டேவிட் டென்பி எழுதிய திரை விமரிசனத்தின் முழு வடிவை இங்கு வாசிக்கலாம் – நியூ யார்க்கர்.
அமெரிக்க திரைப்படங்களின் தொடர்ந்த அசைவுகளுக்கும் கட்டாயமான கட்ஷாட்களுக்கும் நாம் மிகவும் பழகிப் போயிருக்கும் காரணத்தால் ஐடா என்ற இந்த அருமையான, புதிய போலிஷ் மொழி திரைப்படத்தின் நிச்சலனம் ஒரு அதிர்ச்சியாய் வருகிறது. மௌனத்தையும் உருச்சித்திரத்தையும் (portraiture) இத்தனை வெளிப்பாட்டுத்தன்மையுடன் பயன்படுத்திக் கொள்ளும் வேறெந்த திரைப்படமும் என் நினைவுக்கு வருவதாயில்லை; இந்தப் படத்தின் பரவசமான கறார்த்தன்மை என்னை ஒரு திகைப்பு நிலைக்குக் கொண்டு சென்றது. நண்பர்களும் தங்கள் அனுபவமும் இது போன்றே இருப்பதாகச் சொல்கின்றனர்: திகைப்பில்லை எனில், கூர்மையான கவனக்குவிப்பும் மிகுந்த மனநிறைவும் நேர்ந்ததாகச் சொல்கின்றனர். கச்சிதமான இந்த மாஸ்டர்பீஸ் நறுக்கான வரையறையோடும் கணக்கு தீர்த்துக் கொள்ளுதலின் தீர்மானத்தோடும் இருக்கிறது- கோபமும் துக்கமும் ஒன்றாய் கலத்தலில் உள்ள கணக்கு தீர்த்தல்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் பவெல் பாவ்லிகோஸ்கியும் உடனிருந்து திரைக்கதை வடிவமைத்த ரெபெக்கா லென்க்யாவிக்ஸும் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனித்தனியாக போலந்திலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடிபுகுந்தவர்கள். பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் ஆவணப்படங்கள் செய்துகொண்டிருந்த பாவ்லிகோஸ்கி, அப்போது அறியப்படாதவராக இருந்த எமிலி பிளண்ட் நடித்த “My Summer of Love” (2004), ஈதான் ஹாக்கும் கிறிஸ்டின் ஸ்காட் தாமசும் நடித்த “The Woman in the Fifth” (2012) முதலான படங்கள் உட்பட ஆங்கில மொழி திரைப்படங்கள் இயக்கத் துவங்கினார்.
இயக்குனருக்கும் எழுத்தாளருக்கும் ஐடா தீவிர உணர்வுகள் நிறைந்த, கசப்பான திரும்புதலாக இருக்கிறது. ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருந்த 1961 ஆம் ஆண்டைக் கதைக்களமாகக் கொண்ட இத்திரைப்படம் நினைவுகளை மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்கிறது. திரைப்படத்தில் உள்ள ஏறத்தாழ ஒவ்வொரு அம்சமும் போர் ஆண்டுகளையும் அவற்றின் பின்னிகழ்வுகளையும் நினைவுகூர்கின்றன. தாங்கள் மன்னித்திராத, ஆனால் விட்டுப் பிரிந்திராத தாயகத்தை திரைப்படத்தில் அதன் ஆக்குனர்கள் எதிர்கொள்கின்றனர்…
ஒற்றைக்கதை ஒன்றைச் சொல்வதன் மூலம் ஒரு தேசத்தின் ஜீவனைக் கைப்பற்றுவது எப்படி? ஒவ்வொரு ஷாட்டையும் ஒரு குறும்படிமத்துக்குரிய (icon) வரையறைத்தன்மை கொண்டதாக படம் பிடிக்க வேண்டும். “சினிமாவின் செப்பிடுவித்தை ஆற்றல்கள் இனியும் எனக்கு உற்சாகம் அளிப்பதாயில்லை” என்று சொல்லியிருக்கிறார் பாவ்லிகோஸ்கி. இயக்குனரும் அவரது புதுமுக சினிமாட்டோகிராபர் லுகாஸ் ஸாலும் இத்திரைப்படத்தை முழுக்க முழுக்க ஹார்ட் ஃபோகஸ் கருப்பு வெள்ளையில் எடுத்திருக்கின்றனர். இதன் காட்சிகள் தனித்தன்மை கொண்டதாக இருக்கின்றன, வீரியம் மிக்கவையாக இருக்கின்றன – எந்த அளவுக்கு எனில், அவை நம் புலன்களுக்குக் கூருணர்வு அளிக்கின்றன.
