“தன் புதல்வியைக் காப்பாற்றியதற்கு பரிசாக எனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்க ராஜா தயாராக இருந்தார். ஆனால், எனக்கு பணத்தில் நாட்டம் இல்லை. வெளி கிரகத்து மனிதர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் என் குறிக்கோளாக இருந்தது. ராஜாவிடம் சிறிது பணத்தை வாங்கிக்கொண்டு எங்கள் நாடு முழுவதும் அலைந்தேன். காடுகள் இருக்கும் பகுதிகளுக்கெல்லாம் சென்றேன். அங்குள்ளவர்களை தீர விசாரித்தேன். எந்த ஒரு காட்டுப் பகுதியிலும் ஏதும் மர்மமான சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. திரிந்து திரிந்து மிகவும் சோர்ந்து போயிருந்தேன். அப்பொழுதுதான் அலிஸ்சை சந்தித்தேன். என்னை மொழிபெயர்க்க கூப்பிட்டிருந்தார்கள். என்னுடைய ஆழ்ந்த அறிவையும் ஆங்கில புலமையும் கண்டு இவள் வியந்தாள். அவளை என் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டாள். எனக்கும் ஊர் ஊராகத் திரிந்து ஓய்ந்துவிட்டிருந்தது. ஒரிடத்தில் இருந்தால் நல்லது என்று தோன்றியது. நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.
ஒரு நாள் சிலர் உலகில் வேறொரு இடத்தில் உள்ள காட்டைப் பற்றியும் அங்கு சென்ற உலகிலேயே சிறந்த சாகசக்காரர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இருவர் கோர மரணம் அடைந்ததையும், ஒருவன் மட்டும் அந்தக் காட்டுக்குள் சர்வசாதாரணமாக சென்று வருவதாகவும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டேன். ஆலிசை கூப்பிட்டு இதைப் பற்றி தீர விசாரிக்கச் சொன்னேன். எல்லா விவரங்களையும் அறிந்தபின் ஆலிசிடம், நாம் இங்குச் செல்ல வேண்டும், என்று சொன்னேன். அவளுக்கு இந்தப் பின்கதை தெரியாது. ராஜாவிடம் சென்று பணம் வாங்கிக்கொண்டு வந்தேன். மற்ற வேலைகளை ஆலிஸ் கவனித்தாள். அப்படியாக நாங்கள் இங்கு வந்து சேர்ந்தோம்” என்று கதையை முடித்தான் இந்தியன். (more…)
