– எஸ். சுரேஷ் – (நூலறிமுகம்: Down Melody Lane by G N Joshi)
உஸ்தாத் அமிர் கானின் மார்வா கேட்டதுண்டா? படே குலாம் அலி கானின் ‘ஓம் தத் ஸத்?” டி.வி. பலுஸ்கரின் ராக் ஸ்ரீ? உஸ்தாத் அலி அக்பர் கானின் ‘சந்திரநந்தன்?” இவை ஒவ்வொன்றும் மாஸ்டர்பீஸ்கள் என்று கொண்டாடப்படுகின்றன. இவற்றை நீங்கள் கேட்டு ரசித்திருந்தால், ஜி என் ஜோஷி என்பவருக்கு நன்றி சொல்லியாகவேண்டும். ஏனெனில், ஹெச்எம்வியில் ரெகார்டிங் எக்ஸிக்யூடிவாகப் பணியாற்றிய இவர்தான் காலத்தால் அழியாத இந்தப் புதையல்கள் நமக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர். ‘Down Melody Lane’ என்ற புத்தகத்தில் மேதைகளுடனும், அவ்வளவு பெரிய மேதைகளாக இல்லாத இசைக் கலைஞர்களுடனும் பழகிய அனுபவங்களையும், இவர்களை இசைப்பதிவு செய்வதில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் பதிவு செய்திருக்கிறார். விளம்பரத்தின் தேவையைக் கலைஞர்கள் உணர்ந்திருக்கும் இந்நாட்களில், இசைப்பதிவு செய்வது ஒரு விஷயமில்லை. நாம் பேசுவது வேறொரு காலகட்டத்தைப் பற்றி, அப்போதெல்லாம் பல இசைக்கலைஞர்களுக்கும் தங்கள் இசை பதிவு செய்யப்படுவதில் ஆர்வம் இருந்திருக்கவில்லை. பலரும், தாங்கள் பதிவு செய்து கொடுப்பதை இசைத்தட்டு நிறுவனத்துக்குச் செய்யும் உதவியாக நினைத்தார்கள். அந்த காலத்தில் இருந்த ஈபி/எல்பி இசைத்தட்டுகள், நல்ல ஒரு விளம்பர சாதனமாக இருக்க முடியும் என்பதையோ அவை பிற்காலத்தில் மதிப்புமிக்க ஆவணங்களாக விளங்கும் என்பதையோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சிலருக்கு நிஜாம்கள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்று ஆட்சியாளர்களின் ஆதரவு இருந்ததால் அவர்கள் விளம்பரத்தைப் பற்றியோ பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைப் பற்றியோ அதிகம் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட கலைஞர்களை ஜி என் ஜோஷி சமாளித்து எப்படியோ அவர்களது இசையை ஹெச்எம்விக்காகப் பதிவு செய்ய வேண்டியிருந்தது. இப்போது நம் வசமுள்ள செல்வக்குவியலைப் பார்க்கும்போது ஜி என் ஜோஷி மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார் என்று எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் சொல்லலாம்.
ஜோஷியின் புத்தகம் நிகழ்வுகளைச் சொல்லிச் செல்வதாக இருக்கிறது. அதிலும், காலக்கிரமத்தில் பயணிக்கும் நினைவுப் பாதையல்ல. மாறாக, ஒவ்வொரு இசைக்கலைஞருடனும் பழகும்போது ஜோஷி எதிர்கொண்ட அனுபவங்களின் விவரணைகள் அந்தந்த கலைஞரின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட அத்தியாயங்களில் பதிவு செய்யப்படுகின்றன. எனவேதான் இந்த நூலில், படே குலாம் அலி கான், அமிர் கான், டி வி பாலுஸ்கர், எஹூதி மெனுஹின் முதலான தலைப்புகள் கொண்ட அத்தியாயங்களைப் பார்க்க முடிகிறது. இசைக்கலைஞர்கள் தவிர, நௌஷாத், சி ராமச்சந்திரா ஆகிய இரு இசையமைப்பாளர்கள் பற்றியும் ஜோஷி இந்நூலில் தன் நினைவுகளை எழுதியிருக்கிறார். இவர்களையும் தவிர வேறொருவரும் இந்நூலில் உண்டு. சுவாரசியமான இந்த ஆளுமை, இசைப்பட்டியலில் இடம் பெறும் தகுதியில்லாதவர்- இவர் ஒரு முதலமைச்சர், இவர்தான் பின்னாளில் பிரதமரான மொரார்ஜி தேசாய்.
