உண்மைகள், ஆனால் வெட்கங்கெட்ட பொய்கள்

பீட்டர் பொங்கல் –

Kurt Vonnegut எழுதிய Cat’s Cradle, 1960களின் அமெரிக்க எதிர்கலாசாரத்தைக் கட்டமைத்த மிக முக்கியமான பிரதிகளுள் ஒன்று. இதில் வரும் பொகொனிய சமயம், பெறும் வாதையிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைப் பொய்களால் பெற்று, மனிதன் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் கொள்ள இயலும் என்று எண்ண வைக்கும் வோனகட்டிய தரிசனம்.

பொகொனிய முதல் நூலும், அதன் அந்திமக் கிரியையான சேற்றுப்பாடலும் பதாகை வாசகர்களுக்காக இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

முதல் நூல்

நான் சொல்லப்போகும் உண்மைகள் அனைத்தும் வெட்கங்கெட்ட பொய்கள்.

முதலில் கடவுள் மண்ணைப் படைத்தார். பிறகு, அதைத் தன் அண்டத்தனிமையில் கண்டார்.

“சேற்றைக் கொண்டு உயிரினங்ளை உருவாக்குவோம், இந்தச் சேறு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று பார்க்கட்டும்” என்றார் கடவுள். அசைவன அனைத்தையும் படைத்தார், அவற்றிலொன்று மனிதன். மனிதனான  சேறு மட்டுமே பேச முடிந்த உயிரினம்.

மனிதன் எழுந்து உட்கார்ந்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் பேசினான். கடவுள் சேற்றுக்கு நெருக்கமாகச் சாய்ந்து கொண்டார். மனிதன் மலங்க மலங்க விழித்து, “எதற்காக இதெல்லாம்?” என்று தன்மையாகக் கேட்டான்.

”எல்லாவற்றுக்கும் ஏதாவது காரணம் இருந்தாக வேண்டுமா என்ன?” என்றார் கடவுள்.

”கண்டிப்பாக”

“அப்படியென்றால் இவை அனைத்திற்குமான காரணத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை உன்னிடமே விட்டுவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு கடவுள் போய் விட்டார்.

சேற்றுப்பாடல்

(பொகொனியர்களின் அந்திமக் கிரியை இது. மரிப்பவரும் சடங்கியும் தங்கள் உள்ளங்கால்கள் ஒட்டியிருக்கும் வகையில் நேர்க்கோட்டில் படுத்துக் கொள்வார்கள். சடங்கி கீழ்க்காணும் வரிகளை ஒவ்வொன்றாகச் சொல்ல, மரிப்பவர் அதைத் திரும்பச் சொல்லிச் செல்வார்).

கடவுள் சேற்றைச் செய்தார்.

கடவுள் தனியாய் இருந்தார்.

அதனால் கடவுள் சில சேற்றைப் பார்த்து, “எழுந்திரு!” என்றார்.

”நான் செய்த மலைகள், கடல், வானம், நட்சத்திரங்கள் எல்லாம் பார்” என்றார் கடவுள்.

எழுந்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்த சேற்றில் நானும் ஒரு பகுதி.

பாக்யவான் நான். பாக்கியச் சேறு.

சேறு நான், எழுந்து உட்கார்ந்து கடவுள் செய்த வேலைகளைப் பார்த்தேன்.

அருமை, கடவுளே.

உம்மைத் தவிர வேறு யாராலும் இதைச் செய்திருக்க முடியாது, கடவுளே! நிச்சயம் என்னால் இதைச் செய்திருக்க முடியாது.

உம்மோடு ஒப்பிட்டால் நான் ஒரு அற்பன்.

உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கக் கிடைக்காத சேற்றை நினைத்துப் பார்க்கும்போதுதான் கொஞ்சமாவது என் மேன்மையை உணர்கிறேன்.

எனக்கு நிறைய கிடைத்திருக்கிறது, நிறைய சேறு குறைவாகவே பெற்றன.

நீர் எமக்களித்த இந்த கெளரவத்திற்கு நன்றி!

இப்போது சேறு மீண்டும் படுத்துக் கொள்கிறது, இனி உறங்கப் போகிறது.

ஒரு சேற்றுக்கு கிடைத்த என்னவொரு நினைவுகள்!

உட்கார்ந்த சேறுகளில் சுவையான எத்தனை வகைகளைச் சந்தித்தேன்!

கண்டவை அனைத்தையும் ரசித்தேன்!

நல்லிரவு.

இனி நான் சொர்க்கம் செல்கிறேன்.

என்னால் இனியும் காத்திருக்க முடியாது…

என்னுடைய வாம்பீட்டர் எது என்பதைத் தெரிந்து கொள்ள…

என்னுடைய கராஸில் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையும்…

எங்கள் கராஸ் உங்களுக்குச் செய்த நல்ல விஷயங்கள் அத்தனையும் தெரிந்துகொள்ள

ஆமென்!

(தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கடவுளின் குறிப்பிட்ட ஆக்கையைச் செய்யும் குழுவினர் கராஸ் என்றும், அந்த ஆக்கையின் அச்சு வாம்பீட்டர் என்றும் பொகொனியர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். இவற்றில் ஒரு ஆக்கை தேய்நிலையிலும் இன்னொன்று வளர்நிலையிலும் உள்ளபோது மட்டும் இரு வாம்பீட்டர்களின் அச்சைச் சுற்றி ஒரு கராஸ் இயங்குமென்பது வழக்கு).

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.