The Bone Clocks அல்லது Cloud Atlas போன்ற நாவல்கள், ஓரளவுக்காவது கதைசொல்லும் கட்டமைப்பில் தேர்ச்சியைக் கோருவதாகக் கருதுகிறீர்களா? – வெவ்வேறு கதையாடல்களை ஒன்றோடொன்று இணைப்பது, காலத் தாவல்கள், நினைவுகூரல்கள், இது போன்றவை. உங்கள் நாவல்களின் இறுதி வடிவம் உருவம் பெறும்வரை நீங்கள் எத்தனை வரைவு வடிவங்களைத் திருத்தி எழுத வேண்டியிருக்கிறது?
முதலில் சோதனை முயற்சியாகத் துவக்கப்படும் வரைவு வடிவத்துக்கும் முடிவில் புத்தகமாகப் பதிப்பிப்படும் இறுதி வடிவத்துக்கும் உள்ள உறவு, ஒரு கிறுக்கலுக்கும் ஆயில் பெயிண்டிங்குக்கும் உள்ளது போன்றது, ஆனால் எதையும் துவக்குவதற்கு ஏதோ ஒரு இடம் தேவைப்படுகிறது. முதலில் கலங்கலான, சாதாரணமான, துல்லியமற்ற, கச்சிதமற்ற ஏதோ ஒன்று தோன்றுகிறது. இந்த நாவலில் எத்தனை பகுதிகள் இருக்கப் போகிறது என்பது பற்றிய ஒரு எண்ணம் அப்போது கிடைக்கிறது – நாவலை, பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாக வேண்டும்- இந்த நாவலில் ஆறு.
என்னென்ன பகுதிகள் இருக்கப் போகின்றன என்பது தெரிந்ததும், மீனின் எலும்புக்கூடு போன்ற ஒரு படம் போடுகிறேன், நேராக ஒரு பக்கவாட்டுக் கோடு, அதன் இரு புறங்களிலும் கைகள் மாதிரி கோடுகள். அதன்பின் ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஐடியாவாக எழுதிக் கொண்டு வருகிறேன். அடிப்படையில் ஒவ்வொரு கையும் ஒரு காட்சி. இப்படிச் செய்யும்போது, என்னென்ன காட்சிகள் இருக்கின்றன என்பது தனித்தனியாகவும் தெரிகிறது, சரியான வரிசையிலும் தெரிகிறது. இந்தக் கைகளிலிருந்து பிற கோடுகள் கிளைக்கலாம்- பார்ப்பதற்கு நிறைய முடி முளைத்திருப்பது போல் தெரியும்- அதன்பின், ஒரு திசையில், ஏதோ ஒரு திசையில் உரையாடல் எழுத ஆரம்பிக்கிறேன், அதற்குக் கீழே இடம் இருந்தால், அங்கு இன்னொன்று எழுதுகிறேன்- என்ன செய்வது என்று தெரியாதபோது, நான் அங்கே ஒரு பாத்திரத்தின் முகம் கூட வரையக்கூடும்.
என் எழுத்தின் வரைவு வடிவம் இப்படிதான் இருக்கிறது. நான் எழுதி முடிப்பது இதையொட்டி இருக்கலாம், அல்லது மாறுபடலாம், ஆனால் எப்படி பார்த்தாலும் வெறுமையை வைத்துக் கொண்டு திண்டாடுவதில்லை. வெற்றுத்திரைதான் எதிரி. ஒன்றுமில்லாத இடத்தில் எதையும் மேம்படுத்த முடியாது. ஏதோ ஒன்று இருந்தால்தான் மேம்படுத்த முடியும், அது எவ்வளவு மோசமாக, துண்டு துண்டாக, அரைகுறையாக இருந்தாலும பரவாயில்லை. ஏதோ ஒன்று கிடைத்துவிட்டபின், வேலை செய்யத் துவங்கலாம்
நன்றி – ஜாக் ரஸ்கின், The Millions
ooOOoo
கேள்வி: Cloud Atlas நாவலில் நரமாமிசம் முக்கியமாக இருக்கிறது – The Thousand Autumns of Jacob de Zoet நாவலில் திரும்பவும் வருகிறது
மிட்சல் – ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான கதைக்கருக்கள்தான் ஒரு எழுத்தாளனுக்கு இருக்க முடியும், வேறு எதையாவது எழுத வேண்டும் என்று எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தாலும், அறுத்தபின் கிளம்பும் அழிவற்ற மருக்கள் போல் அவை மீண்டும் தோன்றுகின்றன. பலி கொள்தல் தொடர்ந்து என் எழுத்தில் திரும்பத் திரும்ப பேசப்படும் கருப்பொருட்களில் ஒன்று- பலி கொள்ளுதலின் தொன்மையான, ஆழ்மிருகத்தன்மை கொண்ட வெளிப்பாடுதான் நரமாமிசம் உண்ணுதல்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு ஆவணத் திரைப்படம் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது, சிறுத்தை ஒன்று மானை விரட்டிப் பிடித்துவிடும். மானைக் கண்டம் துண்டமாக புலி கிழிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொது, ஏஞ்சலா என்ற ஒரு வசீகரமான பெண், “மிஸ், இது மிகவும் குரூரமாக இருக்கிறதே” என்று சொன்னாள். அதற்கு, “ஆமாம் ஏஞ்சலா, ஆனால் இயற்கை குரூரமானது,” என்று அந்த ஆசிரியர் பதில் சொன்னார்.
