கவியின் கண் 9 – ‘ஆழம் காண முடியா வாழ்வினுள்ளும்’

– எஸ். சுரேஷ்-

Utopia –  Wislawa Szymborska

Island where all becomes clear.
Solid ground beneath your feet.

The only roads are those that offer access.

Bushes bend beneath the weight of proofs.

The Tree of Valid Supposition grows here
with branches disentangled since time immermorial.

The Tree of Understanding, dazzling staight and simple.
sprouts by the spring called Now I Get It.

The thicker the woods, the vaster the vista:
the Valley of Obviously.

If any doubts arise, the wind dispels them instantly.

Echoes stir unsummoned
and eagerly explain all the secrets of the worlds.

On the right a cave where Meaning lies.

On the left the Lake of Deep Conviction.
Truth breaks from the bottom and bobs to the surface.

Unshakable Confidence towers over the valley.
Its peak offers an excellent view of the Essence of Things.

For all its charms, the island is uninhabited,
and the faint footprints scattered on its beaches
turn without exception to the sea.

As if all you can do here is leave
and plunge, never to return, into the depths.

Into unfathomable life.

By Wislawa Szymborska

From “A large number”, 1976
Translated by S. Baranczak & C. Cavanagh

Copyright © Wislawa Szymborska, S. Baranczak & C. Cavanagh

உடோபியா

அனைத்தும் தெளிவாகும் தீவு.
நீ காலூன்றி நிற்கும் நிலம்.

இங்கு பாதைகள் மட்டுமே சாலைகள்.

நிரூபணச் சுமையில் சாய்கின்றன புதர்கள்.

மெய்யனுமான மரம் இங்கு வளர்கிறது
காலங்காலமாக சிடுக்கற்ற கிளைகளுடன்.

கண்களைக் கவரும் தரிசன மரம் நிமிர்ந்து நிற்கிறது, எளியது அது.
கண்டுகொண்டேன் என்ற சுனையருகில் முளைக்கிறது.

அடர் வனத்துடன் பார்வையின் வீச்சும் விரியும்:
எல்லோரும் அறிந்த உண்மை எனும் சமவெளி.

சந்தேகங்கள் தோன்றும் கணமே காற்று அவற்றைக் கலைக்கிறது.

அழையாமல் அசைகின்றன எதிரொலிகள்,
உலகின் அனைத்து ரகசியங்களையும் ஆவலுடன் விளக்கிச் சொல்கின்றன.

வலப்புறம் உள்ள குகையில் பொருள் உறங்குகிறது.

இடப்புறம் உள்ளது சிரத்தைக் குளம்.
அடியாழத்தில் எழும் உண்மை, நீர்ப்பரப்பில் எட்டிப் பார்க்கிறது.

அசைக்க முடியாத நம்பிக்கை சமவெளிக்கு அப்பால் உயர்ந்து நிற்கிறது.
அதன் சிகரங்கள் பொருட்களின் சாரத்தைக் காட்டும் அருமையான இடம்.

இத்தனை வசீகரங்கள் இருந்தும், இந்தத் தீவில் ஆளில்லை,
ஆங்காங்கே அதன் கடற்கரைகளில் தேய்ந்து மறையும் காலடித்தடங்கள்
விதிவிலக்குகளின்றி கடல் நோக்கித் திரும்புகின்றன.

இங்கு ஆகக்கூடிய ஒரே செயல் நீக்கமும்
ஆழச்செல்தலும, திரும்பாது, மூழ்குதல் போலும்,

ஆழம் காண முடியா வாழ்வினுள்ளும்.

தர்க்கத்துக்கும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதற்கும் இடையேயான போராட்டம் என்று வாழ்வைச் சொல்லலாம். சமூக அளவிலும் தனி மனித அளவிலும் இதுதான் உண்மை. மனிதர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துவதும் இந்தத் தர்க்கப் போராட்டம்தான்.

சாதி, மதம், இனம், தேசம் என்றும் இன்னும் பிற வகைகளிலும் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், மனிதர்களில் பலருக்கும் வாழ்க்கை என்றால் அன்பும் நம்பிக்கையும்தான். மகத்தான இலக்கியப் படைப்புகளைப் படித்துப் பாருங்கள், மகோன்னதமான கலையாக்கங்களைக் காணுங்கள், உலக சினிமா கிளாஸிக்குகள் என்று கருதப்படும் திரைப்படங்களைப் பாருங்கள். இவை அன்பையும் மானுடத் துயரையும் நம்பிக்கையையும் பேசுகின்றன என்பதுதான் பொதுவான விஷயங்கள். இங்கே நான் பொதுமைப்படுத்துகிறேன் என்பது உண்மைதான், ஆனால் கலையின் செவ்வியல் ஆக்கங்கள் பேசும் இந்த விஷயங்கள் ஒரு தளத்தில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை.

