இல்லாகிய இல்லறம் – ஆங்கில புனைவுகளில் ‘செயலிழந்த குடும்பங்கள்’ ​ (Dysfunctional families in ​ fiction)

– அஜய் ஆர். –

“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way”, என்கிறார் தல்ஸ்தோய். குடும்பத்தை, அந்த அமைப்பில் உள்ள சிக்கல்களைப் பற்றிச் சொல்வதற்கு எப்போதும் ஏதேனும் மிச்சமிருப்பதாலதான், ஒப்பீட்டளவில் குடும்பம் சார்ந்த புனைவுகளே பிற வகைப் புனைவுகளைவிட அதிகம் எழுதப்பட்டு வருகின்றன.

‘குடும்ப நாவல்’ என்பதின் வரையறை என்ன? வெகுஜனப் புனைவுகளில் இது எளிய சூத்திரமாக வெளிப்படுகிறது-. நன்றாக வாழ்ந்த குடும்பம் (பணம் இல்லாவிட்டாலும் மனதளவில் நிம்மதியாக), புதிதாக வரும் ஒருவரால், அல்லது புதிதாக ஏற்படும் பழக்கத்தால் சீரழிவது, பிறகு தீயவர் திருந்தி அனைவரும் ஒன்று சேர்வது இந்தப் புனைவுகளின் பாணி (trope). தமிழில், மருமகள் குடும்பத்தைக் கெடுக்கும் கோடரிக்காம்பாக வருவதை (மனைவி பேச்சைக் கேட்டு வயதான பெற்றோரை துரத்தி விடும் அல்லது கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்லும் மகன்) இன்றுவரை நாம் படித்தும்/ தொலைகாட்சியில் பார்த்தும் வருகிறோம். இதற்கு நேர்மாறாக கொடுமைக்கார மாமியார், தீய பழக்கங்கள் கொண்ட கணவன் இவர்களிடம் சிக்கி, பொறுமையாக அனைத்தையும் சகித்து அவர்களைத் திருத்தும் மருமகளும் வெகுஜனப் புனைவுகளுக்கு பிரியமானவரே. ஆனால், குடும்பம் என்ற அமைப்பின் ஆழத்தை இவை நமக்கு காட்டுவதில்லை.

‘இலக்கியம்’ என்ற நாம் வரையறை செய்யும் நூல்களை எடுத்துக்கொண்டால், அவற்றின் விரிவு வரையறை செய்வதை சிக்கலாக்குகின்றது. ஒரு தனி மனிதனைப் பற்றிப் பேசும் புதினம் அவன் குடும்பம், நட்பு, அவன் காலத்தின் அரசியல்/ சமூகச் சூழல் என விரியக் கூடும். எனவே அதை அரசியல் நாவலாகவோ, குடும்ப நாவலாகவோ அல்லது பொதுவாக மனித உறவுகளைப் பேசும் நாவலாகவோ பார்க்கலாம். ‘ஜான் அப்டைக்’ (John Updike), அமெரிக்க புறநகர்ப் பகுதிகளைக் (suburbs) களமாகக் கொண்டு, குடும்பத்தில் தம்பதியர் இடையே ஏற்படும் சிக்கல்கள், பிரிவுகள், பாலியல் விழைவுகள் பற்றி எழுதியவர் என்று ஒரு பொது பிம்பம் உள்ளது. ஆனால் அவரை குடும்ப நாவல் வட்டத்திற்குள் அடைக்க முடியுமா?

ராபிட் அங்க்ஸ்ட்ரம் (Rabbit Angstrom) என்ற அவருடைய மிகவும் புகழ் பெற்ற பாத்திரத்தை வைத்து அவர் எழுதிய நான்கு நாவல்கள் (‘Rabbit Tetralogy), ராபிட்டின் வாழ்க்கையை நான்கு தசாப்தங்களாக தொடர்ந்து செல்கின்றன (60கள் முதல் 90 வரை). இவற்றில் ராபிட்டின் வாழ்கையில் அவன் குடும்ப உறவுகள் சார்ந்த மாற்றங்களை நாம் பார்த்தாலும், இந்த நாவல்கள் அதைப் பற்றியோ அல்லது ராபிட்டின் இருத்தலியல் சிக்கல்கள் பற்றி மட்டுமோ அல்ல. கால ஓட்டத்தில் அமெரிக்காவில் ஏற்படும் சமூக/ அரசியல் மாற்றங்களையும் இவை பதிவு செய்கின்றன. அறுபதுகளின் கொந்தளிப்பான இனச் சூழல், எழுபதுகளின் பாலியல் விடுதலை குறித்த புதிய எண்ணங்கள் என ஒவ்வொரு நாவலும் ராபிட்டின் வாழ்க்கை மாற்றத்தை சொல்லும்போதே அந்தந்த காலத்தின் பதிவாகவும் உள்ளது.

