சீர்: கவிதையும் ஓசையும் – பீட்டர் க்ளைன்

பீட்டர் க்ளைன்

(கவிதையின் ஓசை நயம் குறித்து Ploughshares என்ற தளத்தில் Peter Kline எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்).

என்னைப்போல் இன்னொரு கவிஞன் இல்லை என்று நினைக்கிறேன். புதுக்கவிதையின் காலத்தில் இலக்கணச் சுத்தமாய் கவி புனைந்து கொண்டிருக்கிறேன் (உரைநடையின் காலத்தில் கவிதை எழுதுவதில் உள்ள பொருத்தமின்மை பற்றிச் சொல்லவே வேண்டாம்). ஆனால் தற்போது முன்னிலைப்படுத்தப்படும் இலக்கண இயக்கங்கள் பெரும்பாலானவற்றுடன் எனக்கு எந்த உறவும் இருப்பதாகத் தெரியவில்லை. பேசுபொருள், பொதுப்பார்வை போன்ற விஷயங்களுக்கு அப்பால் உள்ள ஒரு பிளவு என்னைத் தனிமைப்படுத்துகிறது. இவற்றுக்கும் பங்குண்டு என்றாலும் வடிவம் குறித்த அடிப்படைச் சிந்தனையில் ஒரு பேதம் இருக்கிறது. தமக்கென்று ஒரு இடம் உருவாக்கிக்கொண்ட, மரபார்ந்த இலக்கண வடிவைப் பயிலும் கவிஞர்களை இளம் எழுத்தாளர்கள், முக்கியமற்ற, இயந்திரத்தன்மை பொருந்திய செய்நேர்த்தி கொண்ட கவிதைகள் எழுதும் பிற்போக்குவாதிகள் என்பதுபோல் பார்க்கின்றனர். இப்படிப்பட்ட விமரிசனங்களில் நியாயமில்லை என்று நினைக்கிறேன்- நவீன இலக்கணக் கோட்பாடுகள் பலவும் சரி போலிருக்கின்றன (தொழில்நுட்பத்தையும் உன் மரபையும் கற்றுக்கொள், கவனமாக எழுது)- ஆனால் காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகள் பல உருவாக இன்னும் இவை காரணமாகவில்லை.

இந்தக் கவிதைகளில் ஒரு பலவீனம் உண்டு- மரபுகளில் பெறப்பட்ட வடிவங்களைப் பயன்படுத்தும் கவிஞர்கள் தமக்கு அளிக்கப்பட்ட தொனியையும் பெற்றுக் கொள்கின்றனர் (பொதுவாக அது நகைச்சுவையாகவோஅல்லது அமர்த்தலானதாகவோ இருக்கிறது). தவிர, இத்தகைய கவிதைகளில் பொதுமைப்படுத்தப்பட்ட ஓர் ஒழுங்கமைவும் உண்டு. இன்று எழுதப்படும் இலக்கணச் சுத்தமான கவிதைகள் ரிச்சர்ட் வில்பரின் வெளிறிய போலிகள் போல் தெரிகின்றன. வில்பர் அருமையான சீர்கள் கொண்ட கவிதைகள் எழுதக்கூடியவர், பரந்த பார்வை கூடிய கவிஞர், ஆனால் வேறு வகை கவிதைகளும் எழுத முடியும். எதுகை மோனைக்காக அவ்வளவு பொருத்தமில்லாத வாக்கிய அமைப்பைத் தொடர்ந்து பயன்படுத்துவது இன்னொரு பலவீனம்- நான் மிகவும் நேசிக்கும் தாம் கன்னின் கவிதையும் இந்தப் பழக்கத்தால் பாதிக்கப்படுகிறது, அதிலும் குறிப்பாக அவரது துவக்ககால கவிதைகளைச் சொல்லலாம்.

ஆனால் நான் இங்கு பேச எடுத்துக்கொள்ளும் பலவீனம் ஓசைநயம் சார்ந்தது. சமகால செய்யுளாசிரியர்கள் பலரும் சீர் என்பது ஒலி இலக்கணம் என்பதற்கு மாறாக அது என்னவோ தம் தகுதியை வரையறுக்கும் சோதனை என்பது போல் எழுதுகிறார்கள். தளை தட்டாது யாத்திருப்பதைப் பார்க்க முடிகிறது, தேவைப்படும் மாற்றுருக்கள் பொருத்தமான இடங்களில் அமைந்திருக்கின்றன. ஆனால் சீரைக் கையாண்டிருப்பது கடனுக்கு எழுதியது போலிருக்கிறது. இசை இருக்க வேண்டிய இடத்தில் இசைக்குறிப்புகளைக் கொடுததது போன்ற கவிதைகள் இவை. சந்தத்தில் கிட்டும் அடிப்படை வேகம் இவற்றில் இல்லை. சீர் என்பது முதன்மையாக பாடல் வகை என்று நான் நம்புகிறேன்- ஒவ்வொரு பாடகராலும் அதற்கு கூடுதல் உத்வேகம் அளிக்கப்பட வேண்டும்; அடுத்தபடியாக, சீர் என்பது அர்த்தம் அளிக்கிறது என்று நினைக்கிறேன், பாடலில் உபரியாய் கிட்டக்கூடிய மிக உயர்ந்த நற்பயன் அது.

