சருகுகள் – அமெரிக்கக்காரி சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து

கோகுல் பிரசாத்

16 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கடைசிச் சிறுகதையான ‘அமெரிக்கக்காரி’யில் லான்ஹங் மதியிடம் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என சொல்லிக் கொண்டே இருக்கிறான். அ முத்துலிங்கத்தின் தலையாய நோக்கமும் வாசகரை ஆச்சரியப்படுத்துவது தான். இலகுவான மனநிலையில் பக்கங்களை அனாயசமாக புரட்டிக் கொண்டே செல்லலாம். மொழியைத் திருகித் திருகி எழுதுவதில்லை. சோதனை முயற்சி என்ற பெயரில் வாசகரை பரிசோதனை எலியாக்கி பலி கொடுப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கதைகளை ஞாபக இடுக்குகளில் சுமந்தலைந்து கொண்டு திரிய வேண்டிய அவசியமேதும் ஏற்படப் போவதில்லை. வாசிக்க வாசிக்கவே கழன்று கொண்டு காணாமல் போய்விடும் அற்பக் கதைகள். வேண்டாத பொருளை தொலைத்து விட்டு அழிச்சட்டியம் பண்ணும் சமர்த்துப் பிள்ளைகளும் இருநூறு ஆண்டுகள் வாழப் போகிறவர்களும் கட்டுரை எழுதுவதாக ஒப்புக் கொண்டவர்களும் இரண்டாவது முறை வாசித்துக் கொள்வார்கள்.

இவை கட்டுரை, சிறுகதை, முன்னுரை, அனுபவம் போன்ற வகை மாதிரிகளுக்குள் அடங்க மறுக்கிற வரையறைகளுக்குள் விழுந்து விடாத அபாரமான தனித்துவம் கொண்டவை. ஒரே சமயத்தில் நாட்குறிப்பு போலவும் தகவல் களஞ்சியம் போலவும் எண்ணச் செய்யும் மாயாஜால விளையாட்டை நிகழ்த்தி முகமூடிகளை கழற்றி மாற்றி அணிந்து வாசகரை திக்குமுக்காட வைக்கின்றன. Genre லேபிள்களை மாற்றி மாற்றி ஓட்டினாலும் அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன். எட்ட நின்று வேடிக்கை பார்த்தவாறே சம்பவங்களை வெறுமனே சொல்லிச் செல்லும் இவரது பாணியில் போதாமைகள் பூதாகரமாகத் தென்படுகின்றன. ஓர் இலக்கிய ஆக்கத்திற்குத் தேவைப்படும் நுணுக்கமான அவதானிப்புகளும் நுட்பமான விவரணைகளும் இவற்றில் இல்லை. ஓர் அந்நிய நிலத்திற்குள் முதன்முறை அலையும் மனிதனைக் கூட அந்த மண்ணையும் மாந்தரையும் கூர்ந்து கவனிக்க ஆசிரியர் அனுமதிக்க மறுக்கிறார். நைரோபி வீதி ஆள் அரவமற்று இருந்தது என்கிறார். இப்படிச் ‘சொல்வதற்கு’ கதைக் களத்தை எமக்கு பரிச்சயமான மண்ணிலேயே அமைத்திருக்கலாம். அரவமற்று ‘எப்படி’ இருந்தது என்பது முக்கியமற்றதாக ஆகிவிடும் பொழுது நைரோபி என்பது ‘ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத களங்களில் நிகழும் கதைகள்’ எனப் பீற்றிக் கொள்வதற்கான அசட்டுக்காரணம் மட்டுமே என்றாகி விடுகிறது.

