தேவை என்றழைத்ததற்காக, தன்னிகழ்விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி அழைத்தது தவறென்றால், தேவையிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மகிழ்ச்சியே, தயவு செய்து நான் உன்னை உரிமை கொண்டாடுவதற்கு கோபித்துக் கொள்ளாதே.
மரித்த என்னவர்களே, என் நினைவுகள் மெல்ல மறைவதைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
நொடிதோறும் காணத்தவறும் உலகனைத்துக்கும் காலத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அண்மையே முதன்மை என்று நினைத்தமைக்காக, கடந்தகால நேசங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தொலைதூர யுத்தங்களே, நான் பூக்களோடு வீடு திரும்பியதை மன்னித்துவிடுங்கள்.
ஆறாத ரணங்களே, என் விரலைக் காயப்படுத்திக் கொண்டதை மன்னித்துவிடுங்கள்.
என் மெல்லிசைத் தொகுப்புக்காக, ஆழங்களில் கரைபவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இன்று காலை ஐந்து மணி உறக்கத்துக்கு, ரயில் நிலையங்களில் காத்திருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
விரட்டியடிக்கப்பட்ட நம்பிக்கையே, அவ்வப்போது நான் சிரித்ததை மன்னிக்க வேண்டும்.
பாலைவனங்களே, ஒரு தேக்கரண்டி தண்ணீருடன் உங்களை நோக்கி ஓடி வராததை மன்னியுங்கள்.
வல்லூறே, ஒவ்வொரு ஆண்டும் அதே போல், எப்போதும் அதே கூண்டில்,
எப்போதும் வெற்றுவெளியில் ஓர் புள்ளியில் குத்திட்டிருக்கும் உன் பார்வை,
என்னை மன்னிக்க வேண்டும், நீ பாடம் செய்யப்பட்டிருப்பது உண்மையானாலும்.
வெட்டப்பட்ட மரம், மேஜையின் நான்கு கால்களுக்காக என்னை மன்னிக்க வேண்டும்.
மாபெரும் கேள்விகள் அற்ப விடைகளுக்காக என்னை மன்னிக்க வேண்டும்.
உண்மையே, தயவு செய்து என்னைக் கொஞ்சமும் பொருட்படுத்தாதே.
கௌரவமே, கொஞ்சம் பெரிய மனதுடன் நடந்து கொள்.
இருப்பின் மர்மமே, புரளும் உன் ஆடையில் அவ்வப்போது. ஓரிழை நான் பறித்துக் கொள்வதைச் சகித்துக் கொள்.
ஆன்மாவே, அவ்வப்போதே நான் உன்னை அறிகிறேன் என்பதைத் தவறாய் புரிந்து கொள்ளாதே.
எக்கணமும் என்னால் எங்கெங்கும் இருக்க இயலாமைக்கு எல்லாமும் என்னை மன்னிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆணாகவும் பெண்ணாகவும் இருக்க இயலாமைக்கு எல்லாரும் என்னை மன்னிக்க வேண்டும்.
சாகும்வரை எனக்கான சமாதானம் கிடையாது என்பதை அறிந்திருக்கிறேன்,
என் பாதையில் நிற்பது நானேதான் என்பதால்.
சொல்லே என்னை வெறுக்காதே – கனமான வார்த்தைகளைக் கடன்பெற்று
அவை இலகுவாகத் தெரிய நான் கடுமையாய் உழைக்கிறேன் என்று.
விஸ்லாவா சிம்போர்ஸ்கா
தலைசிறந்த இந்தக் கவிதை வாழ்வு குறித்த ஒரு தியானம் போலுள்ளது. தனிமனிதனின் அந்தரங்க, அரசியல், சமூக வாழ்வைத் தனக்கே உரிய தனித்துவம் கொண்ட பாணியில் விஸ்லாவா விவரிக்கிறார்.
“அண்மையே முதன்மை என்று நினைத்தமைக்காக, கடந்தகால நேசங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”. “அடுத்தது அடுத்தது என்று வாழ்க்கையில் மேலே மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்,” என்று எத்தனை முறை பிறர் சொல்லக் கேட்டிருப்போம் – அதைத்தான் விஸ்லாவா இவ்வளவு அழகாகச் சொல்கிறார். அடுத்த வேலையைப் பார்க்கச் செல்கிறோமோ அல்லது முன்னேறுகிறோமோ எதுவாக இருந்தாலும் சிலரை விட்டுச் செல்ல வேண்டியிருப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. நெஞ்சம் மறப்பதில்லை என்றுதான் எல்லா காதலர்களும் தங்களுக்காகப் பிறர் ஏங்கிக் கொண்டிருக்க விரும்புகிறார்கள். பிறரிடம் நாம் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நம் மனம் ஒருவர் நம்மைக் கடந்து அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது ஏமாற்றமடைகிறது. வாழ்க்கையில் முன்செல்வது என்பது பழைய சுமைகளை இறக்கி வைத்தல், அதைச் செய்ய மனவலிமை இருக்க வேண்டும். நாம் அழிந்தாலும் பரவாயில்லை, சுமந்தாக வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.
