உல்லு

– சிகந்தர்வாசி – 

“டேபிளில் முட்டிக் மோதிக் கொண்டு ஒருவன் சிட்டி லைட் ஹோட்டலிலிருந்து வெளியே ஓடி வந்தான்,” என்று சொல்லிக் கொண்டே அக்பர் ஹோட்டலில் இருந்த சூர்யாவின் முன் உட்கார்ந்தான் வெங்கட். “இரு டம்ப்ளர்கள் உருண்டு விழுந்து நொறுங்கின. தரையெல்லாம் தண்ணீர். அதிர்ச்சியில் ஒரு பெரியவர் தான் குடித்துக் கொண்டிருந்த டீயைக் கொட்டிவிட்டார். ஓடி வந்தவன் நேராக என் மீது வந்து மோதினான். நாங்கள் இருவரும் கீழே விழுந்து உருண்டோம். என்னை அழுத்திக் கொண்டிருந்தவன் எழுந்திருக்கப் பார்த்தான், நான் விடவில்லை. ஒரு ஆள் வந்து அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகும்வரை நான் என் பிடியை விடவில்லை. அவன் யார் தெரியமா? யூகிக்க முடிகிறதா பாரேன். இழுத்துக் கொண்டு போனவன் மஃப்டியிலிருந்த போலீஸ்காரன். என்னுடன் மோதியவன் ஒரு தாதா. யார் என்று சொல்ல முடியவில்லையா? ஹஹா! நான் யாரைப் பிடித்துக் கொடுத்தேன் என்று உன்னால் கண்டுபிடிக்கவே முடியாது – ஜகாங்கீர்கான்! ஹஹா!”

வெங்கட் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கும் என்றாலும் எதை நம்புவது எதைச் சந்தேகிப்பது என்பது எப்போதுமே கொஞ்சம் குழப்பமான விஷயம். அவனே போலீஸ்காரன் மாதிரிதான் இருந்தான். வெங்கட்டின் உயரம் ஆறு அடிக்குக் கொஞ்சம் அதிகம் இருக்கலாம், நல்ல கருப்பு நிறம். எப்போதும் மடிப்பு கலையாத காக்கி பேண்ட்டும் வெள்ளை சட்டையும் போட்டுக் கொண்டிருப்பான். அவனது ப்ரௌன் ஷூக்கள் மிலிட்டரி கான்டீனில் வாங்கப்பட்டவை. அவன் பாவித்த க்ரூ கட் அவனுக்கு போலீஸ்கார முத்திரை பதிப்பதாக இருந்தது. அச்சு அசலாக போலீஸ்காரனாகவே இருந்த அவன் அக்பர் ஹோட்டல் வரும் வழியில் பாரடைஸ் சர்க்கிள் சிக்னலைக் கடக்கும்போது ஒவ்வொருமுறையும் அங்கிருக்கும் ட்ராஃபிக் கான்ஸ்டபிள் அவனுக்கு ஒரு அவசர சல்யூட் அடிப்பது வழக்கம்.

ஜகாங்கீர்கான் புராணம் இப்போதைக்கு முடியாது என்பது சூர்யாவுக்குத் தெரியும். ” ஜகாங்கீர் கான் பற்றி இப்போது என்ன கவலை? நான் கேட்டது…” என்று இடைமறித்தான்.

“ஸார், என்ன கேட்டீங்க?”, என்று குறுக்கிட்டான் அந்த ஹோட்டலின் வெயிட்டர். “க்யா ஹோனா?” சட்டைக்கு மேல் இடம்வலமாய் தொங்க விட்டிருந்த கிராஸ்பெல்ட்டை மேலும் கீழும் ஆட்டினான், அதில் பிணைக்கப்பட்டிருந்த பர்ஸில் சில்லறை சிரித்தது.

“ஏக் சாய் லாவோ,” என்று கோபமாகச் சொன்னான் சூர்யா. “சீக்கிரம் வா”.

வெயிட்டர் சமையலறையின் திசை நோக்கித் திரும்பி, “தோ சாய் லா” என்று குரல் கொடுத்துவிட்டுப் போனான்.

