– எஸ். சுரேஷ் –
முதலில் நம்மை உருவாக்கிய இந்த பேராசையிடமிருந்து
நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்
அதுதான் என்னை இந்த பாரின்
ஒரு மூலையில் உட்கார்ந்து,
பாதிரியின் பேரவாவுடன் காத்திருக்க வைத்திருக்கிறது,
குறிப்பிட்ட அந்த தருணத்திற்காக-
எதிரில் நீல நெருப்பு கொண்ட கண்கள்,
அபாயத்திற்கு பழக்கப்பட்ட அந்த கண்கள்,
முன்கணிக்கப்பட்ட பாதையில்,
என் கன்னங்களின் வெட்கச் சிரிப்பை கோரும்,
அவை கோரிய நாணமும் அவற்றுக்கு கிட்டும்.
– பாட்ரிசியா கவல்லி
நம் வாழ்வின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தருவதிலேயே போய் விடுகிறது. நம் பெற்றோர், துணை, பிள்ளைகள், நாம் சார்ந்திருக்கும் சமூகம், பணியிடம் என்று பல எதிர்பார்ப்புகள் நம்மைச் சுமையாய் அழுத்துகின்றன.
நம்மில் பலரும் எதிர்பார்ப்புகளின் சுமையைக் கோடைப் பருவத்தில்தான் கடுமையாய் உணர்கிறோம் – அப்போதுதான் ஆண்டுத் தேர்வு முடிவுகள் வருகின்றன. பல நண்பர்களிடமும் கல்வி பற்றியும் இன்றுள்ள குழந்தைகளை அழுத்தும் எதிர்பார்ப்புகள் பற்றியும் தொடர்ந்து பேசியிருக்கிறேன். குறிப்பாக, நகரங்களில் வளரும் குழந்தைகள். பெற்றோர்களுக்குப் பிள்ளைகளிடம் உள்ள எதிர்பார்ப்புகள் – மிக நன்றாகப் படித்து நல்ல ஒரு பொறியியல் கல்லூரியிலோ மருத்துவக் கல்லூரியிலோ படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். உலகம் நாளுக்கு நாள் போட்டி மிகுந்ததாக மாறிக் கொண்டிருகிறது, வல்லவனே வாழ்வான் என்றெல்லாம் நினைப்பதால் கல்லூரி கல்வி மிகவும் முக்கியமாக இருக்கிறது. குழந்தைகளை இப்படி விரட்டுவது குறித்து எனக்கு பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கிறது, வேறொரு நாள் பேச வேண்டிய விஷயம் இது.
ஒரு பக்கம் பெற்றோர் இப்படி இருந்தால், குழந்தைகளுக்கு அவர்களது நண்பர்கள் கொடுக்கும் அழுத்தமும் இருக்கிறது. எல்லாரும் ஏதோ ஒரு இன்ஸ்டிட்யூட் அல்லது ட்யூஷன் சென்டரில் சேர்ந்து படிக்கிறார்கள்: அதன் பின் உன் வகுப்பில் படிக்கும் மற்றவர்களைவிட நீ புத்திசாலியாக இருக்கிறாயா என்ற கேள்வி வந்துவிடுகிறது. அப்புறம் எங்காவது சேர்ந்து நீயும் புத்திசாலிதான் என்று உலகுக்குக் காட்டிக் கொண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
இங்கே ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பெற்றோர் அனைவரும் எப்படியாவது எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து படித்து இஞ்சினியர்களாகவும் டாக்டர்களாகவும் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தங்கள் பிள்ளைகள் மீது சுமத்துவதில்லை. இது சொல்லப்படாத வற்புறுத்தலாக இருக்கும்போதும் குழந்தைகள் அதை உணர்ந்து விடுகிறார்கள்: நல்ல மதிப்பெண்கள் பெற்றதைச் சொல்லும்போது பெற்றோர் முகம் பிரகாசமாக இருப்பதும், மதிப்பெண் குறைந்தால் அவர்கள் முகம் வாட்டம் கண்டு சோகமாகச் சிரிப்பதும் எதிர்பார்ப்புகள் என்ன என்பதைத் தெளிவாவே உணர்த்தி விடுகின்றன.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று ந்யூட்டனின் மூன்றாம் விதி கூறுகிறது. பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் குறித்து எதிர்பார்ப்புகள் இருப்பது போலவே குழந்தைகளுக்கும் தம் பெற்றோர் மீது எதிர்பார்ப்புகள் இருக்கின்றன – இங்கே நான் முக்கியமாக நகர்ப்புறக் குழந்தைகளைச் சொல்கிறேன். கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகள் எதிர்பார்க்கின்றனர், மாலில் ஆரம்பித்து வெளிநாடு போவது வரை எல்லா ஆசைகளும் இப்படிதான். ஏதோ அவர்களுடைய உரிமை என்கிற மாதிரியான எதிர்பார்ப்பு இது. இந்த விளையாட்டு மிகவும் சிக்கலானது – பெற்றோர் தங்கள் எதிர்பார்ப்புகளை உரிமையாக நினைக்கின்றனர், குழந்தைகளும் அப்படியே இருக்கிறார்கள். சென்ற தலைமுறையில் இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை என்பதல்ல – இப்போது இருப்பது போல் எப்போதும் இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை.
காதலிப்பவர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள் மிக முக்கியமானவை. நாம் காதலிப்பவர்கள் நம்மை முழுமையாய் புரிந்து கொண்டு விடுவார்கள் என்ற உணர்வு எப்படியோ வந்து விடுகிறது. “ஓருடல் ஈருயிர்”, “இரு கண்கள் ஒரு பார்வை” என்றெல்லாம் எழுதி கவிஞர்கள் வேறு குட்டையைக் குழப்பி விட்டார்கள்.