சீருக்கும் சந்தத்துக்கும் இடையிலுள்ள தொடர்பின் முக்கியத்துவதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. சிறந்த யாப்பு இயற்றியவர்கள் அனைவரும் பொருளுணர்த்தும் நோக்கத்தில்தான் சீரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். யாப்பைக் கொண்டு பொருளுணர்த்தும் தனித்துவங்களில் இது நிகழ்கிறது- ஓரிடத்தில் ட்ரோகீ இடம் பெறுகிறது என்றால், அங்கு எண்ணவோட்டத்தில் வலுவான மாற்றம் ஏற்படுவது உணர்த்தப்படுகிறது, மழை வலுப்பதன் ஓசையை அனபெஸ்ட் உணர்த்தலாம்.

யாப்பு பிற கவிதைகளை நினைவூட்டி வேறொரு வகையிலும் பொருள் உணர்த்துகிறது என்று ஜான் ஹாலண்டர் மிக வலுவாக வாதிடுகிறார். “ஃபார் ஒன்ஸ், தென், சம்திங்” என்ற ஃபிராஸ்டின் அருமையான கவிதை இதற்கு ஒரு நல்ல உதாரணம். மெயத்தரிசனத்தின் இடர்ப்பாடுகளைப் பற்றிய கவிதை இது. பதினோரு அசைகள் கொண்ட, சிரமமான, லத்தின் மொழியிலிருந்து வந்த ஹென்டெகாசிலபிள் என்றழைக்கப்படும் யாப்பில் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார் ஃபிராஸ்ட். இந்த வகைப் பாடல்கள் மிக அரிது என்பதால் இதை அவ்வளவு புகழயடையாத, “ஹென்டெகாசிலபிக்ஸ்” என்ற டென்னிசன் கவிதையுடன் ஒப்பிடலாம். டென்னிசன் கவிதையில் தன் திறமையை வெளிக்காட்டிக்கொள்ளும் ஆர்ப்பாட்டமும், “சுகஜீவன விமரிசகர்களுக்கு” கண்டனமும் இருக்கிறது. இந்தத் தொடர்பை மனதில் கொண்டால் ஃபிராஸ்டின் கவிதையிலும் ஒரு கண்டனப் பின்னணியைப் பார்க்க முடிகிறது. தன் கவிதையின் எளிய அழகைக் கொண்டு ஃபிராஸ்ட் சுயமோகம் மற்றும் காட்சிப்பிழை பற்றி பேசுவதோடு நில்லாமல், தன் படைப்பை முரட்டு விமரிசகர்களிடமிருந்தும் காத்துக் கொள்கிறார் (முதல் அடியில் உள்ள, “பிறர்” என்ற சொல்)., இது மட்டுமல்ல- பிராஸ்ட், டென்னிசன் இருவரும் காடுலஸ் என்ற ரோமானிய கவியையும் நினைவுறுத்துகின்றனர்- பெருமளவு “ஹென்டெகாசிலபிக்ஸ்” பயின்ற இவரது கவிதைகள் அவரது விமரிசகர்களைக் கண்டம் துண்டமிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தன.

இது போன்ற அடுக்குகள் கொண்டிருத்தல் யாப்பிலக்கணக் கவிதைகளின் அடியாழச் சுனைகளாக இருக்கலாம், தீவிரமாய் செய்யுள் வடிவம் பயிலும் எவருக்கும் முக்கியமான கருவூலமாகவும் இருக்கலாம். ஆனால் நான், சிறந்த கவிதை என்றால் அது பாடலாகவும் வெற்றிபெற வேண்டுமென்று நினைக்கிறேன். சமகாலத்தில் உள்ள பல இலக்கண கவிதைகளும் அமைக்கப்பட்டது போலிருக்கின்றன, “சரியான” வடிவம் கொண்டவையாய் இருக்கின்றன- தீர்க்கமான, சுதந்திரமான கோடுகளால் அல்லாமல் எண்ணிக்கை கொண்டு நிரப்பப்பட்ட உணர்வு அளிக்கின்றன.

