ஆபோகி

 – விக்கி

கர்நாடக இசை கற்றுக் கொள்வதில் வர்ணம் ஒரு முக்கியமான கட்டம். கீதங்களில் ‘ஸ்ரீ கண நாதா’வுக்குப் பிறகு, ஸ்வர ஜதியில் ‘ராரா வேணுகோபாலா’வுக்குப் பிறகு, வர்ணத்தில் நுழைவது பயிற்சிப் பிராயத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்ட மைல்கல்.

“எத்தன வர்ணம் போட்டுருக்கு?” என்பது இசை தெரிந்த பாட்டி, பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமா மாமிகள் தவறாமல் கேட்கும் கேள்வி. நீங்கள் கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னும் இந்தக் கேள்வியைத் தப்ப முடியாது.

ஐஐடியில் படிக்கும் மாணவனிடம், “உன் ப்ளஸ் டூ மார்க் என்ன?” என்று கேட்டு தெரிந்து கொள்வது போன்ற விஷயம் இது. வர்ணங்கள் அத்தனை முக்கியம். வித்வான்கள்கூட துவக்கத்தில் ஒரு வர்ணம் பாடிவிட்டுதான் கச்சேரியைத் துவக்குகிறார்கள். ஏனென்றால் மேளம் கட்ட இதுதான் உசிதம்.

வர்ணங்கள் வேறு வகையிலும் முக்கியமானவை. காரணம், இவற்றைக் கற்றுக்கொள்ளும் காலகட்டத்தில்தான் கர்நாடக சங்கீதத்துக்கு முழுக்கு போடுபவர்களின் எண்ணிக்கை வர்ணத்துக்கு இத்தனை என்று எக்ஸ்பொனன்ஷியல் ரேட்டில் உயர்கிறது. இத்தனை காலம் ரைம்ஸ் மாதிரியான சங்கதிகளைக் கற்றுக் கொண்டிருந்துவிட்டு, வர்ணங்களுக்கு வரும்போதுதான் ஒரு பாட்டுக்கு மூன்று நான்கு பக்க அளவில் ஸ்வரங்களை மெனக்கிட்டு பயிற்சி செய்ய வேண்டியதாகிறது. பலரை இந்த இடத்தில் பீதி கவ்வுகிறது.

வர்ணத்துக்கு வரும்போதுதான் பல்லவி, அனுபல்லவி, முக்தாயி ஸ்வரம், சரணம், சிட்டை ஸ்வரம் என்று ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பாடல் அமைப்பை நாம் அறிமுகப்படுத்திக் கொள்கிறோம்.

ஒரே வர்ணத்தை ரெண்டாம் காலம் மூணாம் காலம் என பல வேகங்களில் பாடிப் பழகச் சொல்கிறார்கள் என்பதுதான் பெற்றோர்கள் வற்புறுத்தல் பேரில் மட்டும் பாட்டு கற்றுக் கொள்ள வரும் மாணவர்கள் கர்நாடக சங்கீதத்தைவிட்டுத் தெறிக்க உண்மையான காரணமாக இருக்கும். ஆனால் அவர்கள் ஜகா வாங்க கைகொடுப்பது வர்ணங்களில் உள்ள நுட்பமான பேதங்கள்தான்.

சதிகார பாட்டு வாத்தியார்களும் இந்த இடத்தில்தான் வேண்டுமென்றே உங்களை ‘சிட்டா ஸ்வரம் பாடு,’ என்று கேட்டு சிக்க வைப்பார்கள். நீங்கள் சிட்டை ஸ்வரங்களில் ஒன்றை தைரியமாக எடுத்துவிட ஆரம்பிப்பீர்கள், அவர்கள் மண்டையில் ஒன்று வைத்து, ‘டா ஸ்வரம் பாடச் சொன்னால் டை ஸ்வரம் பாடுகிறாயே,’ என்று சந்தோஷப்படுவார்கள். அதையே சாக்காக வைத்து “வாத்தியார் என்னைப் படுத்தறார். சிட்ட ஸ்வரமானா என்ன சிட்டை ஸ்வரமானா என்ன? பாட்டு பாட்டுத்தானே” என்று வாத்தியார் மேல் பழி போட்டு பாட்டு கிளாஸ் போகாததற்கு வீட்டில் காரணம் சொல்பவர் பலர்.