மனித உணர்வுகள் வெளிப்படுவதற்கான அடிப்படை முகாந்திரத்தை எத்தனை முறை துழாவித் துழாவி தேடினாலும் கண்டடைய முடிவதில்லை. கதை நிகழ்புலங்களும் மனித முகங்களும் மாறுகின்றன. ஆனால் எல்லோரும் நம் பொதுப்புத்தியில் சிறைப்பட்டிருக்கும் பிம்பங்களின் ‘மாதிரிகளாக’வே (Samples) இருக்கிறார்கள். ‘எருமை மாடு மேலே மழை பெய்ஞ்சா எனக்கென்ன’ மாதிரி உப்புச் சப்பில்லாமல் வாழ்வை கடக்கிறார்கள். ஏனெனில் அத்தனை நபர்களையும் கண்காணித்தபடி நமக்கு கதை சொல்வது கிட்டப் பார்வை குறைபாடு உடைய ஒரே ஆள். இந்தக் கதை சொல்லும் முறையில் இவரால் இவ்வளவு தான் இயலும் போல. முப்பரிணாமமோ பஞ்சபரிணாமமோ எதிர்பார்க்கவில்லை. தட்டையாக இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாகி விடுகிறது என்கிறேன். எல்லாப் பெண்களின் இடைப் பிரதேசம் கூட, எந்த நாட்டுப் பெண்களானாலும் சரி எந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களானாலும் சரி, மறைக்கப்படாமல் இருக்கிறது. இடைப் பகுதியின் நிறம் ஒருத்திக்கு பழுத்த பரு நிறத்திலும் இன்னொருத்திக்கு மண்புழு நிறத்திலும் இருப்பது மட்டும் ஆறுதல். அப்புறம் போனால் போகிறது என்று ஓரிரு இடங்களில் ஒன்றிரண்டு தடவைகள் கழுத்துப் பள்ளத்திற்கும் பன்றி இறைச்சியைப் போன்ற தொடைகளுக்கும் போய் வருகிறார். இந்தக் கதைகளை ‘முந்தி எழுதியது’ போலலல்லாத கதைகள் என முன்னுரையில் அ முத்துலிங்கம் குறிப்பிட்டாலும் ஒரே தொகுப்பிலேயே சில குறிப்பிட்ட விஷயங்கள் பல கதைகளில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதை கவனிக்க மறந்து விட்டிருக்கிறார். நினைவூட்ட வேண்டியது எம் கடமை.

வாசகர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து இரசிப்பார்கள் என்ற நம்பிக்கையிலோ ஓ ஹென்றி திருப்பம் வைக்கிறேன் பேர்வழி என்றோ ‘அவள் இன்னும் 118 வருடங்கள் காத்திருக்க வேண்டும்’, ‘மேலும் 21 வருடங்கள் பிடித்தன’ என சில கதைகளை முடிக்கிறார். (லூசியா & உடனே திரும்ப வேண்டும்). தன்னுடைய கதைகளில் இடம்பெறும் பழங்காலத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 14 வயது தான் இருக்க வேண்டும் என தனக்குத் தானே விதித்துக் கொண்டிருப்பார் போல. (லூசியா & புகைக்கண்ணர்களின் தேசம்). ஒரு வயது கூடியிருந்தாலோ குறைந்தாலோ என்ன குறை ஏற்பட்டுவிடப் போகிறது எனப் புரியவில்லை. பின் ஏதோவொரு வருடத்தை குறிப்பிட்டு ‘அந்த ஆண்டில் இதே போல நடந்தது என நினைத்துக் கொண்டேன்’ என பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கதைசொல்லி நினைத்துக் கொள்கிறார். இரண்டும் வெவ்வேறு தனித்தனிக் கதைகள் என்றாலும் பதினாறாம் நூற்றாண்டில் கண்டி அரசனால் சிறை பிடிக்கப்பட்ட ரோபர்ட் நொக்சிற்கும் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் கதையை வேறொரு நிலப்பகுதியில் விவரிக்கும் கதை சொல்லிக்கும் சொல்லி வைத்தாற் போல 1611ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட பைபிள் தான் கிடைக்கிறது. (லூசியா & பத்தாவது கட்டளை). ரோபர்ட்டிடம் இருந்து பல கைகள் மாறி பல நூற்றாண்டுகள் கடந்து இடையே ஏழு கதைகளை வேறு தாண்டி கதை சொல்லியிடம் அதே பைபிளை எவரோ எவருக்கோ எழுதிய கள்ளக்காதல் கடிதத்துடன் காலம் சேர்ப்பித்ததை வாசக இடைவெளிகள் எனக் கருதி நாம் நிரப்ப வேண்டுமா போன்ற குழப்பங்களுக்கு வாசகர்கள் தங்களை ஒப்புவித்துவிடக் கூடாது.

