குருதிச் சோறு 3

நரோபா

அன்று சிரமட்டார் காளியம்மன் திருவிழாவின் கடைசி நாள், பிராமண மண்டகப்படி. வைத்தியர் வீடு திமிலோகப்பட்டது. வைத்தியர் குடும்பத்து பங்காளிகள் எந்த மூலையில் இருந்தாலும் ஆடிக் கிருத்திகை அன்று ஊருக்கு வந்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஏனெனில் அன்று அவர்கள் குடும்ப தெய்வமான அன்னசௌரக்ஷாம்பிகைக்கு நோன்பு நோற்பது வழக்கம். அதன் பின்னர் அனைவரும் கலந்துகொள்ளும் சமபந்திபோஜனம் நடைபெறும். அதிசயமாக இந்த முறை இரண்டு திருநாள்களும் ஒரே நேரத்தில் வந்துவிட்டன.

இழவு விழுந்து பண்டிகைகள் இல்லாத ஆண்டுகளிலும்கூட இந்த பூஜையும் சமபந்தி போஜனமும் நிச்சயம் உண்டு. சபரியின் தாத்தாவிற்கு விபரம் தெரிந்ததிலிருந்து வருடம் தவறாமல் இது நடந்துவருகிறது. முதலில் லலிதா சஹஸ்ரநாமம் கூட்டாக பாராயணம் செய்வார்கள். பாலிலும் தேனிலும் தயிரிலும் பஞ்சாமிருததிலும் அபிஷேகம் செய்துவிட்டு மஞ்சள் குங்குமத்தில் அலங்காரம் செய்து பட்டுநூல் சார்த்தி, சிவப்பு அவல் பாயசம் நைவேத்தியம் செய்துவிட்டு தீபாராதனை காட்டுவார்கள். நோன்புக் கதையை வீட்டின் மூத்த சுமங்கலி சொல்லக் கேட்டுவிட்டு வீட்டுப் பெண்களெல்லாம் கையில் தோரம் கட்டிக்கொள்வது வழக்கம்.

சபரிக்கு முழுமையாக நினைவு திரும்பி அன்றோடு நான்கு நாட்கள் ஆகின்றன. சுடலைக்கு வாந்தி பேதியாகி வைத்தியரிடம் மருந்து சாப்பிட்டு கொஞ்சமாக தேறியிருந்தான். சபரி அவ்வப்போது கண்விழித்துப் பார்த்தான். ஏதேதோ அரற்றினான். சபரியின் அப்பா முதல் நாள் வந்து அவனைக் கொஞ்சியதுகூட அவனுக்கு மங்கலான நினைவுகளாக எஞ்சியிருந்தன.

மெட்ராஸ், ஆஸ்திரேலியா, சவுதி, புதுக்கோட்டை என உலகின் வெவ்வேறு கோடிகளில் வாழும் அத்தனை பங்காளி குடும்பங்களும் ஒன்று கூடியிருந்தார்கள். பூஜை முடிந்து சமபந்தி போஜனம் தொடங்குவதற்கு முன்னர் சபரியின் தாத்தா மருலாளிக்கு மரியாதை செய்வது வழக்கம். புது வேட்டியும் துண்டும் நூறு ரூபாயும் கொடுப்பார். ஒருகாலத்தில் நெல்லு மூட்டை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வைத்தியர் விவசாயத்தை கைவிட்டு பலவருடங்கள் ஆகிவிட்டன. மேலும் ஏழாம் திருநாளில் சேகரிக்கப்படும் அரிசியில் மறுநாள் அன்னதானத்திற்கு போக ஒராள் ஒருவருடம் வைத்து சாப்பிட போதுமானதாக இருக்கும்.

சபரிக்கு விடாமல் ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. சுதர்சன குளிகையும் அம்ருதாரிஷ்டமும் மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை கொடுக்கச் சொல்லியிருந்தார் வைத்தியர். அரிஷ்டம் உள்ளே இறங்கியவுடன் ஜுரம் குறைந்து வியர்த்து விழிப்பான். மீண்டும் ஜுரம் ஏறிவிடும். சபரி விழிப்பும் இல்லாத உறக்கமும் இல்லாத நிலையில் இருந்தான். லலிதா சகஸ்ரநாமத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஏதேதோ அம்மன் பாடல்கள் பாடப்பட்டன. அன்னரக்ஷாம்பிகை அஷ்டோத்தர நாமாவளியை தாத்தா வாய்விட்டு சொல்லிக் கொண்டிருந்ததை அவனால் கேட்க முடிந்தது.

அக்கரையில் உள்ள அம்மா அழைக்கிறாள். குளிர்ந்த கரிய நதி நீரின் மீது கால் நனையாமல் தரையில் நடப்பதுபோல் நடக்கிறான். பாதி வழியைக் கடக்கும்போது சடாரென்று ஒரு சுழல் வாய்பிளந்து அவனை விழுங்கிச் சுருட்டிக் கொண்டது போல் ஒரு கனவு. உடலெல்லாம் ஈரமாகியிருந்தது. மணியோசை கேட்டது. சபரியின் அப்பா அவனை மெதுவாக அமர செய்தார். கண்ணில் தீபத்தை ஒற்றி எடுத்தார். நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் வழித்து விட்டார்.

“வேர்த்திருக்கு. ஜுரம் விட்டுடுத்து” என்றார்.

