நவீனத்துவம், மாயம், புனைபடுதல் – 1

-பீட்டர் பொங்கல்-

(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம் )

நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நிகழ்த்தப்படும் உரையாடல்களின் பின்னணியில் ஓங்கி நிற்கும் இறுகிய முகம் மாக்ஸ் வெபருக்கு உரியது. அதைவிடச் சற்றே மகிழ்ச்சியான முகம் கொண்ட சார்லஸ் டெய்லரும் அங்குண்டு. மலர்ந்த முகம் கொண்டவரும் உண்மைகளை அப்பட்டமாய் பேசுபவரும், கரிக்கோல் ஏந்தியிருப்பதாய் குற்றம் சாட்டப்படுபவருமான லுட்விக் விட்கென்ஷ்டைனும் இவர்களுடன் இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

இது நினைத்தே பார்க்க முடியாத தேர்வு என்ற எண்ணம் எழலாம். காரணம், விட்கென்ஷ்டைன் மாயத்தன்மை குறித்து அதிகம் எழுதியதில்லை. மேலும், மொழியின் பிழை புழக்கத்தால் ஏற்பட்ட மயக்கங்களை, தத்துவத்துறைக் கருவிகளைக் கொண்டு கலைத்து வசியமிழக்கச் செய்தவர் என்றுதான் அவரைப் பற்றி பெரும்பாலும் கருதப்படுகிறது. அவரே எழுதியதுபோல், “மொழியினால் ஏற்பட்ட நம் அறிவு மயக்கத்துக்கு எதிரான போராட்டம்தான் தத்துவவியல்” “Philosophy is a battle against the bewitchment of our intelligence by means of language”).

இருந்தாலும்கூட, விட்கென்ஷ்டைனின் வாழ்வு அணுகலில் மாயத்தன்மைக்கு மைய இடம் இருந்தது. இவ்வுலகு குறித்து அவதானிக்கும்போது தோற்றம் கொள்ளும் வியப்பு உணர்வையே அவர் மாயம் என்று பொருள் கொண்டார். “அதீதத்துக்கு அப்பாற்பட்ட அனுபவம்… அதன் வசப்பட்டிருக்கையில் உலகின் இருப்பு குறித்து வியக்கிறேன். அப்போது, ‘எது ஒன்றும் இருப்பதே எவ்வளவு அசாதாரண விஷயம்,’ ‘உலகம் இருப்பதென்பது எவ்வளவு அசாதாரண விஷயம்’ என்றெல்லாம் சொல்கிறேன்,'” என்று அவர் தன் வியப்புணர்வை விவரித்தார்.

வியப்புணர்வில்தான் தத்துவம் துவங்குகிறது என்று பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் கூறினர். விட்கென்ஷ்டைனின் புகழ்பெற்ற இறுதிச் சொற்கள் – “என் வாழ்வு அற்புதமாக இருந்தது என்று கூறுங்கள்”-, தத்துவத்தின் முடிவும் அதிசய உணர்வுதான் என்பதைச் சுட்டுகின்றன.

இவ்வுலகை எதிர்பாராத புதிய வகைகளில் மீள்விவரணை செய்து, அதன் மாயத்தை மீட்டெடுப்பதை விட்கென்ஷ்டைனின் பிற்காலத்திய தத்துவ தேடல் தன் நோக்கமாய் கொண்டிருந்தது. இந்த மீட்சியை நிகழ்த்தும்போது உலகில் எதுவும் மாறுவதில்லை- எல்லாம் உள்ளபடியே இருக்கின்றன-, ஆனால் உலகோடு நமக்குள்ள உறவில் மாற்றம் ஏற்படுகிறது. ‘நாம் காண்கிறோம், நம் கோணம் மாறுவதில்லை, நம் புரிதல் மாறுகின்றது.” இவ்வுலகம் எவ்வளவு செறிவானதாக, நிலையற்றதாக, வேறுபாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதை உணர்கிறோம். விட்கென்ஷ்டைன், 1948ஆம் ஆண்டில் கூறியபடி, “வாழ்வில் மாறுபடு பொருட்கள் என்ணற்று இருப்பது வாழ இன்றியமையாதது”.

