கை நழுவிய இராணி

கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

queen-missed

உண்மையில் இந்த கதையை நான் எழுதவில்லை. செந்தூரன்தான் எழுதினார். இரண்டாயிரத்து ஒன்பதில் இந்தக் கதையைப் பற்றி முதன்முதலாக நாங்கள் இருவரும் பேசினோம். அப்போது அவர் பத்திரிகையெல்லாம் நடத்திக் கொண்டு தீவிரமான செயல்பாட்டில் இருந்தார். இவர் அமெரிக்காவில் இருந்தபடி எடிட்டிங் பார்த்துக் கொள்ள, சென்னையில் பத்திரிகை பணிகள் நடந்து கொண்டிருந்தன. அச்சு உலகில் ஓரளவுக்கு கவனத்தை பெற்ற மாதாந்திரி பத்திரிகை அது..

‘கதையெல்லாம் நூறு பேரு எழுதறான்…. நீ வேற ஏதாச்சும் கட்டுரை எழுதேன். இங்க நடந்திட்டிருக்கிற செஸ் டோர்னமெண்ட் பத்தி ஒரு ஃபீச்சர் பண்றோம். நீயும் செஸ் பத்தி எழுதேன்’ என்றார். சொன்னது போல ஃபிலடெல்ஃபியாவில் நடந்த CCA டோர்னமெண்ட்டை முன் வைத்து பிரமாதமான கட்டுரைகள் எல்லாம் வந்திருந்தன. கேடா காம்ஸ்கியோட ஒரு நேர்முகம், தமிழகத்தின் லேட்டஸ்ட் கிராண்ட் மாஸ்டர் டி. சந்தோஷ் பற்றி அவருடைய அப்பா எழுதின கட்டுரை, வீடில்லாமல் ஃபிலடெல்ஃபியா ரூஸ்வெல்ட் பார்க்கில் வாழ்க்கை நடத்தும் செஸ் மாஸ்டர் டாம் மர்ஃபி பற்றி ஒரு கட்டுரை என்று பலதும் வந்திருந்தன.

செஸ் பற்றி புதுமையாக என்ன எழுதுவது என்று யோசித்தபோது எனக்கு சீனுவாசன்தான் நினைவுக்கு வந்தான். சாதாரணமாக கல்லூரி கிரவுண்டின் கேலரிப் படிகளில் உட்கார்ந்து கொண்டு பொழுதுபோக்காக செஸ் விளையாடிக் கொண்டிருந்தவனை சென்னை ராகவானந்தம் மெமோரியல் டோர்னமெண்ட்டில் ஃபைனல்ஸ் விளையாடும்படி செய்த பெரிய இன்ஸ்பிரேஷன் அவன்தான். அதுவும் ஃபைனல்ஸில் அவன் கூடத்தான் என்னுடைய மேட்ச் நடந்தது. அந்த மேட்ச்சைப் பற்றி ஹிந்துவில் அரவிந்த் ஆரோன் ஒரு கட்டுரை கூட எழுதியிருந்தார். அவரென்னவோ செஸ் வரலாற்றில் இப்படியான மேட்ச் நடந்ததேயில்லை என்று எழுதியிருந்தாலும், அதிகம் பிரபலமாகாத டோர்னமெண்ட் என்பதால் பெரிதாக கவனம் பெறவில்லை. அதையே மையமாக வைத்து ‘ராணியால் ஆகாதது ஆயினும்’ என்று கட்டுரை எழுதி செந்தூரனுக்கு கொடுத்திருந்தேன்.

காண்டினென்டல் செஸ் அசோசியேஷன்ஸ் என்றழைக்கப்படும் CCA நடத்தும் டோர்னமென்ட், ஃபிலடெல்ஃபியா மேரியாட் ஹோட்டலில் அப்போது கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. செந்தூரனின் இரண்டு பையன்களும் டோர்னமெண்ட்டில் விளையாடுகிறார்கள் என்பதால் நியூஜெர்ஸியிலிருந்து குடும்பத்தோடு வந்து அதே ஹோட்டலில் தங்கியிருந்தார். சீதோஷ்ண நிலை அருமையாக இருக்கிறதே என்று நாங்களும் பையனுக்கு ஃபிலடெல்ஃபியா ஜூவை சுற்றிக் காட்டலாம் என்று போயிருந்தோம். அப்படியே வழியோடு செந்தூரனை ஒரு எட்டு பார்த்துவிட்டு போகலாமே என்று தோன்றியது. இதோ வந்துவிடுகிறேன் என்று இவர்களை காரிலேயே உட்கார வைத்துவிட்டு மேரியாட் ஓட்டலுக்குள் நுழைந்து செந்தூரனுக்கு ஒரு ஃபோன் அடித்தேன்.

