங்கும் கண்கள் மேலும் மினிங்கித்தள்ளும். பச்சை நிற கோழி மாமிசம். இதில் நிற்க முடியவில்லை எண்ணை வழுக்கு. கைகளால் தடவி எடுத்து பறந்து மீண்டும் அமருவோம். பசியாறுகிறது. இனி செவிக்குணவு…

“இங்கேரு , எனக்குல்லாம் செத்தா சொர்க்கொந்தான். அப்பேர்ப்பட்ட வாழ்க்கையாகும். சீதை சீணிச்சி கெடந்து இண்ணையோட ஆறு வருசமாச்சி. ஒரு நாள் அவ பீ மூத்தரம் அள்ளாம இருந்துருப்பனா. பொன்னாட்டுலா பாத்துக்கிடுதேன்”

“மகேசு , நீ பாக்கது லேசுபட்ட காரியமில்ல மக்கா மனசிலாச்சா. பெத்த பிள்ளைய தொட்டில்ல போட்டு உறக்காட்டுக மாரிலா டெய்லி போட்டுட்டு வாற. நீ வெப்ராளப்படாம குடி”

“பரமசிவம் , இவன் பிரங்கத்த கேக்கவா வந்தோம் , மத்தத கைல எடுத்து வச்சாலே இவன் இந்த கதையத்தான் டெய்லி சொல்லிட்டு திரியான். சவத்தெழவு , கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சுல்லா , பொறவு தண்ணிக்குடிச்சி ஒண்ணுக்கடிச்ச கதையாக்கும். செத்தது நம்ம மாஸ்டராக்கும். அந்த கதைய பேசுக மாரினா இன்னிக்கி இங்க இருப்போம். இல்லண்ணா பேறண்டே. ”

“நீ ஏண்டே கெடந்து துடிக்க , அவன் ஒரு ட்ரிப்பு சொல்லிட்டுதா போட்டுமே. உனக்க பொண்டாட்டியா கெடைல கெடக்க. மாஸ்டரு பெரிய மயிரு மாஸ்டரு. குடும்பத்த விட்டுப்போடு பயந்து தொங்கிச்செத்தான். சீ…ரோட்டுல பிதுங்கிச்செத்த நாய் மாரி”

“லேய் ஜஸ்டினே , மாஸ்டர பத்தி தரக்கொறவா பேசுனா கொடல உருவிப்போடுவேனாக்கும் ஆமா”

“ஆமா புடுங்குன மாஸ்டரு , வீட்டுல நாலு பிள்ள இருக்கு , மனசுல ஒரு இது வேணும்ல… பின்ன என்னத்த யூனியன் லீடரு , சப்பு சவரெல்லாம். உனக்க மயிரு மாஸ்டரு செத்து அவனுக்க வீட்டுல கெடக்க எல்லாத்தையும் கொல்லப்போறானாக்கும்”

திரும்ப திரும்ப இவர்கள் ஏன் செத்துப்போவதை இவ்வளவு கொடூரமாக வர்ணிக்கிறார்கள். நாங்களேல்லாம் இவர்கள் கண்களுக்கு தெரிவதேயில்லை. செத்த உடலில் கோடிப்புளுக்கள் துளைத்து தெளிவது உயிர் பெருக்கமல்லாவா. ஹீம்…மடையர்கள்.

“ஜஸ்டினே , இண்ணைக்கி நீ பாக்குற சோலி , உடுத்துக உடுப்பு எல்லாம் நம்ம மாஸ்டரு உழைச்சு நிண்ணு கொடுத்ததாக்கும். ஊரார் குடும்பத்த பாத்து அவரு குடும்பத்த விட்டுப்போட்டாரு”

“செரிதாண்டே மக்கா , குடும்பம் தனிச்சொத்து அரசுண்ணு தானடே நம்ம சட்டம் சொல்லுகு , அப்படிப்பாத்தாக்ககூட குடும்பத்த மொதல்ல வச்சி காப்பத்திருக்கணும்லா”

“சீக்கிரம் போணும் , சவத்துக்கு வெள்ளி கெழமையாக்கும் பதுவா துணி மாத்துகது. மறந்தா அவ வாய்ல நீச வார்த்த கேக்க முடியாதாக்கும்”

“நீ பயராம கொஞ்சம் அமந்து இரி மகேசு. உனக்கு ஜஸ்டினே , ஒரு ஆஃப் எடுப்பமா. எல்லாம் மூத்தரமா போச்சி”

நீராகாரம் நிறைய எடுத்துக்கொள்கிறார்கள். தின்பது குறைவு இடையிடையே புகைத்தல். நேரம் கடந்த பின் முன்பு சொன்னது போல இவர்கள் வாய் வழி போய் மூக்கில் வரலாம் பிணச்சுரணை. இந்த மகேசு எதையும் கேட்டதாக தெரியவில்லை. சீதாப்புராணம் தான். இவன் மாற்றி மாற்றி பேசுவதைப் பார்த்தால் இவனே அவளை கொன்றுவிடுவான் போல.

“நானாக்கும் மொதல்ல பாத்தது , கண்ணு பிதுங்கி வெளிய கெடக்கு. மலம் ஜலம் ரெண்டும் வழிஞ்சி போயிருந்துச்சு. நல்ல கம்பீரமான மொகம் சாகதுக்கு முன்னால எதையோ பாத்து வெறச்சி நின்ன மாதிரி மேலையே பாத்துட்டு இருக்கு. ஒடஞ்ச கொடக்கம்பியாட்டும் கையும் காலும் நிக்கி”

“மாஸ்டரு இப்படி கடன் வாங்கப்பிடாது பரமசிவம். மத்தவனுக்கு இவரு கடன் வாங்கிக்கொடுத்து எவனும் திருப்புத்தரல்ல. கொடுத்தவனுக்கு பேச்சு கேக்க முடியாம பயந்து போயி செத்துப்போனாரு”

“கணக்கு வழக்கு பாக்கத்தெரியாது , கேட்ட குடுக்கதும் இல்லண்ணா வேற இடத்துல வாங்கி கொடுக்கதும் கூடிப்போச்சு. பின்ன இப்படி ஆகாம என்ன செய்யும்”

“நடு வீட்டுல துர்மரணம் நடந்தா அந்த வீட்டையே செதச்சிப்போடும் , கூடத்துல உறங்கி எந்திச்சா தொங்குன மேனிக்கி காலு கை விரலு தெரியும்”

“மூத்த பிள்ளைக்கி ரெண்டு மாசத்துல கல்யாணம் தேதி குறிச்சி வச்சிருக்கு. காசு தேராதுண்ணு மாப்பிள்ள வீடு அனக்கமில்லாம போயாச்சு”

“என்ன இருந்தாலும் இழப்பு இழப்பு தான். பொதச்சாக்கூட போய் தொழுக ஓரெடமிருக்கும். எரிச்சி தடையமில்லாம ஆக்கியாச்சு. இனி ஆடி அமாவாசைக்கி கா…கா…கரைய வேண்டியதான்”

“எனக்க பொன்னு மாஸ்டரே…..முன்ன நிண்ணு ஸ்ட்ரைக் நடத்த , கேட்டப்பம் காசு தர. கண்டனம் கடத்தாம பெச இனி யாரிருக்கா”

“எனக்க பொன்னு மாஸ்டரே”

என்ன இது , சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் தலை தொங்க அழ ஆரம்பித்து விட்டனர். மாஸ்டர் இறந்ததில் எனக்கும் வருத்தம்தான். நல்ல மனிதர். ஆனால் எரித்து விட்டனர் முட்டாள்கள்.

“மாஸ்டருக்கெல்லாம் சாவு வருகு , எனக்க சீதைக்கி ஒரு சாவு வர மாட்டங்கே….”

இவனும் அழுகிறான். ஆனால் யாருக்காக. ஆ….என்ன இது காது கிழியும் சத்தம்.

“லேய் மக்கா , நமக்க பாட்டு…நமக்க பாட்டு”

“அடியே மனம் நில்லுனா நிக்காதடி , அடியே எனக்கண்டு நீ சொக்காதடி”

“சீக்கிரம் செத்துருவா. இந்தா நீ ஆடு….”

மட்டில்லா சந்தோஷம். அழுகையில்லா ஆட்டம். கதை விளங்கவில்லை.

“செரி சகோ , நாளைக்கி காலைல மணி சகோக்கு கல்யாணம் மறந்துராதேயும். மாம்பழ புளிசேரி உண்டுண்ணு பேச்சு. பத்து மணிவாக்குல வந்துரும் கலுங்கு பக்கம். நா வண்டில வந்துருகேன்”

“அப்ப செரி”

“இந்த ஈச்ச….சீ….”

அடித்து விட்டனர். இறக்கைகள் பிரிந்து உதிர்கின்றன. நான் மிதக்கிறேன் ஒசிகிறேன். அலைகிறேன். மேசை என்னை தாங்கிப்பிடிக்க வீழ்கிறேன்.

மரணம் நெருங்குகிறது. இந்த கட்டெறும்பு ஒற்றையாக தொய்வில்லாமல் எனைத்தூக்கி நகர்கிறது. உயிருள்ள உண்ணும் உணவு. இருண்ட குகைக்குள் நுளைகிறேன். மாஸ்டர் இங்குதான் இருக்கிறார் போல தெரிகிறது.

வாசனை – பாவண்ணன் சிறுகதை

சந்தனநிறச் சட்டை. தீபாவளிக்கு எடுத்தது. அலமாரியிலிருந்து எடுத்து வைக்கும்போதே பாச்சா உருண்டையின் மணம் எழுந்தது. மேல்சட்டைப் பையின் மேல்விளிம்பில் எம்ப்ராய்டர் வேலையால் உருவாக்கப்பட்ட ஆங்கில எஸ் எழுத்து மட்டும் அடர்பழுப்பு நிறத்தில் இருந்தது. அடர் பழுப்பு நிறப் பேண்ட்டுக்குப் பொருத்தமான சட்டை.

சிவபாலன் அந்தச் சட்டையையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தயக்கத்துடன் திரும்பி வெள்ளைக்கோடும் நீலக்கோடும் கட்டங்களாகக் காட்சியளிக்கும் மற்றொரு சட்டையை எடுத்து சந்தனநிறச் சட்டைக்குப் பக்கத்தில் வைத்தான். இரண்டையும் மாறிமாறிப் பார்த்தான்.

”டேய் பாலா, சீக்கிரமா கெளம்பாம இன்னும் என்னடா செய்யற இங்க? வண்டி வேற வந்துட்டுது” என்றபடியே அறைக்குள் தம்பிதுரை வந்தான். வந்த வேகத்தில் தான் அணிந்திருந்த ஆடைகளை ஒரு நொடியில் களைந்து ஆணியில் மாட்டிவிட்டு அலமாரிக்குப் பக்கத்தில் வைத்திருந்த பெட்டியைத் திறந்து தன் புதுச்சட்டைகளை எடுத்து அணியத் தொடங்கினான்.

