அமேஸான் காடுகளிலிருந்து- 5: இந்தியன்

 மித்யா

“ஹலோ மிஸ்டர் கிறிஸ்டோ” என்றாள் அந்த தேவதை.

அவள் வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தாள். திருமணத்திற்கு கிறிஸ்துவர்கள் அணியும் கவுன் போல் இருந்தது. இவ்வளவு பெரிய கவுனை இந்தப் பிரதேசத்தில் அவள் அணிந்திருந்தது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. இங்கு எப்பொழுதும் புழுக்கமாக இருக்கும். இவளுக்கு இந்த கவுனை அணிந்தால் வெந்து போகாதா? அவள் ஒரு வெள்ளை தொப்பி அணிந்திருந்தாள். அதன் ஓரம் லேஸ் வைத்து தைக்கப்பட்டிருந்தது. லேசில் உள்ள சின்ன சின்ன ஓட்டை வழியாக சூரிய கிரணங்கள் அவள் முகம் மேல் திட்டு திட்டாக படிந்திருந்தன. தொப்பி அவள் முகத்தை ஓரளவுக்கு மறைக்க, லேஸ் வழியாக விழுந்த வெளிச்சம் அவள் முகத்தின் பிரகாசத்தை அதிகரித்தது. அவள் முகத்தை பார்த்தவுடன் அவள் மேல் கிறிஸ்டோ காதல் கொண்டான்.

“மிஸ்டர் கிறிஸ்டோ”

அவள் மறுபடியும் கூப்பிட அவனுக்கு சுய நினைவு வந்தது. அவன் குழம்பி இருந்தான். அவன் இப்பொழுது தரையில் விரிந்திருந்த தன்  படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்தான். இப்பொழுது பார்ப்பது கனவா? இல்லை நேற்று இரவு நடந்தது கனவா? தான் காட்டுக்குள் அமைதியான ஓரிடத்தில் உட்கார்ந்து தூங்கிவிட்டது அவனுக்கு ஞாபகம் வந்தது. அப்படியென்றால் மறுபடியும் எப்படி இந்த குடிசைக்குள் வந்தான்? உறக்கத்தில் நடந்து வந்தானா? இல்லை காட்டுக்குள் சென்றது போல் கனவு கண்டானா? கிறிஸ்டோவிற்கு ஒன்றும் புரியவில்லை.

“மிஸ்டர் கிறிஸ்டோ. ஆர் யூ ஆல்ரைட்?”

“ஐ ஆம் பைன்” ஒரு மாதிரி சுதாரித்துக்கொண்டு அவளைப் பார்த்து புன்னகைத்தான். பிறகு மெதுவாக எழுந்து அவள் நீட்டிய கையை பிடித்து குலுக்கினான். அவன் எதிர்பார்த்த அளவிற்கு அவள் கைகள் மென்மையாக இல்லை.

“என் பெயர் எஸ்தர். எஸ்தர் ஆலிசன்.”

“இங்கு தனியாகவா வந்தீர்கள்?”

“நீங்கள் உங்கள் காலை கடன்களை முடியுங்கள். பிறகு நாம் சாவகசமாக பேசுவோம்”

ஒரு மணி நேரம் கழித்து கிறிஸ்டோ அவள் ஒரு மரத்தின் நிழலில் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அவள் பக்கத்தில் ஒரு காட்டுவாசி நின்றிருந்தான். அவன்தான் நாற்காலியைத் தூக்கிக்கொண்டு வந்திருக்க வேண்டும்.

கிறிஸ்டோ அவர்கள் அருகில் வர, காட்டுவாசி அங்கிருந்து  நகர்ந்து வேறொரு மரத்தின் கீழ் நின்று கொண்டான்.

“ஸோ. வாட் ப்ரிங்க்ஸ் யூ ஹியர்?” என்று கிறிஸ்டோ கேட்டான். கேட்டுவிட்டு தரையில் அவள் முன் உட்கார்ந்து கொண்டான். அவள் நாற்காலியை விட்டு எழுந்தாள். “நீங்கள் உட்காருங்கள். எனக்கு இப்படி உட்கார்ந்து பழகிவிட்டது” என்றான். அவள் நாற்காலியில் மறுபடியும் உட்கார்ந்தாள்.