‘காலைல ஒரு ஃப்ரெஞ்சு அம்மணியோட மேட்சு. பையன் டிரா பண்ணிட்டான். அடுத்த ரவுண்டு பதிணொண்ணரை மணிக்குதான். சின்னவனுக்கு மதியத்துக்கு மேலதானாம்’ என்றவாறே வந்தார். ஓட்டல் லாபியில் வைத்து சம்பிரதாயமாக பேசிக் கொண்டிருந்த போதுதான் இந்தக் கதைக்கான முதல் அச்சாரம் விழுந்தது.

‘உன் கட்டுரை பிரமாதமா வந்திருக்கு. செஸ்பேஸ், செஸ்டாம்னு ஏதாவது சைட்டிலிருந்து பழயக் கட்டுரைய உருட்டி புரட்டி குடுத்திருவேன்னு நினச்சேன். அப்படித்தானே பெரும்பாலும் செய்யறாங்க. இந்த under-promotion, insufficient materialன்னு அரிய விஷயங்களைப் தொட்டு எழுதியிருக்கியே. எக்ஸலெண்ட்ப்பா. எனக்கே எல்லாம் புதுசா இருந்தது. ஆனா ஓவர் தியரியா இருக்கே. இது நிஜத்தில் நடந்ததா என்ன?’ என்றுக் கேட்டார்.

ஏதோ பொழுது போகாமல் ஒன்றிரெண்டு கதைகள் எழுதறதுதான். அதற்காக கட்டுரைகளில் எல்லாம் கற்பனையை கலந்து எழுதுகிறேன் என்று சந்தேகப்பட்டால் எப்படி… போனமாதம் ஒரு பயணக்கட்டுரையாக, அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரைக்கு காரில் வந்ததைப் பற்றி எழுதிக் கொடுத்திருந்தேன். எல்லா தகவல்களையும் ஒன்றுக்கு ஏழுமுறை சரிபார்த்துத்தான் அனுப்பியிருந்தேன். வாசிப்பு சுவாரசியத்துக்காக கட்டுரையில் சேர்த்திருந்த குட்டி குட்டி ஜென் கதைகளை குறிப்பிட்டு ‘இதுக்கெல்லாம் சோர்ஸ் எங்கேய்யா’ என்று குடைந்து எடுத்து விட்டார். அதெல்லாம் சொந்த கற்பனை என்றதும் அவற்றை நீக்கிவிட்டுத்தான் கட்டுரையை வெளியிட்டார். சரியான இம்சை பிடித்த எடிட்டர்.

‘அந்த மேட்ச் பத்தி அப்பவே ஹிந்துவில் வந்திருந்ததுன்னு எழுதியிருக்கேனே சார். சென்னைல யாரையாச்சும் ரோஜா முத்தையா லைப்ரரில போய் ரெஃபர் பண்ணச் சொல்லுங்க. இல்ல ஹிந்து ஆபிசுல கேட்டுப் பாருங்க’ என்றேன்.

சீனுவாசனின் சேகரிப்பில் கண்டிப்பாக ஆரோனின் கட்டுரை இருக்கும். செஸ் பற்றிய பெரும்பாலான புத்தகங்கள், ஜான் வாட்ஸன் எழுதிய mastering the openings நான்கு வால்யூம்களும், செய்தித்தாள் கட்டுரைகள், மேட்ச் குறிப்புகள் என்று பெரிய புதையலே வைத்திருந்தான். ரய் லூபஸ் ஓப்பனிங் பற்றி மட்டுமே தனியே ஒரு புத்தகம் வைத்து 90களின் காஸ்பரோவ் கார்போவ் மேட்சுகளை அலசிக் கொண்டிருப்பான்.

‘சென்னைல ராமண்ணாவ கேக்க சொல்றேன். நீயும் நல்லதா ஏதாவது ரெஃபரென்ஸ் இருந்தாக் கொடு. நாளைக்கு நம்மள யாரும் கேள்வி கேட்டுப்பிடக் கூடாது பாத்துக்க ‘ என்றார் செந்தூரன்.