“கௌரவமே, கொஞ்சம் பெரிய மனதுடன் நடந்து கொள்.” முதியவர் ஒவ்வொருவருக்கும் உள்ள கோரிக்கை இது. செம்மங்குடி சீனிவாச ஐயர் அவரது எண்பதுகளின் பிற்பகுதியில் நேர்முகம் ஒன்றில், “அநாயச மரணம், விநா தைன்யேன ஜீவனம்’ என்று கூறினார். “கணப்பொழுதில், வலியில்லாமல் மரணமடைய வேண்டும், யாரிடமும் எதையும் கேட்க வேண்டிய தேவையில்லாமல் வாழ வேண்டும்,” என்று இதைப் புரிந்து கொள்ளலாம். நமக்கு வயது கூடும்போது நாம் கௌரவமாக வாழ்வது கடினமாகிறது. ஒரு குழந்தையைப் போல் பிறரைச் சார்ந்திருக்க வேண்டியதாகிறது. ஆனால் குழந்தையை ஆசையுடன் பெற்றோர் கவனித்துக் கொள்கிறார்கள், வயதானவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை. விஸ்லாவா வாழ்க்கையிடம் கௌரவம் கோருகிறார், எனக்கு கொஞ்சம் தயவு காட்டு என்று கேட்கிறார்.
“மரித்த என்னவர்களே, என் நினைவுகள் மெல்ல மறைவதைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.” – சென்றவர்களை மறந்து உள்ளவர்களை கவனித்துக் கொள்ளதானே வாழ்வது? நம் நேசத்துக்குரிய ஒருவரின் மரணத்தை எதிர்கொள்வது மிகவும் கடினம், ஆனால் நாம் வாழ்ந்தாக வேண்டும். காலம் இரக்கமற்ற இயந்திரம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நினைவுகள் மங்கி மறைகின்றன.
விஸ்லாவா அந்தரங்க உணர்வுகளுடன் அரசியல், சமூக உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறார். என்ன விஷயம் என்பதுதான் நமக்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதிலும் இது தகவல் உலகம். இன்று உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அந்தச் செய்தி மறுகணமே நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது. ஆப்பிரிக்காவில் பஞ்சத்தில் இறப்பவர்களைப் பற்றி அறிந்திருக்கிறோம், நம் நகரங்களில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது செய்தியாகிறது, பல தேசங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெவ்வேறு யுத்தங்களில் சாகின்றனர், மனித உரிமைகளைக் கொடுங்கோலர்கள் முடக்குகின்றனர், தொழிலாளியின் வாழ்க்கைப் போராட்டம், என்று இன்னும் இதுபோல் எத்தனையோ விஷயங்கள் நமக்கிருக்கின்றன. இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும், “இதற்காக நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று நம்மைக் கேட்கின்றன.
இந்தக் கேள்வி நம்மில் பலரையும் பதட்டமடையச் செய்கிறது. நாம் பல்வேறு வகைகளில் இதற்கு பதில் சொல்கிறோம்: சிலர் தர்ம காரியங்களில் பங்கேற்கின்றனர், சிலர் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் மேம்பாட்டுக்கு உழைக்கின்றனர், சிலர் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு அரசியல் இயக்கத்தில் சேர்கின்றனர், இப்படியும் இன்னும் பலவும். சமூக ஊடகங்களில் அறச்சீற்றத்தை வெளிப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்பவர்களில் ஆரம்பித்து பெரும்பாலான மக்கள் புறவிவகாரங்களில் சொல்லத்தக்க எதிர்வினையாற்றுவதில்லை. அவர்களுக்கு வரவு செலவு கணக்கைச் சமன்படுத்தவே நேரம் போதவில்லை, ஏதோ கௌரவமாக வாழ்ந்தால் போதும் என்று இருக்கிறது. உலகெங்கும் மக்களுக்கு இந்தச் சங்கடம் உண்டு. நம்மையும் கவனித்துக் கொள்ளவேண்டும், சக மனிதனின் நலனையும் கவனித்துக் கொள்ளவேண்டுமென்றால் அது எப்படி முடியும்?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது எளிதல்ல. நாம் ஒவ்வொருத்தரும் தனிப்பட்ட முறையில் இது விஷயமாக தீர்மானம் செய்து கொள்ள வேண்டியதுதான். நாம் தர்மம் செய்யாவிட்டாலோ சமூக சேவை அமைப்பில் சேர்ந்து வேலை செய்யாவிட்டாலோ யாரும் நம்மைப் பற்றி எதுவும் தவறாக நினைப்பதில்லை. இந்த சமூக அக்கறை ஒரு சமூக தேவையாக இல்லை என்று தோன்றுகிறது. ஒரு சமயம் நமது குற்றவுணர்வுதான் இப்படி எல்லாம் நினைக்க வைக்கிறது எண்பது உண்மையாக இருக்கலாம்.
