சிறுகதை

நாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை

அவர் கையிலிருந்த  அந்தச்  சங்கிலி  அப்படியொன்றும்உறுதியானதாக  இல்லை. சங்கிலியோடு  இணைக்கப்பட்டிருந்த  கழுத்துப்பட்டி  அந்த  நாயின்  கழுத்தை  கவ்வியிருந்தது.  ஒரு  நேரம்அவர்  நாயை  பிடித்தபடி  முன்னே  செல்வார். நாய்  அவருக்குக்   கட்டுப்பட்டுஇலகுவாக  நடக்கும். அப்பொழுது  சங்கிலி   தொய்வாக  இருக்கும்.

மற்றொரு  நேரம்  அது  அவரை  இழுத்துக்கொண்டு  செல்லும். அப்போது  அவர்  நாயின்  வேகத்துக்கு  ஈடு  கொடுக்க  முடியாமல்ஓட்டம், நடைக்கு  இடைப்பட்ட  வேகத்தில்  சென்று  கொண்டிருப்பார்.

நாய்  திடீரென்று  நினைத்துக்கொண்டாற்போல  நிற்கும். அவரும் அதற்கு  அனுமதியளித்து  இடுப்பில்  கைவைத்து  காத்திருப்பார். சில வினாடிகளுக்குப்  பிறகு  மீண்டும்  நடைபயிற்சி  ஆரம்பிக்கும். காலை  ஆறுமணி   காட்சி  அது.

” ஆறு  மணியானா  நாய்சார்  வாக்கிங்  கிளம்பிடுவார்.  அதை  வச்சு மணி  ஆறுன்னு   தெரிஞ்சிக்கலாம்”  என்றாள்  பானு.

தெரு  L  வடிவிலானது  தெருக்கோடியில்  அவர்  வீடு  உள்ளது. மூன்றுஆண்டுகளுக்கு  முன்பு  அவர்  அங்கு  குடி  வந்தார்.  தெருவுக்குஅடிக்கடி  சாமான்கள்  ஏற்றிய  லாரி  வருவதும், தெருவிலிருந்துஅதேபோல்  சாமான்  ஏற்றி   டெம்போக்கள்   வெளியேறுவதும்வழக்கம்தான்.

யார்  வருகிறார்கள், போகிறார்கள்  என்று  தெரியாத, தெரிந்து  கொள்ள  ஆர்வப்படாத  நடுத்தர  வர்க்கத்து  சனங்கள் வசிக்கும்  நகரத்தின்  தெருக்களில்  அதுவும்  ஒன்று. ஒரு  மத்தியான பொழுதில்தான்  நாய்சார்  குடிவந்தார். அவரோடு  அந்த நாய்,  குட்டியாக  வந்தது.

” வர்ற  வழியில  கிடைச்ச  குட்டி  இது. ரோட்டோரமா  நின்னுகிட்டிந்தது. வெள்ளரிக்கா  வாங்க  இறங்கின  என்னைப் பார்த்துட்டு  கத்துச்சு.  தூக்கிட்டு  வந்துட்டேன்.”

பின்னொருநாள்  நாய்சார்  சொன்னார். அவர்  காலையில்  நாயோடுவாக்கிங்  போவார். பிறகு  எட்டரை  மணிக்கு  இருசக்கர  வாகனத்தில்அலுவலகம்  செல்வார். அப்போது  தெருமுனை  வரை  நாய்  அவர்பின்னோடு  ஓடிப்போகும்.

அவர்  சாலையில்  கலந்த  பிறகு  சிறிதுநேரம்  நின்று  கொண்டிருந்துவிட்டு  திரும்பி  வந்து  அவர்  வீட்டுவாசலில்  படுத்துக்கொள்ளும். மாலையில்  அலுவலகம்  முடிந்து  வந்தபிறகு  நாய்சார், நாயை  மறுமுறை  வாக்கிங்  கூட்டிப்  போவார்.

அந்தியின்  மஞ்சள்  வெயில்  படிந்த  சாலையில்   அவர்  நாயைப்   பிடித்தபடி  நடந்து  கொண்டிருப்பார். நடைப்பயிற்சிக்கு  தோதாக  அதன்   கழுத்தில்  சங்கிலி  கட்டிவிடுபவர்  வீட்டுக்கு  வந்ததும்  அவிழ்த்துவிட்டுவிடுவார்.

கட்டப்பட்ட  சங்கிலியிடத்தில்  கட்டுப்பாடு  இல்லை  என்று  நாய்  புரிந்து  வைத்திருந்ததோ  என்னவோ, வாயில்  காப்போன்  போல  இருந்த  இடத்தை  விட்டு  அசையாமல் அங்கேயே   கிடந்தது.

வாசற்கதவு  கிறீச்சிட்டால்  தலையுயர்த்திப்  பார்க்கும். தெரிந்த  முகமாயிருந்தால்  முன்னங்கால்களுக்கு  மத்தியில்  முகத்தை  பதித்துப்  படுத்துக்கொள்ளும். புது  ஆளாக  இருந்தால்  ஜாக்கிரதை  உணர்வோடு  விருட்டென்று  எழுந்து  நின்று  குரைக்கும்..

” நாயைக்  கட்டிப்போடுங்க  சார். பயமாயிருக்கு ” என்று  யாராவது  கூறினால்  நாய்சார்  சிரிப்பார்.

” கட்டிப்போட்டு  வெறித்தனத்தை  அதிகப்படுத்தக்கூடாது. நீங்க  பயப்படாம  வாங்க. நானிருக்கேன்” என்பார்.

நான்  ஒருமுறை  சென்றபோது  நாய்  பார்த்துவிட்டு  படுத்துக்கொண்டது.

” நீங்க, நம்ம  தெருவாசின்னு  அதுக்கு  தெரிஞ்சிருக்கு. அதான்  சிநேகமா  ஒருபார்வை  பார்த்துட்டு  படுத்துகிச்சு…..” என்றார்  நாய்சார்.

அவர்  தாசில்தார்  அலுவலகத்தில்  வேலை  செய்கிறார். பட்டா  சம்மந்தமாக  அவரிடம்  சந்தேகம்  கேட்க  வேண்டியிருந்தது.  அப்படித்தான்  நாய்சார்  அறிமுகமானார்.

” நாயைக்  கட்டிப்  போடற  பழக்கம்  இல்லையா…..?” என்று  நான்  கேட்டபோது,

” அதுக்கென்ன  அவசியம்….?” என்று  அவர்  திரும்பக்  கேட்டார்.

” ஆரம்பத்துல  அது  பகல்ல  வெளியில  சுத்திட்டு  வரட்டும்னு  கட்டாம  விட்டிருந்தேன். ஆனா  அது  வீட்டை  விட்டு  எங்கேயும்  நகரலை. பழியா  வீட்டு  வாசல்லயே   கிடந்தது.   அப்புறம்தான்  வாக்கிங்  கூட்டிட்டுப்  போக  ஆரம்பிச்சேன். உங்களுக்கொண்ணு  தெரியுமா……இந்த  நாய்  இதுநாள்  வரைக்கும்  வீட்டுக்குள்ள  வந்ததேயில்ல. ”

எனக்கு  ஆச்சர்யமாக  இருந்தது. அவர்  தலையசைத்து  சிரித்தார்.

” ஆமா….வளர்ப்பு  நாய்ங்க  காலுக்கடியிலேயே  கிடக்கறத  நான்  பார்த்திருக்கேன். ஆனா  இது  தெருவோட  சரி. உள்ளே  வரவழைக்க  எவ்வளவோ  முயற்சி  பண்ணிட்டேன். பலிக்கல. ஊர்  எல்லையில  காவல்  காக்கற  அய்யனார்  சாமி  மாதிரிதான்  இதுவும். அப்படித்தான்  நான்  நினைச்சிக்கிட்டிருக்கேன் ” என்றவர்  எழுந்து  சென்று  ஃபிரிட்ஜிலிருந்து  குளிர்பானம்  எடுத்து  வந்தார். வாசற்படி  நிலையருகில்  நின்று  நாய்  என்னையே  பார்த்துக்கொண்டிருந்தது.

” இனி  நீங்க  கிளம்பற  வரைக்கும்  அந்த  இடத்தைவிட்டு  நகரவே  நகராது. அப்படியே  வெறிச்சு  பார்த்துக்கிட்டு  நிக்கும். ஒரு  பிடி  சோறு  போட்டதுக்கு  எவ்வளவு  நன்றியுணர்ச்சி  பாருங்க….”

அவர்  குளிர்பானத்தை  தம்பளரில்  நிரப்பித்  தந்தார். வீடு  சுத்தமாயிருந்தது. அனாவசிய  அடைசலில்லை. வலது  மூலையில்  டிவி, பிரம்பு  சோபா  தவிர  வேறு  சாமான்களில்லை. திரைச்சீலைக்கு  அப்பாலிருந்த  அறைக்குள்  அவர்  மனைவி  இருந்திருக்க  வேண்டும். லேசாக  இருமல்  சத்தம்  கேட்டது.

” அவ  கொஞ்சம்  சுகவீனமாயிருக்கா” என்றார்  நாய்சார்.

என்ன, ஏதென்று  விசாரிக்குமளவுக்கு  பழக்கமில்லாததால்  நான்  எதுவும்  கேட்கவில்லை. நாலைந்து  சந்திப்புகளுக்குப்   பிறகு  அவரே  சொன்னார்.

” குழந்தையில்லாத  கவலை  மனசை  அரிச்சு  உடம்பை  பலவீனமாக்கிடுச்சு. காலையில  மெல்ல  எழுந்து  சமையல்  செஞ்சு  வச்சிட்டு  படுத்துக்குவா. மறுபடியும்  சாயங்காலம்  விளக்கேத்தற  நேரத்துல  கொஞ்ச  நேரம்  உட்கார்ந்து  நாலைஞ்சு  சுலோகம்  சொல்லிட்டுப்  படுத்துக்குவா. வெளிவேலைகளுக்கு  ஆள்  வச்சிக்கிட்டேன். நானும், அவளும்  ஒண்ணா   சேர்ந்து  வெளியில  போய்  இருபது  வருஷமாயிடுச்சு.”

நாய்சார்  இதைச்  சொன்னபோது  அவர்  குரல்  நடுங்கியது. சிறிது  நேரத்தில்  சகஜமான  அவர், தெருவாசிகள்  தன்னை  நாய்சார்  என்று  அழைப்பதாக   சொல்லி  சிரித்தார்.  அவருக்கு  அந்தப்பெயர்  மிகவும்  பிடித்திருப்பதாக  சொன்னபோது  வியப்பாக  இருந்தது.

” நான்  படிச்ச  பள்ளிக்கூடத்துல  ஒரு  வாத்தியார்  எப்பவும்  கையில  பிரம்போட  இருப்பார். அந்தப்  பிரம்பு  நல்லா  மழுமழுன்னு   பார்க்கவே  வசீகரமா  இருக்கும். அதால  ஒண்ணு  வச்சாருன்னா  சுளீர்ன்னு  வலி  தெறிச்சுவிடும். வாத்தியார்  அந்தப்  பிரம்பை வீட்டுக்கு  எடுத்துட்டுப்  போய்  எடுத்துட்டு  வருவார். அதனால எல்லாரும்  அவரை  தடி வாத்தியார்ன்னு  கூப்பிடுவாங்க. அந்த  மாதிரி  எனக்கும்  நாய்சார்ன்னு  பேர்  கிடைச்சிருக்கு ” என்ற நாய்சாரை  எதிர்  ஃப்ளாட் வாட்ச்மேன்  அந்தப்  பெயரைச் சொல்லி  கூப்பிட்டிருக்கிறான்.

” நாய்சார்  வாக்கிங்  கிளம்பியாச்சா……?”

வாய்தவறி  கேட்டுவிட்ட.  அவன்  திருதிருவென்று  முழித்திருக்கிறான். பின்  அதை மறைக்க ஏதேதோ  பேசி  மழுப்பியபோது  நாய்சார்   விடவில்லையாம்.  துருவித்துருவி  கேட்டு  தெரிந்து  கொண்டாராம்.

” நாயோட. நீங்க  வாக்கிங்  போறதப்  பாத்து  நாய்சார்ன்னு  ஒருத்தர்  சொல்லப்போக  பின்னாடி  அதுவே  பேராயிடுச்சு ” என்றானாம்  அவன்.

நாய்சார்  சொல்லிவிட்டுப்   புன்னகைத்தார்.

” நாய்  துஷ்டமான  மிருகமில்ல. அதுக்கிருக்க   நன்றியுணர்ச்சியில  கால்வாசி  நமக்கிருந்தா போதும். நமக்கு  உதவி  செய்தவங்களை நாம  மறக்கவே  மாட்டோம் ”  என்றார்  நாய்சார்.

அலுவலகம்  முடிந்து  வர  தாமதமானால்  நாய்  காம்பவுண்ட்   கதவருகில்  நின்று   தெரு முனையை  வெறித்துப்  பார்த்துக் கொண்டிருக்குமாம். தூரத்தில்   அவரது  வண்டிச்  சத்தம்  கேட்டால்   பாய்ந்தோடி  எதிர்கொண்டு   அழைத்து  வருமாம்.

” முன்னாடியெல்லாம் அலுவலகத்துக்குப்  போகும்போது  என்  மனைவியை  தனியா  விட்டுட்டுப்  போறேனேன்னு  கவலையோட கிளம்புவேன். இந்த  ஊருக்கு  வந்தப்புறம்  அந்தக்  கவலை  இல்லாம போச்சு. வரும்போதே  இன்னொரு  ஜீவனையும் அழைச்சிட்டு  வந்ததுல  தைரியமா ஆபீஸ்  போறேன். ”

நாய்சார், நாயின்  முதுகை  பாசமாய்  தடவிக்  கொடுத்தார். அது  தலையை   பட், பட்டென்று   இரண்டுமுறை  உலுக்கிக் கொண்டது.  செம்பழுப்பு  நிற  நாய்  அது. நாட்டு  நாய்க்கே  உரிய   மெலிந்த  தோற்றம்  கொண்டிருந்தது.

” இதுக்குன்னு  தனியா  எதுவும்   சமைக்கிறதில்ல. நாங்க   சாப்பிடறததான்  இதுவும்   சாப்பிடுது. மத்தியான  சோறு  என்   மனைவி  வைப்பா.  மெல்ல   எழுந்து  வந்து  அவ  சோறு  வச்சதும்  அவளை  ஒரு  பார்வைப்   பார்க்குமாம்.  அது,  நீ சாப்பிட்டியான்னு  கேட்கிற மாதிரி   இருக்குமாம்.  ஒருநாள்  என்  மனைவி  சொல்லிட்டு  அழுதா. ”

நாய்சார்  சொன்னபோது  எனக்கு  வியப்பாக. இருந்தது.

” நாமகூட   ஒரு  நாய்  வளர்க்கலாம்ங்க…..” என்றாள்  பானு. எனக்கும்  ஆசைதான். இருந்தும்  முறையாக  அதைப்  பராமரிக்க  முடியுமா  என்று சந்தேகமாயிருந்தது. மேலும்  ஃபிளாட்டில்  அதற்கு  அனுமதி பெறவேண்டும். தனி  வீட்டில்  நாய்  வளர்ப்பதைக்  காட்டிலும்  ஃபிளாட்டில்  வளர்ப்பது  சிரமமானது.  அதனால்  அந்த  எண்ணத்தை  கைவிட்டேன்.

” வெளிநாட்டு  நாய்  வளர்க்கணும்னு  இல்ல. நாட்டு  நாயே  வளர்க்கலாம். ரெண்டுமே  விசுவாசத்துக்கு  குறைச்சலில்லாதது” என்றார்  நாய்சார்.

நான்  அதிலுள்ள  சிரமத்தைச்  சொன்னதும்  ஒத்துக்கொண்டார். அன்று  மாலைநேர  நடைப்பயிற்சியின்போது  நானும்  அவருடன்  இணைந்து  கொண்டேன்.  நாங்கள்  சாலையோரமாக  நடந்தோம்.

நாய்  இலக்கை  குறிவைத்து முன்னேறும்   தீவிரத்துடன்  நடந்து கொண்டிருந்தது.  நாய்சார்  சிறு வயதில்  தன்னுடைய  வீட்டிலிருந்த  நாய்  பற்றி  சொல்லிக்  கொண்டே  வந்தார்.

