அமேஸான் காடுகளிலிருந்து- 7: கள்ளமில்லா மனது

மித்யா 

“அறை முழுவதும் மெல்லிய பச்சை ஒளி பரவியது. நான் கண்ணை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் உட்கார்ந்திருந்தேன். பச்சை ஒளி பரவியவுடன் அங்கு நிசப்தம் நிலவியது. ஓயாமல் அழுது கொண்டிருந்த ராணியின் குரல் சட்டென்று யாரோ குரல்வளையை நெருக்கியது போல் நின்றது. கதறிக் கொண்டிருந்த இளவரசியின் குரலும் அடங்கியது. எல்லோரும் திகைத்து நின்றிருப்பதை உணர்ந்தேன். வெளியில் இலைகளின் சலசலப்பும் பறவைகளின் ஓசையும் தவிர வேறேதும் இல்லை. என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“நீ யார்?” என்ற கேள்வி என்னை வந்து தாக்கியது. இது காதில் கேட்கக்கூடிய சப்தம் இல்லை. அது மொழியும் அல்ல. என் உள்ளுணர்வுடன் வேறொரு ஆத்மா உரையாடிக் கொண்டிருந்தது. இது என்னை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை, ஆனால் இந்த ஆத்மா பேசும்போது பச்சை ஒளி மங்கியும் பிறகு அதிகமாக மிளிர்வதாகவும் இருந்தது.

“நான் யார் என்பது இங்கு முக்கியமில்லை. நீ யார்? எதற்காக இங்கே வந்தாய்? எங்கிருந்து வந்தாய்?”

“என்னால் யாருடனும் எவ்வளவு முயன்றும் உரையாட முடியவில்லை. நீ சொல்வது மட்டும் கேட்கிறது. அதனால்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.”

“நான் இங்கு டாகடரிடம் வேலை செய்கிறேன். எனக்கும் உன் பேச்சு எப்படி கேட்கிறது என்று புரியவில்லை. என்னுள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது போல். ஆமாம், நீ எதற்காக இங்கு வந்தாய்? யார் நீ? ஏன் இளவரசியை இப்படி பாடாய்ப் படுத்துகிறாய்?”

“நான் யாரையும் படுத்த இங்கு வரவில்லை. நான் இளவரசியை அழைத்துச் செல்ல வந்தேன்.”

“இளவரசியை அழைத்துச் செல்லவா? எங்கு? எதற்கு? அவள் என்ன தவறு செய்தாள்?”

“பயப்படாதே. அவள் ஒரு தவறும் செய்யவில்லை. நான் வேறொரு கிரகத்திலிருந்து வந்திருக்கிறேன். நாங்கள் உங்களைவிட விஞ்ஞானத்தில் அதிகம் முன்னேறியிருக்கிறோம். ஆனால் என் கிரகம் சிறியது. இப்பொழுது அங்குள்ள எல்லா இயற்கை பொருள்களும் குறைந்து வருகின்றன. எங்களால் அங்கு இன்னும் அதிக நாட்கள் வாழ முடியாது. அதனால் எங்கள் பெரியவர்கள் பல கிரகங்களைத் தேடி கடைசியில் நாங்கள் உயிர் வாழக்கூடிய கிரகம் நீங்கள் வாழும் இந்தக் கிரகம் ஒன்றே என்று அறிந்து கொண்டார்கள். அதனால் எங்களில் பலரை இந்த கிரகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். ஆனால் அதற்கு ஒரு தடங்கல் வந்தது”

“இரு இரு. நீ வேறு கிரகத்தின் மனிதன் என்றால் ஏன் உன் உருவம் தெரியவில்லை? எனக்கு நீ ஒரு பேய் என்ற சந்தேகம் வருகிறது.”

“ஹஹஹ! நாங்கள் மனிதர்கள் இல்லை. அதாவது உங்களைப் போன்ற உருவம் எங்களுக்கு இல்லை. நீங்கள் கண்களால் பார்க்கிறீர்கள். எங்களுக்கு கண்கள் இல்லை. நாங்கள் உணர்வுகள் மூலம் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம்”

“அது எப்படி முடியும்? கண்கள் இல்லாமல் எப்படி பார்க்க முடியும்?”

