பாம்புப் படலம்

– எஸ். சுரேஷ் –

“மாமி இங்க வாங்கோ. சீக்கிரம் வாங்கோ” என்று மீனா மாமியின் குரல் கேட்டது.

“என்ன ஆச்சோ. மாமி இப்படி கத்தறா” என்று கூறிக்கொண்டே அம்மா முன் பக்கம் சென்றாள். நானும் அம்மாவுடன் சென்றேன். நாங்கள் அப்போது சிகந்திராபாத் நியூ போயிகுடாவில் ஒரு பெரிய வீட்டின் பின்பக்கத்தில் குடியிருந்தோம் பத்மநாபா மாமாவும் முன் பக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு சொந்தக்காரர்கள்.

“என்ன ஆச்சு மாமி?” என்று அம்மா மீனா மாமியைக் கேட்டாள்.

“பாம்பு வந்திருக்கு மாமி”

“பாம்பா? எங்க?”

“அதுக்குள்ள இருக்கு,” என்று மீனா மாமி வாட்டர் மீட்டர் இருக்கும் குழி பக்கம் கை காட்டினாள். வாட்டர் மீட்டர் இரண்டடிக்கு இரண்டடி சதுர, பக்கவாட்டில் சிமெண்ட் பூசப்பட்ட குழிக்குள் இருக்கும். அந்தக் குழியின் மேல் சதுரமான தகர மூடி இருக்கும். அது சரியாக\ குழியின் மேல் உட்காராததால் குழிக்கும் மூடிக்கும் நடுவிலிருந்த இடைவெளி வழியாக பாம்பு உள்ளே சென்றுவிட்டது,

“பெரிய பாம்பு மாமி. ஒரு குருவியைப் பிடிக்க எம்பித்து பாருங்கோ. எனக்கு கொலநடுக்கமா போச்சு. நல்ல வேள அந்தக் குருவி தப்பிச்சுது. அதுக்கப்புறம் பாம்பு அந்த குழிக்குள்ள போயிடுத்து. எனக்கு கையும் ஓடல காலும் ஓடலை. அதுனால தான் இங்க நின்னுண்டே உங்கள கூப்பிட்டேன். இப்போ என்ன பண்றது மாமி?” என்று மீனா மாமி அம்மாவிடம் கேட்டாள்.

‘பாம்பு வீட்டுக்குள் வந்தால் என்ன செய்வது’ என்று கற்றுக்கொள்ள எந்த வகுப்புக்கும் செல்லாத அம்மா என்ன செய்வது என்றறியாமல் முழித்தாள்.

“மூடிய திறந்து விட்டா அது பாட்டுக்கு போயிடுமோ என்னவோ,” என்றேன் நான் என்னால் ஆன உதவி செய்யும் பொருட்டு.

“சும்மா இருடா” என்றாள் அம்மா. “ஏதோ ஒளரிண்டு இருக்காத”

“எங்கேந்து வந்துது பாம்பு?” என்று கேட்டேன்

“ஆமாம். அது எங்கேந்து வந்துதுன்னு தெரிஞ்சு என்ன பண்ண போற? அவசியம் அதோட அட்ரெஸ் தெரிஞ்சாகணுமா ஒனக்கு?” என்று எரிந்து விழுந்தாள் மீனா மாமி.

என்னுடைய லாஜிக் இதுதான். நாங்கள் இருக்கும் வீதி முழுக்க வீடுகள்தான். புதர்களோ, திறந்தவெளியோ கிடையாது. பாம்பு எங்கிருந்து வந்திருக்கும்? ஆனால் மீனா மாமியின் மூட் சரியில்லாததால் அதை நான் விவாதிக்கவில்லை.

