பகல் முடிகிறது
இரவு கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே வருகிறது
பகலில் நகரெங்கும்
அலைந்து திரிந்த பேருந்து
தான் சேகரித்த
வெப்பத்தை
தன் பயணிகள் மீது கொட்டுகிறது
பள்ளியில் நடந்த கதைகளைச்
சொல்வதற்காக குட்டிக் குழந்தைகள்
தங்கள் அப்பாவின் வருகைக்காக
காத்துக் கொண்டிருக்கின்றன
அலுவலகத்தில் தொடங்கிய கணக்குகள்
கர்த்தாவின் மீது நம்பிக்கையிழந்து
தங்களைத் தீர்க்க சுயமாக
முயன்றுகொண்டிருக்கின்றன
எத்தனை விரட்டினாலும் பின்னாலேயே
வந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர்
கோவில் பிச்சைக்காரியைப் போல
நாள் நம்மை
துரத்திக் கொண்டேயிருக்கிறது.