– எஸ். சுரேஷ் –
பொழுதெல்லாம் எனக்கே என்பது போலிருக்கும்போது
என்னை யாரும் உணவுண்ண அழைப்பதில்லை எனும்போது
மேகங்கள் கலைந்து வண்ணங்கள்
இழப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கூரையில் இலக்கின்றி பூனை
சுகமாகத் திரிவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இப்பொழுது ஒவ்வொரு காலையும் எனக்காகக் காத்திருக்கும்போது
என்னை யாரும் அழைக்காத முடிவற்ற இரவில் இனி
எனக்காகக் காத்திருக்கும் உடலின் கண்கூசும் அழகில்
இளைப்பாற அவசரமாய் உடை களையும் அவசியம் இல்லை
துவக்கமற்ற இந்தக் காலை மௌனமாய்
என் விருப்பத்திற்கும்,
என் குரலின் அத்தனை ஓசைகளுக்கும்
என்னை விட்டுச் செல்கிறது.
இப்பொழுதே எனக்கோர் சிறை வேண்டும்
– Patrizia Cavalli
௦௦
நாம் கைதிகள் என்றுதான் இந்திய தத்துவம் எப்போதும் கூறி வந்திருக்கிறது: விட்டு விடுதலையாகி இறவாமையையும் நித்திய ஆனந்தத்தையும் அடையச் சொல்லி இந்திய தத்துவம் அழைக்கிறது. நாம் அனைவரும் இயல்பாகவே மோட்சத்தில், அதன் சுதந்திரத்தில் நாட்டம் கொண்டிருந்தாலும் சிறையையே விரும்புகிறோம். பேராசை, பேரின்பம், பெருந்துயர், பொறாமை என்றும் இன்னும் பல எண்ணற்ற உணர்ச்சிகளுக்கும் நாம் சிறைப்பட்டிருக்கிறோம். குடும்ப வாழ்வும், பதவிகளும், போலி கௌரவமும் நம்மைப் பூட்டியிருக்க, வாழ்வெனும் இந்த அபத்தத்தைப் புரிந்து கொள்ள நாம் போராடுகிறோம்.
உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த அத்தியாயம் என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாஸ்தவெஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலின் விசாரணைப் பகுதியில் சுதந்திரம் விவாதிக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் கிறிஸ்து பூமிக்கு வருகிறார். பொய்யான நம்பிக்கைகளுக்காக தீயிட்டு மக்கள் கொளுத்தப்படுவதை அவர் காண்கிறார். விசாரகர் கிறிஸ்துவைப் பார்த்து விடுகிறார், அவரிடம் பேசத் துவங்குகிறார். அவர்களது உரையாடலின் சாரம் இதுதான்: கிறிஸ்து மனிதர்களுக்கு சுதந்திரத்தை உறுதியளித்திருக்கிறார். தங்களுக்கான தேர்வுகளை மேற்கொள்ளும் உரிமையை அவர் அளித்திருக்கிறார், ஆனால் மனிதர்களுக்குச் சுதந்திரம் தேவையாயில்லை. அவர்கள் யாரையாவது பின்பற்றவே விரும்புகின்றனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர்கள் சங்கிலி பூட்டப்பட்டு அழைத்துச் செல்லப்படவே விரும்புகின்றனர். மகோன்னதமான அந்த அத்தியாயத்தை மிகச் சில வரிகளில் சுருக்கிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும் – ஆனால் அடிப்படைச் சிக்கல் இதுதான். விடுதலைக்கான ஏக்கம் அனைவருக்கும் பொதுவான ஒன்றல்ல. நாம் கட்டுப்பட்டிருக்க விரும்புகிறோம். நமக்கு நம் சிறைகள் வேண்டியிருக்கின்றன.