காபோவின் ‘நூற்றாண்டுகளின் தனிமையை’ ஒரு குடும்பத்தின் எழுச்சி/ வீழ்ச்சி என்று மட்டுமே நாம் பார்க்க முடியுமா? அந்த நாவலின் பாதிப்பில் எழுதப்பட்ட ‘ஆன்மாக்களின் வீடு’ (‘House Of Spirits’) நாவலை? ஒரு குடும்பத்தை முன்வைத்து, ‘லத்தீன் அமெரிக்கா’ சுரண்டப்படுவதைப் பேசும் சமூக/ அரசியல் நாவல்களும் அல்லவா இவை? அன் என்ரைட் (Anne Enright) குடும்ப உறுப்பினர்களால் குழந்தைகள் மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறை, அதன் தாக்கம் அவர்கள் வாழ்வு முழுவதும் பீடிப்பதை பற்றி பேசுகிறார். அவரின் ‘Taking Pictures’ சிறுகதைத் தொகுப்பை, ஆண்-பெண் உறவு நிலை பற்றியதாகவோ, அல்லது குறிப்பாக குடும்ப அமைப்பில் பெண்களின் நிலை பற்றியதாகவோ சொல்லலாம், இரண்டும் சரிதான்.

நல்லெழுத்திற்கு ஒரு குறிப்பிட்ட வகை சார்ந்த அடையாளம் தேவையில்லை என்றாலும், அவற்றை களன்/ பேசுபொருள் சார்ந்து வெவ்வேறு வகைமையில் பிரிப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி ‘குடும்ப எழுத்து ‘ என்ற வகைமையின் ஒரு கிளை ‘கோளாறுபட்ட குடும்ப நாவல்’ (dysfunctional family novel). இவை முற்றிலும் புதிய கோணம் கொண்ட படைப்புகள் என்று சொல்ல முடியாது, நாம் மேலே பார்த்த நாவல்களின் சில கூறுகளை இவற்றில் பார்க்கலாம், அதே போல் இந்த வகை நாவல்களின் சாயலை மேலே பார்த்த நாவல்களிலும் பார்க்கலாம்.

எனில், இவற்றின் தனித்தன்மை என்ன? இந்த எழுத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் கிறுக்குத்தனமான பாத்திரங்களையும், அதைவிட அதி விசித்திரமான அபத்த சம்பவங்களையும் கொண்டிருப்பது. மேலே உள்ள ஆக்கங்களில் உள்ள irony இந்த வகைமையில் ‘eccentricity’யாக வெளிப்படுகிறது எனலாம். இந்த ஆக்கங்கள் அனைத்தையும் ‘Maximalism’ என்று வகைப்படுத்த முடியாது, ஆனால் குடும்ப நாவல்கள் என சுட்டப்படுபவற்றில் உள்ள அடக்கமான தன்மைக்கு எதிராக சற்றே ஆர்ப்பாட்டமான நடையும் சம்பவங்களும் கொண்டவை இவை.

