வேனிற்காலம்தான் எவ்வளவு அமைதியாய் இருக்கிறது. அசாதாரண, அபௌதீக அமைதி.
எல்லாம் எப்போதும் இருந்தது போல்தான் இருக்கிறது; எதுவும் மாறவில்லை என்பது போல்தான் தெரிகிறது. சதுப்பு நிலங்களோ, பண்ணை நிலங்களோ, மலைகளின் ஃபிர் மரங்களோ, குளமோ எதுவும் மாறவில்லை. கோடை கழிந்தது என்பதையன்றி வேறில்லை. அக்டோபர் முடிந்தது. இப்போது மதியப்பொழுதும் முடிவுக்கு வரப்போகிறது.
விஷயம் இதுதான்- என் கண்ணில் விழுந்த ஒவ்வொரு பெண்ணையும் விரும்பினேன், அவளை முழுமையாய் அடைய விரும்பினேன்.
தொலைவில் ஒரு நாய் ஊளையிடுகிறது, மண்ணில் ஈரத்தில் நைந்த இலைகளின் மணம். கடந்த சில வாரங்களாக கடுமையான மழை பெய்கிறது, விரைவில் பனிப்பொழிவும் வந்துவிடும். இப்போது சூரியன் மறைந்து விட்டது, இறுகிய தரையில் அந்திப்பொழுது அடி மேல் அடி வைத்துத் தள்ளாடிச் செல்கிறது. புதர்களிடையே யாரோ பதுங்கிச் செல்வது போன்ற சலசலப்பு. திரும்பும் மேகங்களுடன் கடந்த காலமும் திரும்புகிறது.. உன்னைக் காண்கிறேன்- ஓ, சென்ற ஆண்டுகளின் தினங்களே! உன் மலைகள், உன் மரங்கள், உன் சாலைகள்- நாம் இப்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடிகிறது.
நாமிருவர், நீயும் நானும். சூரிய ஒளியில் மிளிரும் உன் வெளிர்நிற கோடை ஆடை, அதனுள் எதுவுமில்லாதது போன்ற உன் ஆனந்தமும் நாணமின்மையும். கதிர்க் கற்றைகள் முன்னும் பின்னும் ஆடின, மண் உள்ளும் வெளியும் சுவாசித்ததும் வெம்மையாகவும் புழுக்கமாகவும் இருந்ததும் உனக்கு நினைவிருக்கிறதா? கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் படையெடுத்து வந்தது போல் காற்றின் ரீங்காரம். மேற்கில், அச்சுறுத்தும் புயல். நாமிருவர் மட்டும், கிராமத்தை விட்டு வெகு தொலைவில், குறுகிய நெடிந்துயரும் ஒரு பாதையில். அதைக் கடந்து சோளக் கதிர்களுள் புகுந்து செல்கிறோம்- நீ என் முன் நடந்து செல்கிறாய்- அடக்கடவுளே, இதற்கெல்லாம் நீ என்ன செய்வாய்? ஆமாம், உன்னைத்தான் சொல்கிறேன், என் அன்புக்குரிய வாசகனே! உன்னிடம் ஏன் நான் இதைச் சொல்ல வேண்டும்? சரி வா, இதெல்லாம் வேண்டாம்! ஏதோ ஒரு முறை சோளக்கொல்லைக்குள் இருவர் புகுந்து மறைந்ததால் உனக்கென்ன? எப்படியும் அது உன்னை பாதிக்கப் போவதில்லை. வேறு எவரோ ஒருவரின் காதல் விவகாரம்தானே, இதைத் தவிர வேறு விஷயங்களுக்காக நீ கவலைப்பட வேண்டியிருக்கிறது- மேலும், இது நிச்சயமாக காதல் அல்ல என்பது வேறு.
