தெருவின் பெயர் – நீங்கள் தெருப்பலகையில் காணலாம்,
எனக்குஅதன் பெயர் சுவர்க்கம், என் தொலைந்த சுவர்க்கம்.
ஊரின் பெயர்- நீங்கள் வழிப்போக்கர்களிடம் கேட்கலாம்,
எனக்கு அதன் பெயர் சுவர்க்கம், என் தொலைந்த சுவர்க்கம்.
தொலைந்து போனதால், அதன் பூங்காக்கள் பூத்திருக்கின்றன,
என் இதயம் துடிக்கிறது, தெறிக்கிறது, தூண்டில் மீனாய் துள்ளுகிறது.
மின்னும் நதியின் கரையோர வளைகளில் கருப்பு எலிகள்,
வரவேற்று அனுமதிக்கப்பட்ட அவற்றின் பூலோக சுவர்க்கம் அழிவற்றது.
பீர் குடிக்கையில் கண்ணாடி விளிம்புகளில் உப்பு பூசச் சொல்லி,
முன்யோசனையுடன் நீ அறிவுறுத்தும்போதும் உற்சாகமாயிருந்தாய்.
என்னவொரு காலம் – காலண்டரில் பார்க்க வேண்டும்,
நீ நைட்டி மாதிரி, அணிந்திருக்கையில் உள்ளும் புறமும் ஆண்டவன்.
நீ மென்மையானவன், பீங்கான் கிண்ணம் போல் உடைகிறாய்-
கடவுளின் ஒளி அதன் வழி வருகிறது, எல்லாம் தெளிந்து வருகிறது.
உன் கண்முன்னரே அவன் உன் காயக்கூட்டினுள் எட்டிப் பார்க்கிறான்,
கூனியிருக்கிறாய்- ஆச்சரியமில்லை- தோள்களில் அமர்ந்திருப்பது யார்!
உன் சுமை ஏற்றுக் கொள்வேன், ஆனால் என் பெயர் எழுதப்படவில்லை,
மழையில் ஒலிக்கும் இசை கேட்டபடி, பூமரப் பாதையில் போவோம் வா-
இளஞ்சூட்டு அருவியென சாக்கடையில் நீர் விழுகையில்
மலையிலிருந்து இறங்குவதுபோல்,
ஸ்லாவ்யன்கா வாசிக்கின்றனர்கீழே வீழ்கிறது,
என் “சுவர்க்கம்”
– Elena Shvarts
வாழ்வில் நாம் பல பிணைப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம் : பெற்றோர், மனைவி, மக்கள், நண்பர்கள், வாகனங்கள், புத்தகங்கள், இசை, திரைப்படம் என்றும் இன்னும் பலவும். ஆனால் பிணைப்புகள் அனைத்தினும் மிகவும் வலிமையான பிணைப்பு மண் மீதானது.
குழந்தைப்பருவத்தில் நாம் வளர்ந்த இடம் நம் மனதைவிட்டு நீங்குவதே இல்லை. அது கவலைகள் இல்லாத காலம் என்பது ஒரு காரணம். அப்போது நமக்குக் கிடைத்த அன்பும், அக்கறையும் அதன்பின் வளரும் பருவத்தில் நம் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும், பின்னர் முதல் காதல், முதல் சினிமா, பள்ளி நாட்கள், விளையாட்டு, நாம் நேசித்த திரை நட்சத்திரங்கள் என்றனைத்துமே நம் குழந்தைப்பருவ நினைவுகளோடு பின்னிப் பிணைந்தவை. ஆண்டுகள் செல்லச் செல்ல, நினைவில் தங்கிய மண் உடோபியோவின் வண்ணம் கொள்கிறது.
சிலர் மட்டுமே வளர்ந்த இடத்திலேயே வாழ்கின்றனர், மற்ற அனைவரும் வேறு இடங்களை நாடிச் செல்கின்றனர். ஆனால் எது எப்படியானாலும், மண் மாறுகிறது- வளர்ச்சியைத் தவிர்க்க இயலாது. புற மாற்றங்களைப் போலவே நாமும் அக மாற்றங்களுக்கு உள்ளாகிறோம். ஹோட்டல் கலிபோர்னியா என்ற மெகாஹிட் பாடலில் ஈகில்ஸ் சொன்னது போல் – “எப்போது வேண்டுமானாலும் செக் அவுட் செய்யலாம், ஆனால் என்ன ஆனாலும் வெளியே போக முடியாது”. உன் மீது வலுவான தாக்கம் செலுத்திய இடம் எப்போதும் உன்னோடிருக்கும்.