மேற்கொண்டு சூர்யாவை எதுவும் பேச விடவில்லை வெங்கட். “ஜகாங்கீர் கான் பற்றி இப்போது என்ன கவலை என்று நீ எப்படி சொல்லலாம்? அவன் போய்குண்டா ஏரியா தாதா தெரியுமா? அவனைப் பார்த்தால் ஊரே நடுங்குகிறது. புதிதாய் வந்திருக்கும் போலிஸ் கமிஷனர் சுசில் குமார் இந்த ஏரியாவைச் சுத்தம் செய்யச் சொல்லி உத்தரவு போடுவதற்கு முன்பே போலிஸ் ஜகாங்கீரைத் தேடிக் கொண்டிருந்தது, அது உனக்குத் தெரியுமா? சுசில் குமார் கமிஷனரானதும் அவன் தலைமறைவாகி விட்டான்”.

“ஜகாங்கீர் கானைப் பற்றி எல்லாம் தெரியுமப்பா…” என்றான் சூர்யா. “நான் கேட்டது என்னாச்சு?”

“சாய்!” என்று சொல்லிக் கொண்டே வந்தான் வெயிட்டர். வெங்கட் டீயை சாஸரில் ஊற்றிவிட்டு கோப்பையில் மிச்ச்சமிருந்ததை சூர்யாவுக்குக் கொடுத்தான். நண்பகல். ஹைதராபாத்தின் கோடையின் உச்சம். ஹோட்டல் நிறைந்திருந்தது – சிகரெட் புகையும்.

வெங்கட் சாஸரில் ஆறிக்கொண்டிருந்த டீயை ருசிக்க ஆரம்பித்தான்.

“லைசன்ஸ் என்ன ஆயிற்று? நான் சொன்ன வேலை எப்போது முடியும்?”

அரசு அலுவலகங்களில் சாதாரண மனிதர்களுக்குப் புரியாத அதிகாரபூர்வ, அதிகாரபூர்வமற்ற காரியங்களைச் சாதித்துக் கொடுக்க முடியும் என்ற புகழ் வெங்கட்டுக்கு இருந்தது. தன் மனைவிக்கு டிரைவிங் லைசன்ஸ் வேண்டும் என்று ஒரு மாதம் முன்பு சூர்யா கேட்டிருந்தான். இதுவரை வேலை முடிந்தபாடில்லை.

“கவலைப்படாதீங்க பாஸ். டிரைவிங் டெஸ்ட் போகாமலே உங்கள் மனைவிக்கு லைசன்ஸ் வாங்கிக் கொடுப்பது என் பொறுப்பு,” என்றான் வெங்கட், நிதானமான குரலில்.

“இதைத்தானே நீ எப்பவும் சொல்லிக்கிட்டு இருக்கே…” என்று ஆரம்பித்தான் சூர்யா.

“அங்கே இருக்கும் அந்த மூன்று பேரைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான் வெங்கட், பக்கத்திலிருந்த டேபிளைக் காட்டி. “இவர்கள் எல்லாரும் உள்ளூர் ரௌடிகள். இவர்கள்தான் அடுத்து உள்ளே போகப் போகிறவர்கள்”.

‘நான் கேட்டேனா?” சூர்யா கத்த ஆரம்பித்து விட்டான். “என் வேலையை முடித்துக் கொடு, அதுதான் எனக்கு வேண்டும். ஒரு மாதமாகக் காத்திருக்கிறேன், இதுவரை எதுவும் நடக்கவில்லை. சீக்கிரம் முடித்துக் கொடுத்தால் உனக்கு நல்லது”.

அதற்குள் வெங்கட் வேறொரு நண்பனைப் பார்த்துவிட்டான். “அர்ரே, நாகுலு!”

“நமஸ்தே அண்ணா,” என்று சொல்லிக் கொண்டு கிளம்பிப் போனான் வெங்கட், “நாளைக்கு இதே நேரம் உங்க லைசன்ஸோட பார்ப்போம்”. சூர்யாவின் ஆட்சேபங்களை அவன் பொருட்படுத்தவில்லை.

வாசலை நோக்கிச் செல்லத் துவங்கினான் சூர்யா. அவனது தோளில் தட்டிக் கூப்பிட்டான் வெயிட்டர். “சாய் கி பைசா?” வெயிட்டரின் புருவங்கள் ஸ்டைலாக உயர்ந்தன. எதுவும் பேசாமல் காசு கொடுத்துவிட்டு கோபமாக நடந்த சூர்யா வழியில் ஒரு இளைஞனின் தோளில் சஇடித்துக் கொண்டான்.

“யோவ், எங்கே போறே?” அந்த இளைஞன் ஒல்லியாக, சிவப்பாக இருந்தான். சராசரி உயரம். மீசை வளர மறுக்கும் மழுமழு முகம்.