“சபரி கண்ணா… வா… செத்த நாழி உக்காந்து கதை கேளு, அம்பாளுக்கு நமஸ்காரம் பண்ணு, எல்லாம் சரியாயிடும். வாடா கண்ணா…” சபரியின் பாட்டி அவனை அழைத்தார்.

சபரி தலை தூக்கி எழுந்து நின்று நான்கு நாட்கள் ஆனதாலோ என்னவோ தலைக்குள் வீர் வீர் என்று ஒரே சமயத்தில் நான்கைந்து ரயில்கள் பாய்ந்து கொண்டிருந்தது போலிருந்தது.

“அவன் அங்கேயே உக்காரட்டும், கதை சொல்லி முடிஞ்சப்புறம் நமஸ்காரம் பண்ணும்போ கூட்டீட்டு வந்துக்கலாம். குழந்த எழுந்து உக்காந்து நாளாறது இல்லையா, தலையெல்லாம் கிண்ணுன்னு இருக்கும்” என்றார் சபரியின் தாத்தா.

சபரியின் பாட்டி கதை சொல்ல ஆயத்தமானாள். சபரி பலமுறை கேட்ட கதைதான். ஆனால் இம்முறை சரியாக கண் திறக்க முடியாததாலோ என்னவோ கதை அவன் கண்ணுக்கு முன்னர் காட்சிகளாக ஓடத் துவங்கின.

பொதுவாக கதைக்கு நடுவில் வரும் இடைவெளிகளில் கதைகேட்பவர்கள் அனைவரும் ஊம் கொட்ட வேண்டும் என்பதே சம்பிரதாயம். அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க பாட்டி தொண்டையை இருமுறை செருமிக்கொண்டு, அம்பிகையை மனமார வணங்கி, கதை சொல்லத் தொடங்கினாள்

“மனுஷாள் எல்லாம் சண்டை சச்சரவு இல்லாம, அரசவாக்கை தெய்வவாக்காக ஏத்துண்டு தெய்வ நம்பிக்கையும் தர்ம சிந்தனையும் எல்லா மனுஷாளுக்கும் இருந்த ஏதோ ஒரு யுகத்துல”

“உம்”

“அழகாபுரி அழகாபுரி பட்டணம்ன்னு ஒரு ஊரு, அத அழகேச மகராஜன் நெறி தவறாம ஆண்டுவந்தான்”

“உம்”

“பகவானின் அனுக்ரகத்தினாலே மாதம் மும்மாரி பொழிஞ்சு, மனுஷாள் மனசெல்லாம் நெறஞ்சு சந்தோஷமா இருந்தா… நாடும் மக்களும் சுபமாகவும் சுபிக்ஷமாகவும் இருந்துண்டு இருக்கறச்சே”

“உம்”

“ஒருநா நாரதன் ஆகாச மார்க்கமா அழகாபுரியை தாண்டிப் போனான். மனுஷாள் எல்லாம் செழிப்போட ஆடி ஓடி சந்தோஷமா இருந்தத பாத்தான். பரத கண்டத்துல இப்படி எல்லோரும் சுபிக்ஷமாக இருந்தா பகவானோட கதி என்ன ஆறது? எல்லாரும் பகவான சேவிக்கிறத மறந்துடுவாளேன்னு அவனுக்கு தோனிப் போயிடுத்து. துக்கம் வந்தாதானே மனுஷாளுக்கு பகவான் நெனப்பு வரும்?”

“உம்”

“நேரா காக்கும் கடவுள், வைகுந்தவாசி, கௌஸ்துபத்தில் லக்ஷ்மியை தாங்கிண்டு திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள அனந்தசயனனிடம் போனான்’

“உம்”

“போனவன் சும்மா இருந்தானோ?”

“என்ன செஞ்சான்?”

“தேவர்களின் தேவா… மனுஷாள் எல்லாம் சுபிக்ஷமா இருக்கா… இப்படியே இருந்தா பக்தாள் பகவன் நாமத்தை மறந்துடுவா… அதுதானே உன்னோட ஆகாரம்… அவாளுக்கு கஷ்டம்னா என்னன்னு காட்டு… அப்பத்தானே கிருஷ்ணா கோவிந்தா ஜனார்தனான்னு உன்னை சரணாகதி அடைவா” ன்னு சொன்னான் நாரதன்.”

“உம்”

“யோகேஸ்வரனான விஷ்ணு பரமாத்மா இல்லையா… அவனறியாதது லோகத்துல ஒன்னு உண்டா? த்ரிகாலமும் அறிந்த எம்பெருமான் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதற்கிணங்க மனசுல எதையோ நினைச்சுண்டு சின்னதா செங்கமல இதழைக் குவிச்சு ஒரு புன்னகை பூத்தார்”

“உம்”

“இது போறாதா! பகவான் ஏதோ லீலை செய்யப்போறார்னு முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் புரிஞ்சி போய்டுத்து”

“உம்”

“அப்போ அழகாபுரி பட்டணத்துல விஸ்வக்சேனன் விஸ்வக்சேனன்னு ஒரு பிராமணன் இருந்தான்”

“உம்”

“அவனுக்கு அன்னபூரணி அன்னபூரணின்னு ஒரு பார்யா இருந்தா”

“ உம்”

“பூலோகத்தையும் ஏழு லோகங்களையும் ரட்சிக்கும் வாசுதேவனின் கிருபையினாலே அவாளுக்கு மொத்தம் பத்து குழந்தேள் புறந்தது. ஆணஞ்சு பெண்னஞ்சு..போறாதுன்னு வயித்துல வேற ஒன்னு ”