‘ஜோனதன் ப்ரான்சன்’ (Jonathan Franzen’) எழுதிய ‘The Corrections’ நாவலில் பாத்திரங்கள் – ஒரு காலத்தில் குடும்பத்தில் சர்வாதிகாரியாக வலம் வந்து, Parkinson நோயால் பீடிக்கப்பட்டுள்ள ஆல்ப்ரெட் (Alfr/ed)-, அவரின் இந்த நிலையால் தங்கள் உறவில் முதல் முறையாக அதிகாரம் பெற்றுள்ள – தன் பிள்ளைகளை எப்போதும் மற்றவர்களுடன் நாசூக்காக ஒப்பிட்டுக்கொண்டே இருக்கும் (அவர்களின் குடும்ப நண்பனின் மகன் மிகப் பெரிய வீடு கட்டி உள்ளதை சொல்லி, சூசகமாக தன் பிள்ளைகள் தங்களை அப்படி கவனிக்காததை சுட்டுவது), மனைவி ஈனிட் (Enid) – வெவ்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் அவர் பிள்ளைகள், குடும்பத்தில் அனைத்தையும் manipulate செய்யும் மனைவியுடன் போராட்டம் நடத்தும் கேரி, (குழந்தைகளின் அன்பை யார் அதிகம் பெறுவது என்பது முதற்கொண்டு இதில் தோல்வி அவருக்குதான்) – தன் செய்கைகளால் நல்ல எதிர்காலத்தை இழந்து, இப்போது மாபெரும் திரைக்கதை எழுதி வருவதாக சொல்லி, தன் காதலியின் பணத்தில் வாழும் (அவள் மணமானவர் என்பது தெரியாமல் இருந்து, தெரிந்தவுடன் இன்னொருவன் மனைவி தன் காதலி என்பதில் கிளர்ச்சி கொள்ளும்) சிப் (Chip) – விவாகரத்து பெற்று, தான் தலைமை சமையல்காரராக பணியாற்றும் உணவகத்தின் முதலாளியின்பால் ஈர்க்கப்பட்டாலும், முதலாளி மணமானவர் என்பதால் அவரைத் தவிர்த்து, பிறகு முதலாளியின் மனைவி தன்பால் ஈர்க்கப்படும்போது, அதைத் தவிர்க்க முடியாத மகள் டெனிஸ் (Denise) – என தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு (self-destruction), அதலபாதாளத்தை (abyss) நோக்கி மிக வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கும் ‘லாம்பேர்ட்’ (Lambert) குடும்பத்தின் இறுதி கட்ட சிதைவை பதிவு செய்கிறது. மேலும் மிக நுட்பமாக கணவன்-மனைவி இருவரிடையே நடக்கும் அதிகாரத்திற்கான ஆட்டத்தையும் பதிவு செய்கிறது (ஆல்ப்ரெட்/ ஈனிட் தம்பதியர் மற்றும் கேரி/அவர் மனைவி பாத்திரங்களைக் கொண்டு).

ப்ரான்சன் எழுத்தை படிக்கும்போது அவர் குடும்பம் மற்றும் உறவுகளை முற்றிலும் வெறுப்பவர் எனத் தோன்றுமளவிற்கு, சுயநல, பொறமை பிடித்த பாத்திரங்களை ( டெனிஸ் ஒரு விதிவிலக்கு) படைத்துள்ளார். நாவலின் அவல நகைச்சுவையைத் தாண்டிப் பார்த்தால் குடும்பம் என்ற அமைப்பின் மேலேயே சலிப்பை ஏற்படுத்தக்கூடிய படைப்பு இது.

ப்ரான்சன் படிக்க கடினமான புத்தகங்கள், அவற்றின் கடினத் தன்மையினாலேயே சில நேரங்களில் போற்றப்படுவதை, கடினம்= சிறந்த என்ற சமன்பாடு, இவற்றைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி உள்ளார் (அதை இங்கே படிக்கலாம்). அதில் “One pretty good definition of college is that it’s a place where people are made to read difficult books.” , என்று சொல்பவர், “Fiction is the most fundamental human art. Fiction is storytelling” என்றும் சொல்கிறார். இதற்கேற்றார்போல் ‘The Corrections’ நாவலில் மிகத் தேர்ந்த கதை சொல்லியாகவும் உள்ளார் ப்ரான்சன். குடும்ப உறவுகளோடு, நம் கால சமூகச் சூழல் குறித்த அவல நகைச்சுவையுடன் விரியும் இந்த நாவல் பெரும்பாலும் மிக சுவாரஸ்யமானது. ‘பெரும்பாலும்’ என்று சொல்வது ஏனென்றால், ப்ரான்சன் சில இடங்களில் தன் விருப்பு-வெறுப்புக்களை, பாத்திரங்களோடு ஒன்ற விடாமல் ஆசிரியர் குரல் தனித்து தெரிவது போல் எழுதுகிறார், அது சலிப்பையே உண்டாக்குகிறது. Hedge Fund, Patent குறித்த பகுதிகள் இத்தகையவை பணத்தின் மேலுள்ள மோகத்தை ப்ரான்சன் வெறுக்கிறார், சரி, அதற்காக அவர் நாவலின் நடுவே பிரசங்கத்தில் இறங்குவது அதன் போக்கை மட்டுப்படுத்தவே செய்கிறது. எனினும், குடும்பம், அது சார்ந்த உறவுகள் பற்றி நாம் பார்க்க விரும்பாத விஷயங்களை, சுவாரஸ்யமாக சொல்லும் இந்த நாவல் குறிப்பிடத்தக்கது.

