– ஸ்ரீதர் நாராயணன் –

‘ங்க வாடா வெளக்கெண்ண கருப்பா… வெண்ணெவெட்டி சாம்பிராணி… கதயா எளுதற… &*#$(#$% மவனே’ என்று பாலமுருகனின் முடியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தார் கோவிந்தன். கடைசி வார்த்தை பாலமுருகனின் தந்தையின் ஒழுக்கத்தை சாடும் ஒரு கொச்சை வசவு. அதைக் கேட்டதும் வகுப்பில் விடலை பையன்கள் கிளுகிளுத்து சிரித்தார்கள். அவர்கள் தனித்திருக்கும்போதே சொல்லத் தயங்கும் வசவுச் சொல்லை வாத்தியார் ஒருவர் சரளமாக பயன்படுத்துகிறார் என்றால் கேட்க வேண்டுமா. இன்னும் என்னவெல்லாம் வருமோ என்று பேராவலோடு காத்திருந்தனர்.
கோவிந்தனுக்கு காலையில் எழுந்ததில் இருந்து எரிச்சலாகத்தான் இருந்தது. எரிச்சலென்றால் செண்டு முளை கன்றிப்போய் வெளிக்கிளம்பிய எரிச்சல். உட்காரவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் கால்களை அகட்டி அகட்டி வைத்து பள்ளிக்கூடத்திற்கு நடந்து வந்துகொண்டிருக்கும்போது எவனோ ஒரு கபோதி சைக்கிளில் கைகளை தொங்கவிட்டபடி சிகரெட்டை புகைய விட்டுக்கொண்டே பறந்தடித்துக் கொண்டு போனான். ரோட்டில் தேங்கியிருந்த மழைநீரை வாரியடித்ததில், வலப்பக்க சட்டை முழுவதும் கறையாகிப் போய்விட்டது. கால்மணி நேரம் தாமதமாக பள்ளிக்கூடத்திற்குள் வந்தவரைப் பார்த்ததும் வாசலிலேயே நின்றுகொண்டிருந்த ஹெச் எம், கேட்டார்.
‘என்னாச்சு வியெஸ்ஜி? சட்டையெல்லாம் கறையாகிப் போச்சு?’
கோவிந்தனுக்கு யாரிடம் எப்போது இணக்கம் காட்டிப் பேசவேண்டும். எப்போது முகத்தை திருப்பிக் கொண்டு போகவேண்டும் என்று ஒரு கணக்கு உண்டு. கண்ணிலேயே தராசு ஒன்றை கட்டித் தொங்கவிட்டிருப்பார். ஹெச்எம் எதுவும் கேட்காமல் இருந்திருந்தால் இவரே வலியப்போய் அந்த சைக்கிள்காரனின் பிறப்பை சந்தேகிக்கும் வசவுகளோடு நடந்த சம்பவத்தைப் பற்றி விளக்கியிருந்தாலும் விளக்கியிருப்பார். ஆனால், இப்போது ஹெச்எம் என்னவென்று விசாரித்ததும் பருக்கை குறுக்கில் போனமாதிரி விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டு வேறு திசையில் பார்த்தபடியே கையை ஆட்டிக்கொண்டே ‘போகட்டும் போகட்டும்’ என்று சைகை செய்தார். பிரேயர் ஹாலுக்கு பின்புறம் மரங்களடர்ந்த பகுதியில்தான் ஒன்பதாம் வகுப்பு ‘ஏ’ பிரிவு இருந்தது. முதல் வகுப்பு ஆங்கில இலக்கணம் எடுக்கவேண்டியது கோவிந்தன்தான். விரைந்து நடந்தவரை ஹெச்எம்மின் குரல் மீண்டும் நிறுத்தியது.
‘நீங்க வர்றதுக்கு லேட்டாச்சுன்னு இப்பதான் ஆர்எஸ்ஸை ஹிஸ்ட்ரி எடுக்க அனுப்பினேன். நீங்க வேண்ணா வீட்டுக்கு போய் சட்டைய மாத்திட்டு வந்திருங்களேன்’
‘லேட்டா வந்ததற்கே எப்படியும் அரைநாள் அட்டெண்டென்ஸில் கைவைத்து விடுவான் எடுபட்ட பய. இவன் என்ன வீட்டுக்குப் போகச்சொல்வது’ என்று கோவிந்தனுக்கு எரிச்சல் ஏற ஆரம்பித்தது. செண்டு முளை என்றால் சும்மாவா. ஆசனவாயில் அமிலம் ஊற்றினாற்ப்போல பற்றி எரிந்தது.
