கிருஷ்ணனுக்குப் புரியும்

மீனாட்சி பாலகணேஷ்

மழை வரப்போவதற்கு அறிகுறிகள் தெரிந்தன. அரண்மனை நந்தவனத்து மரத்தடியில் அமர்ந்து தான் செய்துகொண்டிருந்த கைவேலையை கிருஷ்ணா (திரௌபதி) மளமளவென முடித்து எடுத்துக்கொண்டாள். அதனை பத்திரமாக ஒரு பட்டுத்துணியில் சுற்றிவைத்தாள். மேலே நிமிர்ந்து ஆகாயத்தைப்பார்த்தாள். கூட்டங்களாகக் கருமேகங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவளுடைய எண்ணங்களும் நீர்கொண்ட மேகங்கள்போல் கனத்து எங்கேயோ விரைந்தன. அதற்குள் பணிப்பெண் நந்தினி ஓடோடி வந்து, “அம்மா, ரதம் தயாராகி விட்டது. தாங்கள் சொன்னவாறே பழக்கூடைகளையும், பலகாரப் பாத்திரங்களையும் அதில் வைத்து விட்டோம்,” என்றாள். மெல்ல எழுந்த கிருஷ்ணா ரதத்தை நோக்கி நடந்தாள். குதிரைகளைத் தட்டிக் கொடுத்தபடி தயாராக இருந்த ரதசாரதி, அரசியைக்கண்டதும் பணிந்து வணங்கினான்.

“பரிமளா, நான் இரண்டுபேரும்தான் தங்களுடன் வருகிறோம் தேவி,” என்றாள் நந்தினி. “போதும், இந்தப் பால்பாயசப் பாத்திரம் சிந்தாமல் கூடையைப் பிடித்துக்கொள்,” என்றபடி ரதத்தில் ஏறிக்கொண்டாள் திரௌபதி.

பட்டத்தரசி திரௌபதியின் அலங்காரத்தைக் கண்டு பணிப்பெண்கள் அர்த்தபுஷ்டியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இத்தனை கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு சாதித்த பெருமிதம் அவள் முகத்தில் பிரகாசித்தது. வாடிவதங்காமல் மினுமினுத்த தேகம். யாகத்தீயிலிருந்து உதித்த கரியதேகமானாலும் (கிருஷ்ணா) அழகிற்கும் கட்டமைப்பிற்கும் சிறிதும் பங்கமின்றி, இளமையில் பல அரசர்களின் கனவாக, அடைய விரும்பிய பொக்கிஷமாக இருந்தவள்; இன்றும் இருப்பவள். அழகான கருங்கூந்தலை அருமையான கொண்டையாகப் புனைந்து அதில் அலட்சியமாகச் சுற்றிவைத்த முத்துச்சரம்; பொன்போன்ற சில சண்பகமலர்கள். தாமரை வண்ணக் கச்சும் அதேநிறத்தில் புடைவையும். மிகக்குறைவான ஆபரணங்கள். இந்த வயதிலும் அரசி எப்படி அழகில் ஜ்வலிக்கிறாள் என்று இவர்கள் மயங்கினார்கள்.

ரதத்தைவிட விரைவாக அவளுடைய எண்ணங்கள் சிறகடித்தன. இவள் கொண்டுவருவதனைக்கண்டு கிருஷ்ணன் என்ன சொல்லுவான் என்று எண்ணியபோது முகத்தில் ஒரு புன்னகை விரிந்தது. அப்படி என்ன கொண்டு செல்கிறாள் இந்தப் பாஞ்சாலி?

கிருஷ்ணன் கேட்கப்போகும் கேள்வி அவளுக்கு ஏற்கெனவே தெரியும். “இத்தனை நாட்களாக இல்லாத இந்த வழக்கம் இப்போது ஏன் யக்ஞசேனி?”

அவள் சொல்லப்போகும் பதில்???

ஆம், ‘இத்தனை நாட்களாக இல்லாத இந்த வழக்கம் இப்போது ஏன் யக்ஞசேனி?’ தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் அவள், யக்ஞசேனி!

விடை அவள் மட்டுமே அறிந்தது!

கிருஷ்ணனுக்கும் தெரிந்திருக்கலாம். அவன் அறியாததும் ஒன்றுண்டா?