ஒரு அன்னை தன் மகவிடம் கொள்ளும் அன்பு இயல்பானது. இந்த அன்பு விலங்குகளிடமும் காணப்படுகிறது. ஆனால் விலங்கினங்களில் குழந்தை வளர வளர தாயன்பு குறைகிறது. மனித இனத்தில் இப்படியில்லை. கறாராகப் பார்த்தால் இந்த அன்பு தர்க்கமற்றது. தன் குழந்தைகளைக் காப்பாற்ற அன்னையர் என்ன வேண்டுமானலும் செய்கின்றனர். குழந்தை தவறு செய்திருக்கிறது என்று தெரிந்திருந்தாலும் அதை நியாயப்படுத்தும் அம்மாக்களை நாம் அறிவோம். குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை வழங்கப்பட்டவர்கள், பாலியல் பலாத்கார குற்றவாளிகள் இவர்களின் தாய்களைப் பார்க்கும்போது இந்தப் பிணைப்பின் ஆழம் நமக்குப் புரிகிறது. இந்த அன்பின் தர்க்கத்தை நம்மால் விளக்க முடியாது. கம்போடியாவில் ஆட்சி புரிந்த காலத்தில் போல் பாட், குழந்தைகள் அனைவரும் தேசியச் செல்வங்கள் என்று அறிவித்தார். பிறந்தவுடன் குழந்தை அதன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு அரசு அதை வளர்த்தது. ஓரளவுக்கு இதில் உள்ள நியாயத்தை நம்மால் பார்க்க முடிகிறது என்றாலும், நாம் நினைத்தபடியே இதன் விளைவுகள் கொடுமையாக இருந்தன.

தாயன்பு மட்டுமல்ல, எல்லா அன்புமே தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது என்று நாம் சொல்ல முடியும். நட்பையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். நம்மில் பலர் நண்பராவது ஏன்? காரணம் ஒன்றும் பெரிதாய்ச் சொல்ல முடியாது. நாம் அண்டை வீட்டுக்காரர்களாக இருந்ததால் இந்த நட்பு உருவாகியிருக்கலாம். அல்லது நாம் அலுவலக சகாக்களாக இருக்கலாம், ஏதோ ஒரு கூடுகையில் நாம் அறிமுகமாகியிருக்கலாம், அல்லது ஏதோ ஒரு பயணத்தில் சந்தித்திருக்கலாம்- எத்தனையோ காரணங்கள், நட்பு நேரிடுகிறது, அவ்வளவுதான். நாம் நினைத்த மாதிரி இருப்பாரா என்றும் நமக்கு இணக்கமானவரா என்றும் கணக்கு போட்டு ஒருவரை நம் நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்வதில்லை. காதலும் இது போன்ற ஒரு மர்மம்தான். சிரிப்பு பிடித்திருந்தது, அவளது பார்வை பிடித்திருந்தது,

கன்னக்குழி பிடித்திருந்தது, தன்னம்பிக்கை பிடித்திருந்தது என்று என்னென்னவோ நியாயங்கள் சொன்னாலும், தர்க்கப்பூர்வமாகப் பார்த்தால் இது போன்ற எத்தனையோ பேர் நம்மைச் சுற்றி இருந்திருக்கின்றனர், அவர்களிடம் காதல் வயப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். என்னவோ நடக்கிறது. அந்த ஒருத்தரைத் தவிர வேறு யாரையும் அது போல் நேசிக்க முடியாமல் போகிறது.

நம்பிக்கையும் அன்பைப் போல் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதுதான். பலரால் நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது. ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைத்தாக வேண்டும். மனிதனுக்கு உள்ள மிகப்பெரும் நம்பிக்கை சமயப் பற்று. பகுத்தறிவாளர்களின் பார்வையில், மத நம்பிக்கையைவிட தர்க்கமற்றது வேறு எதுவுமில்லை. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியாது என்னும்போது பெருமாளின் தசாவதாரங்களை எப்படி நம்புவது? கடவுள் தன் மகனை பூமிக்கு அனுப்பினார் என்பதை எப்படி நம்புவது? குறிப்பிட்ட ஒரு மறைஞானியிடம் மட்டுமே கடவுள் பேசினார் என்றும் உலக மக்கள் அனவைரும் எப்படி வாழ வேண்டும் என்றும் அவரிடம் மட்டும் சொன்னார் என்பதை எப்படி நம்புவது?

