தீதும் நன்றும், நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, எட்டுத் திக்கும் மதயானை, சூடிய பூ சூடற்க… இந்தத் தலைப்புகளில் கிடைக்கிற காவியச் சுவையை இலக்கியம் அறிந்தோர் நன்கு உணர்வர்.
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் நன்கு அறிந்தவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருடைய ஒவ்வொரு தலைப்புகளிலும் எனக்கு அந்த ஆச்சர்யம் உண்டு. ஒவ்வொரு கதையிலும் தொனிக்கும் அறச் சீற்றம் அவற்றைப் படிக்கும் எனக்குள்ளும் அந்தச் சீற்றத்தை உருவாக்கும். ஒரு எழுத்தின் ஆகச் சிறந்த பாதிப்பு அதுவாகத்தானே இருக்க முடியும்?
அந்தக் கோபாவேசம்தான் அவர். அதனாலேயே சொல்ல வருகிற எதையும் உள்ளது உள்ளபடி தெள்ளத் தெளிவாகத் தன் படைப்புகளில் சொல்கிறார். கதையின் முடிவை… கதைக்கான தீர்வை ஆசிரியன் சொல்ல வேண்டியது இல்லை என ஓர் இலக்கிய போக்கு உண்டு. தீர்வைச் சொல்லாமல் மழுப்புவது என்ன இலக்கியம் என்ற இன்னொரு போக்கும்கூட உண்டு. சோப்பு அழுக்கைப் போக்குவதற்கா, சோப்பு சோப்புக்காகவா என்றெல்லாம் பேசி ஓய்ந்தாகிவிட்டது. அந்த சோப்பு போடுகிற வேலை எல்லாம் நாஞ்சில் நாடனிடம் இருக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு வகை இவருடைய எழுத்து.
நாஞ்சில் நாடன் எழுத்துகளில் கிட்டத் தட்ட தீர்வு நெருங்கிவந்துவிடும். இன்னும் ஒரு வரி சொன்னால், ‘ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்’ என்றோ ‘ஆகவே நேர்மையாக இருக்க வேண்டும்’ என்றோ சொல்ல வேண்டிய வரி ஒன்று இருக்கும். அந்த இடம் வந்ததும் நாஞ்சில் நாடன் தன் படைப்பின் கடைசி வரியை மிச்சம் பிடிப்பார். ஒளிவு மறைவு இல்லாத இலக்கியம் என்று இவருடைய எழுத்துக்களைச் சொல்வேன். தலைகீழ் விகிதங்களாகட்டும், மிதவை ஆகட்டும் வாழ்வை அப்பட்டமாக எடுத்து நம் கண் முன் வைப்பவை. அதில் நாஞ்சிலாருக்கு ஒரு தயக்கமும் இருந்ததில்லை.
அவருடைய கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் கரு ஒன்றுதான். உணவைப் பற்றி எழுதினாலும் ஒழுக்கத்தைப் பற்றி எழுதினாலும் ஏதோ ஒரு புள்ளியில் அது கதையாகவோ, கட்டுரையாகவோ உருமாறும். இரண்டுக்குமே அவர் முதலில் பழந்தமிழ் இலக்கியத் தரவுகளை தயார் செய்கிறார். சமூக ஆய்வுகள் தரும் விளக்கங்களைத் தருகிறார். கதையோ, கட்டுரையோ இரண்டுக்குமே அவர் ஈடுபாடுகாட்டும் செய்நேர்த்தி அல்லது செய் பாணி எனக்கு ஒன்றுபோலவே இருக்கும்.
ஒரு படைப்பின் வகை எப்படி எந்த இடத்தில் திசை மாறுகிறது என்பது அசாத்தியமானது. அவர் ஓட்டுப் பொறுக்கிகளைப் பற்றி எழுதினால் கட்டுரை, ஓட்டுப் போட வேண்டிய ஒருவனின் பெயரில் ஏற்படும் குழப்பத்தை நுட்பமாக படம்பிடிக்கும்போது அது தரமான சிறுகதை (எல்லோரும் இந்நாட்டு மன்னர்)ஆகிறது. அவர் நாஞ்சில் நாட்டு உணவு பற்றி எழுதினால் கட்டுரை. அதை (இடலாக்குடி ராசா) ஆக்குவது அவருடைய எழுத்தின் ஜாலம்.
ஒரு சில பால் பாயின்ட் பேனா இரண்டு நிறங்களில் எழுதும். அதன் தலையை ஒரு முறை அழுத்தினால் அது நீல நிறத்தில் எழுதும். இன்னொரு முறை அழுத்தினால் சிவப்பு நிறத்தில் எழுதும். அப்படி ஏதோ ஒரு ஜாலம்தான் எனக்கு நாஞ்சில் நாடன் எழுத்துகளில் தெரிகிறது.