யாப்பிலக்கண விதிகள் உண்மையில் யாப்பின் விவரணைகள் என்பதை கவிஞர்கள் மறந்து விடுகின்றனர்- நாம் கேட்கும் ஒருவகை சந்தத்தை இயாம்பிக் பெண்டாமீட்டர் என்று அழைக்கிறோம், அப்படிப்பட்ட சந்தத்தின் விதிமுறையாக அது இருப்பதில்லை. பிற கவிஞர்களைக் கண்டும், வடிவம் எதை ஏற்றுக்கொள்ளும் என்பதை தன்னையறியாமல் உணர்ந்தும் சீர், அசை என்று எந்த அறிதலும் இல்லாத ஒரு கவிஞர் கச்சிதமான, அழகிய இயாம்பிக் பெண்டாமீட்டரில் எழுதக்கூடும். உண்மையில் இது போன்ற விதிகள் உருவாக்கப்படும் முன், கவிஞர்கள் அனைவரும் அப்படிதான் எழுதினார்கள்- எனவேதான் தாமஸ் வியாட்டின் படைப்பில் சற்றே தடுமாற்றம் கொண்ட மகோன்னதத்தை நம்மால் காண முடிகிறது.

யாப்பிலக்கண கவிதைகள் இக்காலத்துக்கும் பேசுவதாய் இருக்க வேண்டுமென்றால் அது தொடர்ந்து வளர்ந்தாக வேண்டும்- ஃபிராஸ்ட்டின் விளையாட்டு போன்ற அனபெஸ்ட்டிய வசனக் கவிதை புதுவகை உரையாடலைச் சாத்தியப்படுத்தியது இது போன்றதுதான். மறுமலர்ச்சிக்கால நாடகத்தின் கரடுமுரடான சந்தங்களைக் கொண்டு டி எஸ் எலியட் சுதந்திரமான வசனக் கவிதை வளர்த்துக் கொண்டு யாப்பிலக்கணத்துக்கு நெருக்கமான மரபுக் கவிதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டது போன்றது இது. ஆனால் எலியட்டின் வளர்ச்சி பல சாத்தியங்களில் ஒன்று மட்டுமே. எலிசபெத் பிஷப்பின் சுறுசுறுப்பான ஓசை மிகுந்த சந்தங்கள் வேறு வகை சாத்தியம் அளிக்கின்றன. புதுவகை சீர் வடிவம் ஒன்றை உண்மையாகவே மீளுருவாக்கம் செய்யப்போகும் அடுத்த கவிஞர் யாராக இருக்கும்?

கவிதையை அறிமுகப்படுத்தும் வகுப்பில் நான் எப்போதும் யாப்பு கற்பித்து வருகிறேன். வளரும் கவிஞர்களுக்கு யாப்பு கற்பிக்க பல காரணங்கள் இருக்கின்றன. இலக்கணச் சுத்தமான கவிதையாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அனைத்து வகை கவிதைகளின் ஓசைகளையும் நுட்பங்களையும் கற்றுக் கொள்ளவும் அவற்றுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளவும் மாணவர்களுக்கு யாப்பிலக்கணம் சிறந்த பயிற்சியாக இருக்கிறது.

மொழியில் நிதானித்த முதல் அனுபவம் என்பது பல கவிஞர்களுக்கும் யாப்பிலக்கண பாடமாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன்- நிதானிக்கக் கட்டாயப்படுத்தி, சொற்களை கவனமாகத் தேர்ந்தெடுக்கும் பயிற்சியை யாப்பிலக்கணமே அளிக்கிறது. கலை உருவாக்கத்தின் மிக முக்கியமான, ஆனால் செயற்கையான தடையாக யாப்பிலக்கண கவிதைகள் எழுதுவது இருக்க முடியும்- நனவிலி மனம் எதிர்பாராத இடங்களுக்குச் செல்கையில் எண்ணம் செயல்படத் தகுந்த புதிராய் இது இயங்குகிறது. அடியையும் சந்தத்தையும் போலவே சீரும் போருளுணர்த்தும் வாய்ப்பாக அமைகிறது. யாப்பிலக்கணத்தின் சீர்மைகள் புதுக்கவிதைக்கும் பயன்படுபவை- யாப்பு கற்றுக்கொள்வது மாணவர்களை இன்னும் சிறப்பாக எழுதச் செய்யும், இன்னும் கூடுதலான ஆற்றல் கொண்ட புதுக்கவிதை எழுத உதவும்.

சீர் என்பது ஒரு வகை ஒலி இன்பம். கவிதையை மறக்க முடியாததாகச் செய்வது யாப்பு. யாப்பே கவிதையைப் பாடலுடன் இணைக்கிறது, பக்கத்தைவிட குரலுடனும் உடலுடனும், உணர்வுடனும், வெம்மையுடனும் நிகழ்காலத்துடனும் இணைத்து மானுடத்தின் உயிர்க்கவிதை ஆக்குகிறது.

நன்றி – Ploughshares

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.