ஜெரார்ட் வூட்வுர்ட் (Gerard Woodword) எழுதிய ‘August’, ‘I’ll Go to bed at noon’ மற்றும் ‘A Curious Earth’ ஆகிய நாவல்கள் ‘ஜோன்ஸ்’ (Jones) குடும்பத்தினரை பின் தொடர்கின்றன. ‘August’ நாவலின் ஆரம்பத்தில், மற்ற குடும்பங்களைப் போல ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடும்பமாக அறிமுகமாகும் ஜோன்ஸ் குடும்பத்தின் வீழ்ச்சியை இந்த நாவல்கள் சொல்கின்றன. ‘The Corrections’ நாவல், வீழ்ச்சியின் இறுதி கட்டத்தை வேகமாக, முகத்திலறைவது போல் சொன்னால், இந்த மூன்று நாவல்கள் ‘ஜோன்ஸ்’ குடும்பத்தின் மெதுவான, கொஞ்சம் கொஞ்சமான சிதைவை சொல்கின்றன.

‘வூட்வுர்ட்’, அன்றாட கணங்களைக் கைப்பற்றி, அவற்றில் புதைந்துள்ள மென் சோகத்தையோ, வெடிக்கத் தயாராக இருக்கும் விபரீதத்தையோ, அந்தக் கணங்கள் சுட்டிச் செல்லும் காலம் செய்யும் ஜாலத்தையோ, எழுத்தில் கொண்டு வருபவர்.

‘I’ll Go to bed at noon’ நாவலில், ஐம்பதுகளில் உள்ள தம்பதியரில், குளியலறையில் மனைவி குளித்துக் கொண்டிருக்க, கணவன் கண்ணாடியில் நுரை ததும்பும் மனைவியின் மார்பை பார்த்தபடி சவரம் செய்து கொள்ளும் காட்சி வருகிறது. கதையின் ஓட்டத்திற்கு இது முக்கியமானது அல்லதான். ஆனால் உடல்களின் அண்மையோ, நிர்வாணமோ கிளர்ச்சியூட்டாத, அதே நேரம் அருவருப்பூட்டாத, பல ஆண்டுகால மண வாழ்க்கை இருவருக்கிடையே உடல்/ மனம் இரண்டும் சார்ந்து ஏற்படுத்தி உள்ள இயல்புத்தன்மையை (comfort level) இந்தக் காட்சி நமக்கு தெரிவிக்கிறது.

ஒரு பழக்கத்தின்/ மனிதரின் மீது நாம் வைக்கும் அதீத அன்பே நம்மை/ நம் குடும்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விடக்கூடும் என்பதை இந்த நாவல்கள் சொல்கின்றன. கொலட் (Colette) தன் மகன் மீது வைத்துள்ள அன்பும், ஒரு கட்டத்தில் மது அருந்துவதில் அவர் கொள்ளும் வேட்கையும் இவர்கள் குடும்பத்தை இன்னும் ஒருபடி சிதைவின் அருகில் நகர்த்துகின்றன.