பகுத்தறிவாளர்கள் மானுட வரலாற்றின் மிகப்பெரும் பொய் என்று சமய நம்பிக்கைகளைச் சொல்கின்றனர். நம் பிரச்சினைகளுக்கும் அதையே காரணமாக்குகின்றனர். தீவிர நம்பிக்கை மூடநம்பிக்கையாக வளர்கிறது. மூடநம்பிக்கையின் தூண்டுதலில் தங்கள் சமயத்தைக் காக்க மக்கள் ஒருவரையொருவர் கொலை செய்கின்றனர். மதநம்பிக்கை உள்ளவர்களோ, தங்கள் நம்பிக்கை எத்தனையோ பேருக்கு ஆறுதல் அளித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். மனிதர்கள் காட்டுமிராண்டித்தனமாக ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு சாகாமல் அவர்களை நெறிப்படுத்தி நாகரிக மனிதர்கள் ஆக்குவதில் சமயங்களுக்கு பெறும் பங்குண்டு என்கின்றனர் அவர்கள். சமயச் சழக்குகள் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்று பகுத்தறிவாளர்கள் சொன்னால், நாத்திகர்களான ஸ்டாலின், ஹிட்லர், போல் பாட் போன்றவர்கள் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்த்திய படுகொலைகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி. நாத்திகமும் மானுட நேயமும் வெவ்வேறு என்கின்றனர் ஆத்திகர்கள்.

நம்பிக்கை சமயங்களுக்கு மட்டுமே உரியதன்று என்பது உண்மைதான். அது நம் வாழ்வுக்கூறு ஒவ்வொன்றையும் வியாபித்திருக்கிறது. அறிவியல் வரலாற்றில் பார்த்தாலும்கூட விஞ்ஞானிகளில் பலருக்கும் தவறு என்று நிருபிக்கப்பட்ட கோட்பாடுகளில் தொடர்ந்து நம்பிக்கை இருந்தது என்பது வியப்பளிப்பதில்லை. விஞ்ஞான ஆய்வின் முடிவுகள் எதிர்மறையாக இருந்தாலும்கூட இவர்களில் பலர் இறுதி வரை பொய்ப்பிக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு ஆதரவாகப் போராடியுள்ளனர். தர்க்கத்துக்கு உட்பட்ட அறிவியல் ஆய்வு செய்தாலும் விஞ்ஞானிகளும் அடிப்படையில் மனிதர்கள்தான். (இங்கே அறிவியலையும் விஞ்ஞானிகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். புதிய ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ள ஆய்வாளர்கள் மறுக்கலாம், அதைக் கொண்டு தம் புரிதல்களை மாற்றிக் கொள்வதைத் தவிர்க்கலாம். ஆனால் அறிவியலுக்கு அது போன்ற மனத்தடைகள் கிடையாது. என்றாலும் அறிவியல் வளர்ச்சி மனிதனின் அறிவுத் தேடலின் வளர்ச்சி என்பதால் மனிதர்களின் மனச்சாய்வுகள் அதன் வளர்ச்சியைச் சிக்கலானதாக ஆக்குகின்றன).

