குருதிச் சோறு – 2

– நரோபா –

பகுதி – 1
பகுதி – 2

பாலாயி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். தன்னைக் கைவிட்டுச் சென்ற காத்தமுத்துவை ஆசைதீர வைய வேண்டும் என்பதுதான் உடனடியாக அவளுக்கு தோன்றித் தொலைத்தது. ஆறேழு மாதங்கள் இருக்கலாம். வெள்ளாமை பொய்த்து காடு கழனி போகாமல் அவதிப்பட்ட காலம் அது. பிள்ளைகளுக்கு எப்படியோ ஒருவேளை கேப்பை கஞ்சி காய்ச்சிக் கொடுத்து கொண்டிருந்தாள். கையில் இருந்தது எல்லாம் கரைந்து கொண்டிருந்தது. பிள்ளைகளும் பிள்ளைத்தாய்ச்சியுமான தானும் சீரழிந்து கொண்டிருப்பது தெரியாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவனை நினைத்து ஆத்திரப்பட்டாள். வழக்கம் போல் அன்றைய சண்டையும் அவள் அடி வாங்கி அழுவதில் முடிந்தது. அந்த இரவு ஆத்திரத்துடன் கள்ளுக்கடைக்குப் போனவன் திரும்பியே வரவில்லை. என்ன ஆனான் என்று ஒரு சேதியும் இல்லை. ஓரிரு மாதங்கள் ஊருக்குள் இருந்துவிட்டு, பிறகு புதுக்கோட்டை ராஸ்தாவை ஒட்டியிருந்த கண்மாயில் கொஞ்சம் தோண்டினால் ஊற்றுநீர் வரும் என்பதாலும், ஊருக்குள் மாரியாத்தா சூறையாடில் கொண்டிருக்கிறாள் என்பதாலும் குடும்பம் குடும்பமாக கம்மாய் அருகில் குடில் போட்டுக்கொண்டு தங்கினார்கள்.

பெரியவனுக்கும், அடுத்தவனுக்கும், பெரியவளுக்கும் காய்ச்சல் வந்து விட்டது. ஊரெங்கும் ஊழித் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த மாரியாத்தா அவள் வீட்டிற்கும் வந்து விட்டாள். பெரியவனுக்கு காய்ச்சலுடன் கழிசலும் சேர்ந்து கொண்டது. அம்மா கொடுத்த தாய்ப்பால்தான் கடைசியில் கரிய திரவமாக, குருதி கலந்த காட்டுப்பீயாக வரும் என்று சொல்வார்கள். உடல் வெளிறி ரத்தம் வடிந்து வெயிலில் உலர்ந்த இளம் தளிராகக் கிடந்தான். பெரியவளும் மயங்கி விட்டிருந்தாள். நான்காண்டுகளுக்கு முன் பெய்த பெருமழைக்குப் பின்னர் பசியோடு ஊர்புகுந்த மாரியாத்தா அவளின் மூன்று பிள்ளைகளின் குருதியை குடித்து கொண்டுபோயிருந்தாள். இன்னும் அவளின் தாகம் தீரவில்லை போலும்.

குழந்தை ஓயாமல் வீரிட்டு பாலுக்கு அழுகிறான். பிள்ளைகளின் காய்ச்சல் முனகல்கள் வேறு. ராஸ்தாவை ஒட்டி இடம் பெயர்ந்ததும் நன்மைக்குதான். ராஸ்தாவைக் கடந்து செல்லும் வண்டிகளில் இருந்து சில நேரங்கள் ஏதாவது கிடைக்கும். அரிதாக அப்பக்கம் கோச்சு வண்டிகளில் துரைமார்களும் வருவதுண்டு. தானிய மூட்டைகள் ஏற்றிக்கொண்டு வரும் வண்டிக்காரர்கள் அவ்வப்போது மனம் கனிவதுண்டு. நெல்லு மூட்டைகள் எல்லாம் நாகப்பட்டினம் செல்வதாக பேசிக்கொண்டனர். அதைக் கொண்டுதான் அவளும் அவளுடைய பிள்ளைகளும் தாக்கு பிடித்து கொண்டிருந்தனர். ஊருக்குள் தினமும் பிணங்கள் விழுந்த வண்ணமிருந்தன. கூட்டம் கூட்டமாக மக்கள் எங்கோ சென்றுகொண்டே தானிருந்தார்கள். வெக்கை எல்லாவற்றையும் உலர்த்திவிடுகிறது. மனிதர்களின் மனங்களில்கூட ஈரம் மிஞ்சுவதில்லை. மனிதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஈரம் கண்ணீர் மட்டும்தான். அவர்களுள் எஞ்சியிருந்த கடைசி துளி உயிராற்றல் அவர்களை வழிநடத்திச் சென்றது.