அவர் கேட்டதும் சரிதான். உலகில் எங்கும் நடந்தேயிராததொரு நிகழ்வை சென்னையில் ஒரு சாதாரண லோக்கல் டோர்ணமெண்ட்டில் நடந்தது என்று எழுதினால் யார் நம்பப் போகிறார்கள்? மேட்ச் நடந்தபோதே யாரும் நம்பவில்லை. அவ்வளவு திருப்பங்களும் திகிலுமாய் நடந்த முடிந்த மேட்ச். முதலில் சுகந்திதான் ‘ட்ரா ஆயிடுச்சு. insufficient material’ என்று அறிவித்தாள்.

அதற்கு முந்தைய மேட்ச்சில் வெள்ளைக் காய்களுடன் ஆடிய நான் கொஞ்சம் கவனக்குறைவாக இங்க்லீஷ் ஓப்பனிங்கை கையாண்டதில் முப்பத்தைந்தாவது நகர்த்தலிலே தோற்றுப் போனேன். இத்தனைக்கும் சீனுவாசன் ஆடியது ஒன்றும் புதிதில்லை. 92ல் காஸ்பரோவ் ஆடி ஜெயித்த நஜ்டார்ஃப் வேரியேஷனை இன்னும் சற்று மாற்றி ஆடியிருந்தான். இந்த ஆட்டத்தில் எனக்கு கருப்பு காய்கள் என்பதால் எப்படியும் தோற்றுத்தான் போவேன் என்று சுற்றியிருந்த எல்லோரும் நூற்றியோரு சதவீதம் நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையில் வேட்டுவைக்கும்படி நான் நன்றாகவே ஆடிக் கொண்டிருந்தேன். சுகந்தியின் அறிவிப்பு முதல் ட்விஸ்ட் என்றால், ஆதிசேஷனின் எதிர்ப்பு அடுத்த திருப்பம்.

‘எப்படி டிரா ஆகும்? கருப்புக்கு டைம் இல்லையேம்மா. நியாயமா பாத்தா வொய்ட்தானே கெலிச்சுது’ என்றார். உடனே பலரும் அவரை ஆமோதித்து குரலை உயர்த்தி பேச, சீனுவாசன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரிப்புடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ கண்ணிவெடியை புதைத்து வைத்திருக்கிறான் என்று எனக்கு புரிந்தது.

உண்மையில் அந்த மேட்சை நான் ஜெயித்திருக்க வேண்டியது. சீனுவாசனின் மின்னல்வேக கேம்பிட்களை பொறுமையாக எதிர்கொண்டு, முக்கியமாக என் சைடில் தவறுகள் நிகழாமல் கவனமாக ஆடிக் கொண்டிருந்தேன். முடிவில் அவனிடம் இரண்டு சிப்பாய்களும், என்னிடம் ஒரு பிஷப்பும் சிப்பாயும் மட்டும் எஞ்சியிருந்தது. அந்த சிப்பாயை ராணியாக புரமோட் செய்து கொண்டு மூன்றே மூவ்களில் அவனை செக் மேட் செய்து விட வேண்டும் என்று முனைப்பாக இருந்தாலும், நேரம் எனக்கு சாதகமாக இல்லை. அறுபதாவது நகர்த்தலுக்கு அப்புறம் மிகவும் நேரம் எடுத்துக் கொண்டதால் முடிவில் பத்து நொடிகளோ என்னவோதான் எனக்கு நேரம் இருந்தது.

ஜெயிக்க எல்லாவிதமான சாத்தியங்கள் இருந்தாலும், நேர நெருக்கடியால் டிரா வேண்டுகோளாக கருப்பு ராணியை C8ல் கொண்டு வைத்தேன். அந்த சூழலில் நான் அதைத்தான் செய்வேன் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அப்போதுதான் சீனுவாசன் அந்த வேடிக்கையை செய்தான். என்னுட்டைய டிரா கோரிக்கையை நிராகரித்து, B7லிருந்த வெள்ளை சிப்பாயை முன்னே B8க்கு நகர்த்தி புரமோட் செய்தான். சிப்பாய்க்கு பதிலாக வெள்ளை ராணியை தேடி எடுத்தவன் அதை போர்டுக்கு கொண்டுவரும்போது கைதவற விட்டுவிட்டான். ஆட்டம் முடியும் தருவாயில், அதுவும் வழக்கத்திற்கு மாறாக என் கை ஓங்கியிருந்ததால் கவரப்பட்டு எங்களைச் சுற்றி கூடியிருந்த பெரிய கூட்டத்தின் இடையே அந்தக் காய் உருண்டு ஓடிவிட்டது. ஒரு நொடி கூட தாமதப்படுத்தாமல், உடனே ஒரு வெள்ளை யானையை எடுத்து ராணிக்கு பதிலாக அங்கே வைத்துவிட்டு எல்லாரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிப்பாய்களை மறுகோடிக்கு கொண்டு போய் புரமோட் செய்யும்போது இது வழக்கம்தான். யானையை கவிழ்த்து வைத்தோ, அல்லது மந்திரி, குதிரை என்று எந்தக் காயையும் ராணியாக வைத்துக் கொண்டு ஆடலாம். ஒரே சமயத்தில் ஒன்பது இராணிகளை வைத்துக் கொண்டு ஆடுவதும் கூட சாத்தியம்தான்.

