கால்பந்தை கால்மணி நேரம் – இரு கவிதைகள்

கவிதைப்படுதல்

– ஸ்ரீதர் நாராயணன்

அகண்ட எழுபது இஞ்ச் டிவி திரையில்
கால்பந்தை கால்மணி நேரம் பார்த்துக்
கொண்டிருந்தபோதுதான் அந்தக் கவிதை
உள்ளே நுழைந்தது

அணில்பிள்ளை சாடி விளையாடுவது போல
புஜத்திற்கு புஜம் பந்தை
சறுக்கவிட்டு வேடிக்கை காட்டியது

சிசர்ஸ் கிக் அடிக்கும் வேலுநாயகம் அண்ணன்
பின்னாடியே ராமசந்திரனும், சத்தியமூர்த்தியும்
செத்துப் போன முத்துகுமாருக்கு சப்ஸ்டிடியூட்டாக
சாயபு டீக்கடைப் பையன் பிஜி
நெல்லைப் பெண்ணை ஆள்வைத்து
தூக்கிய கிளமெண்ட்
குலமங்கலத்திலிருந்து கருக்கலில் கிளம்பி
ஓடியே தமுக்கத்திற்கு வரும் பாலமுருகன்
என்று பட்டியல் போட்டது

முட்டைக் கண்ணன் பேரு பாரதியோ சாரதியோ
காலைச் சுற்றிச்சுற்றி வரும் குழந்தையை
தாக்காட்டுவது போல
தளுக்காக பந்தை உருட்டிப் போவான்.

பாழாய்ப் போன கவிதை ஆளை சொன்னால்
பெயரை மறக்கிறது. பெயரைச் எடுத்துக் கொடுத்தால்
ஊரை மறந்து தொலைக்கிறது.

சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன்
தலைமை தாங்கிய ஃபைனல்ஸில்தான்
செக்கானூரனி அமீது கவட்டைக்குள்
காலைக் கொடுத்து புரட்டிவிட
காலொடிந்து போய்
அத்தோடு கவிதையும் காணாமல் போனது

அகன்ற திரையில்
காலி மைதானம் மட்டும் எஞ்சியிருந்தது

oOo

கொண்டதும் கொடுத்ததும்

எஸ். சுரேஷ்

கால்பந்தை​க்​ கால் மணி நேரம் பார்த்துக்கொண்டு
மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த குரங்கு
அந்த சிறுவன் வருகை பார்த்து உஷாரானது

சிறுவன் கால்பந்தை நெருங்கும்பொழுது
மரத்தைவிட்டு நிலத்துக்குத் தாவி
கால்பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு
மரத்தில் ஏறி உச்சிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டது

கீழிருந்து வந்த அழுகைக் குரல் கேட்டு
“இந்த நாள் நன்றாக விடிந்தது,”
என்று சொல்லிக் கொண்டு உரக்கச் சிரித்தது குரங்கு.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.