பாலாயி அழுது கொண்டிருந்தாள். பெரியவன் மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கிக் கொண்டிருந்தான். கண்கள் சொருகி, கைகால்கள் உதறி அப்படியே உறைந்து போனான். கண்ணீர் பொங்கி வந்தது. ஏதாவது செய்து எல்லோரையும் கரையேற்றி விடுவான் என அவனைத்தான் மலைபோல நம்பியிருந்தாள். ஆனால் அவளுக்கு அதிக நேரமில்லை. பெரியவனை உலர்ந்த பனைமட்டையில் சாய்த்து இழுத்துச் சென்று வறண்ட கம்மாயின் ஓரம் கிடத்திவிட்டு ஓடி வந்தாள். குழந்தை அழுது கொண்டிருந்தான். அவளுடைய முலைகள் காய்ந்த சுரைக்குடுவை போல் உலர்ந்திருந்தன. பாலூறவில்லை. அதற்குள் பெரியவளும் மூச்சு வாங்க தொடங்கினாள். கண்கள் சொருகின. எப்படியாவது அவளுக்கு திருமணம் முடித்துவிடலாம் எனும் கனவு இதோ காற்றில் கரைந்து கொண்டிருந்தது. கண்ணீரும் கூட வற்றிவிடும் போலிருந்தது அவளுக்கு. அருகில் சென்றமர்ந்து அவளுக்கு வாய் நீர் அளித்தாள். நீர் கொப்பளங்கள் வெடித்து வழிந்ததுடன் இறுதி மூச்சும் விட்டகன்றது.

மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள். அவளையும் இழுத்து சென்று கண்மாயில் மகனுக்கு அருகே கிடத்தச் சென்றாள். அவள் காலடியை கேட்டவுடன் குறுங்காட்டுக்குள் நாலைந்து காலடிகள் ஓடி மறைந்தன. மணி வெளிச்சத்தில் நான்கைந்து ஒளிச் சுடர்களாக புதருக்கு அப்பால் சில விழிகள் தென்பட்டன. சுள்ளிகளை பொருக்கி எரியூட்ட வேண்டும். உலர்ந்த மரங்களை வெட்டி விறகு எடுக்கலாம். குடிலுக்கு திரும்பி வெட்டருவா கொண்டு வருவதற்குள் பெரியவனின் பிணத்தைக் கவ்வி இழுத்துச் செல்ல இரண்டு நாய்கள் வந்துவிட்டன. ஊன் பற்கள் தெரிய அவளை பார்த்து உறுமின. மேலும் இரண்டு மெலிந்த நாய்கள் புதரிலிருந்து ஓடி வந்தன. கீழே கிடந்த கற்களை எடுத்து வீசினாள். ஆனால் அவை சற்றே பின்வாங்கி மீண்டும் முன்னால் ஓடிவந்தன. அவள் சற்று பின்னகர்ந்தவுடன் இன்னும் இரண்டு மூன்று மூச்சொலிகள் கேட்டன. கண்ணீர் பொங்கி வழிந்தது. என்ன செய்துவிட முடியும்? என்னதான் செய்துவிட முடியும்? போகட்டும், அவைகளும் வேறு என்னதான் செய்ய முடியும்? கண்ணீர் வழிய கற்களை வீசிவிட்டு நடந்தாள்.

