இரண்டு அடிப்படைக் காரணங்களை சொல்லத் துணிவேன். ஒன்று நன்றிக்கடன். என்னை திறம்பட வளர்த்தது பெற்றோரோ சொந்த பந்தங்களோ நண்பர்களோ இல்லை. தேடித்தேடி நான் வாசித்த புத்தகங்கள்தான். இன்றும் என் பலம் மற்றும் பலவீனமாக இருப்பது நான் வாசிப்பு மூலம் பெற்றுக்கொண்டவையே. பல மனத்திரிபுகளில் இருந்து பாதுகாத்த தாய்மை நான் விரும்பி வாசித்த படைப்பாளிகளுக்கு உண்டு. உடம்பின் தேவைகளை நிறைவு செய்யவே வக்கற்ற பிறப்பமைந்த எனக்கு இலக்கியம் என்பது உயர்குடிக்கானது என்ற எண்ணம் சிறுவயது முதல் இருந்தது. அதனால் உயர்குடிப்பண்புகளில் ஒன்றான இலக்கிய வாசிப்பு மீது பெரும் விருப்பம் இயல்பாகத் தோன்றியது. யாருடனும் ஒட்டுறவற்ற பால்யத்தின் ஒரே ஆறுதல் அன்று வாசிக்கக்கிடைத்த புத்தகங்கள்.
பத்து வயது முதல் தனிமை என்பதை விரும்பத் தொடங்கினேன். ஏன் என்று யோசிக்கும்போது உறுதியாய் சொல்ல முடியவில்லை. சிறுவயதில் தந்தையை இழந்தது அதன்பிறகான தொடர் வறுமை மற்றும் உறவினர்களின் புறக்கணிப்பு இப்படி எதாவது காரணமாக இருக்கலாம். எல்லாருக்குமான நதிதான் என்றாலும் என் நதி இதுவல்ல என்ற மனவிலக்கம் இயல்பான பால்யத்தை எனக்கு வழங்கவில்லை. விழாக்களும் விருந்தினர்களும் விரும்பத்தகுந்தவையாக இருக்கவில்லை. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்றான பின்பு எப்படி இவ்வுலகத்தோடு ஒட்ட முடியும்?
புத்தகங்கள் என் வறுமையை ஏளனம் செய்ததில்லை.. என் வருகையை அஞ்சி தின்று கொண்டிருந்த உணவை ஒளிக்க முயன்றதில்லை. காணும்தோறும் தந்தையற்ற கையறு நிலையில் என்னை நாணச் செய்ததில்லை. ஆனால் கரம் பிடித்து தோழமையோடு உலகின் பல வீதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளன. நான் அறிந்திருக்க வாய்ப்பற்ற பல வாழ்க்கைத் தருணங்களை எனக்கு புகட்டுகின்றன. விதவிதமான வாழ்க்கைச் சாத்தியங்களை என் அனுபவமாக்குகின்றன.. நான் தொடர்ந்து பெற்றுக்கொண்டு வருகிறேன். இருபதாண்டுகளாக என் போதிமரத்தின் கனிகள் தீர்ந்ததே இல்லை. தினமும் புதிதுபுதிதாய் ருசிகள் கனிந்துக்கொண்டே இருக்கின்றன. ஒருநாளாவது ஒருகணமாவது இலக்கிய வாசிப்பு வீண் என்று எண்ணியதில்லை. ஆயுள் போதாதே என்ற வருத்தம்தான். அதனால் சிறுவயதிலிருந்து எழுதும் கரங்களை நோக்கி ஏங்கி வந்துள்ளேன். . அதில் ஒன்றாக என் கரமும் இருக்க வேண்டும் என்றாசை இயல்பாகத் தோன்றும்தானே.. வாழ்ந்த அறிந்த வாழ்க்கையை பதிவு செய்வது நான் இங்கிருந்தேன் என்பதன் அர்த்தம் என்பதால் எழுத விரும்புகிறேன்.
இரண்டாவதாக காலத்தை வெற்றி கொள்ளும் பேராசை. அப்பனும் முப்பாட்டனும் என்னவாக வாழ்ந்தார்கள் என்பதற்கான எவ்வித சுவடுகளும் இம்மண்ணில் இல்லை. அவர்கள் என்ன நினைத்தார்கள் காலத்தோடு என்ன பேசினார்கள் எனபதை இன்று அறிந்துகொள்ள வழியில்லை. வாழ்ந்து பெற்ற திறப்புகளை மடிந்து உடன்கொண்டு சென்றுவிட்டனர்.