எனக்கிருந்த கடைசி இரண்டு நொடிகளில் நானும் கருப்பு ராஜாவை கடைக்கோடியில் D8ல் கொண்டு வைத்துவிட்டேன். இனி எனக்கு ஆட்டம் இல்லை என்னும்போதுதான் சுகந்தி ஆபத்பாந்தவியாக அந்த டிரா அறிவிப்பை செய்தாள். அவள்தான் டோர்னமெண்ட் ஆர்பிடர். அப்போது அவள் எங்கள் கல்லூரியில் லைப்ரரேரியனாக இருந்தாள்.

chess_opening_1

‘நல்லாப் பாருங்க ஆதி சார். வெள்ளை என்ன ஆடினாலும் அது ஸ்டேல்மேட்தான். அதான் கருப்புக்கு டைம் போயிட்டாலும் டிரா ஆயிடுச்சுன்னு சொன்னேன்’ ஆதிசேஷனுக்கு பதில் சொல்லியபடி சுகந்தி ரிக்கார்ட் நோட்டில் முடிவுகளை எழுதத் தொடங்கிவிட்டாள்.

எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இப்போது எப்படியும் மூன்றாவது ஆட்டம் ஆடியாக வேண்டும். அதில் தோற்றுப்போனாலும் பரவாயில்லை, டோர்னமெண்ட் ரேட்டிங்கில் இரண்டு புள்ளிகள் அதிகம் கிடைக்கும். அப்போது அடுத்த ட்விஸ்ட்டாக பூதலிங்கம் சார் பாய்ந்து வந்தார்.

‘ஏய் சுகி! நல்லா கவனிப்பா. வாசன் குயீனா புரமோட் பண்ணியிருக்கான்? அதுக்குள்ள insufficient materialன்னு சொல்லிட முடியாது பாரு’ என்றார்.

சீனுவாசன் முதலில் ராணியை எடுத்து, அது கைதவற விட்டபிறகு, அடுத்து யானையை கொண்டு வைத்ததும் அது ராணிதான் என்று எல்லாரும் நினைத்திருந்தோம்.

‘யானையை தலகீழா வச்சாத்தான் அது ராணி. பாரு அவன் நேரா நிமித்தி வச்சிருக்கான். இப்ப ஸ்டேல்மேட் ஆகாது. கருப்பு ராஜாவுக்கு D7 ஒரு பாசிபிலிட்டி இருக்கே. அதனால இன்சஃபிஷியண்ட் மெட்டீரியல்னு இப்பவே சொல்லீற முடியாது. வெள்ளைதான் ஜெயிச்சது’ என்றார் பூதலிங்கம்.

chess_opening_2

அப்படியாகத்தான் உலக செஸ் விளையாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு under-promotion மூலமாக மேட்ச்சை ஜெயிச்ச பெருமை சீனுவாசனுக்கு வந்து சேர்ந்தது.

சீனுவாசனின் அம்மா பூதலிங்கத்திற்கு சுற்றி வளைத்து தங்கை முறையாகும். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன் என்பதால் பூதலிங்கத்திற்கு அவன் மேல் ஒரு சாஃப்ட் கார்னர் கூட உண்டு. அந்த டோர்னமெண்ட்டில் அவன் ஜெயித்துவிட்டால் போதும். யூனிவர்சிட்டி டீமில் இடம் கொடுத்துவிடுவார்கள். அந்த சான்றிதழை வைத்துக் கொண்டு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு உத்தியோகம் ஏதாவது கிடைத்துவிடும். அப்புறமென்ன… அவர் பெண்ணை கட்டிவைத்துவிட்டால் போதும். எல்லாருக்கும் வளமான எதிர்காலம் அமைந்துவிடும் என்று அவர் பல மாங்காய்களை வீழ்த்தும் அஸ்திரமாக அந்த மேட்சை பயன்படுத்திக் கொண்டார். அப்படித்தான் நடக்கவும் செய்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். ரெவின்யூ டிபார்ட்மெண்ட்டில் டைப் டூ கிளார்க்காக சீனுவாசனுக்கு ஆர்டர் வந்ததும் வெஸ்ட் மாம்பலம் புண்ணியகோடி கல்யாண மண்டபத்தில் வைத்து தடபுடலாக கல்யாணம் நடந்தது. அதற்கப்புறம் சுகந்தி வேலைக்கு போகவில்லை.

