
வில் ஹேவார்ட்டின் இந்த பேட்டியின் முழு வடிவை பாம்ப் தளத்தில் வாசிக்கலாம்
வில் ஹேவார்ட்: ஆங்கில மொழிபெயர்ப்பில் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ள The Guest Catஐ என்னவென்று விவரிப்பீர்கள்? ஓரே சமயத்தில் அது டயரிக் குறிப்புகள் பலவும், கட்டுரை போலவும், ஏன் ஒரு கடிதம் போலவுமே இருக்கிறது.
டகேஷி ஹிராய்டா: அடிப்படையில் நான் ஒரு கவிஞன். கவிதை எழுதுபவன். ஆனால் விமரிசனங்களும் கட்டுரைகளும்கூட எழுதியிருக்கிறேன். நான் கவிதையில் சோதனை முயற்சிகள் மேற்கொள்கிறேன், அதன் பல்வேறு வடிவம் சார்ந்த சோதனை முயற்சிகளில் ஈடுபடுகிறேன். For the Fighting Spirit of the Walnut என்ற என் இரண்டாம் கவிதைத் தொகுப்புதான் ஆங்கில மொழிபெயர்ப்பில் முதலில் வெளிவந்திருக்கிறது. அது துண்டிக்கப்பட்ட வடிவில் எழுதப்பட்டது. ஆனால் The Guest Catல் அந்தப் பாணியை மாற்றிக் கொண்டேன். அதைவிட சரளமான உரைநடை பாணியில் எழுதினேன், இதுவும் முழுமையடையாத துண்டங்களாகதான் இருக்கிறது. சமகால இலக்கிய வடிவங்கள் குறித்து விமரிசனங்கள் எழுதிய காரணத்தால் நான் மேற்கொண்ட மாற்றங்கள் இவை. கவிதை அதன் வடிவம் குறித்த விமரிசனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும், உரைநடையையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கே: நிச்சயமாக இவ்விரு புத்தகங்களும் மாறுபடுகின்றன. ஆனால் இரு நூல்களிலும் குறிப்பிட்ட ஒரு வகையான விவரணையைப் பார்க்க முடிகிறது – பட்டறிவு அடிப்படையிலான உணர்திறன் என்றுகூட அதைச் சொல்ல முடியும் (empirical sensibility). எதுவும் அலங்கரிக்கப்படவில்லை. அனைத்துமே உள்ளபடியே விவரிக்கப்படுகின்றன, அல்லது அவை எவ்வாறு புலப்படுகின்றனவோ அவ்வாறே விவரிக்கப்படுகின்றன.
பதில் – ஐ-நாவல் என்று சொல்லப்படும் ஜப்பானிய மரபில் The Guest Cat எழுதப்பட்டுள்ளது (I-novel). இவ்வகை நாவல் கட்டுரைக்கு மிகவும் நெருக்கமானது. அதே சமயம், இரண்டுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை வெளிப்படுத்துவதில் அக்கறை கொண்ட வடிவமும் கூட. நாவல் ஒரு புனைவு வடிவம். கட்டுரை அபுனைவு வடிவம். இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள நுட்பமான வேறுபாடுகளை அறிவதில்தான் எனக்கு ஆர்வம் இருக்கிறது – இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள வெளியிலும், இவ்விரண்டுக்கும் பொதுவான இடங்களிலும்.
கே: பூனையைப் பற்றி ஏன் எழுத வேண்டும்?
பதில்: என் வாழ்வு குறித்த பதிவுகள் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன, ஆனால் ஆவணப்பதிவுகள் புனைவிலிருந்து வெகு தொலைவில் உள்ளவை. நாங்கள்- அதாவது, என் மனைவியும் நானும்- குறிப்பிட்ட இந்த ஒரு பூனையைச் சந்தித்தோம். அந்த நிகழ்வு எங்கள் வாழ்க்கையின் திசையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இது விதியின் செயல். எங்கள் விஷயத்தில் பூனை விதியின் கருவியாக இருந்தது.
கே: பூனை எல்லைகளைத் தாண்டிச் செல்வது குறிப்பிடத்தக்கது, அது கதைசொல்லியின் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் போய் வருகிறது – பூனையை ஒரு குறிப்பிட்ட வகை சுதந்திரத்தின் குறியீடாக வாசிப்பது மிகவும் சுலபமான விஷயம். சிபி, உங்கள் புத்தகத்தில் உள்ள பூனை, குறிப்பிட்ட ஒரு அர்த்தம் பொதிந்ததாக உங்களுக்கு இருக்கிறதா?
