சில வார்த்தைகள், எப்போதோ கேட்டவை, ஏன் நம்முடன் பயணிக்கின்றன என பிரமீளா அதிசயித்தாள். ஊதுவத்தியின் புகை காற்றில் வளைந்து எழுந்து தோடியெனக் கமழ்வது போல, ஒரு யாழின் மீட்டலென, உள் நரம்புக்குள் உட்புகுந்து, அதுவாகவே ஆவதான ஒரு வார்த்தை. இராகமாக, சோகமாக, ஆச்சர்யமாக, ஆனந்தமாக தனக்கே உரித்தான பொருள் மயக்கம் தரும் அதை ஏன் அவள் நினைத்துக் கொண்டே இருக்கிறாள்? குழந்தைகளின் பருவங்கள் பற்றி அவளது ஆசிரியை எத்தனைப் பாடல்கள் வகுப்பிலும், தனியாகவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால், செங்கீரை ஏன் அப்படிப் பதிந்தது?
சரவணன் எட்டு மாதங்களில் மெதுவாகப் புரண்டான்; ஆனால், எழ முடியவில்லை. தவழடா, என் கண்ணே, ஒரு கால் ஊன்றி, மற்றொன்றை மடக்கி, நீ செங்கீரை ஆடமாட்டாயா என்று எப்படி ஏங்கினாள் அவள்.
“கொஞ்சிடு கிண்கிணி பொன்னரை ஞாணுடன் கூடிய திர்ந்து மசைந்தாடக் கோதறு தண்டை சிலம்பு கிடந்திசை கொண்டு புரண்டு புரண்டாடச் சிஞ்சித இன்னொலி யுங்குதலைச் சொலுஞ் சிந்திட ஆடுக செங்கீரை செந்தமிழ் சேர் பொருனைத்துறை தங்கிய சேவல ஆடுக செங்கீரை”
வரிவரியாய் மனதினுள் முகிழ்த்தப் பாடல். கருவில் இருந்த போதே அவள் அவனுக்குச் சொல்லித் தந்த பாடல்.
ஐந்து வயதில் அவன் இரண்டு வயதுக் குழந்தையாய், மாதம் இருமுறை குருதி ஏற்றும் மருத்துவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனைக் காப்பதற்காகவேப் பிறந்த கார்த்திகேயன் வளர்வதற்கு அவள் காத்திருக்கிறாள்.
சரவணனின் விநோத சத்தம் கேட்டு அவள் சமையலறையிலிருந்து ஓடி வந்தாள். கார்த்தி அவளை ஏமாற்றவில்லை. புரண்டு, நிமிர்ந்து, வலக்காலை மடக்கி, இடக்காலை ஊன்றி அவன் செங்கீரை ஆடினான். ‘ஏலும் மறைப் பொருளே, ஆடுக செங்கீரை’ என்று பித்தியைப் போலப் பாடினாள். இரு குழந்தைகளையும் வாரி அணைத்துக் கொண்டாள்.
கார்த்திகேயனைக் கருவுற்றது அவள் நினைவிலாடியது. சரவணன் செந்நிற இரத்த அணுக்கள் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தை. குடும்பத்தில் உள்ளவர்களின் எலும்பு மஜ்ஜை குழந்தைக்கு ஒத்துவரவில்லை. இரத்தம் ஏற்றி ஏற்றியே வாழும் ஒரு மழலை. இந்த ஐந்து வயதிற்குள் நூறு முறையேனும் சரவணனுக்கு இரத்தம் கொடுக்கப்பட்டுவிட்டது. சரவணன் நாளுக்கு நாள் சோர்ந்து வந்தான்.
“மிஸ்டர். சுப்ரமண்யன், இப்டியே செஞ்சுண்டிருக்க முடியாது யு நோ, பேபி ஃபுல்லா இம்ப்ரூவாவான்னு, ஐ மீன், இந்த மெதட்ல தோணல. ஒன்னு செய்லாம். உங்களுக்கு இன்னொரு குழந்தை பொறக்கணும். ஆனா, ஐ வி எஃப் லதான் செய்யணும். அவனுக்கு ஹீமோக்ளோபின் ரொம்பக் கொறைவாயிருக்கு. அவன் கண்டிஷன ‘தலசீமியா மேஜர்’ன்னு சொல்வோம். அவனோட திசுவோட ஒத்துப் போற ‘போன் மேரோ’ வேணும். அப்பத்தான் அவன் உடம்பு தானே சரி செஞ்சுக்கும்.”
‘டாக்டர், நீங்க சொல்றது சுத்தமாப் புரியல. எதுக்கு ஐ வி எஃப் ? இன்னொரு கொழந்தைன்னு நெனைக்கவே பயமாயிருக்கு.’
“சேவியர் சிப்ளிங்’ அப்படின்னு பேரு இதுக்கு. அதே அம்மா, அப்பா, அதே கரு வளர்ற முறதான். ஆனா, லுகோசைட் இஸ்யூ இருக்கில்லியா? சரி சரி பயமுறுத்தல. அவன் டிஷ்யுவுக்கு சேர்ற மாரி இருக்கான்னு பாத்து அந்தக் கருவை வளக்கணும். முதல்ல ஐ வி எஃப் ல, கருவ சோதிச்சுட்டு, எது சரவணனுக்கு ஒத்து வருதோ அத மட்டும் உங்க மனைவியோட கருப்பைல வைப்போம். அது வளந்து, பொறந்து, பத்து கிலோவாவது வெய்ட்டுக்கு வரணும். அப்போ அதோட எலும்பு மஜ்ஜைலேந்து ஒரு பகுதி எடுத்து இவன் உடம்புல சேத்துடுவோம்.”
‘அப்ப, இவனுக்காகப் பொறக்கப் போற கொழந்தயோட நெல?’
“அது சேஃப்பா இருக்கும், அதைக் கொன்னு இத வாழ வைக்க மாட்டோம். மெடிகல் சைன்ஸ் அப்படியெல்லாமில்ல.”
‘டாக்டர், அந்தக் கொழந்த ஒருக்கால் பொண்ணா பொறந்துட்டா?’
“அது எதுவா வேணா இருக்கலாம். அது ப்ராபளமே இல்ல.”
இருவது முறை இன்வெர்டோ செய்தார்கள். இருவத்தியோரில் கார்த்தி மிகச் சரியாகப் பொருந்தி அவள் கருப்பையில் நுழைந்தான். இன்று செங்கீரையும் ஆடிவிட்டான். தளதளவென்று வளர்கிறான்; கொழுவிய பால் சதையில் கொள்ளை கொள்கிறான்; அவன் இன்னும் சில மாதங்களில் பத்து கிலோ எடையைத் தாண்டி விடுவான். சரவணனும், கார்த்திகேயனும் ஒருவரல்லவா? ஆனந்த யாழின் இசையை ஒலிக்கும் கூட்டின் இந்த இரு பறவைகளும்.