எனவே இசை கற்றுக்கொள்ளும் மாணவப் பருவத்தில் வர்ணங்களிடம் பழகுவது ஆர்மியில் பழகுவது போல் ஸ்ட்ரிக்ட் டிசிப்ளினாக இருக்கும் காலகட்டத்தில், மேலே தொடரலாமா வேண்டாமா என மனதுக்குள் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது வரும் பாலைவனச் சோலைதான் இந்த – ‘எவ்வரி போதனா’ எனும் ஆபோகி வர்ணம். இந்த இடம் வரும்வரை தாக்குப் பிடிப்பவர்கள் கர்நாடக இசையையும்கூட சிக்கல்கள் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்கிறார்கள்.

அதுவரை மாய மாளவ கௌளை, மலஹரி, சாவேரி எனும் சீரியசான ராகங்களை உருட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்கு எடுத்த எடுப்பிலேயே இந்த வர்ணத்தில் தெரிவது, இதில் உண்டான ஜனரஞ்சகம். இந்த ராகம் மனதுக்கு இனிய ஒரு தனித்த ‘ஒலி’ தருவதை நீங்கள் கவனிக்காமல் இருக்க முடியாது.

இதில் ஒரு புதுமை இருப்பதையும் நீங்கள் உணரலாம். வரிசையாக நாலு ஸ்வரங்கள் ஒரே மாதிரி வருகின்றன, பின் ஒரு நீண்ட இடைவெளி. அதன்பின் சடாலென பஞ்சமத்தை ஹை ஜம்ப் செய்து தைவதம் செல்கிறது. அப்படியே மேலும் ஒரு குதி. மேல்ஸ்தாயி சட்ஜமத்தில் அமர்கிறது.

புதிய இடத்தில் நாய்க்குட்டி ஒன்று சந்தோஷமாக ஓடி விளையாடுவது போல் இந்த ஸ்வரங்களில் நீங்கள் ஆடிப் பாடுகிறீர்கள். ‘சாலேந்த்ர ஸ்ரீ வெங்கடேச’ என்ற இடத்தில்

‘த ஸ ரி ஸா…. ரி க ம
ரி கா மா -க க ரி ஸ’

என்று உயரங்களை நோக்கித் தாவியோடி,

‘ரி க ரி ஸ ரி த ரி ஸ
ஸ த ம த ம க ரி ஸ’

என்று இறங்கும்போது, ஒரு ஜயண்ட் வீலில் மேலே போய் கீழே இறங்குவது போன்ற ஒரு அட்ரினல் பரவசத்தை உணருகிறீர்கள்.

இங்குதான் உங்கள் இசை வாழ்க்கையில் நல்ல விதமான ஏதோ ஒன்றைச் சாதித்த திருப்தியும் உங்களுக்கு முதல் முறையாகக் கிடைக்கிறது.

ஆபோகியை இன்னும் மேலே பயிலும்போது, அது உங்களை புத்திசாலித்தனமாக சோதித்துப் பார்க்கிறது என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.

ஆபோகியில் வரும் பாடலில் பஞ்சமம் கிடையாது என்பது அடிக்கடி மறந்து போகும். நம்மை மறந்து, பழக்க தோஷத்தில் மத்யமத்துக்கு பதிலாக, வழக்கமாக தவிர்க்கக்கூடாத பஞ்சமத்தைப் பாடிவிடுவீர்கள் – அது சிவரஞ்சனியாக வந்து விழும், ஒரு கடூரமான அபஸ்வரமாக ஒலிக்கும்.