சில இடங்கள் மட்டும் ஏன் நம்மை வசீகரிக்கின்றன?
நகரப்புறச் சூழலில் இதை யோசிப்போம் – சில நகரங்கள் நம்மை தம்பால் இழுத்துக் கொள்கின்றன, சில நம்மைத் தொடுவதில்லை. ஒவ்வொரு நகருக்கும், ஊருக்கும், கிராமத்துக்கும் தனக்கேயுரிய குணம் ஒன்றுண்டு. சில இடங்கள் நம்மை வரவேற்பதாய் உணர்கிறோம், சில நம்மை அலட்சியப்படுத்துகின்றன, சில நம் அன்பை ஏற்றுக் கொள்வதில்லை, சில நம்மீது விரோதம் பாராட்டுகின்றன. இவை தனிநபர் அனுபவங்கள்தான், ஆளுக்கு ஆள் மாறுபடும்.
எனக்கு தில்லி ஈரமற்ற நகராய் இருக்கிறது. பயணங்களில் நான் தங்கியிருந்த பகுதியை வைத்துச் சொன்னால், கட்டுக்கோப்பான நகரம், ஆனால் ஈரமாற்றது, திறந்து கொள்ள மறுக்கும் நகரம். குப்பையாகவும் இடிந்து விழும் கட்டிடங்கள் கொண்டதாகவும் இருந்தாலும், ரயிலிருந்து இறங்கியதும் எனக்கு கொல்கத்தா பிடித்துப் போயிற்று. கொச்சி விஷயமும் அப்படிதான். ஜப்பான் பயணங்களில் டோக்யோ நகரை வசீகரமற்ற கான்கிரீட் காடாக உணர்ந்தவன, க்யோடோவைக் கண்டதும் காதல்வயப்பட்டிருக்கிறேன். ஆனால் அதன்பின் பல பயணங்களுக்குப் பின்னர் இப்போது டோக்யோவில் சகஜமாக இருக்க முடிகிறது. எப்படி இதுபோன்ற உணர்வுகள் எழுகின்றன என்பது புதிர்தான், ஆனால் பலருக்கும் பிடித்த ஊர்கள் பிடிக்காத ஊர்கள் என்று இருக்கின்றன.
நாம் நேசிக்கும் நகரம் நம் மீது கவிகிறது, நம் உணர்வுகளின் உறுப்பாகிறது. அதன் நினைவுகளைத் தொட்டுக் கிளறாமல் நம் கடந்த காலத்தை நம்மால் நினைவுகூர முடியாது. நினைவென்றால் அது நாம் வாழ்ந்த மண்தான், நம் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளில் களமாய் அது வேர் கொண்டிருக்கிறது. மலர் சொரியும் மரம், சிறிய ஒரு குளம், அல்லது ஏரி, கோயில், தேவாலயம், சாக்கடைகள், குண்டும் குழியுமான சாலைகள், பெரிய கட்டிடங்கள் என்று அனைத்தையும் இப்போது வேறொரு கண் கொண்டு காண்கிறோம். இவற்றின் மெய்ம்மை ஆதர்ச உருவம் கொண்டதாக மாறிவிடுகிறது. நம் நினைவுகளுக்கு உரிய இடங்களாகவும், நம்மை மெய்ப்பிக்கும் இடங்களாகவும் இருக்கின்றன. இவையன்றி நம் நினைவுகள் அழிந்து போகும். நாம் நாமாயிருக்க மாட்டோம். இந்த ஆதர்ச இடத்தின் தேவை முழுமையானது. நாம் யாராயிருக்கிறோம் என்பது நாம் நம் கடந்த காலத்தை எவ்வாறு நினைவு வைத்திருக்கிறோம் என்பதையொட்டி அமைகிறது. நம் நினைவுகளை இந்த இடங்கள் தீர்மானிக்கின்றன.