அப்போதுதான் ரங்கன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்தான். வீட்டிற்கும் காம்பவுண்ட் சுவருக்கும் பத்து அடி தூரம் இருக்கும். காம்பௌண்ட் சுவரையொட்டிதான் பாம்பு புகுந்த குழி இருந்தது. அதற்கு இரண்டடி பக்கத்தில் வாசல் கேட் இருந்தது. அதை ரங்கன் திறக்கும்போதே மீனா மாமி கத்தினாள், “பாம்பு இருக்குடா அங்க. பாம்பு”

கேட் திறக்க இரண்டு படிகள் ஏற வேண்டும்..மீனா மாமி கத்தியதைக் கேட்டவுடன் ரங்கன் பின்னால் குதித்து இரண்டு படிகளையும் ஒரே எட்டில் தாண்டி ரோட்டுக்கு வந்தான்.

இதைப் பார்த்த மீனா மாமிக்கு கோபம் அதிகமானது, “என்ன மாதிரி பயந்தாங்கொள்ளிடா நீ. எங்கே ஏதுன்னு கேக்க மாட்டயா? ஏதோ ஒன் கால் கீழ இருக்கற மாதிரின்னா பயப்படற.”

“பாம்பு எங்க இருக்கு பெரிம்மா?” என்று கேட்டான் ரங்கன்

“அதோ. அந்த வாட்டர் மீட்டர் பக்கத்துல இருக்கு” என்றாள்

ரங்கன் வெகு ஜாக்கிரதையாய் கேட்டைத் திறந்து உள்ளே வேகமாக ஓடி வந்தான்.

இரண்டு நடுத்தர வயது பெண்மணிகள்: அம்மா மற்றும் மீனா மாமி, ஒரு கல்லூரி மாணவன், ரங்கன் மற்றும் ஸ்கூல் செல்லும் நான் என்று நான்கு பேரும் தீவிரமாக பாம்பு இருந்த குழியை பார்த்துக்கொண்டு நின்றோம்.

அப்போது உள்ளிருந்து மீனா மாமியின் மாமியார் வெளியே வந்தார். பாட்டி எங்களை பார்த்து, “என்ன வேடிக்கை பாத்துண்டு நிக்கறேள்? பத்மநாபன் இப்போ சாப்பிட வந்துடுவான். ஏன் இங்க மச மசன்னு நிந்துண்டிருக்க?” என்று மீனா மாமியை கேட்டாள்.

ஆட்டம் பாமுக்கு திரி கொளுத்திவிட்டது போல் நிலைமை மாறியது. மீனா மாமி எப்படி வெடிப்பாள் என்று எல்லோரும் பாம்பை விட்டுவிட்டு மீனா மாமியை பார்த்தோம். எங்கள் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

“ஆமாம். நான் எப்பவும் மச மசன்னு நிந்துண்டிருக்கேன். நீங்கதான் ஓடி ஆடி எல்லாம் பண்றேள் பாருங்கோ. உங்களுக்கெல்லாம் வருஷக்கணக்கா ஒண்ணுமே சொல்லாம கார்த்தால ராத்திரின்னு பார்க்காம பண்றேன் பாருங்கோ, என்னதான் செருப்பால அடிக்கணும். நேத்தி கூட….”

இது கொளுத்தி விட்ட தீபாவளி ராக்கெட் போல் எங்கு வேணாலும் போகலாம் என்று அறிந்திருந்த அம்மா அவசரமாக பாட்டியிடம் சொன்னாள், “அந்த குழீல பாம்பு ஒன்னு போயிருக்கு”

“பாம்பா? எங்கேந்து வந்துது?” என்று கேட்டாள் பாட்டி

மீனா மாமி எனக்குச் சொன்ன பதிலையே அவருக்கும் சொல்வார் என்று எதிர்ப்பார்த்திருந்த எனக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் மெளனமாக இருந்தாள்.

பாட்டி அம்மாவிடம், “இது பாருடி. பாம்புன்னா நாக தேவதை. இதோ வரேன்” என்று உள்ளே சென்றார்.

என்ன செய்ய போகிறார் என்று நாங்கள் எல்லாம் குழம்பி இருக்க அவர் கையில் விளக்கை ஏற்றிக்கொண்டு வந்தார். “பாம்புகிட்ட இத வெக்கணும். அது நாக தேவதையோன்னோ” என்று கூறிக்கொண்டே குழி இருக்கும் பக்கம் நடக்க ஆரம்பித்தார்.