ஒரு ஸ்வரம் பிசகினாலும் ஒரு உலகே தவறி விடுவது போன்ற வேற்றுமை இப்போது புலப்படும்.

நான் இந்தத் தவற்றை இன்னமும் செய்கிறேன். இயற்கையும் இசையும் இரக்கமற்றவை என்பதற்கான ஆதாரம்!

ஆக, ஆபோகி ராகத்துக்கு இப்படிப்பட்ட ஒரு தனி இடம் என் இதயத்தில் இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, இந்த ராகத்துக்கு அறிமுகமான என்னைப் போன்ற பலருக்கும்.

அந்த தாக்கம் தூண்டிய ஒரு தனி முயற்சிதான், நம் வாழ்வின் முப்பது ஆண்டு காலமாக நமக்குக் கிடைத்த கொடுப்பினையில் மிகச் சிறந்த ஆபோகிதான் இன்றைய பாடல்.

oOo

ஒரிஜினாலிட்டி தனியாகத் தெரியும் பாடல் இது.

கர்நாடக சங்கீத ராகத்தில் ஒரு பாடலை இயற்றுவது ஒரு திறமை, ஆனால் அதே ராகத்தில் ஒரு திரைப்பாடலை அமைத்து, அதில் அந்த ராகத்தின் சாரத்தைக் கைப்பற்ற வேறு வகை ஆற்றல் வேண்டும்.

உதாரணம் சொன்னால் பஞ்சமம் இல்லாமல் ஒரு பாடலுக்கு இசையமைத்து அதில் மெல்லிசையின் சாயலும் கொடுப்பது மிகவும் கடினமான விஷயம் – காரணம் என்னவென்றால் பஞ்சமம் இல்லாமல் ரூட் கார்ட் அமைக்க முடியாது. ரூட் கார்ட் இல்லாமல் மெல்லிசை பாடல்களை அமைக்க முடியாது.

இந்த நிலையில் மேஜர் 4th-தான F மேஜருக்கும், மைனர் 2nd-ஆன D மைனருக்கும் காசு கட்டினால் கொஞ்சம் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. (அவை இரண்டும் ரிலேட்டிவாக மேஜர் – மைனர் என்று இருப்பதை இங்கே கவனிக்க வேண்டும்). இன்னும் மெனக்கெட்டால் C மைனர் 6th த்திலும் C மைனர் Added 9-த்திலும்ஒளிந்திருக்கும் பஞ்சமத்தை நீக்கி ஒரு புது வகையான வார்ப்பில் சேர்த்துக் கொள்ளலாம்

ஆனால் இதை கையாண்டு கார்டு அமைக்க தில் வேண்டும். அந்த துணிச்சல் இருப்பதால்தான் இந்தப் புது முயற்சி- ராஜா இதை எப்படி எதிர்கொள்கிறார் பாருங்கள்.

இப்படிப்பட்ட ஒரு பெரிய வேகத்தடை இருந்தாலும் பின்னால் ஒளிந்திருக்கும் கார்டுகளை தூசி தட்டி துலக்கி முன்னால் எடுத்து வந்து ரூட் கார்டை அமைக்கிறார். தன் முத்திரையான ரிதம் கிடார் பேக்கிங்கைக் கொடுத்து முட்டுக் கொடுக்கிறார்.

அவர் ஒரு முன்னோடியல்லவா, இப்படி கிடைக்கும் சிறு அவகாசத்தையும் சரியாகக் கையாண்டு, மாற்று திறனாளிகளுக்கான விசேஷ ஒலிம்பிக் பந்தயத்தில் ஓடுவது போல் தன்மீது திணிக்கப்பட்ட தடைகளையும் தூக்கிக்கொண்டு அவர் கடைசி மைல் வரை செல்வதால் கிடைப்பதுதான் இந்தப் பாடல்.