*******

மிகுந்த தலைவலியுடன் தனதறையில் படுத்துக்கொண்டிருந்தாள் திரௌபதி; பணிப்பெண் நந்தினிதான் எதையெதையோ தடவி அவள் நெற்றிப்பொட்டினைத் தேய்த்துவிட்டபடி இருந்தாள். அரசி உறங்கிவிட்டாள் என்று எழுந்து மற்ற பணிப்பெண்களுடன் நந்தவனத்துக்குப் போய்விட்டாள். கிழவியொருத்தி மட்டும் அந்த அறைவாயிலில் காவலுக்கு உட்கார்ந்திருந்தவள் தானும் தூங்கி விழுந்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திலேயே எழுந்துவிட்ட திரௌபதிக்கு நந்தவனத்தில் காற்றாட உலவிவிட்டுவந்தால் நன்றாக இருக்குமே எனத்தோன்ற அதை உடனே செயல்படுத்தினாள். மலர்களின் பலவித மணங்களை ஆழ்ந்து சுவாசித்தவாறு மெல்ல நடந்தவளை மல்லிகைப்புதர்களின் பின்பு அமர்ந்து ரகசியம் பேசிக்கொண்டிருந்த பெண்களின் குரல் தடுத்து நிறுத்தியது!

“பரிமளா, எப்படித்தான் மகாராணி ஐந்து கணவர்களை சமாளிக்கிறார்களோ தெரியவில்லை. என் கணவர் ஒருவரை சமாளிப்பதற்கே எனக்கு முடியவில்லை,” என்று நகைத்தாள் நந்தினி.

“அதுதான் அவ்வப்போது துவாரகைக்குப்போய் அவர்களுக்கு இஷ்டமான கிருஷ்ணராஜாவை சந்தித்துவிட்டு வருகிறார்களே! இங்க ஐந்தோட அவரும் ஒன்று, ஆறு!” என்று கூசாமல் கூறி வாயைமூடிக்கொண்டு சிரித்தாள் அடுத்தவள்.

“ஆமாம், அங்கேயும் அவருக்கு ஆயிரக்கணக்கானபேர் ராணிகள். ஆனாலும் இவர்களுக்கு என்று ஒரு தனியிடம் இருக்கும்போல….” என்று சொல்லி எல்லாரும் பெரிதாக சப்தம் எழாமல் சிரித்தனர்.

பெரிதாகப் பொங்கிய கோபத்தையும், அதன் அடிநாதமான துயரத்தையும் அடக்கிக்கொண்டாள் திரௌபதி. அவள் பகிரங்கமாக சபையில் கேட்காத பழிச்சொற்களா? ஆனால்,அவளுடைய உயிர் நண்பனை, கிருஷ்ணனை எடைபோட உலகம் எவ்வாறு துணிந்தது?  ‘நேற்றுப்பிறந்த சின்னப்பெண்கள், வாழ்வை இன்னும் என்னைப்போல் எதிர் கொள்ளவில்லை; மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதனை வைத்துத் தங்கள் அரசியையும்  கிருஷ்ணனையும் எடைபோடுகிறார்கள்; பைத்தியங்கள்.’ தான் வந்த சுவடே தெரியாமல் நகர்ந்தாள் அவள்.

அப்போது எழுந்ததொரு எண்ணம் விரைவில் கிருஷ்ணனைப் போலவே விசுவரூபம் எடுத்தது. அதற்கேற்றாற்போல அந்தத் திருநாளும் வந்தது.

கடவுள் மனிதனாகப் பிறந்தால், மனித தர்மங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். நரம்பில்லாத மனித நாக்குகளிலும்கூடப் புரண்டெழ வேண்டும் என்பதுதான் மனிதர்கள் வாழும் இந்த உலகின் நியதியோ?

‘கிருஷ்ணா! என் ஆத்ம சினேகிதனே! புன்மை மிகுந்த இந்த உலகத்தோர், உன்னை ‘ஸ்த்ரீலோலன்’ என எண்ணிக்கொள்ள விடமாட்டேன். ஏதாவது செய்து உன் அன்பின், நட்பின் புனிதத்தைப் பறைசாற்றுவேன் இந்த உலகுக்கு.’

*****

குதிரைகள் மனோவேகம், வாயுவேகத்தில் விரைய, பழைய நாட்களின் நிகழ்வுகளை உள்ளம் ஒன்றொன்றாக அசைபோட்டது.

*****

திரௌபதியின் ஸ்வயம்வரம் அறிவிக்கப்பட்டு விட்டது. தோழி சௌதாமினி மூலம் கிருஷ்ணனுக்குச் செய்தி அனுப்பினாள் திரௌபதி. அவனோ நேரிலேயே வந்துவிட்டான்! ஸ்வயம்வரத்திற்கு அல்ல! தான் ஸ்வயம்வரத்தில் பங்கேற்க இயலாததையும், அவளை மணமுடிக்க இயலாததனையும் சொல்லத்தான் வந்திருக்கிறான்.