இதனாலெல்லாம், தான் சொன்னது, சொல்லாதது எல்லாமே தன்னைக் காதலிப்பவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று காதலர்கள் கட்டாயப்படுத்திக் கொள்கிறார்கள். மௌனம், எளிய ஒரு சைகை, இரு சொற்கள், ஒரு சிரிப்பு – புரிந்துகொள்ள இது மட்டுமே போதும். இதுதான் எதிர்பார்ப்பு. ஒரு கேள்வி கேட்கிறோம், மௌனம்தான் பதிலாய் கிடைக்கிறது, ஆனாலும் எல்லாம் புரிந்து விடுகிறது – இது நமக்கு பெரிய சந்தோஷம் தருகிறது. அல்லது வேண்டா வெறுப்பாக உங்கள் காதலர் ஒரு காரியத்தைச் செய்யும்போது, அதெல்லாம் வேண்டாம் என்று நீங்கள் தடுத்துவிட்டால், காதல் மேலும் ஆழப்படுகிறது. பலர் விஷயத்தில் இதுதான் காதலின் வலிமை. சொல்லப்படாத எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ள முடிவதுதான் கடும் சோதனையான காலகட்டங்களைக் கடக்க காதலர்களுக்கு உதவுகிறது. ஆனால் இதெல்லாம் புரியாதவர்கள் விரக்தியின் உச்சத்துக்கே போய் விடுவார்கள்.
ஏன், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கும் காதலர்களும்கூட ஏதோ ஒரு பிழைபுரிதல் ஏற்படும்போது கடுமையாக மோதிக் கொள்கின்றனர். காதல் வயப்பட்ட ஒருவரின் நட்பு உங்களுக்குக் கிடைத்திருந்தால், “அவளுக்கு/ அவனுக்கு என்னதான் வேண்டும் என்பது எனக்கு கொஞ்சம்கூட புரியவில்லை” என்ற புலம்பலை நீங்கள் நிறைய தடவை கேட்டிருப்பது நிச்சயம். காதல் மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்திலும் எதிர்பார்ப்பது எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லிவிட முடியாது என்ற புரிதல் அவசியம். குழந்தைப்பருவம் முதற்கொண்டே ஒவ்வொரு தளத்திலும் இப்படிதான் இருக்கும் என்ற புரிதல் நமக்குத் தேவை. ஆனால் இதில் மிகவும் சந்தோஷமான விஷயங்கள் ஏற்படுவது காதலிக்கும் காலத்தில்தான்.
இந்தக் கவிதை காதலைப் பற்றியா சிக்கிக் கொள்வதைப் பற்றியா? கவிதை ஒரு கதை சொல்கிறது : எதிர்பார்ப்பின் கதை, சிக்கிக் கொள்வதன் கதை. மிகக் குறைந்த சொற்களில் இதைச் செய்கிறது. ஒரு கணப்பொழுதை மிக அருமையாக உறையச் செய்து கைப்பற்றி விடுகிறது. ‘நீல நெருப்பு கொண்ட கண்கள்,’- இந்தச் சொற்கள் எதிர்பார்ப்பை அழகாகக் கைப்பற்றிவிடுகிறது. இந்த எதிர்பார்ப்பு நிறைவடையும் என்று சொல்லி, அந்தக் கணத்தை உறையச் செய்து, நம்மை எதிர்காலம் குறித்து நினைக்க வைக்கிறது. தான் விரும்புவது கிட்டும் என்ற நம்பிக்கை இவருக்கு இருப்பதை கவிதையின் சற்றே விலகிய தொனி சுட்டுகிறது, ஆனால் இதுதானா இவரது நாட்டம்? இருவருக்கும் பழக்கப்பட்ட திரைக்கதையில் உள்ள நாடகத்தை நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிந்திருக்கிறார்களா இவர்கள்? இந்தக் கண்கள் சொல்லும் எதிர்பார்ப்புகள், நாடகத்தின் திரைக்கதையின் ஒரு காட்சியை அரங்கேற்றுகின்றனவா?
நம் வாழ்வில் பல முறை வேறொருவர் அரங்கேற்ற விரும்பும் நாடகத்தில் நாம் பங்கேற்கும்படியாகிறது. தேர்ந்த நடிகர்களைப் போலிருக்கிறோம், ஆனால் நாம் நடிகர்கள் என்பதையும் நமக்கு அளிக்கப்பட்டிருப்பது ஒரு பாத்திரம்தான் என்பதையும் நம்மிடமிருந்தே மறைத்துக் கொள்கிறோம். பாத்திரம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதைச் செய்கிறோம். சில சமயம் நமக்கு இது பிடித்திருக்கிறது, சில சமயம் நம் வேடத்தைக் கலைத்து விடுபட விரும்புகிறோம் – ஆனால் எப்போதும் அது சாத்தியமில்லை. சில சமயம் நம்மைப் பிணைக்கும் கயிறுகளைத் தளர்த்த முடியாமல் போகிறது. மிகவும் வலுவுள்ள பொம்மையால்தான் தன் கயிறுகளை அறுத்துக் கொள்ள முடியும். காதலின் கயிறுகளில் சிக்கிக்கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள், அதன் முடிவற்ற நாடகத்தில் விருப்பப்பட்டே தொலைந்தும் போகிறார்கள்.