சார்நிலை அறத்தை நான் எதிர்கொண்ட முதல் அனுபவம் அது. ஆமாம், அப்பாவி மான் ஒன்று கண்டம் துண்டமாகக் கிழிக்கப்படுகிறது- ஆனால் அந்த சிறுத்தையின் மனைவி மக்களை யார் பார்த்துக் கொள்வது? அவை எல்லாம் இளைத்து, பசித்து, கழுதைப் புலிகளுக்கு ஒவ்வொன்றாக இரையாக வேண்டும் என்பதுதான் என் ஆசையா? இப்படியே யோசித்துக் கொண்டு போக வேண்டியதுதான்… கடைசியில், குரூரம் என்றால் என்ன? என்பது போன்ற கேள்விகளை வந்தடைகிறோம், அதன்பின் தீமை என்றால் என்ன என்று கேட்டுக் கொள்கிறோம். ஒரு நாவலசிரியனாக, என் பதில் இதுவாகதான் இருக்கும் – என் நாயகர்களின் நிம்மதியைக் குலைக்கும் எதிர்நாயகர்களுக்கு நம்பத்தகுந்த நோக்கம் அளிப்பதற்காகவே இவை இருக்கின்றன.
“Moon and Madness” சிறுகதையின் முடிவில் ஐசக் பஷவிஸ் சிங்கர் தீமை குறித்து ஒன்று எழுதியது மறக்க முடியாதது: “முட்டாளாக இருக்காதே, ரெப் ஜால்மன். நிலவு பளிச்சென்று இருக்கிறது, வானம் பிரகாசமாக இருக்கிறது. பைத்தியக்காரத்தனத்தின் ஒரு சுருள்தான் தீமை”. சிங்கரின் சொற்களை, தன்னைக் கைது செய்து முகாமுக்குக் கொண்டு சென்றவர்கள் குறித்து சோல்சனிட்ஸின் கூறியதோடு சமநிலையில் வைத்துப் பார்க்க விரும்புகிறேன்:. அவர்கள் செய்து கொண்டிருக்கும் பணியில் தானும் எவ்வளவு சுலபமாக இணைந்திருக்க முடியும் என்று யோசித்துப் பார்க்கிறார் அவர் – அவருக்குத் தீங்கு இழைப்பவர்களின் சீருடையில் எவ்வளாவு சுலபமாக ஏதோ ஒரு விபத்து அவரைப் புகுத்தியிருக்கக்கூடும். மூச்சை நிறுத்தும் அளவுக்கு பரந்ததாய் இருக்கும் இப்பார்வை, நன்மையிலிருந்து தீமைக்குச் செல்லும் அறத் தொலைவு சிறு சிறு அடிகளாக ஒரு நீண்ட தொடர் நடையில் ஊர்ந்து அடையப்படலாம் என்று பொருள்படுகிறது.