கேட்பவரைக் கட்டிப் போடுகிறது என்பது மட்டுமில்லை இந்த பாடலின் தனித்தன்மை. ஆபோகி ராக அடிப்படையில் இசையமைக்கப்பட்ட பிற பாடல்களை அடையாளம் கண்டு கொள்ளும் உரைகல்லையும் நமக்குத் தருகிறது இது. ஆபோகி ராகத்தைப் பிடிக்க ஆசைப்படுபவர்களுக்கு இது ஒரு லாக் புக் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ரெபரன்ஸ் பாடல் இது.

இந்தப் பாடலில் உள்ள இன்னொரு புதுமையைச் சொல்ல வேண்டும். இன்டர்லூடுகளில் ஒன்றில் முக்தாயி ஸ்வரத்தனமான அமைப்பு வருகிறது பாருங்கள். இரண்டாம் இடையிசை முழுக்க ஆபோகி ஸ்வரங்கள்தான், பாடகி பாடப் பாட அது அத்தனையும் வீணையில் மீண்டும் வாசிக்கப்படுகின்றன.

வீணையைப் பற்றிப் பேசும்போது அதன் தந்திகளில் ஆபோகி மேலும் கீழும் சஞ்சரிப்பதில் உள்ள அழகை என்னவென்று சொல்வது – எங்கே போனாலும் எப்போதும் ஷட்ஜத்தில் வந்து லாண்ட் ஆகிறது, உடனே ஒன்று விட்டு மறு தடவை என்று விட்டு விட்டு தன் மேல்ஸ்தாயி ஜோடியுடன் இழைகிறது.

பாச்சா என்று அன்போடு அழைக்கப்படும் வீணை பார்த்தசாரதிதான் ராஜாவின் பாடல்களில் பலவற்றுக்கு வீணை வாசித்தவர். இந்தப் பாடலுக்கு வாசிப்பது அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருந்திருக்கும், ஆனால் அதில் எவ்வளவு தெளிவாக வெற்றி பெற்றுவிடுகிறார் பாச்சா. உங்கள் மனதில் இந்தப் பாடல் மகிழ்ச்சியை நிறைக்கிறது என்றால் அதற்குக் காரணம் அவரது வீணையின் ஸ்வரங்கள்தான்.

ட்யூனின் ‘திஸ்ர’ நடையோடும், தாளத்தில் மேல்காலத்தோடும் சேர்ந்து ஒலிக்கும் இந்தப் பாடல் ஃபாரல் வில்லியம்ஸ் இசையை விட ஆனந்தமாக இருக்கிறது!

இது போன்ற ஒரு உன்னதமான கர்நாடக இசையைக் கேட்கும்போது இளையராஜா என்ற இந்த மனிதர் இரு கைகளையும் ஒரே வேகத்தில் கையாள்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது (ஏன், பன்னிரு கைகளாலும் இசையைக் கையாள்கிறார் என்றுகூடச் சொல்லலாம்!).

வெவ்வேறு இசை மரபுகளில் பாடல்களுக்கு இசையமைக்கும்போது அந்தந்த மரபுக்குத் தக்க அழகுணர்வு குலையாமல் நெருக்கமாக இசையமைப்பவர்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். பாபநாசம் சிவன் காலம் முதற்கொண்டு சி ஆர் சுப்பராமன் காலம் தாண்டி கே வி மகாதேவன் வரை முழுக்க முழுக்க கர்நாடக ராக அடிப்படையில் ஒரு பாடலுக்கு இசையமைப்பது திரை இசையில் பெருமைப்படக்கூடிய சாதனையாக இருந்து வந்திருக்கிறது.

இந்தச் சாதனையைச் செய்து காட்டியவர்களில் இளையராஜாவுக்குத்தான் இந்தப் பெருமை இன்றும் உண்டு. அவரால் மட்டுமே இது போன்ற முழுமையான செவ்வியல் தன்மை கொண்ட பாடல்களை இன்றும் இசையமைக்க முடிகிறது.