இந்த ‘எண்ணற்ற’ நோக்கு, நம் குறுகிய அகத்தையும் நம் உடனடி தேவைகளையும் கடந்து அவற்றுக்கு அப்பால் நம்மைக் கொண்டு செல்லும் பராதீதத்தின் சமயமற்ற வடிவம். அது நமக்கு விழிப்பளிக்கிறது – நாம் திகைக்கிறோம், சாத்தியங்களை உணர்கிறோம், வேறுபாடுகளை அறிகிறோம், நம் புரிதலின் தற்காலிகத்தன்மையை தன்னடக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறோம்.

மூச்சுத்திணறச் செய்வது, காரண காரிய உறவுக்கு உட்பட்டது, தர்க்கத்தின் ‘இரும்புக் கூண்டில்’ சிறைபட்டது என்று வசீகரமற்ற நவீன உலகை மாக்ஸ் வெபர் வரையறை செய்தது உலக பிரசித்தம். இந்தக் கூண்டிலிருந்து நம்மை விடுவிக்கும் நோக்கத்தில் விட்கென்ஷ்டைன் தன் பிற்காலத்திய தத்துவ தேடல்களை மேற்கொண்டார், அவரது சொற்களையே பயன்படுத்துவதானால், “புட்டியில் சிறைப்பட்ட பூச்சிக்கு வெளியேறும் வழிகாட்டுவது”. ஏககாலத்தில் உலகின் வசியமிழக்கச் செய்து, மீண்டும் வசியப்படுத்துவதே அவரது தேடல்களின் நோக்கம்.

“மயக்கற்ற மோகம்” என்ற பார்வைக்கு முன்னுதாரணம் அளிப்பவர் விட்கென்ஷ்டைன்- இது நவீனத்துவத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று, சமய நம்பிக்கை கொண்டவர்கள், சமயம் விலக்கியவர்கள் என்று இருவரில் பலருமே இத்தகைய பார்வை கொண்டவர்கள்தான். மயக்கமற்ற மோகம் என்பது குறித்து இன்னும் விரிவாக பின்னர் பேசுகிறேன், ஆனால் தற்போதைக்கு விட்கென்ஷ்டைன் ஏன் இந்தப் பேச்சில் வருகிறார் என்பதைச் சொல்லி விடுகிறேன்.

முதல் காரணம், மாயமும் நவீனத்துவமும் என்று பேசும்போது அவர் செய்துள்ள “மயக்கற்ற மோகம்” குறித்த வரையறையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இரண்டாம் காரணம், மாயம் என்பது பல்பொருள் கொண்ட, தெளிவற்ற பதம் என்பதை அவர் கண்டிருந்தார். “ஒருவன் மோகவயப்பட்டிருப்பதை நான் எவ்வாறு அறிய முடியும்?” என்று கேட்டார் அவர். “மாயத்தின் மொழி வெளிப்பாட்டை நாம் எவ்வாறு கற்றுத் தெளிய இயலும்? அது எதனுடன் தொடர்புடையது?”. இவ்வாறு அவர் கூறியது குறிப்பிடத்தக்க விஷயம்- ஏனெனில் இது குறித்து பேசும் முக்கியமான சிந்தனையாளர்கள் பலரும் எந்த ஒரு கணத்திலும் வசப்படக்கூடிய பல்வேறு வகைப்பட்ட வசியநிலைகள் நமக்கு உண்டென்பதைப் பொருட்படுத்தவில்லை.