ஒரு மனிதனாக நான், இந்த தொடர் நடை புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நம்புகிறேன். ஒட்டுண்ணியாய் வாழும் நாவலாசிரியனாக, இப்படி அடிமேல் அடி எடுத்து வைத்து நன்மையிலிருந்து தீமையை அடைவது சுவாரசியமாக, செறிவாக, புனைவுக்குப் பயன்படுவதாக எனக்கு இருக்கிறது. இலக்கியத்தின் வலிமைகளில் ஒன்று உண்டென்றால், பின்னோக்கிச் சென்று மானுட அவலத்தின் காரணங்களை அறியக்கூடிய தொலைவை புனைவால் கடந்து செல்ல முடிகிறது என்பதுதான். ஒதெல்லோவின் பிரதான மகோன்னதமே இயாகோதான், அதன் உந்துவிசையும் அவன்தான்- இவன் ஏன் இத்தனை கஷ்டப்படுகிறான்? அவன் கெட்டவனாக இருக்கும் காரணம் மட்டுமே அவன் கெட்டவனாக இருப்பதற்கு போதுமானதாக இருக்க முடியாதா, அப்படிதானே நாம் நினைக்க வேண்டும் என்று அவன் நம்புகிறான்? அல்லது சிங்கரின் பைத்தியம் அவனைச் சுருட்டிக் கொண்டதா? அல்லது வேறு ஏதோ நடக்கிறதா? ஷேக்ஸ்பியர் இந்தக் கேள்விக்கு சரியான பதில் தருவதில்லை. அதனால்தான் அது இன்னமும் அரங்கேற்றப்பட்டுகிறது, அதனால்தான் அவன் இப்படி இருக்கிறான்- எலிசபெத் கால நாடகாசிரிய உடை அணிந்த ஆதிநாவலசிரியன் ஷேக்ஸ்பியர்.
கேள்வி : உங்களுக்கு மறுபிறவியில் ஆர்வம் இருக்கிறது – முந்தைய அத்தியாயத்தில் இருந்த பாத்திரங்களில் ஒன்று வேறொரு சகாப்தத்தில் அடுத்த அத்தியாயத்தில் பிறந்திருக்கிறது என்று நினைப்பதற்கான சாத்தியம் Cloud Atlas நாவலில் உண்டு. The Thousand Autumns of Jacob de Zoet, என்ற நாவலின் பிரதான பாத்திரங்களில் ஒருவரான டாக்டர் மாரினஸ் மீண்டும் மீண்டும் பிறக்கிறார் என்பதற்கான உணர்த்தல் அதில் இருக்கிறது. நிஜமாகவே நீங்கள் மறுபிறவியை நம்புகிறீர்களா?
மிட்சல் – மறுபிறவி உண்டு என்று நம்ப விரும்புகிறேன், ஆனால் எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை கிடையாது. என்றாலும், கார்பன் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி போன்றவற்றில் ஒரு ஆறுதல் இருக்கிறது. பயோகெமிக்கலாக பார்த்தால் மறுபிறவி இருக்கிறது என்பது உண்மைதான். உங்கள் சாம்பலை பழ விவசாயிக்கு தானம் செய்யுங்கள்.
கேள்வி : The Thousand Autumns of Jacob de Zoet என்ற நாவலில், இறவாமையை அடைய எனோமொடோ நரமாமிசக் கொடூரங்கள் செய்கிறான். இவை இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்களா?
மிட்சல்- நீங்களும் நானும், இப்போதுகூட, நாம் உண்ட உணவை தோல் திசுக்களாக, மூளை திசுக்களாக, ரத்தமாக, ம்யூகஸாக, விந்துவாக, முடியாக, நகமாக, இன்னும் பலவாக மாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். எனோமொடோவும் அதையே செய்கிறான், ஆனால் ஆன்மிகமாக: ஆன்மாக்களை உண்டு, தனது ஆன்மா உடலை விட்டுப் பிரிக்கப்படாது என்று உறுதி செய்து கொள்கிறான்.
கேள்வி- உங்கள் நாவலில் வேறு வகை மறுபிறவி இருக்கிறது. பாத்திரங்கள் ஒவ்வொரு நாவலிலும் தொடர்கின்றனர்.