மிகச் சிறந்த நாவலாசிரியர்கள் பலரும் தாங்கள் நேசித்த இடங்களைப் புனைவில் விவரித்தது ஆச்சரியமல்ல. ஒரு இடம் எப்படி இருந்தது, அதன் வண்ணங்கள் என்ன, அதன் மணம் எப்படி என்று விவரிப்பது எளிதல்ல. அந்த இடத்துக்குச் சென்றிருக்காத வாசகருக்கு அதன் தனித்தன்மையை உணர்த்த வேண்டுமென்றால் ஆழ்ந்த நேசமும் சிறந்த திறமையும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நம் அதிர்ஷ்டம். யுலிசஸ் என்ற மகத்தான நாவலை எழுதிய ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளின் இவற்றில் மிகப் பிரபலாமானது. நாவலில் விவரிக்கப்படும் கடைகள் என்னென்ன, அவை எங்கிருக்கின்றன என்று பட்டியலிடும் கட்டுரைகள் படித்திருக்கிறேன். மார்க்கேஸ் தான் வாழ்ந்த இடங்களைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். அவரது நாவல்களின் வெற்றியில் இந்த உயிரோட்டமான சித்தரிப்புக்கு கணிசமான இடம் உண்டு என்று நினைக்கிறேன். அதேபோல் லைமாவை “‘Aunt Julia and the Scriptwriter’, நாவலில் லோசா மிகச் சிறப்பாக விவரித்திருக்கிறார்.
எலீனா ஸ்வார்ட்ஸின் நகரம் இரு பெரும் எழுத்தாளர்களால் இறவாமையை எட்டியிருக்கிறது – செயிண்ட் பீட்டர்ஸ்பர்க். ‘Crime and Punishment’, ‘Double’, ‘Demons’, ‘Notes from Underground’முதலிய நாவல்களில் இந்நகருக்கு இலக்கியத்தில் நீங்காத இடமளித்தவர் தாஸ்தவெஸ்கி. இவருக்கு அடுத்தபடியாக ஆந்த்ரே பெலி, இந்நகரை பீட்டர்ஸ்பர்க் என்ற நாவலின் களமாகக் கொண்டிருக்கிறார். மொழியைக் கொண்டு யதார்த்தத்தை அறிவதை விவாதிக்கும் மிக அருமையான நாவல் இது. மொழி, பரிசோதனைக் கருவியாகிறது, பீட்டர்ஸ்பர்க் பரிசோதனைக் கூடமாகிறது. இலக்கியத்த்ல் ஆர்வம் இருக்கும் எவரும் பீட்டர்ஸ்பர்கை அறிவதிலிருந்து தப்ப முடியாத நிலையை இவ்விருவரும் நிறுவியிருக்கின்றனர்.
இங்கே அசோகமித்திரனின் பதினெட்டாம் அட்சக்கோடு ராஜாக்கர் காலத்திய செகந்திராபாத்தில் அவர் தங்கியிருந்த காலத்தை விவரிக்கிறது. நாவல் எந்த அளவுக்கு செகந்திராபாத்தைப் பேசுகிறதோ, அதே அளவுக்கு அவரது நினைவுகளையும் பேசுகிறது. பைரப்பாவின் வம்சவிருக்ஷ நாவலில் மைசூரும் நஞ்சன்கூடும் அற்புதமாக விவரிக்கப்படுகின்றன. தாராசங்கர் பந்தோபாத்யாயா, கி ராஜநாராயணன் போல் நிறைய இந்திய எழுத்தாளர்கள் மண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகின்றனர். சமகால இணையத்தில் சுகாவின் நெல்லைக்குத் தனியிடமுண்டு.
எலீனா ஷ்வார்ட்ஸ் சொல்வதுபோல், ஒரு தெருவின் பெயரைப் பெயர்ப்பலகையைக் கொண்டு அறியலாம், ஆனால் அது அவருக்கு ஸ்வர்க்கமாக இருக்கிறது. இழந்த ஸ்வர்க்கம். முன்னர் கூறியதுபோல், நம் அனைவருக்கும் ஒரு சொர்க்கம் உண்டு- அது நம் மனதினுள் உள்ளது. நாம் வாழ்ந்த சொர்க்கம், கட்டிடத்தின் கல்லையும் மண்ணையும் போல் நிஜமான சொர்க்கம், நம் நினைவுகளைவிட்டு அழிக்க முடியாத சொர்க்கம். வயது கூடும்போது, நம் கனவுகள் கலைகையில், நம்மை வழிநடத்திச் செல்லும் சொர்க்கம் இதுதான்.
உண்மையில் நம் மனதுக்கு வெளியே எங்கேயும் இந்த சொர்க்கம் இருந்ததில்லை. ஆனால் இதுதான் நம்மில் பலரின் வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்து, அதைத் தாளச் செய்வதாய் இருக்கிறது.