” கிராமத்துல  பார்த்தீங்கன்னா, வீட்டுக்  கொல்லையிலயோ, தெருவுலயோ  ஒரு  நாய்  எப்பவும் படுத்துக் கிடக்கும். அப்படி எங்க  வீட்டுலயும்  ஒரு  வெள்ளைநாய்

இருந்தது. எங்கம்மா  அதுக்கு  ஒரு  பிடி  சோறு  வைப்பாங்க.  தின்னுட்டு  ஊரைச்  சுத்திட்டு  எங்க வீட்டு  வாசல்ல  வந்து  படுத்துக்கும்.  நான்  பள்ளிக்கூடம் போகும்போது  என்  கூடவே  வரும். பள்ளிக்கூட   காம்பவுண்டு வரைக்கும்  வரும்.  நான்  உள்ளேப் போயிட்டேன்னு  உறுதி செஞ்சுக்கிட்டு  மெதுவாத்  திரும்பிப் போகும். அதேமாதிரி  சாயங்காலம்  பெல்  அடிக்கிறப்ப  காம்பவுண்டு  கிட்ட  வந்து  நின்னு  என்னைக்  கூட்டிட்டுப்  போக காத்திருக்கும். ஆச்சரியமா இருக்குல்ல…….?”

நான்  தலையசைத்தேன். பின்  என் பெரியப்பா  வீட்டில்  வளர்ந்த  நாயைப்  பற்றி  சொன்னேன்.

” மனிதன்  தன் புத்திசாலிதனத்தைக்  கொண்டு  யானையைக்  கூட அடிமையாக்கிடறான். யானை  தன்னோட  பாகன்  சொல்படி  காசை  வாங்கி  அவன்கிட்ட கொடுக்குது. ஆனா  நாய்கிட்ட நாம அடிமைத்தனத்தை  எதிர்பார்க்க  முடியாது. அன்பா  தடவிக் கொடுத்தா  அது  உசுரையே  தரும்”  என்றார்  நாய்சார்.

நாய்  நடப்பதை  நிறுத்திவிட்டுசுவற்றில்  ஒட்டப்பட்டிருந்த  சுவரொட்டியை  வெறித்தது. பின்  என்ன  நினைத்ததோ  மெதுவாக  நடக்க  ஆரம்பித்தது.  சாலையில்  போக்குவரத்து  மிகுதியாயிருந்தது.

கடைகள்  நிறைந்திருந்தன. பிள்ளையார்  கோவில்  வாசலில்  சிறு  கூட்டம்கூடியிருந்தது. அன்று  ஏதாவது  விசேஷ  நாளாயிருக்கும்  என்று  நான்  நினைத்துக்கொண்டேன்.

நாய்சார்  செருப்பைஅவிழ்த்துவிட்டு  சங்கிலியைப்  பிடித்தபடியே  கையெடுத்துக்கும்பிட்டார். நாய்  அவரையே  பார்த்துக்  கொண்டிருந்தது. கோவில்வாசலில்நின்றிருந்த  பெண்மணியின்  கையிலிருந்தகுழந்தை  நாயைக்  கண்டதும்  துள்ளியது.

மழலை  மொழியில்  ஏதோ பிதற்றியது. நாய்  திரும்பிப் பார்த்தது. குழந்தை  உதைத்து  இடுப்பிலிருந்து  இறங்க  முற்பட்டது.  அதன்  தாய்  விடவில்லை.

”  நாய்கடிச்சிடும்” என்று  பயமுறுத்தினாள்.

நாய்  நகர்ந்து  நாய்சார்  பக்கத்தில்  நின்று  கொண்டது  தான், வளர்ப்புநாய்  என்று  உறுதிபடுத்த  நினைத்ததோ  என்னவோ.  நாய்சார்  நாயை தடவிக்  கொடுத்தபடியே  குழந்தையைப்  பார்த்து  சிரித்தார். குழந்தை  கைகளை  நீட்டித்  தாவியது.

” பேசாம   இரு.  இல்லேன்னா அம்மா  அடி  கொடுப்பேன்.”

அந்த  அம்மா  நகர்ந்து  போனாள்.

” குழந்தைகளுக்கு  நாய்னா  ரொம்ப  இஷ்டம்.  எங்க  வீட்டுக்குப்பக்கத்துல  இதேமாதிரி  ஒருகுழந்தை  இருக்கு. அதுக்கு  எப்பவும்  நாயைத்  தொட்டுத், தடவி  விளையாட  ஆசை. அவங்கம்மா  ஒரு  அடி  எடுத்து  வைக்க  விடமாட்டாங்க. கையில  ஒரு  கரடி  பொம்மையோட  அந்தக்   குழந்தை  ஜன்னல்  வழியா   ஏக்கமா  பார்த்துக்கிட்டேயிருக்கும். சில  பேருக்கு   வளர்ப்பு  மிருகங்கள்னா   ஒவ்வாமை”  என்றார்  நாய்சார்.

இருட்டத்  தொடங்கியிருந்தது.  நாங்கள்  திரும்பி  நடக்க   ஆரம்பித்தோம்.

நாய்  ஒரு  விளக்குக்  கம்பத்தில்  ஒதுங்கிவிட்டு  நடந்தது. சகமனிதன்  போல்  பாவித்து  ஒரு தோழமை  உணர்வோடு  நாய்சார்  அதனுடன்  நடந்து  கொண்டிருந்தார். எஜமானரின்  பிடிக்குள்  திமிரும்  நாய்  போலன்றி  அதுவும்  இயல்பாக  நடை போட்டது.

சாலையோர  மின்விளக்குகள் பளிச்சிட த்  தொடங்கின. கடந்து சென்ற  கடலை  வண்டியில்  வறுபட்ட கடலையின்  மணம்  நாசியை  வருடியது. நாய்சார்  இரண்டு  கடலைப்  பொட்டலங்கள் வாங்கி  ஒன்றை  என்னிடம்  தந்தார்.

” அவளுக்குக்  கடலைன்னா  ரொம்பப்  பிரியம். வறுபட்ட  சூடு ஆறிப்  போறதுக்குள்ள சாப்பிடணும்னு  சொல்லுவா ” என்றவர்,

” ஆனா  இந்நேரத்துக்கு  கடலை  சாப்பிட்டா  அவளுக்கு  செரிக்கிறதில்ல. அதனால  பிற்பகல்  எடுத்துக்குவா ” என்றார்.

” உங்களுக்கு  வாங்கிக்கலையே…..”

நான்  என்னிடமிருந்ததை  நீட்டினேன். வேண்டாமென  சைகை செய்தவர்  ஃபிளாட்டுக்கருகில் வந்ததும்  விடைபெற்றுக்  கொண்டார்.

”  நாளைக்கு  நேரமிருந்தா  வாங்களேன்.”

நான்  அவரது  அழைப்பைஏற்றுக்கொண்டேன்.  காலைநேர நடைபயிற்சி  எனக்கு  அவ்வளவாக  ஒத்து  வருவதில்லை. அலைபேசியில்  அழைப்புகள்வந்தவண்ணமிருக்கும். ஒவ்வொருஅழைப்பும்  கால்மணி, அரைமணி  என்று  நேரத்தை  சாப்பிட்டுவிடும். என்  வேலை  அப்படி.

அதனால்  மாலை  நேரத்தை  தோதாக்கிக் கொண்டேன். வேலை  முடிந்து  நேரமே  வீட்டுக்கு  வரும்  நாட்களில் நாய்சாருடன்  நடைப்பயிற்சி  செல்ல  ஆரம்பித்தேன். பானுவுக்கு  பரம திருப்தி.

” நீங்க, நாய்சார், நாய்  மூணுபேரும்  வாக்கிங்  போறது  பார்க்க  சிரிப்பா  இருக்கு”  என்று  கிண்டல்  வேறு செய்தாள்.

இரவு  உணவை  நாய்சார்  தயாரிப்பாராம்.

” பெரும்பாலும்  இட்லி  அல்லது  தோசைதான்  ராச்சாப்பாடு. அதனால  நானே  தயார் பண்ணிடுவேன். இட்லியோ, தோசையோ  கொஞ்சம்  பால்  சேர்த்துப்  பிசைஞ்சு  வட்டில்ல  வச்சுட்டா  நாய்  சாப்பிட்டுடும்.”

அன்றைய  நடைப்பயிற்சியின்போது   நாய்சார்  சொல்லிக்கொண்டே  அந்த  சாலையோரப்  பூங்காவிலிருந்த  சிமெண்ட் பெஞ்சில்  அமர்ந்தார். என்னையும்  அருகில்  அமரச்  சொன்னார். நாய்  பின்னங்கால்களை  மடக்கி  முன்னங்கால்களை  ஊன்றி  அமர்ந்து  கொண்டது.

“ நாய்களை  கவனிச்சிருக்கீங்களா…….நான்  பார்த்தவரைக்கும்  அதுங்க  பெரும்பாலும்  அஞ்சு  விதமான போஸ்ல  தான்  இருக்கும். ”

நாய்சார்  சொல்லிவிட்டு தொண்டையை  செருமிக்  கொண்டார். கடந்த  ஒரு  மாதமாக  அவருடன்  நடைப்பயிற்சி  வருவதில்  நிறைய  விஷயங்களை தெரிந்துகொண்டேன். அதிலும்  குறிப்பாக  நாய்களைப்  பற்றி  அதிக  தகவல்களைக்  கூறினார். நாய்சார்  அருகில்  அமர்ந்திருந்த நாயின்  தலையைத்  தடவிவிட்டார். அது  பெருமையாக  என்னைப்  பார்த்தது.

” சார், சொல்லுங்க…….”

நான்  ஞாபகமூட்டினேன்.

” அஞ்சு  விதமான  போஸ். முதலாவது  இதோ  இப்படி, பின்னங்கால்களை  மடக்கி  தரையில  பதிச்சு  முன்னங்கால்களை  ஊன்றி உட்கார்ந்திருக்கறது,  ரெண்டாவது  முழு  உடம்பையும்  தரையில  கிடத்தி  கால்களை  நீட்டிப்  படுத்துக்கறது,  மூணாவது பின்னங்கால்களை  மடக்கி  முன்னங்கால்களை முன்னால  நீட்டி  உட்கார்ந்துக்கறது, நாலாவது  அப்படியே  முன்னங்கால்களுக்கு  மத்தியில  முகத்தைப்  பதிச்சு  படுத்துக்கறது,  அஞ்சாவது  உடம்பைக்  கிடத்தி  கால்களை  நீட்டிப்  படுத்தவாக்குல  தலையை உயர்த்திப்  பார்த்தபடி உட்கார்ந்திருக்கறது. இதைத்தவிர வேறமாதிரி  இருந்து  நீங்கப் பார்த்திருக்கீங்களா……?”

நான்  யோசித்தேன்.  எதுவும்ஞாபகத்துக்கு  வரவில்லை. இல்லையென்று  தலையாட்டினேன். அவர்   சொன்னபோது  கண்ணுக்கெதிரே  காட்சிகள்  வந்து  போயின. நாய்சார்   தொடர்ந்தார்.

“ நாய்  கால்களை   நீட்டி  உடம்பைக்  கிடத்தி  படுத்துத்   தூங்கும்போது  ஆழ்ந்த உறக்கத்துல  இருக்கும். அதுவே   பின்னங்கால்களை  மடக்கி  முன்னங் கால்களை  நீட்டி  நடுவுல  முகத்தைப்  பதிச்சு  தூங்கறப்ப  எப்பவும்  தாக்கத்  தயாராயிருக்க  ராணுவவீரன்  மாதிரி  உஷார்  நிலையிலயே  இருக்கும். சின்னதா  ஒரு  சத்தம்  கேட்டாலும்  விருட்டுன்னு  எந்திரிச்சு  நிக்கும். இதெல்லாம்  என்னோட  கணிப்புதானேயொழிய  நிரூபிக்கப்பட்ட  உண்மையில்ல ”  என்றார்  நாய்சார்.

நான்  அவரையே  பார்த்துக்  கொண்டிருந்தேன். தன்நாய்  மீதான  அன்பில்  அவர்எவ்வளவு  யோசித்திருக்கிறார்என்று  தோன்றியது. மறுநாள்நான்  அவருடன்  நடைப்பயிற்சிக்கு  செல்லவில்லை.

அதற்கடுத்த  நாட்களும்  அலுவலகத்தில்  வேலை  அதிகம்  இருந்ததில்  செல்ல  முடியவில்லை. நாய்சாரிடம் அலைபேசியில்  சொன்னபோது,

” விடுங்க  பார்த்துக்கலாம்” என்றார்  அவர்.

கிட்டதட்ட  ஒரு  மாதமாகியிருந்தது  அவருடன்  நடைபயிற்சி  சென்று. காலையில் பால்கனியில்  நின்று  அவர் போகும்போது  கையசைப்பதோடு சரி.

”  ஒழுங்கா  வாக்கிங்  போயிக்கிட்டிருந்தீங்க. அதுவும் போச்சு…….” என்று  பானு  புலம்பினாள்.

மழை  நாட்கள்  தொடங்கிவிட்டன. அப்படியொன்றும்  பெரிதாக  கொட்டி விடவில்லை. மழை ஓரிரு  நாட்கள்  கனத்து  பெய்தது. மற்ற  நாட்களில்  நினைத்துக் கொண்டாற்போல்  தூறல்  போட்டது. விரல் விட்டு  எண்ணிவிடலாம்  என்கின்ற  அளவுக்கே  இருந்தன  மழை  நாட்கள்.

” நல்லவேளையா  காலைநேரத்துலமழை  பெய்யறதிலல”  என்றார்  நாய்சார்.

அவர்  நடைபயிற்சிக்கு  போக  மழை  பெறும்  ஒத்தாசை  செய்தது. மழை  கொட்டும்போது  கார்  பார்க்கிங்கில்  நாய்  படுத்துக் கிடக்குமாம்.

” நாய்க்கு  தடுப்பூசி  போட்டுட்டு வந்தேன். ”

ஒருநாள்  மாலை  அலுவலகம்  முடிந்து  திரும்பியபோது  தெருமுனையில்  எதிர்ப்பட்ட  நாய்சார்  சொன்னார்.

” நாய் வச்சிருக்கறவங்களுக்கு  இதெல்லாம்  கூடுதல்  சுமை  இல்லையா…….?”

நான்  கேட்டபோது  நாய்சார்  மறுத்து  தலையாட்டினார்.

” குழந்தையை  கவனிச்சிக்கறதை  சுமையா  நினைப்போமா…… அப்படித்தான்  இதுவும்” என்றார்.

அன்று  காலை  எழுந்தபோது  நாய்சார்  மனைவி  இறந்துபோன  செய்தி  வந்தது. கடந்த  ஒருவாரமாக  அவரைப்  பார்க்கசந்தர்ப்பம்  வாய்க்கவில்லை. பார்த்திருந்தால்  அவர்  மனைவி உடல்நலம்  பற்றி  தெரிந்திருக்கும். நான்  பதறி  அவர்  வீட்டுக்குஓடினேன்.

தெருவாசிகள்  இயந்திரம்  போல  வருவதும்,  போவதுமாயிருந்தனர்.

நாய்சார்  என்னைப்  பார்த்ததும்  கைகளைப்  பிடித்துக்கொண்டார்.

” எப்போதும்  போலதான் இருந்தா. அதிகாலை  மூணு  மணியிருக்கும். உடம்பெல்லாம்  வேர்த்துக் கொட்டுச்சு. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்  போயிடலாம்னு  நினைக்கறதுக்குள்ள  சட்டுன்னு  நின்னுடுச்சு. சிவியர்  அட்டாக்குன்னு  டாக்டர் சொல்றார். ”

நாய்சாரின்  கண்கள்  கலங்கியிருந்தன. துக்கம் விசாரிக்க  வந்த  அனைவரிடமும்அவர்  அதைச்  சொல்லிக்கொண்டிருந்தார். தெருவாசிகளில்  பலர்  முன்பின்அறிமுகமில்லாதவர்கள். அவர்களிடமும்  அவர்  அதைச்சொல்ல  வேண்டியிருந்தது.

நாய்அவர்  காலருகில்  நின்றுகொண்டிருந்தது.  சிலநேரம்வாசற்படியில்  நின்று  கூடத்தில்கிடத்தப்பட்டிருந்த  நாய்சாரின்மனைவியை  அதுவெறித்தது. பின்  திரும்பி  வந்து  ஓரிடத்தில்  படுத்துக்கொண்டது.  உடனேமறுபடியும்  எழுந்துபோய்  வாசற்படியருகில்   நின்று  உள்ளே  பார்த்தது. இருப்புகொள்ளாதன்மையுடன்  அது  அங்குமிங்கும்அலைபாய்ந்ததைக்  கண்டபோது  ஆச்சரியமாக  இருந்தது.