‘எவனோ ஒரு திருட்டு கம்மனாட்டி… தம்மடிச்சிட்டு சைக்கிள்ல சர்க்கஸ் பண்ணிட்டு போறேன்னு தண்ணிய வாரியடிச்சிட்டான். நம்ம ஸ்கூல் ஸ்டூண்ட்தான்னு நினக்கிறேன். மறுக்கா பாத்தா கொட்டைய நசுக்கி மட்டைய பொளந்திரனும்’
கோவிந்தனின் பதிலைக் கேட்டதும் அலர்ஜியாகி ஹெச்எம் விலகி தன்னுடைய அறைக்குள் போக யத்தனித்தார். ‘&*#$(#$%, இவன் என்னமோ ஒழுக்க புண்ணாக்குன்னு போறான் பாரு’ என்று கோவிந்தனுக்கு எரிச்சலை மேலும் கிளம்பியது. இன்னொருவாட்டி இம்ப்ரூவ்மென்ட் ஆஃப் டீச்சிங் கான்டெக்ட்டுன்னு ரிப்போர்ட்டு ஏதாவது எழுதட்டும் மிளகாயை வச்சு தேய்ச்சுவிட்ட மாதிரி பதில் எழுதிவிட வேண்டியதுதான்.
வியெஸ் என சக ஆசிரியர்களால் அழைக்கப்படும் வி. செல்லத்துரை, கறையான சட்டையோடு வரும் கோவிந்தனைப் பார்த்ததும் சிந்துசமவெளி நாகரிகத்திற்கு இடைவெளி கொடுத்துவிட்டு ‘வாங்க’ என்பது போல தலையசைத்தார்.
‘அழுத்தமா நாலு வரி இங்க்லீஷில் பேசத் தெரியாது. இவனெல்லாம் இங்க்லீஷ் மீடியத்துக்கு ஹிஸ்டரி எடுக்க வன்ட்டான். &*#$(#$% மவன்..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, வியெஸ்ஸின் வணக்கத்திற்கு பதிலாக நெஞ்சுயரத்திற்கு வலதுக் கையைக் கொண்டு வந்து ஒரு அரைகுறை விஷ் வைத்தார்.
‘ஹெச் எம் தான் அம்ச்சார்’ செல்லத்துரை தயங்கி தயங்கி சொல்ல
‘அவருக்கென்ன, எப்படியாவது கோவிந்தனுக்கு கோவிந்தா போடனும்னு காத்திட்டிருக்கார். நீங்க கெளம்புங்க. நான் கிளாசை பாத்துக்கிறேன்’ என்றார். வேறு வழியில்லாமல் செல்லத்துரை புத்தகங்களை சேகரித்துக் கொண்டு கிளம்பிச் சென்றதும், கோவிந்தன், வேட்டியை மெதுவாக தளரவிட்டுக்கொண்டு சேரில் பட்டும்படாமலும் உட்கார்ந்து மெதுவாக பிருஷ்டத்தை பரவவிட்டார். செண்டுமுளை சமயத்தில் மரத்துப் போனது போல வலியிருக்காது. திடுமென உணர்வு பெற்று எரிச்சல் கொடுக்கும்.
ஆங்கில இலக்கணம் என்றால் கோவிந்தனுக்கு தண்ணிபட்டபாடு. அதுவும் அவர் கையோடு எப்போதும் ஒரு கெட்டி அட்டை ரென் அண்ட் மார்ட்டின் இருக்கும். அதன் இரு அட்டைக்கிடையேயும் அவருடைய உலகமே உய்விற்றிருப்பது போல மதர்ப்போடு விளாசித் தள்ளிவிடுவார்.
‘அதென்ன ஜாய்ன் இன் த ஸ்கூல்னு இழுக்கற…. ஜாய்ன் த ஸ்கூல் போறும். அதிலேயே ஒரு இன் இருக்குப் பாரு’ என்று பிரிபோசிஷன்ஸ் பயன்பாட்டைப் பற்றி பாடம் எடுத்தார் என்றால் பையன்கள் ஜென்மத்துக்கும் மறக்கவே மாட்டார்கள்.
