– ஹரன் பிரசன்னா –
ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
வழித்தடம் அழுத்தமாகப் பதித்த காலங்களில்
அவரை நான் சபித்திருந்தேன்
கருத்துக் கலவரங்களில் அவர் எப்போதும் வாளேந்தி வருவார்
நான் நேர்மை மட்டும் தாங்கித் தோற்றிருக்கிறேன்
நியாயங்களில் அவருக்கு அதிகம் நம்பிக்கை இருந்ததில்லை
தன் நோக்கொன்றே சரியானது என்று உறுதியாக நம்பினார்
ரத்தம் கண்டு நான் மிரண்ட சமயங்களில்
புத்தனின் புன்னகையுடன் அவர் மேலேறிப் போனார்
எங்கோ உயர்ந்த புள்ளியில்
சூரியனுக்கு அருகில்
வெற்றிச் செருக்கில் என்னைத் திரும்பிப் பார்த்தபடி
சட்டென ஒருநாள்
ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
அவருக்கும் எனக்குமான நினைவுகளில் உழன்றபடி
சுண்டிப் போன ரத்த விரல்களில்
அவர் விட்டுச் சென்ற அநீதிகளின் மேல் அமர்ந்து
இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்
மிகக் கவனமான
ஒரு அஞ்சலி