“இப்ப கெளம்பனாத்தான் நாம ஒரு மணிக்குள்ளயாவது போய் சேரமுடியும் பாலா. காஞ்சிபுரம் என்ன பக்கத்துலயா இருக்குது? நூத்தி இருவது கிலோமீட்டர் போவணுமே” என்றபடி கண்ணாடியைப் பார்த்து தலைசீவிக் கொண்டான். “என்ன இது, ஏதோ ஒரு வாசன புதுசா இருக்குது ஒன் ரூம்ல” என்று கேட்டான்.

“வாசனயா, எனக்கு ஒன்னும் தெரியலயே. பாச்சா உண்ட வாசனயா இருக்கும். இப்பதான் அலமாரிய தெறந்தேன்” என்று பதில் சொன்னான் சிவபாலன். ”அந்த வாசன எனக்குத் தெரியாதா? இது என்னமோ புதுசா ஒரு வாசன” என்று மறுபடியும் மூச்சை இழுத்து வாசனையை நுகர்ந்தான்

“சரி, வாசன இருக்கட்டும், இந்த ரெண்டுல எந்த சட்டைய போட்டுக்கலாம்? கொஞ்சம் பாத்து சொல்லு” என்று கேட்டான் சிவபாலன்.

தம்பிதுரை திரும்பி கட்டில்மேல் வைக்கப்பட்டிருந்த இரண்டு சட்டைகளையும் ஒருகணம் பார்த்தான். மறுகணமே “அந்த கட்டம் போட்ட சட்டைய போட்டுக்கடா” என்றான்.

”அப்ப இது வேணாமா?” சிவபாலன் சந்தனநிறச் சட்டையைத் தொட்டுக் காட்டினான். அவன் குரலில் சற்றே ஏமாற்றம் தெரிந்தது. “ஒனக்கு இருவத்திநாலு மணி நேரமும் ஸ்கூல் வாத்தியாருங்கற நெனப்புதானா? பொண்ணுக்கு கல்யாணப்பொடவ எடுக்கப் போறம்டா. அத ஞாபகத்துல வச்சிக்க. பாத்தாவே பளிச்சினு தெரியறமாதிரி ஒரு மாப்ள எடுப்பா இருக்கவேணாமா?” என்றபடி சிவபாலனின் தோளைத் தட்டினான் தம்பிதுரை. பெட்டியிலிருந்து மணிபர்சை எடுத்துக்கொண்டு மீண்டுமொரு முறை கண்ணாடியைப் பார்த்து தலைமுடியைப் படியவைத்தபடியே வெளியே சென்றான்.

சட்டையை அணிந்து பெல்பாட்டத்துக்குள் இன் செய்துகொண்டு பெல்ட் போட்டபடி தன்னைத்தானே ஒருமுறை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டான் சிவபாலன். தலையணைக்குப் பக்கத்தில் இஸ்திரி போட்டு மடித்துவைக்கப்பட்டிருந்த வெள்ளைக் கைக்குட்டையை எடுத்து கன்னத்தில் தெரிந்த பவுடர் பூச்சைத் துடைத்துக்கொண்டு வெளியே நடந்தான்.

திண்ணையில் முருகேசன் மாமாவும் தேவனாதன் பெரியப்பாவும் தினத்தந்தியைப் பிரித்து வைத்து படித்துக்கொண்டிருந்தார்கள். சொக்கலிங்கம் சித்தப்பாவும் நல்லசிவம் மாமாவும் கரும்புவெட்டுக்கு ஆள் கிடைக்காத குறையைப் பேசித் தணித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் குடித்துவிட்டு வைத்த டீத்தம்ளர்களை சித்தி பெண் ரேவதி எடுத்துக்கொண்டு சென்றாள். வண்டியைத் துடைத்துக்கொண்டிருந்த டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

“என்ன மச்சான். பேப்பர்ல என்ன போட்டிருக்கான். ஒரு எழுத்து உடாம படிச்சிட்டிருக்கிங்க?”

“இந்த ஜனதா ஆளுங்க கெடச்ச வாய்ப்ப கோட்ட உட்டுடுவானுங்க போல. சரியான மடப்பசங்க. நான் பெரிய ஆளு நீ பெரிய ஆளுனு இவனுங்களுக்குள்ளயே ஓயாத சண்ட. போற போக்குல அந்த பொம்பளதான் மறுபடியும் ஆட்சிக்கு வரும் போல்ருக்கு.”

“நாடா இருந்தாலும் சரி, ஊடா இருந்தாலும் சரி. ஒத்துமயா இருந்தாதான் வாழமுடியும் மச்சான். இல்லைன்னா காலம் முழுக்க கண்ண கசக்கிகினே இருக்கவேண்டிதுதான்.”

அம்மாவின் முகம் தெரிந்ததும் பேச்சு நின்றது. “இங்கயே சாமி கும்புட்டுட்டு கெளம்புவமா, இல்ல போற வழியில மாரியாத்தா கோயில்ல கும்புட்டுக்கலாமா?” என்று வாசக்கால் பக்கமாக நின்று திண்ணையில் இருந்தவர்களைப் பார்த்து பொதுவாகக் கேட்டாள். “இங்கயே கும்புட்டுக்கலாம்மா வள்ளி. கோயில் வாசல்ல எல்லாரும் ஒரு தரம் மறுபடியும் எறங்கி ஏறணும்ன்னா நேரம்தான் வீணாவும்” என்றார் தேவனாதன் பெரியப்பா.

வேப்பமரத்தின் நிழலில் சாக்கு விரித்து உட்கார்ந்து அரிவாள்மனையில் புளி ஆய்ந்துகொண்டிருந்தாள் ஆயா. பத்து பன்னிரண்டு கோழிகள் அவளைச் சுற்றி நடமாடிக்கொண்டிருந்தன. “ஆயா, நீயும் வா ஆயா, வண்டிலதான போறம். அங்க வந்தா நீயும் பொண்ண பாத்தமாதிரி இருக்குமில்ல” என்றான் சிவபாலன்.

“அதான் போட்டாவுலயே பாத்தனே. அப்பறம் என்ன கண்ணு? நம்ம ஊட்டுக்கு வரப்போற பொண்ணுதான? அப்ப பாத்துக்கறன்” என்று வெற்றிலைக்கறையேறிய பற்களைக் காட்டிச் சிரித்தாள் ஆயா. ஆயாவுக்கு அருகில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்த தாத்தா “நாயப்படி பாத்தா கல்யாணப்பொடவ எடுக்கற வேலையில ஒனக்கு பங்கே கெடயாது தெரியுமா? என்னமோ நம்ம செல்லப்புள்ளனு ஒன்ன கூப்ட்டும் போறாங்க” என்றார்.

“போ தாத்தா, ஒனக்கு ஒன்னுமே தெரில. இப்ப காலம் எவ்ளோ மாறி போச்சி”

“ஒங்க ஆயாவ தாலி கட்டற அன்னிக்குத்தான் நான் அந்த காலத்துல பாத்தன் தெரிமா. பொண்ணு பாக்கறதுக்கு கூட எங்கப்பா என்ன கூப்ட்டும் போவல. புடிக்குதா புடிக்கலயானு கூட கேக்கலை.”

“அதெல்லாம் அந்தக் காலம். இப்பலாம் பொண்ணும் புள்ளையும் சம்மதம்னு சொன்னாதான் கல்யாணம்.”

தம்பிதுரையும் வண்டி டிரைவரும் சேர்ந்து தோட்டத்திலிருந்து கீற்றுகளைக் கொண்டுவந்து வேனுக்குள் ஒன்றின்மீது ஒன்றாகப் பரப்பிவைத்து அதன்மீது சமுக்காளங்களை விரித்தார்கள். டிரைவர் ஒரு படிக்கட்டுப் பலகையை எடுத்து கால்வைத்து ஏறுவதற்கு வசதியாக வண்டியோடு ஒட்டியபடி வைத்தார்.

”ஆம்பளயாளுங்க எல்லாம் ஒவ்வொருத்தவங்களா வந்து ஏறுங்க. பொம்பளைங்க சாமி கும்புட்டுட்டு வருவாங்க. வாங்க.”

“அப்ப நாங்க?” என்று படிக்கட்டுக்கு அருகில் வந்து சின்னப் பிள்ளைகள் அனைவரும் நின்றார்கள்.

“நீங்க இல்ல செல்லங்களா. பெரியவங்க மட்டும்தான்” என்றான் தம்பிதுரை. அவர்கள் முகம் உடனே வாடிவிட்டன. வேகமாக அவர்கள் அருகில் சென்று “ஆத்துத் திருழாக்கு அன்னிக்கு போனமே, அதுமாதிரினு நெனச்சிட்டிங்களா?” என்று கேட்டான் சிவபாலன். அவர்கள் ஆமாம் என்பதுபோல தலையசைத்தார்கள்.

“வண்டி இப்ப திருழாவுக்கு போகல. கடைக்கு போவுது. இப்ப முழு பரீச்ச லீவு வருமில்லல. அப்ப நாம எல்லாம் சேந்து மெட்ராஸ்க்கு போவலாம். சரியா? அங்க பீச்சு, ஜூ, கலங்கரைவிளக்கம்லாம் இருக்குது”

“பெரிய பீச்சா? கடலூரு பீச்சவிட ரொம்ப பெரிசா இருக்குமா?”

“ஆமாம். ரொம்ப நீளமா இருக்கும்.”

”சரி, கடயிலேந்து வரும்போது எங்களுக்கு ஏதாச்சிம் வாங்கியாறிங்களா?”

“என்ன வேணும் ஒனக்கு? காராசேவு வாங்கியாரட்டுமா?”

“லட்டும் காராசேவும்.”

“அண்ணா, எனக்கு பூந்தி.”

சித்தப்பா, பெரியப்பா, மாமாக்கள் அனைவரும் ஒவ்வொருவராக வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தார்கள்.

“நல்லா மெத்மெத்துனு செஞ்சி வச்சிட்டான் நம்ம தொர. ஆளு தெறமசாலிப்பா.”

“ஏ மச்சான். அவனும் வளந்து நிக்கறானில்ல. அவனுக்கும் ஒரு பொண்ண பாருங்க. சீக்கிரமா கல்யாணத்த பண்ணிடுவம்…”

“நானா பண்ணமாட்டறன்? சுத்துவழி சொந்தத்திலயே மூனு பொண்ணுங்க இருக்குது. இவன் யார காட்டனாலும் சரி. அப்பவே முடிச்சிடலாம். அவுங்க குடுக்க தயாராதான் இருக்கறாங்க. கைக்கு ஒரு வேல அமையட்டும், அப்பறம் பாக்கலாம்னு இவன்தான் இழுக்கறான்…”

“அவன் சொல்றதும் ஞாயம்தான? கல்யாணத்துக்கப்பறம் பொண்டாட்டிய வச்சிகினு ஒங்கிட்ட வந்து நூற குடு எரநூற குடுன்னு கேக்க முடியுமா? ஒருநாளு ரெண்டுநாளு குடுப்ப. அப்பறம் அலுப்புசலிப்புல எதயாவது சொல்வ? அதெல்லாம் தேவையா? சொந்த சம்பாத்தியம்னு ஒன்னு இருந்தா, அவனுக்கு நல்லதுதான?”