“நானும் உங்களைப் போல், ஜெப்ரி போல் வேட்டைக்கு செல்பவள். பல புது இடங்களுக்கு சென்றிருக்கிறேன். பல காட்டுவாசிகளைச் சந்தித்திருக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு மௌனமானாள்.

அவள் இன்னும் ஏதாவது பேசுவாள் என்று கிறிஸ்டோ எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவள் ஒன்றும் பேசவில்லை.

“உங்களைப் பற்றி சொல்ல வேறே எதுவுமில்லையா?”

“நான் லண்டனில் பிறந்தேன். என் பெற்றோர் பெரிய பணக்காரர்கள். என்னை நன்றாக வளர்த்தார்கள். எனக்கு எது வேண்டும் என்றாலும் கொடுத்தார்கள். ஆனால் நான் ஒரு பெண் போல் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார்கள். எனக்கு அதில் இஷ்டமில்லை. யாரையோ கல்யாணம் செய்துகொண்டு அவனுக்கு பிஸ்கட்டும் டீயும் கொடுத்து கொண்டு, அவன் வெளிச்சத்தில் வாழும் வாழ்கையை நினைத்துப் பார்த்தாலே பிடிக்கவில்லை. அதனால் நான் உலகம் சுற்ற வேண்டும். ஆண்களுக்கு நிகராக சாகசம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என் பெற்றோர்களுக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் நான் இதில் உறுதியாக இருந்தேன். அவர்களால் எனக்கு வேண்டியதை மறுக்க முடியவில்லை. மூன்று வருடங்களாக அமெரிக்கா, ஆப்பிரிக்கா தென் ஆசியா என்று பல இடங்களுக்குச் சென்றுள்ளேன். எந்த ஐரோப்பியனும் இது வரை கால் பதிக்காத இடங்களுக்குச் சென்றேன். பல புதுக் குழுக்களை கண்டுபிடித்தேன். நில்லாமல் சுற்றிக்கொண்டே இருந்தேன். ஆறு மாதங்களுக்கு முன் சுற்றுவதைக் கைவிட்டேன்”

“எதற்கு?”

“எனக்கு அலுத்துவிட்டது. நான் ஒரு புது இடத்தை கண்டுபிடிப்பேன். அதை லண்டனில் இருப்பவர்களுக்கு தெரிவிப்பேன். அந்த இடத்தில் பணம் செய்ய முடியுமென்றால் தொழிலதிபர்கள் வந்துவிடுவார்கள். அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டுவாசிகளை அடிமையாக்கி விடுவார்கள். அவர்களை ஏதோ ஒரு விதத்தில் துன்புறத்தி அங்குள்ள இயற்கையை அழிப்பார்கள். இல்லையேல் ஒரு பாதிரியார் வந்துவிடுவார். அவர் ஏதாவது செய்து மத மாற்றம் செய்யப் பார்ப்பார். அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கை பொய் என்றும் அவர்கள் மதம் மாறினால்தான் அவர்களுக்கு மோக்ஷம் கிடைக்கும் என்றும் கூறுவார். எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. என் ஒருத்தியால் இதையெல்லாம் நிறுத்த முடியாது என்று தெரியும். அதனால் இப்படி ஊர் ஊராக சுற்றுவதைக் கைவிட்டேன்.”

“கைவிட்டு..?”

“என் வாழ்கை லட்சியத்தை தேடி பல இடங்கள் சென்றேன். கடைசியில் இந்தியாவில் எனக்கு ஒரு குரு கிடைத்தார். அவர்தான் நாம் இங்கு செல்லவேண்டும் என்று சொன்னார். அதனால் கிளம்பி வந்தேன்.”

“உங்களுடன் உங்கள் குரு வந்திருக்கிறாரா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் கிறிஸ்டோ.

“அதோ அங்கு இருக்கிறார்”

கிறிஸ்டோ அவள் காட்டிய திசையை நோக்கினான். ஒரு மரத்தின் நிழலில் பல காட்டுவாசிகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அலிஸ்சின் சாமான்களை சுமந்து வந்தவர்கள். அவனுக்கு இந்தியன் யாரும் அங்கு இருப்பது போல் தெரியவில்லை.