ஆயிரமாயிரம் மனைவியர்கள் அவனுக்கு. அவர்களுள் ஒருத்தியாக இருக்க திரௌபதி விரும்பவில்லைதான். இருப்பினும் ருக்மிணி, சத்யபாமா போன்றவர்களுக்குத் தனி இடங்கள் அவன் உள்ளத்திலும் அரண்மனையிலும் இருக்கவில்லையா? அதேபோல் தனக்கும் ஒரு இடமளித்துத் தன்னையும் அவன் மனையாளாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என விரும்பினாள் அவள். கிருஷ்ணனிடம் யார்தான் காதல் வயப்படவில்லை?

கடந்த இரு நாழிகைகளாக அவளுக்கும் கிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் தொடர்ந்தபடி இருக்கிறது. சேடிப்பெண்கள் பட்டாடைகளையும் பூஷணங்களையும் அணிவித்து அவளைத் தயார்செய்து ஸ்வயம்வர மண்டபத்திற்கு அழைத்துச்செல்லக் காத்து அறையின் வெளியே அவர்கள் பேச்சு காதுக்கு எட்டாத தூரத்தில் நிற்கிறார்கள்.

“பாஞ்சாலி! இத்தனை சொல்லியும் புரியவில்லையா உனக்கு?” மௌனத்திலாழ்ந்து தலைகவிழ்ந்து சிந்தனையில் மூழ்கியிருக்கும் அவளிடம் கேட்டான் கிருஷ்ணன்.

கவிழ்ந்த தலையை ‘வெடுக்’கென்று நிமிர்த்தி, திரௌபதி கிருஷ்ணனை ஏறெடுத்து நோக்கினாள்: அவளுடைய கரிய பெரிய விழிகளில் சோகமும் ஆற்றாமையும் ததும்பி வழிந்தது. “கிருஷ்ணா! என்னிடமும் நீ விளையாடுகிறாயா? எத்தனை நாட்களாக நான் உறக்கமின்றி, உன்னையே எண்ணியபடி ஏங்கித் தவித்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? இன்றா, நேற்றா? குழந்தைப் பருவத்திலிருந்து நான் செய்து கொள்ளும் அலங்காரங்களும், பூஜைகளும், இன்னபிறவும் உனக்காகவே என உணர்ந்திருக்கிறாயா?” ஆத்திரத்துடன் அவனிடம் சீறினாள் அவள்.

அவளுடைய ஆத்திரத்தைக் கண்டு ‘கலகல’வெனச் சிரித்தான் கிருஷ்ணன்.

“யக்ஞசேனி! (திரௌபதியின் மற்றொரு பெயர். யாகத்தீயிலிருந்து வெளிவந்தவளாதலால் இப்பெயர் அமைந்தது) உன் உள்ளத்தை நானறிவேன். நீ எனக்காக ஏங்குவதையும் நான் அறிவேன். ஆனால் …………. இதனைக் கேள்.

“உனது பிறப்பிற்கு ஒரு காரணம் உண்டு. திரௌபதி எனும் பெண்ணால் மட்டுமே க்ஷத்திரியர்களின் அதர்மப் போக்கைக் கண்டித்துத் தர்மத்தை நிலைநிறுத்த இயலும் என்பது  முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டதொன்று. ஒரு பெண், தனது அசாதாரணமான மனோபலத்தால் மட்டுமே இதையெல்லாம் சாதித்தாள் என்பதை உலகத்தோர் உணர்ந்துகொள்ள வேண்டும். எதிர்கால க்ஷத்திரியச் சந்ததியினர் இந்தப் பூவுலகில் தர்மத்தை நிலைநிறுத்த, பெண்ணான நீ ஒருத்தி மட்டுமே துணையிருப்பாய்! அதற்காக எனது அம்சமான ஒருவனை நீ ஸ்வயம்வரத்தில் கணவனாக அடைவாய்!” என்றான் கிருஷ்ணன்.

“யார்? யாரவன் கிருஷ்ணா? உன்னைவிட உயர்ந்தவன் என உன் வாயாலேயே நீ கூறும் அவன் யார்?” கிருஷ்ணனை விட உயர்ந்தவன் இன்னொருவனும் உண்டா எனும் கோபத்திலும் கிருஷ்ணன் கூறும் செய்திகளாலும் நிராசையில் கண்களில் நீர் படலம் கட்டியது அவளுக்கு! ஆனால் அது புனலெடுத்து ஓட அவள் அனுமதிக்கவில்லை!

“ஐந்து பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனே அவன்! இந்திரனின் அம்சமாக விளங்கும் அவன் உனது வாழ்க்கைத் துணைவனாவான். எனது ஆத்மாவின் ஒரு பகுதி அவனிடம் இருக்கிறது. நானே அவன். அவன் என்னில் அடக்கம். அவன் மகா வீரபுருஷன்; ஆணழகன்; நீ அவனுடன் இணைந்து தர்மத்தை நிலைநாட்டுவாய். நீ இல்லாவிட்டால் அர்ஜுனனும் மற்ற நான்கு பாண்டவர்களும் தர்மத்தைவிட்டு விலகி விடுவார்கள்; இது உலக நன்மைக்காக உனக்காக விதிக்கப்பட்ட கடமை, உனது பிறப்பின் அர்த்தம்,” என்றான் அனைத்தும் அறிந்த பரந்தாமன்.

கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவன் நின்ற கோலம் அவள் கண்களை, உள்ளத்தை, சிந்தையை நிறைத்தது. சில கணங்கள் கண்களை இறுக மூடி, அதனை அப்படியே இதயத்தில் அழியாததொரு சித்திரமாகப் பதித்துக் கொண்டாள் அவள். கண்ணீரை அணைபோட்ட கண்களுடன் அவன் கூறுவதையும் கேட்டுக்கொண்டாள் திரௌபதி!

“கிருஷ்ணே! என் அருமைத் தோழியே! உனக்கும் எனக்கும் இடையிலான இந்த உறவு பந்தங்களுக்கும் சொந்தங்களுக்கும் அப்பாற்பட்டது. என்னிடம் அன்பு கொள்வது எவருக்குமே மிகவும் எளிது! ருக்மிணி, பாமா, அனைத்து கோபிகைகள், எனது பதினாறாயிரம் மனைவியர் அனைவருமே என்னிடம் எல்லையற்ற, தீராத அன்பு பூண்டவர்கள். ஆனாலும் ருக்மிணி, சத்யபாமா ஆகிய எட்டு அரசிகள் தவிர மற்ற அனைவருமே என்னை மனதால் மட்டுமே காதலனாக, கணவனாக வரித்துக் கொண்டவர்கள்.

“உன்னுடனான எனது இந்த பந்தம் அழிவற்றது. நான் என்றுமே உனது உயிர் நண்பன், உயிர்த்தோழன், நீயும் எனது உயிர்த்தோழி, உனது அன்பை நான் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டுவிட்டேன் கிருஷ்ணே!” என்றான் கிருஷ்ணன். தானும் அவளும் இணைக்கப்பட்ட பந்தத்தை அவளுக்கு உணர்த்த வேண்டுமென்றே அவளை அப்பெயரால் அழைத்தான். (யாகத்தீயினால் கருநிறம் கொண்ட மேனியளாக உதித்தவளை கிருஷ்ணை என்றும் அழைத்தனர்).

கேட்ட அவள் இதயம் சிலிர்த்தது. உடல் புல்லரித்து நடுநடுங்கியது; கண்களில் வழிந்த துயரம் இப்போது துடைக்கப்பட்டு சிலிர்ப்பாகப் பெருகி ஓடியது. “கிருஷ்ணா! என் ஆத்மநண்பனே! என் இதய தெய்வமே! நீ எனது சிந்தையில் துணையாக இடம் பெற்று விட்டாய், என்னை என்றென்றும் காத்து வழிநடத்துவாயா?” கைகளைக் கூப்பி அஞ்சலி செய்தாள் திரௌபதி. அவன் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள்.

“கட்டாயமாக, கிருஷ்ணே! நான் உன்னருகே இல்லாவிட்டாலும் எந்த நிலைமையிலும் என்னை நீ நினைத்தால் நான் அங்கிருப்பேன்; உனக்கு உதவுவேன்,” என வாஞ்சையுடன் அவள் தலையை வருடினான் கிருஷ்ணன்.

“வா, சீக்கிரம்; ஸ்வயம்வர மண்டபத்தில் உன் தரிசனத்துக்காக எல்லாரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் அங்கு செல்ல வேண்டும்!” என்று அன்போடு புன்னகைத்தான் அந்த மாயக்கிருஷ்ணன்.

அன்று, அவனுடைய அச்சொற்களை வேதவாக்காக ஏற்ற பாஞ்சாலி அதனை என்றுமே மறக்கவில்லை!

*****

ஆண் – பெண் நட்பென்பது காதலாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்பதனை நிரூபிப்பது திரௌபதி – கிருஷ்ணனின் நட்பு. உடுக்கை இழந்தவன் கைபோல, பரஸ்பரம் ஒருவர் மனதை, தேவையை மற்றவர் அறிந்து, உதவிக்கொண்டு மலருக்குள்ளே பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் மணம்போல சுகந்தம் வீசிய நட்பு அது. எத்தனை எத்தனை சம்பவங்கள்!