நம் வாழ்வில் காணப்படும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பல என்றாலும், காதல் மற்றும் நம்பிக்கையை இரு உதாரணங்களாகச் சுட்ட மட்டுமே விரும்புகிறேன். பொறாமை, அந்நியர்களின்பால் அன்பு, கோபம், இரக்கம் என்று இன்னும் பல தர்க்கமின்மைகள் உண்டு. நாம் ஏன் தர்க்கத்துக்குக் கட்டுப்படாதவர்களாக இருக்கிறோம்? வாழ்வே தர்க்கமற்றது என்று நான் நினைக்கிறேன். நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. டிவிட்டரில் ஒரு நண்பர், தன் முதல் குழந்தை பிறந்த இருபது நாட்களில் ஒரு பெண் தனக்கு புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதாய் அறிந்தாள் என்று சொன்னார். இதை எப்படி விளங்கிக் கொள்ள முடியும்? ஆரோக்கியமான ஒரு 38 வயது இளைஞன் திடீரென்று மயங்கி விழுந்து மரணமடைவதை எப்படி புரிந்து கொள்ள முடியும்? உன்னைத் தவிர உன்னிடம் இருப்பது அனைத்தையும் சுனாமி போன்ற ஒரு இயற்கை நிகழ்வு கொண்டு செல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? நாம் என்ன செய்கிறோம் என்பதற்கும் நமக்கு என்ன நடக்கிறது என்பதற்கும் வாழ்வில் ஒரு தொடர்பும் இல்லாதது போலிருக்கிறது. வாழ்வின் நிலையாமையும் சாக்காடும் நமக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாழ்வின் தர்க்கமின்மையை எதிர்கொள்ள சமய நம்பிக்கைகள் போன்ற தர்க்கமற்ற நம்பிக்கைகளை கைகொள்கிறோம். வாழ்வின் அர்த்தமற்ற திருப்பங்களை அறிவியல் விளக்க முடியாது. ஆனால் எத்தனை தர்க்கமற்றதாக இருந்தாலும் சமய நம்பிக்கைகள் அதைச் செய்கின்றன, நமக்கு வாழும் உந்துதல் அளிக்கின்றன..

விஸ்லாவாவின் கவிதை இன்னும் ஆழமான ஒரு கேள்வி எழுப்புகிறது. நாம் நம் தர்க்கமின்மையைக் கைவிடத் தயாராக இருக்கிறோமா? காதலுக்கு தர்க்கத்துக்கு உட்பட்ட விளக்கம் தரவேண்டும் என்று அறிவியலிடம் எதிர்பார்க்கிறோமா? மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றமே காதல் என்று சொல்வது போதுமான விளக்கமாகிறதா? சமய நம்பிக்கைக்கு அறிவியல் அளிக்கும் விளக்கங்கள் போதுமானவையாக இருக்கின்றனவா? உன் கருணை, உன் இரக்கம், உன் தனித்தன்மை – அறிவியல் அளிக்கும் விளக்கங்களோடு அவை முடிந்து விடுகின்றனவா? இதை நினைத்துப் பார்க்கவே பெரும்பாலான மக்கள் அஞ்சுவர். தங்கள் குழந்தைகளுக்காகவும் தங்கள் தேசத்துக்காகவும் தங்களிடம் உள்ள அனைத்தையும் தாம் ஏன் தியாகம் செய்தோம் எனபதை யார் தர்க்கப்பூர்வமாக என்ன சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அந்தத் தேவையும் இல்லை. நாம் ஏன் நம் குழந்தைகளை நேசிக்கிறோம் என்பதற்கு அறிவியல் அளிக்கும் விளக்கங்கள் போதுமானவையாக இருக்குமா? இது போன்ற விளக்கங்களை நம்புவது என்பது நரகம் புகுவது போன்ற ஒரு வாதை.

இதனால்தான் விஸ்லாவா சொல்கிறார், இந்தத் தீவில் யாரும் தங்குவதில்லை. நம்மில் பலரும் அஞ்சும் தீவு இது. இதன் அமைதி நமக்குத் தேவையாக இல்லை. இது நம் உடோபியா அல்ல. தர்க்கத் தீவை நிராகரித்து நாம் வாழ்வின் கொந்தளிக்கும் சாகரத்துக்குள் குதிக்கிறோம். அதுதான் நம் உடோபியா. மனித அறிவுக்கும் மனித உணர்வுக்கும் உள்ள போராட்டம் நெடுங்காலம் தொடரும். அறிவியல் அசாத்திய சாதனைகள் செய்திருந்தாலும் இதற்கு முடிவு ஏதும் இருக்கும் என்று தெரியவில்லை. நாம் செவ்வாய் கிரகத்தில் நம் கோள்களின் தடம் பதித்திருக்கலாம், ஆனால் மனித இதயத்தின் ஆழம் இன்றும் அளவிட முடியாததாகதான் இருக்கிறது. அதனால்தான் தெலுங்கில் சொல்கிறார்கள், “சூரியன் காணாததை கவி காண்பான்” என்று. உலகில் உள்ள பொருட்கள் அனைத்துக்கும் சூரியன் ஒளி பாய்ச்சுகிறான். ஆனால் மாபெரும் கவியால் மட்டுமே மானுட ஆன்மாவில் ஒளி பாய்ச்ச முடியும். விஸ்லாவா அத்தகைய ஒரு கவிஞர்.

தமிழாக்க உதவி – பீட்டர் பொங்கல்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.