பாரிஸ் ரிவ்யூ தளத்தில் டெபோரா ஐசன்பெர்க் அளித்த நேர்முகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு பகுதி:
நான் எதையும் நினைத்துக் கொண்டு எழுதத் துவங்குவதில்லை.
கதை பண்ண முடியும் என்பதால்தான் தனக்கு கதை எழுதப் பிடித்திருக்கிறது என்று கோல்சன் வைட்ஹெட் ஒருமுறை சொல்லக் கேட்டேன். எனக்கு கதை பண்ணுவது அறவே பிடிக்கவில்லை என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.
அல்லது, எனக்கும் கதை பண்ண பிடித்திருக்கலாம், ஆனால் இல்லாத ஒன்றைக் கதை பண்ணுவதாக ஒரு உணர்வு வருகிறதே அந்த உணர்வை நான் வெறுக்கிறேன் என்பதுதான் உண்மையாக இருக்கலாம். நான் எழுதுவது நினைவின் நிலையை அடையும்வரை அது எவ்வகையிலும் முடிவடைந்த உணர்வு எனக்கு கிடைப்பதில்லை.
என்னிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு முழுமை இப்போது வெளிப்படுகிறது என்ற உணர்வு வர வேண்டும், அப்போதுதான் அது எனக்கு கதையாகிறது. எல்லாமே ஒரே சமயத்தில் வேலை செய்தால்தான் உண்டு.
அப்படியானால், முடிவடையும் கட்டத்தில், அந்த ஒரு குறிப்பிட்ட கணத்தில்தான் கதையை அதன் முழுமையான வடிவில் நீங்கள் பார்க்கிறீர்களா?
கட்டக் கடைசியில்தான். கடைசி வரைவு வடிவின் கடைசி வரியின் கடைசி வார்த்தையை எழுதி முடிக்கும்வரை நான் எழுதுவதில் எதுவும் வேலைக்காகுமா ஆகாதா என்று எனக்குத் தெரிந்ததே இல்லை. சரியாகச் சொன்னால், அதுகூட கடைசி டிராப்ட் இல்லை. கதையின் இறுதி வரைவு வடிவம் என்று நான் அப்போது நினைத்துக் கொண்டிருப்பதுதான் அது.
பொதுவாகச் சொன்னால், எப்போதும் இறுதி வடிவம் என்று நான் நினைத்துக் கொண்டிருப்பதை எழுதி முடித்தபின் என் மனதில், எல்லாம் இருக்க இதை ஏன் எழுத வந்தேன் என்ற கேள்வி எழுகிறது. அதன்பின்தான் என்னால் கதையின் உண்மையான இறுதி வடிவை அடைய முடிகிறது.
ஆனால் அந்த இறுதி வடிவுக்கு முந்தைய வடிவை எழுதிக் கொண்டிருக்கும்போது அதன் முடிவுக்கு வரும்போது எல்லாமே ஏதோ ஒன்றை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்ற ஒரு உணர்வு வருகிறது – இலக்கை நோக்கிச் செல்லும் ஒரு அம்பாக மாறிக் கொண்டிருக்கிறது கதை என்ற உணர்வு அது.
அது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கும்.
ஆமாம், அது அப்படிதான் இருக்கிறது.
எப்போதும் ஒரு கதையை எழுத எனக்கு மிக மிக நீண்ட காலம் தேவைப்படுகிறது. என் கடைசி புத்தகத்துக்கும் அதற்கு அடுத்த கதைக்கும் இடையே மூன்று ஆண்டு கால இடைவெளி இருந்தது. அந்த சமயத்தில் என்னால் ஆர்வமாய் எதையுமே செய்ய முடியவில்லை. அப்போது பெரும்பாலான சமயம், வெறுமே உட்கார்ந்திருக்க பைத்தியம் பிடித்தது போலிருக்கும். ஆனால் கடைசியில் ஒவ்வொரு கதையின் முடிவிலும் இரண்டு மூன்று அருமையான வாரங்கள் அமைந்தன.
உங்களுக்கு கதை பண்ண பிடிக்காது, ஆனாலும் எங்கேயாவது துவங்கியாக வேண்டும், இல்லையா? அப்படியானால் எப்படி உங்களால் எழுத முடிகிறது?
எனக்கே இது கொஞ்சமும் புரியவில்லை. எப்படி என்று கேட்டால் என்னால் எதுவும் விளக்க முடியாது, காரண காரியங்கள் சொல்ல முடியாது.
கற்பனை என்று சொல்கிறார்கள் அல்லவா, அது எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் தூங்கும்போது, “ஐயோ! என்ன கனவு காண்பது என்று எதுவும் தோன்றவில்லையே!” என்று தலையைச் சொறிந்துகொண்டு உங்கள் கனவு ஆரம்பிப்பதில்லை!