“வேண்டுமென்றா மோதுவார்கள்? தெரியாமல் பட்டுவிட்டது,” சூர்யாவின் குரலில் கோபம் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.

“கண்ணை மூடிக்கொண்டு போனால் தெரியவாச் செய்யும்?” என்றான் அந்த இளைஞன். அறிவுரை.

சூர்யாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “நீ எனக்குச் சொல்லித் தருகிறாயா? எப்போது கண்களைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும் எப்போது மூடிக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ”

“என் வேலையைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும், நீ சொல்ல வேண்டியதில்லை. ஒழுங்காகப் பார், இல்லாவிட்டால் கண்ணாடியை மாற்றிக்கொள்”.

“வாயை மூடிக்கிட்டு போய்யா, பல்லைப் பேர்த்திடுவேன்”

“உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கேன்?” என்றான் அந்தப் பையன். “மூடிக்கிட்டு போய்யா, மோட்டு”.

சூர்யா எப்படிப்பட்ட வசவையும் தாங்கிக் கொள்வான், ஆனால் அவன் குண்டாக இருப்பதாக யாராவது சொல்லிவிட்டால் அப்புறம் மனிதனாக இருக்க மாட்டான். அந்த இளைஞனைத் தாவிப் பிடித்தான். இடது கையால் அவனது காலரைப் பற்றி வலித்து, வலது கையால் அவன் கன்னத்தில் விட்டான் ஒரு அறை. அதன்பின் எதற்கும் இருக்கட்டும் என்று இன்னும் இரண்டு முறை கூடுதலாக அறைந்தான். அதற்குள் அந்த இளைஞன் தேர்ந்த குத்துச் சண்டை வீரனைப் போல் முகத்தைத் தன் மாருக்குள் புதைத்துக் கொண்டு விட்டான், சூர்யாவின் அறைகள் அவனது பின்தலையில் விழுந்தன.

நான்கைந்து பேர் ஒடி வந்து சூர்யாவை அந்த இளைஞனிடமிருந்து பிரித்தெடுத்தனர். இன்னும் கொந்தளித்துக் கொண்டிருந்த சூர்யா அந்த இளைஞனின் மேல் பாயத் திமிறினான். ஆனால் அவனோ, தன்னைப் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் பிடியில் பத்திரமாக நெஞ்சை நிமிர்த்தி, “விடுய்யா, விடுய்யா, இவன் எலும்பை உடைக்கறேன். யோவ், இருய்யா வச்சுக்கறேன்” உரக்கக் கத்த ஆரம்பித்தான்.

சூர்யாவும் விடுவதாயில்லை. ‘என்னடா வச்சுப்ப, என்ன வச்சுக்கப் போறே?”

“உனக்கு வச்சிருக்கேன்யா. நான் யாருன்னு காட்டறேன் இரு, சீக்கிரம் என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்கத்தான் போறே”.

ஒரு வழியாக இருவரையும் சமாதானப்படுத்தி அவரவர் வழியில் அனுப்பி வைத்தார்கள் அன்றைக்கு அந்த ஹோட்டலில் இருந்தவர்கள்.

அடுத்த நாள் சூர்யா அதே டேபிளில் வெங்கட்டுக்காக காத்திருந்தபோதுதான் நேற்றைய பிழை அவனுக்குப் புரிந்தது. முந்தைய நாள் அவனோடு சண்டை போட்ட பையன் அன்றைக்கு இவன் டேபிளுக்குப் பக்கத்து டேபிளில் சாப்பிட்ட அந்த மூன்று ரௌடிகளோடு வந்து கொண்டிருந்தது அவனைக் கலவரப்படுத்த வேகு நேரமாகவில்லை.

வந்தவர்களில் ஒரு ரௌடி சூர்யாவுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டான். ஸ்ட்டையின் மேலிரண்டு பட்டன்கள் திறந்திருந்தன. அவன் கழுத்தில் அணிந்திருந்த செயினில் ஒரு பெரிய சிலுவை தொங்கிக் கொண்டிருந்தது. அவனுக்குப் பக்கத்தில் இன்னொரு ரௌடி வந்து உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு புகை விடத் தொடங்கினான் அவன். மூவர் அணியின் பலசாலியாகத் தெரிந்த ரௌடி நெற்றியில் பெரிதாகப் பொட்டு வைத்திருந்தான். அவன் சூர்யாவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான். இனி சூர்யா தப்பித்து ஓடுவதானால் சுவற்றை உடைத்துக் கொண்டுதான் ஓட வேண்டும். எதிரில் இருந்த ரௌடிகளுக்கு அருகில், ஓரமாக அன்றைக்கு அடி வாங்கிய பையன்.