நகரங்களில், அதிலும் குறிப்பாக ஐடி துறையில் ஓய்வு நேரத்தில் இதுபோன்ற சமூக சேவையில் பலரும் ஈடுபடுவதைப் பார்க்கிறேன். தம்மைப் போன்ற பிறரையும் இப்படிச் செய்ய வேண்டும் என்று மறைமுகமாக நிர்பந்திப்பதால் இது நல்ல விஷயம்தான் என்று நினைக்கிறேன். நாம் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம் என்ற நிலையில் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், நவீன ஹைடெக் குருமார்கள் இந்த வெற்றிடத்தில் புகுந்து விடுகிறார்கள். இது நல்ல பலன் அளிக்கிறது எண்பது உண்மைதான், ஆனால் பெரும்பாலானவர்கள் இப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்து போகின்றனர். நம் குற்றவுணர்ச்சி பலருக்கும் பிழைக்கும் வழியை அமைத்துக் கொடுக்கிறது.
இதெல்லாம் ஏதோ நம்பிக்கை வறட்சியால் எழுதியது போலிருக்கிறதா? பலர் ஏமாந்தாலும், இந்தக் குற்றவுணர்ச்சியால் பலருக்கு லாபம் கிடைத்தாலும் இதுதான் நம்மை மனிதர்களாக வைத்திருந்து நாம் ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளாமல் காக்கிறது என்று நினைக்கிறேன். நம் அடிப்படை மனிதத்தன்மையின் வெளிப்பாடுதான் இந்த குற்றவுணர்வு. ஏதோ இந்த குற்றவுணர்வு முழுமையாக ஆக்கப்பூர்வமான சேவையாக மாறிவிடுவ்தில்லை எண்பது உண்மைதான். ஆனால் நம் ஒவ்வொருவரின் கருத்துக்கும் முக்கியத்துவம் உண்டு, இந்தப் பொதுக் கருத்துதான் இன்னமும் நியாயமான சமூகத்தை உருவாக்க உதவும் என்று நம்புகிறேன். ஆனாலும் விஸ்லாவா சொல்கிறார், உலகில் உள்ள அநீதிகளுக்கு எதிராக நாம் மிகச் சிறிய மாற்றத்தைதான் உருவாக்க முடியும். நாம் எங்கேயும் எப்போதும் இருந்து கொண்டிருக்க முடியாது – “எக்கணமும் என்னால் எங்கெங்கும் இருக்க இயலாமைக்கு எல்லாமும் என்னை மன்னிக்க வேண்டும்.”
“ஒவ்வொரு ஆணாகவும் பெண்ணாகவும் இருக்க இயலாமைக்கு எல்லாரும் என்னை மன்னிக்க வேண்டும்.” நாம் வாழ்ந்தாக வேண்டும், மரியாதையும் கௌரவமாக வாழ்ந்தாக வேண்டும் என்பதுதான் நம் போராட்டம். ஆனால் சமூகத்துக்கு நாம் என்ன செய்தோம் என்ற ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. அதை அவ்வளவு சுலபமாக சமாதானம் செய்து சரி பண்ண முடியாது. விஸ்லாவா சொல்கிறார், “சாகும் வரை எனக்கான சமாதானம் கிடையாது என்பதை அறிந்திருக்கிறேன்,/ என் பாதையில் நிற்பது நானேதான் என்பதால்.”
விஸ்லாவாவின் கவிதைகளில் அதிகமும் மேற்கோள் காட்டப்படும் கவிதை இதுவாகத்தான் இருக்கும். இதில் அவர் தனது கவிதையின் சாரத்தைக் கண்டுகொள்கிறார். இது போல் தங்கள் கவிதைப் பார்வையை வெளிப்படுத்திய கவிஞர்கள் மிகச் சிலரே. “சொல்லே என்னை வெறுக்காதே – கனமான வார்த்தைகளைக் கடன்பெற்று/ அவை இலகுவாகத் தெரிய நான் கடுமையாய் உழைக்கிறேன் என்று.”
உலகெங்கும் நிலவும் அநீதியை எதிர்கொள்ளும்போது ஓரளவுக்கு நாமும் இதைதான் செய்கிறோம். இதுபோன்ற கனமான விஷயங்களை எடுத்துக் கொண்டு அவற்றை லகுவாக அணுகப் போராடுகிறோம். அது சாத்தியப்படாதபோது, அகம் தன்னுள் ஒரு நரகம் புகுகிறது. விஸ்லாவாவின் பெருமை, அவர் சொற்களை இலகுவாக்கினார் என்பதுதான். அந்தச் சொற்களை நாம் நம் தோளில் சுமக்கும்போதுதான் அவற்றின் தாளமுடியாத கனத்தை உணர்கிறோம். இது விஸ்லாவாவின் மாயக் கலை. மானுடம் எதிர்கொண்ட காத்திரமான பிரச்சினைகளுக்கு புதுவெளிச்சம் பாய்ச்சியவர் அவர்.
தமிழாக்க உதவி – பீட்டர் பொங்கல்