நாய்சாரின்  உறவினர்கள்  சிலர்  வந்திருந்தனர். நாய்சார்  காதல் மணம்  புரிந்தவர். பலத்த  எதிர்ப்புகளுக்கு  மத்தியில் மனைவியை  கரம்  பிடித்திருக்கிறார். அதனால்  இரு  பக்கமும்  சொந்தங்கள்  விலகிக் கொண்டனவாம். ஒருநாள்  நடைப்பயிற்சியின்போது  பகிர்ந்த  செய்தி  இது. வந்திருந்தவர்கள் ஒப்புக்கு   உட்கார்ந்துவிட்டு போய்ச்  சேர்ந்தனர்.  அவர்   அலுவலக  ஆட்கள்  மட்டுமே  இறுதிவரை  உடனிருந்தனர். நான்  நாய்சாருக்குத்  துணையாக  மயானம்  வரை  சென்று  வந்தேன். வீட்டில்  அவரைத்  தனியே  விட  மனமில்லாது  சிறிதுநேரம்  உடனிருந்துவிட்டு  கிளம்பினேன்.

” நாளைக்குக் காலையில  வரேன்  சார்.”

நான்  விடை பெற்றுக்  கொண்டபோது   அலுவலக  பியூன்  ஹோட்டலிலிருந்து  சாப்பாடு வாங்கி  வந்தான். நான்  சாப்பாடு கொண்டுவந்து  தருவதாக  சொன்னபோது  நாய்சார்  பிடிவாதமாக  மறுத்துவிட்டார்.

” பக்கத்துல  நல்ல  மெஸ்  இருக்கு. அங்கே வாங்கிக்கறேன்  சார். உங்களுக்கெதுக்கு  வீண்  சிரமம்….”  என்று  விட்டார் .

மறுநாள்  நான்  அலுவலக  வேலையாக  வெளியூர்  செல்ல வேண்டியிருந்தது. நாய்சாரிடம்  சொல்லிவிட்டுக்  கிளம்பினேன். நான்குநாட்கள்  இருந்து முடிக்கவேண்டிய  வேலை. வேலை  முடிந்து  ஊர்  திரும்பியபோது  மாலை  ஆகியிருந்தது.  நான்  வந்ததையறிந்து  நாய்சார் பதட்டத்துடன்  ஓடி  வந்தார்.

” நாய்  செத்துப்  போச்சு  சார். ”

” எ……எப்ப  சார்……?”

” அரைமணி நேரமிருக்கும்.  கொஞ்சம்  வீட்டுக்கு  வாங்க  சார். ”

நான்  அவரைத்  தொடர்ந்தேன். நாய்  வாசற்படியருகில்  கிடந்தது.

” நாலுநாளா  ஒருவாய்  சாப்பிடல  சார்.  ஒரு  அடிகூட  அடிச்சுப்  பார்த்துட்டேன். பிடிவாதமா  பட்டினி  கிடந்து  உயிரை விட்டுடுச்சு. “

இழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை

“இன்னா இப்பந்தான் போறான்” என்றார் அவர்.

ஆள் தெரியுமளவுக்கு இருட்டு கவ்வியிருந்தது. நான் அவர் கைக்காட்டிய திசையைப் பார்த்தேன். இரண்டு ஆள் செல்லும் அளவு அகலமான ஒரு சிறிய சந்து.அதன் இரண்டு பக்கமும் உயரமான கல்லாலான மதில் சுவர். கடைசியில் ஒரே ஒரு வீடு. வீட்டின் முகப்பில் ஒரு குழல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.அதன் வெளிச்சம் சற்றும் இந்த சந்திற்குள் தெரியவில்லை.நான் ஆவேசமாக சந்திற்குள் ஓடினேன்.இரண்டு எட்டு வைப்பதற்குள் அவனைப் பார்த்துவிட்டேன்.

“நின்னுல தாயோளி” என்று கத்தியவாறு சட்டைக்குள் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு அவனை நெருங்கினேன்.ஆனால் நான் கத்தியது தவறென்று உடனே உணர்ந்துவிட்டேன்.நான் கத்தியை அவன் வயிற்றைப் பார்த்து சொருகவும் அவன் சட்டென்று விலகிவிட்டான்.அவன் போட்டிருந்த பனியனைக் கிழித்தது கத்தி.அவன் சுதாரித்து தன் விரிந்த தோளால் என்னை முட்டித்தள்ளினான்.நான் தடுமாறி தலை தரையிலடிக்க கீழே விழுந்தேன். “லே” என கத்தியவாறு அவன் என் இரு கால்களையும் அதன் முட்டிகளில் பிடித்து என்னைத் தூக்கி மதில் சுவரில் அடித்தான்.என் கையிலிருந்த கத்தி தவறி விழுந்தது.நான் தரையில் உருண்டு கத்தியை எடுக்க முயன்றேன்.அவன் தன் கால்களால் என் கையை மிதித்து தரையில் வைத்து தேய்த்தான்.நான் எழும்ப முயற்சித்தப்பொழுது மீண்டும் என் நெஞ்சில் மிதித்ததை நான் கைகளால் தடுத்தேன்.மீண்டும் காலை ஓங்கியவன் “குடிகாரத் தாயோழி சவுட்டி கொன்னுபோடுவேன், பாத்து எழும்பி ஓடிரு” என்றபடி போனான்.நான் என் கால்களை இழுத்தவாறு அந்த முடுக்கைவிட்டு வெளியே வந்தேன்.

எல் எம் மருத்துவமனையில் நான் லேசாக கண்விழித்தப் பொழுது சிறீதரன் அருகில் இருந்தான். நான் அவனைப் பார்த்து சிரித்தேன்.கைகள் அசைக்கமுடியாதபடி வலியிலிருந்தன.

“என்ன மயித்துக்குல அவன குத்த போனா நீ, உன்னால அவன குத்த முடியுமால, அவன் கபடி ப்ளேயர்லா இரண்டே அடிதான் நீ இங்க வந்து கெடக்கா”

நான் மீண்டும் சிரித்தேன்.

“சிரிக்காதல, எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இப்பம் எனக்குதான கேவலம்”

“அப்பம் என்னாலதான் உனக்கு கேவலமா”.

“சரில விட்டுத்தள்ளு”

“அவன் செய்தது சரியால ஒனக்கு மெட்ராஸ்ல வெளயாடுயதுக்கு கெடச்ச வாய்ப்ப தட்டி பறிச்சாம்லா”

“மெட்ராஸ் எங்க நிலாவுலையா இருக்கு, இன்னா இங்கதான இருக்கு இந்த மேட்ச் இல்லணா வேற ஒரு மேட்ச், விட்டுத்தள்ளு”

அடுத்தவாரமே சென்னை அருகே இருந்த கல்லூரியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் அவனை விளையாடச் சொன்னார் கண்ணன் அண்ணன்.

நான் காலையில் வீட்டில் படுத்திருக்கும் பொழுது வெளியே செருப்பை கழற்றும் சத்தம் கேட்டது.சிறீதரன் தான். நான் நடுவில் பெரிய ஓட்டை விழுந்த நார் கட்டிலில் ஓட்டையை கோரைப் பாய் கொண்டு அடைத்து அதில் படுத்திருந்தேன். இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீடு. அப்பாவும் நானும் தான். அம்மா இறந்து வெகுநாள் ஆகிவிட்டது. அருகிலிருக்கும் கழிக்கரை க்ளப்பில் காலை நேரப்பயிற்சியை முடித்துவிட்டு வருகிறான்.இருபத்தி நான்கு மணிநேரம் கொண்ட ஒரு நாளில் எனக்கு மிக விருப்பமான இரண்டு மணிநேரம் என்பது சிறீதரன் காலையிலும் மாலையிலும் பயிற்சி முடித்துவிட்டு என்னுடன் வந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரம்தான்.அவன் வெளியே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.

“லே நரம்பா உள்ள வால”

அது நான் அவனைச் சிறு வயதுமுதலே கூப்பிடும் பட்டப்பெயர். அவன் சிறு வயதில் ஒரு நரம்பளவே உடல் தடிமன் இருப்பான். அவனை நான் நரம்பன் எனக் கூப்பிடுவதற்கு அவன் எப்பொழுதாவது எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு.நான் உடனே அவனும் நானும் சிறுவயதில் என் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பிப்பேன்.அவன் சிரித்துவிடுவான்.நரம்பன் உள்ளே வந்து எண்ணை வழிந்துகொண்டிருக்கும் எங்கள் வீட்டிலிருந்த ஒரே நாற்காலியில் அமர்ந்தான். நான் மீண்டும் மீண்டும் என் மனதில் ஓட்டிப் பார்க்கும் அந்த மணம்.நரம்பனின் கால்களில் செம்மண்தரையில் விளையாடிய பொழுது ஏறிய மணலும் அவன் முட்டியில் ஏற்பட்ட காயத்தில் வடியும் ரத்தமும் சேர்ந்து வரும் மணம்.அவன் வந்து செல்லும் அந்த ஒரு மணிநேரமும் நான் அதை ரசித்துக்கிடப்பேன்.ஒரு மனித உடல் ஏற்படுத்த இயலும் உச்சக்கட்ட சாத்தியமுள்ள மணம் அது என நான் அறிவேன். ஏனெனில் மனித உடலின் மிக மோசமான நாற்றத்தை நான் மிக அணுக்கமாக அறிவேன். என் உடலிலே அது வீசும். சாயுங்காலம் பெரும்பாலும் நரம்பன் வீட்டிற்கு வந்துவிட்டு போனதும் நான் வேகமாக டாஸ்மாக்கிற்கு சென்று போட்டுவிட்டு வருவேன். வேறு யாரிடமும் பேசுவதில்லை. நேராகச் சென்று குடித்தவிட்டு வந்து முன் அறையில் படுத்துக்கொள்வேன். அப்பா சில நாட்கள் ஏதேனும் செய்து வைத்திருப்பார். அவர் சமைத்திருக்கிறார் என்பதை நான் வீட்டிற்குள் நுழையும் பொழுதே வரும் கரிந்த வாடையைக் கொண்டு அறிந்துகொள்வேன்.அப்படி இல்லையென்றால் பேசாமல் படுத்துவிடுவது வழக்கம். அவர் உள் அறையில் குடித்துவிட்டு படுத்துக்கொள்வார். நான் கட்டிலில் படுத்தவுடன் எனக்கு குமட்டும். நான் ஒவ்வொரு நொடியும் வெறுக்கும் அந்த வாடை, அது என் உடலில் இருந்து வீசும். நான் என் உடலை வெறுப்பேன்.குடித்து குடித்து நடுங்குவதை மட்டுமே செயலாகச் செய்யும் என் கைகள்.சன்னலின் வழியாக வந்து வீழும் நிலவொளியில் தெரியும் நரம்பனின் புகைப்படத்தைப் பார்ப்பேன்.அதில் நரம்பன் என் அம்மாவின் கைகளில் இருப்பான். மிக மிக ஒல்லியாக. நான் நல்ல தடிமனான கைகளுடன் நெஞ்சை திமிற்றியப்படி அந்த கருப்புவெள்ளைப் புகைப்படத்தில் தெரிவேன். என் கைகளை அந்த இளம் இருட்டில் பார்ப்பேன். அந்த திமிறிய சிறிய கைகளில் அவை வளர்ந்தவுடன் தேக்கிவைக்கப்போகும் ஆற்றல் உடைந்து தெறிக்க ஆயத்தமாக இருக்கும். என் மனம் உற்சாகம் கொள்ளும்.கட்டிலில் படுத்தபடி கைகால்களை உரசிக்கொள்வேன். பின் சட்டென குமட்டி வாந்தி எடுத்துவிடுவேன். அப்பா உள்ளிருந்து கத்துவார்.

“லேல வெளிய பேய் கக்கபுடாதா”

நான் பெரும்பாலும் அப்பாவிற்கு பதில் எதுவும் சொல்லவதில்லை. அப்படியே தலையை தொங்க விட்டவாறு உறக்கம். நரம்பன் காலையில் வந்து சிலநேரம் வீட்டைக் கழுவி விட்டுச் செல்வான்.அவன் அருவருப்பெல்லாம் பார்ப்பதில்லை.மிகச்சாதாரணமான ஒரு செயல்பாடாக அது இருக்கும்.

உள்ளே வந்த நரம்பன் “லே நான் அடுத்தவாரம் மெட்ராஸுக்கு போறன் கேட்டியா” என்றான்.

“பொய் சொல்லாதல”

“உண்மையாட்டுதான் சொல்லுகம்ல ,விஜயராஜா காலேஜ்ல மேட்ச்”

“அடிபொழில மக்கா, ஒனக்க ஒடம்பு கபடி வெளயாடுகதுக்கு உள்ள உடம்பாக்கும், கபடிக்கே உண்டான அசைவு உள்ள ஒடம்பு என்னாக்கும் கண்ணண் அண்ணன் சொல்லுவாரு,ஒன்னை ஒரு பயலும் தொட முடியாது கேட்டியா”

அவன் என் கைகளில் ஓங்கி குத்தினான்.

“லே என்னையா குத்துகா, ஒரு அடிக்கு பெலப்பியால, கைய மடக்கி அடிச்சம்ணா நேரா கோமா தான் பாத்துக்க”

“யாரு கோமாக்கு போவா நீயா நானா”

“லே விளையாட்டுக்கு நினைக்காத, அந்த பார்த்திபன ரோட்டுல போட்டு அடிச்சி அவன் நாலு நாளு ஆஸ்பத்திரியில கெடந்தது மறந்துற்றோ”.

“அதெல்லாம் மறக்கல, ஆனா அது எட்டு வருஸத்துக்கு முன்னுக்கு, இப்பம் அவனுட்ட போனா சவுட்டி கொடல பிதுக்கிபுடுவான்”.

“அது சரிதான், அப்பம் நமக்கு கொஞ்சம் கபடி வெளயாட்டு உண்டும்லா. இப்பமும் நான் கிரௌண்டுல எறங்குனா ஒரு பயலும் கிட்ட நின்னுகிட மாட்டான்”.

நரம்பன் சத்தமாக சிரித்துவிட்டான்.

“லே மயிராண்டி,வெளயாட்டுக்கு சொல்லல, நான் இந்த தீவாளிக்கு கழிக்கரை டீமுக்கு ஆப்போஸிற்றா ஒரு டீமு எறக்குயேன் பாரு”.

“செரி செரி, போ எழும்பி வேலைக்கு போற வழியப்பாரு” என்றவாறு எழும்பிப்போனான்.

நரம்பன் சென்னைக்கு சென்று விளையாடி வெற்றிப்பெற்று வந்தான்.ஏற்கனவே குமரிமாவட்ட அளவில் அவன் பெரும் புகழ் பெற்றிருந்தான். அவன் போனஸ் போடும் முறைக்கு உள்ளூரில் தவளைச் சாட்டம் என்ற பெயருண்டு. ஒரு காலைக் கொண்டு போனஸ் கோட்டைத் தாண்டிவிட்டு மறுகாலைத் தூக்கி பின் தப்பித்து நடுக்கோட்டை தொடுவது தான் வழக்கம்.ஆனால் நரம்பன் போனஸ் கோட்டைத் தாண்டியவுடன் இடதுகாலால் ஓங்கி தரையில் மிதித்து தவளை போன்று துள்ளி பறந்து நடுக்கோட்டை அடைந்துவிடுவான்.எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிடும். அவன் பாடிச் சென்றால் போனஸ் போடுவதை தடுப்பதற்கே எதிர் அணிக்கு பெரும் பாடாக இருக்கும்.

அந்த தீபாவளிக்கு முதல் போட்டி நரம்பனின் அழிக்கரை அணிக்கும் நான் உள்ளூர் குடிகாரர்களைச் சேர்த்து அன்று காலை உருவாக்கியிருந்த அணிக்கும் அறிவிக்கப்பட்டது.என்னிடம் இருந்த ஒரு பழைய நிக்கர் ஒன்றை எடுத்துக்கொண்டு திடலுக்கு போனேன்.நரம்பன் துணிமாற்றிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்துவிட்டான்.

“லே, நீ வெளயாட்டுக்குல்லா சொல்லுகாணி நினைச்சேன். எறங்குறியா” என்று சிரித்தான்.

“ஒரு நிக்கர் சட்டை தால”.