‘ஊரு பேரெல்லாம் கட்டுரைல போடவேண்டாம்யா. அதெல்லாம் சுவாரசியத்துக்கு சேத்துக்கிடலாம். ஆனா எடிட்டோரியல்ல எங்களுக்கு நம்பிக்கை வரனும்ல. இல்லன்னா வெறுமன தியரிட்டிக்கலா, அண்டர் பிரமோஷன் வச்சு எப்படி ஆட்டத்தை ஜெயிக்கிறதுன்னு சொல்லிடு. எவன் கேள்வி கேக்கப்போறான்?’ சிரித்துக் கொண்டே சொன்னார் செந்தூரன்.

நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. ராகவானந்தம் மெமோரியல் டோர்னமெண்ட் எப்போதோ நிறுத்திவிட்டிருந்தார்கள். அவர்களின் ரிக்கார்டுகளை எங்கே என்று போய் தேடுவது.

‘சீனுவாசன்னு சொன்னியே. அவர் இப்ப என்ன பண்ணிட்டிருக்காப்டி? சென்னைலதான் இருக்காரா?’ என்றார் செந்தூரன் விடாமல்.

‘கடேசியா நான் கேள்விப்பட்டது அவன் புனேல இருக்கான்னு’ என்றேன்.

‘ஸ்டேட் கவர்மெண்ட் வேலைல எப்படிய்யா புனேக்கு போவாங்க’ ஏதோ தப்பை கண்டுபிடித்துவிட்ட தொனியில் கேட்டார்.

‘அவன் எங்க வேலைல இருந்தான்? கல்யாணமான ஆறு மாசத்தில, ஏதோ சாமியாராகப் போறேன்னு புனேக்கு ஓடிப் போய் ஆசிரமத்துல சேந்திட்டான். அதுக்கப்புறம் எந்த டச்சும் இல்லை’ என்றேன்.

‘அட, வாழ்க்கைலேயும் ராணிய வேண்டாம்னு கெளம்பிட்டாப்லயா. மேட்ச்சை விட இந்த மேட்டர் இண்ட்ரெஸ்டிங்கா இருக்கே’ என்றார். பத்திரிகைக்காரர் என்றால் அப்படித்தான் புது கோணத்தில் யோசிப்பார்கள் போல..

அதற்குள் நேரமாகிவிட்டதே என்று தேடிக்கொண்டு இவர்கள் ஓட்டலுக்குள் வந்துவிட, செந்தூரனுடன் கைகுலுக்கிவிட்டு,.

‘அப்ப நான் புறப்படறேன். பப்ளிஷ் ஆயிடுச்சுன்னா ஒரு மெயில் போடுங்க’ என்று கிளம்பினேன்.

‘வேற யாராச்சும் அந்த மேட்சுக்கு விட்னெஸ் இருந்தாக்கூட சொல்லுங்க. ஒரு சின்ன ரெஃபரென்ஸ் பாத்திட்டு போட்டுடலாம்.’ என்றார்.

அப்போதுதான் நான் செந்தூரன் இந்த கதையை எழுதத் தூண்டிய தகவலை சொன்னேன்.

‘தோ… இவதான் அந்த மேட்ச் ஆர்பிடரா இருந்தவ. இத விட வேற ரெஃபரன்ஸ் என்ன வேணும் உங்களுக்கு?’

அடுத்த மாதம், செந்தூரன் பத்திரிகையில் என் கட்டுரையை வெளியிடுவதற்கு பதிலாக இந்தக் கதையை வெளியிட்டு விட்டார்.

One comment

  1. கிராஸ் செக் செய்ய கேட்ட கேள்விகளுக்கு கிடைக்காத யூர்ஜிதப்படுத்துவதற்க்கான witness ஐ பக்கத்தில வச்சுக்கிட்டு நீங்க ஆடின சதுரங்கம் நன்றாக உள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.