மிட்சல் – நான் படைத்த பாத்திரங்களை நேசிக்கத் துவங்கிவிடுகிறேன். வளர்ந்தபின், பெற்றோர், உடன்பிறந்தோர் என்று எனக்கு ரத்தமும் சதையுமாக இருப்பவர்களை விட அதிக நேரம் இந்தப் பாத்திரங்களோடு இருந்திருக்கிறேன். வசதிப்படாத ஒரு காரை ஆற்றோரம் விட்டுச் செல்வது போல், இவர்களை வெறுமையில் கரைய விடும்போது தோன்றுகிறது. நடப்பு காரணமும் இருக்கிறது – பால்ஸ்டாப்பைதான் உதாரணம் சொல்கிறேன், ஆனால் ஜாக் ஸ்பாரோவைச் சொன்னாலும் தப்பில்லை. பால்ஸ்டாப் வரலாற்று நாடகங்களில் இருப்பதால், நாம் அவனை வேறு வகையில் பார்க்கிறோம், அவன் நமக்குச் செறிவான அனுபவம் அளிப்பவனாக இருக்கிறான். அவன் இளம் வயது ஹல்லுடன் இருக்கும்போது நம் உணர்ச்சிகளை அவன்பால் ஒப்புவித்தோம், பின்னர் வரும் நாடகத்தில் இந்த உணர்ச்சிகளும் இருக்கின்றன. ஒரு பாத்திரத்தையும் அதன் சூழலையும் நம்புவது என்பது தொடர்ந்து இருக்கும் ஒன்று, அதை வேறு இடத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனால்தான் இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி என்று தொடர்ந்து வருகின்றன.
– ஆடம் பெக்லி, பாரிஸ் ரிவ்யூ
ooOOoo
டேவிட் மிட்சல் மிக அருமையான கதைசொல்லி. அவரது கதைசொல்லல் அசாதாரண சரளம் கொண்டது. பெரும்பாலான எழுத்தாளர்களைக் காட்டிலும் வேகமாகவும் பரபரப்பாகவும் அவரால் ஒரு கதையைத் தனக்கென தனி உயிர்ப்பு கொண்டதாகத் துவக்க முடிகிறது,. தான் விரும்பும் எதையும் அவரால் செய்ய இயலும் என்று என்ன வைக்கிறார், பல்வகைப்பட்ட வடிவங்களில், நம்ப வைக்கும் வகையில் அவரால் இதைச் சாதிக்க முடியும் என்று தோன்றுகிறது.
“Black Swan Green” (2006), நகைச்சுவை நாவல், இனிமையானது, சுயசரிதையின் இயல்பு கொண்டது. சுதந்திரமற்ற ஊஸ்டர்ஷைர் கிராமம் ஒன்றில் வளரும் சிறுவன் ஒருவனைப் பற்றி வழக்கமான பாணியில் சொல்லப்பட்ட கதை. “Cloud Atlas” (2004), இவரது புத்தகங்களில் மிகப் பிரபலமானது. இதை அற்புதமான பின்நவீனத்துவ suite என்று சொல்லலாம் – ஒன்றுடனொன்று தொடர்பு கொண்ட, ஒன்றின் சாயல் மற்றதன் மீதுள்ள குறுநாவல்களைக் கொண்ட நாவல். இது, ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதுகள், ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகள், ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகள், சீரகுலைந்த எதிர்காலம் என்று பல சகாப்தங்களில் நிகழும் கதை.; 2010ஆம் ஆண்டு இவர் எழுதிய, “The Thousand Autumns of Jacob de Zoet,” என்ற கதை, மரபார்ந்த சரித்திர நாவல். நாகசாகி வளைகுடாவில் 1799ஆம் ஆண்டு ஜப்பானியர்களுக்கும் டச்சுக்கும் இடையிலிருந்த உறவைக் கதைக்களமாக கொண்ட நாவல்.
யதார்த்தம் எது யதார்த்தமற்றது எது என்பது குறித்து அற்புதமான புரிந்துணர்வு இவருக்கு இருக்கிறது- இவரது சிறந்த படைப்புகள் இந்த இரு கூறுகளையும் அழகிய வகையில் முறுக்கிப் பிடிக்கின்றன- வெவ்வேறு தன்மை கொண்ட உயிராற்றல்களை சமநிலையில் வைத்திருக்கும் கலை இது. தூய கதைசொல்லியின், தலை சுற்றவைக்கும், எல்லையற்ற கற்பனையையும் வேகத்தையும், மனிதாபிமானத்தின் வேர்பிடிப்புள்ள யதார்த்ததையும் தன் எழுத்தில் பிணைத்திருப்பதே இவர் பரவலாய் வாசிக்கப்படவும், விமரிசகர்களால் பாராட்டப்படவும் காரணமாகிறது. மரபை நேசிப்பவர்களுக்கும் பின்நவீனத்துவர்களுக்கும், யதார்த்தத்தை நேசிப்பவர்களுக்கும் அதீத கற்பனையில் நாட்டம் கொண்டவர்களுக்கும், அனைவருக்கும் அவர் ஏதோ ஒன்று வைத்திருக்கிறார்; மிட்சல் தன் எழுத்தைக் கொண்டு எப்போதும் களிப்பூட்டுகிறார்.