“நான் ஒன்னும் தப்பு சொல்லலியே. சர்க்காரு வேல கெடச்ச பிறகுதான் கல்யாணம் செஞ்சிக்குவன்னு ஒத்தக் கால்ல நிக்கறான் அவன். நான் என்ன செய்யமுடியும் சொல்லு.?”

“நம்ம சிவபாலனவிட தம்பிதொர பெரியவனில்ல?”

“ஆமா. ஒரு வருசம் மூத்தவன்.”

“அந்த ரயில்வே வேல என்னாச்சி? போன மாசம் இன்டர்வ்யூ இருக்குதுனு மெட்ராஸ்க்கு போய்வந்தான?”

“அந்த முடிவு இன்னும் தெரில. எல்லாம் கூடி வந்தா அடுத்த தைக்குள்ள முடிச்சிடலாம்.”

அம்மா, சித்தி, பெரியம்மா, அத்தை அனைவரும் கதவைப் பூட்டிக்கொண்டு தாத்தாவிடமும் ஆயாவிடமும் சொல்லிக்கொண்டு வந்து வண்டியில் ஏறினார்கள்.

பிரித்திருந்த தடுப்புப்பலகையை நிமிர்த்தி கொண்டியில் பொருத்தி சங்கிலி போட்டுக் கட்டிவிட்டு படிக்கட்டுப் பலகையை எடுத்து வண்டிக்குள் ஓரமாக வைத்தான் சிவபாலன்.

“நானும் சித்தப்பாவும் முன்னால ஒக்காந்துக்கறம். நீ பின்னால எடம் பாத்து உக்காதுக்கடா.”

சிவபாலன் வேப்பரமத்தடிக்குச் சென்றான். ஆயா, தாத்தாவிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான். தடுப்புப்பலகையில் விளிம்பில் கால்வைத்து மேலே தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டு தாவி வண்டிக்குள் ஏறினான். சின்னப்பிள்ளைகள் அனைவரும் அவனைப் பார்த்து கையசைத்தார்கள்.

“ஏன் பாலா, மதியச் சாப்பாடு எங்க?” என்று கேட்டார் முருகேசன் மாமா. எல்லோரும் அதைக் கேட்டு சிரித்தார்கள்.

”இன்னம் தெருவயே தாண்டல. அதுக்குள்ள மாமனுக்கு மதிய சாப்பாட்டு ஞாபகம் வந்துட்டுது.”

மீண்டும் சிரிப்பு அதிர்ந்தது.

“நடுவுல எதாவது காரம் சாரமா உண்டானு தெரிஞ்சிக்கறதுக்காக கேட்டன்?” மறுபடியும் தொடங்கினார் முருகேசன் மாமா. அதைக் கேட்டதும் சிவகாமி அத்தைக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ”ஒரு ஈசிபேசி இல்லாம பேசுது பாரு. ஆளுதான் கெடாவாட்டம் வளந்திருக்குது. புத்தி வளரலை” என்று முணுமுணுத்தாள். அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து சாலையின் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.

“ம். ஏரிபட்டுல பச்சமொளகா சட்டினியும் ஒரு பாட்டிலும் குடுக்கறாங்களாம். எறங்கிக்கலாமா?”

“நாம போற வேல என்ன, நீங்க பேசற பேச்சு என்ன? வேத்து மனுசங்க முன்னால நமக்கு ஒரு மரியாத வேணாமா? நேரம் காலம் தெரியாம எல்லா நேரத்துலயும் ஒரே பேச்சுதானா?”

”நான் வந்தா மரியாதயா இருக்காதுன்னா, என்ன இங்கயே எறக்கி உட்டுடுங்க.”

“ஐயய்ய. நீங்க ரெண்டு பேரும் இப்பிடி மாறிமாறி பேசிகிட்டா என்ன அர்த்தம்? பக்கத்துல பெரியவங்க சின்னவங்க இருக்காங்கங்கற நெனப்பு வேணாமா?” அம்மா பொதுவில் சத்தம் போட்டதும் பேச்சு நின்றது. சித்தி பேச்சை மாற்றும் விதமாக சிவபாலனைப் பார்த்து “பொண்ணு ஊட்டுக்காரங்களும் இந்நேரத்துக்கு கெளம்பியிருப்பாங்க இல்ல?” என்று கேட்டாள்.

“பன்னெண்டு மணிக்குலாம் பஸ் ஸ்டேன்ட்கிட்ட வந்துடுவம்ன்னு சொன்னாங்க சித்தி.”

“அப்ப, அவுங்க வந்து மொத ஆளா நிப்பாங்கன்னு சொல்லு.”

“நாமளும் போயிருக்கலாம். ஆனா நாம சொல்லிவச்ச வண்டி இப்பதான வந்தது? அதுல நம்ம தப்பு ஒன்னும் இல்லயே.”

சித்தி நிறுத்தியதும் கல்பனா அத்தை “ஏன் பாலா, இங்க சிறுவந்தாடுதான நமக்கு பக்கம். பட்டுப்பொடவய இங்கயே எடுத்திருக்கலாமே. எதுக்கு காஞ்சீபுரம் வரைக்கும் போவணும்?” என்று தொடங்கினாள். “போவ வர ஒரு நாளு ஆயிடுமே”

“காஞ்சிபுரம் பட்டுன்னு சொன்னா ஒரு தனி கெளரவம்தான அத்த?”

“எங்களுக்குலாம் சிறுவந்தாட்டுலதான் எடுத்தாங்க.”

கூட்டுரோடைத் தாண்டும்போது வண்டியை நிறுத்தி எல்லோரும் பூ வாங்கி வைத்துக்கொண்டார்கள். “பாப்பா, ரெண்டு ரூபாய்க்கி தனியா மல்லிப்பூ கட்டிக் குடும்மா” என்று கேட்டு தனியாக வாங்கி வைத்துக்கொண்டாள் அம்மா. “அந்த ரஞ்சினி புள்ளைக்கு குடுத்தா சந்தோஷப்படும் இல்ல. ரஞ்சினிதானடா அந்த புள்ள பேரு?” என்று சிவபாலனைப் பார்த்தாள். சிவபாலன் வெட்கத்தில் முகம்சிவக்க “ம்” என்றபடி குனிந்துகொண்டான்.

தம்பிதுரை பூவுக்கான பணத்தை எடுத்துக் கொடுத்ததும் வண்டி புறப்பட்டது.

“அண்ணி, பாலா கல்யாணம் முடிஞ்ச கையோட ஐயனாருக்கு ஒரு கெடாவ வெட்டி பொங்கல் வைக்கணும்ண்ணி.”

“குடும்பத்தோட போயி வச்சிட்டு வருவம். அதுக்கு முன்னால பத்திரிக அடிச்சி முடிச்சதும் மொத பத்திரிகய எடுத்தும் போயி அய்னாரு கால்ல வச்சி படச்சிட்டு வரணும்.”

“அப்ப, அதுக்கும் ஒரு கெடா வெட்டுவமா?”

“கெடாதான? வெட்டிடுவம்.”

“நீங்க கோயிலுக்கு போற தேதி என்னன்னு மட்டும் எங்கிட்ட சொல்லுங்க. கெடா செலவ நான் ஏத்துக்கறேன். பொங்கல் வைக்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலயே வீட்டுல கொண்டாந்து எறக்கிடுவன். கண்டறகோட்ட கெடா. சும்மா சிங்கம்மாதிரி இருக்கும்.”

”ஆட்டுக்காரன்கிட்ட சும்மா ஒரு வாய்வார்த்தயா சொல்லி வைங்க நீங்க. சித்திரமாசத்துலதான் தேதி குறிச்சி குடுத்திருக்காரு ஐயரு. நடுவுல நாள் நெறயா கெடயாது. பத்திரிகய அடிச்சி முடிச்சதும் போய் வந்துடலாம்.”

“எதுக்கு அவ்ளோ நெருக்கடியில சித்திரயிலயே வச்சிட்டிங்க. கொஞ்சம் நாள் கழிச்சி வைகாசி ஆனியில வச்சிருக்கலாமே.”

“மண்டபம் கெடக்கணுமே. இந்த சித்திரையிலதான் மண்டபம் கெடைச்சிது. இல்லன்னா ஆவணிக்கு தள்ளி போயிடும். சித்திரைன்னா புள்ளைங்களுக்கு லீவ் நாளில்லயா? ஊட்டோடயே இருக்கலாம். நிம்மதியா நாலு எடம் போய் வரலாம். அக்கடானு ஊட்டுல படுத்துங்கெடக்கலாம். வேணும்ன்னா கோயில் கொளத்துக்கும் போய்வரலாம். எல்லாத்துக்கும் வசதியா இருக்கும்.”

“மாப்பளைக்கு பொண்ணு ஊட்டுல புல்லட்டு கில்லட்டுனு பெரிய வண்டி ஏதாச்சிம் குடுக்கறாங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் கெடயாது. பாலா அதெல்லாம் எதயும் கேக்க கூடாதுனு கறாரா சொல்லிட்டான்.”

“அப்படியா பாலா? என்ன பாலா இது ? உலகம் தெரியாத பச்ச புள்ளயா இருக்கியேப்பா. ஊர்ல பத்து ரூபா சொந்தமா சம்பாதிக்க தெரியாதவனெல்லாம் கூட நான் பெரிய ரியல் எஸ்டேட், நான் பெரிய பைனாசியர்னு பொய்ய சொல்லிட்டு பொண்ணு ஊட்டுக் காரங்ககிட்டேர்ந்து புடுங்கிட்டு ஓடறானுங்க. நீ ஒரு ஸ்கூல் டீச்சர். சர்க்கார் வேல. மூச்சு இருக்கற காலம் வரைக்கும் உனக்கு சம்பளம் உண்டு. பென்ஷன் உண்டு. நீ எதயும் கேக்கலைன்னா எப்பிடி?”

சிவபாலனுக்கு எரிச்சலாக இருந்தது. ”வரதட்சணை வாங்கறதும் குற்றம், குடுக்கறதும் குற்றம். அப்படித்தான் சட்டம் சொல்லுது.”

”தட்சணயின்னா என்ன நினைச்சிட்ட நீ? அது ஒரு அன்பளிப்பு. ஒரு காணிக்கை. பொண்ண காலம் முழுக்க வச்சி காப்பாத்தற பையனுக்கு பொண்ணு ஊட்டுக்காரங்க மனப்பூர்வமா குடுக்கற அன்பளிப்பு.”

“அதெல்லாம் நாமாவே நினைச்சிக்கற கற்பனை. இப்ப அது சட்டப்படி குற்றம்.”

வண்டி வேகமாகச் சென்றது. திண்டிவனத்தைத் தாண்டியதும் ஒரு இடத்தில் மட்டும் தேநீர் அருந்துவதற்காக பத்து நிமிடம் நிறுத்தினார்கள். அதற்குப் பிறகு இறக்கை முளைத்ததுபோல பறந்து சென்றது வண்டி.

சிவபாலன் மனமெல்லாம் காஞ்சிபுரத்திலேயே இருந்தது. ரஞ்சனி வந்த வண்டி வந்திருக்குமா, காஞ்சிபுரத்தில் இறங்கியதும் அவளால் தன்னைக் கண்டுபிடித்துவிட முடியுமா, நெருங்கி வந்து பேசுவதற்கு நேரமிருக்குமா என்றெல்லாம் நினைவுகள் அலைபாய்ந்தன.