“உம்”

“முக்காலமும் யக்ஞம் வளர்த்த பிராமண ஸ்ரேஷ்டனான விஸ்வக்சேனனின் மனசுல வாயு பகவான் ஸ்ரீமன் நாராயணனின் ஆக்ஞைக்கேற்ப ஒரு தீய எண்ணத்த விதச்சான் ”

“உம்’

“ஒரு பிராமணனா இப்படியே வாழ்ந்துண்டு இருந்தா எப்படி? நாலு நக நட்டு சேத்து சௌக்கியமா நாமளும் வாழவேன்டாமா? வேத பாராயணத்தால் என்ன சுகம் கண்டேன்? இப்படி எல்லாம் அவனுக்கு தோணிப் போய்டுத்து”

“உம்”

“இப்படி குழப்பத்துல இருக்கறச்சே நாரதன் ஒரு தன வணிகனா சிலுக்கும் தளுக்குமா மின்னிண்டு வந்து அவன் முன்னாடி நின்னான்… ஏழு கடலுக்கு அப்பாலுள்ள மந்திரகிரிக்கு போய் வாணிபம் செஞ்சா சுபிட்சமா இருக்கலாம்னு அவனுக்கு துராலோசனை சொன்னான்”

“உம்”

“படுபாதகன். பிராமண தர்மத்தை விட்டுவிட்டு அழகான பார்யாகிட்ட கூட சொல்லாம கொள்ளாம பிள்ளைகளை எல்லாம் அப்படியே விட்டுட்டு சமுத்ர பிரயாணம் போய்ட்டான்”

“உம்”

“ஊரெல்லாம் இந்த கதை பரவி மகராஜா காதுக்கே போயுடுத்து..”

“உம்”

“தர்மத்தை மீறின குடும்பத்தை சாஸ்திரப்படி ஊரை விட்டு பிரஷ்டம் செய்து விடுங்கள் அப்டின்னு சொல்லிட்டார்”

“உம்”

“பத்து பிள்ளைகளையும் பதினோராவதா வயித்துல ஒன்னையும் சுமந்துண்டு இருந்த அவ பாவம் என்ன பண்ணுவா?”

“உம்”

“ நேரா ராஜனாண்ட போயி, ஒ ராஜனே என்னாத்துக்காரர் புத்தி பிறண்டு போனா நானென்ன செய்வேன்? பதிவிரதா தர்மத்தை அனுதினமும் அனுஷ்டிக்கும் என்னை தண்டிக்கலாமா? அஞ்சஞ்சசா பத்தும் வயித்துல ஒண்ணுமா சுமந்து நிற்கும் நான் எங்க போவேன், நானேது செய்வேன்ன்னு கதறி அழுதா”

“உம்”

“ தர்மம் எவ்வழியோ அரசன் அவ்வழி. இந்த நாடு செழிப்பா இருக்கிறதென்றால் அதுக்கு இந்த அழகேச மகராஜனின் நெறி தவறாத ஆட்சின்னு ஊரும் உலகமும் சொல்றது. ஆகையினாலே தர்ம பரிபாலனம் பண்ண வேண்டியே உன்னையும் பிள்ளைகளையும் பிரஷ்டம் செய்கிறேன்” ன்னான் மகராஜன்.”

“உம்”

“வேறு வழி இல்லாம, அழுதுண்டே, தன் விதிப்பயனை நொந்தபடி ஊர் எல்லைக்கப்பால் போய் ஒரு குடிசையக் கட்டிக்கொண்டு பிள்ளைகளை பேணி வந்தாள் மகராசி. அனுதினமும் தன் நிலையை பகவானிடம் சொல்லி சொல்லி அழுவா”

“உம்,”

“எப்படியோ நாரதனின் திட்டம், பலிச்சுடுத்து. மகராஜன் தர்மத்திலே தவறிட்டான். ரெண்டு தர்மம் ஒன்னுக்கு ஒன்னு மோதிக்கரைச்ச ..மேலான தர்மத்தையே கடைபிடிக்கணும்னு சாஸ்திரம் சொல்றது”

“உம்”

“வர்ணாசிரம தர்மம் மீறுன வகையில் அவனோட தண்டனை சரின்னாலும் பத்தினி தர்மம் மதிக்காத வகையில அது பெரிய தப்புல்லையோ?”

“உம்”

“ மகராஜன் தர்மம் தவறினான். உடனே இந்திரன் மழையை நிறுத்தினான்…”

“உம்”

“மனுஷாள் எல்லாம் தவிச்சுட்டா. பூலோகத்து தண்ணியெல்லாம் வத்திப் போயிடுத்து. விவசாயம் பொய்த்துப் போயிடுத்து. புதுசு புதுசா ரோகங்கள் பொறந்து மனுஷாளை எல்லாம் அள்ளிண்டு போணுது, பசுமாடுகளெல்லாம் மெலிஞ்சு செத்து விழுந்துண்டே இருந்துது… பூமாதேவி சிரிச்சா. நிலமெல்லாம் உலந்து வெடிப்பு வெடிப்பா பிளந்தது.”

“உம்”

“அழகாபுரி பட்டணத்த ஆண்டுண்டு இருந்த அழகேச மகராஜனுக்கு என்னப் பண்றதுன்னே தெரியல.பிராமண ஸ்ரேஷ்டர்களை கூப்பிட்டு ஆலோசிச்சான்.”