அப்பொழுதுதான் காட்டுவாசிகளுக்கு பின்னாலிருந்து ஒருவன் எழுந்து நின்றான்.

இந்தியன் என்றவுடன் கிறிஸ்டோ வெள்ளை தாடி வைத்துக்கொண்டு தலைப்பாகை அணிந்த ஒருவனை எதிர்பார்த்தான். பல ஐரோப்பியர்கள் போல் கிறிஸ்டோவிற்கும் இந்தியர்கள் என்றால் பாம்பாட்டிகள் அல்லது பிச்சைக்காரர்கள் என்ற ஒரு எண்ணம் இருந்தது. இவனோ ஐரோப்பியர்கள் போல் பேண்ட் ஷர்ட் அணிந்திருந்தான். தலையை வகிடெடுத்து வாரியிருந்தான். மீசை வைத்திருந்தான். தாடியில்லை. முப்பது வயதிருக்கும். அவன் இவர்களை நோக்கி நடந்து வந்து கிறிஸ்டோவிற்கு முன் நின்றான்.

““ஹலோ மிஸ்டர் கிறிஸ்டோ” என்றான். அவன் ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயர் போல் இருந்தது. அவன் ஆங்கிலம் பேசியதை கேட்ட கிறிஸ்டோவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அதைக் கண்ட ஆலிஸ் சிரித்தாள். “என் குருவை இந்தியாவில் எல்லோரும் துபாஷி என்பார்கள், அதற்கு இரண்டு பாஷைகள் பேச வரும் என்று அர்த்தம். ஆனால் இவருக்கு பல பாஷைகள் பேச வரும்” என்றாள்

“இந்த காட்டுவாசிகளின் மொழி உங்களுக்கு தெரியுமா?” என்று கிண்டலாக கேட்டான் கிறிஸ்டோ.

உடனே அந்த இந்தியன் காட்டுவாசியின் மொழியில் சரளமாக கிறிஸ்டோவுடன் பேசினான். கிறிஸ்டோ ஆச்சரியத்தில் வாய் பிளந்ததை கண்டு மறுபடியும் ஆலிஸ் சிரித்தாள்.

“எதற்காக இங்கு வந்தீர்கள் என்று சொல்லவேயில்லை” என்று உரையாடலை திசை திருப்பினான் கிறிஸ்டோ.

“இதுதான அந்த இடம் என்பதை அறிந்துகொண்ட பிறகு நாங்கள் எதற்கு வந்திருக்கிறோம் என்று சொல்கிறேன். அதற்கு முன் உனக்கு நடந்ததைச் சொல்” என்றாள்.

கிறிஸ்டோ நடந்ததையெல்லாம் சொன்னான். இந்தியன் மெளனமாக கேட்டுக்கொண்டிருந்தான். கிறிஸ்டோ எல்லாம் சொல்லிமுடித்த பின்பு ஆலிசை பார்த்து, “நாம் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இன்று இரவு உறுதியாகச் சொல்லிவிடுவேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான். ஆலிசை பார்த்தான் கிறிஸ்டோ.

அவன் கண்களில் குழப்பம் நன்றாக தெரிந்தது. ‘பொறுத்திரு’ என்பது போல் கையால் சைகை செய்தாள் ஆலிஸ்.

இரவு வானம் தெளிவாக இருந்தது. வானத்தில் உள்ள நட்சத்திரங்களை தலை தூக்கி உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த இந்தியன். மெதுவாக நடந்து காட்டின் அந்த பகுதிக்கு முன் வந்து நின்று காட்டையே உற்றுப் பார்த்தான். பிறகு கண்களை மூடிக்கொண்டு சுவாசித்தான். தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஏதோ கூர்ந்து கேட்பதுபோது போன்ற பாவனையில் சற்று நேரம் இருந்தான். மறுபடியும் வானத்தைப் பார்த்துவிட்டு கிறிஸ்டோவையும் ஆலிசையும் பார்த்தான். அவர்கள் எரிந்துகொண்டிருக்கும் விறகுகளின் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் வந்து அந்த இந்தியன் உட்கார்ந்துகொண்டு, “உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லப்போகிறேன்” என்று ஆரம்பித்தான்.

(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.