பெரியப்பாவிடமிருந்து தினத்தந்தியை வாங்கி நாலாக மடித்துவைத்துக்கொண்டு ஒவ்வொரு செய்தியாக சத்தம் போட்டு படித்தாள் அத்தை.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டான்டில் இறங்கும்போது மணி ஒன்றரையாகிவிட்டது. பெண்வீட்டு வண்டி கண்பார்வையில் படும்படியே நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்திலேயே சென்று வண்டியை நிறுத்தவைத்தான் தம்பிதுரை. வேகமாக இறங்கி அங்கிருந்தவர்களையெல்லாம் பார்த்து கைகுவித்து வணங்கினான். ரஞ்சினியின் முகம் சிவபாலனைத் தேடியது.

“மாப்பள பின்னால வெயில் படாம உக்காந்து வராரு” தம்பிதுரையின் சொற்களைக் கேட்டு வெட்கம் கொண்டு வேகமாக நகர்ந்து சென்று தன் வண்டியோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் ரஞ்சினி.

வண்டியிலிருந்து கடைசியாக இறங்கி உடைகளை சீர்படுத்தியபடியே வந்த சிவபாலன் அவளை நிமிர்ந்து பார்க்கும் விதமாக தொண்டையைச் செருமினான். அவள் திரும்பி அவனைப் பார்த்து திகைத்து, பிறகு மகிழ்ந்து புன்னகைத்தாள். ஆகாய நீல நிறத்தில் அவள் புடவை உடுத்தியிருந்தாள். வெட்கத்தில் அவள் முகம் சிவப்பது அழகாக இருந்தது. அவன் அவசரமாக அவளைப் பார்த்து “ரொம்ப அழகா இருக்குது” என்று சொன்னான். அவள் சிறுநகை தேங்கிய உதடுகளுடன் வெட்கத்தில் முகம் சிவக்க “ம்?” என்று கண்களைச் சுருக்கியபடி கேட்டாள். “புடவை, புடவை” என்று பதில் சொன்னான். பிறகு அவனாகவே “எட்டு மணிக்கே வரேன்னு சொன்ன வண்டிக்காரு பத்து மணிக்குதான் வந்தாரு. அதான் லேட்” என்று சொன்னான். அதற்குள் “பாலா” என்ற தம்பிதுரையின் குரல் கேட்டு முன்னால் ஓடினான்.

“பாலா, வந்த வேலய மொதல்ல முடிக்கலாம்ன்னு அம்மா சொல்றாங்க. மாமா, பெரிப்பாவுக்கெல்லாம் பசிக்குதான். நான் ஆம்பள ஆளுங்களயெல்லாம் அழச்சிகிட்டு ஓட்டலுக்கு போறன். நீ பொம்பளயாளுங்கள அழச்சிகிட்டு பொடவைக்கடைக்குப் போ. சரியா?”

”அதோ அந்த மகாலட்சுமி பட்டு சென்டருக்கு போகலாம். ரஞ்சினி அக்காவுக்கு கூட அங்கதான் எடுத்தம். ரொம்ப ராசியான கட. வெலயும் நமக்கு கட்டுப்படியாவறமாதிரி இருக்கும்” ரஞ்சனியின் அப்பா சிவபாலனின் அம்மாவிடம் சொன்னார். ”அங்கயே போவலாம்ங்க” என்றார் அம்மா.

நடந்துபோகும்போதே அம்மா தன் பையிலிருந்த பூ பொட்டலத்தை எடுத்து ரஞ்சினியிடம் கொடுத்தார். “வச்சிக்க கண்ணு” என்றார். ரஞ்சினி பொட்டலத்தைப் பிரித்து அதிலிருந்த மல்லிகைச்சரத்தை தன் தலையில் அப்போதே சூடியபடி அம்மாவிடம் “தேங்க்ஸ்மா” என்றாள். அவள் விழிகள் சிவபாலனைத் தேடின. சிவபாலன் எல்லோருக்கும் கடைசி ஆளாக வந்துகொண்டிருந்தான். கடைக்குள் செல்வதற்கு முன்னால் அவள் அவனைப் பார்த்துவிட்டாள். அவனைப் பார்த்தபடி பின்னலை முன்பக்கமாக எடுத்து மீண்டும் பின்பக்கமாகப் போட்டாள். அதற்குள் அவன் அந்தப் பூச்சரத்தைப் பார்த்துவிட்டான். கண்களை ஒருகணம் மூடி புன்னகையுடன் தலையை மகிழ்ச்சியுடன் அசைத்தான். அதற்குப் பிறகு அவள் வேகமாக அடிவைத்து துள்ளலோடு சென்று பெண்கள் வரிசைக்குள் சேர்ந்துகொண்டாள்.

இருவர் பக்கமிருந்தும் பத்து பெண்கள் இருந்தார்கள். கடைச்சிப்பந்தி அவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்து உள்ளே அழைத்துச் சென்றான்.

“சொல்லுங்கம்மா, என்ன நெறத்துல பாக்கறிங்க, என்ன வெலையில பாக்கறிங்க. நம்மகிட்ட ரெண்டாயிரத்துலேருந்து ஒரு லட்சம் வரைக்கும் வகைவகையா புடவைங்க இருக்குது.”

அடுக்கிலிருந்து சில புடவைகளை எடுத்து மேசைமீது வைத்தார் சிப்பந்தி. ஒவ்வொரு புடவையின் நிறமும் சரிகைகளும் பளிச்சென்றிருந்தன.

அம்மா திரும்பி “கண்ணு, இங்க வாம்மா” என்று ரஞ்சினியை அழைத்தார். ரஞ்சினி திகைத்து நாக்கைக் கடித்தபடி அம்மாவின் அருகில் நின்றாள். “இதான் பொண்ணு. எங்க ஊட்டுக்கு வரப்போற பொண்ணு. அதுக்கு புடிச்ச நெறத்துல, புடிச்ச டிசைன்ல அவசரமில்லாம நிதானமா காட்டுங்க.”

“சரிம்மா, ரேட்டு….?”

“ஏழாயிரம் எட்டாயிரம் ஆனாலும் பரவாயில்ல. பொண்ணுக்கு புடிச்சிருக்கணும். அதான் முக்கியம்” அம்மா தொடர்ந்து ரஞ்சினியிடம் “நீ அவசரமில்லாம பாத்து சொல்லு கண்ணு” என்றபடி அவள் தோளைத் தொட்டு அழுத்தினார். பக்கவாட்டில் திரும்புவதுபோல திரும்பிய ரஞ்சினி சிவபாலனைப் பார்த்தாள். அவள் கண்களில் நீர்க்கோடுகள் தெரிந்தன.

அதற்குள் அத்தைகள் “அண்ணி” என்று அவசரமாக அம்மாவைத் தடுக்க முயற்சி செய்தார்கள். ”அந்தக் காலத்துல அறநூறு எழுநூறு ரூபாய்லதான் எங்களுக்கு பொடவ எடுத்துக் குடுத்தாங்க” என்று முணுமுணுத்தார்கள். சித்தியும் “என்னக்கா இப்பிடி ஒரேடியா எட்டாயிரம்னு சொல்லிட்டிங்க?” என்று காதோரமாக வந்து சொன்னாள். நாக்கைத் தட்டி “த்ச்” என்ற ஒரே சத்தத்தால் அவர்களை அமைதிப்படுத்தினார் அம்மா. அடங்கிய குரலில் “அது என்ன நம்மளாட்டம் ஊட்லயே இருக்கற பொண்ணாடி? டீச்சர் வேல பாக்கற பொண்ணு. அதுக்கேத்த மாதிரிதான துணிமணியும் இருக்கணும்” என்றாள்.

கடைக்காரர் ரஞ்சினியிடம் “எந்த மாதிரி நெறம் வேணும், சொல்லுங்க” என்று கேட்டார். ரஞ்சினி அடுக்குகளில் வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற பட்டுப்புடவைகள் மீது பார்வையைப் படரவிட்ட பிறகு மெதுவாக “மயில்கழுத்து நிறம்” என்று பதில் சொன்னாள்.

கடைக்காரர் ஒரே நிறத்தில் வெவ்வேறு டிசைன்களில் உள்ள புடவைகளை எடுத்து மேசைமீது பிரித்துவைத்தார். அனைவரும் ஒவ்வொரு புடவையையும் தொட்டும் தடவியும் பார்த்தார்கள். ரஞ்சினியின் அம்மா ஒரு புடவையை எடுத்து ரஞ்சினியின் தோள்மீது வைத்துப் பார்த்தார்.

கடைக்கு உள்பக்கமாகவே படியேறிச் செல்லக்கூடிய ஒரு மாடிப்பகுதி இருந்தது. முதலாளி கண்ணைக் காட்டியதும் ஒரு வேலைகாரர் மாடிக்குச் சென்று மயில்கழுத்துப் புடவைகள் மட்டுமே நிறைந்த ஒரு பெட்டியை எடுத்துவந்து மேசை மீது வைத்தார். சிப்பந்தி எல்லாப் புடவைகளையும் ஒவ்வொன்றாக வெளியே எடுத்து பிரித்துவைத்தார்.

மோர் நிறைந்த தம்ளர்கள் அடுக்கப்பட்ட ஒரு பெரிய தட்டை எடுத்துவந்த ஒரு சிப்பந்தி அம்மாவின் முன்னால் நின்று “எடுத்துக்குங்க மா” என்று சொன்னார். “எதுக்குங்க இதெல்லாம்?” என்று தயங்கினார் அம்மா.

“எடுத்துக்குங்கம்மா. நல்ல வெயில் நேரம். தண்ணிக்கு பதிலா மோர். அவ்ளோதான். ஒங்க வீடுன்னு நெனச்சி எடுத்துக்குங்க.”

அம்மா ஒரு தம்ளரை எடுத்து ரஞ்சினியிடம் கொடுத்தார். பிறகு தானும் ஒரு தம்ளரை எடுத்துக்கொண்டார். ரஞ்சினி கண்களைச் சுழற்றி சிவபாலன் நின்றிருக்கும் இடத்தைப் பார்த்தாள். ”குடி குடி” என்றபடி சைகை காட்டினான் அவன். அவள் ஒரே ஒரு மிடறு அருந்திவிட்டு நுனி நாக்கால் உதடுகளைத் தடவினாள். அத்தையின் பக்கம் அம்மா திரும்பிய ஒரு கணத்தில் மின்னல்போலத் திரும்பி மேசைமீது தேர்ந்தெடுத்து ஒதுக்கி வைத்திருந்த புடவைகளின் மீது விரல்வைத்து “ஓகேவா?” என்பதுபோல கண்களால் கேட்டாள். அவற்றின் நிறம் உண்மையிலேயே மயிலின் கழுத்து நிறத்தில் இருந்தது. சரிகை வேலைகளும் அற்புதமாக இருந்தன. நன்றாக இருப்பதாக சிவபாலனும் கண்களாலேயே பதில் சொன்னான்.