“ உம்”

“பிரசன்னம் போட்டு பாத்தத்துல சதுர்வர்ணமும் அதனதன் தர்மத்தை பரிபாலனம் செய்யணும் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையிலே உபதேசம் செய்கிறார். பிராமணர்கள் அவர்களுடைய தர்மமான யக்ஞத்தை சரிவர செய்யவில்லை, ஆஹுதிகளை ப்ரம்மாதி தேவர்களுக்கு அர்ப்பணிக்கவில்லை, அதுவே இந்த துர்சம்பவங்களுக்கு காரணம்.,, ஆகவே பரிகாரமா ஒரு பெரிய யாகத்தை செய்ய வேணும்ன்னு சொன்னா”

“உம்”

“உடனே அழகேச மகராஜா பிராமணர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து பிரம்மண்டம்மான யக்ஞத்தை அவர்கள் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்”

“உம்”

“பெரிய யாகத்திற்கு தேவையான பொன்னும் பொருளும் வைர வைடூரியங்களும் எல்லாம் கொண்டு வந்து பதினொரு நாள் யாகம் நடத்தினா… எல்லா தேவர்களுக்கும் ஆஹுதி போட்டா…”

“உம்”

“ஆனா மழை பெய்யல…எல்லாரும் சேந்து நாம சங்கீர்த்தனம் பண்ண ஆரம்பிச்சா..”

“உம்”

“எங்கும் பெரும் பஞ்சம். மனுஷாள் எல்லாம் வீட்டையும் மாட்டையும் விட்டுட்டு உயிர் பொழைக்க வேற வேற ஊருக்கு போயிண்டே இருந்தா”

“உம்”

“இதுக்கு நடுவுல பிரஷ்டம் செய்யப்பட கர்ப்பவதியான அன்னபூரணிக்கு பதினோராவதா ஒரு ஆண் குழந்தை பிறந்துடுத்து ”

“உம்”

“எங்கெங்கேந்தோ போற ஜனங்கள் எல்லாம் வழியில வர்ற ஆத்துல எல்லாம் போஜனம் யாசிச்சா. ஆனா எல்லா இடத்துலயும் பஞ்சம்… கொஞ்ச நஞ்சம் இருந்த தானியங்களையும் பட்டினிக்கு பயந்துட்டு ஒருத்தரும் ஆழாக்கு அரிசி கூட அவாளுக்கு போடல ”

“உம்”

“எங்கயுமே அன்னமில்லை. பிள்ளைகள் அழறது. நாயும் நரியும் வல்லூறும் மனுஷா செத்து விழறதுக்காக நாக்க தொங்கப் போட்டு காத்துண்டு இருக்குறது. ரா வேளைல ஊருக்கு வெளியில தண்ணியில்லாம வறண்ட ஆத்து தீரத்துல இப்படி பொழைக்க வந்த ஜனனமெல்லாம் கூடி அழுததாம்”

“உம்’

“வயத்துல பாழாய் போன அக்னி எரியறதே… பிள்ளைகளின் அழுகுரல் கேட்கலையா, தினமும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சாவதற்கு எங்களை மொத்தமாக அழைத்துக் கொண்டு போ தாயே…’ அப்டின்னு பரந்தாமன் கிட்டயும் தாயார் கிட்டயும் சொல்லி சொல்லி ராவெல்லாம் அழுது ஆராட்டியம் செஞ்சிருக்கா’

“உம்’

“ஊருக்கு வெளியே குடிசை போட்டு தங்கி இருந்த அன்னபூரணி இதையெல்லாம் கேட்டு மனமுடைஞ்சு போயிட்டா… “நாராயணா… எனக்கும் என் பிள்ளைகளுக்கும்கூட அன்னமில்லையே… நானொரு சத்தியமான பதிவிரதைன்னா என் கையால இவாளுக்கெல்லாம் அன்னம் சமைச்சி குடுக்க சக்திக் கொடப்பான்னு ராவெல்லாம் அழுது மன்றாடி கேட்டுண்டா”

“உம்”

“அவளுடைய அழுகுரலை கேட்டு மனமிரங்கி ஹ்ருதய கமலவாசினியான ஸ்ரீதேவி தாயார் திருமாலிடம் சொன்னார்… ‘போதுமிந்த விளையாட்டு பிள்ளைகள் பசியால் அழுகின்றனவே உமக்கு கேட்கவில்லையா இன்னும் என்ன சயனம்’ அப்படின்னு”

“உம்’

“பொறும் எல்லாம் எமது லீலா விநோதங்களின் ஒரு பகுதி என்பதை நீ அறியமாட்டாயா நான் சொல்லும் முறையில் அவளுக்கு வரம் அளி, அப்டின்னு வைகுண்டவாசன் தாயாரின் காதுல எதையோ சொன்னார்”

“உம்”

“அத கேட்டுண்ட தாயார் ஒரு சிரிப்பு சிரிச்சிண்டு அன்னபூரணியின் கனவில் பிரசன்னமானாள்..”.