எதையாவது செய்து பிள்ளைகளைக் காப்பாற்றியாக வேண்டும். அது மட்டுமே அவளுடைய மனதை முழுவதுமாக நிறைத்தது. இரவு நெஞ்சுக்குள் சூழ்ந்த இருளையும் அடர்த்தியாக்கியது. ராஸ்தாவைப் பார்த்து அமர்ந்திருந்தாள். ராஸ்தாவில் மாட்டுவண்டிகள் வருவதை கேட்க முடிந்தது. சில ஒளி பொட்டுக்கள் தொலைவில் தென்பட்டன. தன்னுள் ஆழ்ந்து இருந்தாள். எப்போதும் போல் வண்டியோட்டிகளை இறைஞ்சுவதற்கு அவளுக்கு விருப்பமில்லை. விதியை எண்ணி மருகி கொண்டிருந்தாள். தூரத்தில் நாய்கள் குரைத்து கொண்டிருந்தன. நாய் ஒன்று எதையோ கவ்விக்கொண்டு குறுக்கே ஓடி சென்றது. அதை துரத்திய நாய்களுக்கு பிடி கொடுக்காமல் புதருக்குள் சென்று மறைந்தது.

நெல்லு மூட்டைகளை அடுக்கிக்கொண்டு வரிசையாக ஏழெட்டு மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன. சில காலடிகள் கேட்டன. முதல் வண்டியில் செல்லும் வண்டியோட்டியிடம் வழக்கம் போல் சிலர் இறைந்து கொண்டிருந்தனர். சட்டென்று அவள் உடல் பரபரத்தது. புதரோரம் இருளில் நடந்து கடைசி மாட்டு வண்டிக்குள் சத்தமின்றி ஏறினாள். வண்டிக்காரர்கள் அரை தூக்கத்தில் இருந்தார்கள். இரண்டு மூட்டைகளை சேர்த்து வேகவேகமாக வாளிகயிற்றால் பிணைந்தாள். சத்தமின்றி குதித்திறங்கி பக்கவாட்டில் இருந்த வாகை மரக்கிளையில் கயிற்றை வீசி அதன் மறு நுனியை பலம் கொண்ட மட்டும் இழுத்தாள். அவ்விரண்டு மூட்டைகள் அந்தரத்தில் தொங்கின. கைகள் மரத்து மூட்டை கனத்து கீழே விழுந்தபோது வண்டிகள் மீண்டும் தூரத்து ஒளி பொட்டுகளாக எங்கோ சென்று கொண்டிருந்தன.

oOo

மழை பொய்த்து ஆண்டுகள் மூன்றாகிவிட்டன. எச்சிலை சப்பி சப்பி உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ள பிள்ளைகளும் இந்த நாட்களில் பழகிவிட்டார்கள் என்று எண்ணிக் கொண்டார் வைத்தியநாதன். நான்கு பிள்ளைகளையும் பாரியாள் கமலத்தையும் அழைத்துக் கொண்டு, அவர்களின் ஒற்றை கரவை பசுவான பாக்கியத்தையும் இழுத்துக்கொண்டு நாவலூரில் இருந்து புறப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. எத்தனையோ ஆண்டுகளாக வாழ்ந்து வந்த முன்னோர் பூமியை விட்டகன்று வருவது அத்தனை எளிதாக இருக்கும் என்று அவர் எண்ணியிருக்கவில்லை. ஆனால் அவருடைய முதிய தந்தை சதாசிவம் வேறு முடிவை எடுத்துவிட்டிருந்தார். “ராஸ்தால அனாதையா சாக எனக்கு முடியாது..இந்த மண்ணுலேயே உரமாகி போறேன்… என்ன விட்டுடு” என்று தழுதழுத்தபடி பிடிவாதமாகச் சொன்னார். ஒருபோதும் தன்னால் இப்படி பிடிவாதமாக இருந்துவிட முடியாது என்று வைத்தி எண்ணி கொண்டார். அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்.

