80களில் தங்கள் கல்லூரிப் பருவத்தினை கடந்தவர்களுக்கு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஒரு அச்சுறுத்தும் அன்றாடச் சொல். இன்று உள்ளது போல் தொழில்நுட்ப கல்லூரிகள் அன்று இல்லை. உயர்கல்வி என்றால் அது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்தான். இவை எதுவும் தொழிற்பயிற்சி அளிக்கும் கல்வி அல்ல. அரசு வேலை வாய்ப்பும் குறைவு, தனியார் துறை வளர்ச்சியிலும் தேக்கம் என்றிருந்த அந்த நாட்களில் படித்து முடித்ததும் வேலை கிடைக்க, பரிந்துரை அவசியப்பட்டது. அப்படிப்பட்டவர்களின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு வேலைக்கான நேர்முகம் என்பது ஒரு சிம்மசொப்பனமாக இருந்தது. பணியிடம் சார்ந்த கல்வியும் அளிக்கப்படவில்லை, நேர்முகத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இல்லை, தெரிந்தவர்கள் இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்ற அவநம்பிக்கை- கல்விக்குப்பின் எங்கே வேலை செய்வது என்பதல்ல, என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்விதான் அன்று ஒவ்வொரு பட்டதாரி வாலிபன் தூக்கத்தையும் கெடுக்கும் கவலையாக இருந்தது. இந்த நாளைய “காம்பஸ்“ அல்ல, அது ஒரு வாழ்வா சாவா பிரச்னை.
80களின் ஏராளமான திரைப்படங்களில் நேர்முக காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்நேர்முகங்களில் இடம்பெறும் அபத்தமான, நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாத கேள்விகள், அவற்றைத் தொடுக்கும், அந்த அகலமான மேஜைகளுக்குப் பின் அமர்ந்திருக்கும் இறுக்கமான முகங்கள்- கோபக்கார கதாநாயகன் இந்த நாடகத்தைப் பழித்தபடி ஆத்திரத்துடன் வெளியேறும் காட்சிகளும் நிறைய உண்டு. ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘பாலைவனச் சோலை’ போன்ற பல படங்களை இங்கு நினைவு கூரலாம்.
80களின் தமிழ் இலக்கியத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு தனக்குள் சுருங்கி வெதும்பி துயருறும் வாலிபர்கள் நிறையவே உண்டு. அவற்றில் பல கதைகளும் அந்தப் பிரச்னையால் உருவாகக்கூடிய லௌகிக விளைவுகளை பேசின. வண்ணநிலவனின், ‘கரையும் உருவங்கள்’ போன்ற சில கதைகள், அக்கால இளைஞர்களின் எதிர்வினைகளை உளவியல் ரீதியாகவும் வெளிப்படுத்தின. ஆனால் அந்த வகை கதைகளில் தனித்து நிற்கும் ஒன்று.. ஆதவனின் “இன்டர்வியூ” என்றே பெயர் கொண்ட ஒரு சிறுகதை
ஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதுவும் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை, சொல்லப்போனால், இன்டர்வியூ என்ற ஒரே ஒரு சம்பவத்தைத்தான் விவரிக்கிறது. சுவாமிநாதன், சிறுவனாக தன் தந்தையுடன் கடைத்தெருவில் நடக்கும்போது, அவர் அவனுக்கு ஐஸ்க்ரீம் வேண்டுமா என்று கேட்கிறார். நான் என்ன குழந்தையா என்கிறான். அவர் சிரிக்கிறார். அப்போது அடிக்கிறது அலாரம். ஆம், அது ஒரு கனவு. அவனுக்கு இப்போது அந்தத் தந்தை இல்லை. மேலும், அன்றைய தினம் ஒரு இன்டர்வியூவும் இருக்கிறது. ஒரு வேலையில்லா இளைஞன் தன் வீட்டில் செய்யக்கூடிய அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அப்பாவின் நண்பர் ஒருவரிடம் நன்னடத்தைச் சான்றிதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு அவரது காரிலேயே இன்டர்வியூ நடக்கும் கம்பெனிக்குச் சென்று நேர்முகத்தில் பங்கேற்றபின் திரும்ப வரும் வழியில் ஒரு சினிமாவை பாதி பார்த்துவிட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பதில் முடிகிறது கதை.
கதை இரண்டு தளங்களில் பயணிக்கிறது. ஒன்று சுவாமிநாதனின் நேர்முகம், அங்கே அவன் காணும் மற்ற இளைஞர்கள், நேர்முக அறைக்குள் நுழையும் முன்பு நடைபெறும் கலாட்டா பேச்சுக்கள், நேர்முகத் தேர்வு ஏற்படுத்தும் இறுக்கமான உணர்வு, அது முடிந்த பின்னர் ஏற்படும் ஒரு விடுதலை உணர்வு என்று ஒரு தளம். கூடவே சுவாமிநாதனின் எண்ணவோட்டங்களின் மூலமாக அவனது நிலையையும், வீட்டில் அவன், அவன் அம்மா மற்றும் அக்காவுடனான உறவின் தன்மையையும், அண்மையில் மறைந்த அவன் தந்தையைப் பற்றியும் வரும் சித்திரங்கள் இந்தக் கதையை தனித்த சிறப்பு உடையதாக ஆக்குகின்றன. உண்மையில், கதையில் ஒரு பாத்திரமாக சுவாமிநாதனின் தந்தை வருவதில்லை. ஆனால், சுவாமிநாதனது எண்ணங்களின் மூலமாக அவரது இருப்பு அல்லது இழப்பு அவர் இல்லாமலும் இருப்பதை நாம் உணரும் வகையில் மிக நுணுக்கமாகச் சொல்லப்படுகிறது.
