இவ்வாண்டு அமெரிக்காவில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெற்றவர் ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னஹோர்காய். அவரும் மாக்ஸ் ந்யூமன்னும் இணைந்து எழுதிய உள்ளிருக்கும் மிருகம் என்ற நூலின் சில பகுதிகளின் மொழிபெயர்ப்பு, வைட் ரிவ்யூ என்ற தளத்தில் உள்ளது. அதன் ஒரு பகுதியின் தமிழாக்க, முயற்சி இது-
எந்த இடமும் எனக்கு இறுக்கமாக இருக்கிறது. நான் சுற்றி வருகிறேன், குதிக்கிறேன், மோதிக் கொள்கிறேன் என்றாலும் மிகக் கச்சிதமாக என்னை இறுக்குகிறது என்றாலும், நான் எனக்கு மிக இறுக்கமாக இருக்கும் அந்த ஒரு இடத்தில்தான் இன்னும் இருக்கிறேன், அதுவும் மிகக் கச்சிதமாக என்னை இறுக்கும்போதுதான் மிகவும் தாளமுடியாமல் ஆகிறது; குதிக்கிறேன் என்றாலும் இன்னும் ஏதோ ஒன்றினுள்தான் இருக்கிறேன், அதன் பரிமாணங்கள் அபரிதமாக ச்செழிப்பற்று இருக்கின்றன என்று சொல்லலாம், ஏனெனில் இது பரிமாணங்களைப் பற்றிய விஷயமேயில்லை, மாறாக நான் குதிக்கும் கணத்தில், நான் அந்த இடத்தில் இருக்கும்போதுதான், நான் உடனே சிக்கிக் கொள்கிறேன், அந்த இடம் என்னைப் பிடித்துக் கொள்கிறது, நான் எச்சரிக்கையின்றித் தாவிய இடம், அதற்காக நான் போதுமான அளவு கவனமில்லாதவன் என்றல்ல, நான் எச்சரிக்கையாகதான் இருக்கிறேன், ஏன், அளவுக்கதிகமாக அப்படி இருக்கிறேன் என்றுகூட சொல்லலாம், ஆனால் நான் எங்கே குதித்தலும் ஒன்றுதான், எனக்கு மிக இறுக்கமாக இருக்கும் இடத்துக்குதான் நான் போய்ச் சேரப் போகிறேன் என்பது நிச்சயம், சில சமயம் என்னைக் கச்சிதமாக இறுக்கும் இடம், ஆனால் ஆச்சரியமாக பல முறையும் அவ்வளவாகவே இருக்கிறது, தாளமுடியாததாக அந்த இடம் நான் எப்படி நகர்ந்தாலும் என்னுள் ஒரு கூண்டைப் போல் சுருண்டு கொள்வதை உணர்கிறேன், உடனே நான் முடிவை அடைகிறேன், உண்மையில் நான் கொஞ்சம்கூட நகர்வதற்கு முன்னரே அந்த இடத்தின் முடிவு என்னை வந்தடைந்து விடுகிறது, இது கூண்டில் இருப்பது போன்றது என்று சொல்லும்போது என்னால் செய்யக்கூடியதெல்லாம் ஒரு கூண்டுக்குள் குதிப்பது மட்டும்தான் என்பது போல் இருக்கிறது, என்னால் வேறெதுவும் செய்ய முடிவதில்லை, நான் குதித்தாக வேண்டும் என்றாலும் நான் குதித்தால் உடனே அந்த இடத்துக்குத்தான் வந்து சேர்கிறேன், அதுவும் நான் சொன்னதுபோல், பலபோதும் பைத்தியம் பிடிக்க வைப்பதாய் இறுக்குகிறது, கிட்டத்தட்ட ஒரு கம்பி வலைப்பின்னலிட்ட சதுரக் கூண்டுக்குள் குதிப்பது போல் நான் உணர்வதில்லை, ஏன், அதைவிட மோசமாக, செங்கல் வடிவக் கூண்டுக்குள்கூட அல்ல, ஆனால் அது போன்ற சமயங்களில் கச்சிதமாக