சிலுவை அணிந்திருந்த ரௌடி, “நமஸ்தே அண்ணா,” என்றான்.

இன்னும் கலவரம் தீராத சூர்யா, அது எதையும் காட்டிக் கொள்ளாமல், “நமஸ்தே,’ என்று சிரித்தான்.

“உங்களுக்காகத்தான் அண்ணா காத்துக்கிட்டு இருந்தோம்,” என்றான் பொட்டு வைத்த ரௌடி. “காலைல பத்து மணியிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறோம்”.

இது மிரட்டலாக இருக்குமோ, என்று சூர்யாவுக்கு லேசாகச் சந்தேகம் வந்தது. ஆனால் என்ன பதில் சொல்ல முடியும், மன்னிப்பு கேட்டுவிடுவதுதான் நல்லது.

“நேற்றைக்கு நீங்க நம்ம பையனை அடிச்சுட்டிங்க அண்ணா,” என்றான் சிலுவை அணிந்திருந்த ரௌடி, ஒல்லியாய் இருந்த அன்றைக்கு அடி வாங்கிய பையனைக் காட்டி.

சூர்யாவின் கலவரம் பீதியானது. வெங்கட் வந்தால் நன்றாக இருக்கும்.

“பையன் ரொம்ப ஆத்திரப்பட்டுட்டாண்ணா…” என்றான் சிகரெட் வைத்திருந்த ரௌடி.

சூர்யாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தொண்டையைச் செருமிக் கொண்டு, “தம்பி, இதைக் கேளேன்…” என்று ஆரம்பித்தான்.

“ரைட் ஸாப். க்யா ஹோனா?” டைமிங் தப்பாமல் வந்து சேர்ந்தான் வெயிட்டர்.

“டீ கொண்டா” என்றான் சிலுவை ரௌடி.

“எத்தனை?”

“ஆளுக்கு ஒண்ணு”

“அதான் எத்தனை?”

‘உனக்கு எண்ணத் தெரியாதா?”

“தெரியாது”

பொட்டு வைத்த ரௌடியால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “டேய், என்ன கொழுப்பா? ஒரு நாள் உன் இடுப்பை ஒடிக்கப் போறேன்”.

வெயிட்டர் இதற்கெல்லாம் அஞ்சுவதாயில்லை. “உன்னை மாதிரி எத்தனை பேரை பாத்திருக்கேன்,” என்றான். “உனக்கு டீ வேணுமா வேண்டாமா?”

இப்போது சிகரெட் வைத்திருந்தவன் குறுக்கிட்டான். “அஞ்சு,” என்று சொல்லிவிட்டு சமாதானமாகப் புகைத்தான் அவன்.

“இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம்,”என்று முனகிக்கொண்டே போனான் வெயிட்டர்.

பொட்டு வைத்த ரௌடியின் முகம் இப்போது குங்குமமாகச் சிவந்திருந்தது. சூர்யாவுக்கு அவனைப் பார்க்கவே நடுக்கமாக இருந்தது. வெங்கட் வருவதாகத் தெரியவில்லை. சூர்யாவின் கண்களைத் தொடர்ந்து சிகரெட் வைத்திருந்த ரௌடி திரும்பிப் பார்த்தது சூர்யாவை இன்னமும் பயமுறுத்தியது.

சிலுவை ரௌடிதான் மறுபடியும் ஆரம்பித்தான், “அண்ணா, நீங்க நேத்து எங்க பையனை அடிச்சிங்க. அதுக்கு ஒரு காரணமும் இருந்தது.”

என்ன சொல்வான் சூர்யா?

“அண்ணா, எங்களை ஏமாத்த முடியாதுண்ணா. உங்க திட்டம் எங்களுக்கு நல்லாத் தெரியும்,” சிகரெட்டை ஆழப் புகைத்து விட்டு, தலையை கூரையை நோக்கித் தூக்கி, புகை விட்டான். முழு வளையங்களாக வெளிவந்திருக்க வேண்டிய புகை, வளைந்து கலைந்தது.

“திட்டமா?”