‘பரிமளத்திற்கு 33 வயதிருக்கும் என்பதை ஒருவரும் சொல்லவே முடியாது’ என எவரும் கணிக்க முடியாத பரிமளத்தின் வயதை துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் ஆசிரியரால் ‘பரிமளத்தின் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்’ எனத் தோராயமாகத் தான் குறிப்பிட முடிகிறது.(மன்மதன்) ‘விவரமான ஆள் தான்’ என நினைத்துக் கொண்டேன். (அ.மு.பாதிப்பு!) இதற்காவது ஆண்களின் சார்பாக ஒரு பொது மன்னிப்பை வழங்கி விடலாம். வேட்டை நாய் சிறுகதை சம்பந்தமே இல்லாமல் தொடங்கி இலக்கற்று திரிந்து மற்றுமொரு ‘நினைத்துக் கொண்டான்’ இல் முடிகிறது. இந்த ‘வேட்டை நாய்’ என்பது குறியீடாக இருக்கும் பட்சத்தில் விபரீதமான முடிவுகளை நோக்கித் தள்ளுகிறது. ஒரு கட்டிப்பிடி சம்பவத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றை தழுவி  எழுதப்பட்ட பத்தாவது கட்டளை எனும் கதை மாதிரி ஒன்று சுந்தர ராமசாமியின் ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ போல பசப்பலாகி விடுமோ என பயந்து கொண்டிருந்தேன். பயந்ததை விட மோசமாக பிசுபிசுத்து விட்டது. கதையின் இறுதித் திருகலில் வாசகருக்கு உண்டாக வேண்டிய நம்பகத்தன்மை குறித்து ஆசிரியர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ‘இதெல்லாம் தனக்கு நேரவில்லை’ என திசை மாற்றுவது வடுவூர் துரைசாமி காலத்து டெக்னிக் ஐயா.

கதைகள் நெடுக Gimmicks-களுக்கு பஞ்சமே இல்லை. தான் வாசிக்க நேர்ந்த அறிவியல் தகவல்களை மையமாக வைத்து அவற்றை சுற்றி கதை பண்ணிவிடுவது ராஜேஷ்குமாரின் வழக்கம். அ முத்துலிங்கமும் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாரே என அங்கலாய்ப்பாக இருக்கிறது. எலிஸபெத் மகாராணி பதவி ஏற்றது, எல்லைக்கோடுகளுக்கு இடையே நிலவும் நேர வித்தியாசம் போன்று தகவல் துணுக்குகளாக வாசித்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கக் கூடியவற்றை நம்பி பல கதைகளை சமைத்திருக்கிறார். அவற்றை அந்தக் கதைகளில் இருந்து பிடுங்கி எறிந்து விட்டால் எஞ்சுவது எதுவுமில்லை. ‘கொடிக்கயிற்றில் மறந்து போய்விட்ட கடைசி உடுப்பு போல’ என சிற்சில இடங்களில் திடுக்கிட வைக்கிறார். சில இடங்களில் மென்னகையும் கையளவு சொற்களிலேயே முழுமையாக திரண்டெழும் ஒரு சில கதாபாத்திரங்களின் சித்திரமும் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு போதுமானது அல்ல. அ முத்துலிங்கத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும் போல ‘முன்பு எப்படியெல்லாம் நன்றாக எழுதியிருக்கிறார்’ என வாசகர்கள் நினைத்துப் பெருமூச்செறிய வேண்டியது தான்.

 

அமெரிக்கக்காரி, அ. முத்துலிங்கம்

வெளியீடு : காலச்சுவடு.

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.