நாங்கள் எல்லோரும் “வேண்டாம் வேண்டாம்” என்று அலறினோம். மீனா மாமி உச்ச ஸ்தாயியில், “ஐயையோ அங்க போகாதேங்கோ. இப்போவே எல்லோரும் நான் உங்கள கொடும படுத்தறேன்னு சொல்றா. உங்கள பாம்பு கடிச்சா நான்தான் கடிக்க வெச்சேன்னு சொல்வா” என்றாள். எதுவும் கேட்காமல் பாட்டி குழிக்குச் சென்று விட்டாள்.

“வந்துடுங்கோ. வந்துடுங்கோ” என்று அம்மா கத்தினாள். ஆனால் பாட்டி எதற்கும் அசராமல் விளக்கை குழிக்கு பக்கத்தில் வைத்துவிட்டு எங்களிடம் வந்து சொன்னாள், “ஒண்ணும் பண்ணாது அது. அதுக்கு தெரியும் நான் அத நாக தேவதையா பாக்கறேன்னு. கொஞ்ச நேரத்துல்ல அதுவே கிளம்பி போயிடும். இங்க நின்னு வேடிக்கை பார்க்காம வேலைய பாருங்கோ”. இதை கூறிவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.

ரங்கன் என்னிடம் சொன்னான், “பக்கத்தாத்துல போயி குண்டுராவ் இருந்த கூப்பிட்டுண்டு வா.” என்றான்.

நான் பக்கத்து வீட்டிற்கு சென்றேன். குண்டுராவ் வீட்டில் இருந்தார். அவரிடம் சொன்னேன், “எங்க வீட்ல பாம்பு வந்திருக்கு. உங்கள கொஞ்சம் ஹெல்புக்கு கூப்பிடறா” என்று.

“ஐயோ பாம்பா” என்றாள் குண்டுராவின் மனைவி, வனஜா மாமி. அப்புறம், “நீங்க அங்கெல்லாம் போகாதேங்கோ” என்று அட்வைஸ் கொடுத்தாள்.

“நான் வர முடியாது” என்றார் குண்டுராவ்.

நான் திரும்பி வந்து ரங்கனிடம் இதை சொன்னேன். “நீ வா. நம்ப போயி திருப்பியும் கூப்பிடலாம்” என்றான்.

இருவரும் குண்டுராவ் வீட்டிற்கு சென்றோம். ஏன் மறுபடியும் வந்தீர்கள் என்பது போல் பார்த்தார் குண்டு ராவ். வனஜா மாமி கேட்கவே செய்தாள், “அது தான் வரமுடியாதுன்னு சொல்லியாச்சொல்யோ. திரும்ப எதுக்கு வந்தே?” என்று என்னைப் பார்த்து கேட்டாள்.

எங்கள் வீட்டிற்கும் குண்டுராவ் வீட்டிற்கும் இடையில் இருந்தது ஒரே காம்பவுண்ட் சுவர்தான். அதில் பெருச்சாளி போட்ட ஒரு ஓட்டை இருந்தது. அதைக் காண்பித்து ரங்கன், “எங்க வீடல்தான் முதல்ல பாம்பு வந்துது. ஆனா சொல்ல முடியாது அது இந்த ஓட்ட வழியால உங்க காம்பௌண்ட் உள்ள வந்திருக்கலாம்.” என்று ஒரு கட்டுக்கதை எடுத்து விட்டான். “நீங்க எங்க வீட்டு பக்கம் வந்தா உங்களுக்கும் நல்லது”

குண்டுராவும் வனஜா மாமியும் அடித்து பிடித்துக்கொண்டு எங்கள் வீட்டு கேட்டுக்கு முன் வந்து நின்று கொண்டார்கள். அவர்களிடம் பாம்பு எப்படி குருவியை பிடிக்க எம்பியது என்று மீனா மாமி சொல்லிக் கொண்டிருந்தாள். முன்னை விட இந்த முறை அது ஒரு அரை அடி அதிகம் எம்பியது போல் இருந்தது.