அன்றைக்கு திருத்திய கால்பரீட்சை பேப்பர்களை விநியோகிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு பையனாக அவர் மேஜையருகே வந்து திருத்தின பேப்பரை வாங்கிக் கொண்டு போக, ஆளுக்கு ஏற்றவாறு தட்டிக் கொடுத்தும், ஆசனவாயின் எரிச்சலுக்கு ஏற்றவாறு மட்டம்தட்டியும் கோவிந்தனின் பொழுது போய்க்கொண்டிருந்தது. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பது கோவிந்தனின் அனுமானம். அதில் இப்படி வாய்த்தவரையெல்லாம் வகைதொகயில்லாமல் வசைபாடும் வசதியிருப்பது அவருக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. பாலமுருகன் பேப்பர் வாங்க வந்ததும் அவர் நிலையையும் மறந்து பாய்ந்து அவன் முடியைப் பற்றி சுற்றியபடி உலுக்க ஆரம்பித்துவிட்டார்.
‘பெரிய மயிரப்புடுங்கின்னு நெனப்பு… ‘
அதிர்ச்சியடைந்த பாலமுருகன் திக்கியபடி ‘என்ன…. என்ன… வேணாம் சார்’ என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் முதுகில் இரண்டு சாத்து சாத்தி தலையை சுழற்றி டேபிளில் மோதிவிட்டுத்தான் ஓய்ந்தார். செண்டு முளை கிளப்பிய எரிச்சலை விட இந்த மண்டுமூளை அதிக எரிச்சலை கிளப்பிவிட்டான் என்று கோபம் பொங்கியது.
‘காச்சு காச்சுன்னு தெனம் கத்தி கத்தி சொல்றேன். அதெல்லாம் படிக்காம, உம்பாட்டுக்கு கத எழுதற பரீச்சயில… என்னடா இது’ அவர் நீட்டிய பரீட்சை பேப்பரை வாங்கிய பாலமுருகன் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான்.
கோவிந்தனின் சென்ற வசனத்தில் வெகண்டை வசவு எதுவும் இல்லாததால் சுரத்து இழந்து பார்த்துக் கொண்டிருந்த பையன்களை பார்த்து, ‘எங்கடா அவன்… அங்க யாருக்கு முத்தம் கொடுத்திட்டிருக்கான்’ கையில் வைத்திருந்த சாக்பீஸின் நுனியை படக்கென உடைத்து ஓங்கி எறிவது போல பாவனைக் காட்ட, அவர் பார்த்த திசையில் இருந்த வெங்கட்ராமன் பதறிப் போய் எழுந்தான். கோவிந்தன் அடுத்த ரவுண்டிற்கு தயாராகிவிட்டார் என்று பசங்களுக்கு குஷி பிய்த்துக்கொண்டு கிளம்பியது.
‘கன்ஜூரர்ஸ் ரிவஞ் (Conjurer’s revenge)லிருந்து என்னடா கொஸ்டின் வந்திருந்தது?’
‘சார்?’
‘செகண்ட் பேப்பர் பரிச்சயிலடா’
வெங்கட்ராமன் நினைவு வந்தவன் போல வேகமாக, ‘What lesson did the Conjurer want to teach the quickman? If you agree to it, Please do justify it’
அவனுக்கு நல்ல வெங்கலக் குரல். இங்க்லீஷ் மீடியம் படிக்கிற பசங்கள் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். என்ன ஒரு உச்சரிப்பு. என்ன ஒரு தெளிவு. அவன் அப்பாவுக்கு கலெக்டர் ஆபிசில் நல்ல செல்வாக்கு உண்டு. கோவிந்தனின் பூர்விக நிலப் பட்டா பிரச்னையை அவர்தான் கவனித்து சீர்படுத்துவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்.