“உம்”

“மகளே அன்னபூரணி உன் அழுகுரல் கேட்டு ஓடோடி வந்தேன் என்ன வரம் வேண்டும் கேள்” அப்டின்னு சர்வாபரணபூஷினியாக அவள் முன் ஸ்ரீதேவி தாயார் தோன்றியதும் அவளுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. கண்ணுல தண்ணி பொங்கி வழியறது. பேச்சு வரல. அப்படியே ஸ்தம்பிச்சு நிக்கறா”

“உம்”

“தாயாரின் திருப்பாதத்தை வணங்கி அவ… ’அம்மா தாயே… பசியால் துடித்து அவஸ்தை படுற மனுஷாளுக்கு எல்லாம் அன்னமிட வேணும். என் பிறவிக் கடனை இப்படித்தான் நான் தீர்த்துக்கணும்… என்னாத்துக்காரர் செஞ்ச பாவத்தையும் நான் இப்படித்தான் கழுவ வேண்டும்.அதுக்கொரு வரம் கொடு தாயே..’ அப்டின்னு கேட்டிருக்கா”

“உம்”

“தாமரையில் அமர்ந்திருக்கும் பத்மாசினியான தாயார் ‘ நீ கேட்கும் வரம் கொடுப்பேன்… ஆனால்..’ ன்னு இழுத்திருக்கா”

“உம்”

“அம்மா… ஏனம்மா இந்த ஆனால்… இந்த துயரத்தைப் பார்த்து எப்படி உயிர் வாழ முடியும்… சொல் தாயே…” ன்னு அன்னபூரணி தாயாரிடம் கேட்டாள்”

“உம்’

“மகளே பிரபஞ்ச நியதி என்று ஒன்றிருக்கிறது கர்மவினை என்றொன்று இருக்கிறது. ஏதோ ஒன்று பெறப்படும்தோறும் ஏதோ ஒன்று வழங்கப்படுகிறது. தேவர்களும் அந்த நியதிக்கு உட்பட்டவர்களே’ன்னு தாயார் சொல்லிருக்கா..”

“உம்”

“செல்வமெல்லாம் உன்னிடம் இருக்கும்போது என்னிடம் உனக்குக் கொடுக்க என்ன இருக்கிறது தாயே… நானோ பிரஷ்டம் செய்யப்பட ஏழை பெண். என் சொத்து எல்லாம் என் பதினோரு பிள்ளைகள் தான்…” ன்னு அன்னபூரணி கேட்டாளோ இல்லியோ..”

“உம்”

“தாயார் அதையே பிடிச்சுண்டா. ‘உன்னிடம் அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தை அளிக்கிறேன். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு அன்னமிடு. அதற்கு ஈடாக ஒவ்வொரு நாளும் உன் பிள்ளை ஒருவரை எமக்கு அனுப்பி வைப்பாய்…” அப்டின்னு ஒரே போடா போட்டா”

“உம்”

“இடி இடிச்சது போல, பிரளயம் வந்துட்டது போல, அக்கினி அத்தனையையும் விழுங்குவதுப் போல ஒரு வலி அவளுக்கு. ஆயிரமிருந்தாலும் அவளும் தாயில்லையா… தன் பிள்ளைகள் ஒரு பக்கம் பாலுக்கு அழுகின்ற ஆயிரம் பிள்ளைங்க மறுபக்கம்.. என்ன செய்வாள் அந்த பத்தினி தெய்வம்… கதறி அழுதாள்..”

“உம்’

“இதென்னடா பகவானோட சோதனை… எது எப்படியோன்னு மனச தேத்திண்டா. இங்க கஞ்சிக்கும் கூழுக்கும் கஷ்டப்படுறத விட வைகுண்டத்துல குழந்தேளுக்கு ஷட்ரச போஜனம் கிடைக்குமேன்னு அவளுக்கு தோணிப் போயிடுத்து..”

“உம்”

“இதுதான் உன் சித்தம் அப்டின்னா அப்பிடியே ஆகட்டும்னு மனச கல்லாக்கிண்டு தாயார்கிட்ட சொல்லிட்டா”

“உம்”

“தாயார் உடனே வைகுண்டத்துலேந்து ஸ்வர்ணத்தினால் ஆன அட்சய பாத்திரத்தை அவகிட்ட கொடுத்துட்டு ஆசீர்வாதம் பண்ணிட்டு மறைஞ்சு போயிட்டா”

“உம்’

“இதெல்லாம் கனவா இல்லை நினைவானு ஒன்னும் புரியல… ஒருநிமிஷம் கண்ண முழிச்சி பாத்தா குழந்தேள் எல்லாம் தூங்கிண்டிருந்தா. பக்கத்துல ஸ்வர்ண பாத்திரம் ஒன்னு..’ஆகா என்னே அவள் கிருபைன்னு நனைச்சிண்டா”

“உம்”

“மறுநாள் கார்த்தால எல்லாரையும் கூப்பிட்டா. கேசரியும் ஜாங்கிரியும்… களியும் கூழும்….அன்னமும் கூட்டும் பருப்பும் அள்ளி அள்ளிக் கொடுத்தா.’

“உம்”

“போஜன விஷயம் ஊருக்குள்ள பரவிடுத்து வர்ண பேதமில்லாம எல்லாரும் அவ கையால அன்னம் வாங்கி சாப்பிட்டா..”

“உம்”

“மகராசியா இரு. நன்னா இருன்னு எல்லாரும் ஆசி சொல்லி போனப்புறம் ராத்திரி வந்துடுத்து. மூத்த பிள்ளைய அனுப்பனுமே..”