பதில் – இந்தப் பூனை தனிச் சிறப்புத்தன்மை வாய்ந்தது. இவள் எங்கிருந்து வந்தாள் என்பது எங்களுக்குத் தெரியாது, இவள் யாருக்கு உரியவள் என்பதும் எங்களுக்குத் தெரியாது. மிகவும் சிறிதாக, இளம்பருவத்தினளாக இருந்தாள். ஆனால் மனிதர்களுடன் பழகுவதில் நீங்கள் நம்ப முடியாத அளவுக்கு நுண்ணுணர்வு கொண்டவளாகவும் இருந்தாள். இவளால் மனிதர்களுடன் பழகுவதைப் பழக்கப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றுதான் நினைக்கிறேன். இவள் வீட்டுக்கு அடங்கியிருப்பவள் அல்ல. பார்த்தவுடனேயே இவள் மிகவும் ஸ்பெஷலானவள் என்பது எனக்கு நன்றாக தெரிந்துவிட்டது. இவள் எங்கள் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் பொய் வருவாள், அங்கிருக்கும் ஜப்பானிய தோட்டத்தில் விளையாடுவாள். இவள் என்ன செய்கிறாள் என்பதை என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடிந்ததில்லை. இவள் எதை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. இது போல் நடந்து கொள்ளும் வேறு பூனைகளும் உண்டு என்பது உண்மைதான், ஆனால் இந்தப் பூனைக்கு இன்மையுடன், அல்லது இன்மைத்தன்மையுடன் நேரடி தொடர்பு இருந்தது.
கேள்வி – The Guest Catல், பூனையுடன் உள்ள உறவு கதைசொல்லியின் எழுத்துப்பணிக்கு மிக அவசியமாக இருப்பது போலிருக்கிறது. உண்மையைச் சொன்னால், அவன் எழுத்தாளனாவதென முடிவு செய்ய இந்தப் பூனையே காரணமாகவும்கூட இருக்கலாம். சிபியைச் சந்தித்தபின்னர்தான் அவன் எடிட்டர் வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர எழுத்துப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான்.
பதில் – என் எழுத்துப் பாணியின் மரபு குறித்து நான் இங்கு சொல்லியாக வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட நவீன ஜப்பானிய பாணி ஐ-நாவல். இதை ஒரு-பொய்யும்-சொல்லாதிருத்தல் பாணி எழுத்து என்று அழைக்கலாம். நான் எதையும் புனைவதில்லை. எழுத்தில் உள்ள புனைவுத்தன்மை வேறெங்கிருந்தோ வருகிறது. நான் நிகழ்வுகளின் தேதிகளைக் குறித்து வைக்கிறேன். தகவல்களைப் பதிவு செய்கிறேன். எதுவுமே வலிந்து கதையினுள் புகுத்தப்படுவதில்லை. கதையின்மீது நான் எந்தக் கட்டுப்பாடும் செலுத்துவதில்லை. மெய்யாகவே நிகழ்ந்தவை குறித்த தகவல்களுடன் வேறு எதையும் கலப்பதும் இல்லை. ஆனால் அவற்றைச் சூழ்ந்திருக்கும் வேறு தகவல்களைச் சுருக்கி எழுதுவதும் எழுதாமல் விட்டுவிடுவதும் உண்டு.
நான் எடிட்டராகப் பணி புரிந்தபோது இந்தப் பாணி எழுத்தைக் கற்றுக் கொண்டேன். சில மிகச் சிறந்த, என்னைவிட வயதில் மூத்த ஐ-நாவலாசிரியர்கள் சிலருடன் அந்த நாட்களில் பணியாற்றியிருக்கிறேன். அந்தப் பாணி எழுத்து அப்போது முடிவுக்கு வந்துவிட்டது போலிருந்தது. நான் அவர்களிடம் அது போன்று எழுதுவது எப்படி என்பதையும் அதன் ஜீவன் என்ன என்பதையும் கற்றுக் கொண்டேன். என் எழுத்தில், நவீன கவிதை வடிவம் சார்ந்த சோதனை முயற்சியும் ஜப்பானிய ஐ-நாவல் மரபும் சந்தித்துக் கொள்கின்றன. இந்த நாவலாசிரியர்களோடு பழகியதால்தான் இப்படி எழுதுகிறேன். மொழியே ஆகக்குறைந்த புனைவு என்று நினைக்கிறேன் (minimum fiction). முரண்படும் விஷயங்கள் சந்தித்துக் கொள்ளும் உச்சப்புள்ளி இது. உதாரணத்துக்கு, கவிதையும் உரைநடையும், கவித்துவமும் ஆவணமும், கிழக்கும் மேற்கும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி என்று சொல்லலாம்.
நன்றி: பாம்ப் தளம்
(ஜப்பானில் Kiyama Shohei இலக்கிய விருது பெற்ற இந்த நாவல், பிரெஞ்சு மொழியாக்கத்தில் பரவலான வாசக ஆதரவு பெற்றபின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கணிசமான எண்ணிக்கையில் வாசிக்கப்படுகிறது)
image credit : Earlyword.com