“உங்க திட்டம் ரகசியமா இருக்கும்னு நினைச்சீங்க, இல்லையா?” இது சிலுவை ரௌடி. “ஆனா அவனுக்கு எல்லாம் தெரியும்,” சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த ரௌடியைக் காட்டினான். இம்முறையும் உருவம் பெற மறுத்துக் கலைந்து மறைந்தது அவன் குப் என்று ஊதிய புகை.

நடுவில் சிகரெட் செருகிய இரு விரல்களால் சூர்யாவைக் காட்டி அவன் மெதுவான குரலில் சொன்னான், “நேற்று நீங்க வந்தபோதே கவனிச்சுட்டேன். முதல் பார்வையிலேயே யார் எப்படி என்று கண்டுபிடித்துவிடுவேன் நான், உங்களைப் பற்றி எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சுண்ணா”

சூர்யாவுக்கு இதை எப்படி எடுத்துக் கொன்வது என்று புரியவில்லை. மறப்போம் மன்னிப்போம் என்று நட்புக் கரம் நீட்டலாமா?

“எனக்கு என்ன வேணும்னா…” என்று ஆரம்பித்தான் சூர்யா.

“சாய்!” இம்முறையும் வெயிட்டர் டைமிங் தவறாமல் வந்துவிட்டான்.

யாரும் எதுவும் பேசவில்லை. மௌனமாக டீ பருகினார்கள் – சூர்யாவுக்குப் பக்கத்தில் இருந்தவனைத் தவிர. அவன் டீயை சாஸரில் ஊற்றி சத்தமாகக் குடித்துக் கொண்டிருந்தான்.

நண்பன் டீ குடிக்கும் அழகை ஒரு நொடி பாசமாகப் பார்த்துவிட்டு சிகரெட் ரௌடி சொன்னான், “அண்ணன் நேற்று நீ நவீன் மேல கை வைத்தபோதே உன்னை அடிச்சுத் துவைச்சிட ஆசைப்பட்டார,” இப்போது சிகரெட் அந்தப் பையன் இருக்கும் திசைக்குத் திரும்பியது. “இந்த நவீன் நம்ம அண்ணனோட அக்கா பையன். நான்தான் உங்க திட்டம் என்னன்னு தெரிஞ்சதால அண்ணனைத் தடுத்துவிட்டேன்…”

அவன் மௌனமாக சூர்யாவைப் பார்த்தான். அவனோடு இருந்தவர்களும் தலையை அசைத்து ஆமோதித்தனர். நவீன் இறுக்கமாக உட்கார்ந்திருந்தான். சூர்யாவுக்கு எதுவும் புரியவில்லை. என்ன திட்டம் என்று இவர்கள் கண்டுபிடித்தார்கள்?

“நீங்கள் யாரென்று எங்களுக்குத் தெரியும்,” என்றான் சிலுவை ரௌடி. என் வீடு எங்கிருக்கிறது என்று இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா? இவர்கள் வந்தால் என்ன ஆகும்? என் மனைவி என்ன செய்வாள்? பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன சொல்வார்கள், உதவிக்கு யாராவது வருவார்களா? எல்லாரும் ஓடிப் போய் விடுவார்கள், கதவை சாத்திக் கொள்வார்கள்.

சூர்யாவை நோக்கிக் குனிந்து ரகசியமாகச் சொன்னான், சிகரெட் வைத்திருப்பவன்.”அண்ணா, நீங்க ஒரு…” சஸ்பென்ஸை நீட்டிக்க சிறு மௌனம். “… போலீஸ் இன்ஸ்பெக்டர்”.

இதைச் சொன்ன மூன்று ரௌடிகளின் முகங்களையும் பெருமிதம் நிறைத்தது. நவீன் முகம் இன்னும் இறுக்கமானது. சூர்யாவின் முகத்தில் மறைக்க கொஞ்சமும் வழியில்லாமல் தெளிவாகக் குழப்பம் தெரிந்தது.

“அதிர்ச்சியாக இருக்கிறது, இல்லையா? எங்களுக்கு எப்படி தெரியும், என்று குழப்பமாக இருக்கிறதா?”

நேற்று நீங்க வெங்கட்டுடன் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள்,” என்றான் புகைபோக்கி. “எங்களுக்கு வெங்கட்டை நன்றாகத் தெரியும். ஒன்று, அவன் போலீஸ்காரனாக இருக்க வேண்டும் அல்லது ஒரு இன்பார்மராக இருக்கவேண்டும் என்ற சந்தேகம் எங்களுக்கு ரொம்ப நாட்களாகவே உண்டு. நேற்று ஜகாங்கீர் கானைப் பிடிக்க வெங்கட் உதவி செய்தது எங்களுக்குத் தெரிந்து விட்டது. அதை உன்னிடம் சொல்லத்தான் இங்கு வந்திருக்கிறான்.”