“உம்”

“மூத்த பிள்ளைய முத்தம் கொஞ்சினா ..பாத்தா உடம்பெல்லாம் மரகதப் பச்சையில மின்றது. கண்ணுல தண்ணியா வந்துது. பத்திரமா இரு குழந்த அம்மா வந்துடுவேன்னு சொல்லி குழந்தைய அழைச்சுண்டு போக வந்த கருடன்கிட்ட அனுப்பி வெச்சா…”

“உம்”

“கண்ண கசக்கிண்டு குழந்தையும், அழாதே அம்மா போயிட்டு வரேன்னு சொல்லிட்டு கருடன் மேல ஏறி பறந்து போயிடுத்து..”

“உம்”

“ராத்திரி எல்லாம் அழுதுண்டு இருந்தா. புத்திர சோகம் இல்லையா… ஆனா யாருக்கும் கிடைக்காத பேரும் ஆச்சே..”

“உம்”

‘மறுநாளும் எல்லாருக்கும் அன்னம் பட்சணம் பாயசம்னு விதவிதமா ஆகாரம் போட்டா… ஒரே அமர்க்களம். தூரத்திலிருந்து எல்லாம் வர ஆரம்பிச்சுட்டா..”

“உம்”

“அன்னிக்கி ராத்திரி மூத்த மகளை அழைச்சிட்டு போக கருடன் வந்தான். பாத்தா அவளும் மரகதப் பச்சையில் மினுங்கிண்டு இருந்தா. பத்தரமா இரு குழந்த அம்மா வந்துடுவேன்னு சொன்னா. குழந்தையும் அழாதே அம்மான்னு சொல்லிட்டு கருடன் மேல ஏறி பறந்து போய்டுத்து. ராவெல்லாம் அழுகை”

“உம்”

“இப்படியே ஒவ்வொரு நாளும் கிழமையும் போனது. காலேல ஆனா கூட்டம் கூட்டமா ஜனங்களுக்கு அன்னமிடுறதும் ராவானா மரகதப் பச்சையில மினுக்கற குழந்தேள கருடன்ல ஏத்தி அனுப்பிட்டு அழறதுமா இப்படியே ஒம்போது நாள் போயிடுத்து..”

“உம்”

“அழகாபுரி பட்டணத்த ஆண்ட அழகேச மகராஜனுக்கு இந்த விஷயம் போய் சேர்ந்தது. அரண்மனையிலையும் அந்தபுரத்திலையும் அன்னமில்லாம போய்டுத்து. யானை எல்லாம் குதிரை மாறி எளைச்சுடுத்து. குதிரை எல்லாம் ஆடு மாறி சுருங்கிடுத்து. இப்படியான தனது படை பரிவாரங்களுடன் அன்னபூரணி அம்மையை பத்தாம் நாள் பார்க்க வந்தான்”

“உம்”

“அம்மா தாயே… என் குடும்பத்தையும் ஆதரிக்க வேணும்… ஏதோ புத்தி கெட்டு போய் பத்தினி தெய்வமான உன்னை பிரஷ்டம் செய்தேனே… மன்னிக்க வேணும்னு அவ கால்ல விழுந்தான்..”

“உம்”

“அவ பதிவிரதா தெய்வம் இல்லையா… பெருந்தன்மையோட, மகராஜா அப்படி எல்லாம் சொல்லகூடாது. கொடுத்துச் சிவந்த மன்னனின் கை தாழக் கூடாது. சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கும். மேலிருப்பவன் கீழும் கீழிருப்பவன் மேலும் உள்ளிருப்பவன் வெளியிலும் வெளியிலிருப்பவன் உள்ளேயும் போவான். அதுவே வாழ்க்கையின் நியதி. ஆகையினாலே நீங்களே உங்களுக்கும் உங்கள் படை பரிவாரங்களுக்கும் என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். அப்படின்னு ஸ்வர்ண பாத்திரத்தை தூக்கி அவர்களுக்கு முன் வைத்தாள்..”

“உம்”

“ராஜனுக்கு வெட்கம் தாங்கல. எப்பெற்பட்ட மனசு அப்டின்னு நெனைச்சு கண்ணீர் சிந்திண்டே அதுலேந்து தனக்கும் படை பரிவாரங்களுக்கும் அன்னம் எடுத்துக் கொண்டான்.”

“உம்’

“அன்றிரவு மரகதப் பச்சையில் மினுங்கிண்டு இருந்த தன் பத்தாவது பிள்ளையையும் முத்தமிட்டு அனுப்பி வெச்சுட்டு அழுதுண்டு இருந்தா. அவளை அனுப்பின பொறகு திடீர்னு அவளுக்கு பயம் வந்துடுத்து. பக்கத்துல கைய காலை ஆட்டிண்டு கல்மிஷம் இல்லாம சிரிச்சுண்டு இருந்த பதினோராவது குழந்தைய பாத்தா. இந்தப் பச்சிளம் கன்றை எப்படி நான் அனுப்புவேன்னு யோசிச்சா… மனசு கிடந்து அடிச்சுண்டுது…”.