மோர்த்தம்ளர்களை சிப்பந்தி வாங்கிச் சென்றார். சில கணங்களுக்குப் பிறகு ரஞ்சினி அங்கிருந்த புடவைகளைக் காட்டி “இந்த அஞ்சுமே ஓகேமா. இதுல ஒன்ன பெரியவங்க நீங்க பாத்து சொல்லுங்க” என்றாள். “பாருடி என் தங்கத்த. சட்டுபுட்டுனு வேலய முடிச்சிட்டுது. அவ அவ ஊருல ஒரு பொடவய எடுக்க ஒரு நாள்பூரா பாத்துகினே இருக்கும். ஜோசிய அட்டைய கிளி எடுக்கறமாதிரி கண்ண மூடி கண்ண தெறக்கறதுக்குள்ள வேலய முடிச்சிட்டுது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அம்மா ரஞ்சினியின் அம்மாவை நோக்கி “இங்க வாங்கம்மா. இந்த அஞ்சில ரஞ்சினிக்கு எது ரொம்ப பொருத்தமா இருக்கும்? நீங்களே பாத்து சொல்லுங்க” என்று கேட்டார். அந்த அம்மாவும் அவரோடு வந்திருந்தவர்களும் ஒருசேரக் கூடி பேசி, ஐந்தை இரண்டாகக் குறைத்தார்கள். பிறகு ரஞ்சினியிடம் திரும்பி “அதுவா, இதுவா, நீயே சொல்லும்மா ரஞ்சினி” என்று கொடுத்துவிட்டார்கள்.

ரஞ்சினியின் கண்கள் மீண்டும் சிவபாலனின் திசையில் திரும்பின. சொல் என்பதுபோல புருவத்தை உயர்த்தினாள். யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக விரலை காதோரமாக நகர்த்திச் சென்று கூந்தலை ஒதுக்கினாள். வலதுகையின் கட்டைவிரலை மட்டும் உயர்த்தி ஓகே என்பதன் அடையாளமாக தலையை மேலும் கீழும் அசைத்தான். அவள் அதை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் அந்தப்புடவையை மட்டும் கையிலேந்தி “இதுவா?” என்பது போல புருவத்தை உயர்த்திக் கேட்டாள். உதடுகளில் புன்முறுவலைத் தேக்கி அவன் விழி சுருங்க அவளைப் பார்த்தான்.

“செலக்‌ஷன் முடிஞ்சிதாடா?” என்றபடி தம்பிதுரை உள்ளே நுழைந்து சிவபாலனின் பக்கத்தில் வந்து நின்றான். அவனைத் தொடர்ந்து ஆண்கள் கூட்டமும் நுழைந்தது. அம்மாவுக்கு அருகில் சென்று நின்றார் அப்பா. “இதத்தான் செலக்ட் பண்ணியிருக்கம். நீங்களும் பாருங்க” என்று அம்மா காட்டினார். “எனக்கு என்னம்மா தெரியும் புடவையைப் பத்தி. நீங்க எத முடிவு பண்றீங்களோ, அதுக்கு நான் பணத்த கட்டுவன்” என்றார் அப்பா.

பணத்தைச் செலுத்தியதும் கடைக்காரர் பட்டுப்புடவையை ஒரு பையில் போட்டு ஒரு தட்டில் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ எல்லாவற்றையும் வைத்துக் கொடுத்தார்.

“எதுக்குங்க இதெல்லாம்?”

“காலம் காலமா குடுக்கறதுதான்மா. இதெல்லாம் ஒரு ஐதீகம். திடீர்னு விட்டுடமுடியாது.”

“ஜாக்கெட் தனியா எடுக்கணுமா?”

“தேவையில்லைமா, புடவை கூடவே இருக்குது. டைலர்கிட்ட குடுத்திங்கன்னா அவுங்க பிரிச்சி தச்சி குடுத்துடுவாங்க.”

கடையை விட்டு வெளியே வந்தார்கள்.

”பாலா, வெயிலா இருக்குது. நான் எல்லாரயும் வண்டிகிட்ட கூட்டிட்டு போறன். நீங்க போய் சாப்ட்டுட்டு வாங்க. அதோ அங்க போங்க. கிரிஜா பவன். அங்க நல்லா இருக்குது.”

கிரிஜா பவனுக்குள் சென்றார்கள். அந்த நேரத்திலும் கூட்டம் வழிந்தது. ஒருபக்கம் கோவில்களுக்கு வரும் கூட்டம். இன்னொரு பக்கம் பட்டுப்புடவைகள் எடுக்க வரும் கூட்டம். சிவபாலனும் அவன் வீட்டுப் பெண்களும் ஒரு வரிசையில் இரு மேசைகளில் உட்கார்ந்தார்கள். சுவரோரம் உள்ள மற்றொரு வரிசையில் ரஞ்சினியும் அவள் வீட்டுப் பெண்களும் சென்று அமர்ந்தார்கள்.

தொலைவான வரிசையில் அமர்ந்திருந்த ரஞ்சினியைப் பார்த்தான் அவன். ஒரு துளி ஈரம் பட்டுத் தெறித்ததுபோல அவளுடைய அழகிய கண்கள் ஒருகணம் அவனைத் தொட்டுச் சென்றன. அவள் குனிந்து இலையைப் பார்த்து சிரித்துக்கொண்டபோது அவள் கன்னத்தின் கீழ்த்தசையில் ஒரு கோடு விழுந்தது. அங்கே மிளகென உருண்ட ஒரு மச்சம் இருப்பதுபோலத் தோன்றியது. அவன் பார்வையைத் திருப்பி இலையைப் பார்த்தான்.

என்ன வைத்தார்கள், என்ன சாப்பிட்டோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. ஒருகணம் இலையைப் பார்ப்பதும் அடுத்த கணம் கண்களைத் திருப்பி ரஞ்சினியின் திசையில் பார்ப்பதுமாக நேரம் கரைந்தபடி இருந்தது.

“என்னடா இது, கோழி கெளறர மாதிரி சாப்படற? ஒழுங்கா எடுத்து சாப்புடு.”

அம்மா அதட்டிய பிறகு ஒழுங்காக நாலு வாய் எடுத்துச் சாப்பிட்டான். அதற்கு மேல் முடியவில்லை. மீண்டும் விரல்களால் அளையத் தொடங்கினான். அக்கணத்தில்தான் ரஞ்சினி எழுந்து கைகழுவும் இடத்துக்குச் செல்வதைப் பார்த்தான். “போதும்மா, நீங்க சாப்புடுங்க. வயித்த பெரட்டறமாதிரி இருக்குது” என்றபடி எழுந்து வேகமாக கைகழுவும் இடத்துக்கு விரைந்தான்.

சுவரோரமாக இருந்த வாஷ் பேசினில் கைகழுவியபடியே கண்ணாடியில் முகம் பார்த்தவாறு நின்றிருந்தாள் ரஞ்சினி. கோதுமை நிறத்தில் நீண்டிருந்த அவள் விரல்களை எட்டிப் பற்றிக்கொள்ளவேண்டும் போல இருந்தது. விரல்களில் பட்டு ஓடைபோல ஓடியது நீர். சிவபாலன் இரண்டாவது பேசினில் கைகழுவியபடி அவளைப் பக்கவாட்டில் பார்த்தான். ஒரே நொடியில் அவன் உடலிலிருந்த ரத்தம் முழுவதும் முகத்தை நோக்கிப் பாய்வதுபோல இருந்தது. என்னென்னவோ பேசவேண்டும் போல ஆசை துடித்தது. ஒரு சொல்லும் கூடி வராமல் மனம் தவித்தது. தன் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டினான். வெட்கம் படர்ந்த புன்னகையுடன் அவனைத் திரும்பிப் பார்த்தபடி அவள் அதைப் பெற்றுக்கொண்டாள். பிரித்து விரல்களைத் துடைத்துக்கொண்டாள்.

”நல்லா இருக்குது” அவசரமாகச் சொன்னான்.

“ம்?” அவள் விழி சுருக்கியபடி அவனைப் பார்த்தாள்.

“ஜிமிக்கி, ஜிமிக்கி நல்லா இருக்குது”

“ம்”

“ஜிமிக்குக்குள்ள ஒரு சின்ன ஜிமிக்கி ஊஞ்சலாடறமாதிரி இருக்குது.”

“ஓ”

“மகிழம்பூ மாதிரி வட்டமா இருக்குது”

“ம்”

இல்ல இல்ல. மரத்துல பன்னீர்ப்பூ தொங்குமே அந்த மாதிரி…”

“ம்”

“ஐயோ, எதுவுமே எனக்கு சொல்லத் தெரியல. நீ ரொம்ப அழகா இருக்கே.”

“என்ன புடிச்சிருக்குதா?”

“ரொம்ப ரொம்ப புடிச்சிருக்குது. அது என்ன கழுத்துல, காதுக்குக் கீழ,, மச்சமா?”

அவள் விரல்கள் சட்டென உயர்ந்து அதை மறைத்தன. ”ஐயையோ” என்றாள். பிறகு நாணத்துடன் ‘எப்ப பாத்திங்க?” என்றாள்.

“இப்பதான். நீ சாப்ட்ட சமயத்துல”

”ம்”

“எதாவது பேசேன். ஏன் ஒன்னும் சொல்லமாட்டற?”

“உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது”

“நான் ஒன்ன பத்தி நெறய கவிதை எழுதி வச்சிருக்கேன்.”

“உண்மையாவா?

“நூறு நூத்தியம்பது கவிதை இருக்கும். ஒரு நோட்டு போட்டு எல்லாத்தயும் எழுதி வச்சிருக்கேன்.”

“எனக்கு படிக்கணும் போல இருக்குது. இங்க கொண்டுவந்திருக்கீங்களா?”

“ம்ஹூம். வீட்ல வச்சிருக்கேன். நான் அப்பறமா படிக்க குடுக்கறேன்.”

“அப்புறம்னா?”

“அப்பறம்னா அப்பறம்தான்…”

“அதான் எப்பறம்?”

“அப்ப்ப்ப்ப்ப்பறம்.”

ச்சீ என செல்லமாகச் சிணுங்கியபடி அவள் பேசினிலிருந்து விலகி செல்வதற்கு முனைந்தாள். அவன் கொடுத்த கைக்குட்டையை மடித்து உதட்டைத் துடைத்து கைக்குள் மூடி வைத்துக்கொண்டாள். பிறகு இடுப்பில் செருகியிருந்த தன் கைக்குட்டையை எடுத்து புன்னகைத்தவாறே அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

அவள் புன்னகை அவன் நெஞ்சை நிறைத்தது. கண்ணாடிச்சுவரைத் தழுவியிறங்கி நழுவியோடும் மழைச்சாரலென வயிற்றை நிறைத்து அதிரவைத்தது. நீண்ட நேரம் தாகத்துடன் நடந்துசெல்வதுபோல ஒரு தவிப்பை உணர்ந்தான்.