கொலட்டின் அண்ணன் தன் மனைவி இறந்த பின் உடல் மற்றும் மனரீதியாக உருக்குலைந்து போகிறார். வீட்டை கவனிக்காமல், நிர்வாணமாக அடைந்து கிடப்பது, தானே பலதரப்பட்ட வகையில் மது உற்பத்தி செய்வது என்று தன்னையழித்துக் கொள்ளும் அவர் ஒரு கட்டத்தில் ‘பசையை’ (glue), போதைக்கான வஸ்துவாக உபயோகிக்கும் அளவிற்கு செல்கிறார். மனைவி இல்லாத வாழ்க்கையை கணவன் எதிர்கொள்ள முடியாமல் சிதறுவதை சொல்லும் இந்த நிகழ்வுகள் ஒரு வகையில் அசோகமித்திரனின் ‘மணல்’ குறுநாவலில், குடும்பத்தலைவி காலமான பிறகு குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களை நினைவுபடுத்துகின்றன. சம்பவங்கள் முற்றிலும் வேறாக இருந்தாலும், ‘ஆண்’ தலைவனாகத் தோற்றமளித்தாலும் ‘பெண்ணே’ குடும்பத்தின் இயக்கு சக்தியாக உள்ளாள் என்றே இந்த இரண்டு நாவல்களும் சொல்கின்றன. ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் வெறுப்பு மட்டுமல்ல, ஒருவரை மிக அதிகமாக சார்ந்து இருப்பது கூட குடும்பத்தில் சிதைவை ஏற்படுத்தும் என்பதை வூட்வுர்ட் இந்தப் பாத்திரம் மூலம் சுட்டுகிறார். அதிகம் பேசப்படாத இந்த நாவல்கள், இன்னும் கவனம் பெற வேண்டியவை.


டக்லஸ் கூப்லன்ட் (‘Douglas Coupland’) எழுதிய ‘All Families Are Psychotic’ நாவலின் தலைப்பே அது எதைப் பற்றியது, எப்படிப்பட்டது என்று சொல்லிவிடும். அவ்வப்போது பாசம் பீறிடும் குடிகார தந்தை, விவாகரத்திற்குப் பின், 60 வயதிலும் தன்னைத் தேடும் தாய், பல அட்டகாசங்களை செய்து, இப்போது கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருக்கும் (அல்லது அப்படி தோற்றமளிக்கும்) மகன், அவனின் மிகுந்த தெய்வ பக்தியுடைய மனைவி, மனச்சோர்வுக்கு உள்ளாகியுள்ள இன்னொரு மகன் என இதிலும் பலதரப்பட்ட பாத்திரங்கள். குடும்பத்தின் ஒரே மகளின் (‘The Corrections’ போலவே இதிலும் மகள்தான் இருப்பதிலேயே கொஞ்சம் சமநிலை கொண்டவராக உள்ளார்) விண்வெளிப் பயணத்திற்காக அனைவரும் ஒன்று கூடும்போது நடக்கும் சம்பவங்களே இந்த நாவல். இதுவரை நாம் பார்த்த எழுத்தாளர்களில், இருண்மையான நகைச்சுவையையும், அதி-அபத்த நிகழ்வுகளையும், அள்ளி வீசக்கூடியவர் இவரே. இதனாலும், அவர் எழுதும் நாவலின் காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகள், அதன் களங்களை நாவலில் வைப்பதால், அவை உள்ளீடற்றதாக, அந்த நேரத்தின் zeitgeistஆக மட்டுமே தோன்றக் கூடிய அபாயமிருந்தாலும், அதைக் குறித்து கவலைப்படாமல், தன் பாணியில் கூப்லன்ட் எழுதுகிறார். ‘Generation X’ , ‘Generation Y’ (Millennials) என்று pop-cultureஇல் பிரபலமாக உள்ள சொற்றொடர்களில் ‘Generation X’ என்பது இதே பெயரில் அவர் எழுதிய நாவல் மூலமாகத்தான் பிரபலமானது, இவர் தன் சூழலை பிரதிபலிப்பதை மட்டுமே செய்கிறார் என்று சொல்ல இயலாது.

ஒரு குறிப்பிட்ட வகைமையில் அடக்க முடியாத ‘டேவிட் பாஸ்டர் வாலஸ்’இன் ‘The Broom Of the System’, ‘Infinite Jest’ நாவல்களில், இத்தகைய சரியாக செயல்படாத குடும்பங்களைக் காணலாம்.