இவர்கள் தொடர்புடைய சம்பவங்கள் நூலெங்கும் நிறைந்திருந்தாலும், அவற்றை இங்கு நினைவுகூரப் போவதில்லை. அது வாசிப்பின்பத்துக்குத் தடையாக இருக்கக்கூடும். மாறாக, ஜோஷி பதிவு செய்திருக்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து ஒரு சிறு அறிமுகமும், ஜோஷி விவரிக்கும் உலகம் இன்று எவ்வாறு மாறியிருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் அளிக்கலாம் என்றிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் நான் கவனித்த முதல் விஷயம், இதில் குறிப்பிடப்பட்டுள்ள மாபெரும் இசைக்கலைஞர்கள் பதிவின்போது எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பதுதான். பலரும், தங்கள் குரல் நன்றாக இருக்கிறது எனபதில் பூரண திருப்தி கிடைக்கும்வரை பதிவு செய்ய ஒப்புக் கொள்வதில்லை- உஸ்தாத் படே குலாம் அலி கான் பதிவு செய்ய மறுத்ததையும், ஜோஷி அவரிடம் தொடர்ந்து பேசி, மெல்ல மெல்ல அவர் மனதை மாற்றியதும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருக்குமிடையே இருந்த நெருக்கமான உறவை வெளிப்படுத்தும் சம்பவம் இது. ஜோஷி இதே போல்தான் அமிர் கான் பீம்சென் ஜோஷி பாடிய மிகச் சிறந்த சில இசைப்பதிவுகளையும் உருவாக்கியிருக்கிறார். சில கலைஞர்கள் இசைப்பதிவு அரங்குக்கு முன்னரே வந்து, மிக நீண்ட நேரம் ஒத்திகை பார்த்துவிட்டே பதிவுக்கு சம்மதிக்கிறார்கள், ஆனால் அலி அக்பர் கான் போன்ற சிலர் முன்கூட்டியே தங்களை முழுமையாகத் தயார் செய்து கொண்டு, அன்று பதிவு செய்யப்பட வேண்டியது என்ன, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள் என்று சுவாரசியமான சில தகவல்களும் இதில் உண்டு.
துவக்க அத்தியாயங்கள் ஜோஷியின் வாழ்க்கை விவரணைகளாக இருக்கின்றன. ஜோஷி நான்காண்டுகள் வழக்கறிங்கராக பணியாற்றினார் எனபதையும் விற்பனைச் சாதனைப் புரிந்த மராத்தி பாவ்கீத்களைப் பதிவு செய்திருக்கிறார் என்பதையும் அறிகிறோம். இசைநாட்டத்தின் காரணமாக, சட்டத்துறையைக் கைவிட்டு, ஹெச்எம்வியில் ரிகார்டிங் எக்சிக்யூடிவாக இணைந்தார் என்பதையும் அறிகிறோம். ஜோஷி பதிவு செய்த இசைத்தட்டுகள் மிகப்பெரும் வெற்றியடைந்தன என்பதையும் அவர் முறைப்படி ஹிந்துஸ்தானி இசை பயின்றவர் என்பதையும் அறியும்போது, மகத்தான கலைஞர்கள் பலரும் அவரை ஏன் அவ்வளவு மதித்தார்கள் என்பதும் இசைப்பதிவு செய்வதில் அவருக்கு இணக்கமாக ஒத்துழைத்தார்கள் என்பதும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஜோஷியின் வேலை மிகக் கடினமானது. கலைஞர்களின் இவ்வளவு என்று சொல்ல முடியாத அபரித அளவு கொண்ட அகந்தையைச் சமாளித்தாக வேண்டும், சில கலைஞர்கள் எளிதில் காயப்படும் நுண்ணுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள், அவர்களை கவனமாகக் கையாள வேண்டும். கலைஞர்கள் இப்படியென்றால், இவர்களின் மகோன்னதத்தைக் கொஞ்சம்கூட அறிந்துகொள்ளக்கூடிய இசைப் பயிற்சியோ புரிதலோ இல்லாத முதலாளியைச் சமாளித்தாக வேண்டும். குர்ஷித் தொடர்புடைய ஒரு சம்பவம் இதற்கு நல்ல ஒரு உதாரணம். குர்ஷித்தின் அகங்காரத்தின் காரணமாக, இசைப்பதிவு ரத்து செய்யப்படும் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றையெல்லாம் ஜோஷி விவரிப்பது சுவையாக இருக்கிறது. வேறொரு இடத்தில் ஜோஷி பேசிய எதையோ கேட்டுவிட்டு, பேகம் அக்தர் நடந்துகொண்ட விதம், கலைஞர்களின் நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது. ஜோஷியின் முதலாளி பேகம் அக்தரிடம் நடந்துகொண்ட விதமும், கேசர்பாய்க்கு அவர் அளித்த கெடுவும், இசைத்தட்டு நிறுவனங்களில் உயர்பதவியில் இருந்தவர்களின் அறியாமையையும், தங்கள் இசைக்கூடத்தில் இசைப்பதிவு செய்த கலைஞர்களைவிடத் தம்மை அவர்கள் உயர்வாக நினைத்துக் கொண்டதையும் உணர்த்துகிறது.