அர்ஜுனனை ஸ்வயம்வரத்தில் மணந்த திரௌபதி அவனுடன் வீட்டை அடைந்ததும்தான் ஐந்து பாண்டவர்களின் மனைவியாகவும் தான் வாழவேண்டிய நிலைமையை உணர்ந்து திகைக்கிறாள். உலகியலின் இயற்கைக்கு அப்பாற்பட்டதல்லவா இது? பின்பு கிருஷ்ணன் முன்பு தன்னிடம் கூறியதனை நினைவிலிருத்திக்கொண்டு அவ்வாழ்க்கையைத் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு கடமையாகவே ஏற்றுக் கொள்கிறாள்.

பஞ்சபாண்டவர்களின் பத்தினியாக, அரசியாக வாழ்ந்த காலத்தில், பாண்டவர்கள் புது அரண்மனை நிர்மாணித்து, அதில் குடிபுகும் விழாவைக் கோலாகலமாக நடத்தினார்கள். துரியோதனாதிகளும் அழைக்கப் பட்டிருந்தனர். கிருஷ்ணனும் தன் மனைவியரோடு வந்திருந்தான். மதிய விருந்திற்கு முன்பு அனைவரும் ஜலக்கிரீடை செய்து நீராடி மகிழ்ந்தனர். விருந்திற்கு இலை போடப்பட்டதும் ஒருவர் ஒருவராக அனைவருமே குளத்தைவிட்டு வெளியே வந்து உலர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு உணவுண்ணச் செல்லலாயினர். கிருஷ்ணன் மட்டும் நீரிலேயே துளைந்து கொண்டிருந்தான்.

“என்ன கிருஷ்ணா! யமுனையில் விளையாடிய நாட்களின் நினைவில் வெளியேவர மனமில்லையா?” எனக் கேலி செய்தவண்ணம் வந்தாள் திரௌபதி. பட்டத்தரசியான அவள் அன்று அழகான வேலைப்பாடமைந்த பட்டாடைகளை உடுத்துக்கொண்டு, நவரத்தின ஆபரணங்கள் ஜொலிக்க, இளமையின் பொலிவில் அழகின் சிகரமாக ஒளிர்ந்தாள். அவளைக் கண்ணுற்ற கிருஷ்ணனின் இதயம் பல உணர்ச்சிக் கலவைகளில் கணநேரம் கொந்தளித்தது. அவளை எதிர்நோக்கியிருக்கும் அனைத்துத் துயரங்களும் சவால்களும் அவன் மட்டுமே அறிந்ததொன்றல்லவோ?

ஆனால், புன்னகை ஒன்றையே மறுமொழியாக வழங்கினான் கிருஷ்ணன். அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் திரௌபதி. அது போலிப்புன்னகை; ஒரு இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க விளைந்தது எனக் கணப்பொழுதில் இனம் கண்டு கொண்டுவிட்டாள் அவள். விஷயம் இதுதான். கிருஷ்ணனின் அரைத்துணி விலகி நீரோடு எங்கோ சென்றுவிட்டது. எவ்வாறு நீரிலிருந்து வெளிவருவது? அதனால் என்ன செய்வது என்று எண்ணியவண்ணம் தடுமாறிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் முகத்தைப் பார்த்த உடனேயே புரிந்து கொண்டுவிட்டாள் பாஞ்சாலி. ஒரே நொடிதான்; சிந்திக்கவேயில்லை! தனது உயர்ந்த பட்டாடையின் தலைப்புப் பகுதியைச் ‘சரக்’கெனக் கிழித்து நீரில் கிருஷ்ணனின் பக்கம் வீசி எறிந்தாள். அதனை அரையாடையாக உடுத்துக்கொண்டு நீரிலிருந்து எழுந்து வந்தான் கிருஷ்ணன்.

திரௌபதியும், “அண்ணா! சீக்கிரம் வேறு உடை உடுத்திக்கொண்டு விருந்துக்கு வாருங்கள்,” என்றுவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் சென்றுவிட்டாள். கிருஷ்ணனின் பார்வை அவளுடைய கிழிக்கப்பட்ட அழகான புடவைத்தலைப்பைப் பார்த்து நெகிழ்ந்தது. உள்ளமோ அந்த அன்பின் ஆழத்தில் சென்று அமிழ்ந்து சிலிர்த்தது.

அந்த ஆழ்ந்த அன்பின் பிரதிபலிப்பே அவள் பின்னொருநாள் சபையில் துகிலுரியப்பட்டபோது  எல்லையில்லாமல் வளர்ந்த அவளுடைய துகிலாகப் பெருகியதோ?!