உதாரணத்துக்கு வெபர், வசியப்படுதல் என்பதை மரபார்ந்த, அமானுட நம்பிக்கையுடன் தொடர்புடையதாகக் கருதினார், மாயம் நீங்கிய அதன் எதிர்நிலை நவீன, தர்க்கம் சார்ந்த புரிதலாகிறது. அவரைப் பொறுத்தவரை, நவீனத்துவமும் வசிய நிலையும் இணைந்திருக்க இடமில்லை. இப்படிப்பட்ட எளிய புரிதலை எதிர்த்து விட்கென்ஸஷ்டைன் கரிக்கோலைக் காட்டி மிரட்டியிருக்கக் கூடும்- நவீன அறிவியலின் காரணமாக உலக விவகாரங்களின் வசியம் இழக்கப்படுகிறது என்ற பாமர கருத்தை அவர் திட்டவட்டமாக மறுத்தார். உலகில் உள்ளவை அனைத்துக்கும் ஆன்மா உண்டு என்று நினைத்துக் கொண்டிருக்கும் காட்டுவாசிகளின் மயக்கநிலையை பகுத்தறிவைக் கொண்டு மேற்குலகம் கடந்துவிட்டது என்று The Golden Bough என்ற நூலில் எழுதிய ஜேம்ஸ் பிரேசரை அவர் எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்தினார். இது ஒரு பெருமித நிலையில் பேசப்படும் உளறல் என்று கருதினார் அவர். குறிப்பிட்ட சிலர் காட்டுவாசிகளாய் இருப்பதற்கும் அவர்களது அதிசய உணர்வுக்கும் தொடர்பில்லை என்றார் அவர்.

நம் மொழி விளையாட்டை விட்கென்ஷ்டைன் புரிந்து கொண்ட பொருளில் சற்றே விரிவாகப் பார்க்க விரும்புகிறேன் – நாம் தற்போது திருத்தி எழுதிக் கொண்டிருக்கும் இந்த மொழி விளையாட்டு நவீன வசியப்படுதல் மற்றும் வசீகரமழித்தலை விவரிக்கிறது, இதன்பின், மயக்கமற்ற மோகம் என்ற விஷயத்தைப் பேசப் போகிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “புனைபடுதல்” குறித்து மேற்கொள்ளப்பட்டிருந்த பார்வைக்கும் இதற்கும் உள்ள தொடர்பை அடுத்து பேசுவதாக இருக்கிறேன்.

மாயமும் நவீன பகுத்தறிவும் அடிப்படையில் முரண்பட்டவை என்ற வெபரிய பார்வையை மயக்கற்ற மோகம் கேள்விக்குட்படுத்துகிறது. நவீனத்துவம் தன் பிரமைகள் காரணமாய் தன்னளவில் ஒரு மயக்க நிலையில் இருப்பதான விமரிசனத்தையொட்டி, நவீனத்துவத்தின் பகுத்தறிவு நம்பிக்கையும்கூட தர்க்கத்துக்குப் புறம்பான மயக்கம்தான் என்று Max Horkheimer மற்றும் Theodor W. Adorno இருவரும் Dialectic of Enlightenment என்ற பிரதியில் கூறிய கருத்தையும் மயக்கற்ற மோகம் நிராகரிக்கிறது.

அடிப்படையில் வெபரும் அடார்னோவும் வசியப்படுதலை பகுத்தறிவுக்குப் புறம்பான மனநிலை என்று விவரிக்கின்றனர். ஆனால் விமரிசனத்துக்கு உட்படுத்தும் தர்க்கமும் கற்பனை சார்ந்த வியப்பும் இணைந்திருக்க முடியும் என்றும் அவை முற்போக்கு லட்சியங்களுக்கு உதவக்கூடும் என்பதையும் விட்கென்ஷ்டைன் மற்றும் பலரின் மயக்கற்ற மோகநிலை நிகழ்த்திக் காட்டுகிறது.