அவன் பையைக் குடைந்து ஒரு டீசர்ட்டும் நிக்கரும் தந்தான். நான் அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு ஓடினேன். அப்பா வீட்டில் இல்லை. அவர் ஏற்கனவே கபடி பார்ப்பதற்காக சென்றுவிட்டார்.நான் டீசர்ட்டை தடவிப் பார்த்தேன்.என் உடல் சிலிர்த்தது.நான் ஒவ்வொரு முறையும் கபடியைக் குறித்து பகற்கனவுக் காணும் பொழுதும் அணியும் டீசர்ட். மஞ்சள் நிறத்தில் முன் பக்கம் Kz என்று எழுதியிருக்கும்.பச்சை நிற நிக்கர்.நான் அதை மணத்திப்பார்த்துக்கொண்டேன்.அதை அணிந்துகொண்டு கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டேன்.அப்பொழுது தான் கவனித்தேன். அது என் உடலுக்கு சற்றும் பொருந்தாததாக இருந்தது. மிகப்பெரியது. மெலிந்து சூம்பி நடுங்கிக்கொண்டிருந்த நான் அதை அணிந்தவுடன் ஒரு ஜோக்கர் போலத் தெரிந்தேன். அதை உடனே கழற்றினேன். வீட்டு வாசலில் கிடந்த ஒரு பழைய டீசர்ட்டை எடுத்து அணிந்துகொண்டேன். என் அணியில் விளையாட சம்மதித்திருந்த முத்து வந்தான். நானும் அவனும் சென்று ஏற்கனவே வாங்கி என் வீட்டின் எதிர்புறம் கொட்டி வைக்கப்பட்டிருந்த கல்கூட்டத்திற்குள் மறைத்து வைத்திருந்த மருந்தை போட்டுவிட்டு வந்தோம். என் நடையில் சற்று தள்ளாட்டம் கூடியது. அழிக்கரை அணி ஏற்கனவே ஆடுகளத்தில் இறங்கிவிட்டதால் எங்களுக்கான கடைசி அழைப்பை விடுத்தார்கள்.நானும் முத்துவும் சென்று ஆடுகளத்திற்கு மறுபுறமிருந்த பெரிய புளியமரத்தின் அடியில் குடித்துக்கொண்டிருந்த எங்கள் அணியை சேர்ந்தவர்களிடம் சென்று சேர்ந்தோம்.பின் அனைவரும் ஒரு வரிசை ஏற்படுத்தி ஓடிச்சென்று வழக்கமான கபடி வீரர்கள் செய்வதைப் போன்று களத்தைச் சுற்றி ஓடினோம். கூட்டம் முழுவதும் சிரிப்பலை.

“எல்லாம் பயங்கர ப்ளேயர்மாருல்லா”

“லே ஆளைத் தொடணும் இல்லணா பிடிக்கணும் அப்பந்தா பாயிண்ட், சும்மா க்ரௌண்ட சுத்தி ஓடுனா பாய்ண்ட் கெடயாது பாத்துக்க”.

“ஆமா இவனுவ அஞ்சாறு சுத்து சுத்திட்டு நாங்கதான் ஜெயிச்சோம்ணு சொன்னாலும் சொல்லுவானுவ”.

முத்து சொன்னான் “மக்கா லேசா போட்டது நல்லதா போச்சி கேட்டியா, இல்லணா இந்தத் தாயோழி மக்களுக்க நடுவுல எங்க வெளயாடுயது”.

நான் என் கைகளைப் பார்த்தேன். நடுக்கம் நின்றிருந்தது. நடுவர் விசில் ஊதினார். சற்றென்று என் மனம் கூர்மை கொண்டது.என் கண்கள் எதிர் அணியினரை துல்லியமாக நோட்டமிட்டது.மனம் உந்தியது. அவர்களை என்னால் தொட்டுவிட்டு தப்பிவிட முடியும். அவர்களை என்னால் பிடித்துவிட முடியும். ரைட் போன முத்துவை தடுத்து நிறுத்திவிட்டு நான் துள்ளி எதிர் புறம் சென்றேன்.

“அபோட் அபோட் அபோட்”

என் வாய் தன்னையறியாமல் முனங்கியது.நரம்பன் நடுவில் தான் நின்றான்.நான் துள்ளித் துள்ளிப் பாடினேன்.என்னை என்னால் நம்பமுடியவில்லை.நான் உள்ளே இறங்கி பாடினேன்.பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சம் சிறிதுமின்றி.ஒரு சிறுவனின் உற்சாகத்தோடு. என் மனம் மிக்கூர்மையாக அறிந்தது. அவர்களால் என்னை ஒரு பொழுதும் பிடிக்கமுடியாது. நான் மூன்று பேரைத் தூக்கிச் செல்வேன்.என்ன நடந்தது என்பது சரியாக என் மனதால் கணிக்கமுடியவில்லை. சற்று மறந்தது போலவும் இருந்தது. கூட்டம் சிரிப்பது மட்டும் என் காதுகளுக்கு கேட்டது.நான் கூட்டத்தின் மீது விழுந்து கிடந்தேன். மெல்ல கைகளை ஊன்றி எழும்பினேன். கால்களில் லேசான சிராய்ப்பு, அதில் ரத்தம். நான் மெல்ல நடந்து வந்து குத்தவைக்கும் பொழுது மொத்த அணியும் அவுட்டாகியிருந்தது.அடுத்தமுறை முத்து பாடிச் சென்றான். நான் இங்கிருந்தபடியே அவனைப்பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பாடிச் செல்வதுபோல் கற்பனை செய்து கொண்டேன்.எங்கும் துள்ளாமல் ஓடாமல் மெல்ல மெல்ல நடந்தபடியே பாடினேன். சட்டென்று உள்ளே பகுந்து ஒரு உடல் தொடல். துள்ளி ஓடி நடு கோட்டைத் தொட்டுவிட்டேன்.எல்லாம் தெளிவாகிட்டது போல் ஒரு நொடி. முத்து பிடிகொடுத்துவிட்டான். அழிக்கரை அணியின் அடுத்த வீரன் பாடி வந்தான். நான் என் முறைக்காக காத்திருந்தேன்.திரும்பிச் சென்ற அழிக்கரை அணி வீரனை விரட்டி உள்ளே சென்றேன். கூட்டம் ஆர்பரித்தது.

“மக்கா உடாதல, அவ்வளவுவேரையும் அள்ளுல” என்ற சத்தம்.

நான் நிதானமாக பாடினேன்.

“அபோட் அபோட் அபோட்”.

இடப்புறமிருந்து வலப்புறம் நோக்கி மெதுவாக நடந்தேன். வலப்புறமிருந்து இடப்புறம் மீண்டும் நிதானமாக பாடியபடி வந்தேன்.

“லே குப்பிய தேடுதியா” என்றது ஒரு குரல்.

நான் எதிரே நின்ற வீரர்களின் கால்களைப் பார்த்தவாறு இடதுகைகளை மட்டும் அந்தக்குரல் வந்த திசை நோக்கி அமைதி என்பது போல செய்கை செய்தேன்.சட்டென் உடலில் ஓர் இடி. நான் நடு கோட்டை தொட என் கைகளைத் துளாவினேன்.ஒரு ஆறடி உயரமிருக்கலாம் என்று நினைக்கிறேன். என் கால்களைப் பிடித்து தூக்கியிருந்தார்கள்.என் கைகள் வானத்தில் அலைந்தன. நான் நிதானமாக என்னைத் தூக்கியிருந்த கூட்டத்திலிருந்து இறங்கினேன்.பின் வெளியே சென்றபொழுதுதான் கவனித்தேன் என் பனியன் கிழிந்து தொங்கிக்கொண்டிருப்பதை.

நாங்கள் 42-0 என்ற புள்ளிக் கணக்கில் அழிக்கரை அணியிடம் தோற்றோம்.

நரம்பனுக்கு அடுத்த ஆட்டமிருந்ததால் நான் அவனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.உள்ளே சென்று கிழிந்துவிட்டிருந்த என் டீசர்ட்டை அடுக்களையில் போட்டுவிட்டு முன் அறைக்கு வந்தேன்.அப்பா குளித்துவிட்டு படுக்கச் சொன்னார்.வழக்கம் போல் அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் வந்து கட்டிலில் படுத்தேன். ஆளரவம் ஏதுமின்றி ஊரே வெறித்திருந்தது.தொலைவில் கபடி விவரணை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.கூட்டமிடும் கூக்குரல்.நான் அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தேன்.அது வெளியே இருந்த தெருவிளக்கின் ஒளி ஜன்னல் வழியாக பட்டு மின்னியதில் அம்மாவும் நரம்பனும் மறைந்துவிட்டிருந்தனர்.அந்த உடல் திமிறிக்கொண்டிருக்கும் சிறுவன் மட்டும் தெரிந்தான். முட்டியில் லேசான ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. உடலெங்கும் ஒட்டியிருந்த மணல்.நான் அந்த மணத்தை ரசித்தேன். அதில் திளைத்தபடியே உறங்கிப்போனேன்.

அப்பா விளக்கைப் போட்டவுடன் திடுக்கிட்டு கண் விழித்துக்கொண்டேன்.நான் அப்பொழுது கனவு கண்டுகொண்டிருந்தேன்.அம்மாவுடன் புகைப்படத்திலிருக்கும் உடல் திமுறும் அந்தச் சிறுவனாக நான் கபடி ஆடுகளத்தில் நிற்கிறேன்.அந்தப் படத்தில் போட்டிருக்கும் அதே குதிரை ஒன்றின் படம் போட்ட சிறுவன்.ஒரு மலையைத் எம்பித்தாண்டும் குதிரைப் படம். மலை அதன் கால்களுக்குள் சிறிதாக. மிக மிகச் சிறிதாக.எதிரே திருநைனார்குறிச்சி அணி வீரர்கள்.முழு அணியும் ஆவேசம் கொண்டு நிற்கிறது.என் பக்கமாக நான் மட்டுமே நிற்கிறேன்.நடுவர் தன் கைகளை நீட்டி காற்றில் வீசி என்னைப் போகச் சொன்னார்.நான் பாடிச் செல்கிறேன்.கூட்டம் ஆராவாரமிடுகிறது.

“லே என்னல ஒரு பொடியன் பாடி வாறான், பெலப்பானால” என்கிறான் ஒரு வீரன்.

“பாத்துல அவனுக்கு அடி பட்டுராம்ல, மெதுவா பிடிங்க”

“அபோட் அபோட் அபோட்”

நான் இரண்டுமுறை இடப்பக்கமும் வலப்பக்கமுமாக நடந்தேன்.பின் வேகமெடுத்து ஒருபக்கம் ஒரு ஓட்டம்.போனஸ் கோட்டைத்தாண்டி உள்ளே சென்று ஒரு வீரனைத் தொட்டேன்.அந்த பொடியன தூக்குல என்ற ஒலி.என்னை ஏழு வீரர்களும் சுற்றி வளைத்திருந்தனர்.நான் என் தோள்களால் அவர்களை இடித்தேன். மொத்தமாக ஏழுபேரையும் இழுத்துச்சென்று நடுக்கோட்டைத் தொட்டேன்.கூட்டம் எழுந்து வெறியாட்டம் போட்டது.பெரும் கூச்சல்.பெண்கள் குரவையிட்டனர். அழிக்கரை அணி வீரர்கள் எதிரில் இருந்தனர்.நான் பாடினேன்.

“அபோட் அபோட் அபோட்”

அம்மாவின் புகைப்படத்தில் இருக்கும் தோளின் முறுக்குகள்.என் தோள்களை தட்டிக்கொண்டேன்..ஒரு பொழுதும் ஒருவராலும் தோற்கடிக்கமுடியாத தோள்கள். பனை நார் போன்ற கைகள்.பத்து பேரை ஒரே நேரத்தில் இழுத்துப்போடும் கைகள்.கைகளை சுழற்றிக்கொண்டேன்.நான் நரம்பனை நோக்கிப்பாடினேன்.அவன் இடுப்பைவிட தாழ்வாக இருந்தேன் நான்.

“அபோட் அபோட் அபோட்”

நான் நடுக்கோட்டைப் பார்த்து திரும்பி என் கைகளை தரையில் ஊன்றி என் கால்களை மேலே தூக்கி நரம்பனை பாதத்தால் மிதித்தேன்.அவன் தடுமாறி எல்லைக் கோட்டைத் தாண்டி வெளியில் சென்று விழுந்தான்.என் கால்களை அடுத்த வீரன் கவ்விப்பிடித்துக்கொண்டான்.சட்டென என்னைப் பிடித்து தூக்கிவிட்டனர். நான் ஒரே உன்னில் அவர்களின் கைகளில் இருந்து நழுவிப் பறந்து நடுக்கோட்டைத் தொட்டேன்.பஞ்சு போன்ற கைகள் என்னை தாங்கிக்கொண்டன.நான் நிமிர்ந்து பார்த்தேன். புகைப்படத்திலிருக்கும் அம்மா.கூட்டத்தின் பேரிரைச்சல். அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாள்.நான் அவள் கைகளை அழுத்திப்பிடித்தேன்.

“லே வலிக்குல, எனக்க மொவனுக்கு என்னா பெலம்” என்றாள்.என் தோள்களை மீண்டும் மீண்டும் தடவிப்பார்த்தாள்.வானவேடிக்கைகள் என் கண்ணைக் கூசின.

அப்பா என்னைப் பிடித்து தூக்கினார். வாயிலிருந்து லேசாக ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

“வயறு என்னல ஆச்சி, சாப்பிட்டுட்டு படுலணி சொன்னம்லா”.

என் வயிறு லேசாக உப்பி ஒரு வித மினுமினுப்பை அடைந்திருந்தது.கண்கள் மங்கின. அப்பா வெளியே ஓடினார்.கபடி நடந்துகொண்டிருந்த இடத்தின் அருகில்

உடைமாற்றிக்கொண்டிருந்த நரம்பனிடம் சென்று கீழே விழுந்தார்.நொடியில் நரம்பன் உள்ளே ஓடி வந்தான்.

“சொன்னா கேக்கான இவன்” என்றவாறு என்னை அவன் மடியில் கிடத்திக்கொண்டான்.வியர்வையும் இரத்தமும் கலந்த அவன் உடலின் மணத்தில் என் மனம் திளைத்தது.முறுக்கேறி தடித்திருந்த அவன் தொடைகளில் நான் என் தலையைச் செம்மையாக வைத்துக்கொண்டேன்.நரம்புகள் புடைத்து திரண்டிருந்த அவன் தோள்களைப் பார்த்தவாறு என் கண்கள் முற்றிலும் மங்கி மூடிக்கொண்டன.

எ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் – காலத்துகள் சிறுகதை

‘ஸார் எனக்கு கலர் ப்ளைண்ட்னஸ் வந்திருச்சு போல, எல்லாம் ப்ளாக் அன்ட் வைட்ட்டா தெரியுது’ என்று கான்ஸ்டபிள் வய் கத்த

‘பயப்படாதயா, இது நுவார் புலனாய்வு புனைவு, அதுக்கு அந்த பேக்டிராப் தான் பொருந்தும், ஸோ ரைட்டர் அது மாதிரி ஆக்கிட்டார்’ என்றார் இன்ஸ்பெக்டர் எக்ஸ்.