ஷாட்டுக்கு ஷாட் நீரோட்டமாய்ப் பரவும் உணர்ச்சிகள் இல்லையெனில் ஐடா ஒரு நிலைப்படம் என்று சொல்லலாம் (static); படம் முழுமையும் உணர்ச்சிகள் இந்த இரு பெண்களின் உறவுக்கு ஒரு மின்னதிர்வு அளிக்கின்றன. தேவையற்றவற்றைத் திரையிலிருந்து விலக்கிவிடும் பாவ்லிகோஸ்கி ஏறத்தாழ எப்போதுமே கேமிராவை நகர்த்துவதில்லை; இதிலுள்ள பல காட்சிகள் நீண்ட நேரம் நீடிக்கும் ஒற்றை ஷாட்டுகள். திரைக்காட்சிகளில் விழும் வெளிச்சம் ஏதோ ஓரிடத்திலிருந்து மட்டுமே ஒளிர்கிறது – இது முகங்களை அடிக்கடி அறையிருளில் ஆழ்த்துகிறது (இந்த இரு பெண்கள் பற்றி நாம் புரிந்து கொள்வதும் எப்போதும் முழுமையடையாமல்தான் இருக்கும்). சில இடங்களில் மனித உருவங்கள் பிரேமின் கீழ்ப்பகுதியில் இருத்தப்பட்டிருக்கின்றன, அவர்களுக்கு மேலே உயரத்தில் போலந்தின் பிரம்மாண்டமான மூடுவானம் இருக்கின்றது, சபிக்கப்பட்ட ஒரு தேசத்தின் சுமை அத்தனையும் அதன் மக்களை அழுத்துவது போன்றது இது. ஓரே சமயத்தில் அழகாகவும் அடக்கி ஆள்வதாகவும் உள்ள நிலத்தோற்றத்தின் பனிக்கால வெறுமை காற்றில் ஏதோ ஒரு அமானுடத்தன்மை உள்ளதான ஒரு உணர்த்தலை அளிக்கிறது, நாம் பிணம்தின்னிகள் இல்லாத ஒரு பேய்ப்படத்தைப் பார்ப்பது போலிருக்கிறது.
இத்திரைப்படத்தில் எத்தகைய தாக்கங்கள் இருக்கின்றன என்று நம்மால் அடையாளம் காண இயலும் – கார்ல் தியோடோர் ட்ரேயர், இதற்கான சாத்தியம் அதிகம், ராபர்ட் பிரஸ்ஸான், அறுபதுகளுக்குப் பின்னும், எழுபதுகளின் துவக்க ஆண்டுகளில் வந்த பிரான்ஸ்வா த்ரூபாவின் “The Wild Child’ போன்ற ஐரோப்பிய கலைப்படங்கள், ஐடா தன் கதைக்களமாகக் கொண்டுள்ள காலகட்டத்தில் வெளிவந்த போலிஷ் திரைப்படங்கள் என்று பல சொல்லலாம். ஆனால் இந்தப் படம் போலிருக்கும் பெரிய படம் வேறு எதுவொன்றும் என் நினைவுக்கு வரவில்லை. பாவ்லிகோஸ்கி நமக்குப் பழக்கப்பட்ட சாதாரண யதார்த்தத்தை இதில் விவரிக்க முனையவில்லை, ஆகக்குறைந்த யதார்த்தம் என்று நாம் அழைக்கக்கூடிய ஒன்றுக்கே முயற்சிக்கிறார் (minimal realism). இங்கு சினிமாத்தனக் குப்பைகள் சுத்தமாகக் கத்தரிக்கபட்டுவிடுவதால் மிச்சமிருப்பதில் ஏறத்தாழ மயக்கநிலை கவனம் கைகூடுகிறது: கன்னிகாசிரமத்தில் மௌனமாய் அனைவரும் உணவு உட்கொள்ளும்போது கன்னிமை தரித்தவ்ர்களின் ஸ்பூன்களின் ஓசை, மென்மையான சில கிராமப்புற சத்தங்கள், தட்டையான சூழ்நிலத்தில் நீண்ட தூரம் பயணித்தலில் உள்ள வசியப்பட்ட சலிப்புத்தன்மை….