மீண்டும் பாலமுருகன் பக்கம் திரும்பியவர் ‘இந்த கொஸ்டினுக்கு நோட்ஸ் எழுதிப்போட்டேனா. எப்போ எழுதிப்போட்டேன்…. நாலே நாலு வரிதானேடா…. அதப் படிச்சு எழுத முடியாதா கொரங்கு. என்னமோ கத எழுதியிருக்க… ஒண்ணரபக்கத்துக்கு’
பேப்பரை சுழற்றி பாலமுருகன் மூஞ்சியில் விட்டெறிந்தவர். ‘எளவு என்னத்த எளுதிருக்கேன்னு நீயே படிச்சு சொல்லு… தோணினதெல்லாம் எழுதி வக்கிறது… அதில வரிக்கு நாலு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேற. பூனைபுடுக்கை பிடிச்சு சிரச்சு விட்ட மாதிரி…’
சிலநொடிகள் திகைத்து நின்றிருந்த பாலமுருகன் மெதுவாக பேப்பரை விரித்து படிக்க ஆரம்பித்தான். ‘தி சடயர் வாஸ் சோ அப்போஸிட் ஆன் த சொசைட்டி…’ திக்கியபடி வார்த்தைகள் வெளிவந்தன. உடனடி விளைவாக, மேஜை மேலிருந்த டஸ்டரை எடுத்து சுழட்டி அவன் மேல் வீசினார்.
‘முதல் வரியிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக். ஆப்போசிட்டுக்கு என்னடா ஸ்பெல்லிங்? இதுவா நான் எழுதிப்போட்டது?’ கீழே விழுந்த டஸ்டரை எடுத்து அவன் கொடுக்க மீண்டும் அடிக்கப் பாய்ந்தார். செண்டுமுளை ரப்சர் ஆனதில் குதிக்கமுடியவில்லை. ஆங்காரத்துடன் ஓங்கிய கையை நிறுத்திக்கொண்டார்.
‘இல்ல சார்… இது அந்த ஆப்போசிட் இல்ல சார். appositeன்னு வேற சார். இந்த சூழலுக்கு பொருத்தமா வரும்னு… ‘
‘டேய் அங்க யார்றா அடுத்தவன் வாய்ல எச்சல் துப்பிட்டிருக்கிறவன்… ஆப்போசிட் ஸ்பெல்லிங் சொல்லு’
கண்ணாடிப் போட்டிருந்த முத்துக்குமரன் எழுந்தான். கொஞ்ச நேரம் தெற்கும் வடக்குமாக சுற்றி சுற்றி முழித்தவன் ஒருவழியாக ஸ்பெல்லிங்கை சொல்லி முடித்தான். அவன் தந்தை ராசமாறன் பெரிய பட்டிமன்ற பேச்சாளர். அரசியல் பின்புலமும் எல்லாம் உண்டு. ஒரு நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்தால் சுகமாக போய்விடும். கௌரவமாக லெட்டர் பேடில் போட்டுக்கொள்ளலாம். புன்னகைத்தபடி தலையாட்டிக்கொண்டே முத்துக்குமரனை ஊக்குவித்தவர், பாலமுருகனைத் திரும்பிப் பார்த்தார்.
‘கேட்டியா. என்னமோ நீதான் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரிய கண்டுபிடிச்ச மாதிரி புது வார்த்தன்னு வியாக்யானம் கொடுக்கிற வெளக்கெண்ண ‘
படக்கென அவனிடமிருந்து பேப்பரை பிடுங்கினார். ‘அத விடு. இதென்ன எளுதிவச்சிருக்க. கன்சும்மேஷன் ஆஃப் எ ஸ்டோரி….. கதை என்ன உங்க அக்கா பொண்ணுக்கு சடங்காகி நிக்குதா. அதப்போய் ஏண்டா.. கற்பழிக்கிற மாதிரி கன்ஸூம்மேட் பண்ணுவேன்னு ஒத்தக்கால்ல நிக்குற.’ மீண்டும் பையன்கள் எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தனர். கோவிந்தனுக்கும் செண்டுமுளை இப்போது சௌகரியமாக உள்ளேப் போய்விட்டது. நன்றாக சேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
பாலமுருகன் இப்போது தைரியம் பெற்றவனாக ‘அது ஷேக்ஸ்பியர் வசனம் சார். ஹாம்லெட்ல தட் ஃப்ளெஷ் இஸ் ஹெய்ர் டூ ன்னு வருமே. இந்தக் கதைக்கான தீர்மானம் தோணும் இடத்தைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.’
அவனையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்த கோவிந்தன் ‘உங்கப்பாருக்கு என்னா வேல’ என்றார்.
‘தயிர்க்கடை வச்சிருக்கார் சார்’ என்றான், சற்றுக் கூச்சத்துடன். உண்மையில் அவன் அப்பா சின்னசாமிக்கு கடை எதுவும் கிடையாது. முன்பு தெருத்தெருவாக சைக்கிளில் சுற்றி வீடுகளுக்கு தயிர் சப்ளை செய்துகொண்டிருந்தார். இப்போது சூப்பர்மார்க்கெட்டில் சேர்ந்து வீடுவீடாக டெலிவரி செய்கிறார். அவன் வகுப்பு தோழர்கள் பலபேருக்கும் அது தெரியும்.
‘நல்ல யாவாரம்தான். மோர்ல தண்ணிய கலந்து மோண்டு மோண்டு வித்தாப் போதும். இல்ல’ களுக்புளுக் என்று பையன்களிடையே ஆங்காங்கே சிரிப்புகள். கோவிந்தனுக்கு என்ன யோசித்தாலும் பாலமுருகன் ஷேக்ஸ்பியரைப் படித்து, காப்பரீட்சையில் கோட் செய்து எழுத முடியும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. அதுவும் ஏதோ தயிர்க்கடை என்கிறான். சல்லிக்காசுக்கு பிரயோஜனமில்லாத பயல்.
‘வெளங்கா மண்டயா. சினிமாலல்லாம் பாத்திருப்பியே… உனக்கு புடிச்ச ஹீரோ யாருடா? எல்லாப் பாட்டிலும் அதானேடா காட்டறான்’
பாலமுருகன் அசௌகரியமாக நெளிந்தான். ‘வீட்ல சினிமாக்கெல்லாம் விடமாட்டாங்க சார்’
‘அதுக்கில்லடா, இப்போ திமுதிமுன்னு நம்ம ராஜ்குமார் மாதிரி வளந்தவன் ஒருத்தன் இருக்கான்னு வச்சுக்க’ பையன்கள் எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தனர். ராஜ்குமார் வெட்கத்துடன் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தான். ‘அவன் ஜிலுஜிலுன்னு ஒரு பொண்ணப்பாக்கிறான். பாத்தோன்ன என்னா தோணும்? கஜகஜன்னு என்னல்லாமோ தோணுது. உடனே கசமுசான்னு செஞ்சுவச்சிடறான்…’ வாயைப் பொத்திக்கொண்டு, கண்ணை பிதுக்கிக்கொண்டு, மேஜையில் விழுந்து புரண்டெல்லாம் பையன்கள் சிரித்துக் கொண்டிருந்தனர். ‘வெடவெடன்னு போய் முடிச்சிடறானா… அதான் கன்சும்மேஷன். வெளங்குதா’ என்றார்.
‘இந்த இடத்தில் அது கரெக்ட்தான் சார். த கன்சும்மேஷன் ஆஃப் த ஸ்டோரி அப்பியர்ஸ் டு பி…’ பாலமுருகனின் குரல் சரேலென எரிச்சலைக் கிளப்பியது.
‘வெண்ண மயிராண்டி.. உனக்கெல்லாம் சொன்னாப் புரியாது. ங்கொப்பன் ஆத்தாள சொல்லனும். எவன்டா உனக்கு இங்க்லீஷ் மீடியத்தில் சீட்டு கொடுத்த மடையன், அவனச் சொல்லனும். வெளக்கெண்ணய் மோண்டு வெறும்குண்டியக் கழுவின மாதிரி என்னத்தயோ எளுதிப்புட்டு பேசறான் பேச்ச. ஆக்கங்கெட்ட கூவை’
பாலமுருகன் அதை எதிர்பார்க்கவேயில்லை. அவன் அப்பா எளிமையாக சில நடைமுறைகளை கடைபிடிக்க பாலமுருகனுக்கு அறிவுறுத்தியிருந்தார். தினமும் பத்து புதியச் சொற்களை டிக்ஷனரியிலிருந்து கற்றுக் கொள்வது அதில் ஒன்று. மேலும், அந்தவருடம்தான் ஆங்கிலம் இரண்டாம் தாளில் இலக்கண பாடத்துடன் ஒரு சிறுகதை தொகுப்பையும் பாடமாக வைத்திருந்தார்கள். கரைபுரண்டோடும் உற்சாகத்தோடு ஒவ்வொரு கதையைப் பற்றியும் அவன் பக்கம்பக்கமாக குறிப்புகள் சேகரித்து பரீட்சையில் எழுதி வைத்திருந்தான். வாத்தியாரிடம் பெரும் வரவேற்பு இருக்கும் என்று கனவு கண்டால், ராபணா என்று கதையே மாறிப்போய்விட்டது.