ஜோஷி பொறுப்பேற்றுக்கொண்டு வெளியிட்ட இசைத்தட்டுகளைப் பார்க்குபோது, அவரது அசாதாரண சாதனையைப் பாராட்டத் தோன்றுகிறது. ஆனால் ஜோஷியோ, தான் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று எழுதுகிறார். கேசர்பாய், படே குலாம் அலி கானின் சகோதரர் பரகத் அலி கான் முதலான மிகச்சிறந்த கலைஞர்களின் இசை குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து வருந்துகிறார். ஹெச்எம்வியுடன் கேசர்பாய்க்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குப்பின் அவர் அங்கு பதிவு செய்வதை நிறுத்திக் கொண்டுவிட்டார், அது மட்டுமல்ல, தன் இசைத்தட்டுகளை ஒலிபரப்பக்கூடாது என்று அவர் ஆல் இந்தியா ரேடியோவையும் தடுத்து விட்டார். அதனால் அவரது குரலைக் கேட்கும் வாய்ப்பு எண்ணற்ற ரசிகர்களுக்கு கிட்டாமலே போயிற்று. இந்திய கர்நாடக இசையின் சாபமும் இதுவாகத்தான் இருக்கிறது நைனாபிள்ளை தன் இசையைப் பதிவு செய்ய மறுத்துவிட்டார்- இசைஞானமில்லாத சாதாரண மக்கள் கேட்பதற்காக டீக்கடைகளிலும் முடி பார்பர் ஷாப்புகளிலும் தன் இசைத்தட்டு ஒலிப்பதை அவர் விரும்பவில்லை என்பதுதான் காரணம். அவரது சிஷ்யையும் கர்நாடக சங்கீத வரலாற்றில் மிகச்சிறந்த பாடகர்களில் ஒருவராக விளங்கியவருமான பிருந்தாவும் அதே கொள்கையைக் கடைபிடித்தார். அவரளவுக்கு ஹிந்துஸ்தானி பாடகர்களில் மிகச் சிறந்தவர் கேசர்பாய். இந்திய பாரம்பரிய இசை மேதைகளான இவ்விருவரும் இசைத்தட்டுகளில் மிகக்குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டிருப்பது ஒரு வரலாற்று பெருஞ்சோகம்.
ஜோஷி சில சுவாரசியமான சோதனை முயற்சிகளும் செய்திருக்கிறார், இவற்றில் சில வெற்றி பெற்றிருக்கின்றன, சில தொல்வியடைந்திருக்கின்றன. பிஸ்மில்லா கானும் வி சி ஜோகும் இணைந்து அளித்த ஜுகல்பந்தி இவற்றில் வெற்றிபெற்ற ஒரு முயற்சி. ஜோஷி பதிவு செய்த மராத்தி மொழி நாடகங்கள் சில எதிர்பார்த்ததைவிட பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் வரலாற்றுத் தலைவர்கள் சிலரின் வாழ்க்கையைப் பதிவு செய்து வெளியிட்ட இசைத்தட்டுகள் வெற்றி பெறவில்லை. “நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் எனது இந்த முயற்சி தோல்வியடைந்தது. மகராஷ்டிராவில் உள்ள அறிவுப்புலத்தில் இயங்குபவர்களுக்கு கல்வி புகட்டும் சாத்தியம் கொண்ட இந்த இசைத்தட்டுகளின் மதிப்பு தெரியவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். இவை குழந்தைகளுக்கான பொழுதுபோக்குச் சாதனங்களாக மட்ட்மல்லாமல், அவர்களது அறிவு வளர்ச்சிக்கும் உதவுகின்றன”, என்கிறார் ஜோஷி. அவர் லண்டன் சென்றிருந்தபோது, குழந்தைகளுக்கான ஒலித்தட்டுகள் இருப்பதைப் பார்த்துவிட்டு, இது போன்ற முயற்சிகள் இந்தியாவில் ஏன் வணிக வெற்றியைத் தருவதில்லை என்ற கேள்வி எழுப்புகிறார். இன்றும் அந்த நிலை மாறவில்லை.