வசியப்படுதல், வசியமிழத்தல் ஆகியவற்றைப் பொருள் விளங்கிக் கொள்ள நமக்கு இரு வழிகள் உண்டு. பரந்துபட்ட வரலாற்று இயக்கத்துக்கு உட்பட்ட பல்வேறு நிலைகளாக இவற்றை வரையறுத்துக் கொள்ளலாம்; அல்லது, மானுட தாக்கங்களாகவும் வரையறை செய்யலாம்.

வசியப்படுதலையும் வசியமிழத்தலையும் வரலாற்று இயக்கமாகப் பேசும்போது, சர்வவியாபகம் கொண்ட அமானுட விதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட, நவீனத்துவத்துக்கு முற்பட்ட ‘மாய’ உலகம், அறிவியல் அடிப்படையிலான இயற்கை விதிகளைத் தன் தனித்தன்மையாய் கொண்ட நவீன, ‘வசீகரமற்ற’ உலகாய் மாறுவதை வெபர் மற்றும் பலரின் மொழிபு விவரிக்கிறது. வெவ்வேறு வரலாற்று காலகட்டங்களை இந்த இயக்கத்தின் துவக்கங்களாக ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர், ஆனால் விளைவு எவ்வாறாக இருக்கிறது என்ற விவரணையில் அனைவரிடத்தும் இணக்கம் உண்டு.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்கால ரொமாண்டிக்குகள் மத்தியில் நவீனத்துவத்தை வசீகரமின்மைக்கு இணையாய்ச் சொல்லும் கதையாடல் ஒன்று தெளிவான தோற்றம் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டு அவநம்பிக்கையாளர்கள் இதற்கு கூடுதல் விசையளித்தனர், இருபதாம் நூற்றாண்டு சமூகவியலாளர்களும் தத்துவவியலாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் இதற்கு அறிவியல்பூர்வமான நம்பகத்தன்மை உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினர். நவீனத்துவம் தன் வசியங்களை இழந்து வசீகரமின்மை பெற்றுவிட்டது என்று மீண்டும் மீண்டும் தொடர்ந்து பேசப்பட்டு மிக அண்மைக்காலம் வரை அனைவராலும் ஏற்கப்பட்டுவிட்ட சித்தாந்தமாகவே மேற்கில் நிலவி வருகிறது.

இதன் மானுட தாக்கத்தைப் பேசினால், மத்திய காலத்தைத் தொடர்ந்து “மாயம்” என்பதற்கு மேற்கத்திய பண்பாட்டில் இருபொருள் இருந்து வந்திருக்கிறது: “திளைத்தல்’ மற்றும் ‘மயக்கம்’. மாயத்தின் இன்பங்கள் திளைப்பாக இருக்கும்போது, அவை நம்மை ஆட்கொண்டு கட்டுண்ட நிலைக்கு இட்டுச் செல்கின்றன, இதனால் மெய்மறந்த மயக்கநிலை ஏற்படுகிறது. அதற்கான மாற்று மருந்து வசியமிழத்தல். ஆனால், வசியப்படுதலைப் போல் வசியமிழத்தலுக்கும் நேர்மறை, எதிர்மறை பொருள் உண்டு.

வசியமிழத்தலின் நேர்மறை பொருள் விடுதலை: அபாயகரமான பிரமைகளில் இருந்து சுதந்திரம் கிட்டுகிறது. வசியமிழத்தலின் எதிர்மறை பொருள், நம்பிக்கை இழப்பு- லட்சியங்களை நிராகரித்தலும், அப்பாற்பட்ட நிலைகள் எவ்வடிவிலும் சாத்தியமில்லை என்று மறுத்தலும் இதன் விளைவுகள்.

வரலாற்றை விவரிக்கும் கதையாடலின் சிக்கல், அது மானுட உணர்வுத் தாக்கத்தை விவரிக்கும் கதையாடலோடு கலந்துவிடுகிறது என்பதுதான். உலக விவகாரங்களில் மாயத்துக்கு இடமின்றிப் போனது என்ற வரலாற்று மாற்றத்தை மாயமழிதலின் மானுட தாக்கமாகிய நம்பிக்கை இழத்தலுக்கும், ஆச்சரிய உணர்வுகள் அற்றுப் போதலுக்கும் இணையாக வரலாற்றுக் கதையாடல் கருதுகின்றது.