ஒரு முன்னணி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் சொந்தமாக தொழில் செய்யத் துவங்கியபோது, மேன்பவர் கன்சல்டன்சி நடத்திக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் என்னிடம் சொன்ன விஷயம் நினைவிருக்கிறது. “சுயதொழில் செய்யும் எல்லாருக்கும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது – அவர்களும் அவர்கள் செய்வதும் யாருக்கும் ஒரு பொருட்டேயல்ல என்பதை உணரும்போது அது ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். இப்போது அவர்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இருக்காது, அவர்கள் இல்லாமலே அவர்களது உதவி தேவைப்படாமலேயே எல்லாம் வழக்கம் போல போகும். நீ ஒரு நிறுவனத்தில் ஒரு மிகச் சிறிய பதவியில் இருந்தாலும்கூட யாருக்காவது உன் அவசியம் இருக்கும். அந்த நிறுவனத்தைப் பொருத்தவரை நீ செய்வதற்கு ஏதோ ஒரு இடமிருக்கிறது. ஆனால் சொந்தமாய் ஆரம்பிக்கும்போது யாரும் உன்னைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது. இதுதான் மிகவும் தொய்வளிக்கும் விஷயமாக இருக்கும். உன் இடத்தை நீதான் நிறுவிக் கொள்ள வேண்டும்,” என்றார் அவர். சத்தியமான வார்த்தைகள்.
நம் வேலை நமக்குப் பல விஷயங்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்: பணவிஷயத்தில் பாதுகாப்பு, வாழ்க்கையில் ஒரு இலக்கு, சமூக அந்தஸ்து, நம் குழந்தைகளுக்கான எதிர்கால உத்தரவாதம். பணியிடத்தில் பதவியும் வருகிறது, இது நமக்கு சமூக அந்தஸ்து அளிக்கிறது, நாம் எதிர்காலம் குறித்து நம்பிக்கையோடு இருக்கிறோம். எத்தனை கோயில்களுக்குப் போனாலும், எத்தனை குருஜிக்களைத் தேடிப் போய் பேருரைகள் கேட்டாலும், எவ்வளவுதான் வேதாந்தம் பேசினாலும் பெரும் போராட்டத்துக்குப்பின் கிடைத்த இது எதையும் நாம் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. வயதாக வயதாக இந்தத் தேவை அதிகரிக்கிறது. முதுமையின் கேவலங்களிலிருந்து நம் கடந்த காலச் சாதனைகள் நம்மைக் காப்பாற்றும் என்று நம்புகிறோம்.
பணியிடம் ஒரு சிறை என்றால், வீடு அதற்கு நெருக்கமான இன்னொரு சிறை. மனிதன் உருவாக்கிய அமைப்புகளில் மிகச் சிக்கலான அமைப்பு குடும்ப அமைப்புதான். குடும்ப வாழ்க்கையில் பல நுண்கயிறுகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் நம்மைச் செலுத்துகின்றன. அவற்றின் ஒட்டுமொத்த விளைவையே ஒவ்வொரு மனிதனும் குடும்ப வாழ்க்கையாய் உணர்கிறான். இது யாருக்கு எப்படி இருக்கும் என்பதை முன்னனுமானம் செய்வது முடியாத காரியம். குடும்பம் நம்மை ஊக்குவிக்கலாம், பாதுகாப்பு அளிக்கலாம், எத்தனையோ உயரங்கள் செல்லும் உத்வேகம் கொடுக்கலாம். ஆனால் அதுவே அடக்கி ஆள்வதாகவும் ஆகலாம், நம் சாத்தியங்களை முடக்கி, நம் லட்சியங்களைப் புதைக்கலாம். தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் பலவும் குடும்ப வாழ்வைப் பேசியிருக்கின்றன – ஜெயகாந்தனின் ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, லா ச ராவின் பாற்கடல் என்று நிறைய சொல்லலாம்.