குண்டுராவ் பயந்து ஓடி வந்திருக்கலாம். ஆனால் மீனா மாமியின் விவரணை கேட்டபிறகு அவர் தன்னுடைய வீரபிரதாபங்களை சொல்ல ஆரம்பித்தார். அவர் எப்படி குக்கிராமத்தில் வளர்ந்தார், வயல்களில் பாம்புகளின் நடமாட்டம், அவற்றை பிடிப்பது, ஒரு முறை பத்தடி நீள பாம்பை பார்த்தது என்று பேசிக்கொண்டே போனார்.

எரிச்சலடைந்த மீனா மாமி அவரைப் பார்த்து, “உங்களுக்கு பாம்புன்னா பயமில்லையோன்னோ. அப்போ அந்த மூடிய எடுத்துட்டு பாம்பைப் பிடிங்கோ இல்லை வெரட்டுங்கோ” என்றார்

“இல்ல இல்ல நான் பாம்பு பார்த்ததெல்லாம் சின்னப்போ..” என்று நழுவினார் குண்டுராவ்.

“உங்களுக்கு வெறும் பேசதான் வரும் மாமா. ஒரு பைசாக்கு லாயக்கில்ல நீங்க” என்று ஆவேசமாக கூறினார். மீனா மாமி

எல்லோர் முன்னும் பரஸ்த்ரியிடம் திட்டு வாங்கியதால் அவர் முகம் வெளுத்துப் போனது. மீனா மாமியை முறைத்துப் பார்த்தார் ஆனால் ஒண்ணும் சொல்லவில்லை. மீனா மாமி வேறு பக்கம் முகத்தைத் திருப்பியவுடன் வனஜா மாமியிடம் சன்னக் குரலில், “பத்மநாபன் இவளோட எப்படிதான் குடும்பம் நடத்தறானோ?” என்று கேட்டார். “வாயை மூடிண்டு இருங்கோ” என்று சைகையால் வனஜா மாமி குண்டுராவிற்க்கு சொன்னார்.

அம்மா மீனா மாமியிடம், “யாராவது பாம்பாட்டிதான் வந்து பிடிக்கணும் மாமி” என்றாள்.

மீனா மாமி என்னையும் ரங்கனையும் பார்த்து, “உங்களுக்கு யாராவது பாம்பாட்டி தெரியுமாடா?” என்று கேட்டாள்

எங்களுக்கும் பாம்பாட்டிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்தோம்.

“நீங்களலாம் படிச்சு என்னடா லாபம். ஒரு பாம்பாட்டி எங்க இருப்பான்னுகூட உங்களுக்கு தெரியாது. இதுல எல்லாரும் உங்க ரெண்டு பேர வேற ரொம்ப புத்திசாலின்றா. இதுதான் புத்திசாலியோட லட்சணம்” என்று எரிந்து விழுந்தார் மீனா மாமி.

புத்திசாலியாக இருப்பதற்கும் பாம்பாட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று எங்களுக்கு புரியவில்லை. ஆனால் இருவரும் அந்த சந்தேகத்தை மீனா மாமியிடம் கேட்கவில்லை.

அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த ஷங்கர், பாம்பைப் பற்றி தெரிந்து கொண்டு, “பத்திரம் பண்ணுங்க, பாம்பு கண் காமரா மாதிரி. அது உங்கள படம் பிடிச்சி வச்சிக்கும். எதாவது தப்பு பண்ணினீங்கன்னா அதோட குழந்தை வந்து உங்கள பழி வாங்கும்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். “கட்டேல போறவன். சினிமால காமிக்கறதெல்லாம் இங்க சொல்லிட்டு போறான் பாரு” என்று அம்மாவை பாரததுச் சொன்னால் மீனா மாமி.