‘எதுக்கு ஸார் இதெல்லாம், வாசகர்களுக்கு நாம கருப்பு வெள்ளைல இருக்கோம்னு தெரியவாப் போகுது, இதென்ன சினிமாவா’

‘அதான் உன்னை கத்த வெச்சு, கதையோட ஆரம்பித்திலேயே சொல்லிட்டாரே, இனிமே அவங்களே தங்களோட அகக்கண்ணில் கருப்பு வெள்ளையா பாத்துப்பாங்க. நுவார்னு சொல்லியிருந்தாக் கூடப் போதும், அவங்க அகக்கண் திறந்திருக்கும், இப்படி நீ பயப்படற மாதிரி எழுத வேணாம், ஆனா நம்மாளுக்கு நம்மாளுக்கு மினிமலிஸம், ‘ஷோ, டோண்ட் டெல்’1 பத்திலாம் ஒரு எழவும் தெரியாது, எல்லாத்தையும் நம்மள பேச வெச்சு நீட்டி முழக்க வேண்டியது”

‘அகக்கண்ணா? கண்ணவிஞ்சு போகாம இருந்தா சரி. ஆனா இப்படிலாம் பயமுறுத்த சொல்லாதீங்க ரைட்டரை. கொரோனா காலம் வேற, ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போல’

‘கொரோனாக்கும் கலர் ப்ளைண்ட்னஸுக்கும் என்னையா தொடர்பு’

‘இந்த வைரஸால அபெக்ட் ஆனா ருசி, வாசனை எல்லாம் போயிடும்னு சொல்றாங்க, பார்வை மட்டும் அபெக்ட் ஆகாதுன்னு சொல்ல முடியுமா ஸார்’

‘ஓகே ரிலாக்ஸ். அரை பக்கம் ஒப்பேத்தியாச்சு, வி ஹேவ் டு ஸ்டார்ட் தி கேஸ் நவ்’

‘அதுக்கு முன்னாடி, கதையோட காலகட்டத்தை கொரோனாக்கு முன்னாடி கொண்டு போயிடலாமான்னு ரைட்டர கேளுங்க, மாஸ்க் போட்டுக்கிட்டு பேச முடியல, மூச்சு வாங்குது’

‘கொரோனா பத்தி குறிப்பிட்டாத்தான், ‘சயிட்கய்ஸ்ட்’2 பத்தி பேசறோம்னு வாசகர்களுக்கு தெரியும். சமகால சூழலை புனைவுல கொண்டு வராம எப்படி படைப்பை உருவாக்க முடியும். கலை கலைக்காகன்னு சொல்றதெல்லாம் தப்பு, சமூக பார்வையில்லாத எந்த படைப்பும் வீண்’

‘அப்ப கொரோனா சார்ந்த நுவார் குற்றப் புனைவா ஸார் இது’

‘… அப்படி சொல்ல முடியாது’

‘ஸோ அது பற்றிய குறிப்பு இனிமே ஒன்றிரண்டு முறை வந்தாலே அதிகம் இல்லையா, சயிட்கய்ஸ்ட்டுக்கு அது போதுமா ஸார்’

‘ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்ட. கேரக்டர்ஸ் அவங்க எல்லைக்குள்ள தான் இருக்கணும், அப்பறம் ‘இசட்’ன்னு வேற கான்ஸ்டபிளை கொண்டு வந்திருவார் ரைட்டர்’

‘ஸாரி சார், இனிமே இப்படி கேட்க மாட்டேன். எனக்கு கெடச்சிருக்கும் இலக்கிய அமரத்துவ வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பலை. என்ன ‘கெஸ்ட்டா’ இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். இந்த முறை என்ன கேஸ் ஸார்’

‘இது அன்னபிஷியல்.’ என்ற எக்ஸ் நகரின் முக்கிய புள்ளியின் பெயரை கூறி ‘அவர் சன்னுக்கு ப்ராப்ளம், அதை சால்வ் பண்ண சொல்லியிருக்காங்க’

‘என்ன பிரச்சனை ஸார்’

‘யூஷுவல் ஸ்டப், அப்பேர். அப்பா பையனுக்கு கல்யாணம் பண்ண முடிவு செஞ்சிருக்கார், சன்னுக்கும் ஓகே, பட் சில காம்ப்ரமைஸிங் போட்டோஸ் அவன் லவர் கிட்ட இருக்காம். அவ அத யூஸ் பண்ணமாட்டான்னு நாம அஸ்யுரன்ஸ் குடுக்கணுமாம். அந்த லேடி வீடு ரெட்டியார்பாளையத்துல இருக்கு, இப்ப அங்க தான் போறோம்.’

‘அப்ப பேரழகு, மர்மப் பெண்ணை சந்திக்கப் போறோம்னு சொல்லுங்க. ‘பெம் பெட்டல்’3 இல்லாம நுவாரே கிடையாதே, இந்த உச்சரிப்பு சரிதானே ஸார்’

‘எனக்கு தெரியாதுயா. ‘போர்வோ’ உச்சரிப்பு தளத்துல பத்திருபது முறை கேட்டு எழுதியிருக்கார், கரெக்ட்டுன்னு நினைக்கறேன்.’

‘நாம இந்த விசாரணையை செய்யணுமா ஸார், கட்டப் பஞ்சாயத்து செய்யப் போற மாதிரி இருக்கே, கேவலமாயில்லையா?. ஏற்கனவே நம்ம டிபார்ட்மென்ட் மேல மரியாதை இப்ப குறைஞ்சிருக்கு, இந்தக் கேஸை பாலோ பண்ற வாசகாஸ் இன்னும் கடுப்பாயிடப் போறாங்க’

‘அந்த லேடியை மிரட்டலாம் போறதில்லையா. அந்தாள் ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கார், அதை அன்னபிஷியலா இன்வெஸ்டிகேட் பண்ணப் போறோம், அவ்ளோ தான். இன்னொரு விஷயம் இதை ரொம்ப கேவலமா நினைக்காத’

‘ஏன் ஸார்’

‘ஷெர்லாக் ஹோம்சே இப்படியொரு கேஸை4 எடுத்திருக்கார். அவருடைய ஒரு சில தோல்விகளில் அதுவும் ஒண்ணு. இப்ப நாம ஜெயிச்சா அது எவ்ளோ பெரிய விஷயம்’

‘என்ன கேஸ் ஸார் அது’

‘வாசகர்களுக்காக முந்தைய வரில ஹைபர்லிங்க் குடுத்திருக்கேன்’

ரெட்டியார்பாளையத்தை அடைந்தவுடன் ‘பொன் நகர் செகண்ட் க்ராஸ்’ என்றார் எக்ஸ். அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தார்கள். வலது புற கதவு விரலளவு திறக்க, கண் மட்டும் தெரிந்தது. ‘போலீஸ்’ என்று எக்ஸ் சொல்ல உள்ளே அனுமதிக்கப் பட்டார்கள். கணுக்கால் வரை நீளும் ஸ்கர்ட், டாப்ஸ் அணிந்த பெண் இவர்களை அமரும் படி சைகை செய்ய வய் சோபாவின் அருகே சென்றார்.

‘இருயா, நின்னுட்டே பேசுவோம்.’ என்று அவரிடம் மெல்லிய குரலில் சொன்ன எக்ஸ் ‘நோ தேங்க்ஸ்’ என்று அப்பெண்ணிடம் கூற தலையசைத்தபடி நாற்காலியில் அமர்ந்தார் அவர்.

‘ஏன் ஸார்’

‘முடிஞ்சவரைக்கும் காண்டாக்ட்ட அவாய்ட் பண்ணனும்யா, எங்க எந்த வைரஸ் ஒட்டியிருக்கோ’

‘பீதிய கிளப்பாதீங்க ஸார்’

‘ரைட்டர் கொரோனாவை கொண்டு வந்துட்டார் பாத்தியா, இது தான் சயிட்கய்ஸ்ட்’

நாற்காலியில் அமர்ந்த பெண் எதுவும் பேசாமலிருந்தார். மாஸ்க் அணிந்திருந்தாலும், ஆங்கிலோ இந்தியன் என்பது தெரிந்தது.

‘மேடம் உங்க நேம்’

‘அது கூட தெரியாமையா வந்தீங்க’ உச்சரிப்பில் எந்த பிசிறுமில்லை, அவர் புன்னகைப்பது மாஸ்க் விரிவதிலிருந்து தெரிந்தது.

‘..’

‘ஐரீன்’

‘..’

‘ஸார், நீங்க கொடுத்திருந்த லிங்க் படிச்சேன், அதே..’ என்று வய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

‘என்னோட கொள்ளுப் பாட்டி ஞாபகமா வெச்சாங்க’

‘அவங்க…’

‘ஷி லிவ்ட் இன் லண்டன். சின்ன பிரச்சனை, உலகப் புகழ் பெற்ற துப்பறிவாளரோட மோத வேண்டிய சூழல், ஜெயிச்சிருப்பாங்க, ஆனா அந்த காலத்துல ஓரு வுமன் எப்படி… ஸோ அவங்க தோல்வியடைஞ்சதா புனையப்பட்டது. எனிவே, அவங்க இந்தியா வந்து இங்க பாண்டிச்சேரில செட்டிலாயிட்டாங்க’

‘..’

‘இது எப்படி ஸார் சாத்தியம்?’ மெல்லிய குரலில் வய் கேட்டார்.

‘நீ நிஜ உலகின் தர்க்கங்களை இங்க பொருத்திப் பார்க்கற, இது புனைவுலகம், இங்க இதெல்லாம் சகஜம்’

‘நம்ம கதைகள் ரியலிஸ்டிக்கா இருக்கறதால நாமளும் உண்மை மனிதர்கள்னு நினைக்க ஆரம்பிச்சுட்டேன் ஸார்’

‘நாம நிஜம் தான்யா. வீ எக்ஸிஸ்ட், யார் இல்லைன்னு சொன்னது. ஆனா நம்முடைய இருப்பு புனைவுலகில், புரியுதா’

‘இருத்தயலியத்தை கொண்டு வரப்போறீங்களா, பயமாருக்கு’

இருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை மௌனமாக ஐரீன் கவனித்துக் கொண்டிருந்ததை பார்த்த எக்ஸ்

‘ஒன்ன மாதிரி வாட்ஸன் வாய்ச்சது என்னோட தலையெழுத்து, அப்பறம் எக்ஸ்ப்ளைன் பண்றேன்’ என்று வய்யிடம் கூறிவிட்டு

‘மேடம் ஐரீன், நாங்க இங்க வந்திருக்கறதுக்கு ..’ ஆரம்பிக்க

‘ஐ நோ. எதிர்பார்த்துக்கிட்டுருந்தேன்’ என்ற ஐரீன் பெயரொன்றை சொல்லி ‘நான் அவன ப்ளாக்மெயில் பண்றேன்னு சொன்னானா’ என்று கேட்டார்.

‘இல்ல மேடம், பயப்படறான்.’

‘வை?’

‘போட்டோஸ், விடியோ’

‘அரசனையே தூக்கி எறிஞ்சவங்க என் கொள்ளுப்பாட்டி, அதை பார்க்கும் போது ஹி இஸ் நத்திங்’

‘..’

‘எனக்கு அவன் கிட்டேந்து எதுவும் வேண்டாம்’

‘அப்ப உங்க கிட்ட இருக்கற..’

‘அது முடியாது. தந்துட்டேன்னா என் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது’

‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது மேடம்’

‘இருபத்தி நாலு மணி நேர செக்யுரிட்டி தரப் போறீங்களா?’

‘..’

‘வேற எதுவும் இல்லைனா …’

‘மேடம், நீங்க சொல்றது ஓகே, பட் நீங்க குடுத்துட்டீங்கன்னா எல்லாரும் நிம்மதியா இருக்கலாம். இல்லைனா இது இன்னும் பெருசாகும்’ என்று எக்ஸ் சொன்னதற்கு உரக்க சிரித்த ஐரீன்

‘என்ன பண்ணுவீங்க, அதெல்லாம் எங்க இருக்குன்னு சர்ச் பண்ணுவீங்களா, வாரண்ட் இருக்கா? இருக்காது, நீங்களே அன்னபிஷியலாத் தான் வந்திருப்பீங்க’

‘..’

‘போட்டோவை எங்க ஒளிச்சு வெச்சிருக்கேன்னு கண்டுபிடிக்க, வீட்ல நெருப்பு பத்திகிச்சுன்னு டைவர்ஷனை உண்டாக்கி, நான் தன்னிச்சையா அந்த போட்டோ இருக்கற எடத்துக்கு போய் அதை எடுக்க, நீங்க தெரிஞ்சுக்கலாம்னு ப்ளான் வெச்சிருக்கீங்களோ’

‘…’

‘ஸோ க்ளிஷேட். நூறு, நூத்தியம்பது வருஷம் முன்னாடி இப்படி ஏமாத்த முடியும்.’

‘மேடம் ..’

‘எல்லாம் க்ளவுட்ல இருக்கு. ஆன்லைன் ஸ்டோரேஜ்.’ என்ற ஐரீன் தன் அலைபேசியை உள்ளங்கையில் வைத்து அசைத்தபடி ‘ஜஸ்ட் எ சிங்கிள் க்ளிக், மொபைலேந்து என்னோட எப்.பி, ட்விட்டர், வாட்ஸாப், இன்ஸ்டா காண்டாக்ட்ஸுக்கு போயிடும். ஆட்டோ போஸ்டிங் ஷெட்யுல் பண்ணியிருக்கேன், தினமும் நான் தான் டிஆக்டிவேட் பண்ண முடியும், இல்லன்னா …’

‘..’

‘நான் அந்த போட்டோஸை வெச்சு ஒண்ணும் செய்ய மாட்டேன், யு கேன் பி ஷூர் ஆப் தட், அவன் கிட்டயும் சொல்லுங்க’ என்றபடி ஐரீன் எழ, எதுவும் பேசாமல் எக்ஸும், வய்யும் வெளியேறினார்கள்.

‘இப்படியொரு அரதப் பழசான கேஸை எடுத்திருக்கவே வேண்டாம் ஸார்,’ என்றார் வய்.

‘டான் க்யுஹோட்டேவை மொழியாக்கம் செய்யறவன் புதுசா ஒரு புனைவை படைக்கறான்னு போர்ஹெஸ் சொல்லியிருக்கார், அது மாதிரி ரைட்டர் அவர் படிச்ச சிறுகதையை புதுப் பிரதியா உருவாக்கியிருக்கார்’

‘அது ட்ரான்ஸ்லேஷன் பத்தி சொன்னது ஸார். சரி, புதுப் பிரதியாவே இருக்கட்டும், தோல்வில முடிஞ்சிருச்சே..அதான் ..’

‘இந்த கேஸ்ல  ஷெர்லாக் ஹோம்சே தோத்திருக்கார்ன்னு சொன்னேனேயா, அந்த லேடி பேரை கூட அவர் சொல்லமாட்டாராம், அவ்வளவு மரியாதை. நாம எம்மாத்திரம். நமக்கும் இது தானே பர்ஸ்ட் டிபீட், விடு’

‘நமக்கு இது முதல் தோல்வி ஸார், ஆனா நா அதை பற்றி குறிப்பிடலை. எழுத்தாளர் ஒவ்வொரு முறையும் ஏதோ ட்ரை பண்றார், ஆனா ஜெயிக்கவே மாட்டேங்கறாரே அதைத் தான் …..’

பின்குறிப்பு:

  1. ‘ஷோ, டோண்ட் டெல்’ –  If a writer of prose knows enough of what he is writing about he may omit things that he knows and the reader, if the writer is writing truly enough, will have a feeling of those things as strongly as though the writer had stated them. The dignity of movement of an iceberg is due to only one-eighth of it being above water. – ஹெம்மிங்வேவின் ‘Iceberg Theory’
  2. சயிட்கய்ஸ்ட் – Zeitgeist
  3. பெம் பெட்டல் – Femme Fatale
  4. ஷெர்லாக் ஹோம்ஸ் புனைவுலகின் தவிர்க்க முடியாத பாத்திரமாக உள்ள ‘ஐரீன் அட்லர்’ தோன்றும் ஒரே சிறுகதை.

 

இறுதிப் படியில் – ஜீவ காருண்யன் சிறுகதை

நேரம் இரவு பத்தரை. அப்பா படுத்திருந்த கட்டிலருகில் வந்த வெங்கடேசன், “அப்பா, புரட்டாசி மூணாஞ் சனிக்கிழமைன்றதால ஊர்ல ‘வெங்கடேச பெருமாள்’ நாடகம் வச்சிருக்காங்க. அத்தைய அனுப்பி வைக்கட்டுமா?” என்றார். நெடுங்கிடையாக ஒருக்களித்துப் படுத்திருந்த வாகிலேயே, “எங்கிட்ட என்ன கேள்வி? போய் வரச் சொல்லு.” என்று வலது கையசைத்தார் பெரியவர் ரங்கசாமி. சச்சதுரமாக மடித்த நிலையிலிருந்த பச்சை நிறப் போர்வையுடன் சமையலறையிலிருந்து வந்த சகுந்தலா, ”போய்ட்டு வரண்ணா!” என்று பெரியவரிடம் விடை பெற்று வாசலுக்கு வந்தார். அத்தை வெளியில் போனதும் கதவைச் சாத்தித் தந்தையிடம் வந்த வெங்கடேசன், “போத்தி விடட்டுமாப்பா?” என்றார். ‘வேணாம்’ என்னும் பாவனையில் கையசைத்த பெரியவர் பாவனையிலேயே தன்னைத் தூக்கி உட்கார வைக்கச் சொன்னார்.

பொன்னுருகக் காயும் மண்ணுருருகப் பெய்யும் புரட்டாசில போத்திக்கிறதா?’ என்று புரட்டாசியின் முதல் நாளிலேயே போர்வையை மறுத்தத் தந்தையிடம், ‘போத்தி விடட்டுமாப்பா?’ எனக்கேட்ட தனது மடமை குறித்த யோசனையுடன் தந்தையைச் சன்னமாகப் பிடித்துத் தூக்கிய வெங்கடேசன் அவரின் முதுகுப் புறம் தலையணையை அடக்கமாக வைத்துச் சுவரில் சாத்தினார்.