ஒரு நொடி சூர்யாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்துவிட்டு புகைபோக்கி தொடர்ந்தான், “நீங்கள் வெங்கட்டிடம் பேசியதைப் பார்த்ததுமே கண்டு பிடித்துவிட்டோம். உங்களுக்கு ஜகாங்கீர் கானைக் கைது செய்தது பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. இது முதலில் எனக்குப் புரியாவிட்டாலும் அப்புறம் புரிந்து விட்டது”.

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏன் ஜகாங்கீர் போன்ற ஒரு பயங்கரமான குற்றவாளியைக் கைது செய்வதில் ஆர்வம் இல்லாமலிருக்க வேண்டும்? என்ன சொல்கிறான் இவன்?

“சொல்லட்டுமா?” என்று சிரித்தான் புகைபோக்கி. “உங்க வேலை வேறு. லங்க்டா தாசைக் கைது செய்வதுதான் உங்கள் மிஷன்”.

சூர்யாவைத் தூக்கிவாரிப்போடச் செய்த செய்தி இது. செகந்திராபாத் வட்டாரத்தில் மிகவும் பேர்போன குற்றவாளி அவன். தன் எதிரிகளை ஈவு இரக்கமிலாமல் அவன் கொலை செய்வது பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறான்.

“ரெஜிமெண்டல் பஜார்தான் உங்க ஏரியா, லங்க்டா தாஸ் அந்தப் பகுதியைத்தான் கைப்பற்றி வைத்திருக்கிறான். அதனால்தான் லங்க்டா தாஸ் விஷயமாக எதுவுமே செய்யாத வெங்கட் ஜகாங்கீரைப் பிடிக்க உதவி செய்தது பற்றி உங்களுக்குக் கோபம்,” என்று விளக்கம் தந்தான் பொட்டு ரௌடி.

“இனி நான் சொல்றேன்,” என்றான் சிலுவை ரௌடி. “நீங்களும் வெங்கட்டும் பேசிக்கொண்டதை நாங்கள் உன்னிப்பாக கேட்டுக்கொண்டுதான் இருந்தோம். ஒரு மாத காலம் காத்திருப்பதாக நீங்கள் வெங்கட்டிடம் கோபப்பட்டது எங்கள் காதில் தெளிவாகவே விழுந்தது. ஒரு வாரத்தில் காரியத்தை முடித்துத் தருவதாக வெங்கட் சொன்னதையும் அச்சு அசலாகக் கேட்டு விட்டோம்”.

புகைபோக்கி இப்போது பூரணமான ஒரு புகை வளையம் விட்டான். அது மெல்லக் காற்றில் எழுந்தது. அது விரிவதை அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். கொஞ்சம் கொஞ்சமாகத் தடுமாறி நொறுங்கும்வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சூர்யாவின் மூளையில் ஒரு பாதி உண்மையைச் சொல்லிவிடச் சொன்னது, அதுதான் நல்லது. ஆனால் வேறொரு பாதி மூளை அவன் மனதை மாற்றியது. “இந்த மாதிரியான த்ரில்லை வாழ்க்கையில் எப்போது நீ பார்க்கப் போகிறாய்?” என்று கேட்டது அது, “நாடகம் தொடரட்டும்”

போலிஸ் இன்ஸ்பெக்டர் சூர்யா முதல்முறையாக தன் நாற்காலியில் மிடுக்காகச் சாய்ந்து அமர்ந்தான். “லங்க்டா தாஸைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் அவனது ஆட்களா?”

“அதற்காகத்தான் வந்தோம். நீங்கள் எங்களை லங்க்டா தாஸின் ஆட்கள் என்று நினைத்து எதுவும் செய்துவிடக் கூடாது. ஒரு திட்டத்தோடுதான் வேண்டுமென்றே நவீனை மோதி அவனிடம் சண்டை போட்டிருக்கிறீர்கள். நாங்கள் குறுக்கே வந்தால் எங்களைக் கைது செய்திருப்பீர்கள், இல்லையா? உங்களுக்கு நல்ல காரணம் கிடைத்திருக்கும்,” என்றான் சூர்யாவுக்கு எதிரில் அமர்ந்து கொண்டிருந்தவன்.