பூப்போட்ட கைக்குட்டையை மெதுவாகப் பிரித்தான். ஒரு சின்ன சதுரம் போன்ற கைக்குட்டை. இரு மூலைகளில் எஸ் என்னும் ஆங்கில எழுத்தும் மற்ற இரு மூலைகளில் ஆர் என்னும் ஆங்கில எழுத்தும் பின்னலால் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த எழுத்தை உயர்த்தி முத்தமிட்டான். மல்லிகைப்பூவின் மணம். வியர்வையின் மணம். ரஞ்சினி இன்னும் அந்த இடத்தில் நிற்பதுபோல நினைத்துக்கொண்டான். அக்கணமே வெட்கம் படர பேசினை விட்டு வெளியே வந்தான்.

“என்னடா, என்ன செய்யுது? ஏன் இவ்ளோ நேரம்?” அம்மா கேட்டாள்.

“தெரியலம்மா. காலயில சாப்ட்டது ஒத்துக்கல போல. வாந்தி வரமாதிரி இருக்குது. ஆனா வரலை.”

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. மணி மூன்றாகிவிட்டது.

“நாங்க கெளம்பட்டுமா சார்?”

ரஞ்சினியின் அப்பா வந்து சிவபாலனின் அப்பாவிடம் கேட்டார்.

“நல்லதுங்க. அமாவாசக்குப் பிறகு ஒரு நல்ல நாளா பாத்து வரேன். அதுக்குள்ள நீங்க பத்திரிக மேட்டர எழுதி வைங்க. வந்து வாங்கிட்டு போறன். அடிச்சி முடிச்சிட்டா ஒரு பொங்கல வச்சி படயல போட்டுட்டு ஊருக்கு குடுக்க ஆரம்பிச்சிடலாம்.”

“வரும்போது மறக்காம பொடவய எடுத்துட்டு வாங்க. அக்கம்பக்கத்து உறவுக்காரங்க பாக்கணும்ன்னு சொன்னாங்க…..” ரஞ்சினியின் அம்மா முன்னால் வந்து சிவபாலனின் அம்மாவிடம் சொன்னாள். அதற்குச் சம்மதம் என்பதுபோல அம்மா தலையசைத்தாள்.

அவர்கள் வண்டி புறப்பட்டது. ரஞ்சினி திரும்பிப் பார்ப்பதை அவன் உணர்ந்தான். “டேய், பொண்ணு ஒன்ன பாக்குதுடா” என்று தம்பிதுரை சுட்டிக் காட்டியபோது வெட்கத்தோடு தலையைத் திருப்பிக்கொண்டான்.

“நாமளும் கெளம்புவமா?”

“கோயில் இருக்கற ஊருக்கு வந்துட்டு, சாமிய பாக்காம போனா எப்பிடி சித்தி? நாலு மணிக்கு கோயில் தெறந்துருவாங்க. பாத்துட்டு போயிடலாம்” என்றான் தம்பிதுரை.

”என்னடா நீ என்ன சொல்ற?” என்று அம்மா சிவபாலனைக் கேட்டாள். அவன் இந்த உலகத்திலேயே இல்லாதவன் போல இருந்தான். அவனை உலுக்கி மறுபடியும் கேட்கவேண்டியதாக இருந்தது. சட்டென்று சுயநினைவுக்கு வந்து சரியென்று தலையாட்டினான்.

காமாட்சியம்மன் கோவிலையும் வரதராஜ பெருமாள் கோவிலையும் பார்த்துவிட்டு வெளியே வருவதற்குள் மணி ஆறாகிவிட்டது. சிவபாலனுக்கு கோவிலுக்குள் எந்த உருவத்தைப் பார்த்தாலும் ரஞ்சனியாகவே தெரிந்தது.

வண்டிக்குள் ஏறி அனைவரும் உட்காரும்போதுதான் முருகேசன் மாமாவைக் காணவில்லை என்பது தெரிந்தது. “நம்ம பின்னாலதான வந்துகினே இருந்தாரு? அதுக்குள்ள எங்கடா மாயமா போனாரு?” என்று ஆச்சரியப்பட்டான் தம்பிதுரை.

“ம். அதுக்குள்ள எங்கயாவது வாசம் புடிச்சி போயிருப்பாரு. நாயக் குளிப்பாட்டி நடுவூட்டுல வச்சாலும் அது வால கொழச்சிகினு போவற எடத்துக்குத்தான் போவுமாம். அந்தக் கதைதான் இவரு கத. ஒன்னும் தேடவேணாம். அவுரா வருவாரு, ஏறி ஒக்காருங்க.”

சிவகாமி அத்தை எரிச்சலோடு சொன்னபடி படிக்கட்டுப்பலகையில் கால்வைத்து முதல் ஆளாக ஏறி வண்டிக்குள் உட்கார்ந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் ஏறி உட்கார்ந்தனர்.

அதற்குள் துண்டால் சிரிப்பை மறைத்தபடி வண்டிக்கு அருகில் வந்துவிட்டார் முருகேசன் மாமா. “எனக்காகத்தான் வெய்ட்டிங்கா? சரி சரி போலாம் ரைட்” என்ற வண்டியின் விலாப்புறத்தில் தட்டியபடி உள்ளே ஏறி அமர்ந்தார்.

அத்தை உடனே வெடித்தாள். “அந்த நாத்தம் புடிச்ச தண்ணிய ஒருநாளு கூட குடிக்காம இருக்கமுடியாதா? எங்க எங்கன்னு மோப்பம் புடிச்சிட்டு போய் வந்துட்ட?”

அம்மா அத்தையின் தோளைப் பற்றி அழுத்தி பேச்சை நிறுத்தும்படி சொன்னாள்.

முருகேசன் மாமா நமுட்டுச் சிரிப்போடு சாலையில் செல்லும் வாகனங்களின் பக்கம் திரும்பிக்கொண்டார். “கெளம்பலாம் தொர” என்று சொன்னபடி சிவபாலன் தடுப்புப்பலகையைத் தூக்கிப் பொருத்திவிட்டு கயிற்றைப் பிடித்து தாவி வண்டிக்குள் உட்கார்ந்தான்.

இருட்டு பரவத் தொடங்கியது. காற்றில் சற்றே குளுமை படர்ந்துவந்தது. வந்தவாசியைக் கடக்கும்போது முற்றிலும் இருள் சூழ்ந்துவிட்டது. முருகேசன் மாமா திடீரென ’அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு’ என்று பாடத் தொடங்கிவிட்டார். அருமையான குரல். சரியான ஏற்ற இறக்கமுடன் எந்தப் பிசிறுமில்லாமல் அவர் குரல் ஒலித்தது. “வெக்கம் மானம் சூடு சொரண எதுவுமில்லாத ஆளுடி. பாட்டு பாடுது பாரு மானம் கெட்ட பாட்டு” என்று முனகியபடி தோளை ஒடித்து முகம் திருப்பிக்கொண்டாள் சிவகாமி அத்தை. அந்தப் பாட்டு முடிந்ததுமே முருகேசன் மாமா உற்சாகத்தோடு ‘ஓடும் மேகங்களே’ பாடத் தொடங்கினார். அவர் குரலில் மகிழ்ச்சி கூடிக்கொண்டே போனது. வளவனூர் வந்து சேர்கிறவரைக்கும் அவர் நாற்பது ஐம்பது பாடல்களாவது பாடியிருப்பார். கொஞ்சம் கூட களைப்பே இல்லை. அவ்வளவு பாடல்கள் அவருக்கு மனப்பாடமாக தெரியும் என்பதே அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

வீட்டுக்கு வந்ததும் வண்டிக்கு பணம் கொடுத்து அனுப்பினான் தம்பிதுரை. புடவைப்பையை நடுவீட்டுக்கு எடுத்துச் சென்ற அம்மா சாமிக்கு முன்னால் வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றி சில கணங்கள் கண்மூடிக் கும்பிட்டாள். பிறகு வெளியே எடுத்து வந்து ஆயாவிடமும் தாத்தாவிடமும் காட்டினாள்.

“சரிசரி, பேசிட்டே ஒக்காந்துட்டிருக்காதீங்க. இட்லியோ தோசையோ எதயாவது ஊத்துங்க. காலையில கெளம்பணுமேங்கற பரபரப்புல சரியாவே தூக்கம் இல்ல. இன்னைக்காவது சீக்கிரம் தூங்கி எழுந்தாதான் நாளைய பொழுது நல்லா இருக்கும்”

அப்பா சொன்னதும் பெரியம்மா, சித்தி, அத்தைகள் எல்லோரும் அடுப்படிக்குச் சென்றார்கள். எல்லோரும் சேர்ந்து பம்பரமென வேலை செய்வதை உட்கார்ந்த இடத்திலிருந்து அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சிவபாலன். அவனுக்கு அருகில் அமர்ந்து தம்பிதுரை சொன்ன கதைகள் எதுவுமே அவன் மனத்தில் உறைக்கவில்லை.

இட்லித்தட்டு வைக்கப்பட்டதும் ஆவலோடு எல்லோரும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். பொட்டுக்கடலை சட்டினியில் மிதந்த கறிவேப்பிலையின் கரிந்த மணம் நாசியை எட்டியபோதுதான் சிவபாலனுக்கு மதியச் சாப்பாடு நினைவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ரஞ்சினியின் நினைவு வந்துவிட்டது. தனக்கு அருகில் ரஞ்சினி இல்லை என்கிற எண்ணம் அவனுக்கு வேதனையாக இருந்தது. பேருக்கு இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு அறைக்குள் வந்தான். மேசைமீதிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பதுபோல விரித்துவைத்துக்கொண்டு நினைவுகளில் மூழ்கினான். ரஞ்சினி இல்லாத உலகம் வெறுமை சூழ்ந்ததாக இருந்தது அவனுக்கு. அந்தப் புருவம். அவள் கண்கள். அவள் ஜிமிக்கி. அந்த மச்சம். எல்லாவற்றையும் துல்லியமாக நினைவுகூர்ந்தான்.

“என்னடா போவலாமா?” என்றபடி அறைக்குள் வந்தான் தம்பிதுரை. எங்கே என்பது போல அவனைப் பார்த்தான் சிவபாலன்.

“மொட்டமாடிக்குடா. என்ன முழிக்கற? அங்கதான நாம படுத்துக்குவம். வா. இன்னைக்கு காத்து நல்லா இருக்குது.”

மூலையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த பாய்களையும் தலையணைகளையும் எடுத்தான்.

த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடி ‘நா வரலைடா. நீ போ. நான் இங்கயே படுத்துக்கறேன்” என்றான் சிவபாலன். புதுசாகப் பார்ப்பதுபோல ஒருகணம் அவனை விசித்திரமாகப் பார்த்துவிட்டு பாய்மூட்டையோடு வெளியே போனான் தம்பிதுரை.

விளக்கை நிறுத்திவிட்டு படுக்கையில் சரிந்தான் சிவபாலன். நிலா வெளிச்சத்தில் வெள்ளித்தகடுகளென மின்னித் தொங்கும் தென்னங்கீற்றைப் பார்த்தபடியே படுத்திருந்தான். பேசின் குழாயில் தண்ணீரை வாங்கி வழியவிட்டபடி நீண்டிருந்த ரஞ்சினியின் விரல்கள் நினைவுக்கு வந்தன. அந்த விரல்கள் நீண்டு தன் கன்னத்தைத் தொடுவதுபோல நினைத்துக்கொண்டான்.