அரசியல், இலக்கியம் சினிமா என பல துறைகளிலும் அவருடைய அறிவு தனித்துவப் பார்வையுடன் இருக்கும்.
எனக்கு அவரை அவருடைய ‘மிதவை’ முதல் பதிப்பு வந்த நாளில் இருந்து தெரியும். அவருக்கு என்னை நான் எழுதிய ‘வெட்டுப்புலி’யில் இருந்து தெரியும்.
என் நாவலை அவர் சென்னை புத்தகச் சந்தையில் வாங்கியதாகச் சொன்னார். அதைப் படித்துவிட்டு, உயிர்மை பதிப்பகத்தில் என்னுடைய எண்ணைப் பெற்று என்னிடம் பேச விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். உயிர்மையில் இந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். நானே அவரிடம் பேசினேன். மிகவும் மகிழ்ந்தார். சில நிமிடங்கள்தான் பேசினார் என்றாலும் எனக்கு கல்வெட்டு போல பதிந்தது. ‘இது பத்திரிகையாளர் ஒருவர் எழுதிய கதை என்பதால் அன்று புத்தகச் சந்தையில் நான் வாங்கிய நூல்களில் கடைசியாகத்தான் இதைப் படித்தேன். மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. நான் நூல்களை படித்தவுடன் யாருக்காவது படிக்கக் கொடுத்துவிடுவேன். சில நூல்களை மட்டும் என்னுடனேயே வைத்துக்கொள்வேன். வெட்டுப்புலி அத்தகைய நூல்களில் ஒன்று.’
அன்றுதான் நான் இலக்கிய ஏணியில் அடுத்தப்படியில் ஏறியதாக நினைத்தேன். நான் மிகவும் நேசிக்கும் ஓர் எழுத்தாளர் என்னை யார் என்றே அறிமுகம் இல்லாமல் என் நூலை வாங்கி வாசித்திருக்கிறார் என்ற பெருமை சூழ்ந்தது. உடனே இன்னொரு நாவலை எழுத வேண்டும் என்று ஆவேசம் ஏற்படுத்தும் பாராட்டு அது. இளம் எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்துப் பாராட்டும் அவருடைய குணம், பாராட்டுக்குரியது.
நான் எந்த எழுத்தாளரையும் தேடிச் சென்று பார்த்தவன் இல்லை. நான் பணியாற்றும் பத்திரிகைகளுக்காக ஏற்பட்ட பழக்கம்தான் பெரும்பாலும். ஏனோ… அப்படி ஒரு தயக்கம். தினமணியில் பணியாற்றும்போது சுந்தர ராமசாமி, சி.சு செல்லப்பா, ஜெயமோகன், கோபி கிருஷ்ணன் என பலர் வருவார்கள். ஒரு வணக்கம் சொல்வதோடு என் அறிமுகம் நின்றுவிடும். அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது எனத் தோன்றும். பேசுவதன் மூலம் நம்முடைய அறியாமையை வெளிப்படுத்திவிடுவோமோ என நினைப்பேன். பேசுவதன் மூலம் நமக்கு அவர்களைப் பிடிக்காமல் போய்விடுமோ எனவும்கூட நினைத்ததுண்டு. அது வாத்தியாரிடம் பையன் காட்டும் வினோதமான அச்ச உணர்வுதான்.
ஓர் இலக்கிய விழாவுக்காக நாகர்கோவில் சென்றிருந்தபோது ஜெயமோகனைச் சந்திக்கச் சென்றதுதான் என் சுய முயற்சியினால் நடந்தது. அந்தச் சந்திப்பில் திருவனந்தபுரத்தில் தமிழ் வளர்த்த பல அறிஞர்களைப் பற்றிச் சொன்னார். ஆச்சர்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஆக, நாஞ்சில் நாடனுடன் நானும் அதற்கு மேல் பெரிதாக எதுவும் பேசியதில்லை. விகடன் மாணவர் பயிற்சி திட்டத்துக்காக, மாணவர்களிடம் பேசுவதற்கு அவரை அழைக்கச் சொன்னார்கள். அழைத்தேன். அந்தப் பொறுப்பை ஏற்று செய்யும்போது அவர் வர வேண்டிய தேதி, ரயில் டிக்கெட், தங்கும் அறை சம்பந்தமாகப் பேசினேன்.
ஏனோ அந்தக் குறுமுனி தன் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து பிடிசாபம் எனச் சொல்லிவிடுவாரோ என்ற தயக்கம் இருக்கிறது. எழுத்துலகில் எனக்கு யாரும் குரு இல்லை… அப்படி யாரையாவது அடையாளம் காட்ட வேண்டுமானால் இவரையும் சேர்த்து 100 பேரையாவது காட்ட வேண்டியிருக்கும்.
என்னுடைய அந்த 100 வாத்தியார்களுக்குமே நான் அவர்களின் சீடன் எனத் தெரியாது.