இந்தியாவின் மரபிசையை ஆதரித்த அரச குடும்பத்தினர் சிலரைப் பற்றியும் ஜோஷி எழுதுகிறார். கதானாவின் யுவ்ராஜ், ஜோத்பூர் மகராஜ் ஹனுமந்த் சிங், ஹைதராபாத்தின் நவாப் ஜாகிர் யார் ஜங், நவாப் சாலர் ஜங் முதலானோர் இவர்களில் சிலர். ஜூபைதா குறித்து ஜோஷி பதிவு செய்யும் ஒரு சம்பவம் சுவையான ஒன்று. ஜூபைதா ஒரு நடனக்கலைஞர், சிறந்த கலைஞர் அல்ல என்கிறார் ஜோஷி – ஆனால் இவர் ஜோத்பூர் மகாராஜாவின் அந்தரங்கத் துணையாகிறார். இவரது வாழ்க்கையையொட்டி ஷ்யாம பெனகல், ‘ஜூபைதா’ என்ற பெயரில் திரைப்படமொன்றை இயக்கியிருக்கிறார். ஜோஷியின் பார்வையில், இவர் மகாராஜாவை அவரது சொத்துக்களுக்காகதான் தன்வயப்படுத்திக் கொள்கிறார் என்று மகாராஜாவின் வீழ்ச்சி குறித்து வருந்துகிறார். ஆனால் ஷ்யாம பெனகலின் திரைப்படம் ஜூபைதாவைப் பரிவுடன் அணுகுகிறது.
அந்நாட்களில் இசைக்கலைஞர்கள் சமூகத்தில் மதிக்கப்படவில்லை என்பதையும், ஏன் இந்த நிலை நிலவியது என்பதையும் இந்நூல் விவரிக்கிறது. இன்று அந்த நிலை பெருமளவு மாறிவிட்டது. அதேபோல், இசைப்பதிவு செய்யும் தொழில்நுட்பமும், அதன் சந்தைப்படுத்தாலும் இன்று மாறியிருக்கின்றன. இன்று கலைஞர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதும், தம்மையே ஒரு ப்ராண்டாக நிறுவிக் கொள்வதும் ஜோஷி விவரிக்கும் காலத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விஷயங்கள்.
புத்தகத்தில் முடிவில் ஜோஷியின் அவநம்பிக்கை வெளிப்படுகிறது. வட இந்தியாவில் இசை இன்று வளரும்விதம் அவருக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இல்லை. மேலை இசை மக்களின் கவனத்தைப் பெற்றிருப்பது அவரை வருந்த வைக்கிறது. ஜஸ்ராஜ், கிஷோரி அமோன்கர், பிரபா ஆத்ரே, லக்ஷ்மி சங்கர் போன்ற வெகு சிலரே பூரணத்துவத்தை அடைய முயற்சி செய்வதாகச் சொல்கிறார் ஜோஷி. இவர்களே வளரும் சாத்தியம் கொண்ட கலைஞர்கள் என்று எழுதும் ஜோஷி, இவர்களுக்கு அப்பால் வேறு எவரும் கடந்த கால மேதைகள் தொட்ட உயரங்களை எட்டும் வாய்ப்பு இல்லை என்கிறார். கசப்பான ஒரு தொனியில் புத்தகம் முடிவுக்கு வருகிறது. ஹிந்துஸ்தானி இசை அதன் முக்கியத்துவத்தை இழந்த உலகிலோ, அதன் தூய்மை நீர்த்துவிட்ட உலகிலோ வாழ்வதைவிட மரணமே விரும்பத்தக்கதாக இருக்கும், என்கிறார் அவர். முதியவர்கள் பலரும் இதுபோல் புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம் என்று சொல்லலாம். ஆனால் அவரது அனுமானங்கள் அவ்வளவு பெரிய அளவில் பொய்ப்பிக்கப்படவில்லை. ஹிந்துஸ்தானி இசையுலகம் இன்றும் உற்சாகமாக இருந்தாலும், கடந்த காலத்துக்குரிய மாபெரும் கலைஞர்\களுக்கு இணையான உயரத்தைத் தொடக்கூடியவர்கள் என்றோ, கற்பனை வளம் கொண்டவர்கள் என்றோ, பூரணத்துவம் அடைந்தவர்கள் என்றோ இன்றுள்ள யாரையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஹிந்துஸ்தானி இசையை நேசிக்கும் என் நண்பர்கள் இதைதான் இன்றும் சொல்கின்றனர். நானும் இன்றைய இசைக்கலைஞர்கள் வாசிப்பதையும் பாடுவதையும் ரசித்துக் கேட்க முயற்சிக்கிறேன்- ஆனால் ஒரு மல்லிகார்ஜுன் மன்சூர் அல்லது குமார் கந்தர்வா அல்லது அமிர் கான் போல் வசீகரிப்பவர்களை இன்று பார்க்க முடியவில்லை.
ஜோஷியின் இந்த புத்தகம் வாசிப்பதற்கு வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. இசையில் நாட்டம் கொண்ட எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.