எதிர்பாராத கணத்தில் நினைவுக்கு வந்தவனாக எழுந்து ஆணியில் தொங்கிய பேண்டிலிருந்து சதுரக் கைக்குட்டையை எடுத்துக்கொண்டு படுத்தான். நிலவொளியில் ஆர் எழுத்துகளும் எஸ் எழுத்துகளும் மங்கலாகத் தெரிந்தன. அவற்றை தானாகவே அவன் விரல்கள் சில கணங்கள் வருடின. பிறகு அந்தக் கைக்குட்டையைப் பிரித்து முகத்தின் மீது விரித்துக்கொண்டான். மல்லிகைப்பூவின் மணம். வியர்வையின் மணம். ரஞ்சினி தனக்கு அருகிலேயே இருப்பதுபோல நினைத்துக்கொண்டான்.

முத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை

வாசலில் இருந்த ஒற்றைத் தூணைப் பிடித்துக் கொண்டு நின்றுகொண்டு முத்தாபாய் காத்திருக்கிறாள். யாருக்காக என்று அவளுக்கே தெரியாது. அதற்குள் உள்ளே இருந்து அம்சவேணியின் குரல் கேட்டது.

“முத்தா, வாசலுக்குப் போயாச்சா?” “ஆமாம்மா, இங்கதான் நிக்கறேன்” “ஐஞ்சரை மணிக்கெல்லாம் வரவேண்டியது; காப்பித்தண்ணியைக் குடிக்க வேண்டியது; முகம் கழுவி பௌடர் பூசிக்கிட்டு தலையை வாரிப் பூ வைச்சுக்கிட்டு சரியா ஆறு மணிக்கு வாசல்ல போயி அந்தத் தூண் எங்க உழுந்திடப் போவுதுன்னு அதைப் புடிச்சிக்கிட்டு நிக்க வேண்டியது; ஏழு மணிக்கு தான் வருவ”

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த சேதுராமனின் காதிலும் விழுந்தது. “ஏங்க நான் சொல்றது காதுல விழுந்ததா?” “தெனம்தான் சொல்ற; அவளுக்கு ஏதோ பராக்கா இருக்கு; அதான் போயி நிக்கறா; உடு” ”ஏன் உள்ள ஒக்காறது? டிவி பாக்கறது?” “ஏழு மணிக்கப்பறம்தான் பாக்கறாள; ரொம்ப நேரம் பாத்தா அதுக்கும்தான் எதாவது சொல்ற” அம்சவேணி ஏதும் பதில் சொல்லவில்லை.

இரவு சிற்றுண்டிக்கு சப்பாத்தி செய்ய மாவு பிசைய உட்கார்ந்தாள். தண்ணீரை ஊற்றி, உப்புப் போட்டுக் கொண்டே, ”கால்தான் வலிக்காதோ” என்றாள். “வலிச்சா ஒக்காந்துக்கிட்டுப் பாப்பா; நீ கவலப்படாத” “அப்படி என்னதான் பாக்கறா?” “நீ வேற, மாடி கட்டியிருந்தாலும் அங்க நின்னு சீதா மாதிரி பாக்கலாம்” “அது யாரு சீதா?” ஜனகன் பொண்ணு, மிதிலையில மேல் மாடத்துல நின்னு பாத்தா. அப்பதான ராமன் வந்தான்.

“இந்த வக்கணப் பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல; கதை எழுதி விருது வாங்கினா போதுமா? மேடையிலப் பேசினா எல்லாம் வந்துடுமா?” “இப்ப என்னா வரணும்ற?” “எனக்கு ஒண்ணும் வர வாணாம். ஒரே ஒரு பொட்டிக் கடையைத்தான் வச்சிக்கிட்டு இருக்கோம். இந்தப் பொண்ணக் கரையேத்தற வழியைப் பாருங்கன்னு சொல்றேன்” “ஏன் போன வாரம் கூடத்தான் ஒருத்தன் வந்தான்” “சரி, வந்தவங்ககிட்ட அப்படிச் சொல்லணுமா?” “வேற வழி?”

“ஒடையார! அருமையான ஜாதகம் இது. மூல நட்சத்திரம்; ஆண் மூலம் அரசாளும்னு சொல்வாங்க; பையன் செதம்பரத்துல பாங்கில இருக்கான். நம்ம பொண்ணும் புவனகிரிதான? வேலையை மாத்திக்கினா மாத்திக்கலாம். இல்லன்னா அங்கேந்தே தெனம் வந்துட்டுப் போலாம்.” என்றார் திருமணத் தரகர் சொக்கலிங்கம். ”சரி சொக்கு, அவங்க ஜாதகம் பாத்துட்டாங்களா?” “அவங்க பாத்துட்டாங்களாம்; நீங்க சரின்னு சொன்னா அடுத்தவாரம் பொண்ணு பாக்கக் கூப்பிடலாம்”.

சேதுராமன் வழக்கமாகப் பொருத்தம் பார்க்கும் ஜோசியரிடம் போய்ப் பார்த்தார். பொருத்தமாக இருந்தது. சொன்னபடி அடுத்தவாரம் வந்தது. பையனுடன் அப்பா, அம்மா, அண்ணன், தரகர் சொக்கு என்று நான்கு பேர் வந்தனர். முத்தாபாய் தழையத்தழைய பச்சை வண்ணச் சேலையுடன், அளவான நகைகளுடன், நெற்றியில் திலகத்துடன், தட்டில் இனிப்பும் பலகாரமும் எடுத்து வந்து கொடுத்தாள். பார்த்தாலே பிடித்துப் போகும் அமைதியான அழகு உண்டு அவளிடத்தில்.

‘என்னாடா, நல்லாப் பாத்துக்க” என்று அண்ணன் கேலி பேசினான். இனிப்பைத் தின்றுகொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். ”மாப்பிள்ளைக்குப் பொண்ணப் புடிச்சுப் போச்சு” என்றார் சொக்கு. “அப்பறம் என்ன? நீங்கதான் பொண்ணக் கேக்கணும்?” என்றார் பையனின் அப்பா. முத்தாபாய் எழுந்து உள்ளே செல்ல அம்சவேணியும் சென்றாள். “எங்களுக்குப் புடிச்சிருக்குது; எங்களுக்குப் புடிச்சிருந்தா முத்தாபாயிக்கும் புடிச்ச மாதிரிதான்” என்றார் சேதுராமன்.

“ம்.. மேல சொல்லுங்க; அடுத்து நிச்சயம்தான்” என்றார் பையனின் அப்பா. சற்று நேரம் எல்லாரும் பேசாமல் இருந்தனர். மின்விசிறிக் காற்றில் மாட்டப்பட்டிருந்த காலண்டர் ஆடிக்கொண்டிருந்தது. சேதுராமன் ஆரம்பித்தார். “நான் சொல்றேன்னு நீங்க தப்பா நெனச்சுக்கக் கூடாது?” “அதெல்லாம் பரவாயில்ல எதுவானாலும் சொல்லுங்க” என்றார் பையனின் அப்பா.

“ஒண்ணும் இல்ல; இந்த வீடுதான் எங்களுக்கு இருக்கற ஒரே சொத்து. நான் ஒரே ஒரு பொட்டிக்கடையை வச்சு ஓட்டிக்கிட்டிருக்கேன். முத்தாவுக்கு வேல கெடச்சதால இப்ப கொஞ்சம் சமாளிச்சிக்கிட்டிருக்கேன். அவ இல்லாட்டா சங்கடம்தான். அதால நீங்கப் பெரிய மனசு செஞ்சு கல்யாணம் ஆயிட்டா கூட மாசம் பத்தாயிரம் அவ எங்களுக்குக் கொடுக்கச் சம்மதிக்கணும்” கேட்ட பையனின் அப்பாவின் முகம் மாறியது. அவர் சொக்குவைப் பார்த்தார்.

சொக்கு சேதுராமனைப் பார்த்தார். இதை ஏன் என்னிடம் முன்கூட்டியே சொல்லவில்லை என்று சொக்குவின் பார்வை கூறியது. “இதைக் கல்யாணம் ஆனதுக்கப்பறம் சொன்னா சரியா இருக்காது, அதாலதான் முன்னாடியே சொல்லிட்டன்” என்றார் சேதுராமன். “ஆமாங்க. ஒங்களுக்கும் ஒரே பொண்ணுதான? இதெல்லாம் சகஜம்தான்” என்று பையனின் அப்பா சொல்ல, பையனின் அம்மாவோ, “எல்லாம் நல்லா முடியட்டுங்க; நாங்களும் ஜாதகப் பொருத்தம் பாத்துட்டு சொல்றோம்” என்றார்’

“அப்ப நீங்க பொருத்தம் பாக்கலியா” என்று சேதுராமன் கேட்டார். “இல்லீங்க” என்று பதில் வந்தது. அவர்கள் கிளம்பிச் சென்றபின், ‘ஏன்யா சொக்கு? அவங்க ஜாதகம் பாத்துட்டாங்கன்னு சொன்னியே” என்று கேட்டார் சேதுராமன். “ஆமாம், அப்ப அப்படித்தான் சொன்னாங்க” ”இப்ப ஏன் இத மாதிரி பேசறாங்க” “புரியலீங்களா? அவங்களுக்கு இஷ்டம் இல்லன்னு அர்த்தம்; அது சரிங்க, நீங்க ஏன் மாசாமாசம் பணம் குடுக்கணுன்ற விசயத்த எங்கிட்ட சொல்லல?”

”சரி பொண்ணு புடிச்சிருந்தா சொல்லிக்கலாம்னு நெனச்சிருந்தேன்” அதற்குள் உள்ளிருந்து வந்த அம்சவேணி “இனிமே பொண்ணு பாக்கறதுக்கு முன்னாடியே சொல்லிப்புடுங்க” என்றாள்.

”அப்பாவை நினைத்தாலும் பாவமாய் இருந்த்து முத்தாபாய்க்கு, “நாமளும் கல்யாணம் ஆயிப் போயிட்டா அவரு எப்படிக் குடும்பத்தை நடத்துவாரு? நான் படிச்சு முடிக்கறவரை கூட கடை நல்லா ஓடிக்கிட்டிருந்ததுதான்; அப்பறம் இந்த மாலு எல்லாம் வந்திச்சா? அதால அப்பாவோட கடை போல இருக்கறப் பொட்டிக்கடையெல்லாம் படுத்துடுத்து. அப்பாவோட நிபந்தனைக்கு யாராவது ஒரு ராமன் இல்ல; ராவணன் கூடவா வரமாட்டான்?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டு முத்தாபாய் காத்திருக்கிறாள்.

தனியார் பள்ளியின் பேருந்து ஒன்று போகும். ‘ணங்’ ’ணங்’ என்று வாணலியைத் தட்டி ஓசை எழுப்பியபடி நிலக்கடலை விற்பவன் வண்டியைத் தள்ளிக்கொண்டு போவான். ராயல் என்ஃபீல்டு வண்டியில் ஒருவர் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போவார். இதெல்லாம் கிழக்கேயிருந்து வருபவை. மேற்கேயிருந்து நான்கு எருமை மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற சிறுவர் திரும்புவார்கள். காக்கைக் கூட்டமொன்று பறந்து வந்து எதிரே செல்லும் மின்கம்பிகளில் உட்கார்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பது போல இருந்து பின் மீண்டும் பறந்து செல்லும். இந்த ஐந்து வினைகளும் சற்று முன்பின் நடக்கும். எல்லாம் அந்த ஆறுமணியிலிருந்து ஏழு மணிக்குள்தான். அதன்பின் முத்தா பாய் உள்ளே செல்வாள்.