என்னளவுக்கே செய்யப்பட்ட இடத்துக்குள் வந்து சிக்கிக் கொண்டது போல் என்றுதான் நான் நினைக்கிறேன், அது கச்சிதமாக என்னளவே பெரிதாக இருக்கிறது என்றும் இருப்பதிலேயே பைத்தியம் பிடிக்கச் செய்யும் விஷயமென்றும் நினைக்கிறேன் எனில் நான் அசையக்கூட வேண்டாம், எங்கும் அளியடைப்புகளைத் தொடுகிறேன், இந்த இடத்தின் முடிவு எதனால் செய்யப்பட்டிருந்தாலும் ஒன்றுதான், எனக்கு இந்த அளியடைப்புதான், கூண்டின் அளியடைப்புதான் என்று இருக்கும் போதெல்லாம் இரக்கமற்றிருக்கிறது, நான்தான் என்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறேன் என்றாலும் கொஞ்சம் நகரும்போதும் அந்த முயற்சியின் அபத்தத்தை உணர்கிறேன், ஏனெனில் இந்த இடத்துக்குள் இருக்கும் எல்லாமும் ஒரு மாதிரி செய்யப்பட்டிருக்கிறது, இந்த இடவெளி-கூண்டு, இதில் இல்லாத ஒன்றென்றால் அது வெளி மட்டும்தான் என்பதை நீ இப்படி நினைத்துப் பார்க்கவேண்டும், இதைத்தான் நான் எல்லாருக்கும் சொல்கிறேன், குதித்தாக் வேண்டிய மற்ற அனைவர்க்கும் சொல்கிறேன், நான் என்ன நினைக்கிறேன் என்பது அவர்களுக்குப் புரியும், இதை எப்படி நினைத்துப் பார்ப்பது என்பது அவர்களுக்குப் புரியும், எது இல்லையோ அதுதான் இந்த இடம், என்னையன்றி இங்கு உள்ளார்ந்த சுதந்திரம் இல்லை என்பதும் புரியும், ஏன் உண்மையில் அதுகூட இல்லை, இது என்னளவுக்குச் செய்யப்பட்ட கூண்டு, நான் இதற்குள் குதிக்கிறேன், உண்மையில் நான் இதைப்பற்றி இன்னும் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் நான் குதிக்கும் இடம் எப்படியோ இன்னும் பெரிதாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாலும் இது இப்படிதான் இருக்கிறது, எனில் நான் கொஞ்சம் எக்கி நீண்டால் போதும், நாலு, அப்புறம் ஆறு, அதன்பின் ஏழு சென்டிமீட்டர்கள் வெளியே நீண்டால் போதும், நான் இந்தப் பக்கமோ அல்லது அந்தப் பக்கமோ தொடுவேன் என்ற அறிவு இருப்பதால் மட்டுமே உண்மையில், என்ன சொல்வது, இப்போதே நான் இந்தக் கூண்டின் சுவர்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதால் இந்தக் கூண்டின் முடிவு உண்மையில் இப்போதே அங்குதான் துவங்குகிறது, நான் மறுகணமே முடிவில் முட்டிக் கொள்வேன் என்று நினைக்கும் புள்ளியில்தான் துவங்குகிறது, வேறு சொற்களில் சொல்வதானால் இங்கிருந்து தப்பிக்க வழியில்லை, நான் உயரே குதித்து என் பற்களால் உன் தொண்டையைக் கவ்வுகிறேன் என்றால் நான் பொறிக்குள் தீர்மானமாகவும் முடிவாகவும் குதிக்கிறேன், துரதிருஷ்டவசமாக தப்பிப்பதைப் பற்றி பேசுவதில் ஒரு அர்த்தமுமில்லை.
உன் தொண்டைக்குள்.