உங்களுக்கு இளையராஜாவை பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். ஆனால் இதை மறுக்க முடியாது. இதுதான் உண்மை.

(ஆபோகி மட்டுமல்ல, இளையராஜாவின் இசையும் கொஞ்சம் அசந்தால் சாமர்த்தியமாக மண்ணைக் கவ்வச் செய்துவிடுகிறது என்று தன் வாசிப்பனுபவத்தைக் குறிப்பிடுகிறார்  விக்கி!)

One comment

  1. ஆகா!

    உங்கள் கைகளை கண்களில் ஒற்றிக்கொள்ளவேண்டுமைய்யா.

    திஜா சிறுகதை ஒன்று: திருவைய்யாற்றில் பாடிவிட்டு வித்வான் ஒருவர் ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கிறார். அந்த போதையில் அப்பெண்ணை தியாகராசர் பாடல் ஒன்றிற்கு இணையாய் ஒப்பிட்டு உளறுகிறார். அந்தப்பெண்மணி அவரை “லகரியில் எதை எதனுடன் ஒப்பிடுவது என்ற வரையறை வேண்டாமா” என்றும் இன்னும் பலவாறும் ஏசிவிட்டுப் போகிறார்.

    மேற்கண்ட தவற்றைச் செய்யும் சாத்தியம் இருந்தாலும் – “சபாபதிக்கு வேறு தெய்வம்” என்ற கோபாலகிருட்டினபாரதியின் பாடலைக் கேட்டுவிட்டு அதைவிட ஆபோகியில் என்ன செய்துவிடமுடியும் என்று தியாகராசர் ‘இனி ஆபோகியில் பாடலெழுதுவதில்லை’ என்று உறுதிபூண்ட கதை ஒன்றுள்ளது – ஆபோகியில் இன்னும் இன்னும் இன்பங்கள் இருக்கின்றன என்று இராசா இயற்றிக்காட்டிவிட்டார்.

    என் மனதிற்கு மிக நெருக்கமான பாடல் இது. இந்த இராகமும்.

    ‘எங்களூர் சங்கீத சபா’ என்ற கல்கியின் சிறுகதையில் ‘ஆபோகி அனந்தராமன்’ என்கிற பாத்திரம் வரும். ”அவரிடம் ’உங்களுக்குச் சுதந்திரம் வேண்டுமா ஆபோகி வேண்டுமா’ என்று கேட்டால் ’ஆபோகியே போதும்’ என்று சொல்லிவிடுவார்”. என்னைக் கேட்டாலும் அப்படியே சொல்லுவேன்!

    அந்த முதல் இண்டர்லூடில் வரும் சாரங்கியிசை மயக்கம் வரச்செய்வது. ஆபோகி ஆனந்தத்தின் உச்சத்தை மேல் ச்தாயி ‘மக மக’ என்று அது காட்டும் தருணம் புல்லரிக்கச்செய்வது. இராசாவின் சுபபந்துவராளி பாடலான ‘வைகறையில்’ சரணத்தில் “உன் நினைவே எனக்கோர் சுருதி” என்ற வரிக்குப் பிறகு வரும் வீணையின் ஒற்றை மீட்டல் இதயத்தை அழுத்தும். அம்மாதிரியே இந்தச் சாரங்கியும் எப்போதும் ஒரு இன்பமான வலி வரச்செய்வது.

    நீங்கள் சொன்னது போல வீணை வாசித்தவர் அனுபவித்துச் செய்திருக்கிறார்.

    இந்தப் பதிவில் வரும் ஒளித்துண்டில் பியானோ வாசிப்பது நீங்களே என்று நம்புகிறேன். முதலில் சொன்னதுபோல உங்கள் கைகளை…

    ம்ம். இன்றைய பொழுதிற்கான பின்னணி கிடைத்தது. இனி நாள் முழுதும் ஆபோகியே

    மிக்க நன்றி!

Leave a reply to கண்ணன் Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.