புதுக்கோட்டை மகாராஜாவின் சமஸ்தானத்தில் காரியதரிசியாக இருக்கும் மைத்துனன் பஞ்சாபகேசன் அங்கு கோவில் காரியம் பெற்று தருவதாக எழுதி இருந்தான். அரிசி மாவையும் பொடித்த பனை வெல்லத்தையும் கட்டிக்கொண்டு கிளம்பினார்கள். ஊரெங்கும் விஷக் காய்ச்சலுக்கு பலி விழுந்து கொண்டிருந்தது. கிராமங்களை காலி செய்துகொண்டு மக்கள் வெளி கிளம்பினர். ராமேஸ்வரம் ராஸ்தாவில் ஆங்காங்கு மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் எங்கோ பெயர்ந்து சென்று கொண்டிருப்பதை காண முடிந்தது. அவ்வப்போது கடந்து செல்லும் கோச்சு வண்டிகளும் குதிரை வண்டிகளும் எதையும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

பாக்கியம் மேய்வதற்கு காய்ந்த சருகுகள்கூட வழியில் அகப்படவில்லை. மெலிந்து வற்றிக் கொண்டிருந்தாள். நெஞ்செலும்புகள் துருத்தி தெறிந்தன. வயிறு பக்கவாட்டில் புடைத்து சரிந்திருந்தது. வாயில் நுரை ததும்ப நடந்து வந்தாள். பிள்ளைகள் சோர்ந்து தள்ளாடி நடந்து வந்தனர். சின்னவளுக்கு உடல் காந்த தொடங்கியது. அவளைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நடக்க வேண்டியிருந்தது. வரும் வழியில் இருந்த இரண்டு நகரத்தார் அன்ன சத்திரங்களும் நிரம்பி வழிந்தன. அரிசி மாவைக் குழந்தைகளுக்கு எப்படியோ பங்கிட்டு அதுவரை சமாளித்தாகி விட்டது. யாசித்த குடிநீரைக் கொண்டு வைத்தியநாதனும் கமலமும் இழுத்துப் பிடித்து கொண்டு வந்தார்கள். பாக்கியம் காலையில் நீர் வைத்தபோது அருந்தவில்லை என்றபோதே அவர் அஞ்ச தொடங்கினார். பாக்கியம் கால் நொடிந்து கீழே சாய்ந்து விழிகள் மருண்டு எதையோ நோக்கி கொண்டிருந்தாள். உரக்க ஓலமிடக்கூட அவளிடம் தெம்பில்லை. புட்டத்தில் தட்டி அதை எழுப்ப முயன்றார். ஆனால் அதனால் நகர கூட இயலவில்லை. வயிறு மட்டும் மேலேயும் கீழேயுமாக ஏறி இறங்கியது. குழந்தை அழ தொடங்கினாள். கமலத்தின் கன்னத்தில் வழிந்திறங்கிய நீர்த் திவலைகள் பெரியவனின் தலையில் சொட்டின.

காத்திருக்கலாமா எனும் குழப்பத்தில் கமலத்தை நோக்கினான் வைத்தியநாதன். “வேண்டியதில்ல… போவோம்” என்றாள் கண்ணீரை துடைத்து கொண்டு. பாக்கியத்தின் மருள் விழி எங்கோ நிலைத்திருக்க அவளை அங்கேயே விட்டுவிட்டு நகர்ந்து சென்றார்கள். வைத்தியநாதனுக்கு தந்தையின் நினைவுதான் வந்தது. இருக்கிறாரோ இல்லையோ?

வெயில் தாழ்ந்து நிழல்கள் நீளத் துவங்கின. விடிந்தால் எப்படியும் புதுக்கோட்டையை அடைந்துவிடலாம். மெல்ல நம்பிக்கை ஊற தொடங்கியது. இரவு எங்காவது ஒடுங்கிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் அழத்தொடங்கியபோதுதான் கமலம் கவனித்தாள், அரிசி மாவு சம்புடத்தை காணவில்லை என்பதை. அவளுக்குள் திகில் பரவியது. இந்த அத்துவானக் காட்டில் என்ன செய்வது, எங்கு செல்வது, என்று தெரியாமல் பயம் அவளை கவ்வியது. வைத்தியநாதன் குழந்தைகள் விடாமல் அழுவதை கேட்டவுடன் ஏதோ ஒன்று தப்பாகி விட்டது என்பதை உணர்ந்துகொண்டார். கமலம் அழுதபடியே நடந்ததை சொன்னாள். அநேகமாக ஏதோ ஒரு அன்னசத்திரத்தில் தான் அது களவு போயிருக்க வேண்டும். இனி செய்வதற்கு ஏதுமில்லை. ஏற்கனவே அப்பிள்ளைகள் அரைவயிரும் கால்வயிறும்தான் உண்டு வருகிறார்கள். இன்றிரவு பட்டினியை அவர்களால் தாங்கி கொள்ள முடியாமல் போகலாம். யாசகம் கேட்க கூட எவருமில்லை.