நாடிழந்து, வீடிழந்து, எல்லாமிழந்து பாண்டவர்கள் வனவாசத்திற்காகப் புறப்பட்டபோது நடுவில் ஒரு இரவு வேளையில் மரத்தடியில் தங்கி இளைப்பாறி உறங்கவேண்டி நேர்ந்தது. அரசகுமாரியான திரௌபதிக்குக் காட்டின் கட்டாந்தரையில் உறங்க வேண்டிய கட்டாயம். ஐந்து கணவன்மார்களும் ஆழ்ந்த நித்திரையில்!! யாராவது ஒருவர் அவளுடைய நிலைமையை எண்ணிப்பார்த்தார்களா? பெண்ணுக்குத்தான் பதிவிரதா தர்மமா? மனைவியைக் காப்பதும் அவள் சுகதுக்கங்களில் பங்குகொள்வதும் கணவனுக்கு இல்லையா? ஒன்றுக்கு ஐந்தாக இருக்கிறார்களே! ஒருத்தர் கூடவா இப்படி மனைவி பற்றிய பிரக்ஞை இல்லாமல் இருப்பர்? உடன் வந்த துணையான கிருஷ்ணன் மட்டுமே விழித்திருந்தான்!

“என்ன பாஞ்சாலி! உறக்கம் வரவில்லையா? ஹம்சதூளிகா மஞ்சம் இல்லையா?” எனக் குறும்பாக வினவியபடி அவளருகே வந்தமர்ந்தான் கிருஷ்ணன். “விளையாடாதே கிருஷ்ணா! எனக்கு இதெல்லாம் பழகச் சில நாட்களாகும் என்று உனக்குத் தெரியாதா?” என்று பொய்க்கோபம் காட்டியவளிடம், “இதோ, எனது புஜத்தை உன் தலையணையாக எண்ணிக்கொண்டு இப்போது நிம்மதியாக உறங்கு,” என வாஞ்சையுடன் தன் கரத்தைத் தலையணையாக்கி அரசகுமாரியான அவளை உறங்க வைத்த பாசப்பிணைப்பல்லவா அந்த நட்பு! ஆனால் அவளுடைய ஐந்து கணவர்களும் அந்த நிகழ்ச்சியை ஒரு பொருட்டாகவே கருதவில்லையே! கிருஷ்ணனிடம் அவர்களுக்கு இருந்த அசாத்திய நம்பிக்கையா அல்லது பாஞ்சாலிமீது கொண்ட நம்பிக்கையா? இரண்டும்தான் என இப்போது தோன்றியது அவளுக்கு.

வனத்தில் வாழும் பஞ்சபாண்டவர்கள் பசியில் வாடாதிருக்க சூரிய பகவான் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்திருந்தார். ஐந்து பாண்டவர்கள் சாப்பிட்டு, பாஞ்சாலியும் உண்டுமுடித்தபின் அன்றைய பொழுதுக்கு அதிலிருந்து மேலும் உணவைப்பெற முடியாது.

ஒருநாள்….. கோபத்திற்கும் அது தொடர்பான சாபங்களுக்கும் பெயர்பெற்ற துர்வாச முனிவர் தனது பரிவாரங்களுடன் பாண்டவர்களைக் காண வந்தார். அனைவருக்கும் விருந்தளிக்க வேண்டுமே! அனைவருக்கும் உணவளித்து, திரௌபதியும் உண்டுமுடித்து பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்தாயிற்று. பின்னால் அன்று அட்சய பாத்திரத்திலிருந்து திரும்பவும் உணவைப் பெற இயலாது. பெருங்குழப்பத்திலாழ்ந்த பாஞ்சாலி, “கிருஷ்ணா, என் உயிர்த்தோழா, நான் என்ன செய்வேன்?” எனப் பிரலாபிக்கிறாள். எதேச்சையாக வந்ததுபோல அவள்முன் தோன்றிய அப்பரந்தாமன், “அட்சய பாத்திரத்தைக் கொண்டுவா,” எனக் கேட்கிறான். அதில் ஒரேயொரு சோற்றுப்பருக்கை ஒட்டிக் கொண்டிருக்கின்றது. சர்வவியாபியான அவன் அதனை எடுத்து உண்கிறான். இப்போது அவன் வயிறு மட்டுமல்ல; அனைத்துயிர்களின் வயிறும் நிரம்பி விடுகிறது. நீராடச்சென்ற துர்வாசர் தமது பரிவாரங்களுடன் வந்தவழியே சென்று விடுகிறார். விருந்திற்காகப் பாண்டவர்களின் குடிலுக்குத் திரும்ப வரவே இல்லை!

அவன் தெய்வமாக இருக்கலாம்; அது அவளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருந்திருக்கலாம். தனக்குத் துன்பம் வந்தபோதெல்லாம் தன் உயிர்த்தோழனான அவனைத்தான் அணுகினாள் அவள்; வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் வந்த இடர்களையும் துயரங்களையும் கிருஷ்ணனின் தோழமை தந்த தைரியத்தால்தான், ‘அவன் இருக்கிறான்,’ எனும் எண்ணம் ஒன்றைப் பற்றிக்கொண்டுதான் அவளால் கடக்க இயன்றது.