“ஸாப், நாங்கள் பெரிய ரௌடிக்கள் அல்ல. சும்மா மிரட்டுவோம் அவ்வளவுதான், யாராவது பயந்தால்தான் உண்டு. மற்றபடி யாருக்கும் இதுவரை எந்த கெடுதலும் செய்யாமல் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்,” என்றான் அவன். “ஒரு தப்புகூட செய்ததில்லை,” என்று கூடுதல் விளக்கம் அளித்தான் பொட்டு ரௌடி.

ரௌடிகள் தங்கள் வேஷத்தைக் கலைத்துவிட்டாலும் சூர்யாவுக்குத் தன் வேடத்திலிருந்து வெளியே வருவது சுலபமாக இல்லை. “நீங்கள் பெரிய ரௌடிகளா சின்னச் சின்ன ரௌடிகளா என்பது என் கவலையில்லை. இன்றைக்கு சின்ன ரௌடிக்களை சும்மா விட்டால் நாளைக்கு அவர்கள்தான் பெரிய ரௌடிக்களாக வளர்ந்து நிற்பார்கள். அதன்பின் பொதுமக்களை அச்சுறுத்த ஆரம்பித்து அத்தனை தப்பு தண்டாக்களும் செய்வார்கள். என் ஏரியாவில் ரௌடியிசம் இருப்பதைக் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள மாட்டேன்”.

சூரியாவின் அரச்சீற்றதைப் பார்த்து அந்த ரௌடிகள் அத்தனை பேரும் அரண்டு விட்டது போலிருந்தது.

சிகரெட் குடித்துக் கொண்டிருந்தவன்தான் முதலில் பேசினான். “அது சரி ஸாப், லங்க்டா தாஸ் ஒரு சபதம் எடுத்திருக்கிறானாமே? நாலு போலிஸ்காரர்களைப் போட்டுத்தள்ளி விட்டுதான் அவன் ஜெயிலுக்குப்போகப் போகிறானாம். புது இன்ஸ்பெக்டர் எங்கே இருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடிக்க அவனது ஆட்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்களாம். முதலில் இன்ஸ்பெக்டரை கவனிப்பான் போலிருக்கிறது.’ என்று சொல்லிவிட்டு சூர்யாவைப் பார்த்து கண் சிமிட்டினான்.

சூர்யாவுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டு விட்டதென்றாலும் போலிஸ்கார மிடுக்கைத் தளர விடவில்லை. “எல்லாம் எங்களுக்கும் தெரியும். லங்க்டா தாஸ் ஆட்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்று கச்சிதமாக திட்டம் போட்டு வைத்திருக்கிறோம். போலிஸ் எதற்கும் பயப்படாது. காக்கிச் சட்டை போட்டுக் கொண்டபின் இந்த சமூகத்தைக் காப்பாற்ற எந்த தியாகமும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று மேஜையை பலமாகத் தட்டினான் அவன்.

யாரும் பேசவில்லை. பின்னர், சூரியாவுக்கு அருகில் இருந்த ரௌடி சொன்னான், ‘நாம சமாதானமாப் போயிடுவோம். நவீன் உங்ககிட்ட மன்னிப்பு கேட்பான். நேற்றைக்கு நடந்ததற்கு தயவு செய்து அவனை மன்னித்துவிடுங்கள். நாங்கள் எந்த கெடுதலும் செய்ய மாட்டோம். எங்களை நீங்களும் எதுவும் செய்ய வேண்டாம். வெங்கட்டிடமும் பயப்பட வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள், சரிதானே?”

சூர்யா எதுவும் சொல்வதற்குள் சிகரெட் வைத்துக் கொண்டிருந்தவன் நவீனைப் பார்த்து, “சாப் கோ ஸாரி போல்” என்றான்.

நவீன தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, “ஸாரி,” என்று முனகினான். பின்னர், “சண்டையை நான் ஆரம்பிக்கவில்லை” என்று தாழ்ந்த குரலில் சொன்னான்.

“சுப் பைட்” என்றான் நவீனின் சொந்தக்கார ரௌடி. “இனி யாருடன் சண்டை போடுகிறோம் என்று யோசித்து சண்டைக்குப் போ”. நவீன் சோகமான முகத்துடன் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி, அப்படியே டீல் போட்டுக் கொள்வோம்,” என்று சொன்னான் சூர்யா. “நீங்கள் ஒழுங்காக இருந்தால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன். ஆனால், நீங்கள் எதுவும் பிரச்சினை செய்வதாகத் தெரிந்தால், உங்களைக் கம்பி எண்ண வைக்கத் தயங்க மாட்டேன்.”