உங்கள் கதைகள் நீங்கள் கவனிக்கும் விஷயங்களில் துவங்குகின்றனவா?
புற விஷயங்களை நான் எந்த அளவுக்கு கவனிக்கத் தவறுகிறேன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது.
பல விஷயங்களையும் கவனித்து அவற்றைப் பற்றி கேள்வி கேட்பவர்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. நான் சில தகவல்களை உள்வாங்கிக் கொள்கிறேன் என்பது உண்மைதான், ஆனால் அதெல்லாம் எங்கே போகிறது என்று தெரியவில்லை. நிச்சயம் அவை என் மூளையில் ஏறுவதாய் இல்லை.
வார்த்தைகளைத் திருத்தித் திருத்தி எழுதும்போதுதான் கதை தன்னை இன்னதென்று உங்களிடம் வெளிப்படுத்திக் கொள்கிறதா?
மிகச் சரியாகச் சொன்னீர்கள். சில சமயம் நான் வாய் திறக்கும்போது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதும் உண்மைதான்.
எப்படியாவது உங்களை வெளிக்காட்டிக் கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். நம் காலத்தின் குற்றங்களில் ஒன்று நாம் நம் ஆற்றல்களை தேவையில்லாத ஆட்களிடம் குவித்து வைக்கிறோம் என்பதுதான். அதைவிட மக்களுக்கு கல்வியறிவு அவசியமாக இருக்கிறது – அதற்காக நான் அவர்களை கோட்பாட்டுக் கைதிகளாக்க வேண்டுமென்று சொல்வதாக அர்த்தமில்லை. விழிப்புணர்வு தேவைப்படுகிறது, அப்போதுதான் அவர்கள் தங்கள் மானுடத்தைப் பிறரை நோக்கி விரித்து அணைத்துக் கொள்ள முடியும்.
உயிரோடிருப்பதன் சுகம் அதுதான்.
எழுதுவது குறித்து உங்களக்கு இருக்கும் மனத்தடையை எவ்வாறு வெற்றி கொள்கிறீர்கள்?
ஒன்று, ஒரேயடியாக விட்டொழிக்க வேண்டும். அல்லது இறுதி வரை போராடியாக வேண்டும். அதுதான் எனக்கு இருக்கும் ஒரே தேர்வு. பொறுமை தேவைப்படுகிறது.
சரி, பென்சிலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள், அப்புறம்…
நீங்கள் எதையாவது எழுதுகிறீர்கள். அப்போது அதில் கொஞ்சம்கூட மெய்ம்மை இருப்பதில்லை. அந்த மாதிரி சமயத்தில் எந்த மெய்ம்மையையும் உங்களால் செயற்கையாகப் புகுத்த முடியாது. பொறுமையாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அப்புறம், ஒரு நாள் பார்த்தால் அதன் அந்தராழத்தில் உள்ள மறைவிடத்திலிருந்து ஏதோ ஒன்று உங்களை நோக்கி சமிக்ஞைகள் அளிப்பதை நீங்கள் உணர முடிகிறது. பூமி அதிர்ச்சியின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட ஒரு அற்ப மனிதனைப் போன்ற ஒன்று அது. மெல்ல, மெல்ல, மெல்ல, மிக மெல்ல நீங்கள் அந்த உயிர்த்துடிப்பை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டு முன் செல்கிறீர்கள். பல எழுத்தாளர்கள் இதைக் குறுகிய காலத்தில் செய்கிறார்கள்.
ஆனால் எழுதும்போது நிகழும் கோடிக்கணக்கான நனவிலி இயக்கங்களின் வழியாக விஷயங்கள் மெல்ல மெல்ல மெய்ம்மையின் திட்பம் பெறுகின்றன.
அந்த உயிர்ப்பின் சன்னமான மணம் பிடிபட்டபின் என்ன நடக்கிறது?
அதற்கப்புறம் கொஞ்ச காலத்துக்கு பயங்கரமாக குழப்பும் விஷயத்தை வைத்டுக்க் கொண்டு திண்டாடுகிறேன். இது என்ன, இது என்ன, இதெல்லாம் என்ன என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஹாம்ஸ்டரைப் போல் வேலை செய்கிறேன் – இது நன்றாக இருக்கிறது, இந்த வைக்கோலை எடுத்துக் கொள்ளலாம். இது சரியில்லை, கூட்டைவிட்டு தூக்கிப் போடு.
சில விஷயங்கள் சரியாக வரும் என்று ஒரு உணர்வு. இந்த உணர்வு இன்னதென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இது எப்படி என்று எனக்குத் தெரியாமல் இருக்கலாம், ஏன் என்று எனக்குத் தெரியாமல் இருக்கலாம் – ஆனால் மையத்தில் இருக்கும் ஏதோ ஒன்றோடு எப்படியோ தொடர்பு உள்ள ஒரு விஷயம் இங்கே இருக்கிறது என்று என்னால் சொல்ல முடிகிறது.
