ஹுசைன் ஸாகர் ஏரிக்கரையில்
கல் பெஞ்சில் உட்கார்ந்து
பிரும்மாண்டமான புத்தன் சிலையைப் பார்த்து
கவிதை எழுத யத்தனிக்கிறான் கவிஞன்-
புத்தனோ மெளனம் பாவிக்கிறான்,
இவனுக்கோ கவிதை வரவில்லை
காகிதத்தைக் கிழித்துக் கிழித்து வீசுகிறான்
கிழித்துப் போட்ட காகிதங்களை
மென்று கொண்டிருக்கும் கிழக்கழுதையொன்று,
“அந்த மூணாம் கவிதை ருசியாக இருந்தது,” என்கிறது
அதை முறைத்துப் பார்த்துவிட்டு
மறுபடியும் புத்தனை பார்க்கிறான் கவிஞன்,
புத்தன் எப்பொழுதும் போல் மெளனமாய் நிற்கிறான்
“சீக்கிரம் கவிதை எழுது. எனக்கு பசிக்கிறது,”
என்று அவசரப்படுத்துகிறது கழுதை
கழுதையை முறைக்கிறான் கவிஞன்,
கவிஞனை முறைக்கிறது கழுதை
இருவரையும் மெளனமாய்க் கூர்ந்து
நோக்கிக் கொண்டிருக்கிறான் புத்தன்
கோட்டோவியம் : சேது வேலுமணி