“உம்”

“காலைல அன்னம் கேட்டு நின்னா இல்லைன்னு நான் எப்படி சொல்றதுன்னு அவளுக்கு ஒரே யோசனை. ராஜனும் அவனது படை பரிவாரங்களும் அன்னம் யாசிச்சு நிற்கிறான்… அவளுக்கு என்ன செய்றதுன்னே தெரியல”

“உம்”

“அந்த பிள்ளையை கையில் எடுத்தாள். முத்தமிட்டாள். உன் விதி எதுவோ அதுப்படி ஆகட்டும் அப்டின்னு சொல்லிட்டு அட்சய பாத்திரத்துல அரைப்படி எண்ணெய்ய வரவேச்சு அத உடம்பெல்லாம் ஊத்திண்டு விளக்குத் திரியில தன்னையே பத்த வெச்சுண்டு கரிக்கட்டையா எரிஞ்சு விழுந்தா. பக்கத்துல பரப்பிரம்மம் ஜெகன்னாதம்னு எதுவுமே தெரியாத அந்தக் குழந்த தேமேன்னு தூங்கிண்டு இருந்தது.”

“உம்”

“சத்த நேரத்துல குழந்தைக்கு பசி எடுத்துடுத்து. அழ ஆரம்பிச்சுட்டான். உடலை விட்டு பிரிஞ்ச அன்னபூரணி ஆன்ம ஸ்வரூபமா அதைப் பார்த்து அழுதுண்டே நின்னா…’ ஒ அம்புஜவல்லி தாயாரே… ஊரெல்லாம் அமூதூட்டினேனே என் பிள்ளை பசியால் துடித்து அழுகிறதே… மனமிரங்கி வரமாட்டாயா..”

“உம்”

“.அழுகுரல கேட்ட மகாலட்சுமி தாயார் துயில் முழிச்சு ஓடோடி வந்து பாத்தா. இதெல்லாம் நடந்துடுத்து..அவ தியாகத்தை பாத்து கண்ணீர் சிந்திய தாயார் அவளே அன்னபூரணி உருவம் எடுத்து குழந்தைக்கு பால் ஊட்டினாள்’

“உம்”

“உன் தியாகத்தை மெச்சினேன். இந்த பத்து குழந்தைகளும் முன்வினைப்பயன் காரணமாக உன் வயிற்றில் பிறந்த தசமுனிக் குமாரர்கள். ஆகையினாலே அவர்கள் எல்லாம் வைகுண்டத்துக்கு திரும்பியாகிவிட்டது. நீ சாக்ஷாத் அந்த காசி அன்னபூரணியின் அம்சமாக பூமியில் அவதரித்தவள். நீ திரும்பும் நேரம் வந்துவிட்டது.இதை அறிந்தே எம்பெருமான் இந்த விளையாட்டை நடத்தினார், என்றாள் தாயார்”

“உம்”

“சங்கும் சக்கரமும் தரித்த மகா விஷ்ணு ஸ்ரீதேவி தாயாருடன் அன்னபூரணிக்கு காட்சியளித்தார். ஊரார் பிள்ளையெல்லாம் உன் பிள்ளையாக வளர்த்தாய். உன் பிள்ளையை இனி ஊரார் வளர்க்கட்டும். உன் வம்சம் விளங்க இவனொருவன் இருக்கட்டும். இந்த மக்களுக்கு எல்லாம் அன்னம் வழங்கி பரிபாலனம் செய்த நீ அன்னசௌரக்ஷாம்பிகை என வழங்கப்படுவாய்..உன்னை வேண்டி ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் நோன்பிருப்பவர்கள் வீட்டில் அன்னம் என்றும் குன்றாதிருக்கும். நோய் நொடிகள் அண்டாதிருக்கும். செல்வம் கொழிக்கும். இல்லத்து பெண்கள் வழிபட்டு வந்தால் கணவனின் ஆயுள் வளரும். பூரண சௌபாக்கியம் கிட்டி, அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் அமோகமாக வாழ்வார்கள் ” ன்னு மகாவிஷ்ணு அருள் பாலிச்சார்..”

“உம்”

“பிரபு, மகராஜன் தன் தவறை உணர்ந்துவிட்டான், மனுஷாள் எல்லாம் பகவன் நாமத்தை விடாம ஜெபிச்சுண்டு இருக்கா. உங்கள் சோதனை போதும். பிள்ளைகளின் அழுகுரலுக்கு இணங்கி வரவில்லை என்றால் அவளென்ன தாய்? அவாளோட நம்பிக்கையை ரட்சிக்கணும். அனுக்ரகிக்க வேண்டும்… பஞ்சத்தைப் போக்கி அவர்களுக்கு அருள் செய்ய வேண்டும்..”ன்னு அம்பிகை தாயுள்ளத்தோட கேட்டுண்டா”

“உம்”

“பகவான் சிரிச்சுண்டே ‘ததாஸ்து’ ன்னு சொல்லிட்டு பரமாத்மன் ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீதேவி தாயாரும் அவளை அவர்களோட புஷ்ப விமானத்துல ஏத்தி கூட்டிண்டு போயிட்டா”

“உம்”

’மறுநாள் மனுஷாள் எல்லாம் வந்து பாத்தா குழந்தை மட்டுமிருக்கு அட்சய பாத்திரமும் இல்ல. அன்னபூரணியையும் காணல. என்ன ஏதுன்னு திகைச்சு நின்னப்போ ஆகாசத்துலேந்து அசரீரியா அன்னசௌரக்ஷாம்பிகை குரல் கேட்டுது,’ மகராஜன் தவறை உணர்ந்து விட்டதாலே தர்மம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுவிட்டது. உங்கள் அன்னபாத்திரங்களில் எப்போதும் உணவு நிரம்பியிருக்கும்… இனி நாடும் வீடும் செழிக்கும்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டா”

“உம்”