படைப்பாளிக்கு காலத்தை வெல்லும் வரத்தை இயற்கை அளித்துள்ளது. சராசரி மனிதனுக்கு எண்பதாண்டு அதிகபட்ச வாழ்க்கை என்றால் ஒரு படைப்பாளிக்கு அதை இருமடங்காக அவன் படைப்புகள் வழங்குகின்றன. ஒரு படைப்பாளி எழுதுவதன் மூலம் ஒரு பண்பாட்டுவெளியை, மானுட சிந்தனையை, மண்ணின் வேர்களை நிலைப்படுத்திச் செல்கிறான். தொடர் கண்ணியாக இணைந்து மனிதகுலத்தை உந்தித் தள்ளுகிறான். இன்றும் நினைத்த நேரத்தில் கம்பனும் வள்ளுவனும் பாரதியும் என்னோடு உறவாடுகிறார்கள். நேற்றும் இன்றும் நாளையும் அவர்கள் அவர்களைத்தேடி செல்கிறவர்களோடு உறவாடும் நல்வாய்ப்பினை பெற்றுள்ளார்கள். அப்பேற்றினை நினைக்கும்போது நான் இங்கு இறப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்ற ஆணவத்தை அளிக்கிறது. என் மொழி உள்ள காலம்வரை நான் இருப்பேன். இதைவிட வேறென்ன வேண்டும்?
oOo
சுமார் இருபதாண்டுகளாக இலக்கியம் சார்ந்த எதாவதொரு நினைப்பு இல்லாமல் வாழ நேரிட்டதே இல்லை.சுபா மாதிரி பாலகுமாரன் மாதிரி சுந்தர ராமசாமி மாதிரி ஜெயமோகன் மாதிரி என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதர்ச எழுத்தாளர்களைப்போல எழுதி வாழவேண்டும் என்கிற ஆசைதான் வாழ ஊக்கப்படுத்துகிறது. இயற்பெயர் பா.சங்கர நாராயணன் , வயது 35, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தற்போது வசித்து வருகிறேன். சொந்த மண் புளியங்குடி. பள்ளி மேல்படிப்பு. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு நாவல்களும் கவிதைகளும் எழுதிப்பார்த்தது உண்டு. நண்பர் ஒருவர் முதலில் தமிழில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் கற்றுக்கொள். அதன்பின் எழுத ஆரம்பி என்றார். முக்கியமான அனைத்து நவீன தமிழ் படைப்பாளிகளையும் தீிவிரமாக வாசித்தேன். சுந்தர ராமசாமி ஒரு கடிதத்தில் இலக்கியம் சோறுபோடாது வேலை ஒன்றைத் தேடிக்கொள்ளுங்கள் அதுவும் அரசு வேலை என்றால் சிறப்பு என்கிற தொனியில் அறிவுறுத்தினார். அதுவரை ஜவுளிக்கடை வேலை போர்வை தயாரிப்பு நிறுவன வேலை என்று போனது. காதல் திருமணத்தை தொடர்ந்து அரசு வேலைக்கு முயன்றேன். முயன்று பெற்ற வேலை இன்று ஆளைக்கொல்லுகிறது. ஒரு வீம்பிற்காகத்தான் சட்டென்று எழுத வேண்டும் என்கிற ஆசை கொந்தளிப்பாக வெளிப்பட்டது. நேரமின்மையின் காரணமாகவும் சிறுகதைகள் குறித்த பெரிய மரியாதை காரணமாகவும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். என் முதல் கவிதையை பதாகையும் முதல் சிறுகதையை மலைகள்.காம் வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்தின. கவிதைகளை விட மிகப்பொிய நாவல்கள் எனக்கு விருப்பமாக உள்ளன. வெற்றியோ தோல்வியோ அவற்றை எழுதியே தீருவேன். நித்ய சைதன்ய யதியின் மீதான பிரமிப்பால் அவர் பெயரைப் புனைப்பெயராக எடுத்துக்கொண்டேன். மீண்டும் கடந்த ஓராண்டாக எழுதி வருகிறேன்.