ஆனால் இதன் உச்சகட்ட நிரூபணம் அவளைத் துச்சாதனன் துகிலுரிந்தபோதுதான் உலகத்திற்கும் தெரிந்தது. சூதாடிய தருமபுத்திரன், நாடிழந்து, மனையிழந்து, மனைவியையுமிழந்து, சபையில் அந்த மனைவி அலங்கோலமாகக் கேவலப்படுத்தப் படுவதனையும் பார்த்துக்கொண்டு கையாலாகாதவனாக அமர்ந்திருக்கிறான். சபையில் பீஷ்மர் முதலான பெரியோர்கள், அரசர்கள், தனது ஐந்து கணவர்கள் என அனைவரையும் பார்த்து நியாயம் கேட்டுக் கதறினாளே திரௌபதி. தனக்கொரு அநீதி இழைக்கப்படும்போது தனக்கு வேண்டிய உறவினர்களை உதவிக்கு அழைப்பது எனும் பதற்றச் செயல் அது! ஒருவரும் ஒன்றும் உதவாத நிலையில், “கோவிந்தா! பரந்தாமா,” எனத்தன் உயிர்த்தோழனை உதவிக்கழைத்துக் கண்மூடிப் பிரார்த்திக்கிறாள்; கணப்பொழுதில் துகில் கணக்கின்றி வளர்ந்துகொண்டே செல்கின்றது. பீஷ்மர், விதுரர் ஆகியோர் உண்மையுணர்ந்து திகைக்கின்றனர். என்ன உண்மை? பரந்தாமன் அருள், அருகாமை, தோழமை அவளுக்குப் பூரணமாக இருக்கிறது  என்பது நிரூபணமாகிறது.

திரௌபதியை ‘சூதில் எடுத்த விலைமகள்’, ‘ஐவர்கூட்டு மனைவி’, ‘ஆடி விலைப்பட்ட தாதி’, ‘அடிமைச்சி’, ‘சீரிய மகளல்லள்’, ‘ஐவரைக் கலந்த தேவி’, என்றெல்லாம் இழித்துப்பேசியது துரியோதனனின் கூட்டம். கர்ணன் அவளை இழிவுபடுத்த அவள் துகிலைக் களையச் சொன்னான். இன்னும் என்னென்னவோ பேசினார்கள். யாருக்காக அவள் இவையனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்? தன் கணவர்களுக்காகவா? இல்லவேயில்லை! கிருஷ்ணன் அவளிடம் அன்று சொன்னனே, “உன் ஒருத்தியால் மட்டுமே க்ஷத்திரிய தர்மம் நிலைநிறுத்தப்படும்,” என்று. அவளால் மட்டுமே நடக்கவேண்டிய மாபெரும் செயலை, அவள் எப்படிச் செய்து முடிப்பாள் என்று விதியானது வேடிக்கை பார்த்துநிற்க, கிருஷ்ணன் எனும் உயிர்த்தோழமை தந்த தைரியத்தால் மட்டுமே அவள் அனைத்தையும் சாதித்து முடித்தாள் அல்லவோ! அவள் வரையில் அவள் பிறப்பும், திருமணமும், பட்ட துன்பங்களும், சகித்துக்கொண்ட அவமரியாதைகளும் அவள் செய்யவேண்டிய சாதனைக்கான படிக்கற்கள்.

தடங்கல்கள் ஏற்பட்டபோது தடுமாறினாளே தவிர, அவற்றைக் கடக்க கிருஷ்ணனின் தோழமை அவளுக்குக் கைகொடுத்தது.

இப்போது அவள் இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்தரசி. குருக்ஷேத்திரப்போர் முடிந்து மெல்லமெல்ல நாட்டில் அமைதி தவழ ஆரம்பித்திருந்தது. பற்பல காரணங்களால், பாஞ்சாலியின் உள்ளம் அனவரதமும் அலைபாய்ந்தது; கொந்தளித்தது. இன்னும் அவ்வப்போது ஓடோடிச்சென்று துவாரகையில் கிருஷ்ணனைச் சந்தித்து அறிவுரை பெற்று வருவதில் தவறவில்லை. அவனது நட்பே அவளை இன்னும் உயிரோடும் வைத்திருக்கிறது.

*****

திரௌபதியின் ரதம் துவாரகையை அடைந்து விட்டது. துவாரகை அரசன் கிருஷ்ணனின் மாளிகை முகப்பில் நின்றது. ருக்மிணியும் பாமாவும் உப்பரிகையிலிருந்து அவள் வருகையைக் கண்டுவிட்டு ஓடோடி வருகிறார்கள். “வாருங்கள் அக்கா,” என ஆசையாக அணைத்துக் கொள்கிறாள் பாமா. “பிரயாணம் சௌகரியமாக இருந்ததா பாஞ்சாலி?” என அன்போடு அவள் கூந்தலை வருடியபடி கேட்ட ருக்மிணி அவளுடைய கம்பீரமான அழகைக் கண்களால் ஆசைதீரப் பருகினாள்.