‘ஸ்கூல் வாசல்ல ஐஸ் விக்கிறவன்கிட்ட ரெண்டு ரூபாய்க்கு வாங்கி சப்பறே இல்ல. எப்படி உறிஞ்சு உறிஞ்சு கடைசி சொட்டுக்கூட மீந்தாம சப்பற. கடைசிக் குச்சியக்கூட விடாம ங்கங்கங்ன்னு கடிச்சி உறிஞ்சிடற. பத்துவருசமா எடுத்து வச்சு நோட்ஸ் கொடுக்கிறேன் படிச்சாத்தான் என்ன எளவே…’ அவர் மேஜை மேலிருந்த கெட்டி அட்டைப் போட்ட ரெண் அண்ட் மார்டினையும், பாடத்திற்காக பிரத்யேகமாக அவர் பதிப்பித்திருந்த கையேடையும் காட்டி உறுமினார். அந்த மேஜை வேறு எதுவும் இல்லாமல் துடைத்து வைத்தது போலிருந்தது.
ஆசுவாசமாக சாய்ந்து அமர்ந்துகொண்டவர், சிறு குச்சியவிட்டு காதை குடைந்து கொண்டே,
‘சரி உனக்கு இங்லீஷுதான் வர்ல. அப்படி என்னத்த எளவெ எளுத நெனச்சேன்னு தமிள்லேயே சொல்லு. கேப்போம். ஒண்ணரப் பக்கமெல்லாம் படிக்க முடில’
பாலமுருகன் கொஞ்சம் தைரியம் பெற்றவனாக ‘அதாவது சார். இந்தக் கதயில ஒர்த்தன் வித்தை காட்டறவனாகவும், இன்னொருத்தன் வம்பிழுக்கிறவனாகவும் வர்றாங்க. ஆடியன்ஸ்ஸெல்லாம் முதல்ல வித்தை காட்டறவனை வியந்து சிரிக்கிறாங்க. அத சொஸைட்டியோட மாதிரின்னு வச்சிக்கலாம்ல சார். இந்த வம்பிழுக்கறவன் குறுக்கால குறுக்கால வந்து ஷோவை குலைச்சதும் அதே சொஸைட்டி அவன வியக்க ஆரம்பிச்சிடுது. இப்ப வித்தைக்காரன் தன்னோட உன்னத நோக்கத்தை விட்டுட்டு வம்பிழுக்கறவனோட போட்டி போட வேண்ட்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுடுது. அப்பதான் பாருங்க சமூகம் அவனயும் மதிக்கும். தன்னை தற்காத்துக் கொள்ள முடியாத வித்தையால வித்தைக்காரனுக்கு என்ன பயன்னு சொஸைட்டி அவன கேலியா பாக்குது. வித்தைக்காரன் தன்னோட வித்தைய காப்பாத்திக்கத்தான் அந்த ரிவஞ்சில் இறங்கறான்… உங்க நோட்ஸ்ல அவன் செய்த டேமேஜஸ்லாம் நியாயமில்லைன்னு குறிப்பிட்டிருந்தீங்க. தன்னோட வித்தைக்கு அவன் செய்ய வேண்டிய மரியாதைன்னு ஜஸ்டிஃபை பண்ணி விரிவா எழுதியிருக்கேன் சார். அதான் ஷோ முடிஞ்சு எல்லாரும் கலைஞ்சுபோகும்போது சில வித்தைகளாவது ஒரிஜினலா செய்யறான்ட்டு பாராட்டிட்டேப் போறாங்க.’