தொண்ணூறு வயது முதுமையில் உலர்ந்து உருக்குலைந்து சுக்குப் போல தேகம் வற்றிக் கிடந்த தந்தையிடம், “என்னப்பா?” என்றார். பெரியவரிடம் பதிலில்லை.

பெரியவர் ரங்கசாமிக்கு தொண்ணூறு வயதுகள் பூர்த்தியாகி ஆறு மாதங்களாகி விட்டன. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒப்புக்குத் தடி வைத்துக் கொண்ட குறை ஒன்றைத் தவிர முன்று மாதங்களுக்கு முன்பு வரை அன்றாட வாழ்க்கைப் பாடுகள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருந்தன. ஆனால், இப்பொழுது நிலைமை வேறு விதமாகி விட்டது. அனைத்துக்கும் உதவி தேவையாகி விட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் வயிற்றின் கீழ் இடப் புறத்தைத் தொட்டு, “ஏதோ வலி மாதிரி தெரியுது.” என்றார் பெரியவர். அன்றே அவரது வழக்கமான முன்று இட்டிலி காலை உணவு அதிரடியாக ஒன்றாகக் குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் ஒரு இட்டிலியும் மறுக்கப்பட்டு காலை உணவு அரை டம்ளர் கஞ்சி என்றானது. சில நாட்களிலேயே விரும்பி அருந்தும் காபி அறவே, ‘வேணாம்’ என புறக்கணிக்கப் பட்டது.

எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே!’ என்னும் வருத்தத்துடன், “ஆஸ்பத்திரிக்குப் போலாம்பா!” என்றார் வெங்கடேசன்.

வயித்துலதா ஏதோ பிரச்சன. வயசாயிடுச்சி இனிமே இன்னா ஆஸ்பத்திரி? ஆஸ்பத்திரின்னு போனா, ‘ஆப்பரேஷன் செய்யணும். அங்க அறுக்கணும். இங்க அறுக்கணும்’னுவாங்க. எதுக்குக் கடைசி காலத்துல கந்தர் கோலம்? பின்னப்படாம போய்ச்சேர வேண்டிய எடத்த சேருவோம்.” என்று மருத்துவமனையைக் கறாராக மறுத்த பெரியவர் இறுதியில், உணவு என்பது அவ்வப்போது சிறிதளவு தண்ணீர் என்னும் முடிவினில் வந்து நின்றார். உணவும், தண்ணீரும் குறைந்து விட்ட காரணத்தால் மல, ஜல அவதிகளும் குறைந்து விட்டன. மனிதருக்குக் குடலில் ஏதோ கோளாறு என்பது யூகத்தின் வழியில் உறுதியாகி விட்டது.

எண்பத்தைந்து வயது முதுமையிலும் ஏரிக் கழனிகளுக்கு காலால் மடை தள்ளும் உடல் நலத்தில் இருந்தவர் உருக்குலைந்து எலும்புக்கூடாகிக் கிடக்கும் காட்சியில் நெஞ்சடைத்தது வெங்கடேசனுக்கு. பெரியவர் ரங்கசாமிக்கு வெங்கடேசன் தலைப்பிள்ளை. வெங்கடேசனுடன் கூடப் பிறந்த இரண்டு தம்பிகளில் பெரியவன் அரசாங்க உத்தியோகத்திலும், இளையவன் மாமனாரின் வெல்ல மண்டி வியாபாரத்திலுமாக செங்கல்பட்டு, வேலுரில் சொந்த வீடுகளுடன் நிலையாகி விட்டனர். அனைவரிலும் கடைசியான தங்கை திருத்தணியில் ஆசிரியர் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு வசதி வாய்ப்புகளுக்குக் குறைவில்லாமல் ராணி போல இருக்கிறாள். சகோதரர்களும் சகோதரியும், ‘அப்பா எங் கூடவே இருக்கட்டும். நாம் பாத்துக்கறன்.’ என்ற அண்ணனை ஆமோதித்து தங்களுக்குரிய பங்கு, பாகங்களைப் பிசகில்லாமல் பிரித்து கணக்கு தீர்த்துக் கொண்டனர். மூவருக்கும் வாழ்க்கையில் குறையொன்றுமில்லை. ஆனால், வெங்கடேசனின் வாழ்க்கை மரம் செடி கொடிகளுடன் வசதியான வீடு, நன்கு விளையக் கூடியதாக நான்கு ஏக்கர் ஏரிக் கரையடி நஞ்சை. கணிசமாகக் கிடைக்கும் ஓய்வுத் தொகை போன்ற நிறைகளுடன் நிறையக் குறைகள் கொண்டதாகி விட்டது. உள்ளூரிலும் அக்கம் பக்கம் ஊர்களிலுமாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் தொழில் செய்து ஓய்வு பெற்றவருக்கு பிள்ளையில்லாக் குறை பெருங்குறையாகி விட்டது. அறுபத்தைந்து வயது முதுமையுற்றவரை அனாதையாக்கி விட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்பு அவரது அன்பு மனைவி சீதாலட்சுமியும் அகாலத்தில் போய்விட்டாள். மகனின் துயரத்தில் நிலை குலைந்து போன ரங்கசாமி அறுபது வயது மகனுக்கு, ‘மாவுக்கு ஏத்த பண்டமாக பெண்பார்த்து திருமணம் முடிக்கலாமா?’ என்று குழப்பத்துடன் யோசித்தார். வெங்கடேசன் தந்தையின் குழப்ப யோசனையைக் குழப்பமில்லாமல், ‘யாராவது சிரிக்கப் போறாங்கப்பா!’ என்று உறுதியுடன் மறுத்து விட்டார். வேறு வழியற்றவராக ரங்கசாமி, திருமணமான இரண்டு வருடத்தில் கணவனை இழந்து, ஒற்றை உயிர்நாடியாக இருந்த, மகனையும் பதினைந்து வயதில் பறிகொடுத்தத் துயரத்துடன் நெமிலியில் சின்னஞ் சிறிய கூரைவீட்டில் ஆதரவில்லாமல் தனித்துக் கிடந்த தனது சித்திமகள் சகுந்தலாவை வீட்டில் பெண்ணில்லாத குறைக்கு ஆறுதலாகக் கொண்டு வந்து நிறுத்தினார். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, ‘அப்பா, அத்தை இருக்கிறார்கள்!’ என்னும் கணக்கில் வெங்கடேசனுக்கு விதிக்கப்பட்டதாகஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது வாழ்க்கை.

ஆனால் இப்பொழுது…?

அறுபத்தைந்து வயது நிறைவுக்கும் தந்தையாக இல்லாமல் உயிர்த் தோழனாக உடனிருந்தவர் முதுமையும் நோயுமாக மூன்று மாதங்களாக மரணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு தம்பிகளும், தங்கையும் குடும்ப சமேதராக வருகை செய்து, ‘வந்தார்கள். கண்டார்கள். சென்றார்கள்.’ என்னும் வகையில் பெரியவரைச் சடங்கு போல பார்த்து விட்டு வந்த வேகத்தில் அவரவர் கூடுகளுக்குத் திரும்பி விட்டனர். தம்பிகள், தங்கை மட்டுமென்றில்லாமல் ஒரு வார நெருக்கத்தில் பார்த்தவர்கள் அனைவருமே, “அன்னந் தண்ணியில்லாம மூணு மாசமாயிடுச்சி. பேச்சு மட்டும் தெளிவாருக்கு. மத்தபடி ஆத்மா அடங்கிக்கினே வந்துடுச்சி. வர்ற அமாவாசைதா முடிவா தெரியுது.” என்று கிழவரின் காதுகளில் விழாத வண்ணம் ஒருமித்தவர்களாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். அமாவசைக்கு இன்னும் ஐந்து தினங்கள் தானிருக்கின்றன. அப்படியென்றால்…

அப்பா! அப்பா!’ என்று கதறி அழ வேண்டும் போலிருந்தது வெங்கடேசனுக்கு.

மணி பதினொன்னு ஆவப் போதுப்பா! படுப்பா!” என்ற வெங்கடேசனைக் கை காட்டி அருகில் கட்டிலில் உட்காரச் சொன்னார் ரங்கசாமி. அசப்புத் தோற்றத்தில் ரமணரை நினைவு படுத்தும் தந்தையின் ஒளி குன்றிய கண்களை உற்றுப் பார்த்தபடி கட்டில் விளிம்பில் வலது கன்னத்தைப் பொருத்தித் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தார் வெங்கடேசன். இத்தனை நாட்களில் இல்லாததாக என்ன காரணத்தாலோ இன்று குரல் கம்மிற்றுப் பெரியவருக்கு.

மூணு வருஷங்களா ஊருல புரட்டாசிலயும் கூத்து வைக்கறது நல்லதாத்தாந் தெரியுது. அத்தையும் கூத்துக்குப் போயிடுச்சி. உங்கிட்ட தனியாப் பேசறதுக்கு இப்பத்தா நேரம் கெடச்சிருக்கு. இந்தப் பேச்சுதா உங்கிட்ட எங் கடைசிப் பேச்சா இருக்கப் போவுது. வெங்கடேசா, அப்பா செத்துடப் போறாரேன்னு வருத்தப் படாத! அண்ணன்தம்பி, அக்காதங்கச்சினு யாருமில்லாம பெத்தவங்க பிரியத்துக்கு ஒத்தக்கொம்பா நின்னுட்டவன் தொண்ணூறு வயசு வாழ்ந்துட்டன்! தொண்ணூறு வயசுல அறுபத்தஞ்சு வருஷம் உங் கூட இருந்துட்டன்! தொண்ணூறு வயசு வரைக்கும் நோவு நொடியில்லாம நல்லாத்தானே இருந்தன்? அரிதான மனுஷ வாழ்க்கைல தொண்ணூறு வயசுன்றது கொஞ்சமா? வெங்கடேசா, செத்துப் போவப் போறதப் பத்தி எனக்குக் கொஞ்சமும் வருத்தமில்ல. பூமில பொறக்கற ஜீவராசிங்க ஈ, எறும்பு உட்பட்ட அத்தினிக்கும் பொறப்போடவே இறப்புக்கும் ஓல நிச்சயமாயிடுது. சாவுக்காக அதுலயும் கெழ சாவுக்காக வருத்தப் பட்றதுல அர்த்தமில்ல. என்னோட வருத்தமெல்லாம் உன்னப் பத்தினதுதா. உன்ன அனாதையா விட்டுட்டுப் போறனேன்ற வருத்தந்தா. என்னோட அறுபத்தஞ்சாவது வயசுல உங்கம்மா போயிட்டா. உன்னோட அறுபத்தஞ்சாவது வயசுல உன்ன விட்டு நாம் போவணும்னு முடிவு போலிருக்கு. வர்ற அமாவாசைக்கு கணக்கு முடிஞ்சிடும்னு நெனைக்கறன். பாழும் பெத்த கடமைக்கு எனக்கு இறுதி செய்ய, எடுத்துப் போட நீயிருக்கற. ஆனா உனக்கு? கடைசிக் காலத்துக்குக் கூட வேணாம். மத்ததுக்கு? ஆயுசு உனக்கு இன்னும் எத்தனிக் காலம்னு தீர்மானிச்சிருக்கோ தெரியல. மிச்சமிருக்கற காலத்துக்கு யார் உனக்கு ஆதரவு?”

ஏம்பா, மனசப் போட்டுக் கொழப்பிக்கற? எனக்கென்னப்பா தம்பிங்க, தம்பிப் புள்ளைங்க, தங்கச்சிக் குடும்பம்னு ஒரு கூட்டமே இருக்கு. அத்தை இருக்கு. ஊரு ஜனம் இருக்கு. அப்றம் இன்னா? என்னப் பத்திக் கவலப்படாதப்பா! தூங்குப்பா!”

“ ‘அண்ணங் கூப்பிட்றான்’னு வந்துட்ட அத்தையே யாருமில்லாத அனாத. அத்தை இன்னிக்கி வரைக்கும் நமக்கு ஆக்கி அரிச்சிப் போட்டு நல்லாத்தாம் பாத்துக்குது. அதுக்கும் வயசு எழுபத்தஞ்சாயிடுச்சி. இன்னும் எத்தினிக் காலத்துக்கு அது உனக்கு துணையா நிக்கும்? இருக்கற வரைக்கும் துணையா இருக்கும். ஆனா, எது வரைக்கும்னு ஏதாவது உத்தரவாதம் சொல்ல முடியுமா?”

அப்பா…!”

பெத்தவங்க செஞ்ச பாவம் புள்ளைங்களுக்குனு சொல்லுவாங்க. , எறும்புக்காகவும் துடிச்சிப் போற புண்ணியவதி உங்கம்மா. இதுல அவள பழியாக்கக் கூடாது. என்னையறியாம ஏதோ நாஞ் செஞ்ச பாவம் உனக்குப் பிள்ளையில்லாக் குறையாயிடுச்சி. உனக்குனு வாழ்க்கைப் பட்டவ நல்ல மகராசிதா. அவ உசிரோட இருந்திருந்தா உன்னப் பத்தின கவல எனக்கு ஒன்னுமில்லாமப் போயிருக்கும். குடுத்து வைக்கல. புண்ணியவதி அகாலத்துல போய்ச் சேந்துட்டா. உலக நடப்புல ஆம்பள இல்லாம பொம்பள வாழ்ந்துடுவா. ஆனா, பொம்பள இல்லாத ஆம்பளப் பொழப்பு? உலகத்துலயே கஷ்டத்துலயும் கஷ்டம் ஆம்பள, பொம்பள இல்லாம வாழறதுதா.

புள்ளையில்லன்றது உறுதியானதும் ‘எதுனா ஒரு குழந்தைய எடுத்து வளத்துக்கங்க’ன்னு நா அன்னிக்கே தலப்பாடா சொன்னன். அம்மாவும் சொன்னா. ‘ஒரு தம்பிக் கொழந்தன்னு எடுத்துக்கினா இன்னொரு தம்பிக்கு வருத்தமாயிடும். ‘ஏன் எனக்குலாம் புள்ளைங்க இல்லையா?’ன்னு தங்கச்சி கோவிச்சிக்கும்’னுட்ட. ‘மச்சான் அவனோட பொண்ணு, புள்ளைய தள்ள அடி போடறான்

. ‘தம்பிங்க, தங்கச்சி, மச்சான் யாருக்கும் விரோதமில்லாமப் போவட்டும்’னு ஒதுங்கிக்கிட்ட. நா அன்னிக்கே வேறொரு யோசனையும் சொன்னன். ஆனா, அதையும் நீ காதுல வாங்கிக்கல. இன்னிக்கி எப்பிடி ஆயிடுச்சின்னு யோசிச்சிப் பாரு!”

யோசித்துப் பார்த்தார் வெங்கடேசன்.

பிள்ளையில்லாமல் போன குறை குறித்து அவர் பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பே தீவிரமாகத்தான் யோசித்தார். வெங்கடேசனின் மனைவியும் கணவனுக்கும் அதிகமாகவே யோசிக்கத்தான் செய்தாள். மரணத்தின் வாசலில் நின்று இன்று மகன் தனிமைப் பட்டுப் போகும் சூழல் குறித்துக் கவலை மீதூற யோசிக்கின்ற பெரியவர் ரங்கசாமியும் அன்றும் நிறையவே யோசிக்கத்தான் செய்தார்.

தம்பிங்க, தங்கச்சி, மச்சான் கணக்குல யார் வீட்டுப் புள்ளையாவது ஒன்னு நம்மோட இருக்கட்டும்னு நான் ஒருத்தர் புள்ளைய எடுத்துக்கிட்டாலும் அது மத்தவங்களுக்கு மனஸ்தாபமாகிடும். அதுதாம்பா யோசிக்கறன்’ என்று வெங்கடேசன் சொன்னபோது இன்று மகனுக்குக் குழந்தையில்லாமல் போனது குறித்து பெரிதும் கவலையில் உழல்கின்ற இந்தப் பெரியவர் அன்று வெங்கடேசனின் யோசனை சரியானது என்பது போலத்தான் பேசினார். ஆனால் கூடவே வேறு ஒன்றும் சொன்னார்.

