மழை கொட்டிக் கொண்டிருந்தது. குடைகளின்கீழ் நடந்து சென்றவர்கள் இயல்பாய்ப் பெய்த மழையைச் சபித்தனர் – மழைக்காலம் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனால் ஒற்றைக் குடையின் கீழ் இணைந்து நடந்த அந்தச் சிறுவனும் சிறுமியும் மழையை ரசித்து அனுபவித்தனர். மழை, அவர்களுக்கென்று வாய்த்த வரமாயிருந்தது.
தோளோடு தோள் சேர்ந்து நடந்தனர். முறுவலித்து முகம் மலர்ந்திருந்தது. அவர்கள் மழையோடிருந்தனர்.
தனியாய்ச் சென்றவர்கள் இருவரையும் பார்த்துப் பொறாமைப்பட்டனர். பெரியவர்களால் சிரியவர்களின் மகிழ்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாது – அந்தப் பெண்ணும் பையனும் ஒருவர் மீதொருவர் கொண்டிருந்த அன்பை அனைவரும் அறிய வெளிப்படுத்திச் சென்றனர்.
யாரும் இது குறித்த தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. சீக்கிரம் வீடு போய்ச் சேர்ந்தாக வேண்டும்.
இப்போது மழை கொஞ்சம் குறைந்திருந்தது. இதையுணர்ந்த இருவரும் விளையாட்டைத் தணித்துக் கொண்டு, போக்கிடம் நோக்கி விரையலாயினர். இப்போது அவர்கள் ஏறத்தாழ முழுக்கவே நனைந்திருந்தனர். மழையிலும் காற்றிலும் மெல்ல நடுங்கினர், குளிரெடுத்து.
மழை இன்னும் தணிந்து தூறலாயிற்று. சாலையில் எவருமில்லை. மழை பெய்தபின் எப்போதும் சாலையில் எவரும் இருப்பதில்லை. அனைவரும் தம் போக்கிடங்களை அடைந்து விடுகின்றனர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அல்லது, மழை நீரைத் தப்ப ஒரு புகலிடம் எல்லாருக்கும் கிடைத்து விடுகிறது.
இப்போது, தூறல் இன்னும் தணிந்து இங்குமங்கும் சொட்டக் கண்டனர். மழை மேகங்கள் வேறெங்கோ சென்று கொண்டிருந்தன. இன்னும் சற்று நேரத்தில் சூரியக் கதிர்கள் எரியம்புகளாய்க் கிளம்பும்.
விளையாட்டுத்தனம் போன இடம் தெரியவில்லை. தங்கள் நினைப்புகளுக்குத் திரை போட்டு ஓட ஆரம்பித்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கதிர் விழத் துவங்கிற்று.
சாலைக்கு யாரும் வரவில்லை. அந்தப் பெண் முந்தியோடினாள், முனை திரும்பினால் போதும். பின்விளைவுகளை நன்கறிந்த அந்தப் பையனும் அவளைத் துரத்திச் சென்றான்.
போக்கிடத்துக்கு ஐம்பது மீட்டர் தொலைவில் மழை நின்றது. சூரியக் கதிர்கள் சுட்டெரிக்கத் துவங்கின. போக்கிடத்துனுள் புகுந்தபின் மடக்கிய குடையில் துளைகள் விழுந்திருந்தன.