சிலுவை அணிந்திருந்தவன் உடனே சரி என்று ஒப்புக் கொண்டுவிட்டான். “சத்தியம் செய்து கொடுக்கிறோம், இனி நாங்கள் ஒழுங்காக இருக்கிறோம். லங்க்டா தாஸ் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் உங்களுக்குச் சொல்லவும் செய்கிறோம்”.

“ஓகே,” என்றான் சூர்யா.

அனைவரும் பரஸ்பரம் கைகுலுக்கி விடைபெற்றனர்.

சூர்யாவின் இதயம் இன்னும் படபடத்துக் கொண்டிருந்தாலும், தான் செய்த சாகசச் செயல் குறித்து கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. எங்கே போனான் இந்த வெங்கட்? ஒரு ஐந்து நிமிடம் போலானபின் பொட்டு வைத்த ரௌடி திரும்பி வருவதைப் பார்த்ததும் கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டது. அது எதையும் காட்டிக் கொள்ளாமல் மிடுக்காக அவனை முறைத்துப் பார்த்தான் சூர்யா. அந்த ரௌடி சூர்யாவின் காதருகே வந்து, “பான் ஷாப் பக்கத்தில் நிற்கும் அந்த இரண்டு பேரைக் கொஞ்சம் கவனிங்க ஸாப்,” என்றான்.

மலை மாதிரி இரண்டு பேர் அங்கே நின்று கொண்டிருந்தனர். இந்தப் பொட்டுக்காரனைவிட பலசாலிகள், முரட்டு முகங்கள்.

“ஆமாம்,” என்றான் சூர்யா மெதுவாக.

“அவர்கள் இருவரும் லங்க்டா தாஸின் ஆட்கள். அவர்களுக்கு நீங்க ஒரு இன்ஸ்பெக்டர் என்று தெரியாது. சீக்கிரம் உங்க ஆட்களைக் கூப்பிடுங்க, யார் என்று அவர்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது,” என்று அறிவுரைத்தான். “சான்ஸ் கிடைத்தால் உங்களைப் போட்டுத் தள்ளி விடுவார்கள்”.

சூர்யாவுக்கு நாவெழும்பவில்லை. மெல்ல தலையசைத்தான்.

“இதற்கெல்லாம் திட்டம் இருக்கும், ஒன்றும் பயமில்லை,” என்றான் அந்த ரௌடி. “மாதக்கணக்கில் திட்டம் போட்டுவைத்திருப்பீர்கள்”. சூர்யாவைப் பார்த்து சிரித்துவிட்டு மெல்ல நடந்து போனான் அவன்.

பெண்டர்காஸ்ட் ரோட்டைப் பார்த்து வேகமாகப் போய் கொண்டிருந்த ஆட்டோவில் இருந்த சூர்யா தன்னைக் கண்டும் காணாததுபோல் போவதைப் பார்த்தபோது வெங்கட் கொஞ்சம் திகைத்துப் போனான். அக்பர் ஹோட்டல் வாசலில் சூர்யாவின் ஸ்கூட்டர் அப்படியே நின்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது அந்த திகைப்பு குழப்பமாக மாறியது.

பான் ஷாப் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு முரட்டு ஆள் வெங்கட்டை அழைத்துச் சிரித்தான், “நமஸ்தே அண்ணா!”

“லைசன்ஸ் எங்கே?”

ஒரு கவரை வெங்கட்டிடம் தந்தான் அவன். தன்னுடன் இருந்தவனை ஆர்டிஓ ஆபிசில் வேலை செய்பவன் என்று அறிமுகப்படுத்திவிட்டு, “இந்த லைசன்ஸ் வாங்க வந்த ஆள் எங்கே?” என்று கேட்டான்.

வெங்கட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. “இத்தனை நேரம் இங்குதான் இருந்திருப்பான், இப்போதுதான் அவன் ஒரு ஆட்டோவில் எங்கோ போவதைப் பார்த்தேன்”. கொஞ்ச தூரத்தில் மூன்று ரௌடிகளும் ஒல்லியாய் ஒரு பையனும் எதற்கோ சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தான்.

சூர்யாவின் ஸ்கூட்டர் ஓட்டல் வாசலில் நின்று கொண்டிருந்தது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.