வாசகர்களை மகிழ்விப்பது தனக்கு முக்கியம் என்கிறார் அவர்: “என் மனதில் எப்போதும் இருக்கும் கேள்விகளில் ஒன்று இதுதான் – இதை ஏன் ஒருவன் வாசிக்க விரும்ப வேண்டும் என்று என்னை நானே எப்போதும் கேட்டுக் கொண்டு, அதற்கு இணக்கமான ஒரு பதிலை அடையப் பார்க்கிறேன். விலை கொடுத்து வாங்குவதானால், பிறரின் நேரம் விலை மிகுந்தது. தங்கள் வாழ்வின் எட்டு அல்லது பத்து மணி நேரத்தை உங்களுக்கு ஒருவர் கொடுக்கப் போகிறார். அதற்கு பதிலாக எதையாவது திருப்பித்தர வேண்டும் என்று விரும்புகிறேன், அது ஒரு இனிய அனுபவமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்”
ooOOoo
கேள்வி: உங்கள் புத்தகங்களின் கட்டமைப்பு, எதிர்பாராத நேரத்தில் தோன்றும் பாத்திரங்கள் கொண்ட, ஒன்றுடனொன்று பிணைந்துள்ள குறுநாவல்களைக் கொண்டதாய் இருக்கிறது. முதலில் எது வருகிறது, உருவமா பாத்திரமா?
மிட்சல் – கவனத்தை ஈர்ப்பது உருவம்தான், அது சற்றே அசாதாரணமாக இருப்பதுண்டு, ஆனால் நாவலாசிரியர்கள் அனைவரும் உணர்வார்ந்த ஒத்துணர்வைத் தங்கள் நாவல்களைக் கொண்டு அடைய முயற்சிக்க வேண்டும். பாத்திரங்கள் மீது உங்களுக்கு அக்கறையில்லை என்றால், உங்கள் கைகளில் பிணங்கள்தான் இருக்கும்.
எந்த காரணத்தால் உங்களுக்கு நீங்களே கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டு சிரிக்க முடியாதோ, அதே காரணத்தால்தான் உங்கள் பாத்திரங்களின் உணர்வுகளை வாசகன் உணரும் வகையில் நீங்கள் எழுதுவதில் வெற்றி பெற்றுவிட்டீர்களா என்பதையும் உங்களால் அறிந்துகொள்ள முடியாது. பாத்திரம் ஏதோ ஒன்றில் நாட்டம் கொண்டிருப்பதாகவும், அதற்காக ஏங்குவதாகவும் துவங்குகிறேன் – அவர்கள் வாழ்வில் உள்ள வெறுமை என்ன? இதுதான் வாசகனைப் பாத்திரத்தோடு பிணைக்கும். ஆனால் பாத்திரங்கள் போய்வர ஓர் இடம் வேண்டும்- எல்லாரும் ஒரே சமயத்தில் ஓரிடத்தில் இருக்க முடியாது – அப்படிச் சொன்னால் உருவத்தைப் பேச வேண்டும்.
கேள்வி – உங்கள் எழுத்தில் ஒரு இசைத்தன்மை இருக்கிறது, ஒற்றை நோக்கத்தின் நளினம் தெரிகிறது. அதை விரும்பிச் செய்தீர்களா?
மிட்சல் -நான் ஒவ்வொரு சொல்லையும் நீண்ட நேரம் மிக கவனமாக யோசிக்கிறேன், திருத்தித் திருத்தித் திருத்தி எழுதிக் கொண்டேயிருக்கிறேன். எனக்கும், எழுத்தாளர்கள் பலருக்கும், எழுத்து என்றால் அது பெரும்பாலும் திருத்தி எழுதுவதுதான். திருத்தி எழுதும்போது, அந்த தளத்தில், எதுகை மோனை, முரணொலி போன்றவை சரியாக இருப்பது போலிருந்தால், அதைச் செய்கிறேன். அப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிறேன், பிறவற்றைத் தவிர்க்கிறேன்.
– ரிங்கு படேல், Mother Jones
…