விஷயம் இதுதான்- என் கண்ணில் விழுந்த ஒவ்வொரு பெண்ணையும் விரும்பினேன், அவளை முழுமையாய் அடைய விரும்பினேன். “ஆன்ம” பந்தம் என்று எதையும் நான் உணரவில்லை என்பது கடவுளுக்கே தெரியும். அவள்? அவள் என்னை முழுமையாய் நம்பினாள் என்று நினைத்தேன். அவள் என்னிடம் அத்தனை கதைகள் சொன்னாள், வண்ணங்கள் கொண்டும் இருண்மை நிறைந்தும் பல கதைகள்- அவளது வேலை பற்றி, சினிமா போனது பற்றி, குழந்தைப் பருவத்தைப் பற்றி- ஒவ்வொருத்தர் வாழ்விலும் நடக்கும் விஷயங்கள். ஆனால் அது எதுவும் எனக்கு சுவாரசியமாய் இல்லை, அவ்வப்போது நான் அவள் செவிடாகவும் ஊமையாகவும் இருக்கக்கூடாதா என்று நினைத்தேன். அப்போது நான் ஒரு முரடனாக இருந்தேன், தடித்தனமான வெறுமையின் திமிர் இருந்தது.
ஒரு நாள் அவள் திடீரென்ற ஒரு திடுக்கிடலுடன் அனைத்தையும் நிறுத்தி வைத்தாள்.
“ஏய்…” என்றாள் அவள்.
அவள் குரலில் வெட்கமும் வலியும் தெரிந்தது.
“நீ ஏன் என்னை விட மாட்டேன் என்கிறாய்? உனக்கு என் மேல் காதல் இல்லை, என்னைவிட மிகவும் அழகிய பெண்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்”
“நீ படுக்கையில் நன்றாக வேலை செய்கிறாய்,” என்று பதில் சொன்னேன், என்னுடைய மூர்க்கத்தனம் என்னையே மகிழ்விப்பதாய் இருந்தது. மேலும் பல முறை நான் இந்தச் சொற்களை ஆனந்தமாய்ச் சொல்லியிருப்பேன்- அப்போதெல்லாம் நான் இப்படிதான் இருந்தேன்.
நான் குனிந்து கொண்டேன். ஆர்வமில்லாதது போல் நடந்து கொண்டேன், ஒற்றைக் கண்ணை நெரித்துக் கொண்டு அவள் தலையின் வடிவத்தை கவனித்தேன். அவளது தலைமுடி ப்ரௌன் கலரில் இறந்தது, மிகவும் சாதாரணமான ப்ரௌன். சிகையலங்கார விளம்பரங்களின் புகழ்பெற்ற நடமாடும் மாடல்கள் செய்வது போல் அவள் தன் நெற்றியில் படியும் வகையில் தலைசீவிக் கொண்டிருந்தாள். ஆம், இதைவிட அழகிய தலைமுடி கொண்ட பெண்கள் இருக்கிறார்கள், வேறு பல வகைகளிலும் வசீகரமான பெண்கள் இருக்கிறார்கள்- ஆனால், சரி விடு! கடைசியில் எல்லாம் ஒரே இடத்துக்குதான் வருகிறது. தலைமுடி கருப்பாய் இருந்தாலும் சரி வெளிறி இருந்தாலும் சரி, நெற்றி மறைக்கப்பட்டிருந்தாலும் சரி, திறந்திருந்தாலும் சரி- .
“பாவம் நீ,” என்று அவள் திடீரென்று சொன்னாள், தனக்குத் தானே பேசிக் கொள்வதுபோல். என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து மென்மையாய் என்னை முத்தமிட்டாள். அதன்பின் போய் விட்டாள். அவளது தோள்கள் நிமிர்ந்தன, அவளது ஆடை தளர்ந்தது. நான் அவள் பின் பத்தடியோ என்னவோ ஓடினேன், பின் நின்றுவிட்டேன்.
அப்படியே திரும்பினேன். அதன்பின் மீண்டும் திரும்பிப் பார்க்கவில்லை.
பத்தடி தூரம் எங்கள் காதல் வாழ்ந்தது, நெருப்பாய்ப் பற்றி எரிந்து துவங்கிய கணமே அவிந்தது. ரோமியோ ஜூலியட் காதல் அல்ல, கல்லறைக்குப் பின்னும் வாழும் காதல் அல்ல.
பத்தடிதான். ஆனால் அந்த ஒரு குறுகிய இடைவெளியில், மிகச் சிறிய இக்காதல் இதயப்பூர்வமாய், உக்கிரமாய் எரிந்தது- ஒரு தேவதைக் கதைக்குரிய மகோன்னதம் கொண்டிருந்தது.
oOo
நன்றி – Guardian
One comment