“பார்வை என்று நீ நினைப்பது ஒருவிதப் பார்வைதான். நீ பார்வை என்று நினைப்பது ஒரு குறுகிய வட்டம். இன்னொருவரைப் ‘பார்க்க’ வேண்டும் என்றால் அவரின் உருவத்தைப் பார்ப்பதாக நீ புரிந்துக்கொள்கிறாய். ஆனால் அவர் மனதுக்குள் உன்னால் பார்க்க முடிவதில்லை. பல நேரங்களில் அவர்கள் உணர்வுகளை உன்னால் அறிய முடிவதில்லை. கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மகத்துவத்தினால் விரிந்த பார்வையை இழக்கிறீர்கள். உங்கள் கிரகத்தில் பல பட்சிகள் இரவு நேரங்களில் ஒலியின் வாயிலாக உலகத்தைப் பார்க்கின்றன தெரியுமா? இங்கு தலைகீழ் தொங்கும் ஒரு பறவை ஒலி எழுப்புகிறது. அந்த ஒலி பக்கத்தில் இருக்கும் பொருட்கள் மீது பட்டுத் தெறிக்கிறது. அது எதிரொலியாக பறவைக்கு கேட்கிறது. அதை வைத்து எந்தப் பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை பறவை அறிந்து கொள்கிறது. இது போல் கடல் ஆழத்தில் இருக்கும் மீன்களும் கண்ணிலலாமல் உயிர் வாழ்கின்றன”.

“நீ சொல்வது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, ஆனால் என் கேள்வி அதில்லை. உனக்கு ஏன் உருவம் இல்லை என்பதே என் கேள்வி”

“எனக்கு உருவம் இருக்கிறது, ஆனால் நீ பார்க்கக்கூடிய உருவமில்லை அது. உங்கள் கண்களுக்கு நாங்கள் தெரிய மாட்டோம். எப்பொழுதாவது உங்களுக்கு நாங்கள் பச்சைப் புகை போன்ற உருவமாக தெரியலாம். ஆனால் நீ இருப்பது எவ்வளவு உண்மையோ நான் இருப்பதும் அது போல் உண்மை. நீ சந்தேகப்பட வேண்டாம். நான் நீ சொல்லும் பேய் இல்லை. எனக்கு பேய் என்றால் என்னவென்று தெரியாது.”

“அப்படியா? சரி. நீங்கள் ஏதோ எங்கள் கிரகத்திற்கு வரவேண்டும் என்று புறப்பட்டதாகவும் ஏதோ தடங்கல் வந்ததாகவும் சொன்னாயே. என்ன தடங்கல் அது?”

“எங்களுக்கு உயிர் வாழ்வதற்கு மரங்களும் தண்ணீரும் தேவை. உங்கள் கிரகத்தில் அது அதிகமாக இருக்கிறது. எங்களில் பாதி பேர் இங்கு வந்தாலும் உங்களுக்கு ஒரு தொந்தரவும் இருக்காது. இப்படி எண்ணி எங்கள் பெரியவர்கள் சிலர் இங்கு வந்தார்கள். அவர்கள்..”

“எப்படி வந்தார்கள்?”

“எங்களிடம் பறக்கும் கருவி இருக்கிறது. அதில் கிரகத்தை விட்டு கிரகம் செல்ல முடியும். எங்கள் கிரகத்திலிருந்து இங்கு வருவதற்கு நீங்கள் சொல்லும் நாட்களில் பத்து வருடங்கள் ஆகும். ஆனால் நாங்கள் உங்களைப் போலல்லாமல் கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் வாழ்பவர்கள்”

“உனக்கு எப்படி வருடம் என்ற கணக்கு தெரிந்தது?”

“நான் சொன்னேன் அல்லவா, என் முதியோர்கள் இங்கு வந்தார்கள் என்று. அவர்களில் பலர் விஞ்ஞானிகள். அவர்கள் உங்கள் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனித்தார்கள். அதனால்தான் இந்த கிரகத்தில் நடக்கும் பல விஷயங்கள் எங்களுக்கு தெரியும்.”

“சரி மேலே சொல்”

“இந்த கிரகத்திற்கு வரவேண்டும் என்று முடிவெடுத்த பின் இந்த கிரக மனிதர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காக எங்கள் மக்கள் உங்கள் மக்களை அணுகினர். அவர்களை நாங்கள் தொட்டவுடன் சிலர் பல துண்டங்களாகச் சிதறினார்கள். பலர் தூக்கி எறியப்பட்டார்கள். வெகு வெகு சிலரே நாங்கள் அருகில் வந்தாலும் ஒன்றும் ஆகாமல் சாதாரணமாக இருந்தார்கள். இது போன்றவர்கள் கிடைப்பது வெகு அரிதாக இருந்தது. குழம்பிப் போன எங்கள் விஞ்ஞானிகள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள். உங்களுக்குள் இருக்கும் கள்ளமும் கபடமும் எங்களை நெருங்கவிடாமல் செய்கிறது என்று அறிந்தார்கள். எங்கள் பெரியவர்களுக்கு நாங்கள் இங்கு வந்து நீங்கள் இறந்துவிடுவதில் இஷ்டமில்லை. அதனால் எங்களில் மூன்று பேர்களை இங்கு அனுப்பினார்கள்”

“எதற்காக?”

“கள்ளமில்லா மனது கொண்ட ஒருவரை அழைத்துக்கொண்டு வருவதற்காக”

(தொடரும்)

ஒளிப்பட உதவி – Pixarthinking

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.