கூட்டத்தைப் பார்த்து எதிர் வீட்டிலிருந்து ஏ.என்.சாமி வந்தார். பாம்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் அவரும் குண்டுராவ் போல் தன்னுடைய இளமைக் காலங்களுக்கு சென்றார். வயல், பத்தடி பாம்பு என்று. இது வரைக்கும் ‘உம்’மென்று இருந்த குண்டுராவின் முகம் மலர்ந்தது. பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே மீனா மாமி பக்கம் பார்த்தார். எப்பொழுது சாமிக்கு டோஸ் விழும் என்ற எதிர்ப்பார்ப்பு அவர் முகத்தில் தெரிந்தது. ஆனால் பத்மநாபா மாமா அப்பொழுது வந்து காரியத்தை கெடுத்துவிட்டார்.

பத்மநாபா மாமா கவாடிகுடாவில் இருந்த பிரகா டூல்ஸ் கம்பெனியில் வேலை செய்துவந்தார். தினமும் மதியம் உணவிற்கு வீட்டுக்கு வருவார்.

ஸ்கூட்டரை நிறுத்திய அவர் தன் வீட்டிற்கு முன் நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்து பயந்து போனார். குண்டுராவை நகர்த்திவிட்டு முன்னே வந்த அவர் மீனா மாமியையும் பாட்டியையும் உயிருடன் பார்த்து குழம்பிப் போனார்.

“என்ன ஆச்சு?” என்று மீனா மாமியை பார்த்து கேட்டார்.

“சாவகாசமா வாங்கோ. என்னிக்கி வேணுமோ அன்னிக்கி மட்டும் டைமுக்கு வராதேங்கோ.” என்றார் மீனா மாமி

“சரியான டைம்…” என்று மாமா இழுக்க, “உங்க வீட்ல பாம்பு வந்திருக்கு சார்” என்றார் குண்டு ராவ். “நீங்க வந்து அதைப் பிடிப்பீங்கன்னு மாமி வெயிட் பண்ணிண்டிருக்கா”. இதைச் சொல்லி முடித்த குண்டு ராவின் முகத்தில் அளவற்ற சந்தோஷம் குடிகொண்டது.

மீனா மாமி மறுபடியும் பாம்பு படலத்தை மாமாவிடம் சொன்னார். இந்த முறை பாம்பு குருவியைப் பிடிக்க ஒரு அடி அதிகமாக எம்பி இருந்தது,

“என்ன பண்ணலாம்?” என்று மாமா கேட்டுக்கொண்டிருக்கையில் உள்ளிருந்து பாட்டி, “பத்மநாபா சாப்பிட வாடா. லேட் ஆயிடப் போறது” என்று கூப்பிட்டாள்

உடனே மீனா மாமி, “போங்கோ. போயி கொட்டிக்கொங்கோ. நாங்க பாம்பைப் பாத்துக்கறோம். நீங்க வயறு நெறைய சாபிட்டுட்டு ஆபிஸ் போங்கோ.” என்றார்.

எல்லோர் கண்களும் இப்பொழுது பத்மநாபா மாமா மேல் இருந்தன. பாம்பைப் பிடிப்பதே சுலபமான விஷயமாக இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ, ரங்கனிடம், “மூடிய தெறந்து பாக்கலாம்” என்றார். மீனா மாமி எதுவும் சொல்வதற்கு முன் இருவரும் வாட்டர் மீட்டர் குழிக்குச் சென்றுவிட்டனர். மாமா மெதுவாக மூடியை நகர்த்தப் பார்த்தார்.

மாமா மூடியை நகர்த்த இருந்த சமயம் பார்த்து நான் ஒரு சின்ன கல்லை எடுத்து மூடி மேல் வீசினேன். இன்றைக்கும் எனக்கு நான் ஏன் அப்படி செய்தேன் என்று புரியவில்லை. மூடி மேல் கல் விழுந்த சப்தத்தை கேட்டு திடுக்கிட்டு மாமாவும் ரங்கனும் இரண்டடி பின்னால் குதித்தார்கள். எல்லோரும் சேர்ந்து என்னை திட்டினார்கள். நான் ரொம்ப அப்பாவி போல் முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டேன்.