ஒரு வகைல நீ சொல்றது சரிதா, வெங்கடேசா. அதுவுமில்லாம அண்ணன், தம்பி, மாமன், மச்சான்னு யார் புள்ளைய எடுத்து வளத்தாலும் அது என்னிக்கும் தாம் புள்ளையா வளராது. ‘காடைக்குக் கலம் போட்டு வளத்தாலும் அது காட்ட நோக்கித்தாம் பாக்கும்’னு பெரியவங்க சொன்னது சொல்றது பொய்யில்ல. அனுபவம். வளர்ப்பு தாய், தகப்பங் கிட்ட சிக்கிக்கிட்ற குழந்தைங்க மனசு பெரிசாக, பெரிசாக எத்தனி சீர், செனத்தில இருந்தாலும்சீர், செனத்தி செய்தாலும் தங்கத் தாம்பாளத்துல தாங்கனாலும் பெத்தவங்க, கூடப் பொறந்தவங்கள நோக்கித்தா தாவும். அவங்களுக்காகத்தா அதுங்க மனசு அலை மோதும். வளர்ப்பு தாய், தகப்பன் அதுங்களுக்கு ரெண்டாம் பட்சமாயிடும். இதுல யாரையும் குறை சொல்ல முடியாது. காரணம் ரத்த பந்தம். மனுஷ சுபாவம் அப்பிடி. அதனாலதா சிலர் பெத்தவங்க யாருன்றது தெரியாததா வெளியிலருந்து புள்ளைங்கள தத்தெடுக்கறது. இந்த வழில ஏதாவது ஒரு பொண்ணு, புள்ளைய தத்தெடுக்காலாமான்னு சீதா கிட்ட பேசிப் பாரேன்.’

பெரியவர் சொன்ன இரண்டாவது வழி கணவன், மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஏற்றதாகத்தான் தெரிந்தது. ஆனால், தம்பதியர் இருவரின், ‘பார்ப்போம்!’ என்கின்ற அலட்சியத்தில் சரியென்று தோன்றிய யோசனையும் நியாயமான காரணமில்லாமல் நிறைவேறாமல் போயிற்று. ஏறக்குறைய இருபதாண்டுகள் என்னும் நீட்சியுடன் காலமும் அதன் போக்கில் கடந்து போயிற்று.

கூப்பிட்ட குரலுக்கு மறுப்பு சொல்லாம அனாத அத்த நம்மள நம்பி வந்துடுச்சி. மிச்சமிருக்கற காலத்துக்கு அத்தைய நல்லா பாத்துக்க. மத்தது ஆண்டவன் விட்ட வழி.” என்ற பெரியவர் ரங்கசாமி, சிரமத்துடன் குனிந்து கட்டிலின் விளிம்பில் கன்னத்தைச் சாய்த்திருந்த வெங்கடேசனின் தலையில் கை வைத்துப் பார்த்தார். ‘வெங்கடேசன் உறங்கி வெகு நேரம் ஆகிவிட்டது’ என்று நினைத்தவர் ஒரு சில நொடிகளின் இடை வெளியில் ஈனஸ்வரத்தில், “ வெங்கடேசா…!” என்று அலறினார்.

ஊஞ்சல் – சுஷில் குமார் சிறுகதை

“ஆட்டோ அர மணி நேரமா நிக்கி..சொன்னா சொன்ன டைம்க்கு கெளம்ப மாட்டியோ..அவன் இன்னா போயிருவான்..வேற சவாரி இருக்குன்னு சொன்னவன மெனக்கெட்டு வரச் சொன்னா, நீ வெளாடிட்டுக் கெடக்கியா?” ஃபோனில் எரிந்து விழுந்தார் என் கணவர்.

பெரியவளுக்கு சாப்பாடு கொடுத்து அம்மாவுக்கும் எனக்கும் இட்லியும் மிளகாய்ப் பொடியும் எடுத்து சம்படத்தில் வைத்துக் கொண்டிருந்தபோது சிறியவள் தொட்டிலை ஈரமாக்கி அழ ஆரம்பித்திருந்தாள்.

“நீங்க வாய் பேசாதீங்க..பொண்டாட்டிய வந்து கூட்டிட்டுப் போகக் கழியல்ல…ரெண்டு பிள்ளேலயும் கூட்டிட்டு எப்பிடி வருவான்னு ஒரு அக்கற இருந்தா வந்திருப்பீங்க…ஒங்களுக்கு நாங்களா முக்கியம்?”

“திரும்பத் திரும்ப அதயேச் சொல்லாத பாத்துக்கோ..வர முடிஞ்சா நா வந்துருப்பேன்லா? வேலைக்கு ஏத்த மாதிதான எல்லாத்தயும் ப்ளான் பண்ண முடியும்?”

“ஆமா…பெரிய வேல..பிள்ளேல பாக்க ரெண்டு மாசமா வர முடியாத்த வேல..”

“நிறுத்து..மறுபடியும் ஆரம்பிச்சிராத தாயே..சட்டுன்னு கெளம்பு மொதல்ல..ட்ரெய்ன விட்றாத…” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார். அதென்ன, ஒவ்வொரு முறையும் ஃபோனை வைக்கும்போது எதுவும் சொல்லாமல் சட்டென வைப்பது? சரி, வைக்கிறேன் என்று கூடவா சொல்ல முடியாது? அலுவலக அழைப்புகளிலும் ஸ்கைப் இலக்கியக் கூட்டங்களிலும் அவ்வளவு இனிமையாகப் பேச முடிகிறதே!

அவசர அவசரமாகக் கிளம்பி இரயில் நிலையத்தை அடைந்து இரயிலில் ஏறி உட்காரவும் இரயில் கிளம்பவும் சரியாக இருந்தது. இரண்டு பெரிய ட்ராலிகளையும் கொச்சங்கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப் பெட்டியையும் தூக்கி வைத்து பிள்ளைகளையும் அம்மாவையும் பத்திரமாக ஏற்றி உட்கார வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த ஏத்தங்காய் வத்தலும், உப்பேறியும், கைச்சுத்து முறுக்கும் என்ன கனம்! ஆனாலும் என்ன? காலையில் தேநீர் குடிக்கும்போது, “எட்டி, எதாங் கொண்டாந்தியா?” என்று கேட்பாரே!

வேண்டுமென்றால் தாய்மாமாவையோ பெரியம்மா மகனையோ கூட அழைத்து வந்திருக்க முடியும். ஒரு வீம்பில், “நா எங்கம்மா கூடயே வந்துருவேன்..நீங்க ஒங்க வேலயப் பாருங்க” என்று சொல்லி விட்டேன். அதிகமாக யோசித்தாலோ கடின வேலை செய்தாலோ இந்தக் கழுத்து நரம்பு வேறு ஒருபுறமாக இழுத்துக்கொள்கிறது. ஏறி உட்கார்ந்ததும் வெப்ராளமாக வந்தது.

இரயில் கிளம்பி அரை மணி நேரம் ஆகி விட்டது. ‘கெளம்பியாச்சா?’ என்று ஒரு ஃபோன் பண்ணிக் கேட்கக் கூடவா முடியாது? இதற்குத்தான் பன்னிரண்டு வருடம் காத்திருந்து திருமணம் செய்தேனா? வெளியிலிருந்து பார்ப்பவர்கள் சொல்வது, ‘ஒனக்கென்ன? லவ் மேரேஜ்..அவன் எவ்ளோ பெரிய ஆளு? எவ்ளோ பெரிய பொறுப்புல இருக்கான்? ராணி மாதில்லா வச்சிருக்கான்!’. ராணியாக இருப்பது அவ்வளவு சுகமான விசயமொன்றுமில்லை. எரிச்சலும் வெறுப்பும் ஏறிக்கொண்டே போக ஒருபுறம் அழுகை அழுகையாக வந்தது.

ஃபோனை எடுத்து வாட்ஸப்பைத் திறந்தேன். எதிர்பார்த்த மாதிரியே அவரது எண் உபயோகத்தில்தான் இருந்தது. வந்த கோபத்தில் மனதில் வந்ததையெல்லாம் டைப் செய்து அனுப்பினேன்.

‘ஒங்களுக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி, புள்ள? இப்பிடி என்ன பரிதவிக்க விடதுக்கு நீங்க கல்யாணம் பண்ணாமயே இருந்துருக்க வேண்டியதான? ஒங்களுக்குப் புடிச்ச மாதி, ஒங்க வேலக்கி ஏத்த மாதி எவளயாம் கல்யாணம் பண்ணிருக்க வேண்டியதான? புள்ளத்தாச்சின்னு கூட ஒரு எரக்கம் இல்லல்லா? ஒங்களுக்குப் புடிச்சதத்தான் பண்ணுவீங்கன்னா நீங்க கல்யாணம் பண்ணிப் பிள்ள பெத்துருக்கக்கூடாது. வேல, புக்ஸ், ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்னா என்ன எதுக்கு இப்டி ஒரு வாழ்க்கைல தள்ளி ஏமாத்தணும்? நீங்க ஃப்ரீயா இருக்கும்போ மட்டுந்தா நா பொண்டாட்டியா இருக்கணுமா? எப்பவும் இப்டிதா இருப்பீங்கன்னா நா ரெண்டாவது இவளயும் பெத்துருக்க மாட்டம்லா? பெரியவ ‘அப்பா, அப்பா’ன்னு அழுகா, இப்பதான அவ பக்கத்துல இருக்கணும்? கேட்டா, வேலய எவம் பாப்பான்னு சொல்லுவீங்க..ஊர்ல அவவன் வேலயயும் பாத்துட்டு குடும்பத்தையும் கவனிக்காமலா இருக்கான்? எம் மூஞ்சில முழிச்சிராதிங்க பாத்துக்கோங்க..எம் பிள்ளைளுக்காகத்தா நா வாறேன்..நீங்க ஒண்ணும் ஸ்டேசனுக்கு வராண்டாம்..நானே பஸ் புடிச்சி வந்துருவேன்..’

இன்னும் கேட்பதற்கு எவ்வளவோ இருந்தது. வாட்ஸப்பில் இரண்டு நீல நிற டிக்குகள் வந்தன. பதில் வராது என்பது எனக்கு நன்றாகத் தெரிந்த விசயம்தான்.

ஒரு மணி நேரம் கழித்து அழைப்பு வந்தது. துண்டித்து விட்டேன். ஐந்தாறு முறை அழைத்தார். நானும் துண்டித்து விட்டேன். ஒரு மெசேஜ் வந்தது.

‘ஓவரா பண்ணாத..கடுப்பு மயிரக் கெளப்பிட்டுக் கெடக்காத பாத்துக்கோ..ஃபோன் பண்ணா அட்டெண்ட் பண்ண முடியாதோ?..எல்லாத்தயும் தூக்கிப் போட்டு ஒடச்சிருவேன்..திமிரு..மயிரு..’

அவருக்குச் சின்ன எரிச்சல் வந்தாலும் இந்த ‘மயிரு’ வார்த்தை வந்துவிடும். நானும் பேசலாம் இல்லையா? என் அப்பாவிடம் கேட்காத கெட்ட வார்த்தையா என்ன? சரியான பதில் பேச முடியவில்லை என்பதால்தானே கெட்ட வார்த்தைகள் வருகின்றன?

மீண்டும் அழைத்தார். ஃபோனை எடுத்து அமைதியாக இருந்தேன். கோவமும் வெப்ராளமும் அடங்கவில்லை. என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றையும் செய்ய மாட்டாராம், நான் மட்டும் இயந்திரமா என்ன?

“நாந்தா ட்ரெய்னிங் இருக்குன்னு சொன்னம்லா? இப்பதா கேம்ப் ஃபயர் முடிஞ்சி சாப்பிடப் போறேன்..பிள்ளேல் தூங்கியாச்சா?” என்று கேட்டார்.

“நீங்க ஒங்க வேலயப் பாருங்கப்பா…எங்களப்பத்தி எதுக்கு கவலப்படுகீங்க? நல்லா சிரிச்சி சிரிச்சி ஆட்டம் போட்டாச்சுல்லா? போயி எவ கூடயாம் சாட் பண்ண வேண்டியதான?” என்று லேசாகக் கத்த அம்மா என்னைப் பார்த்து கண்ணைக் காட்டினார். இப்படிக் கேட்டால் என் கணவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

“ஆமாட்டி..அப்டித்தாம்ட்டி ஆடுவேன்…ஒஞ் சோலியப் பாருட்டி மயிரே..பெரிய மத்தவ..என் வேலயப் பத்திப் பேசுன, பல்லு கழந்துரும் பாத்துக்கோ..” என்று எனக்கும் மேலாகக் கத்திவிட்டுத் துண்டித்து விட்டார்.

எனக்கும் கோபம் தலைக்கேறியது. என்ன செய்ய முடியும்? சிறியவளை நெஞ்சோடு அணைத்துக் கண்ணை மூடி உட்கார்ந்தேன்.

அவரது வேலையைப் பற்றிப் பேசக் கூடாது. அவரது நண்பர்களைப் பற்றிப் பேசக் கூடாது. அவரது குடும்பத்தைப் பற்றிப் பேசக் கூடாது. சரி, அதையெல்லாம் கூட பொறுத்துக்கொள்ளலாம். அவரது நேரத்தையும் உடனிருப்பையும் கூட கேட்கக் கூடாதா?

ஒரு ஞாயிற்றுக் கிழமை. இறகுப்பந்து விளையாட்டு மைதானத்திற்கு காலை எட்டு மணிக்குச் சென்றவர் மதியம் இரண்டு மணிக்கு திரும்பி வந்தார். வியர்வையில் நனைந்து வீட்டில் நுழைந்தவர், “எட்டி, கறி வெச்சிட்டியா? பெப்பர் ஜாஸ்தியா போட்டியா? செம பசி பாத்துக்கோ..” என்றார்.

நான் பதில் ஏதும் பேசாமல் சமையலறையில் நின்றேன். பெரியவள் சென்று, “அப்பா, வாங்க வெளயாடுவோம்…நாந்தா ரோஸி மிஸ்…நீங்க ஸ்டூடண்ட்…” என்று அவரைக் கட்டிப்பிடித்தாள். சட்டென்று அவளைத் தள்ளிவிட்டவர், “தள்ளிப் போட்டி அங்க…எத்தன வாட்டிச் சொல்லது..வெளாடிட்டு வரும்போ வந்து மேலச் சாடாதன்னு…” என்று கத்தினார்.

பெரியவள் பயந்துபோய் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அவ கட்டிப்புடிச்சா ஒங்களுக்கு என்ன கொறஞ்சிரும்? பிள்ளய தள்ளிவிடதப் பாரு..மனசாட்சியே கெடயாது..” என்று நான் கத்தினேன்.

“தேவயில்லாமப் பேசாத பாத்துக்கோ..”

“ஆமா, நா பேசுனா ஒங்களுக்குத் தேவயில்லாமத்தா தெரியும்…ஞாயிற்றுக் கெழமையும் பொண்டாட்டி, பிள்ள கூட நேரம் செலவழிக்க முடியாது…பேட்மிண்டன் ரொம்ப முக்கியம்லா? சாப்பாட்டு நேரத்துக்கு மட்டுந்தா வீட்டுக்கு வறீங்க..பொறவு நீங்க தூங்குவீங்க, நாங்க தொந்தரவு பண்ணக் கூடாது..சாய்ங்காலம் மாடில போயி போன வச்சிட்டு லாந்துவீங்க…அதயும் கேக்கக் கூடாது…அப்போ, நானும் பிள்ளயும் எதுக்கு இங்க இருக்கோம்? பேட்மிண்டன் இப்ப ரொம்ப அவசியம்லா…” என்று பெரியவளைக் கட்டிக்கொண்டேன்.

“நீ அழாதம்மா…ஒங்கப்பாக்கு நம்மல்லாம் முக்கியமில்ல..” என்று சொல்ல அவள் ஏங்கி ஏங்கி அழுதாள்.

முறைத்துக்கொண்டே நின்றவர் சட்டென தனது இறகுப் பந்து மட்டையை எடுத்து கால் முட்டியில் வைத்து இரண்டாக உடைத்துப் போட்டார்.

“இந்தா…எடுத்துக் குப்பைல போடு…சந்தோசமா இரி…” என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

….

எதிர் படுக்கையில் அம்மா பெரியவளை தட்டிக் கொடுத்து ஏதோ கதை சொல்லிக் கொண்டிருந்தார்.

திருநெல்வேலி சந்திப்பு. வழக்கமாக இரயில் அங்கே நிறைந்து விடும். அன்றும் நல்ல கூட்டம். எங்களுக்கு கீழ்ப்புறப் படுக்கை ஒன்றுதான் கிடைத்திருந்தது. வருபவர்களிடம் பேசி இன்னொரு கீழ்ப்புறப் படுக்கை கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். பக்கவாட்டில் இருக்கும் படுக்கை என்றால் இன்னும் வசதி. ஆனால், கூட்டமிகுதியால் அன்று அதுவும் RAC-யாகத்தான் இருக்கும்.