“மகராஜன் குடும்பத்தோட மண்டியிட்டு அவளை வணங்கினான்… மனுஷாள் எல்லாரும் வணங்கினா. உன் பிள்ளை இனி என் பிள்ளை, நான் கொண்டு போறேன்னு சொல்லி அவனை தூக்கிண்டு போயிட்டான் ராஜன்”

“உம்’

“அப்ப ஒருநாள் நம்ம குல முன்னோரோட கனவுல வந்த அம்பிகை. உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் செய்ததை மறக்கலாமா? என் குடிசைக்கு போ அங்கு என்னுடைய கால் கட்டைவிரல் இருக்கும் அதை எடுத்துண்டு வந்து பூஜை செய். சுபிக்ஷமாக இருப்பாய்,’ அப்படின்னு சொன்னத கேட்டு…”

“உம்”

“எரிஞ்சு கரிக்கட்டையா கடந்த அம்பிகையின் தேகத்துல அவளோட வலதுகால் கட்டைவிரல் மட்டும் பஸ்மம் ஆகாம கரிபடிஞ்சு அப்பிடியே இருந்தது… அதைத்தான் நாம இப்ப வரை பூஜை செஞ்சுண்டு வர்றோம்”

“உம்”

“குல பித்ருக்கள் சொன்ன பலன் கேட்ட பலன்..முன்னோர்களும் பெரியோர்களும் சொன்ன பலன் கேட்ட பலன்..நான் உங்களுக்கு சொன்ன பலன் கேட்ட பலன் ன்னு எல்லோர் பலனும் இதை கேட்ட உங்களுக்கும் உங்க சந்ததிக்கும் கிடைக்கட்டும்..அவ அருள் பூரணமா நிரம்பி வழியட்டும்..”

“உம்”

“ஓம் அன்னசௌரக்ஷாம்பிகே நமஹா”

எல்லோரும் அம்பிகைக்கு பூ போட்டு நமஸ்கரித்து கையில் தோரம் கட்டிக்கொண்டார்கள். சபரி கண்விழித்திருந்தான். வியர்வை வடிந்து உடல் சில்லிட்டு இருந்தது.

“தாத்தா மருலாளி வந்துருக்கார்..” ஓடி வந்து சொன்னாள் சபரியின் சித்தப்பா மகள்.

“சபரி கண்ணா… இங்க வா” தாத்தா அவனை அழைத்தார். சபரி மெல்ல நடந்து வந்தான். அவனை மெதுவாக கூட்டிக்கொண்டு வெளித் திண்ணைக்கு வந்தார். அங்கே மருலாளி நின்றுக் கொண்டிருந்தார். அன்று கோவிலில் பார்த்த மருலாளிக்கும் இன்று திண்ணையில் பார்க்கும் மருலாளிக்கும் சம்பந்தமே இல்லை என்று சபரிக்கு தோன்றியது. முகத்தில் அமைதி தோய்ந்திருந்தது. வைத்தியர் அவருக்கு செய்யவேண்டிய முறையை செய்தார். மருலாளி சபரியையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
“தம்பிக்கு கொஞ்சம் விபூதி இட்டு விடுங்க..” வைத்தியர் மருலாளியிடம் சொன்னார்.

மருலாளி வேட்டி மடிப்பில் முடிந்து வைத்திருந்த துன்னூறை எடுத்து, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு முணுமுணுத்தபடி சபரியின் நெற்றியில் பூசிவிட்டார். அவர் ஏதாவது சொல்லக்கூடும் என சபரிக்குத் தோன்றியது, ஆனால் வந்த வழியில் திரும்பிச்சென்றார். சபரிக்கு அவர் தன்னைப் பார்த்து சிரித்த மாதிரி இருந்தது. கொஞ்சம் தெளிவாக இருந்தது.

உள்ளே சென்று அம்பிகைக்கு பூ சமர்ப்பித்து வணங்கினான். பின்கட்டில் சமபந்தி போஜனத்திற்காக பெரும் பந்தலிடப்பட்டிருந்தது. சுடலையும் வந்திருந்தான். கையசைத்தான். வைத்தியர் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ரசஞ்சாதம் மட்டும் சாப்பிடு. போ சுடலை கூட உக்காரு” என்று சபரியை அனுப்பி வைத்தார்.

சுடலையும் அவனும் பழையபடி உற்சாகமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“என்றா… ஆத்தா அப்புன அப்புல ஆளே எந்திரிக்கல போல..” சிரித்தான் சுடலை. இலையில் என்னென்னவோ பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.

“உனக்கு ஆத்தா வவுத்துலப் பிளக்க பிடுங்கிடான்னு சொன்னாக..” சபரியும் சிரித்தான். அம்பிகையின் நைவேத்திய பிரசாதங்களை கொண்டு வந்தார்கள். ஏதோ நினைவு வந்தவனாக சுடலையிடம் சபரி கேட்டான்.

“ஆமா, அன்னிக்கி எண்ணும்போது எத்தன கல்லுடா இருந்துச்சு?”

பாயசத்தைக் உறிஞ்சியபடியே சுடலை சொன்னான். “ஒ அதுவா… பெரிய கல்லையும் சேத்து மொத்தம் பதினோரு கல்லுடா..”

ஒரு உக்கிரமான துறு நெடி அவனைச் சூழ்வதை சபரி உணர்ந்தான்.

பகுதி – 1
பகுதி – 2

image credit – wikimedia

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.