கொஞ்சம் தொலைவில் ஏதோ வெளிச்சம் தென்பட்டது. மனிதர்கள் நடமாட்டத்தை காண முடிந்தது. ஏதோ ஒரு நம்பிக்கை அவருக்குள் பிறந்தது. கால்கள் இயல்பாகவே வேகம் கொண்டன. குழந்தைகள் அழுதழுது சோர்ந்திருந்தன.

oOo

பாலாயி பிள்ளைகள் எப்படியோ பிழைத்து கொண்டன. தனக்கு தேவையானது போக மீதியை அக்கம்பக்கத்தில் பகிர்ந்து கொண்டாள். செய்தி ஆங்காங்கு பரவி ஐந்தும் பத்துமாக ஜனம் இருளில் அவளை தேடி வந்தனர். அவளும் இல்லை என்று சொல்லாமல் ஒருபடியோ அரைப்படியோ, இருப்பதைக் கொடுத்தனுப்பினாள். ஏழெட்டு இரவுகள் அவளுடைய வேட்டை தொடர்ந்தது. எங்கிருந்து வருகிறது, அவளுக்கு எப்படி இது கிடைத்தது போன்ற கேள்விகளை எவரும் எழுப்பவில்லை. எதையோ தின்று அன்று பிழைத்திருந்தால் போதும் என்றானது. வேறு குடிகளும்கூட அவளுதவியை நாட துவங்கினார்கள். இருளில்தான் இப்பரிவர்த்தனைகள் நடந்தேறின.

ஒன்பது நாட்கள் வரையும் எதுவும் பிரச்சனை இல்லை. அதற்கு பின்னர் ஊர் முழுக்க பேச்சு பரவியதும் தான் சிக்கல் வந்தது. புதுகோட்டைக்கு செல்லும் சில வழிப்போக்கர்களும் காற்று வாக்கில் அவளைப் பற்றி அறிந்து கொண்டு அவளிடம் கஞ்சி குடித்து வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். வாரத்திற்கு ஒருமுறை அரசாங்க கிட்டங்கியில் கணக்கெடுக்கும்போது மூட்டைகள் குறைந்திருப்பதை கவனித்து கலங்காப்புலி ரங்கசாமி அம்பலத்திற்கு அவசர கடிதம் கொடுத்தனுப்பினார் கப்பல்கார துரை. அம்பலம் வண்டிக்காரர்களிடம் விசாரித்தால் எவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. அம்பலம் வடிவேலுவை காவலுக்கு அனுப்பினார். வடிவேலுவும் அவனுடைய சகாவும் வண்டிகளை கொஞ்சம் தொலைவிலிருந்து கண்காணித்தபடி குதிரையில் வந்தார்கள்.

oOo

வைத்தியநாதனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிராமணர்கள் அன்றி பிறரிடம் உணவு யாசித்ததும் இல்லை உண்டதும் இல்லை. குடியானவ பெண்ணிடம் எப்படி கேட்பது என்று அவருக்கு குழப்பம். ஆனால் குழந்தைகள் அரைமயக்கத்தில் இருந்தன. எவரும் எதுவும் அறியப் போவதில்லை. அக்குடிலின் வாயிலில் நின்று நாலைந்து பேர் சேலையிலும் வேட்டியிலும் எதையோ முடிந்து கொண்டு போவதை பார்த்தார், கமலம் சொன்னாள், “அன்னம் கொடுக்குறவள் அம்பாள் மாதிரி.குழப்பிக்க வேண்டாம்”. கணநேர தயக்கத்திற்கு பின்னர் சாலை கடந்து இருளுடன் நிழலாக அவள் குடில் வாயிலுக்கு வந்தார். “அம்மா..” என்றவர் அழைத்தபோது கடைக்குட்டிக்கு பாலூட்டி கொண்டிருந்தாள். மெல்ல எழுந்து வெளிய வந்தாள். “அம்மா… குழந்தை…” அவர் குரல் உடைந்து மேற்கொண்டு பேசாமல் நின்ற கோலத்தை பார்த்தவுடன் அவளுக்கு எல்லாம் புரிந்தது. எதிர்சாரியில் நின்றிருந்த கமலத்தையும் பிள்ளைகளையும் பார்த்தாள். எதையும் சொல்லாமல் குடிலுக்குள் கிடந்த மூட்டை ஒன்றை இழுத்து வந்து போட்டாள்.