‘The Broom Of the System’, தந்தையால் சில உளவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள், அவர்களின் உணர்வுகளின் மேல் அது ஏற்படுத்திய பாதிப்பு -ஒரு மகன் தனக்கு ‘Anti-Christ’ எனப் புனைப்பெயர் சூட்டிக் கொண்டு, தன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் கல்லூரியில் மற்றவர்களுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறான், கதைநாயகியான அவன் சகோதரி, தன் இருப்பு குறித்த பாதுகாப்பின்மை (insecurity) உள்ளவர், அதனால் உளவியல் ஆலோசகரிடம் அடிக்கடி செல்பவர், என இவர்களின் குடும்பம் மிகவும் பணக்கார, சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தாலும் திசைக்கொன்றாக சிதறிக் கிடக்கிறது. மிகவும் இறுக்கமான சூழலான இதை, தன் விசேஷ மொழி/ உரைநடையால், விஷயத்தின் வீரியத்தைக் குறைக்காமல் அதே நேரம் அவல நகைச்சுவையாகவும் வாலஸ் கொண்டு செல்கிறார்.

இந்த நூல்கள் மலினமான, பழகிப் புளித்துப்போன சங்கதிகளை வைத்துக்கொண்டு வாசகனை ஈர்க்கவோ, பாத்திரங்களின் மேல் வலிந்து பரிதாபத்தை உருவாக்கவோ முயல்வதில்லை. இவற்றில் வரும் குடும்பங்கள், ஏழையாக , நடுத்தர வர்க்கமாக, பணக்கார ஒன்றாக என அனைத்து சமூக படிநிலைகளிலும் உள்ளன. எந்த நிலையில் இருந்தாலும் குடும்பத்தில் பிரச்சனைகளுக்கு மட்டும் குறைவில்லை.

வெகுஜன நூல்கள் போல் குடும்பத்தில் ஒரு சிலர் அப்பாவி/ நல்லவர் என்றும் மற்றவர் சூழ்ச்சிக்காரர்கள்/ ஏமாற்றுபவர்கள், பெண் என்றால் பத்தினி அல்லது பரத்தை, ஆண் என்றால் கடவுள் அல்லது சாத்தான் என்ற எளிய கருப்பு வெள்ளை பகுப்பு இவற்றில் இல்லை. உதாரணமாக ‘ஆல்ப்ரெட் ‘ தன் குடும்பத்தில் மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றாலும், அவர்களுக்கு போதிய வசதிகளை செய்து தர (தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு) தவறுவதில்லை.

மேலும் இறுதியில் ஒன்று தீயர்கள் தங்கள் செய்கைகளுக்குரிய தண்டனையை அனுபவிப்பது அல்லது அனைவரும் திருந்தி ஒன்று சேர்வது போன்றவையெல்லாம் இந்த நாவல்களில் நடப்பது இல்லை. ஒன்று உறவுகளுக்கிடையில் நாவலின் ஆரம்பத்திலிருந்த அதே மிக மெல்லிய, வலிமையற்ற பிணைப்பே தொடர்கிறது அல்லது முற்றிலும் முறிந்து விடுகிறது.

இங்கு குடும்பத்தை பிரிக்க வேண்டும், பணம்/ செல்வாக்கை ஒழிக்க வேண்டும் என்று எதிரிகள் யாரும் வெளியில் இருந்து வருவதில்லை. இவர்களுக்கு பெரும்பாலும் இவர்களேதான் எதிரி. ஒருவரின் தனிப்பட்ட பழக்கங்கள் குடும்பத்தை சிதைப்பது ஒருபுறம் என்றால், எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சினையும் இல்லாமல், ஒருவருக்கொருவரிடம் உள்ள ஒவ்வாமையோ (incompatibility), அல்லது குடும்பம் என்ற அமைப்பிற்கே பொருந்திப் போக முடியாதவர்களாக இருப்பதோ இந்தக் குடும்பங்கள் செயலிழக்க காரணமாக உள்ளது.

இவையே வெகுஜன குடும்ப நாவல்களிலிருந்து இந்த நூல்களை வேறுபடுத்துகின்றன. இவர்கள் குடும்பம் என்ற சிறையில் இருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் இவர்கள் இருப்பதென்னவோ தங்கள் மனச்சிறையில்தான், அவர்கள் தப்பிக்க நினைப்பதும் அந்தச் சிறையிலிருந்துதான்.

புகைப்பட உதவி – News from the Boston Becks, Where the Silver Fern Grows

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.