ஐடா எண்பது நிமிட நேரம்தான், ஆனால் பாவ்லிகோஸ்கி தனக்குத் தேவைப்பட்ட நேரத்தை எடுத்துக் கொள்கிறார். இரு பெண்களும் வாண்டாவின் கடந்தகாலத்து கிராமத்தைப் பற்றி கிராமத்தினரிடமும் நகர மக்களிடமும் விசாரித்துச் செல்கையில் விஷயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ள வண்டியை நிறுத்துகிறார்கள், சண்டை போட்டுக் கொள்கிறார்கள், அல்லது மௌனமாக வெறித்தபடி இருக்கிறார்கள். உணர்வளவில் மிக்க அவசரமான விசாரணை இது, ஆனால் செயல்வடிவில் மேம்போக்காக இருக்கிறது. நம் வாழ்வின் தேடல்கள் இப்படித்தான் இருக்கின்றன. இந்த இருவருக்கும் இடையிலுள்ள உறவு பிரேமுக்குள் கச்சிதமாக நிறுவப்பட்டு வலுக்கூட்டப்பட்டு, தொடர்ந்து மாறிக்கொண்டே, வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. முடிவில் இது உணர்வுத் தீர்மானத்தையும் எட்டுகிறது. பாவ்லிகோஸ்கி வசனங்களையும் கத்தரித்திருக்க வேண்டும், எதுவும் அதிகம் பேசப்படுவதில்லை: நாம் என்ன புரிந்து கொள்கிறோம் என்பதுதான் இறுதியில் முக்கியமாக இருக்கிறது.
ஒரே சமயத்தில் அடர்த்தியாகவும் விரிவாகவும் உள்ள ஐடா, தடயங்களைச் சேகரித்தல், அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடாமல் கவனமாக இருத்தல் என்று பார்வையாளர்களைத் தொடர்ந்து கடுமையாக உழைக்கச் செய்கிறது. நியூ ரிபப்ளிக்கில் டேவிட் தாம்ஸன் எழுதியது போல், இந்தப் படம், “அவசிய நிகழ்வுகளை நீக்கிவிடும் துணிச்சல் கொண்டதாக இருக்கிறது, அவை மறைமுகமாக நமக்கு அளிக்கப்பட்டு விடுவதால்”.
என்னதான் சொன்னாலும், இதன் வன்முறை எப்போதோ இருந்த கடந்தகாலத்துக்கு உரியது. 1961லும் இப்போதும் எது முக்கியமாக இருக்கிறது என்றால், அந்தக் குற்றங்களைச் செய்தவர்களும் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இப்போது எப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதுதான். நியாய அநியாயங்களைத் தீர்மானிப்பதைக் கைவிடாமல், இத்திரைப்படத்தைச் செய்தவர்கள் போலந்தில் இருந்த அனைவரும் பிரச்சினைகளில் சிக்கியிருந்தனர் என்பதை நிறுவி விடுகின்றனர். வஞ்சம் தீர்த்தல் அல்ல, ஏற்றுக் கொள்ளுதலே இந்தப் படத்தைச் செலுத்தும் சக்தியாய் இருக்கிறது.
நன்றி : நியூ யார்க்கர்
image credit – Living Room Theatres Blog
One comment