நாங்கள் வீட்டுக்கு வெளியே போர்ச்சில் இருந்தோம், கிராஸ்ஸி ரன்னில் வளர்வது பற்றி பாட்டி பேசிக்கொண்டிருந்தாள். அங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் இப்போது இறந்து விட்டார்கள், நான் அவர்கள் யாரையும் அறிந்திருக்கவில்லை பெயர்களன்றி அவர்கள் எனக்கு வேறெதுவுமில்லை. ஊஞ்சலாடிக் கொண்டே காட்ச்-22 படித்துக் கொண்டிருந்தேன், அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. படிப்பதை நிறுத்தும் அளவுக்கு பிடிக்கவில்லை என்பதில்லை, அட்டையில் இருந்த ப்ளர்புகள் சொன்ன அளவுக்கு அது அவ்வளவு தமாஷாக இருக்கவில்லை. எனக்கு அது புரியவில்லை. எனக்குப் புரியவில்லை என்பதால் அதிகரிக்கும் அதிருப்தியுடன் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தேன். செத்துப் போனவர்களைப் பற்றி பாட்டி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்- ராம்சேக்கள், ஸ்லீத்கள், ப்ராஸ்ட்கள். எல்லாம் வெறும் பெயர்கள். அப்புறம் அவள் செத்த குழந்தை என்று என்னவோ சொன்னாள். யாருக்கோ செத்த குழந்தை இருந்தது. அது வளரவில்லை. என்ன?
“ஹ?” என்று கேட்டேன்.
“என்ன?” என்று பதிலுக்கு கேட்டாள் பாட்டி.
“குழந்தைப் பற்றிதான்,” என்றேன். “என்ன ஆயிற்று?”
“ஓ,” என்றாள் பாட்டி. “மிசஸ் பிஷர், பெக் பிஷர், அவள் மாட் பிஷரைக் கல்யாணம் செய்து கொள்ளும்வரை பிராஸ்டாக இருந்தாள். அப்புறம் அவளுக்கு இந்தக் குழந்தை பிறந்தது, அது வளரவேயில்லை”
|என்ன சொல்கிறாய்?”
“அது வளர்வதாயில்லை..”
“என்னது?”
“அவ்வளவுதான்”
“செத்துப் போய்விட்டதா?”
“ஆமாம், அதற்கப்புறம்,” என்றாள் பாட்டி. “ஆனால் அது வளர்வதாயில்லை. தொட்டிலில் வெறுமே படுத்துக் கொண்டிருந்தது, அது வளர்வதாயில்லை”
எனக்கு எதுவும் புரியவில்லை.
பாட்டி சொல்வது என்னவோ, குழந்தைக்கு வளர விருப்பமில்லை என்பது போலிருந்தது.
அது என்னவோ கெட்ட குழந்தை என்பது போல்.
“அது ஏன் வளரவில்லை?” என்று கேட்டேன்.
“தெரியவில்லை,” என்றாள் பாட்டி. “அது வளரவில்லை, அவ்வளவுதான்”
“அதை டாக்டரிடம் கொண்டு போகவில்லையா?
பாட்டி சிரித்தாள். “அந்த காலத்தில் யாரும் டாக்டரிடம் போனதில்லை”.
“அதற்கு பால் கொடுத்தார்களா?”
“அதெல்லாம் கொடுத்தார்கள்!” பாட்டியின் கண்கள் ஒளிர்ந்தன. பாட்டிக்கு என்மீது கோபம் வர ஆரம்பித்துவிட்டது. எதற்காக? அவள்தான் வீணாய்ப் போன அந்தச் செத்த குழந்தை பேச்செடுத்தவள்.
“ஆனால் அது ஏன் வளர்வதாயில்லை?” என்று கேட்டேன்.
“எனக்குத் தெரியாது!” என்றாள் பாட்டி. “அது வளராமல் இருந்தது, அப்புறம் செத்துப் போய்விட்டது”.
“ஆனால்…” என்றேன். நான்- என்ன சொல்வது- எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. குட்டியாய் ஒரு ராட்சத கெட்ட குழந்தையின் உருவம் என் மனதில் தோன்றிற்று. “ஆனால்.. இது பயங்கரமாய் இருக்கிறது”.
“அந்தக் குழந்தையைப் பற்றித் தெரிந்து கொண்டு உனக்கென்ன ஆகப் போகிறது?” என்றாள் பாட்டி. அவளுக்கு ஆத்திரம் வந்து விட்டது.
“தெரியவில்லை,” என்றேன். எனக்கும் ஆத்திரம்தான். “நீ எதற்காக அதைப் பற்றி பேச்செடுத்தாய்?”
பாட்டி எதுவும் சொல்லவில்லை. அவள் வெறுமே அங்கு உட்கார்ந்திருந்தாள்.
நான் புத்தகத்தின் பக்கங்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
வார்த்தைகள் எதுவும் விளங்கவில்லை.
நன்றி – Chagrin River Review
Nice translation
Good selection & nice translation