இது மாமாவுக்கும் ரங்கனுக்கும் அவர்களின் வீரத்தின் எல்லையை உணர்த்தியது. “டேய், அந்த முஸ்லிம் பசங்க இருந்தா கூப்பிடு. அவங்களுக்கு பாம்புன்னா பயம் இருக்காது. டக்குனு பிடிச்சிடுவான்” என்று மாமா ரங்கனிடம் சொன்னார்.

எங்கள் வீட்டின் எதிர்ப்புறம் செல்லும் சாலையின் கோடியில் பாத்திமா பேகமின் குடும்பம் இருந்தது. பாத்திமா பேகம் அவர் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்து கையசைத்து, “இங்கே வாருங்கள்” என்று சைகை செய்தான் ரங்கன்.

பாத்திமா பேகம் வந்தார். “க்யா ஹூவா” என்றார். “சாம்ப் ஆயா” என்றான் ரங்கன். “அரே பாபா சாம்ப்?” என்று கேட்டார் பாத்திமா பேகம். ஆமாம் என்று உறுதிப்படுத்திய ரங்கன் கேட்டான், “மகமத் இல்லேன்னா ரஷீத் வந்து பாம்பைப் பிடிப்பாங்களா?”

“நஹி பாபா. நஹி ஹோதா” என்று மறுத்துவிட்டார்.

“அவாளால பாம்பு பிடிக்க முடியாதாம்” என்று மாமாவிடம் சொன்னான் ரங்கன்

“பின்ன என்னதான் தெரியுமா அவாளுக்கு?” என்று மீனா மாமி கேட்டாள்

“நீ கொஞ்சம் சும்மா இரு” என்றார் மாமா

கேட்டுக்கு வெளியில் நின்றிருந்த பாத்திமா பேகம் மீனா மாமியை பார்த்து, “ஆப்கே கர் மென் சாம்ப் ஆயா கதே” என்று எங்கள் வீட்டில் பாம்பு வந்த விஷயத்தை மீனா மாமியிடம் சொன்னாள்.. மாமி வெடிப்பதற்கு முன் தெருவில் சென்றுகொண்டிருந்த ஒருவனிடம், “யஹன் சாம்ப் ஆயா” என்றாள் பேகம். சைக்கிளை இன்னும் வேகமாக மிதித்துக்கொண்டு அவன் சென்றுவிட்டான்.

நாங்கள் இருந்த வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பம் இருந்தது. ஐம்பது வயது தாண்டிய அப்பாவும், முப்பது வயது தொடப்போகும் பிள்ளையும் ரொம்ப அழகாக இருப்பார்கள். நல்ல வெளுப்பு, திடகாத்திரமான உடல், எப்பொழுதும் புன்னகை பூத்திருக்கும் முகம். இருவரும் ஒரு ஸ்கூட்டரில் எங்கிருந்தோ வந்து அவர்கள் வீட்டிற்கு முன் இறங்கினார்கள். அதைப் பார்த்த பத்மநாபா மாமா “டேய் போயி அவாள கூபிடுங்கடா. அவாளுக்கு பாம்பு பிடிக்க வருமான்னு கேளுங்க. ஒடுங்க” என்றார்.

நானும் ரங்கனும் ஓடினோம். வீட்டிற்குள் செல்ல படியேற இருந்த அவர்கள் நாங்கள் ஓடி வருவதைப் பார்த்து நின்றார்கள். “வாட் ஹப்பேன்டு” என்று மகன் கேட்டார். “ஸ்நேக் கேம் இன்சைடு மை ஹவுஸ்” என்றான் ரங்கன். “நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா?”

“ஷுவர்” என்றார் பெரியவர்.

“வெயிட்” என்று சொல்லிவிட்டு மகன் வீட்டுக்குள்ளே சென்று இரண்டு தடியான கம்புகளை கொண்டுவந்தான். அப்பாவிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, “லெட்ஸ் கோ” என்றான்.