கடந்த வாரம் மதியம் அலுவலகத்தில் உணவு வேளையில் உடன் பணியாற்றும் கோபால் கேட்டது ஞாபகம் வந்தது. “என்னா முத்தா, இந்த தடவையும் வழக்கம் போலத்தானா?” என்று கேட்டான் சிரித்துக் கொண்டே. “ஆமா, ஆமா” “என்னா கண்டிஷன் பெயிலா?” “இல்ல, கண்டிஷன் ஜெயில். ஆமா ஒங்களுக்கு யாரு சொன்னது? சொக்கலிங்கம் எங்கத் தெருவிலதான் இருக்காரு. காலை நடையிலச் சந்திப்போம். வருத்தமாத்தான் சொன்னாரு அவரும்.”

“சரி, அவரு ஒங்களுக்கு என்னா சொன்னாரு” “நல்ல ஜாதகம் அமையலன்னாரு” “சீக்கிரம் ஆனா ஒங்க அம்மாவுக்குக் கொஞ்சம் நிம்மதி” “ஆமா அவங்களுக்கும் வயசாயிக்கிட்டே வருது” “ஏன் ஒங்க அண்ணன் அக்கா, தங்கச்சி யாரும் பாக்க மாட்டாங்களா?” “நான் எப்பவும் தனிமையிலே இனிமை காண்பவன்” என்றான் அவன் சிரித்துக் கொண்டே. ”என்னப் போலத்தான்” என்றாள் அவளும்.

இரண்டு நாள்கள் கழித்து வழக்கம்போல முத்தாபாய் காத்திருக்கிறாள். கடையை சற்றுச் சீக்கிரம் மூடிவிட்டு வந்த அப்பா உள்ளே சென்றதும், “முத்தா, கொஞ்சம் இங்க வந்துட்டுப் போ” என்றார். அவளுக்கு ஆச்சரியம். அப்பா எப்பொழுதும் அழைக்கவே மாட்டார். அவளுக்கு வருகைப் பதிவேட்டில் இன்னும் தள்ளுவண்டிக்காரனும், ஹெல்மெட்காரரும் பாக்கி இருந்தனர். ஆனால் இதுவரை கூப்பிடாத அப்பா கூப்பிடுவதால் உள்ளே போனாள்.

உள்ளே போனதும் “அம்சா; நீயும் இங்கக் கொஞ்சம் வா” என்று மனைவியையும் அழைத்தார். அவள் வந்து நின்றாள். முத்தாபாய் நாற்காலியில் உட்கார்ந்தாள். ‘ஏம்மா, கோபாலுன்றது யாரும்மா?” “என்கூட வேல செய்யறவருப்பா; ஏம்பா?” “இன்னிக்கு அவன் மதிய நேரத்துலக் கடைக்கு வந்தான். இந்த ஊருதானாம். “ஆமாம்பா; நம்ம சொக்கு வராறே? அந்தத் தெருவுலதான் இருக்காரு”

“ஏங்க எதாவது தகராறா?” என்றார் அம்சவேணி. “தகராறெல்லாம் ஒண்ணுமில்ல; முத்தாவைப் பொண்ணு கேக்க வந்தான் அவன்.” முத்தாபாய்க்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. “நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல்லியே? அப்பா அம்மா இத எப்படி எடுத்துக்கப் போறாங்க”ன்னு நினைத்தாள். ”அவன் ஒரே பையனாம். அவனோட அவன் அம்மா மட்டும்தான் இருக்கங்களாம்; சொக்கு எல்லாம் சொன்னாராம். எல்லாத்துக்கும் ஒத்துக்கறனாம். ஏம்மா. ஒங்கிட்ட ஏதவது கேட்டானா?”

“இல்லப்பா, சாப்பிடும் போது ரெண்டு பெரும் ஒண்ணா ஒக்காந்து சாப்பிடுவோம், அதான். அப்பதான் எப்பவாவது குடும்ப விஷயங்கள் பேசிக்கறது உண்டு அவ்வளவுதான்” “சரி சொல்லுங்க; அவனும்தான் இவளைப் பாத்திருக்கான். இவளுக்கும் அவன் குடும்பத்தைப் பத்தித் தெரிஞ்சிருக்கு; எல்லாத்துக்கும்தான் ஒத்துக்கறான்” என்றார் அமசவேணி. சற்று நேரம் பேசாமல் இருந்த சேதுராமன் பட்டென்று, ”ஆனா அவன் நாயுடுப் பையனாண்டி. நாம எப்படிக் கொடுக்கறது? இல்லனு சொல்லிட்டேன்” என்றார்.

“சரி, இதுவும் கூடல” என்று சொல்லிக்கொண்டே அம்சவேணி உள்ளே செல்ல முத்தாபாய் வாசலில் போய்க் காத்திருக்கிறாள். மறுநாள் மதிய உணவு வேளையில் கோபாலுவும் முத்தாபாயும் ஒன்றாகத்தான் சாப்பிட்டார்கள். ஆனால் பேச்சு மிகமிகக் குறைவாக இருந்தது. அப்பா கேட்டதைப் பற்றி அவளும் கேட்க வில்லை, அவனும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் இதுநாள்வரை பார்த்த பார்வைக்கும் இன்று பார்க்கும் பார்வைக்கும் வேறுபாடு இருப்பதை இருவருமே உணர்ந்தனர்.

நான்கைந்து நாள்கள் கழித்து சொக்கலிங்கம் ஒரு நாள் சேதுராமனின் வீட்டிற்கு வந்தார். “பையனுக்கு அப்பா விருத்தாசலத்துல பெரிய மளிகைக்கடை வச்சிருக்காரு. அது தவிர ரெண்டு கடைங்க கட்டி வாடகைக்கு உட்டிருக்காங்க; பையனுக்குப் படிப்பு ஏறல. அதால அவனையும் கடையிலயே ஒக்கார வச்சுக்கிட்டாரு. இவன்தான் பெரியவன். அடுத்தவன் காலேசுலப் படிச்சுக்கிட்டிருக்கான். ரெண்டு பொண்ணுங்களையும் ஒண்ணு மாயவரத்துல, இன்னொண்ணு பாண்டிச்சேரியிலக் கட்டிக்கொடுத்துட்டாங்க”

சொக்கலிங்கம் கூறிக் கொண்டே போக, “நான் முன்ன சொன்னதெல்லாம் சொல்லிட்டயா?” ”சொல்லிட்டேங்க; அதுக்கும் ஒத்துக்கிட்டாங்க” கேட்டுக்கொண்டிருந்த அம்சவேணிக்கும் சேதுராமனுக்கும் இந்த இடம் முடிந்து விடும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டது. ”என்னா சொல்ற? முத்தா வரச் சொல்லலாமா?” என்று சேதுராமன் கேட்டார். “பாப்பாவை ஏங்கக் கேட்டுக்கிட்டு; இந்த ரெண்டு மூணு தடவையா அதக் கேட்டுக்கிட்டா சொன்னீங்க? என்றார் சொக்கலிங்கம். ‘ரெண்டு மூணா? ஏழெட்டு இருக்கும்? என்று கூறவில்லை. மனத்தில் நினைத்துக் கொண்டாள் முத்தாபாய். மாப்பிள்ளையே பெண்பார்க்க விருத்தாசலத்திலிருந்து காரை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனுடைய அப்பா, அம்மா, அக்கா, அக்கா கணவர் என்று அனைவரும் காரிலேயே வர, சொக்கலிங்கம் மட்டும் முன்கூட்டியே வந்து காத்திருந்தார். அனைவர் முன்னாலும் குனிந்த தலை நிமிராமல் வந்து உட்கார்ந்து விட்டுப் போனாள் முத்தாபாய்.

அவர்கள் சென்றபிறகு “ஏண்டி மாப்பிள்ளையை சரியா பாத்தியாடி?” என்றாள் அம்சவேணி. “பாத்தேம்மா” “இல்லியே, நீ குனிஞ்ச தலையை நிமிரவில்லையே” “இல்லம்மா; பாத்தேன்” என்று சொன்னாள் முத்தாபாய். “இந்த எடம் முடிஞ்சுடும்னு நெனக்கறேன். மாப்பிள்ளை ராஜாவாட்டம் இருக்காண்டி” என்றாள் அம்சவேணி. ”அதற்கு ராணியைத்தானே பார்க்கவேண்டும்” என் நினைத்துக் கொண்டாள் முத்தாபாய். சென்றவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

சேதுராமனும் அம்சவேணியும் கவலைப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் சொக்கலிங்கம் வந்தார். அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து வந்திருந்தாள் முத்தாபாய். இன்னும் காத்திருக்கும் இடத்திற்குச்செல்லவில்லை. “சொல்லு சொக்கு; நல்ல சேதிதான? என்னா சொன்னாங்க?” என்றார் சேதுராமன். அம்சவேணியும் முத்தாபாயும் கூர்ந்து கேட்டனர்.

“நல்ல சேதிதாங்க; ஆனா பவுனுதான் கூட அஞ்சு சேத்துக் கேக்கறாங்க” ”ஏம்பா நம்ம நெலைக்குப் பத்தே அதிகம்பா. இன்னும் கூட அஞ்சுன்னா? இப்ப விக்கற வெலைக்கு ரெண்டு லட்சம் ஆகுமே” சேதுராமன் அம்சவேணி முகங்களில் கவலை மேகங்கள் குடிகொண்டன. முத்தாபாய் இறுகிப் போய் நின்றுகொண்டிருந்தாள். “அதுக்கும் அவங்களே வழி ஒண்ணு சொன்னாங்க” ”என்னாவாம்?” “அவங்களுக்குத் தெரிஞ்ச ஒறவுக்காரரு ஒருத்தர் இருக்காராம். அவருக்கு இந்த ஊட்டை ரெண்டுலட்சரூபாய்க்குப் போக்கியம் போடலான்னு சொல்றாங்க”

”அப்பறம் அதை மூக்க என்னா வழி? கல்யாணத்துக்கப்பறம் சீர் செனத்தின்னு எல்லாம் வந்திடுமே” என்றார் சேதுராமன். “இதெல்லாம் மொதல்லயே சொல்லக்கூடாதா அவங்க? சரி. ம்….இதுவும் தட்டிப் போச்சா. கெடக்கட்டும்; அவ தலையெழுத்து” என்று வருத்தமுடன் சொல்லிக்கொண்டே போனார் அம்சவேணி. முத்தாபாயும் வெளியே சென்று காத்திருக்கிறாள்.

நான்கைந்து நாள்கள் கடந்தன. சேதுராமன் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தவர் வீட்டு வாசலில் முத்தாபாயைக் காணாமல் திகைத்தார்.