வசிய நிலைகள் களிப்பு மிகுந்தவையாக இருக்கலாம்; ஆனால் அவை பிரமைகளாகவும், முதிர்ச்சியற்றவையாகவும் இருக்கின்றன. வேண்டுமானால் குழந்தைகளுக்கும், பெண்கள், உழைக்கும் வர்க்கம், மேலைத்தேயத்துக்கு வெளியே இருப்பவர்கள் என்று இதர பகுத்தறிவற்றவர்களுக்கும் தக்கவையாக மாயங்கள் இருக்கலாம். நவீனத்தையும் மாயத்தையும் இணைத்துப் பேசும் வரலாற்றுக் கதையாடலுக்கு நேர்மறைக் கூறுகள் இருக்க இயலும் – வெபர் விவரணையைப் பொருத்தவரை இதுவே உண்மை- என்றாலும், அடிப்படையில் அதிருப்தியையும் இழப்பையுமே இக்கதையாடல் விவரிக்கிறது.

ஹோர்க்ஹைமர் மற்றும் அடார்னோ விஷயத்தில் இதை உறுதியாகச் சொல்ல முடியும், சார்லஸ் டெய்லரின் A Secular Age நூலுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். டெய்லரைப் பொருத்தவரை, சமயமற்ற மனிதர்கள் ‘உறையிடப்பட்ட அகங்கள்” வளர்த்துக் கொண்டு விட்டனர், ‘ஊடுதுளைகள்’ குறைவாக உள்ள காரணத்தால் அப்பாற்பட்ட நிலைகள் இவர்களுக்குச் சாத்தியமில்லை. இதனால் இவர்கள் முழுமையான வாழ்வு வாழ்வதில்லை, இவர்களின் வாழ்வு தட்டையாக இருக்கிறது என்கிறார் டெய்லர்.

இவ்வாறாக, நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொல்லாடல் விருப்பு வெறுப்பற்ற கதை கூறலல்ல, அது மதிப்பீடுகளை முன்வைக்கிறது. மாயமகற்றல் என்பது சமயமின்மைக்குச் சமமாகிறது, அதிருப்திக்கும் இணையாகிறது. இந்தச் சொல்லாடல், உலகின் மாயமின்மையை விவரிப்பதோடு உலகின் வசீகரமின்மையையும் ஒப்புக்கொள்கிறது. உண்மையில், பத்தொன்பதாம் நூற்றாண்டில், ‘disenchantment’ என்ற ஆங்கிலச் சொல் பெரும்பாலும் ‘பண்பாட்டு அவநம்பிக்கை’யின் இணைச்சொல்லாக இருந்து வந்தது. ஆர்தர் ஷோபன்ஹார் மற்றும் அவரது மாணவர்கள் அறிவுலகில் இத்தரப்பை முன்வைத்தனர்.

உதாரணத்துக்கு, 1885ஆம் ஆண்டு எட்கார் சால்டஸ் எழுதிய, The Philosophy of Disenchantment என்ற நூல், சமகால பண்பாட்டு அவநம்பிக்கையின் வரலாறாக இருந்தது, அது சமயசார்பின்மையின் வரலாற்றை விவரிக்கவில்லை. வெபரின் entzauberung (“removal of magic”) என்ற சொல், ஆங்கிலத்தில் ‘மாயம் அகற்றல்’ என்று மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாய், disenchantment என்று மொழிபெயர்க்கப்பட்டபோது, ஏற்கனவே நிலவி வரும் பண்பாட்டு அவநம்பிக்கையின் சாயல்கள் வெபரின் கருத்துக்கு அளிக்கப்பட்டன.

(தொடரும்)

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.