ஒரு வயதான தம்பதியர் வந்தனர். அந்தத் தாத்தா என்னைப் பார்த்ததுமே, “நீ கீழயே படுத்துக்கம்மா..ஒனக்கு மிடிலா? அப்பரா?” என்று கேட்டார்.

“ரொம்ப தேங்க்ஸ் தாத்தா..எனக்கு அப்பர்..ஒங்களுக்கு கஷ்டமா இருக்கும்லா?”

“பரவால்லம்மா..ஏறிட்டாப் போரும்..தூங்கிருவேன்..அவ மிடில் ல ஏறிருவா..பிரச்சன இல்ல..” என்று தன் மனைவியைப் பார்த்து சிரித்தார்.

அந்த ஆச்சி வந்து சிறியவளைப் பார்த்து, “ரெண்டும் பொண்ணாம்மா? அதிர்ஷ்டக்காரில்லா நீ…நல்லா இரி..” என்று என் தலையைத் தொட்டு விட்டு அவரது படுக்கையில் ஏறினார்.

அம்மா ஒரு புடவையை படுக்கைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் தொட்டிலாகக் கட்டினாள். சிறியவளுக்கு ஸ்வெட்டர் போட்டுவிட்டு அவளைத் தொட்டிலில் போட்டு ஆட்டினேன்.

குடும்பவீட்டுப் பாரம்பரிய ஊஞ்சலில் நான் படுத்திருக்க எதாவது கதை சொல்லிக்கொண்டே ஆட்டி விடுவார் தாத்தா. தாத்தா இல்லாவிட்டால் ஆச்சி. நல்ல தேக்கு மர ஊஞ்சல். கீழே தொங்கும் சின்னஞ்சிறு மணிச் சத்தமும் கதையுமாக ஆடிக்கொண்டே தூங்கிவிடுவேன்.

“எட்டி…பொம்பளப் பிள்ள..நாளக்கி ஒருத்தன் வீட்டுக்குப் போகும்போ ஊஞ்சலுக்கு என்ன செய்வ?” என்று ஆச்சி அடிக்கடி கேட்பார்.

“ஆங்…ஊஞ்சல் வாங்கித் தந்தாதான் தாலியே கெட்ட விடுவேன்…” என்று சொல்வேன். அப்படியொரு ஊஞ்சல் எனக்கே எனக்கென என் வீட்டில் இருக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை.

திருமணமான புதிதில் ஒருநாள் அவரிடம், “ஏம்ப்பா, எனக்கு ஊஞ்சல் எப்போ வாங்கித் தருவீங்க?” என்று கேட்டேன்.

“ஊஞ்சலா? எதுக்கும்மோ? சின்னப் பப்பாவா நீ?” என்று சொல்லிச் சிரித்தார்.

“நீங்க தான சொன்னீங்க, கல்யாணம் முடிஞ்சி வாங்கித் தாறேன்னு…”

“வெளயாடாத பாத்துக்கோ…வர சம்பளத்துல பத்து ரூவா சேத்து வைக்க முடியல..இதுல, ஊஞ்சல் தான் கொற இப்போ…”

எத்தனை முறை கேட்டாலும், எவ்வளவு வசதி வந்தாலும் எனக்கொரு ஊஞ்சல் அமையவில்லை. அவரைப் பொருத்தவரைக்கும் அது ஒரு ஆடம்பரம். ஆனால், ஊஞ்சல் என்னுடன் பேசும், அது என்னைத் தடவிக் கொடுக்கும், எனக்கான பாடல்களைப் பாடும், தாலாட்டும், என் வலிகளை உறிஞ்சிக்கொள்ளும் என்பதை நான் எப்படி அவருக்குப் புரிய வைப்பது? பெரியவளுக்குக் கட்டிய தொட்டிலில் உட்கார்ந்து ஆடி அதையே என் ஊஞ்சலாக நினைத்துக் கொள்வேன்.

..

கைப்பையின் மேல் அம்மாவின் புடவையை மடித்து வைத்துத் தலையணையாக்கிச் சாய்ந்தேன். இரயிலில் பொதுவாக நான் தூங்குவதேயில்லை. வேலை செய்த நாட்களில் உருவான ஒரு பயம். ஏனோ இன்னும் தொடர்கிறது. நவ நாகரிகம், சமத்துவம், உரிமைக்குரல் எல்லாம் சரிதான், ஆனால் இந்த பயம் மட்டும் ஏனோ கூடவே இருக்கிறது. திருமணம் ஆன புதிதில் சென்ற பயணங்களில் அவர் தூங்குவதையே பார்த்துக்கொண்டு கிடப்பேன். பெரியவள் பிறந்த பிறகான பயணங்களில் அவளைத் தூங்க வைத்து எதையாவது யோசித்துக் கிடப்பேன். யோசிப்பதற்குத்தான் எப்போதும் நிறைய இருக்குமே!

சென்னை ஸ்பென்சர் பிளாசாவின் முன் அவருக்காகக் காத்திருந்தது ஞாபகம் வந்தது. அவர் எப்படி வருகிறார் என எதுவும் சொல்லியிருக்கவில்லை. திடீரென எனக்கு மிக அருகில் வந்து ஒரு அப்பாச்சி பைக் நிற்க தலைக்கவசம் போட்ட அந்த நபர் எனைப் பார்த்து தலையசைத்தார். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளுக்குள் நடுங்க, “ஏய் லூசு, வந்து ஏறு” என்றார்.

பைக்கில் ஏறிய நொடி முதல் திருவல்லிக்கேணி ஆண்டாள் சந்நிதி முன் சென்று நிற்கும் வரை நான் மனதிற்குள் பல மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆண்டாள் சந்நிதியில் வைத்து எனக்கு ஒரு பரிசு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். நான் கண்மூடி வேண்டியிருக்க, “மகளே, உன் தவத்தைக் கண்டு யாம் மெச்சினோம்..என்ன வரம் வேண்டும், கேள்” என்று என் தலையில் தட்டினார். எப்போதும் போல நான் சிணுங்க ஆரம்பிக்க, அழகான ஒரு வெள்ளி மோதிரத்தை நீட்டினார். அந்த நாள் ஆண்டாள் நிச்சயித்த எங்கள் திருமண நாள் என நினைத்துக்கொண்டேன்.

என் மனத்தில் ஊற்று பெருக்கெடுத்தது போல சட்டென மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவருடனான என் அத்தனை மகிழ்ச்சிக் கணங்களும் எனைச் சுற்றிப் பெருகி நின்றன. அவரது முதல் சம்பளத்தில் எனக்காக எங்கள் பெயரைக் கவிதையாக்கி நெய்து அவர் அனுப்பிய பட்டுப் புடவை என் அப்பா கையில் மாட்டிக் கொள்ள நான் ஏதோ சொல்லிச் சமாளித்தது, தூங்கிக் கொண்டிருந்தபோது என் கண்களை மட்டும் புகைப்படம் எடுத்து அதை சட்டமிட்டுக் கொண்டு வந்து என் அறையில் எனக்குத் தெரியாமல் மாட்டியது, என் பிறந்த நாளன்று எனக்குப் பிடித்த தந்தூரிச் சிக்கன் வாங்கி அதை எனக்குத் தராமல் அவர் சீண்டியது, எனக்கு எந்தக் கவலையும் கொடுக்காமல் என் அத்தனை சொந்தங்களையும் சமாளித்து அவர் என்னைக் கட்டிக்கொண்டது, பிறக்கப் போவது மகள்தான் என அவர் உறுதியாக நம்பியிருந்தது, அதைப் போலவே பெரியவள் பிறக்க, அவர் செய்து வைத்திருந்த அழகான குட்டி மோதிரத்தை நாங்கள் அவளுக்குப் போட்டு விட்டது….இன்னும் எத்தனையோ கணங்கள்..

மீண்டும் வாட்ஸப்பைப் பார்த்தேன். அவர் இன்னும் தூங்கியிருக்கவில்லை.

சிறியவள் பிறந்திருந்த சமயம். ஒருநாள், வேலையெல்லாம் முடித்து அவளைத் தொட்டிலில் போட்டு நீண்ட நேரம் ஆட்டிக்கொண்டிருந்தேன். கைவிரல் முதல் தோள்பட்டை வரை பயங்கரமாக வலித்தது. அவர் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார்.

“ஏம்ப்பா, கொஞ்சம் வந்து ஆட்டுங்க…” என்று நான் அழைத்தேன். திரும்பிப் பார்த்தவர் தலையை ஒருமுறை ஆட்டிவிட்டுத் தொடர்ந்து வாசித்தார். உடல் வலியும் மன வலியும் சேர்ந்து நான் கண்கலங்கி கைமாற்றிக் கைமாற்றி ஆட்டிக்கொண்டிருந்தேன். பத்து நிமிடம் கழித்து வந்தவர் தொட்டில் கயிற்றைப் பிடிக்க, “நீங்க போய் ஒங்க வேலயப் பாருங்க…” என்று வெட்டி இழுத்தேன்.

“செவுட்டடிச்சி ஒடச்சிருவம் பாத்துக்க..தள்ளிப் போட்டி அங்க…பெரிய வீம்பு காட்டுகா வீம்பு..” என்று கத்தினார்.

“ஆமா, முடியாம எல்லா வேலையுஞ் செஞ்சு கை வலிக்குன்னுதான ஒங்கள ஆட்டக் கூப்புட்டேன்…என் வலி எனக்கு..நீங்க ஒங்க புக்லயே இரிங்க…” என்று சொல்லி அழுதேன்.

“இப்பிடிக் காராடிக் காராடித்தான நா பேட்மிண்டன் வெளயாடுறத கெடுத்த..இப்ப நா புக்கும் படிக்கக் கூடாதா? இன்னா, எல்லாத்தயும் தூக்கிப் போட்டுக் கொளுத்து..” என்று கத்தி மேசையில் அடுக்கி வைத்திருந்த அத்தனைப் புத்தகங்களையும் விசிறியடித்தார்.

நான் புத்தகம் வாசிக்க வேண்டாமென்றா சொன்னேன்? வீட்டிற்கு வந்ததும் பிள்ளைகளுடன் கொஞ்சம் விளையாட வேண்டும், எனக்கு முடியாத போது சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ‘செய்யட்டுமா?’ என்று ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா என்ன?

கோபத்தில், “எத்தன புக் படிச்சி என்னத்துக்கு? ஒங்க புக்லெல்லாம் பாசம்னா என்னன்னு சொல்லித் தரல்லயா? எல்லாருக்கும் வேண்ணா நீங்க பெரிய அறிவாளியா இருக்கலாம்..எனக்கு நீங்க ஒரு வேஸ்ட்டு தான் பாத்துக்கோங்க…சுயநலம்…சுயநலம்…” என்று கத்திவிட்டேன்.

“மண்ணாங்கட்டி…நீ ஒரு முட்டாளா இருக்கேன்னா அதுக்கு நானும் அப்பிடி இருக்க முடியாதுல்லா?..நா புக்க எடுக்கும்போதான் அவளுக்கு வேல மயிரு வரும்..பகல் ஃபுல்லா வேல..ராத்திரி ஒறங்கக்கூட நேரம் கெடயாது. பொறவு ஒருத்தன் எப்பதா தனக்குப் புடிச்சத செய்யது?”

“ஓ…அப்ப நானும் எனக்குப் புடிச்சத மட்டுஞ் செய்யவா? குடும்பத்த அப்போ யாரு பாப்பா? நீங்க ஊர் ஊரா சுத்தும்போ புக்க கெட்டிட்டு அழுங்க..இங்க இருக்கதே மாசத்துல பாதி நாளு…தனியா இருக்கும்போ ஒவ்வொரு நாள் ராத்திரியயும் கடக்கதுக்கு கெதம் கெதம்னு வரது எனக்குதான தெரியும்.” என்று அழ ஆரம்பித்தேன்.

மனது கனமாக ஃபோனை எடுத்து ஃபேஸ்புக்கில் நுழைந்தேன்.

‘ஹேப்பி ஆஃபிஸ் வர்க் ஷாப்’ என்று தலைப்பிட்டு பல புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இவர் நடுவில் நிற்க ஒரு பத்து பெண்கள் ‘யோ யோ’ சைகை வைத்துக் கொண்டும், வாய்விட்டுச் சிரித்துக்கொண்டும் நின்றனர். அதில் ஒரு பெண் இவரது தலைக்கு மேல் கொம்பு வைத்துச் சிரித்து நின்றாள். கீழே அவரது குறிப்பு ‘வித் த பெஸ்ட் கேர்ள்ஸ் ஆன் எர்த்’ என்று. வயிறு எரிந்துகொண்டு வந்தது.

திருமணமான புதிதில் அவரது சித்தி வீட்டிற்கு மறுவீடு சென்றிருந்தபோது அவரது தங்கை ஓடி வந்து அவரது மடியில் சாய்ந்து படுத்தாள். அதற்கே சண்டை போட்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தேன் நான். நான் சொல்வது முட்டாள்த்தனமாகத் தோன்றலாம். ஆனால், காதலிக்க ஆரம்பித்த நாள் முதல் இந்த நொடி வரை நான் அப்படித்தான் இருக்கிறேன். சும்மா குறுகிய மனப்பான்மை என்று தள்ளிவிட முடியாது.

சண்டை போட்டு நான் அழுதுகொண்டிருக்கும்போதும் எப்படி அவரால் ஃபேஸ்புக்கில் இருக்க முடிகிறது. சமாதானப் படுத்துவதற்கு ஒரு சிறிய மெசேஜ் கூட போட முடியாதா?

கோவை சந்திப்பு. நான் பிள்ளைகளை எழுப்பி ட்ராலிகளையும் அட்டைப் பெட்டியையும் எடுத்து வைத்தேன். அம்மா பெரியவளைப் பிடித்துக் கொள்ள, நான் சிறியவளைத் தோளில் போட்டுக்கொண்டு ஒரு ட்ராலியை இழுத்தேன். திருநெல்வேலித் தாத்தா எழுந்து எனது இன்னொரு ட்ராலியையும் அட்டைப் பெட்டியையும் தூக்கிக் கொண்டார்.

“பரவால்ல தாத்தா..அவரு வந்துருப்பாரு..” என்றேன்.

“ஒண்ணுல்லம்மா…நீ பாத்து எறங்கு..” என்றார்.

நடைமேடையில் இறங்கி நிற்க, தாத்தா என் மகள்களின் கன்னங்களைத் தொட்டு விரல்களால் முத்தமிட்டுவிட்டு ஆச்சியின் கையைப் பிடித்து நடந்தார்.

வழக்கம்போல என் கணவர் தாமதமாக வந்தார். நான் அவர் முகத்தை ஏறிட்டுக்கூட பார்க்காமல் நிற்க, வந்து சிறியவளைத் தூக்கி முத்தமிட்டார்.

பெரியவள் அவர் காலைக் கட்டிக்கொண்டு, “அப்பா, பால்கோவா வாங்குப்பா…பால்கோவா…” என்று கொஞ்ச ஆரம்பித்தாள்.

வாகன நிறுத்துமிடத்தில் எங்கள் கார் அழுக்குப் படிந்து நிற்க, நான் அம்மாவைப் பார்த்து சைகை செய்தேன். அம்மா தனக்குள்ளாகச் சிரிக்க, அவர் முறைத்துக்கொண்டு நடந்தார்.

வீடு சென்று சேரும் வரை அப்பாவும் மகளும் ஒரே கும்மாளம்தான். வீட்டைப் பார்த்ததும் எனக்குத் தலைவலியே வந்துவிட்டது. வீட்டு முற்றம் முழுதும் மாவிலைச் சருகுகள் குவிந்து கிடந்தன. ரோஜாச் செடிகள் எல்லாம் தண்ணீரின்றி வாடிக் கிடந்தன.

“இந்தத் தொளசிக்குக் கூட தண்ணிவிடக் கழியாதா?” என்று எனக்குள்ளாகப் புலம்பினேன். அவர் வீட்டுச்சாவியை பெரியவளிடம் கொடுத்து, “அம்மாட்டக் குடு மக்ளே” என்று சொல்லிவிட்டு ஃபோனை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றார்.

எரிச்சலுடன் சாவியை வாங்கிக் கதவைத் திறந்தேன். வரவேற்பறையில் ஒரு புத்தம்புதிய தேக்கு மர ஊஞ்சல் என்னை வரவேற்றது. அதன் மீது பல புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.