பத்மநாபா மாமா அவர்களிடம் பாம்பு பதுங்கி இருந்த குழியைக் காட்டினார். உடனே அப்பா கம்பை வைத்து மூடியை தள்ளினார். கேட்டில் நின்றவர்கள் எல்லாம் படியிறங்கி ரோட்டில் நின்றார்கள். அம்மாவும் மீனா மாமியும் வீட்டுக்குள் சென்று கிரில் கதவை சாத்திவிட்டு கிரில் வழியாக நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னையும் உள்ளே வரும்படி அம்மா சைகை செய்தாள். நான் செல்லவில்லை.

ஆங்கிலோ இந்திய அப்பா மூடியை இப்பொழுது முழுவது தள்ளிவிட்டார். குழிக்குள் இருந்த பாம்பு அப்படியே படுத்திருந்தது. கம்பைத் தயாராக தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு மகன் நின்றிருந்தார். ஆனால் பாம்பு வெளியே வருவதாக இல்லை. அப்பா தன் கம்பை வைத்து பாம்பை இரு முறை குத்தினார். பாம்பு எழுந்து குழியை விட்டு வெளியே வந்தது. உடனே அதன் மேல் கம்பை இறக்கினார் மகன். தந்தையும் சேர்ந்து இரண்டு போடு போட துடித்து இறந்தது பாம்பு. அடிப்பதை நிறுத்திவிட்டு, “ஹி இஸ் டெட்” என்று சொன்னான் மகன்.

எல்லோரும் செத்த பாம்பை பார்க்க வந்தார்கள். மாமா ஆங்கிலோ இந்தியர்களை வெகுவாக புகழ்ந்தார். அவர்கள் “நாங்கள் கோவாவில் இருக்கும்போது வாரத்துக்கு ஒரு பாம்பை அடிப்போம்” என்று சொல்லிவிட்டு செத்த பாம்பை எடுத்து கேட்டுக்கு வெளியே சாலையோரமாக போட்டுவிட்டுச் சென்றார்கள்.

“ஏன்னா, அவாளுக்கு டீ போட்டு குடுத்திருப்பேனே நான். இருக்கச் சொல்லிருக்கணும் அவாளை” என்று மீனா மாமி கூறினாள். அதற்குள் அவர்கள் வீடு போய் சேர்ந்துவிட்டிருந்தார்கள்.

“ரெண்டு பெரும் ஹீரோ மாதிரி இருக்கா. ஹீரோ மாதிரியே நடந்துக்கறா.. நம்ப வீட்டுக்கிட்டயும் இருக்கே, வெறும் வாய் சவடால்தான்” என்று சொல்லிவிட்டு குண்டு ராவையும் சாமியையும் பார்த்தாள் மீனா மாமி. ஏதோ அவர்கள் வீட்டில் அவசர வேலை இருப்பது போல் நடித்துக்கொண்டே இருவரும் அங்கிருந்து நழுவினார்கள்.

ஒருவழியாக எல்லோரும் அங்கிருந்து கலைந்தார்கள். பத்மநாபா மாமா சாப்பிட்டுவிட்டு ஆபிஸ் சென்றபின் கிரசின் ஒரு டப்பாவில் மீனா மாமி கொண்டு வர, அவர் பின்னாலேயே மாமியார் ஒரு கிண்ணத்தில் பால் கொண்டு வந்தார். செத்துக் கிடந்த பாம்பின் மேல் கிரசின் விட்டாள் மீனா மாமி. பிறகு ஒரு வெத்துக்குச்சி அதன் மேல் போட்டார். தீ அணைந்த பின் பாட்டி கருகி இருந்த பாம்பின் மேல் பாலை ஊற்றினார்.

இப்படியாக எங்கள் வீட்டில் பாம்பு நுழைந்த சம்பவம் பாம்பைத் தவிர எல்லோருக்கும் சுபமாக முடிந்தது.​

2 comments

  1. Suresh, a good depiction of what happens in a scenario like this.. reminded me of the time when a snake entered our hall when I was in school.. I was not at home, but the sequence of events I heard was quite similar. Probably no anglo-indians in the scene, but someone valiant enough came to the rescue. 🙂

Leave a Reply to Ramesh N R Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.