குச்சியில் காது குரும்பு எதுவும் அகப்படவில்லை. துழாவினதில் காது ஜவ்வில் பிறாண்டின வலிதான் மிச்சம்.
‘கண்ட கழிசடையும் படிச்சிட்டு, இங்க வந்து கெடந்து ஒழப்பினா இப்படித்தான் கோக்குமாக்கா ஒளறத் தோணும். அங்க எவன்டாவன் வாய்போட்டுக்கிட்டிருக்கான்… டேய் செபாஸ்டின்’
இண்டியன் பேங்க்கில் வேலை செய்கிறார் செபாஸ்டினின் அப்பா. நல்ல ரேட்டு வரும்போது வீட்டு லோனை மாற்றிக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தார்.
‘நோட்ஸைப் படிறா’
பத்து வருடமாக 9ம் வகுப்பு பாடத்தில் இருக்கும் அந்தக் கதைக்கு அவர் எழுதிய அதே பத்து வருட பழைய நோட்ஸைப் அவன் உரக்க வாசித்தான்.
‘புரியுதா? கத படிக்கறதொண்ணும் உங்கூட்டு கக்கூஸ்ல போற கழிசல் இல்ல. புரிஞ்சிட்டு படிக்கனும். பாடம் நடத்தும்போது புரியலின்னா கேட்டு தெளிஞ்சிக்கனும். எளுதும்போது ஒளுங்கா கிராமர்படி எளுதனும். இல்லன்னா ட்யூஷனுக்கு வா.’ அவனை ஏறெடுத்து பார்த்தாலே தெரிந்தது அவன் அதற்கெல்லாம் மசியமாட்டான் என்று.
‘போ. இந்தமுற எப்பிடியோ பாஸாக்கி விட்டுட்டேன். அரப்பரீட்சக்குள்ள ஒழுங்கா படி. இல்லீன்னா பெயில்தான்’ ஆரவாரமான அறிவிப்பு போல சொன்னார். எல்லா பையன்களுக்கும் ஒரு பயம்தான் இருக்கட்டுமே.
அப்புறம் ஒரு பத்து நிமிடங்களுக்கு ஜெரண்ட் அண்ட் இன்ஃபினிட்டிவ்ஸ் என்று இலக்கணப் பாடம் நடத்துவதாக பேர் பார்த்துவிட்டு வகுப்பை முடித்துக் கொண்டு கிளம்பினார். பேப்பர் கட்டும் புத்தகமுமாக ஸ்டாஃப் ரூமிற்கு திரும்பும் வழியில் சந்தானகோபாலனைப் பார்த்தார்.
‘என்ன வியெஸ்ஜி, க்ளாஸே ஒரே கலகலன்னு இருந்தது போல. இங்கேர்ந்து பாத்தாலே தெரியுதே. பசங்க எல்லாருக்கும் ஒங்களப் பாத்தாலே ஒரு கிக்குதான் சார்’ என்றார்.
‘விடியாமூஞ்சிப் பயலுக. இவனுகளுக்கு பாடமெடுத்து பரீச்ச வச்சா, நமக்கே பதிலுக்கு பாடம் எடுக்கிறாங்க. உருப்படவே மாட்டானுங்க’
‘யாரச் சொல்றீர்? அந்த ஆறடிக்கு வளந்து நிப்பானே ராஜ்குமாரா? சேட்ட ஜாஸ்திதான் சார் அவனுக்கு’
பேப்பர்கட்டில் இருந்து தேடி பாலமுருகனின் பேப்பரை எடுத்து சந்தானகோபாலனிடம் கொடுத்தார். ‘ஒண்ணரப்பக்கத்துக்கு பதில் எளுதறேன்னு வச்சு தேய்ச்சு எடுத்திருக்கான் தாயோளி. இதெல்லாம் படிக்கனும்னு நமக்கு தலயெழுத்து’
கோவிந்தனுக்கு அடுத்து அசிஸ்டென்ட் ஹெச்எம் பதவிக்கு சந்தானகோபாலன்தான் வரவேண்டும். அதனால் இருவருக்குமிடையே உள்ளார்ந்த ஒரு மரியாதை உடனபடிக்கை உண்டு. கோவிந்தனின் வெகண்டைப் பேச்சைக் கேட்டு சிரித்தபடியே பாலமுருகனின் பேப்பரை வாங்கி தவளைக்குதியாக பார்வையை ஓட்டினார் சந்தானகோபாலன்.