இதையெல்லாம் வார்த்தைகளில் சொல்கிறேன், ஆனால் எழுதி முடித்தபின் இதெல்லாம் எப்படி வந்தது என்று எந்த நினைவும் எனக்கு இருப்பதில்லை. இது ஒரு மாதிரியான எடுப்பு, ஒரு வகைப்பட்ட உயிர்த் துடிப்பு என்று சொல்லலாம்.
உங்கள் கதைகள் அவ்வளவு துல்லியமாய் இருக்கின்றன. ஆனால் அவற்றை எழுதும்போது எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை.
எந்த ஒரு சிறுகதையிலும் குறிப்பிட்ட சில கூறுகளை இறுக்கமான கட்டுக்குள் வைத்திருக்கும் உணர்வு எனக்கு உண்டு. மெய்ம்மை குறித்த தீர்மானமின்மை இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், ஆனால் மொழியிலோ அறிவார்ந்த பார்வையிலோ தெளிவின்மை இருப்பதை விரும்பவில்லை. காற்றைப்போல் ,மெலிதான மிக நுட்பமான அனுபவத்தை எவ்வளவு தெளிவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பது என் நோக்கமாக இருக்கிறது. இரு திசைகளிலும் முயற்சிப்பது.
எனவே ஒரு வாக்கியத்தில் ஏதாவது தெளிவில்லாமல் இருந்தால் நான் அதைச் சுத்திகரிக்கப் பார்க்கிறேன். தேவையில்லாத ஏதாவது இருக்கிறதா என்றும் என்னால் சொல்ல முடிகிறது.
உலகம் புரிந்து கொள்ள முடியாதது, நடப்பதெல்லாம் புரிந்து கொள்ள முடியாதவை. ஒரு படிகத்துக்கு உரிய முழுமையான தெளிவு இல்லாமல் என்னால் அதன் மர்மத்தை அணுகத் துவங்கவே முடியாது. எழுத்தின் வெளிப்பாடு தெளிவாக இருப்பதை என்னால் தீர்மானிக்க முடியும். சொற்கள் புரிந்து கொள்ளப்படக் கூடியவையாக இருக்க வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியும். இதை எவ்வளவு நன்றாகச் செய்ய முடியுமோ அவ்வளவு நன்றாகச் செய்கிறேன்.
அப்போதுதான் காகிதங்களை உண்மையான மர்மங்கள் நிறைக்க முடியும்.
காலம் செல்லச் செல்ல எழுதுவது சுலபமாக மாறியிருக்கிறதா?
எழுதத் துவங்கும்போது சிறுபிள்ளைத்தனமான, தேர்ச்சியற்ற, நயமில்லாத விஷயங்களை சந்தேகப்படாமல் நம்பிச் செய்தது இப்போதும் மனதைக் குலைப்பதாக இருக்கிறது.
எழுத்தாளராக அனுபவப்பட்டிருப்பதில் ஒரு சாதகமான விஷயம் உண்டு.
எந்த ஒரு எழுத்தாளனுக்கும் எழுத்து அனுபவத்தால் பெரிய பிரயோசனம் கிடையாதுதான், உண்மையைச் சொன்னால் இதைத் தவிர வேற எதையும் அனுபவத்தால் வந்த நன்மை என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை – எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதை மேம்படுத்த முடியும் என்ற புரிதல் இப்போது இருக்கிறது. அப்படி திருத்தி எழுதியதை இன்னும் மேம்படுத்தலாம், அப்புறம் மறுபடியும் மேம்படுத்தலாம்.
இப்படிச் செய்து மோசமான ஒரு கதையை நல்ல கதையாக மாற்ற முடியாமல் போகலாம், ஆனால் இப்போது இருபபது போல் கடைசியில் இருக்கப் போவதில்லை என்று தெரிகிறது.
முன்னிருந்ததற்கு இப்போது எழுதுவது எந்தவ வகைகளில் கடினமாக இருக்கிறது?
ஆமாம், பல்வகைகளில்.
ஆனால் இது வயது சம்பந்தப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. அனுபவத் தொடர்புடையது.
ஒன்று பார்த்தால், ஒரு விஷயத்தை சாதித்து முடித்தபின் அதை மீண்டும் செய்வதற்கு இடமில்லை – அதை முடித்தாயிற்று. அந்த வெற்றிடத்தில் வேறு லட்சியங்கள் இப்போது இருக்கின்றன, ஆனால் அவை இன்னமும் பெரிய லட்சியங்கள்.
உங்கள் லட்சியங்கள் என்ன?