“வா, கிருஷ்ணே! என்ன திடீர் விஜயம்?” எனக் குறும்புப் புன்னகையோடு வரவேற்றான் எல்லாம் அறிந்த பரந்தாமன். மெல்ல அசைந்துகொண்டிருந்ததொரு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டிருந்தான். வழக்கம்போல திரௌபதியின் நெஞ்சம் ஆனந்தத்தால் நிரம்பித் தளும்பியது. அவனைக் கண்டதும் உள்ளம் அடைந்த ஆசுவாசத்தில் முகம் விகசித்தது. “கிருஷ்ணா அண்ணா! நீ சௌக்கியமா?” என்று அன்புததும்பக் கேட்டவள், பின்னால் பணிப்பெண்கள் கொண்டுவந்த பழக்கூடைகளையும், பலகாரப் பாத்திரங்களையும் ஒரு பக்கமாக வைக்கச் சொன்னாள். வைத்தவர்கள் தங்கள் அரசியின் அடுத்த கட்டளைக்காக ஒருபுறமாக ஒதுங்கி நின்றனர்.

தானே பால்பாயசம் இருந்த வெள்ளிச் செம்பை எடுத்து, பாயசத்தை வெள்ளிக்கிண்ணத்தில் நிரப்பினாள் பாஞ்சாலி. ஊஞ்சலில் கிருஷ்ணன் அருகே வைத்தாள். தனது இடையில் செருகியிருந்த சின்ன பட்டுப்பையை எடுத்தாள்.

அதற்குள் ஒன்றும் பெரிதாக இல்லைதான். ஆனால் அவள்வரையில் அவள் தன்னுடைய ஆத்மநண்பனுக்காகக் கொண்டுவந்திருந்த காப்பு- ரட்சை அதற்குள் இருந்தது! பத்திரமாக வைத்திருந்த தனது கிழிந்த (கிழிக்கப்பட்ட எனலாமா?) பட்டுப்புடவையின் சரிகை இழைகளை கவனமாகப் பிரித்தெடுத்து அவற்றை முறுக்கி ஒரு அழகிய பின்னலாகப்பின்னி, இடையிடையே அழகான நல்முத்துக்களைச் சேர்த்துச் செய்த ஒரு ‘ராக்கி’ – ரட்சை, காப்பு – என்றெல்லாம் சொல்வார்கள். இத்தனை ஆண்டுகள் நட்பில் இப்போதுதான் முதல்முறையாக தன் நண்பன் கிருஷ்ணனுக்குக் (ரக்ஷாபந்தன்) காப்பு அணிவிக்கப் போகிறாள் அவள்!

ருக்மிணி, சத்யபாமையின் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதாக விரிந்தன. கிருஷ்ணன் ‘அறி’முறுவல்  பூத்தபடி அவள் செய்கைகளை நோக்கினான். தன்னிச்சையாகக் கையை நீட்டினான்.

“என் ஆத்ம நண்பனுக்கு, என்றென்றும் நீண்ட ஆயுள், சந்தோஷம் எல்லாம் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.” அவன் கையில் அழகான அந்த ரட்சையைக் கட்டினாள். கூடவே இருந்த சிமிழிலிருந்து சந்தனம், குங்குமத்தை அவன் நெற்றியில் திலகமாக அணிவித்தாள். பாயசக் கிண்ணத்தை எடுத்துக் கையில் கொடுத்துப் பருகச் சொன்னாள். “உனக்காக நானே தயாரித்தது கிருஷ்ணா, நன்றாக இருக்கிறதா?” என்று கேட்டபோது அவளுக்குத் தொண்டையை அடைத்தது. காலில் விழுந்து நமஸ்கரித்தாள். “என்னை ஆசிர்வதிப்பாய் கிருஷ்ணா,” என வேண்டினாள்.

“என்ன பாஞ்சாலி இது? புதியதாக இந்த வழக்கம்?” என்ற ருக்மிணியிடம் கிருஷ்ணன் பொருள்பொதிந்த பார்வையைப் பரிமாறிக் கொண்டான்.

“கிருஷ்ணா, உனக்குப் புரியும் அல்லவா?” என்று மெல்லக் கேட்டாள் திரௌபதி. கிருஷ்ணனுடைய முகத்தில் எப்போதும் போலப் புன்னகை தவழ்ந்தது.

oooOOOooo

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.