“சாமி..எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க… நான் உள்ள தொடலை.தீட்டு இல்லை.நீங்களே எடுத்துக்குங்க,” என்று பிரிக்காத மூட்டையை காண்பித்தாள். அவருக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. “அம்மா சாப்ட்டு நாளாறது..” அவள் சட்டென்று, “கஞ்சிதான் கெடக்கு சாமி… நீங்க அதெல்லாம் பசியாறுவிகளா?” என்றாள் தயங்கிக்கொண்டே. பதிலேதும் சொல்லாமல் கைகட்டி தலைகுனிந்து கை மடக்கி நின்றார். உள்ளே சென்றவள் ஒரு மண் கலயம் நிறைய கஞ்சி கொண்டு வந்தாள். தேங்காய் சிரட்டையை எடுத்து கொடுத்துவிட்டு “பசியாறுங்க சாமி” என்றாள்.

oOo

வடிவேலுவும் அக்கம்பக்கத்தில் கவனித்து விசாரித்து கொண்டே வந்தான். பாலாயி குடிலில் பலரும் நெல் வாங்கிச் சென்றதை பற்றி அறிந்தவுடன் அவனுடைய ஐயம் வலுவடைந்து கொண்டே இருந்தது. பிராமணக் குடும்பம் அவளிடம் கஞ்சி வாங்கி குழந்தைகளுக்கு ஊட்டியதை மறைவில் இருந்து கவனித்தான். பாலாயி கைக்குழந்தையை கொண்டு போய் பக்கத்தில் கொண்டு விட்டு வந்தாள். அன்றிரவு அவள் கயிற்றுடன் வண்டியில் ஏறி மூட்டைகளை இழுத்துக்கொண்டு குடிலுக்கு செல்வதை புதரில் மறைந்து கவனித்தான். அங்கு ஆட்கள் வந்து போவதையும் உளவு பார்த்தான். அவள் இல்லாதபோது அவளுடைய குடிலுக்குள் சென்ற வடிவேலு அங்கு ஒரு நெல்லு மூட்டை பிரிக்கப்படாமல் உள்ளதைக் கண்டதும் எல்லாவற்றையும் உறுதிப்படுத்தி கொண்டான். அவளுடைய நான்கு பிள்ளைகளும் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

வடிவேலுவும் அவனுடைய சகாவும் அவள் வீட்டிற்குள் செல்லும்வரை மறைந்திருந்தனர். அவள் உள்ளே சென்றதும் பந்தத்தில் நெருப்பு கொளுத்தி கூரையில் வீசி எறிந்துவிட்டு வாயிலுக்கருகில் காத்திருந்தான். உலர்ந்த கீற்று காற்றுடன் சேர்ந்து திகுதிகுவென எரிந்தது. வாயிலுக்கு அவள் ஓடிவந்ததும் “திருடி திங்கிரியா? சிறுக்கி முண்டை? தருமம் வேற?” என்று கத்தியபடி குதிரை சவுக்கால் கழுத்தை இறுக்கி உள்ளே தூக்கிப் போட்டார்கள். தீ சுற்றிப் படர்ந்து ஏறி எல்லாவற்றையும் உண்டு செரித்தது.

பெருமழையோசையுடன் தான் மறுநாள் பொழுது விடிந்தது. நள்ளிரவில் தொடங்கிய மழை ஓயவே இல்லை. மேகங்கள் திரண்டு கருத்து உச்சியில் நின்றன. காற்றும் இடியும் இல்லாத சீரான மழை. மழை நீரில் குடிலின் சாம்பல் கரைந்து நீரில் கருமை ஏறி இருந்தது. அத்தனை நாள் பெய்யாத மழை. ஊழிக் காலத்து பெருமழை. கடவுளின் கருணையா கோபமா என்றறிய முடியாமல் பெய்தது பெருமழை.

பகுதி – 1
பகுதி – 2

3 comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.