‘என்ன ஓய் இப்படி எழுதியிருக்கான்… எதுவும் லூசா இருப்பானோ’ என்று சிரித்தார்.
‘நீரளவே ஆகுமாம் நீராம்பல்னு அன்னிக்கே சொல்லி வச்சிருக்காங்க இல்லியா. இவனெல்லாம் வச்சு மாரடிக்கனும்னு என் விதி’ என்றார் கோவிந்தன்.
‘அடுத்த பீரியட் எனக்கு டென்த் பி’ என்று சொல்லிக் கொண்டே கிளம்பினார் சந்தானகோபாலன். ‘எனக்கு இப்ப டெய்லி பீரியட்டா போயிட்டிருக்கு சார். நம்ம ரெயில்வே காலனி முருகதாஸும் ஏதோ சூரணம்னு கொடுக்கிறான். ஒண்ணும் ஒப்பேற மாட்டேங்குது. நீங்க ஏதோ நத்தை பஷ்பம்னு சொன்னீங்களே” என்றார்.
சந்தானகோபாலனுக்கு ஆழிமுளை இருந்து இப்போது பூரண குணமாகிவிட்டது என்று சொல்லிக்கொள்வார். ஆயுர்வேதத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர். கோவிந்தனின் கேள்விக்கு ஆர்வத்துடன் குப்பைமேனியின் குணநலன்களைப் பற்றி விதந்தோத ஆரம்பித்தார். நாகபஷ்பம், நத்தைபஷ்பம், கடுக்காய் சூரணம் என்று தொடர்ந்து பேசியவர், அன்று மாலையே வெள்ளியங்கிரி வைத்தியசாலைக்கு போய், கோவிந்தனின் விடிமோட்சத்திற்கான வழிமுறைகளை கண்டறிய உதவி செய்வதாக உறுதி கூறிவிட்டு, இரண்டாவது பீரியட் லேட்டாகிறது என்று நினைவுக்கு வந்தவராக கிளம்பினார்.
பாலமுருகனின் பேப்பரை திரும்பி வாங்கிக் கொண்ட கோவிந்தன் ‘இந்தமாதிரி அகராதி புடிச்சவனயெல்லாம் கட்டி மேய்க்கிறதுக்கு உடம்பு சூடாகி இதான் கூலி நமக்கு. பாத்துகிடுங்க. நேரக் கொண்டு போய் ஹெச் எம் மூஞ்சில விட்டெறிஞ்சிறப்போறேன். அவரே திருத்தி மார்க்கு போட்டுக்கட்டும்கிறேன்’
நின்றுகொண்டே பேசியதில் செண்டுமுளை கன்றிப் போய் கோவிந்தனுக்கு எரிச்சலை கூட்டியிருந்தது.
சந்தானகோபாலன் சிரித்துவிட்டு ‘அவர் கண்ல பேப்பரெல்லாம் காட்டிறாதீங்க. ஆகா ஓகோ-ன்னு பாராட்ட ஆரம்பிச்சிருவார். அந்தாளுக்கு இதெல்லாம் ஒத்துப் போகும். என்னவோ ஒரிஜினலா எழுதனும்னு பாத்திருக்கான்’ என்று சொல்லிவிட்டு விலகிச் சென்றார்.
‘கோணங்கெட்டவன காணப்படாதுன்னு கோவிலுக்கு போனா, அங்க ரெண்டு மானங்கெட்டது மல்லாக்க படுத்து மாரக்காட்டிட்டு கெடந்ததாம். &*#$(#$% மவன்கிட்ட எவன் கேட்டான் ஒரிஜினாலிட்டி சர்டிபிகேட்டு’ என்று திட்டிக்கொண்டே ஸ்டாஃப் ரூமிற்கு நடந்தார். செண்டுமுளை விடாமல் எரிச்சலோடு உறுத்திக் கொண்டே வந்தது. ஆசுவாசத்திற்கு கையில் இருந்த ரெண்ட் அண்ட் மார்ட்டினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டபடி நடக்கவாரம்பித்தார்.
Stephen Leacock:- வித்தைக்காரனின் வெஞ்சினம்