அது என்னவென்று என்னால் முழுசாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எனக்கு இது தெரிகிறது – சொற்களில் கொண்டு வர முடியாத அந்த ஏதோவொன்றை, நான் என் கதைகளைக் கொண்டு அளிக்க விரும்பும் அந்த உணர்வு சொற்களின் வழி வந்தாலும், வாசகர்கள் அதைச் சொற்களுக்கு அப்பால் கண்டுணர வேண்டும் என்று விரும்புகிறேன்,
வாசகருக்குத் தன் வாசிப்பு அனுபவத்தில் நேர்வதை நீங்கள் சொற்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? அல்லது வாசகர்கள் சொற்களுக்கு என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைச் சார்ந்த அனுபவமா இது?
ஒரு வகையில் பார்த்தால், வாசக அனுபவத்தை மிக இறுக்கமாக என் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவேன். ஆனால், என்னோடு வாச்காரும் இணைந்து அந்த அனுபவத்தை அடைய விரும்புகிறேன். எனக்கு மிகக் குறைவான வாசகர்களே இருப்பதற்கு இது ஒரு காரணம் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது.
பலரும் தங்கள் மனதை என்ன செய்வது என்று சரியாகச் சொல்வதற்கு ஒருத்தர் இருக்க வேண்டும் என்பதற்காகப் படிக்கிறார்கள். எனக்கு அப்படியெல்லாம் படிப்பது பிடிக்காது என்றில்லை. இப்போதுகூட ட்ரொல்லப்பின் The Way We Live Now வாசித்துக் கொண்டிருக்கிறேன், அதை கீழே வைக்க முடியவில்லை. ஆனால் கதை என்ன சொல்கிறதோ அதற்கு வெளியே அதில் எதுவுமில்லை. இதை வாசிக்கும்போது அருமையான கதைசொல்லலில் கிடைக்கும் ஆனந்தத்தை நான் அனுபவிக்கிறேன்.
ஆனால் ஒரு எழுத்தாளராக, எனக்கு கதை சொல்வதில் அந்த அளவுக்கு முனைப்பு இல்லை. கதையில் அக்கறை இருக்கிறது, அது இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்கு இரண்டாம்கட்ட முக்கியத்துவம் அளிக்கவே விரும்புகிறேன். ஏன், முடிந்தால் அதைக் காகிதத்திலிருந்து சுரண்டிக்கூட எடுத்துவிடுவேன். அது தன் தடத்தை விட்டுச் சென்றால் போதும் – அதன் உருவத்தை, அதன் அசைவை விட்டுச் சென்றால் போதும். எனக்கு கதை என்பது வாசகனை வேறொன்றுக்குச் கொண்டு செல்லும் கருவி.
வாசக பங்களிப்பைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்லுங்களேன்.
ஒரு புனைவு என்பது தகவல் பரிமாற்றம். உங்கள் பாலைவனத் தீவிலிருந்து ஒரு பாட்டிலில் அவசரச் செய்தியை அனுப்புகிறீர்கள். யாராவது அந்த பாட்டிலை எடுத்து திறந்து பார்த்து, எஸ்…ஓ…எக்ஸ்? இல்லை. எஸ்… ஓ… என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.
ஆனால் அந்த வாசகன் கண்டெடுத்த செய்தி நீங்கள் அனுப்பிய செய்தியாக அப்படியே இருக்க முடியாது. ஒரு எழுத்தாளர் எழுதி அனுப்பும் சொற்தொகுப்புக்கு ஒரு ஆள் தேவைப்படுகிறது, மறுமுனையில் ஒரு பிரக்ஞை தேவைப்படுகிறது. அதைத் திரும்பச் சேர்த்து கூட்டி வாசிக்க யாராவது இருக்க வேண்டும்.
உங்கள் மூளையில் உள்ள, சீல் செய்யப்பட்ட அந்தச் சிறிய சன்னப் பையை பிரிக்கும் ஏதோ ஒன்றை வாசிக்கும்போது எப்படி இருக்கும், அது உங்களுக்கே தெரியும். இது உங்களுக்கு நீங்களே எழுதிக் கொள்ளும் கடிதம். ஆனால் அதைக் கொண்டு வந்து தருவது வேறொருத்தர், ஒரு எழுத்தாளர்.
உண்மையான ஒரு வாசகர், துல்லியமாகவும் சுறுசுறுப்பாகவும் உங்கள் படைப்புக்கு எதிர்வினையாற்றும் வாசகர் ஒருவர் உங்களுக்கு இருக்கிறார் என்று அறிவதைவிட தெம்பு அளிப்பது வேறு எதுவும் இல்லை. அது உங்களுக்குத் துணிச்சல் தருகிறது. இனி இந்தக் கிளையில் இன்னும் கொஞ்சம் மேலே போகலாம் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இது உடையாது.