பதின்ம பருவத்தின் பிற்பகுதியிலும் இருபதுகளிலும்தான் குடும்ப அமைப்பு சுதந்திரத்தைப் பறிக்கிறது என்ற உணர்வு நம்மால் தீவிரமாக அறியப்படுகிறது. இந்த வயதில்தான் நம்மில் பலரும் புரட்சிகரமான சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க விரும்புகிறோம், நமக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள ஆசைப்படுகிறோம். நவீன காலத்தில் இது அதிகரித்திருக்கிறது, வேறொரு இடத்தில் வேலை கிடைத்தால் வீட்டை விட்டு வெளியேறிவிட முடிகிறது. ஆனால் காலம் செல்லச் செல்ல நாம் மெல்ல மெல்ல குடும்ப அமைப்பில் சிக்கிக் கொள்கிறோம். ஜெயமோகனின் ஒரு கதை உண்டு. பழக்கப்படுத்தப்பட்ட யானை ஒன்று காட்டுக்குள் தப்பி ஓடிவிடும். காட்டில் வேட்டைக்காரன் ஒருவனின் பொறியைப் பார்த்துவிட நேரிடும்போது, அது தன் எஜமானனிடம் திரும்பிவிடும். அவன் இல்லாமல் தன்னால் பிழைக்க முடியாது என்று அது உணரும் தருணம் அது. குடும்ப அமைப்புக்கு வெளியே போய் தனியாய் நிற்கும்போதுதான் நம்மால் தனியாக நிற்க முடியாது என்பது நமக்குத் தெரிய வருகிறது. இது தவிர, நம் பெற்றோர் நம்மை எப்படி எல்லாம் வளர்த்தார்கள் என்ற புரிதலும் இப்போது கிடைக்கிறது. மறுபடியும் குடும்பம் என்ற கூட்டுக்குள் புகுந்து கொள்கிறோம்.
நான் யார் என்று கண்டுபிடிக்கப் போகிறேன், என்று கிளம்பும் பலர், தங்கள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ள சரியான துணையைக் கண்டுபிடித்துத் திரும்பி வருகின்றனர்! இந்த புதிய நபர் சில காலம் உங்கள் வாழ்வின் மையமாக இருக்கிறார். உங்கள் வாழ்வின் உந்துசக்தியாக இருக்கிறார். இந்த நேசத்தின் உக்கிரத்தைக் கொண்டு நாம் நம்மைச் சுற்றி ஒரு சிறை எழுப்பிக் கொள்கிறோம். குடும்பம் ஏற்கனவே இருக்கும் சிறை என்றால், காதல் நாமாக உருவாக்கிக் கொள்ளும் சிறை. யாராவது நம்மை நேசிக்க வேண்டும், யாராவது நம்மிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நமக்கும் அன்பு செலுத்தவும் அக்கறை காட்டவும் ஆள் தேவைப்படுகிறது. காதல் தோல்வியை விட இதயத்தை நொறுங்கச் செய்வது எதுவுமில்லை. மிக உன்னதமான கவிதைகள் பல காதல் தோல்வியின் துயரைப் பெசுகின்றன.
இந்தக் கவிதை அன்பின் தளைகளைப் பேசுகிறது, விடுதலையைப் பேசுகிறது. கவிஞருக்கு இப்போது சுதந்திரம் கிடைத்துவிட்டது, இனி என்ன வேண்டுமானால் செய்யலாம். ஆனால் இந்த சுதந்திரத்தில் நிறைவில்லை. இறுதியில் கவிஞர் கூறுவதுபோல் சிறையில்தான் சந்தோஷம் கிடைக்கிறது. நமக்கும் நம் சிறைகள் தேவைப்படுகின்றன. சுதந்திரமானவர்களாக நம்மால் உலகையும் வாழ்வையும் எதிர்கொள்ள முடிவதில்லை. வெவ்வேறு சிறைகளின் சுவர்கள் நமக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றன. இவற்றை உடைத்து வெளியேற மிகப்பெரும் துணிச்சல் வேண்டும், ஞானிகளுக்குரிய மன உறுதியும் வாழ்வு குறித்த ஆழ்ந்த புரிதலும் வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணர்கள் நமக்கு விருப்பப்பட்ட சிறையை எழுப்பிக் கொள்ளும் சுதந்திரத்துக்கான செங்கல்களுக்கே பிரார்த்திக்க முடியும்.