வீட்டில் இரண்டு பெண்களுக்கிடையே இருக்கும் சுவாமிநாதன் இன்னொரு ஆணான தன் தந்தையின் இன்மையை உணருதல், அவர் அவனது பாதுகாப்பான உலகாக இருத்தல் ஆகியவை கதையின் துவக்கத்தில் வரும் அந்தக் கனவின் மூலமாக காட்டப்படுகிறது. பின் அவன் தந்தையின் நண்பர், அவர் தலையில் அவன் காணும் வழுக்கையின் துவக்கம், பேச்சுக்கிடையே ஏதோ ஒரு ராகத்தை முணுமுணுப்பது ஆகியவற்றிலெல்லாம், அவரில் தன் தந்தையை சுவாமிநாதன் அடையாளம் காண்பது அதிகம் சொல்லாமலேயே குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அதோடு, இரு பெண்களுக்கிடையே வாழும் இளம் சுவாமிநாதன் மேல் அவர்களின் உடல் ஏற்படுத்தும் இனம்புரியாத ஈர்ப்பும் கவர்ச்சியும், அதற்காக அவன் கொள்ளும் குற்ற உணர்வும் கூட, கோடிட்டுக் காட்டப்படுகிறது.
பின் சுவாமிநாதனின் இன்டர்வியூ அவன் தாய் மற்றும் தமக்கையால் எதிர்கொள்ளப்படும் விதம், இருவருக்குமே சுவாமிநாதன் இந்த இன்டர்வியூவில் தேறி வேலைக்குப் போய்விட வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் கூடவே, அது தங்கள் உலகை, அவனுடனான உறவின் தன்மையை, பாதிக்கும் விதத்தை பற்றிய கவலையும் இருக்கிறது. சுவாமிநாதனுக்கே கூட, அவனது அக்காவின் உழைப்பில் வாழ்வதிலிருந்தும் அம்மாவின் சங்கடப்படுத்தும் பரிவிலிருந்தும் விடுபட ஆவல். ஆனால், தன்னுடைய பகல் பொழுதுகள் வேற்று மனிதர்களுக்குச் சொந்தமாகி தன்னுடைய விடுதலையை இழப்பது குறித்தும் அச்சம்.
அவன் அக்காவிற்கு, சாமிநாதனின் இன்டர்வியூவின் மூலம் அவனுக்கு அமையும் வேலை, அவளை இவர்களின் இந்த உலகத்திலிருந்து விடுவித்து அவளுக்கான உலகத்தை (அவளை ஒரு கறுப்புக் கண்ணாடி இளைஞனோடு சுவாமிநாதன் சாலையில் பார்க்கிறான்) அடைய ஆவல். அதே சமயம், அவளது சம்பாத்தியத்தில் வாழும் அவளது அம்மா மற்றும் சுவாமிநாதன் மீதான ஒரு மேலாதிக்கத்தை இழப்பதிலும் உள்ள இழப்புணர்வு இருப்பதும் குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
சுவாமிநாதனது அம்மாவுக்கும் அவன் அந்த இன்டர்வியூவில் வெற்றி பெற வேண்டுமென்ற தவிப்பு இருக்கிறது. அதன் மூலம் அவனில் அவன் அப்பாவைக் காணவும், கர்வத்துடன் மீண்டும் வெளியே செல்லவும் ஆசை. ஆனால், கூடவே அவனுடைய அக்காவைப் போலவே அவனும் அவளுடைய உலகத்தை விட்டு நழுவி வெளியே சென்று விடுவானோ என்ற அச்சமும் இருக்கிறது.
இதையெல்லாம் யோசித்துக் கொண்டு சுவாமிநாதன் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்குமுள்ள வேறுபாட்டையும் நினைத்து மருகுகிறான். இதே சினிமாவென்றால், அவனது அப்பா எப்படியோ இடைவேளைக்குப் பின் வந்துவிடுவார். இந்த இன்டர்வியூ அலுவலகத்தின் ரிசப்ஷன் அழகி ஒரு காரில் வந்து அவனை ஏற்றிக் கொள்வாள். அந்த கம்பெனியே அவளது அப்பாவுடையதாக இருக்கும். சினிமாவைப் போல வாழ்க்கை இருந்தால் கஷ்டமே இல்லை. ஆனால், இது வாழ்க்கை. அதனால் சுவாமிநாதன் பேருந்துக்காகக் காத்துக் கொண்டேயிருக்கிறான்.
2 comments